ஏறு தழுவி வென்றவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 9, 2023
பார்வையிட்டோர்: 2,811 
 
 

சிறுகல்பட்டி மரங்கள் செறிந்த கானகத்தை ஒட்டி அமைந்த ஓர் அழகான சிற்றூர். இவ்வூர் மக்கள் ஆயர்கள் இவர்களது தொழில் “ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்” ஆகியன. அதாவது, ஏர் உழுதல், பசு மேய்த்தல் ஆகியன ஆகும். வரகு, சாமை ஆகியன இவர்களின் உணவுகள். கொன்றை, காயா ஆகியவை முல்லை நிலத்தில் வளரும் மரங்கள். முல்லை மலர், தோன்றி ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். காட்டுக் கோழி, மயில், முயல், மான், புலி ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் மற்றும் விலங்குகள் ஆகும்.

மழை பொழிவதற்கு முன்னர் உலர்ந்து கிடந்த புதர்களில் மழைத்துளிகள் விழுந்ததனால் பிடவ மலர்கள் அரும்பு விட்டிருந்தன. தீக்கடை கோலின்(ஊதுகுழலின்) தூண்டுதலால் சுடர்விட்டு எரியும் தீக்கொழுந்தினைப் போல செங்காந்தள் மலர்கள் மலர்ந்திருந்தன. நீமணிகளின் உருவினையும் நிறத்தினையும் கொண்டு காயாம்பூக்கள் பூத்திருந்தன. இவற்றுடன் பிற பூக்களையும் சேர்த்து அழகுற தொடுக்கப்பட்ட மாலைகளை ஆயரின இளைஞர்கள் சூடியிருந்தனர். பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர்கள் தென்னவனாகிய பாண்டியன் குலத்தோடு சேர்ந்து தோன்றியவர்கள்.

அலை பொங்கிய கடல் பாய்ந்து வந்து தன் மண்ணைக் கொண்டது என்று சற்றும் இரக்கம் காட்டாமல் புலிச் சின்னம் கொண்ட சோழனையும், வில் சின்னம் கொண்ட சேரனையும் வென்று அவர்களின் நாட்டில் தன் கெண்டை மீன் சின்னத்தைப் பொறித்து நாட்டை விரிவாக்கிக்கொண்ட தென்னவன் குடி தோன்றியபோதே தோன்றிய தொன்மையான குடி ஆயர் குடி. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண். ஏறு தழுதல் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்த விளையாட்டு விழாவை ஏறுகோள் பாணி ஏறுகோள் சாறு என்றெல்லாம் வழங்கினர். ஏறு தழுவும் ஆயர்குல வீரனைப் பொதுவன் என்பர்.

சிறுகல்பட்டியில் ஏறு தழுவுதல் குறித்து முன்னரே பறை மூலம் அறிவிக்கப் பட்டது. இளைஞர்கள், ஏறு தழுவுதலுக்காகத் தொழுவின் முன் கூடியிருந்தனர். அவ்விளைஞர்களை வீறு கொண்டு தாக்கித் தம் வலிமையை நிலைநாட்டக்கூடிய காளைகள் கொம்பு சீவப்பட்டுத்தொழுவினுள் நிறுத்தப்பட்டிருந்தன. தம் மேல் பகைமை பாராட்டும் அக் காளைகளைத் தழுவித் தம் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக அவ்விளைஞர்கள் தொழுவினுள் ஒன்று சேர்ந்தாற் போலப் புகுந்தனர். அதன் பின், அந்தக் காளைகளைப் பற்றிய செய்தியைப் பறையறைந்து தெரிவித்தனர்.

வெள்ளைக் காளையை அடக்கியவன் முள் போல் பல்லழகு கொண்ட இவளைப் பெறலாம். காரிக் காளையின் சினத்துக்கு அஞ்சாமல் போரிட்டு வெல்பவன் இந்த ஒளி மிக்கவளின் வாரி முடித்த கூந்தலில் உறங்கலாம். இந்தச் செங்கண் காளையைக் கொள்பவன் மானைப்போல் மருண்டு நோக்கும் இவளைப் பெறலாம். மிகுந்த வலிமை கொண்ட இந்தச் சிவப்புக் காளையின் சினத்தை அடக்குபவன் மூங்கில் போன்ற தோள் கொண்ட இவளது தோளில் துயில் கொள்ளலாம். இப்படிப் பறையறைந்து சொல்லி மகளிரை ஆயர் முறை முறையாக நிறுத்தினர். மீன்களுக்கு இடையில் தோன்றும் நிலாவைப் போல அவர்களை அணி அணியாக நிறுத்தினர். அதன் பின்னர் பறை முழங்கியது. பலரும் ஆரவாரம் செய்தனர். மைந்தர் பிடிப்பதற்காகக் காளைகள் மணப்புகை முகத்தில் காட்டப்பட்டன. பின்னர் அவிழ்த்து விடப்பட்டன.

அந்த இடத்தில் இடி முழக்கமா என்று ஐயுறும்படி பறைகள் முழங்கின. இளைஞர்கள் ஆர்பித்தனர். அதனால் அவ்விடம் வழக்கத்துக்கு மாறாகப் போர்க்களம் போலக் காணப்பட்டது. ஆரவாரத்துடன் அவ்விடமெங்கும் புழுதி எழுந்தது.

ஏறுகள் திரண்டிருந்த தொழுவோ, ஒரே புழுதி படலத்தின் இடையே விளங்கிற்று. பெரு மழை எங்கும் பெய்து எங்கும் வெள்ளமான காலத்திலேயே மழைக் குகையில் சிங்கமும், குதிரையும், யானைகளும் முதலைகளுகம் ஒருங்கே சேர்ந்திருந்தால் எப்படியோ , அப்படிப்பட்ட ஆரவாரத்துடன் எருதுகள் யாவும் பயங்கரமாகச் சுற்றிச் சுழன்று திரிந்தன. ஓர் எருது கருமை நிறமாக வெள்ளைக் கால்களுடன் காணப்பட்டது. மற்றொன்று அந்தி வானம் போலாகி சிவந்த புள்ளிகளுடன் விளங்கிற்று.

காளைகளுக்கு உரிய மகளிர் காளைகளோடு அணிவகுத்து நின்றனர். இந்தக் காளையை அடக்குபவனுக்கு இவள் உரியள் என்பது வழக்கம். காளைகளை வளர்த்த ஆயர்பாடி மகளிர் நறுமணம் வீசும் பொடித் துகள்களையும், அவற்றால் மணக்கும் புகைகளையும் ஏந்திக்கொண்டு அணிவகுத்து நின்றனர். நீர்த்துறைகளிலும் ஆலமரத்தடியிலும் மாமரத்தின் கீழும் உறையும் தெய்வங்களை முறையாக வணங்கிய பின்னர் கட்டிளங்காளையர் தொழுவினுள் புகுந்தனர்.

பலவ்வகை ஆநிரைகளை மேய்க்கும் பொதுவர் சினம் கொண்ட காளைகளைப் பிடிப்பதைக் காண்பதற்காக மகளிர் திரண்டு வந்தனர். அவர்கள் முல்லைப் பூ, முல்லை மொட்டு, முல்லை அரும்பு போன்ற பற்களை அடுக்கி வைத்தது போன்ற பற்களைக் காட்டிச் சிரித்துக்கொண்டு, கண்கள் பெருமழை பொழிவது போலப் பார்த்துக்கொண்டும், வாயிலிருந்து வரும் சொற்கள் மடப்பத் தன்மையை உதிர்ப்பன போலப் பேசிக்கொண்டும் குழை அணிந்த காதினராக அந்த நல்லவர் திரண்டனர்.

பட்டுப் பூச்சி போன்ற கருஞ்சிவப்பு நிறத்தில் உடம்பும் சிறிய சிவந்த கண்ணும் கொண்ட காளை ஒன்று தன்னை நோக்கி அஞ்சாமல் பாய்ந்த ஓர் இளைஞனை சாகும் அளவுக்குக் குத்தித் தன் கொம்பில் வைத்துக்கொண்டு சுழற்றுயது. ஒரு காளை ஒருவனைக் குத்தி அவன் குடரைக் கொம்புகளில் சுற்றிக்கொண்டது. அந்தக் குடரை அவன் திரும்பப் பெறப் போராடினான். அது பட்டத்து நூலை அறுப்பது போல இருந்தது

கதிரவன் தோன்றுவது போன்ற நெற்றிச் சுழி கொண்ட காரிக் காளை விடரிப்பூ அணிந்துகொண்டு வந்த இன்னோரிளைஞனைச் சாய்த்து அவன் குடல் சரியும்படி அவனைக் குலைப்பதைப் பார்த்தும் காதோரம் வெள்ளை நிற மின்னலும், பொறி போன்ற வெள்ளை நிறமும் கொண்ட காளை தன் சினத்துக்கு அஞ்சாமல் தன் மீது பாய்ந்த பொதுவனைத் தாக்கிக் கூர்மையான தன் கொம்பினால் மற்றொருவனைச் சின்னாப்பின்னம் செய்வதைப் பார்த்தும் கோதையின் உடல் நடுங்கியது. இத்தனைக்கும் கதை ஒன்றும் சாதாரணமான பெண்ணல்லள். அவ்வூர்த்தலைவன் கீரி மலையவனின் மகளாவாள்.

கோதை குழலியிடம் மெதுவாகப் பேசதத் தொடங்கினார்: தோழி! இப்படி ஒரு செயல் நிகழ்ந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. நீயாவது சொல். ஆடு மேய்க்கும் இடையர் நம் ஊருக்கு வந்தனர். அவர்களுக்கும், குடம் நிறையப் பால் கறக்கும் பசுக்களுக்கும் ஒரு குறை இருந்தது. நான் வளர்க்கும் கொல்லேறு எறு தழுவும் போருக்காகத் தொழுவில் விடப்படவில்லை என்பது அந்தக் குறை. அதனால் பசு மேய்க்கும் கோ இனத்து ஆயர் தன் காளைகளையும் சேர்த்து ஏறு தழுவலுக்காகத் தொழுவில் விட்டனர். அப்போது தொழுவத்தில் சுழன்ற என் காளை, சிறிதே தன் காதை மறைத்துத் தலையில் சூடியிருந்த ஒருவனின் மலையை தன் கொம்பில் மாட்டிச் சுழற்றுகையில் அதன் பூ ஒன்று வந்து என் கூந்தலில் விழுந்துவிட்டது. அந்தப் பூவை நான் உள்ளே செருகி என் தலையை முடிந்துகொண்டேன். இது என் தாய்க்குத் தெரிந்துவிட்டது போல் தெரிகிறது. .தாய் கேட்டால் என்ன செய்யலாம் என்கிறாய். அது உன் காதலன் சூடிய கண்ணிப் பூ அல்லவா? நான் கூந்தலில் முடிந்துகொண்ட அந்தப் பூவைப் புதியவன் ஒருவனின் பூவை முடிந்துகொண்டாளே என்று தாய் கேட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாதே.

குயிலி: நம் எல்லாத் தவறும் நீங்கிவிடும்.

கோதை:ஓ அப்படியும் ஒன்று நிகழுமா?

குயிலி: நீ ஆயர் மகள் ஆயின், அவன் ஆயர் மகன் ஆயின், அவன் உன்னை விரும்பினால், நீ அவனை விரும்பினால், அன்னை வருந்துவதற்கு இதில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. உன் நெஞ்சம் போல் தாய் நெஞ்சம் இருக்குமாயின் இதில் தவறு ஒன்றும் இல்லை அல்லவா?

கோதையும் கோதையின் தோழி குயிலியும் நின்றிருந்த இடத்திற்குச் சற்றே தொலைவில் மாறனும் மருதப்பனும் நின்றிருந்தனர். மாறனின் பார்வை கோதையின் மீதே பதிந்திருந்தது. அவன் மருதப்பனிடம் கோதையைச் சுட்டிக்காட்டி, “நறுநுதலாள்! கறுத்து நீண்ட கூந்தலினள்! ஒள்ளிழையாள்! இவள் யாரென்று நீ அறிவாயா?” என்று வியந்து கேட்டான். மருதப்பனும் மறுமொழியாக, “இவள் இவ்வூர்த் தலைவ‌ர் கீரி மலையவனின் மகளாவாள். இவள் தந்தை நீல மணி நிறமுடைய தன் நெடுந்தோள் ஏற்றினைத் தழுவி வெற்றி பெருபவர்க்கே இவளை மணமுடித்து வைப்பதாக அறிவித்துள்ளார்,”எனறு கூறினான்.

மாறனும் மருதப்பனும் தம்மைப் பற்றியே பேசுவதை அறிந்து கொண்ட குயிலி, கோதையின் பார்வையும் அவர்களின் மீது இருப்பதை உணர்ந்து கொண்டாள் அவள் அவர்கள் இருந்த இடம் நோக்கிச் சென்றாள். அவள் மாறனை நோக்கி,” மதங்கொண்ட களிற்று யானையினும் மிகுந்த வலியையுடையது எம் ஊர்த் தலைவரின் நீல நிறமுடைய நெடுந்தோள் ஏறு. விடாது அதைனப் பற்றி வெற்றி கொள்வாயாக. அவ்வாறு வெற்றி வாகை வாகை சூடுபவனையன்றி வேறொருவன் தோளினைத் தழுவாது என் தலைவியின் மார்பு. கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகின்றனை மறுமையிலும் எம் தலைவி தழுவ மாட்டாள், ” என்றாள்.

மாறன், ” உம்முடைய கொல்லேற்றின் கொம்பு என் மார்பிலே படுவதை மார்பு கொடுத்து ஏற்றுக் கொள்வேன். அதன் கொம்பின் மேல் பாய்ந்து, அதன் அதன் கொம்பினிடையே புகுந்து அவ்வேற்றினைக் கொள்ள வல்லவன் யான் என்றறிவாயாக,” என்றான்.

அப்பொழுது எங்கணும் புழுதிப் படலம் எழுந்தது. நீல நிறமுடைய நெடுந்தோள் ஏறு எழுந்தெழுந்து உந்த, பலரும் அதிர்ந்ததிர்த்து போகுமாறு எலும்புகள் முறியவும் குடர்கள் சரியாவுமாகக் குத்திக் கொன்ற பின்னர் தன் கொம்பின் வலிமை அழியுமாறு தழுவிக்கொண்டிருந்த ஒருவனை அங்குமிங்குமாக ஆட்டி அலைந்து திரிந்த பின்னரும் அதன் சினம் குறையவில்லை. அதன் கொம்புகளிலே சிக்கி வீழ்ந்த பொதுவனின் குடர்களைப் பருந்துகள் எடுத்துக் கொண்டு வானில் பறந்தன.

அப்பொழுது, கட்டுக்கடங்காத வேகத்துடன் செவ்வியதாகத் தன் மேல் பாய்ந்த நீலமணி நெடுதோள் ஏற்றினைத் அதன் செவியினடியில் பற்றிக்கொண்டு அதனைப் புரட்டி அதன் கழுத்தினை இருகத் தழுவி அதன் இமிலிடையே தோன்றினான் ஒருவன். தன் காளை படுகின்ற துன்பத்தைக் கண்ட கீறி மலையவன் முகத்தில் வருத்தம் தோன்றியது. கொடிய புலியும் பெருங்களிறும் தம்முள் புரண்டு போரிட்டதைப் போல காளையும் வீர இளைஞனும் போரிட்டனர்.

முடிவில்கீரிமலையவனும் அவன் சுற்றத்தாரும் சீற்றம் கொண்டெழ, நீல மணிக் காளையின் கொம்புகள் தரையில் ஒட்டக் கவிழ்த்த்தான் அவன். அங்குத் தண்ணுமையின் பாணி (இசை) தளராது எழுந்தது.

பின்னர் சீற்றம் கொண்ட சுற்றத்தார், திண்மையான தோள்களையும் திறலினது விளக்கத்தையும் மாய போரினையும் கரிய மேனியினையும் அழகிய துவரோட்டின் ஆடையையும் அணிந்த வீர மறவனைப் பாராட்டிச் சிறு குடி மன்றத்திலே குரவையாடி மகிழலாம் எழுக என்றனர். அவ்வீர மறவன் மாறனே.

எது எப்படி இருந்தாலும் இன்று மாறன் காளையை அடக்கிவிட்டான். அதனால் திருமண விழாவுக்கான தண்ணுமை முழங்கிற்று. அந்த முழக்கத்துடன் எல்லாரும் சேர்ந்து குரவை ஆடினர். கோதை மாறனைப் பார்த்துப் புன்னகை பூத்தாள். தன் அருகில் இருந்த கோதையின் காதில், “பிடிக்க முடியாத கொலைத்தொழில் மிக்க நம் காளையின் சினத்தைப் பொருட்படுத்தாமல் பாய்ந்து அடக்கியவனையே நான் மணக்க விரும்பினேன். ஊரார் தூற்றினர். அதனைப் பொருட்படுத்தாமல் என் பெற்றோர் அவனுக்ககே என்னைத் திருமணம் செய்துவைத்தார்,” என்று முகம் சிவக்க நாணத்துடன் கூறினாள். அவளது தோளையும் அதனில் சாய்ந்த அவனையும் சிறுகல்பட்டி மக்கள் பாராட்டிப் பேசினர். எங்கும் மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *