வழக்கமாகத் தேநீர் அருந்-தும் ராஜகீதம் ரெஸ்டாரென்ட்டுக்குச் சென்றிருந்தான் ஜீவகாருண்யன். அலுவலகத்தில் வாங்கி வந்து பருகுவதைத் தவிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள்… ஒன்று, கண்ணாடி டம்ளரில் அருந்தும் சுவை, ஃப்ளாஸ்க்கில் வாங்கி வந்து பருகும் போது இருப்பதில்லை. இரண்டாவது, பரிமாறும் பெரியவர் சங்கரனின் கனிவான உபசரிப்பில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா கதகதப்பு!
‘‘சார், சூடா பக்கோடா இருக்கு. டேஸ்ட் பண்றீங்களா?’’ – சங்கரன்தான்.
‘‘டீ மட்டும் போதும், பெரியவரே!’’
கோப்பையை வாயரு-கே கொண்டு போகும்போது, எதிரே வாஷ்பேஸினில் கை கழுவிவிட்டு வந்துகொண்டு இருந்த பெண்ணை ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தான் ஜீவகாருண்யன். ‘அட! மிருதுனி!’
அவள் அருகில் வந்ததும், கொஞ்சம் தயங்கி, ‘‘ஹாய், மிருது! எப்படி இருக்கே?’’ என்றான்.
இவன் குரலைக் கேட்டுத் திரும்பியவள், ‘‘ஹேய், ஜீவா! எப்படி இருக்கீங்க?’’ என்றபடி அவன் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
‘‘பார்த்து எவ்வளவு நாளாச்சு? ஒரு போன்கூட இல்லை!’’
‘‘பண்ணேனே… எப்பவும் ஸ்விட்ச்டு ஆஃப்னு சொல்லுது உங்க மொபைல்!’’
‘‘ஆபீஸ் டைம்ல செல்லை ஆன் பண்ணி வைக்கக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்மா!’’
‘‘ஓ.கே! வீட்டுக்காவது வந்திருக்கலாமே?’’
‘‘கொஞ்ச நாளா வேலை ஜாஸ்தி. ரெண்டு மூணு ஸீட் காலி! புதுசா ஆள் போடக் கூடாதுன்னு ஆர்டர். ஸோ, அந்த வேலையும் என் தலையில!’’
‘‘சரி, இப்ப ஏதாவது எழுதினீங்களா?’’
‘‘இல்லை. எழுதியிருந்தா நிச்சயம் அனுப்பியிருப்பேனே! சரி, ஏதாவது சாப்பிடலாமா?’’
‘‘இல்லை, வேணாம்! இப்பதான் காபி சாப்பிட்டேன். அது சரி, இப்பவும் நீங்க டீதானா?’’
‘‘அதே ஜீவகாருண்யன்தான்! எதுவும் மாறலை. அம்மா, அப்பா நல்லா இருக்காங்களா?’’
‘‘ம்… இருக்காங்க. என்ன செய்றது… வயசாகிடுச்சே! என்னைப் பார்க்கும்போது இன்னும் வருத்தமாகிடுறாங்க. நான் சந்தோஷமா இருக்கேன்னு சொன்னா, நம்ப மாட்டேங்கிறாங்க. சந்தோஷம்னா குடும்பம், குட்டின்னு இருக்கிறதுதான்னு அவங்க நினைப்பு!’’
‘‘சரி விடு… வேலை எப்படிப் போகுது?’’
‘‘ஓ.கே! இப்ப தன்னார்வு நிறுவனங்கள்ங்கிற பேர்ல நிறைய போலிகள் களத்தில் இறங்க ஆரம்பிச்சிட்டுது. எங்களோடது பரவாயில்லை, ஓரளவுக்கு ஸ்டெடியா போயிட்டிருக்கு. எனக்கு இந்த வேலையில் ஓர் ஆத்ம திருப்தி இருக்கு. அந்த வகையில் ஐ ஆம் ஹாப்பி! சரி, உங்க வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா?’’
‘‘ம்… இருக்காங்க. நானும் என்னால முடிஞ்சதைச் செஞ்சுட்டிருக்கேன்!’’
அவன் கைகளைச் சட்டென்று எடுத்துத் தன் கைகளில் வைத்துக்கொண்டாள் அவள். இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். இருவர் விழிகளிலும் மலர்ச்சி, கசிவு, கனிவு. மௌனத்தை அவள்தான் உடைத்தாள்… ‘‘சரி, நான் கிளம்பட்டுமா? டைம் ஆச்சு!’’
‘‘சரி!’’ கனத்த மௌனம் இருவரது கண்களிலும் ஒளிர்ந்து மீண்டது. அவளை வழியனுப்பி வைத்துவிட்டுத் திரும்ப வந்து அமர்ந்தான். அதற்குள் தேநீர் ஆறிப்போயிருந்தது.
‘‘நீங்கள் இருவரும் விவாகரத்து செய்வது என முடிவு செய்துவிட்டீர் களா?’’ – குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தன்சிங் கேட்டார்.
‘‘ஆமா! நாங்க பரஸ்பரம் பேசி, அந்த முடிவுக்கு வந்துட்டோம்!’’
விவாகரத்தின் விளிம்பு வரை வந்துவிட்டவர்களைக்கூடச் சேர்ந்து வாழச் சம்மதிக்க வைப்பதில் சமர்த்தர், தன்சிங். மண முறிவுக்கு வருபவர்களின் மன முறிவுக்கு வைத்தியம் பார்ப்பவர் அவர். அவரால் சேர்ந்து வாழ்பவர்கள், பின்னர் தங்கள் குழந்தைகளுடன் வந்து அவருக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி கூறிவிட்டுச் செல்வது உண்டு.
‘‘ஏன் இப்படி ஒரு முடிவு?’’
‘‘எங்களுக்குள் ஒத்துப்போகலை!’’
‘‘என்ன ஒத்துப்போகலை? அவர் உங்களை டார்ச்சர் செய்யறாரா? அல்லது, வேறு ஏதாவது எதிர்பார்ப்பில் குறைகள் இருக்கா?’’
‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை!’’
‘‘இது நீதிமன்றம்மா! இப்படித் தந்தியடிக்கிற மாதிரி பதில் சொன்னா, அதை நாங்க அப்படியே ஏத்துக்கணும்னு எந்த நியதியும் இல்லை.’’
‘‘ஸாரி சார், எங்கள் இருவருடைய நேரமும் கருத்துக்களும் ஒத்துப்போகலை. நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல சேர்ந்து வாழ முடியும்னு தோணலை. நாங்க வருத்தத்தோட சேர்ந்து வாழ்றதைவிட, மகிழ்ச்சியோடு பிரியறது நல்லதுன்னு நினைக்கிறோம்.’’
‘‘இப்படி மெச்சூர்டா யோசிக்கிற நீங்க, ஒருத்தரையருத்தர் புரிஞ்சுக்கிட்டு அனுசரணையா இருக்க முடியாதா?’’
‘‘நிறைய முயற்சி பண்ணிட்டோம்.அதனாலதான் முன்னாடியே விவாகரத்து கேட்டு வரலை.’’
‘‘உங்க திருமணம் எப்போ நடந்தது?’’
‘‘மூணு வருஷத்துக்கு முன்னாடி!’’
‘‘வீட்ல பார்த்ததா… காதல் கல்யாணமா?’’
‘‘காதல் கல்யாணம். நாங்களே சுயமா யோசிச்சு துணிந்து எடுத்த முடிவு அது. அதனாலதான் இப்போ துணிந்து உடைக்கவும் முடியுது.’’
‘‘குழந்தைகள்..?’’
‘‘இல்லை.’’
நீதிபதி தன்சிங்குக்கு மேறகொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை. முரட்டுப் பிடிவாதமாக இருக்கும் இவர்களை நிச்சயம் சமாதானப்படுத்த முடியாது என்பது மட்டும் புரிந்தது.
‘‘சரி! உங்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் தருகிறேன். அதற்குப் பிறகும் நீங்கள் இருவரும் பிரிவையே நாடினால் விவாகரத்து தந்துவிடுவோம்!’’
டிசம்பர் எட்டாம் தேதி.
நீதிபதி இருக்கையில், தன்சிங். ஜீவகாருண்யனும் மிருதுனியும் ஜோடியாக, சிரித்துக்கொண்டே பேசியபடி வருவதைப் பார்த்தார். காலம் காயங்களை ஆற்றும் என்ற பழமொழி சரிதான் என நினைத்துக் கொண்டார். அவர்களைப் பார்த்து, ‘‘நீங்க உங்க முடிவை மாத்திக்கிட்டீங்க. ஆம் ஐ கரெக்ட்?’’ என்று உற்சாகமாகக் கேட்டார்.
‘‘ஸாரி யுவர் ஹானர்! எங்க முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நாங்க பிரியறதைத்தான் விரும்பறோம்.’’
அவருக்குள் அதிர்ச்சியும் கோபமும் குழப்பமும் அலையடித்தது.
‘‘ரெண்டு பேரும் சிரிச்சுட்டே வந்தீங்க. இப்போ பிரியறோம்னு சொல்றீங்களே!’’
‘‘ஆமா சார்… நாங்க ரெண்டு பேரும் ஒரே பைக்லதான் வந்தோம். அவர் வீட்டுக்குப் போய் நான்தான் அவரை அழைச்சுட்டு வந்தேன். இந்த வழக்கு முடிஞ்சும்கூட நாங்க ஒண்ணாதான் போவோம். இன்னிக்கு லன்ச் ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடறதா ப்ளான் பண்ணியிருக்கோம்.’’
‘‘குழப்புறீங்களே…’’ என்றார் தன்சிங்.
விவாகரத்து வழக்குகளில் ஒருவருக்கொருவர் முறைப்பாக நடந்துகொள்வதுதான் சகஜம். வழக்கு முடிந்ததும், ‘இனி ஜென்மத்துக்கும் உன் மூஞ்சியில முழிக்க மாட்டேன்’ எனச் சீறுவதுதான் அவர் இதுநாள் வரை பார்த்த க்ளைமாக்ஸ் காட்சி. இது என்ன புதுசாக இருக்கிறதே என்று குழம்பினார்.
‘‘இதில் குழப்பம் ஒண்ணுமே இல்லை. நாங்க கணவன் – மனைவியா இல்லைன்னாலும் நண்பர்களாகத் தொடர்வோம். ஒருத்தர் வளர்ச்சியில் ஒருத்தர் சந்தோஷப்படுவோம். எங்கேயாவது சந்திச்சா அன்பு மாறாம, புன்னகை மாறாம பேசுவோம். மொபைல்ல பேசிக்குவோம். அதில் எல்லாம் எந்த மாற்றமும் இல்லை. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க அப்படித்தானே இருந்தோம்! எங்கள் அன்பு நன்றியறிதலாக எப்போதும் இருக்கும்.’’
‘‘ரொம்பத் தெளிவா இருக்கீங்க. என்னிக்காவது மனம் மாறி இருவரும் சேர்ந்து வாழ்ந்தா, எனக்குச் சந்தோஷம்தான். இப்போது உங்கள் விவாகரத்தை அனுமதித்து ஆணை வழங்குகிறேன்.’’
நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னவோ ஒரு தயக்கம். தொடர்புகொள்வதில் சுணக்கம். இன்று நடந்த சந்திப்பு, அவர்கள் நீதிபதி முன்பு அளித்த வாக்குமூலத்தில் எந்த மீறலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
மூன்று ஆண்டுகள் பழகிய நாட்களில் எத்தனை மகிழ்ச்சியான அனுபவங்கள்… ஒருவர் கை பிடித்து ஒருவர் மௌனம் காத்த காதல் பொழுதுகள்..! இருவரும் இனிமையாக ரசித்த இசை, படித்துப் பகிர்ந்துகொண்ட புத்தகங்கள், ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து தன்னை மறந்திருந்த கணங்கள்… எல்லாமே சத்தியம்! அவற்றை எப்படி முழுமையாக உதறிவிட முடியும்? அவை உண்மையாக இருக்கும்போது, அதைப் பகிர்ந்துகொண்டவர்கள் மட்டும் விரோதிகளாகிவிட முடியுமா? அன்று வாழ்ந்தவை உண்மையென்றால், இந்தக் கணமும் உண்மைதான். அந்த நினைவுகள் எப்போதும் மனத்தில் வண்டல் போல ஈரமாகப் படிந்திருக்கும். புன்னகையால் இன்றும் ஒருவரை ஒருவர் புதுப்பித்துக்கொள்ள, அது துணை நிற்கும்.
ஜீவகாருண்யன் நினைவுகள் உருக, தேநீரைப் பருகினான். மிருதுனிக்குக் கடிதம் எழுத வேண்டும். அடுத்த புத்தகத்தை அவளுக்குத்தான் காணிக்கையாக்க வேண்டும். அவளோடு வாழ்ந்தது கொஞ்ச காலமென்றாலும், அது உண்மையானது… அவளைப் போலவே! அதுவே அவர்கள் வாழ்ந்ததற்கும் வாழ்வதற்கும் அர்த்தமுள்ள சாட்சி!
– 10th அக்டோபர் 2007