கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 19,718 
 
 

சந்தியா..ப்ளீஸ்..கொஞ்சம் யோசியுங்க..

இல்லைங்க சுபாஷ்…நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.. தீர்மானமாக கூறினாள் சந்தியா.

அடுத்த ஆறு மாசத்துல ப்ரோமோஷனும் சம்பள உயர்வும் இருக்கு, நான் ஏற்கனவே உங்க பேரை ரெகமெண்ட் பண்ணிட்டேன்..அதுவும் இல்லாம நீங்க, ரொம்ப வருஷமா இங்கேயே இருக்கீங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உங்க கணவர், அவரோட கம்பெனியில அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தந்தாரு, அப்பவும் நீங்க போகல..இப்போ திடீர்னு ரிசைன் பண்ணா என்னங்க அர்த்தம்..

சாரி சுபாஷ்..எனக்கு கொஞ்ச நாள் என் குழந்தையோட இருக்கனும்..ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க..

சரி சந்தியா..அப்புறம் உங்க இஷ்டம்..ரெண்டு மாசம் நோட்டீஸ் பீரியட் இருக்கு..பாத்துக்கோங்க..

சரி.. என்று கூறி விட்டு எழுந்து சென்ற சந்தியாவையே பார்த்து கொண்டிருந்தேன்.

என்ன ஆச்சு இவங்களுக்கு..ஒன்பது வருஷமா இங்க வேலை பாக்குறாங்க, என்ன விட மூன்று வருடம் ஜூனியர், நானும் அவங்களும் ஐந்து வருஷமா ஒரே ப்ராஜெக்ட்’ல இருக்கோம்..இந்த கம்பெனியை விட்டு போக எப்பவுமே இஷ்டம் இல்லன்னு சொல்றவங்க..அதுவும் இல்லாம குழந்தை பிறந்து ஆறு மாசம் கழித்து, போன பிப்ரவரி தான் ரீ-ஜாயின் பண்ணாங்க. மூர்த்தி கூட சந்தியாவை, ஸ்கந்தா கூட சேர்ந்து வேலை பார்க்க சொன்னார். அப்பொழுது தான் வேலை குறைவாக இருக்கும், சீக்கிரம் வீட்டுக்கு போகலாமென்று.. இப்பொழுது எதனால் இந்த முடிவை சந்தியா எடுத்தாள்..என்று யோசித்தேன்.

சந்தியா எப்பொழுதுமே என்னை ஒரு சகோதரனாக பார்ப்பவள். எனக்கு அவள் ரிசைன் செய்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

மாலை நண்பருடன் காபி குடிக்க கேன்டீனிற்கு சென்றேன். காபி வாங்கி விட்டு சேரில் அமரும் போது, சங்கீதா நின்று கொண்டிருந்தாள். சங்கீதா, சந்தியா, நான் மூவரும் ஒரே ப்ராஜெக்ட்டில் வேலை செய்திருக்கின்றோம். சங்கீதா இப்பொழுது வேறு ப்ரொஜெக்ட்டிற்கு சென்று விட்டாள். சங்கீதாவும், சந்தியாவும் ஒரே பஸ்ஸில் வீட்டிற்கு போவார்கள். அதுவுமில்லாமல் இருவருமே வேளச்சேரி இந்திரா நகரில் வசிப்பவர்கள்.

என் நண்பரிடம் கூறி விட்டு நேராக சங்கீதாவிடம் சென்றேன். அவள் அப்போது தான் காபி வாங்கி வந்து டேபிளில் அமர்ந்தாள்.

சங்கீதா..

ஹாய் சுபாஷ்..வாங்க..உக்காருங்க..

எப்படிங்க இருக்கு உங்க வேலை..

நல்லா போகுதுங்க சுபாஷ்..

இரண்டு நிமிடம் சில கம்பெனி சார்ந்த விஷயங்களை பேசினோம்.

சங்கீதா..உங்க கிட்ட ஒண்ணு கேக்கனும்..தப்பா எடுத்துக்காதீங்க..

சிரித்து கொண்டே பார்த்த சங்கீதா..என்ன சந்தியா ரிசைன் பண்ணது தானே..

ஆமாங்க..என்ன சந்தியா வீட்டுல ஏதாவது பிரச்சினையா?

சந்தியாவின் வீட்டில் அவளுடைய அப்பா அம்மா மற்றும் இரண்டு தங்கைகளுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர். அப்பா பெட்ரோல் பங்கில் கணக்கராக வேலை செய்கிறார். சந்தியாவின் கணவர் திருமணம் ஆன பின், சந்தியா அவள் தாய் வீட்டிற்கு ஓவ்வொரு மாதமும் தரும் பணத்தை தரக்கூடாது என்று கூறி விட்டார். பெருங்களத்தூரில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி சந்தியாவை மாத தவணை கட்ட வைத்து விட்டார். சந்தியாவின் பெற்றோரை சிறிதும் மதிக்க மாட்டார். சந்தியா பல முறை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள். குழந்தை பிறந்த பிறகு தாய் வீட்டில் இருந்து இரண்டு வாரத்தில் அழைத்து வந்து விட்டார். வக்கில்லாதவங்க வீட்டுல என் குழந்தை வளர வேண்டாம் என்று கூறி விட்டார். எங்க குடும்பம் வக்கில்லாம போனதே எனக்கு திருமணம் செய்த பின் தான் என்று சந்தியா பல முறை கூறி வருத்தப்பட்டிருக்கிறாள். மேலும் குழந்தைபேறுக்கு ஆன மருத்துவ செலவை கம்பெனியில் திரும்ப தருவார்கள். அதையும் அவர் சந்தியாவின் தந்தையிடம் தர அனுமதிக்கவில்லை.

சந்தியாக்கு எப்ப தான் பிரச்சினை இல்லை..அவ நிம்மதியா இருக்கறதே ஆபீஸ்’ல தான் என்றாள் சங்கீதா.

பிறகு ஏங்க..ரிசைன் பண்ணாங்க..

ஸ்கந்தா..தான் காரணம்..என்றாள் சங்கீதா..

ஸ்கந்தாவா..யாரு..சந்தியா கூட ஒரே அப்ளிகேஷன்ல வேலை பாக்குறாரே அவரா..நம்ப முடியாமல் கேட்டேன்.

ஸ்கந்தா ஒரு சிறந்த புரோகிராமர், எல்லாருக்கும் உதவி செய்பவர். டீமில் யாருக்கு சந்தேகம் என்றாலும் ஓடிச்சென்று உதவுபவர். மிக முக்கியமாக தலைமைக்கு மிக மிக நம்பிக்கையானவர். பார்க்க சிரித்த முகத்துடன் மிக அழகாக இருப்பார். சந்தியாவிற்கு வேலை பளுவை குறைக்கத்தான் அவருடன் சேர்ந்து வேலை செய்ய சொன்னார் மூர்த்தி.

என்னால நம்ப முடியலைங்க..வேணும்னா மூர்த்திக்கிட்ட நான் பேசி பாக்குறேன்..

அவ ஏற்கனவே மூர்த்திக்கிட்ட பேசிட்டா..அவரு எனக்கு யார் யார் எப்படிப்பட்டவங்கன்னு தெரியும்னு சொல்லி இருக்கார்.. சந்தியா அவ கணவரிடமும் சொல்லி இருக்கா..அவரோ..நீ ஒழுங்கா நடந்துக்கிட்டா ஏன் இந்த பிரச்சினை எல்லாம் வருதுன்னுட்டாராம்..அதான் ஆனது ஆகட்டும்னு ரிசைன் பண்ணிட்டா..அவ கணவருக்கு கூட இன்னும் தெரியாது.. நோட்டீஸ் பீரியட் முடிஞ்சு நேரா அவ அம்மா அப்பா கூட போய் இருக்க போறாளாம்.

தலையை குனிந்தபடியே கேட்டு கொண்டிருந்தேன்.

சரிங்க சுபாஷ்..நான் உங்ககிட்ட பேசினேன்னு அவகிட்ட சொல்லாதீங்க..அவ உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லி இருக்கா..நான் கிளம்பறேன்..பை..என்று கூறிவிட்டு சங்கீத போய் விட்டார்.

மெதுவாக நான் வேலை செய்யும் பில்டிங்கிற்குள் நுழைந்தேன். மூன்றாவது மாடிக்குள் நுழையும் போது சந்தியா வெளியே வந்தாள். என்னை பார்த்தும் பார்க்காதது போல் போனாள்.

நேராக என் இருக்கைக்கு போய் அமர்ந்தேன். மூர்த்தி போனில் அழைத்தார்.

சுபாஷ்..சீனியர் மேனேஜர் எல்லாம் ஏதாவது ஒரு டிரைனிங் எடுக்கணுமா..எனக்கு டைம் இல்ல..நீ தான நம்ப ப்ராஜெக்ட் டீம் லீட்..எனக்கு பதில் நீ எடுத்திடு..முடிஞ்சா அடுத்த வாரமே எடுத்திடு..

சரி என்று தலை ஆட்டிவிட்டு என் இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

மூர்த்தியும் ஸ்கந்தாவும் சிரித்து கொண்டே என்னை கடந்து போனார்கள்.

பாவிகளா..ஒரு பெண்ணால் எவ்வளவு தான் பொறுத்து கொள்ள முடியும். வேலை செய்யும் இடத்திலும் நிம்மதி இல்லை, வீட்டிலும் கணவனால் நிம்மதி இல்லையென்றால் என்ன தான் செய்வாள்.. வீட்டிலும் அலுவலகத்திலும் ஒழுங்காய் வேலை செய்ய வேண்டும், கணவனின் தாய் தந்தையரை தன் பெற்றோர் போல் தாங்க வேண்டும், பிள்ளை பெற்று கொடுக்க வேண்டும், எதிர்கால திட்டங்களுக்காக மாடாய் உழைக்க வேண்டும். ஒரு நாளில் மூன்று மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து வீட்டுக்கு போனாலும், அவள் தான் சமைக்க வேண்டும். இது போன்ற பணியிட தொல்லைகளையும் சகித்து கொள்ள வேண்டும். மொத்தத்தில் பெண் எப்போதும் மெழுகுவர்த்தி போல் தன்னை எரித்துக்கொண்டு ஒளி தர வேண்டும்..

மனம் குமுறியது..பேசாமல் இன்று வீட்டிற்கு போய் விடலாம் என்று கிளம்பினேன்.

எதிரில் மூர்த்தியும் ஸ்கந்தாவும் வந்தார்கள். ஸ்கந்தா..என் வேலையை சுபாஷ் கிட்ட தள்ளி விட்டுட்டேன்..என்றார் மூர்த்தி சிரித்துக்கொண்டே. அப்படியா..ஐயோ பாவம்..என்றார் ஸ்கந்தா..

பாத்துக்கோங்க சுபாஷ்.. டிரைனிங் சும்மா வேற லெவல்’ல இருக்கணும்..என்றார் மூர்த்தி.

சரிங்க.. வரேங்க..என்று கூறி விட்டு கிளம்பினேன்.

மறு நாள் எந்த வேலையும் எனக்கு ஓடவில்லை. எப்பொழுதெல்லாம் ஸ்கந்தா, சந்தியாவின் அருகில் போனாலும், யாரும் பார்க்காத மாதிரி எட்டி பார்த்தேன்.

சந்தியா ஏதோ கேள்வி கேட்க, இவர்..இவனுக்கு என்ன மரியாதை..இவன், சந்தியா தோளில் கை வைத்து சாய்ந்து கொண்டே கம்ப்யூட்டர் திரையில் விரல் வைத்து விளக்கம் கொடுத்தான். சில முறை முதுகில் தட்டினான். சந்தியா நெளிந்தாள்.

சந்தியா தண்ணீர் குடிக்க சென்ற போது பின்னாடியே சென்றான். அங்கே ஏதோ சொல்லி சிரித்தான்.. சந்தியா முகம் சுழித்தாள். இப்படி இன்னும் சில லீலைகளை நாள் முழுவதும் அரங்கேற்றினான். இதை பல பேர் பார்த்தும் பார்க்காதது போல் போனார்கள்.

அட கடவுளே..பெண்களின் பாதுகாப்பிற்கென்று பல விதிகள் இங்கு வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தலைமைக்கு நெருக்கம், திறமை போன்றவற்றால் தப்பித்து கொள்கிறார்கள். இதில் பல முறை நானே ஸ்கந்தாவிடம், உங்ககூட வேலை செய்வதினால் தான் சந்தியா ரிலாக்ஸா இருக்காங்க என்று கூறி இருக்கிறேன். அப்படி இருக்க சந்தியா யாரைத்தான் நம்புவாள்.

வெட்கமாக இருந்தது..யோசித்து கொண்டே இருந்தவனை மூர்த்தியின் குரல் எழுப்பியது. என்னா சுபாஷ்.. டிரைனிங் ரெடி பண்ணிட்டீங்களா..

இவனுங்கள எதாவது பண்ணணுமே..யோசிடா..யோசி..

திங்கள் கிழமை காலை எல்லாரும் மீட்டிங் ரூமில் இருந்தோம். நான் ப்ரொஜெக்டரை ரெடி செய்து கொண்டிருந்தேன். மூர்த்தியும், ஸ்கந்தாவும் உள்ளே நுழைந்தார்கள் . கூடவே மற்ற ப்ராஜெக்ட் ஆட்களும் வந்தார்கள். மொத்தமாக மூன்றாவது மாடியில் வேலை செய்யும் எண்பது சதவீகிதம் பேர் உள்ளே இருந்தார்கள்.

சந்தியா கடைசி வரிசையில் அமர்திருந்தாள். அவளுக்கு அடுத்த வரிசையில் ஸ்கந்தாவும், முன் வரிசையில் மூர்த்தியும் அமர்ந்தார்கள்.

மூர்த்தி மெதுவாக யாருக்கும் கேட்காத மாதிரி சொன்னார். யப்பா சுபாஷ்..நீ நல்லதா ஏதாவது பண்ணுவேன்னு தான் நான் எல்லாரையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். நீ வேற சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்டு, என்ன டிரைனிங்ன்னு கூட இன்னும் என்கிட்டே சொல்லல..பாத்துப்பா..என்றார்.

கவலைப்படாதீங்க மூர்த்தி.. இந்த டிரைனிங்கோட தலைப்பு, கன்டென்ட் எல்லாம் HR டீம்கிட்ட காட்டிட்டேன். அவங்க ஓகே சொல்லிட்டாங்க. இந்த டிரைனிங்கையும் வீடியோ ரெகார்ட் பண்ண சொல்லிட்டாங்க.. எல்லாமே உங்க ஐடியா தான்’ன்னு சொல்லியிருக்கேன்.. பாருங்க.. டிரைனிங் வேற லெவல்’லா இருக்கும்..என்றேன்.

சூப்பர் சுபாஷ்..சூப்பர்..என்றார் மூர்த்தி.

நான் திரையின் முன் சென்று நின்றேன். ஓகே சுபாஷ்.. லெட்ஸ் ஸ்டார்ட் என்றார் மூர்த்தி.

தலைப்பு ஒளிர்ந்தது..Workplace Sexual Harassment (பணியிட பாலியல் துன்புறுத்தல்)!!

கம்பெனியில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்கென்று உள்ள அனைத்து விதிகளையும் விளக்கினேன். சுமார் முப்பது நிமிடங்கள் சென்றது.

சரி..இப்போது கேள்வி பதில் நேரம் (Q & A time) என்று கூறி விட்டு, ஒரு பெரிய கவர் நிறைய உயர்தர சாக்லேட்டுகளை என் முன் இருந்த டேபிள் மேல் வைத்தேன்.

அனைவரும் வாவ்..என்றனர்.

மொத்தம் பதினைந்து கேள்விகள்..ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு சாக்லேட்டு என்றேன்..

அனைவரும் ஆர்வமாகினர்..

முதல் கேள்வி..பணியிட பாலியல் துன்புறுத்தல் யார்யாரால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும்?

ஒரு முந்திரிக்கொட்டை கத்தியது..நமக்கு நன்கு தெரிந்தவர், டீம் லீடு, செக்யூரிட்டி, ட்ரெயினிங் கொடுப்பவர்.. அது மொத்தத்தில் யாரையும் விட்டு வைக்கவில்லை.

ஒரு சாக்லேட்டை அதனிடம் கொடுத்தேன்.

இரண்டாம் கேள்வி: எவ்வாறான செயல்களை நாம் அனுமதிக்க கூடாது.

அதே முந்திரி கொட்டை திரும்ப கத்தியது..தேவையில்லாமல் தொடுவது, பூ தருவது, எங்கு சென்றாலும் பின்னாடியே வருவது, கையை பிடித்து இழுப்பது, என்று வரிசையாக சொல்லிக்கொண்டே போனது..

இன்னொரு சாக்லேட்டையும் அதனிடம் கொடுத்தேன்.

இப்போது கூட்டம் சலசலத்தது, சிலர் தீவிரமாக அடுத்த கேள்வியை எதிர்பார்த்தார்கள்.

ஸ்கந்தாவின் லீலைகளை எல்லாம் கேள்விகளாக மாற்றி இருந்தேன்.

போட்டி போட்டு கொண்டு பதில் சொன்னார்கள்..

மீனா (வேறொரு ப்ராஜெக்ட்டின்மேனேஜர்) சத்தமாக. என்ன மூர்த்தி?..எல்லா ஆன்ஸரும் உங்க டீம் ஆள பாத்தே சொல்லிடலாம் போல இருக்கே..என்றார்.

சில ஆர்வ கோளாறுகள் டக்கென்று ஸ்கந்தாவை திரும்பி பார்த்தன.

ஸ்கந்தாவின் முகம் முற்றிலுமாக கறுத்து விட்டது. மூர்த்தி, கால்களை மாற்றி மாற்றி வைத்தார். மேலே விட்டதை பார்த்தார்.

கடைசி கேள்வி: இந்த துன்புறுத்தலை யாரிடம் முதலில் கூற வேண்டும்? அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேறு யாரிடம் கூறினால் நடவடிக்கை எடுப்பார்கள்?

பார்கவி (இன்னொருப்ராஜக்ட்மேனேஜர்) சிரித்து கொண்டே, மூர்த்தி தான் இங்க சீனியர் மேனேஜர். அவருக்கும் மேலன்னா.. அதுவும் அவரை பற்றியே கம்பளைண்ட் செய்யணும்னா..அதை மூர்த்தியே தான் சொல்லணும்..

மூர்த்தி கடுகடுப்பாக..மிஸ்டர் பத்மநாபனுக்கு மெயில் அனுப்பனும் என்றார்.

கடைசி சாக்லேட்டை அவரிடம் கொடுத்தேன். தேங்க்ஸ் மூர்த்தி என்றேன்.

எல்லோரும் சத்தமாக கை தட்டினார்கள். பென்ட்டாஸ்டிக்.. ரொம்ப ஜாலியாக இருந்தது, காங்கிராட்ஸ் மூர்த்தி அண்ட் சுபாஷ் என்றார்கள்.

மீட்டிங் ரூமை விட்டு வெளியே வந்தேன். சந்தியா என்னை முறைத்து பார்த்து கொண்டே அவள் இருக்கையில் சென்று அமர்ந்தாள். மூர்த்தியும் ஸ்கந்தாவும் என்னை பார்த்தும் பார்க்காமல் கடந்து சென்றார்கள். எனக்கு ஏதோ ஒரு பாரத்தை இறக்கி வைத்ததை போல் இருந்தது.

இரண்டு வாரம் சென்றிருக்கும். ஒரு நாள் காலை எனக்கு ஒரு மெயில் வந்தது. சந்தியா ரிசைன்னேஷனை திரும்ப பெற்று கொண்டாள் என்ற விவரம் அதில் இருந்தது.

நேராக சந்தியாவின் இருக்கைக்கு சென்றேன். காபிக்கு போலாமா..சங்கீதாவையும் கூப்பிடுங்க என்றேன்.

சந்தியா..சிரித்து கொண்டே..அந்த சாக்லேட் எங்க வாங்குனீங்க என்றாள்..

– 6th August 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *