கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 14,982 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலவச ஆம்புலன்ஸ் உதவிக்குக் கூப்பிட வேண்டிய தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் ஓரங்களில் நாட்டப்பட்ட நெடுஞ்சாலை. சாலை ஓரங்களில் தயார் நிலையில் நிற்கும் பளபளப்பான ஆம்புலன்ஸ்கள் பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத்தானிருக்கும். அனைத்து வசதிகளும் அமையப் பெற்ற விலை உயர்ந்த வெண்ணிற வாகனங்களை மக்கள் சேவைக்காகச் சாலை ஓரங்களில் நிப்பாட்டியிருக்கும் கருணை உள்ளங்களை, அது வழியாகப் பயணிக்கும் போதெல்லாம் முன்பு வாழ்த்தாமல் இருந்ததில்லை.

இப்போது பார்த்தால் எரிச்சலாகவும் பயமாவும் இருக்கிறது.

‘அரசு ஆம்புலன்ஸ்’ என்று எழுதப்பட்ட விளம்பர போர்டுகளும் அவற்றிற்கிடையே பார்க்கையில், அரசுடைய மக்கள் சேவையைப் பாராட்டாமலிருந்ததுமில்லை. இருந்தாலும் மனசில் சிறு சந்தேகம் வேர்விட்டது. மாநில எல்லையைத் தொடும் சிறு தொலை தூரக் குறுகலான சாலையில் தேவைக்கு அதிகமான அளவிற்கு இலவச ஆம்புலன்ஸ்கள், கண்ணும் கருத்துமாகத் தயார் நிலையில் நிற்கின்றன. ஆனால் எங்கள் ஊர் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலை ஓரங்களில் இலவச ஆம்புலன்ஸ் உதவிக்குக் கூப்பிட வேண்டிய தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்ட விளம்பரப் பலகை ஒன்றுகூட என் பார்வையில் படவில்லையே என்ற கவலை எனக்குள் முதலில் இருந்தது. இப்போது அந்தக் கவலையும் எனக்கில்லை. அதன் சேவையும் தேவை இல்லை யென்றே தோன்றுகிறது, நூக்கண்ணுவின் இறப்பிற்குப் பிறகு.

சில வருடங்களுக்குப் பிறகு பஸ்ஸின் முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு அண்ணன் குடியிருக்கும் ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருக்கையில் கவனம், அந்தச் சாலையின் இரு மருங்குகளிலும் ஆங்காங்கே தெரிந்த கட்டடங்கள் மீது மோதியது. புதுசு புதுசாகப் பலமாடிக் கட்டடங்கள் வானை நோக்கி, நெற்றிகளில் வண்ண விளக்குகளால் எழுதப்பட்ட விளம்பரப் பலகை- எலும்பு முறிவுக்கு 24 மணி நேர அவசரச் சிகிச்சை’. மேலும் பல கட்டடங்களின் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. பெரும்பாலும் எலும்பு முறிவுச் சிகிச்சைகளுக்கான மருத்துவமனைகளாகத்தான் இருக்க வேண்டும்.

மேகங்களுக்கு வழித் தடையாக நிற்கும் அக்கட்டடங்களை வியப் போடு பார்த்துக்கொண்டு என் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த சக பயணி, தயாள மனம் படைத்த மருத்துவர்கள் நிறுவிய மனிதநேய மையங்கள் என்று பாராட்டினார், நூக்கண்ணுவின் நினைவு வந்ததும், அவர் சொன்ன தவறைத் திருத்திச் சொன்னேன்.

‘இல்லை மனிதர்களை மேயும் மையங்கள்’. நான் சொன்ன திருத்தம் சரியில்லை என்ற மாதிரி என்னைப் பார்த்தார்.

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நபருடைய உயிர்காக்க உடனடியாக எடுத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்குத் தோதுவாக நிப்பாட்டப்பட்ட ஆம்புலன்ஸ்கள். கார் பிடிக்க வசதியற்ற ஏழை களுக்கும் விபத்தில் சிக்கிக் கேட்பாரற்று, இரத்தம் கொட்டிக் கிடக்கும் ஆதரவற்றவர்களுக்கும் இந்த ஆம்புலன்ஸ் சேவை பெரும் உதவியாக யிருக்கும் என்று தானாகப் புகழ்ந்தார். இவர் அனுபவமில்லாத அப்பாவி என்று எண்ணிக்கொண்டேன்.

விபத்தில் சிக்கிய நூக்கண்ணுவுக்கு உடனடி உதவிக்கு வந்ததும், இவர் புகழ்ந்து பேசக்கூடிய ஆம்புலன்ஸ்களில் ஒன்றாகத்தானே இருக்க வேண்டுமென்று எனக்குள் கேட்டுக்கொண்டேன்.

எல்லா ஆம்புலன்ஸ்களிலும், ‘ஆம்புலன்ஸ்’ என்ற ஆங்கில எழுத்துக் களைப் புரட்டி எழுதியிருப்பதன் நோக்கமென்னவென்று ஆரம்பத்தில் புரியவில்லை. பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வெட்கம் தடையாக இருந்தது. இண்டர்நெட் யுகத்தில் இதுகூடத் தெரியாமலா என்று திருப்பிக் கேட்டு விட்டால், தலையடிச்சு சாவ வேண்டியதுதான். எல்லோரும் தெரிந்திருப்பது போல் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

சாலை ஓரங்களில் மருத்துவமனைகள் மைல் கற்கள் போல் ஆங்காங்கே. கண்வெட்டித் திறக்குமுன் பாய்ந்து வந்து கவ்விக் கொண்டு மின்னலை முந்திக்கொள்ளும் ஆம்புலன்ஸ்கள். எக்ஸ்ரே, ஸ்கேன் என்று நவீன வசதிகள் பல இருந்தும், நூக்கண்ணு ஏன் மண்டை யைப் போட்டான்? அது விடை தெரிய முடியாத ஒரு விடுகதை!

மருத்துவமனைகளின் உன்னதியைக் காணும் போதெல்லாம், நூக்கண்ணுவின் அநியாய இறப்பு இன்னும் அவிழ்க்க முடியாத ஒரு முடிச்சாகவே இருக்கிறது. விபத்துக்களில் சிக்காமலிருக்க வேண்டும். சிக்கிவிட்டால், அந்த இடத்திலேயே உயிர் பிரியுமானால், அவன் கொடுத்து வைத்த சொர்க்கவாசி என்பது அனுபவப் பாடம்.

புதுசாக வாங்கிக் கொடுத்த சைக்கிளில், அய்யோ பாவம், வாப்பா வுக்கு மதியம் சோறு கொண்டு போனவன்தான். கண்ணும் மூக்கும் தெரியாமல் பின்னால் விரைந்து வந்த ஒரு சிகப்பு டயோட்டா, லேசாக சைக்கிளைத் தட்டிவிட்டது. தெறித்துப் போய்க் குப்புற ரோட்டில் விழுந்தான். தலையில் காயம். காலில் லேசாக. அந்நேரம் அவனுக்கு நல்ல நினைவிருந்தது. அவனாகவே எழும்பி, விழுந்த சைக்கிளை ஸ்டேண்டில் போடுவதற்கிடையில், ஒரு ஆம்புலன்ஸ் அவனருகில் வந்து நின்றது. எப்படித் தெரிந்தானோ, எங்கிருந்து நோட்டம் போட்டானோ தெரியவில்லை. அவன் எவ்வளவோ மறுத்தும், மின்னலை முந்திக்கொண்டு வந்த, இலவச சேவைக்காக விடப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் சமூகத் தொண்டு என்று சொல்லி அவனைத் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்தது, அந்தத் தனியார் மருத்துவமனைக்கு.

ஆம்புலன்சுடைய விரைவைக் கண்டதும், பிரியவிருக்கும் உயிரை விடாமல் பிடித்துக்கொள்வதற்காக நர்சுகள் அங்குமிங்கும் ஓடி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அவசரமாக வண்டியை உருட்டிக் கொண்டு வரக் கத்தினர். நூக்கண்ணுவை ஸ்ட்ரச்சரில் எடுத்து வண்டியில் தூக்கி வைக்க முனையும் போது அவன் சொன்னான்: ‘நான் நடந்து வாறேன், சின்ன காயம்தான்’. அவனுடைய தலையிலுள்ள காயத்திலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

‘நடக்கக்கூடாது. படுத்துட்டுத்தான் வரணும்’. நர்சுகள் அவனைப் பலவந்தமாகப் பிடித்துப் படுக்க வைத்தனர். நோயாளி கைமாறுகையில் ஆம்புலன்ஸ் டிரைவருடைய ஜேப்பிலிருந்த மொபைல் போனிலிருந்து இசை ஒலி கேட்டது. காதில் வைத்துக் கேட்டுவிட்டு, ஆம்புலன்ஸை அவசரமாக ஓட்டிச் சென்றார். வேறு யாரோ எங்கோ அடிபட்டுக் கிடக்கலாம். அந்த இரையைக் கவ்விக்கொண்டு வருவதற்காகக் கிடைத்த தகவலாகவும் இருக்கலாம்.

நூக்கண்ணுவுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதைப் பற்றியும் இரண்டு நாட்களுக்குப் பின் கேள்விப்பட்டு, பார்ப்பதற்காக சூப்பர் பாஸ்டில் சென்றுகொண்டிருந்த என் கண்ணுக்கு, சாலையோரத்தில் ஏதோ வாகனத்தில் அடிபட்டு நோவால் துடித்துக்கொண்டிருந்த ஒரு வயோதிகரைச் சுற்றிச் சிலர் நின்று கொண்டிருந்தது தெரிந்தது. சூப்பர் பாஸ்டின் வேகத்தில் தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்க்க முடியவில்லை. எதிரில் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

பார்வையாளராகச் சென்ற எனக்கு, நோயாளியைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பதாக, வரவேற்பு கவுண்டரில் உள்ள பெண் சொன்னாள்.

தலையிலும் காலிலும் கட்டுப்போட்ட நிலையில் நினைவிழந்து குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வரும் நூக்கண்ணுவின் சித்திரம், மனசில் நிரம்பியது. என் ஒன்றுவிட்ட தம்பியுடைய மகன்.

சாலையோரத்தில் இரத்தம் கொட்டக் கிடந்த வயோதிகரின் நிலை என்னவாயிற்றோ? அவர் எந்த மருத்துவமனையில் எந்தப் பிரிவில், யாருடைய கண்காணிப்பில்? இதுபற்றிச் சிந்திக்கையில் நூக்கண்ணு வுக்கு ஏற்பட்ட காயம் பற்றி விசாரிக்க மனசு வேகப்படுத்தியது.

‘லேசான காயம்தானா?’

வரவேற்பாளரான பெண்ணிடம் விசாரித்தேன். நெத்திலிக் கருவாடு போன்ற உடல் அமைப்புள்ள அந்தப் பெண், ஒரு எரிஞ்சு விழுகிற ஜன்மம்.

‘எனக்கு அது பற்றித் தெரியாது. டூட்டி நர்சிடம் கேளுங்கள். வருவோருக்கு வழிகாட்டுவதுதான் என் வேலை’

‘தீவிர சிகிச்சைப் பிரிவு எந்தப் பக்கம்?’ அருகில் இருக்குமானால் எட்டிப்பார்க்கலாமென்றுதான்.

‘நாலாவது மாடியில்’.

‘லிப்ட் வழியாக நாலாவது மாடிக்குப் போகலாமா?’

‘இது பார்வை நேரமல்ல. அனுமதிச் சீட்டு இல்லாமல் நாலாவது மாடியில் நுழைய முடியாது.’

‘அனுமதிச் சீட்டு எங்கே வாங்கனும்?’

‘சிகிச்சைக்கு முன்பணம் கட்டிவச்ச பிறகுதான் அனுமதிச் சீட்டு கொடுப்பாங்க. நீங்க பார்க்க வந்த நோயாளிக்குச் சிகிச்சை செய்ய முன் பணம் இன்னும் கட்டல்ல’.

*நோயாளியுடைய உறவினர்களுக்குப் பார்க்க முடியுமா?’

‘முடியாது. உறவினர்களில் ஒருவருக்கு மட்டுந்தான் அனுமதி. அவருக்கும் உள்ளே போக முடியாது. வாசல்ல நின்று பாலோ காப்பியோ கொண்டு நர்சு கையில் குடுக்கணும். அங்கே நிக்க முடியாது’.

‘நோயாளியுடைய உறவினர்கள் யாராவது இருக்காங்களா?’

‘வருவாங்க. கீழ் தளத்தில் வச்சுப் பாக்கலாம். நாலாவது மாடியில் அவருக்கும் ஒரு குறிப்பிட்ட நேரந்தான் செல்ல அனுமதி உண்டு.’ என் முகத்தைப் பார்த்து அவள் பேசவில்லை.

துணைக்கு வந்திருப்பது நோயாளியுடைய உறவினர் யாராக இருக்கக் கூடும் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள எண்ணமிருந்தது. அது யாரென்று அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாப்பாவா? உம்மாவா? குட்டியாப்பாவா? சிந்தனை இதே வழிக்கு நகரும்போது அவள் கேட்டாள். இப்போது அவள் பார்வை என் முகத்திலிருந்தது.

‘நோயாளிக்கு நீங்க யாரு?’

‘பெரியப்பா ‘.

‘நோயாளியுடைய தகப்பனார் முன்பணம் கட்டி வைக்கப் பணம் கொண்டு வர ஊருக்குப் போனார். இன்னும் காணல்ல. வருவார். 6 மணிக்கு கேஷ் கவுண்டர் மூடிவிடுவாங்க.’

மேலும் அதிகம் பேச விரும்பாமல் பேச்சைச் சுருக்கிக் கொண்டாள். பலர் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியவள். அறை தெரியாதவர் களுக்கு, அறை இருக்கும் மாடியைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்தப் பல மாடிக் கட்டடத்தில் நூற்றுக்கும் அதிகமான அறைகள். எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவளும் வழிகாட்ட வேண்டியவளும், இவள் ஒருத்தி மட்டுமே. பதில் சொல்லியே அவளும் களைத்துப்போய்விட்டிருந்தாள்.

அவளுக்கு எதிரில் வரிசையாகப் போடப்பட்ட பெஞ்சில் கிடைத்த இடத்தில் நூக்கண்ணுவின் வாப்பா வருவதை எதிர்நோக்கி உட்கார்ந்து கொண்டிருந்த என்னுடைய பார்வை, சற்று உயரத்தில் வைக்கப் பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடிக்கொண்டிருந்த காட்சிக்கு நேராகத் திரும்பவில்லை. என்னை ஒட்டியபடி உட்கார்ந்து கொண்டி ருந்தவருக்கு 60 வயதிருக்கும். அவர் பார்வையும் வேறு எங்கோ இருந்தது. அவருடைய முகத்தில் படர்ந்திருந்த சோக நிழலை என் கவனம் ஈர்த்ததும் கேட்டேன்.

‘யாருக்கு?’

‘மகனுக்கு, பைக் ஆக்ஸிடண்ட். ஒரு டயோட்டா இடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டான்’,

‘நிறம்?’

‘சொவப்பு.’

சிந்தனை என்னை மவுனத்தில் ஆழ்த்தியது.

‘நல்ல காயமா?’

‘ஆமா, அவசர சிகிச்சைப் பிரிவில் வச்சிருக்காங்க. தொலைவில் நின்று பாத்தா கண்ணாடிக் கூண்டுக்குள்ளே என்ன தெரியும்? ஒரு தடவைதான் பாத்தேன். ரொம்ப சீரியசான கேஸ்னு நர்சு சொன்னா’. சற்று நேர மவுனத்திற்குப் பின் தொடர்ந்தார். ‘50,000 முன்பணம் கட்டி வைக்கச் சொன்னா. 20 வயசு, கடன் காவல்பட்டு 50,000 வாங்கிக் கட்டி வச்ச பெறவுதான் சிகிச்சை ஆரம்பிச்சாவோ, என்ன கொடுமை!!’ தலையில் கை வைத்தார்.

‘இப்பம் பறவா இல்லையா?’

‘தெரியாது. பால் கொண்டு நர்சு கையில கொடுப்பதோடு சரி’.

‘தர்ம ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவலாமே?’

‘விபத்துல சிக்கி உசிருக்குப் போராடுறவனுக்கு உடன் ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்குப் போவதானே தோணும். கண்வெட்டி திறக்குமுன்னே ஒரு ஆம்புலன்ஸ் வந்து இவனைத் தூக்கி இங்கே கொண்டு சேத்தாங்க. தெரிஞ்ச ஒரு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறதாட்டு சொன்னேன். உடல்ல. பலவந்தமாகக் கொண்டு போறதானா, ஒரு பாடு கணக்கு சொல்லுதாங்க. அந்தக் கணக்கும் இந்தக் கணக்கும் ஏகதேசம் நெருங்கித்தான் வருது’.

‘முன்பணம் கட்டி வச்சாத்தான் சிகிச்சை செய்வாங்களோ?’

‘இப்பம் அப்படித்தான். அரசு மக்களைக் கைவிட்ட காலமாச்சே’

சாலை ஓரத்தில் அடிபட்டு இரத்தம் கொட்டக்கிடந்த முதியவரைப் பற்றிய நினைப்பில் கேட்டேன்.

‘இல்லாதவங்க?’

‘விபத்துல சிக்கின ஆளைப் பாத்தாலே அடையாளம் தெரியுமே…’

‘காசு உள்ளவங்களுக்குத்தான் இலவச ஆம்புலன்ஸோ?’

‘சந்தேகமென்ன? அவங்களுக்காகத்தான் இந்தப் பல மாடிக் கட்டடங்கள்’ மகனுக்கு நேர்ந்த விபத்தையும், மக்களைக் கைவிட்டு, அரசு, தனியார் மருத்துவமனைகள் வளரக் களம் அமைத்துக் கொடுத்த போக்கைப் பற்றியும், மன அழுத்தங்களோடு பேசிக்கொண்டிருக்கையில், வேகமாக ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது. பார்வையாளர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் தொங்கவிடப்பட்ட மின்விசிறியின் கீழ் காற்று கொள்ள ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து நின்று பித்தானை எடுத்துவிட்டுக்கொண்டு சட்டையைக் கொஞ்சம் தூக்கி விட்டார். ஆம்புலன்ஸிலிருந்து இறக்கப்பட்ட ஸ்ட்ரச்சரைக் கூர்ந்து நோக்கினேன். காலியாக இருந்தது.

ஆம்புலன்ஸிலிருந்து காலி ஸ்ட்ரச்சர்?’ அவரிடம் சொன்னது டிரைவர் காதில் விழுந்துவிட்டது.

‘ஒரு பாடி கொண்டு போகணும்’, டிரைவர் பதில் சொன்னார்.

‘பாடி கொண்டு போறதும் இலவசமாகவா?’

‘இலவசமா? 4500 ரூபா வாடகை பேசித்தான் போறேன்.’

சொல்லி முடிக்கையில் நாலு சக்கர வண்டியில் முகம் மூடப்பட்ட ஒரு சடலத்தை ஒரு காக்கிச் சட்டைக்காரர் உருட்டிக்கொண்டு வந்தார். ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், என் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தவர் சொன்னார்:

‘நான் இங்கு வந்த பிறவு பாப்பது, இது நாலாவது. ஒரு பஸ்ஸும் மாருதியும் நேருக்கு நேர் மோதிச்சு. மாருதி டிரைவர் அந்த இடத்திலே இறந்து போனான். பின்சீட்டில் உட்கார்ந்திருந்தவரைப் பலத்த காயங் களுடன் ஆம்புலன்ஸில் இங்கு கொண்டுவந்து இறக்கும் போதே நினைச்சேன் பிழைக்க மாட்டார்னு. ஆம்புலன்ஸில் கூட ஏறிப் போனாரே ஜிப்பா சட்டை போட்டவர், அவர்தான் 50000 ரூபா முன்பணம் கட்டி வச்சாரு’.

ஒரு நர்சு வந்து சற்று உரக்கக் கூப்பிட்டாள்.

‘ராமசாமி?’

‘நாந்தாம்மா’, என்னவோ ஏதோவென்று பதறிப் போனவராகச் சொன்னார். ‘பேஷயன்டை மூணாவது மாடியில் 311ஆம் நம்பர் ரூமுக்குக் கொண்டு வந்தாச்சு. பாலோ, காப்பியோ கொண்டு குடுங்க.’

அவர் ஆறுதல் மூச்சு விட்டார்… கடவுளே!

அவசரமாக லிப்டில் ஏறுவதற்குத் திரும்பிய நர்சைப் பணிவுடன் அழைத்தேன்.

‘நர்சம்மா ?’

‘என்னய்யா வேணும்?’ ஈரப்பசை இல்லாத குரல். கூப்பிட்டதால் பறந்து போன உயிரை ஓடிப்பிடிக்க முடியாமல் போன எரிச்சல் கவ்விய முகம். பார்வை. பயந்துவிட்டபடி கேட்டேன்.

‘கார் தட்டி சைக்கிளிலிருந்து விழுந்த நூக்கண்ணு?’

‘கொண்டுவந்த படிதான் கெடக்கார். பணம் கட்டி வைக்கல்ல’.

லிப்ட் அவளை மேலே தூக்கிக்கொண்டு உயர்ந்து போனது.

காலாற பெஞ்சு பக்கம் வந்தேன். அருகில் 2.ட்கார்ந்திருந்தவர் ஒரு தூக்குப் போணியுடன் கேண்டீனுக்கு நேராக விரசாக நடந்து போவது, முற்றத்தில் மிகப் பேணுதலாகவும் அழகு உணர்வோடும் வளர்க்கப் பட்ட செடிகளுக்கு இடையே தெரிந்தது.

பார்வை நேரம் என்று எழுதித் தொங்கவிடப்பட்ட போர்டில் காலை 7-9 வரை என்றும், மாலை 4 -6 என்றுமிருந்தது. வரவேற்பு கவுண்டரில் அவளுடைய தலைக்குமேல் சுவரில் சப்தமில்லாமல் அசைந்து கொண்டிருந்த கடிகார விரல் நாலைத் தொட்டதும் லிப்ட் பக்கம் சென்றேன்.

லிப்ட் இயக்குபவர் கேட்டார், ‘எந்த மாடிக்கு?’

‘நாலாவது மாடி’.

‘பாஸ் இருக்கா?’

‘இல்லையா’.

‘இல்லையானா நாலாவது மாடிக்குப் போகமுடியாது’. பார்வையில் சாந்த குணமுடையவராகக் காணப்பட்டாலும், குரலில் கடினமிருந்தது. அதற்கான பயிற்சி பெற்றவராக இருப்பார்.

வரவேற்பு கவுண்டருக்கு வந்தேன். அவள் தொலைபேசியில் யாருக்கோ சில தகவல்கள் சொல்லிக்கொண்டிருந்தாள், சொல்லி முடிக்கும்வரை அவள்முன் பவ்யமாக நின்றுகொண்டிருந்தேன். ரிசீவரை வைத்ததும் கேட்டேன்.

‘பார்வை நேரமாச்சே. மேலே போகலாமா?’

‘எல்லா மாடிகளுக்கும் போகலாம்.’

‘நாலாவது மாடிக்குப் போக வேண்டும். பாஸ் எங்கே குடுப்பாவோ?’

‘நாந்தான் தரணும். பணம் கட்டிவச்ச உடனே எனக்குத் தகவல் தருவாங்க. உங்க ஆள் இன்னும் பணம் கட்டிவைக்கல்ல?’

‘எவ்வளவோ?’

‘ரூ.35,000.’

அல்லோ! முப்பத்தய்யாயிரம். மனசிற்குள் கத்தினேன். இவ்வளவு பெருந்தொகை நூக்கண்ணுவின் வாப்பாவால் எப்படித் திரட்ட முடியும்? குடியிருக்க சொந்தவீடுகூட இல்லாதவன். அவனை நம்பி யார் குடுப்பாங்க? பணத்துக்காக நாலா பக்கமும் அலைந்து கொண்டி ருப்பான். அதனால்தான் சுணக்கமோ?

‘அந்த நோயாளிக்கு ஏதாவது ஆகாரம் வாங்கிக் கொடுக்கலாமா?’

‘நாங்களே வாங்கிக் குடுத்துட்டு பில்லில் சேத்துக்கிடுவோம்.’

பழையபடி பெஞ்சில் காலியாகக் கிடந்த இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டேன். பார்வை நேரமானதால் ஒரே பரபரப்பும் நெரிசலும். செருப்புக்களை இங்கே போடவும் என்று குறிப்பிட்டிருந்த இடத்தில் செருப்புக்களின் குவியல்.

அடிபட்டவர்களை ஏற்றி, வந்து போய்க்கொண்டிருந்த இலவச ஆம்புலன்ஸ்களில் ரோட்டோரத்தில் அடிபட்டுக் கிடந்த முதியவரை ஏற்றிக்கொண்டு இறக்குகிறார்களா என்று எட்டிப் பார்த்துக்கொண்டி ருந்தேன். நூக்கண்ணுவின் வாப்பாவைக் கண் துழாவுகையில், மனசில் அந்த முதியவரையும் துழாவிக்கொண்டிருந்தேன். ஒருவேளை இங்கு கொண்டு வராமல் தர்மாசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்கலாம்.

ஒரே இருப்பாக உட்கார முடியவில்லை. முதுகுவலி. நூக்கண்ணு மனசில் நிரம்பி நின்றான். நல்ல பையன். அமைதியானவன். எந்திரிச்சு மீண்டும் வரவேற்பு கவுண்டருக்குச் சென்றேன்.

‘யம்மா டாக்டரைப் பாக்கனும்’.

‘எந்த டாக்டர்?’

‘பெரிய டாக்டரை’.

‘இரண்டாவது மாடிக்குப் போங்க’.

மேலே போன லிப்ட் கீழே வர நேரமெடுக்குமென்று எண்ணிப் படிகள் ஏறினேன். அங்கு நின்று கொண்டிருந்த நர்சு சுட்டிக்காட்டிய அறைக்குள் நுழைந்தேன்.

‘வாங்க, உட்காருங்க’. அன்பான வரவேற்பு.

‘டாக்டர் சார், ரண்டு நாளுக்கு முன்னே சைக்கிளிலிருந்து விழுந்த ஒரு கேஸ்.’

‘ஆமா. அவுங்க பணம் கட்டி வச்சதா தெரியல்லியே’

‘அவன் தகப்பனார் எப்படியும் பணம் திரட்டிக் கொண்டு வந்து கட்டுவாரு. பணத்துக்காகச் சிகிச்சையைச் சுணக்கண்டாம். வாலிப பருவம். நாலு பெண்களுக்கிடையில் ஓராண்.’

‘இதெல்லாம் சொல்லிப் பயனில்லை பாய். அவசரமா ஒரு ஆப்ரேசன் செய்யணும். பணம் கட்டி வச்ச பிறகுதான் செய்வோம்’.

கராறான பேச்சாக இருந்ததால் மேற்கொண்டு அவரோடு பேச மனம் வரல்ல. மரத்துப்போன மனிதத்தை எண்ணியவாறு எழும்பி அறைக்கு வெளியே வரும்போது வேர்த்துக் கொட்டிய நிலையில் மூச்சுவாங்க அவனுடைய வாப்பா உள்ளே நுழைந்தான். இரத்தச் சுழற்சி நின்று விட்ட முகம். என்னைக் கண்டதும் காய்ந்து சுருங்கிய உதட்டை ஈரப்படுத்திக்கொண்டு கேட்டான்

‘நீங்க இங்கே ?’

‘உன் மவனைப் பாக்கத்தான்’.

‘பாத்தியளா?’

‘உள்ளே உடல்ல’.

‘டாக்டர்’.

டாக்டருடைய இரக்கம் நாடித் தாழ்மையுடன் கூப்பிட்டான்.

‘நான் ஒரு கடையில் குமஸ்தா வேலை செய்யக்கூடியவன். நான் நெனச்சா இவ்வளவு பணம் உடனே ஒரு நாளில் திரட்ட முடியாது டாக்டர். பல முயற்சிகளும் செய்து பாத்தேன். கெடக்கல்ல. எப்படியும் பணம் கட்டிடுவேன். தயவு செய்து…’

‘தயவு தாக்ஷண்யம் பாத்தா, ஆஸ்பத்திரி நடத்த முடியாது பாய். பணம் கட்டி வைங்க. அவசரமாக ஆபரேசன் செய்யணும். பிறகு எங்க மேல பழி போடக் கூடாது. சொல்லிப்போட்டேன்’.

என்னவோ அத்து விழுந்தது போல் அவசரமாக ஓடிவந்து உள்ளே நுழைந்த நர்சின் பரபரப்பைக் கண்டதும் நாங்கள் அறைக்கு வெளியே வந்து நின்றோம்.

‘மாடியிலிருந்து விழுந்த ஒரு பையனைக் கொண்டு வந்திருக்காங்க.’

‘பார்ட்டி ?’

‘கொண்டுவந்தது குவாலிஸ் காரில்’.

‘ஐ.சி.யு. காலியா…?’

‘இல்லை சார்’.

‘பணம் கட்டாத கேஸை வெளியே போடு’.

இது கேட்டதும் நெஞ்சாங்கூடு கலங்கிப் போனது, அவனுடைய வாப்பாவுக்கு. ஆறுதல் படுத்தி அவனையும் கூட்டி நான் லிப்டு பக்கம் வந்ததும், ஒரு நோயாளியை லிப்ட் மேலே கொண்டு போவதைப் பார்த்தோம்.

நாலாவது மாடிக்கு!

படிகள் இறங்கிக் கீழே வந்தோம். முற்றத்தில் பேணுதலோடு வளர்க்கப்பட்டு அழகிய தோற்றத்தில் காணப்படும் பூங்கா பக்கம் வந்தோம். பூவைக் கிள்ளாதீர்கள் என்று எழுதப்பட்ட போர்டை மறைத்துக் கொண்டு, ஒரு குவாலிஷ் கார் ஓரமாக நின்றுகொண்டிருந்தது. ‘என்ன செய்ய?’ எதிர்பார்ப்புகளற்றவனாக என்னைக் கேட்டான்.

‘தர்மாசுபத்திரிக்குக் கொண்டு போவம்.’

‘நானும் அப்படித்தான் நெனச்சேன்’. வரவேற்பு கவுண்டருக்குப் போனோம்.

‘இவ்வளவு பெரிய தொகை கட்டிவைக்க வசதி இல்லம்மா, தர்மாசு பத்திரிக்குக் கொண்டு போறோம்.’ சொன்னதும் அவள் திரும்பிப் பார்த்தாள், கம்ப்யூட்டர் மூடப்பட்டிருந்தது. நாற்காலியில் ஆள் இல்லை.

அவள் சொன்னபடி மீண்டும் இரண்டாவது மாடிக்குப் படிகள் ஏறினோம். நாலாவது மாடிக்குப் போன டாக்டர் வர சற்று நேரமெடுத்தது.

பார்வை நேரம் 4-6 என் நினைவுக்கு வந்தது அந்நேரம். டாக்டர் அறைக்குள் சென்றார். அவர் பின்னால் நூக்கண்ணுவின் தகப்பனார் உள்ளே.

‘டாக்டர், உடனடியாகப் பணம் கட்டிவைக்க வசதி இல்லை. என் மகனை தர்மாசுபத்திரிக்குக் கொண்டு போறேன்’.

‘ஆட்சேபனை இல்லை. மணி 6 ஆயிட்டுதே, பில் போட கம்யூட்டரில் ஆள் இருக்காது. நாளை காலையில் பில்லுக்குள்ள பணத்தோட வாங்க, டிஸ்சார்ச் பண்ணுவோம்’,

ஒரு சவத்துடைய வெளிறி இளிச்ச முகத்துடன் அவன் வெளியே வந்தான். என்னைப் பார்த்த அவனுடைய கண்கள் செத்துப் போயிருந்தன. எதுவும் பேசவில்லை. வார்த்தைகள் வறண்டுவிட்ட நாக்கு. அவனுடன் நான் இருக்கிறேன் என்று உணராமலே லிப்ட் பக்கம் சென்றான். அவன் பின்னால் என்ன செய்வதென்று தெரியாது நான். இரண்டாவது மாடியில் வந்து நின்ற லிப்டில் கீழ் தளத்திற்கு வந்தோம். அங்கு கிடந்த பெஞ்சில் ஒரு கட்டையாக உட்கார்ந்தான். அருகில் அவனுடைய ஆறுதலுக்காக நானும்.

‘டாக்டர் என்ன சொன்னார்?’

‘காலையில் பில் முடிச்சிட்டு கொண்டு போகச் சொன்னார்.’ ஏதோ ஒன்றில் அவன் பார்வை ஊன்றியிருந்தது.

‘பில்லா? சிகிச்சை செய்யல்லேனு சொன்னாங்க. பின்னே எதுக்கு பில்லு?’ கேட்ட போது எனக்குக் கோபம் சுனாமியானது.

என்குரல் உரத்துப் போனதாலோ என்னவோ வரவேற்பு கவுண்டரில் உட்கார்ந்துக்கொண்டிருந்த பெண் இங்கே எட்டிப் பார்த்தாள். நூக்கண்ணுவின் வாப்பா எழும்பி வெடுக்கென்று அவருக்கு நேராகச் சென்றான்.

‘எம்மகனைப் பார்க்கணும்’. குரலில் கண்டிப்பு இருந்தது.

‘அவசரப் பிரிவுக்குப் போக டாக்டருடைய அனுமதிச் சீட்டு வேணும்’. மனசின் சமநிலை குழம்பிப் போனவனாக அவன் மீண்டும் வந்து பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான். முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டும், என்னைக் கண்டு கொள்ளாமலும், என் கேள்வி களுக்குப் பதில் சொல்லாமலும் உயிர்ச் சடலமாக உட்கார்ந்துகொண்டான்.

‘நான் பெத்த புள்ளையைப் பாக்க, டாக்டருக்கு அனுமதி வேணுமாக்கும்?’

வெடித்துத் தெறிப்பது போலிருந்தது, அவனுடைய குரல். அவனுடைய அலர்ச்சை சுவரில் மோதிச் சுவர் அதிர்ந்தது.

ஏழேகால் பஸ்பிடிக்க நான் கிளம்பினேன். நான் விடை கேட்டதை யும் அவன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. என்னைப் பார்க்கவு மில்லை .

மறுநாள் காலையில் எதிர்பார்த்தபடி நூக்கண்ணுவின் வாப்பா தொலைபேசியின் மறுமுனையிலிருந்து சொன்னான்.

‘கம்ப்யூட்டரில் பில் வந்தது’.

‘எவ்வளவு?’ ‘சொன்னா தலை சுற்றும்.’

‘கட்டிவைக்கச் சொன்ன தொகையை நெருங்கீட்டுதோ?’

‘சிகிச்சை செய்யாமலே இவ்வளவு ரூவாயானு கேட்டேன். என்ன வெல்லாமோ கணக்குகள். எனக்கு ஒண்ணும் மனசிலாவயில்லை. கையில காசில்ல, என்ன செய்ய? செறுக்களை உடனே வெளியே எடுக்கனுமே காக்கா?’

‘சரி, நா வாறேன்.’

11-15 பஸ்ஸைப் புடிச்சேன். மருத்துவமனைக்கு நுழையத் திரும்பிய ஆம்புலன்ஸ்க்கு வழிவிட கொஞ்சம் நிப்பாட்டி மெல்ல நகர்ந்த தருணத்தில் பஸ்லிருந்து இறங்கிவிட்டேன். முகத்தைத் தொங்கவிட்டு, கவலை வாட்டிய முகத்துடன் உட்கார்ந்திருந்தவன் என்னைக் கண்டதும் எதிரே வந்தான். பையை அவனிடம் கொடுத்தேன். எதிர்பார்த்திருக்க மாட்டான்.

‘எம்புடு?’

‘35,000’

கம்ப்யூட்டர் காட்டிய பில் தொகையைக் கட்டினான். அதே கம்ப்யூட்டரில் கட்டிய தொகைக்கு ரசீதும் கிடைத்தது.

‘பையனைக் கொண்டு போகலாமா?’ கேட்டேன்.

‘லிப்டில் கீழே கொண்டு தருவாங்க’.

மருத்துவமனை வாசல் படியை ஒட்டி ஒரு ஆம்புலன்ஸ் சடாரென வந்து நின்றது. விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடக் கூடியவர் களாக யாரையும் கொண்டு வரவில்லை. அதிலிருந்து காலி ஸ்ட்ரச்சர் இறக்கிவைக்கப்பட்டது. கீழ்நோக்கி வந்து கொண்டிருந்த லிப்டில் முகம் மூடப்பட்ட நிலையில் ஒரு உடல் தாழ்ந்து வந்தது. காக்கி உடை அணிந்த மருத்துவமனைப் பணியாள் ஒருவர் கீழ் இயங்கிய லிப்டிலிருந்து அந்த உடல் வைக்கப்பட்ட வண்டியை உருட்டி ஆம்புலன்ஸ் பக்கம் கொண்டு வந்தார். ஸ்ட்ரச்சர் தூக்கி வைத்த இடத்திலேயே இருந்தது.

உடலையும் கொண்டு லிப்டில் வந்து இறங்கிய நர்சு நூக்கண்ணுவின் வாப்பாவிடம் வந்து கேட்டார்.

‘பில் பணம் கட்டினீங்களா?’

‘கட்டியாச்சு’

ஜேப்பிலிருந்து ரசீதை எடுத்துக் காட்டினான்.

‘நேற்று ராத்திரி உங்க பையனுக்கு திடீரென ரொம்ப சீரியசா போச்சு பாய். உடன் ஆபரேசன் தேவைப்பட்டது. தியேட்டருக்கு அவசரமாக எடுத்துச் செல்லும் வழியில்….’ அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சிப் பரவலும் இல்லை.

இரத்தம் உறைந்துவிட்ட இதயம். முகம். நூக்கண்ணுவின் வாப்பா ஓவென்று அழவில்லை. ஒரு அக்னி ஜுவாலையாக விளாசி வளர்ந்தான். ஆகாசம் முட்ட, சூரியனைச் சுட்டு எரிக்கும் ஜுவாலையாக!

ஆம்புலன்ஸ் டிரைவரின் குரல் மட்டும் அந்த மவுனம் உறைந்த வெம்மைச் சூழலில் உயர்ந்து கேட்டது

‘3000 ரூபாய் தந்துட்டு சீக்கிரம் பாடியை ஏத்துங்கோ பாய். வேறெயும் ஒரு பாடி வந்து எடுக்கப் போவனும்.’

பெற்ற தகப்பன் தெரியும் முன்னே, ஆம்புலன்ஸ் டிரைவர் அந்த மரணம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஏற்படுத்தப்பட்ட நெட்ஒர்க்கைப் பற்றி ஒரு கணம் சிந்திக்கக்கூட விடாமல், ஆம்புலன்ஸ் டிரைவர் நச்சரித்துக்கொண்டேயிருந்தான், வாடகையை முன்பணமாகப் பெற்றுக்கொள்வதற்கு.

இப்போது பஸ் பயணம் செய்யும் போது, கண்களை இறுக்க மூடிக் கொண்டு உறங்குவது போல் இருக்கையில் சாய்ந்து கொள்வேன். ஏனென்றால், சாலையோர ஆம்புலன்ஸ்கள் கண்ணில் பட்டாலே, உடல் நடுங்குகிறது.

– நன்றி: https://thoppilmeeran.wordpress.com/tag/இரைகள்/

Print Friendly, PDF & Email
முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. தனது 74 வயதில் (மே 1, 2019) உடல்நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி மாவட்டம், பேட்டை எனும் இடத்தில் இறந்தார். விருதுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *