கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 11,218 
 

போன் எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தார் ராஜாராம். எதாவது மிஸ்ட் கால்ஸ் இருக்கிறதா என்று.

“எவ்ளோ தடவ எடுத்துப் பார்த்தாலும் ஒண்ணும் இருக்காது. போன் வரல. நான் இங்கயே தானே இருக்கேன். உங்களுக்கு வேணா காது கேக்காது. எனக்கு கேக்கும்”.

மனைவியின் குரலில் ஒரு எகத்தாளம்.

“சே என்ன பசங்ககளோ. கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாம”, ராஜாமணி குரலில் ஒரு வருத்தம்.

“அன்னபூரணி , கொஞ்சம் தண்ணி கொண்டு வா” என்றபடி ஈசி சாரில் சாய்ந்தார்.

“இதையே நான் சொன்னா தெய்வக் குத்தம் மாதிரி என்ன திட்டுவீங்க. இப்போ உங்களுக்கு நடக்கும் பொழுது ? உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்டினியா?”, சிரித்துக் கொண்டே எழுந்துப் போனாள் அன்னபூரணி.

ராஜாராமனுக்கு எரிச்சல். எவன் இந்த மாதிரி டயலாக் எல்லாம் கண்டுப் பிடிக்கிறானோ. அவனை முதல்ல கொல்லணும்.

கண்ணை மூடிக் கொண்டார்.

எல்லாம் இந்த பிரகாஷ் பயலால வந்த வம்பு.

பிரகாஷ், ராஜாராம் அன்னபூரணி தம்பதியரின் ஒரே மகள் வயிற்று ஒரே பேரன். கொள்ளை அன்பு அவன் மேல். அம்மாவும் அப்பாவும் ஹைதிராபாதில் ஜாகை. படிப்பிற்காக வி.ஐ .டி வந்தவன் நான்கு வருடப் படிப்பு முடிந்து சென்னையில் உத்தியோகம் என்றவுடன் தாத்தாவும் பாட்டியும் குஷியாகிப் போனார்கள். அடையாறில் சொந்த வீடு. ஆபீஸ் டைடல் பார்க்கில். சந்தோஷமாக செட்டில் ஆனான் பிரகாஷ்.

முதல் மாதம் முடிந்தபின் தொடங்கியது சலசலப்பு.

” என்னடா மணி 10 ஆறது, எப்போவும் 8மணிக்கு வர புள்ள, வரலேனா கவலைப் பட மாட்டோமா? ஒரு போன் பண்ணி சொல்லலாம்ல?”, பாட்டி ஆரம்பித்தாள்.

உள்ளே நுழைந்து ஷூவைக் கழற்றி ஸ்டாண்டில் வைத்தவன் “ஒண்ணும் இல்ல பாட்டி நாங்க 4 பேர் லாஸ்ட் மன்த் ஜாயின் பண்ணினோம்ல, இன்னிக்கி சலரி டே. அதுக்கு ஒரு சின்ன ட்ரீட், எங்க டீமுக்கு , அதான் லேட்”.

“சம்பளம் வந்தாச்சா? அது முதல்ல பெரியவா கிட்ட குடுத்து ஆசீர்வாதம் வாங்கி அப்புறம் எடுத்து செலவு பண்ணலாம்ல.”,

“அன்னபூரணி, சாப்பாடு எடுத்துவை. அவனே டயர்டா வந்து இருப்பான்,” ராஜாராம் குரல் வந்து பிரகாஷ் சொல்ல வந்த பதிலை நிறுத்தியது.

“தாத்தா, ஐ செட் ட்ரீட். நானும் சாப்டுட்டு தான் வந்தேன் , சிரித்துக் கொண்டே தாத்தாவின் கன்னத்தில் செல்லமாக தட்டி விட்டு படியேறி தன் அறைக்குள் சென்று விட்டான்.

.”அப்போ நான் பண்ணி வெச்ச பரோட்டா?’, அன்னபூரணியின் குரலில் ஒரே சோகம்.

நாளைக்கு காலம்பற ப்ரேக்பாஸ்டுக்கு சாப்பிடறேன் பாட்டி “, ஆகாசத்து அசரீரியாய் அவன் குரல் வந்தது.

கிச்சன் வேலை முடித்து படுக்க இன்னும் ஒரு கால் மணி நேரம் ஆனது. ராஜாராம் நியூஸ் பார்த்துக் கொண்டு இருந்தார்.

“என்ன சொல்லிக் குடுத்து வளர்த்து இருக்கா? முதல் மாச சம்பளம். இப்படி யாருக்கோ செலவு செய்வாளா ? அப்பா அம்மாக்கு குடுத்து நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிக்க தோணலையே”

டிவியில் இருந்து கண் எடுக்காமலே ,”அதுக்கு அவன் லீவ் போட்டுட்டு ஊருக்கு போகணும்”, ராஜாராமின் பதில் அன்னபூரணிக்கு சகிக்கவில்லை.

“வேண்டாம், நாம இங்கத்தானே இருக்கோம். நம்ம கிட்ட ஆசீர்வாதம் வாங்கிண்டா வேண்டாம்னு சொல்லப் போறோமா?”,

“நீ இப்போ தூங்கு. நாளைக்கு நான் அவனை நல்லாக் கேக்கறேன்”, சொல்லிவிட்டு டக்கென்று டீவியை அணைத்து லைட்டையும் அணைத்தார் ராஜாராம்.

அடுத்த நாள் ப்ரேக்பாஸ்ட சாப்பிடும் போது மெதுவாக ஆரம்பித்தார் ராஜாராம்.

“கண்ணா, முதல் சலரி. அம்மா அப்பா கிட்ட பிளெஸ்ஸிங்ஸ் வாங்கியாச்சா?’,

“ஹ்ம்ம் அது தான் எப்போவுமே உண்டே, சலரிக்கு என்ன ஸ்பெஷல்?. நீங்க, அம்மா, பாட்டி, அப்பா எல்லாரும் எப்போவும் எனக்கு நெறைய ப்ளேசஸ் தருவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும், படித்துக் கொண்டு இருந்த பேப்பரில் இருந்து கண் எடுக்காமல் பதில் வந்தது.

“ஆனாலும் அந்த காலத்துல நாங்க, ஏன் உங்க அப்பா கூட உங்க பாட்டி உயிரோட இருந்த வரைக்கும் அவங்க கிட்ட மாச மாசம் சம்பளத்தை குடுத்து நமஸ்காரம் பண்ணி வாங்கிண்டுத் தான் பழக்கம்.வி ஆர் ஓல்ட் ஜெனரேஷன்’,

“இதுல இருக்கற பிராக்டிகல் டிபிகல்ட்டி என்னன்னா , எனக்கு சலரி நேரா கார்பொரேட் அக்கௌன்ட்ல போய்டும். எனக்கே காசு வராது. வேணும்னா இந்த டெபிட் கார்ட வெச்சு அசீர்வாதம் வாங்கிக்கலாம்”. சிரித்தான் பிரகாஷ்

“போதும் கொழந்த சாப்பிட விடாம தொண தொண ன்னு ஏன் பிடுங்கறேள் . அவர் கெடக்கார் ஓல்ட் மேன் நீ சாப்பிடு கண்ணா , ஒரே வார்த்தையில் சேம் சைட் கோல் அடித்து நல்ல பெயர் தட்டிச் சென்றாள் அன்னபூரணி.

அது வெறும் தொடக்கம் தான்.

“இப்போ பைக் வாங்க என்ன வேண்டி இருக்கு. நம்ம கார் இருக்கும் பொது. இந்த ட்ராபிசில புள்ளய அனுப்பிட்டு அவ அம்மா அப்பாக்கு யார் பதில் சொல்றது”

“யார் அந்த பொண்ணு அவன் கூட இப்படி ஒட்டிண்டு உக்காந்துண்டு போறா பைக்ல. வேள கேட்ட வேளைல அவளை வீட்லே கொண்டு விடறேன்னு இவன் போறான். எனக்கு சரினு படல”

இப்படிப் புலம்பல் துவங்கும் போதெல்லாம் ராஜாராமன் கண்டுக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொண்டார்.முதல் தடவை பட்ட அனுபவம்.
மகளும் மருமகனும் சென்னை விஜயம் செய்த போது மெதுவாக பேசிப் பார்த்தாள் அன்னபூரணி.

“அதான் வேலைனு ஆயாச்சு, பேசாம அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பாக்க ஆரம்பிக்கலாமா?’,

மகள் கறாராக பதில் சொன்னாள் ” அம்மா , இந்த காலத்து பசங்க ஆம்பள பொம்பள வித்யாசம் பார்க்காம பிரெண்ட்ஸ் வெச்சுக்கறா. அது தான் நல்லதும் கூட. அதுலேயே யாரையாவது பிடிச்சு இருக்குன்னு சொன்னாலும் சேரி, இல்லனா அம்மா நான் கல்யாணத்துக்கு ரெடி ன்னு என் கிட்ட அவனா சொன்னாலும் சரி. அது வரைக்கும் நான் இது பத்தி பேச மாட்டேன்,”

சின்னச் சின்ன விஷயங்கள் தான். அவன் மனதின் போக்கு இவர்களுக்குப் புரியவில்லை.

எதுவும் பேசாமல், தங்களுக்குள்ளே கவலைப் பட்டுக் காலம் கடத்துகிறோம் என்பதும் புரியவில்லை.

ஒரே ஒரு முறை அவனிடம் நேரடியாக ஏதோ கேட்டதற்கு அவன், “தாத்தா, உங்களுக்கு நெறைய டயம் இருக்கு. தட் ஐஸ் தி ப்ராப்ளேம். ரொம்ப யோசிக்கறேள்.யூ டோன்ட் ஹவ் டு. பகவத் கீதை ல என்ன சொல்லியிருக்கு, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும். சோ பி பாசிட்டிவ்”,

இப்படி சொன்ன பிறகு இருவருக்கும் பேச வழியே இல்லாமல் போனது.

இப்போது பிரச்சனை வேறு. ட்ரெக்கிங் போகிறேன் என்று, வெள்ளிக்கிழமை கிளம்பியவன் சனிக்கிழமை இரவு வரை ஒரு தகவலும் இல்லை. இதற்கும் படித்துப் படித்து சொல்லி அனுப்பினார் ராஜாராம். “போய் சேர்ந்து உடனே போன் பண்ணு”

செவிடன் காதில் ஊதிய சங்கு.

இரண்டு நாட்கள். குமைந்து தள்ளி விட்டாள் அன்னபூரணி. இதென்ன லாட்ஜிங் ஹவுஸ்ன்னு நெனச்சு இருக்கானா. இந்த தடவ வரட்டும். அவன் அம்மா அப்பாவையும் கூப்டு பேசி ஒரு முடிவு எடுக்கணும். இதெல்லாம் நம்மால கவலை பட முடியாது. அவன் அம்மாவே பாத்துக்கட்டும்”,

மனசுக்குள் பூதாகாரமாக டிவியில் பார்க்கும் அத்தனை விகாரங்களும் தலை விரித்து ஆடியது. தூக்கம் கெட்டுப் போனது. ஞாயிற்றுக்கிழமை இருவரும் வெறும் மோர் சாதம் சாப்பிட்டு விட்டு பாவமாக உக்கார்ந்து இருந்தார்கள்.

வாசல் கேட் திறக்கும் சத்தம்.

“பாட்டி”, குரல் குடுத்துக் கொண்டே உள்ளே வந்த பிரகாஷ் இவர்கள் அமர்ந்து இருந்த நிலைக் கண்டு அரண்டுப் போனான். ஊரில் அப்பா அம்மாவிற்கு ஏதாவது…சட்டென்று தலையை ஆட்டி தெளிவானான்.

அன்னபூரணி கண்ணில் இருந்து கரகரவென்று தண்ணீர்.

“கோபத்தில் முகம் சிவந்தது ராஜாராமுக்கு,’ஏண்டா எத்தனை தடவை சொல்லி அனுப்பினேன் ஒரு போன் பண்ணுனு , நாங்க ஓல்ட் ஜெனெரேஷன் தான், கவலை படத் தான் தெரியும், பிகாஸ் வி ஹவ் டயம் டு டூ தாட். ஆனா, ஒரு போன் பண்ணக் கூட உனக்கு டயம் இல்லையா?,

பிரகாஷ் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தான். ” உங்களுக்கு கவலைக் குடுக்கக் கூடாதுனு பாத்தேன். போகும் போதே சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கலை . இறங்கின உடனே ஒரே வாமிட்டிங். டீஹைடிரேட் ஆனதுல மயக்கம் வந்துடுத்து வீட்டுக்கு சொல்ல வேண்டாம்னு நான் சொன்னேன். கூட ஒரே ஒரு பிரெண்ட் ஹாஸ்பிடல்ல தங்கினா. என்னால மத்தவா ப்ரோக்ராம் கெட வேண்டாம்னு போகச் சொல்லிட்டேன். என் பிரெண்ட் உங்களுக்கு போன் பண்ணறேன்னு சொன்னா. நான் தான். அவா சும்மாவே ரொம்ப கவலை படுவா. இது போய் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். இங்க வந்துப் பாத்தா நீங்க என்னவோ கோஸ்ட் பாத்தவா மாதிரி. இதுக்கு நானே போன் பண்ணி இருக்கலாம் போல இருக்கு,”

“இப்போ எப்படிடா இருக்கு. எதுக்கும் நம்ம டாக்டர்கிட்ட ஒரு தடவ போய் காமிக்கலாம். நீ ஒரு நாலு நாள் லீவ் போடு”, மட மட வென்று இருவரும் அவனை மொய்க்க ஆரம்பித்தார்கள்.

“தாத்தா, நீ எதுக்கு என் போன் கால் காக வெய்ட் பண்ணின?, நீயே கூட கால் பண்ணி பத்திரமா போய் சேர்ந்தியான்னு கேட்டு இருந்தா இவ்ளோ கொடச்சல் உங்களுக்கும் இருந்து இருக்காது இல்ல? எப்போவுமே சின்னவா தான் பண்ணனும்னு இல்ல. பெரியவா கூட பண்ணலாம். பிகாஸ் யு ஹவ் டயம் இன் யுவர் ஹன்ட்ஸ்”.

என்னவோ புரிந்தது ராஜாராமிற்கு. அவன் நகர்ந்து போனதும் அன்னபூரணி மெதுவாக கிசுகிசுத்தாள், “கூட தங்கினதா சொன்னானே, ஆம்பளையா? பொம்பளையா?’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *