கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 12,608 
 

“மகனே!”

“உன்னை மகனே என்று வாய்விட்டழைக்கமுடியாத பாவியாக இருந்து விட்டேனடா என் கண்ணே! என் உணர்ச்சிகளை … உள்ளத் துடிப்புகளை எல்லாம் ஒன்றாக்கி அழைக்கிறேன்!”

‘மகனே!”

“என் இதயம் அலறுவதை உன்னால் புரிந்துகொள்ள வும் முடியாது! என் அன்பு அழைப்பு…. இதயதாபம்… எல்லாம் பாழும் பெருவெளியில் மோதிக் கலந்து உருச் சிதைந்து போவதையும் என்னால் பொறுக்கமுடியவில் லையே!”

“மகனே!”

“அன்புக்கு மணமில்லை…நிறமில்லை…உருவில்லை…ஆனால்?..உயிருண்டுடா மகனே! உணர்ச்சி உண்டு என் உயிரின் புலம்பலை நீ புரிந்துகொள்ள மாட்டாயா?”

“அக்கா! நான் போயிட்டுவாறன்!” என்று விடை பெறுகிறாய் உன் மனைவி சகிதம்.

நான் என்னை மறந்துவிடுகிறேன்! வெறிகொண்ட வளாகி விடுகிறேன்!

நான்! ‘அக்கா ‘வா? ‘அம்மா ‘வா? ‘அக்காவும் அம்மாவும் ஒன்றா?’

இரண்டிலும் ஒரே ரத்தம் ஆனாலும், தோன்றிய வழி வேறல்லவா?

வழி வேறானால் முறைவேறாகிறது.

முறை வேறாக..பாசம் சிதறுகிறது. பாசத்தின் ‘பொருள்’ மழுங்குகிறது!

வானக் கருமையிலே ஒரு புள்ளி நட்சத்கிரம் நிலை கொள்ளாமல் தவிக்கிறதே.

நானும் நட்சத்திரமும் ஒன்றாகிறோமா?

என் தவிப்பைப் புரிந்து கொள்ளாத ஜடமாகிறாயா நீ? “மகனே!”

என்னைப்போன்ற பாவி இந்த உலகத்திலே தோன் றவே வேண்டாமடா மகனே! என்கதை எல்லாவற்றை யும் உன்னிடம் சொல்லி உன் அன்பைப்பெற நினைக்கி றேனடா! உன் வாயால் ‘அம்மா’ என்ற அமுத மொழி என் காதில் விழுந்து என்னைக் குளிரவைக்கவேண்டு மென்று துடிக்கிறேனடா…ஆனால்…

சத்தியம்?

சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அன்னை என்ற உரிமை யிழந்து தவிக்கும் என்னைப் புரிந்து கொள்ள மாட்டாயா மகனே?

அப்போது… எனக்குப் பதினைந்து வயதிருக்குமா? இல்லையில்லை.

அதனை விட ஓரிரு வயது குறைவாகவே தான் இருந்தி ருக்கும்….

நான் அந்த இளவயதிலேயே மலர்ந்து விட்டேன்!..

காலமில்லாக் காலத்திலே பூக்கும் மலர்களுக்கு அசா தாரண கவர்ச்சியும் எழிலும் உண்டல்லவா?

நானும் மலரும் ஒன்றாகிறோமா?

வெறும் சதைக்கோளங்களாலும் இரத்தத்தாலும், தசை நார்களாலும் அமைக்கப்பட்ட என் உடலுக்கு இவ்வளவு கவர்ச்சியும், எழிலும் எப்படி வந்தன? என் வந்தன?

பெண்களுக்கு அழகு அவசியம் என்கிறார்கள். பித்தர்கள். காமுகர்கள். சிந்தனையற்ற அறிவிலிகள்.

பெண்ணின் அழகு! மலரின் அழகு! மானின் அழகு! எல்லாமே ஆபத்துக் கருவிகள் !

அழகற்றிருப்பதே பெண்மைக்குக் கவசம்! அழகான பெண்ணைக் கண்ட மனிதன் அவளை உடலாற் கற்பழிக் காவிட்டாலும், மன தாற் கற்பழித்துவிடுகிறானே !

என் அழகைக்கண்டு என் தோழியரே கிறக்கம் கொண்டார்கள் என்றால் .

அப்போது என் ஐயா… அதுதான் நீ ஐயா என்று அழைக்கிறாயே! அவர் உண்மையில் உன் தாத்தாவடா! நீ. அவர் மகனில்லையடா ! நீ அவர் பேரனடா கண்ணே போன்! அப்போது அவர் கண்டியில் வேலையாக இருந்தார்!

நான் கண்டி ‘கொன்வென்’டில் படித்துக் கொண்டி ருந்தேன்! என்னிடம் மேலை நாட்டு நாகரிகம் முதிர்ந்தி ருந்தது. அந்த நாகரிகம் ‘சோஷியல்’ என்ற பெயரில் அரக்க உருவெடுத்திருந்தது.

மனிதன் நாகரிக முதிர்ச்சி என்ற பெயரில் தன் ‘பரிணாம வளர்ச்சி’ யின் ஆரம்பத்திற்குச் சென்று கொண்டிருக்கிறானா?

என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் ‘அவர்’ இருந்தார். அவர் தான் உன் தந்தையடா மகனே தந்தை!

தந்தையா?’ என்று சீறாதே மகனே! அவர் தன் கடமையைச் செய்யாவிட்டாலும், அவர்தானே உனக்கு உயிரும் உருவும் கொடுத்தவர்.

அவர் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந் தார்…விடுமுறையின் போதெல்லாம் வீட்டிற்கு வந்து விடுவார். நான் அவர் வருகையைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்- என் பாட சம்பந்தமான சந்தேகங்களைப் போக்க,

அவரிடம் நான் முதலில் பாடசம்பந்தமாகச் சென்று பேசியபோது அவருக்கு வியப்பேற்பட்டிருக்கவேண்டும். ஆனால் எனக்குத்தான் ‘சோஷியல்’ என்ற பெயரில் இதெல்லாம் பழக்கமானதாயிற்றே.

அவர் பாடங்களை விளக்கிச் சொல்லித் தரும்போது அவரையே பார்த்துக்கொண்டிருப்பேன். அவர் அறிவின் ஆழத்தை, கூர்ந்த மதியை மனதுக்குள் வியந்து கொள்ளு வேன். அவர் பாடத்தை விளக்கிச் சொல்வதுபோல் எங்கள் ‘கொன்வென்ட்’ மிஸ்கூடத் தெளிவாகப் பாடம் சொல்லமாட்டா.

அப்புறம்… அப்புறம் என்ன?

கொன்வென்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் எங்கள் சந்திப்புகளுக்கு சந்தர்ப்பமளித்தன. கொன்வென்டில் ‘கொன்சேட்’ என்று விட்டு பேராதனைப் பூங்காவிற்குச் சென்றுவிடுவோம். தோழிகளைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிவிட்டுக் கண்டி ஏரியை வலம் வருவோம்.

கண்டியில் ‘லேக்ரவுண்ட்’ வருவது மாலைநேரப் பொழுது போக்கோடு பாஷனும் கூடவடா மகனே!

மாதங்கள் சில கழிந்தபின்…

ஒரு நாள்..

வெள்ளிக்கிழமை. உனது தாத்தாவும் பாட்டியும் கண்டிப் பிள்ளை யாரைத் தரிசிக்கச் சென்றிருந்தார்கள். மாலை மயங்கிக்கொண்டிருந்தது. நான் மட்டும் தான் வீட்டி லிருந்தேன். அந்நேரம் பார்த்து உன் தந்தையும் எங்கள் வீட்டிற்குள் புகுந்தார். ஒரு நாளும் எங்கள் வீட்டிற் குள் வராதவர் வந்திருக்கிறார், அப்பா அம்மா இல்லாத நேரம் பார்த்து.

எனக்கு ஏதோவொருநிலை, உள்ளம்பதற… உடல் நடுங்க…. கண்ணிமைகள் படபடக்க… இதழ்கள் துடிக்க….

அவரை வரவேற்கக்கூட என் வாய் எழவில்லை.

உன் தந்தை என்னருகே நெருங்கிவந்தார். மாலைப் பொழுது – இருண்ட கூடம் — தனிமை – காதலர்.

இருளும் தனிமையும் கொடிதா? வலிதா?

‘அருள்’ வேண்டச்சென்ற உன் தாத்தாவும் பாட்டி யும் வீடு திரும்பும்போது ‘இருள்’ வீட்டில் சூழ்ந்து விட்டதை அவர்கள் உணரவில்லை.

உன் பாட்டி- என் அம்மா – கர்ப்பம் தரித்தார்கள். நானும் உன்னைத் தரித்தேன்.

காலமும் உண்மையும் நெருங்கிய நண்பர்கள். ஒரு வரை ஒருவர் காத்து நிற்பவர்கள்! உண்மைக்குத் திரை போட முடியுமா ? அந்தத் திரையைக் காலம் கிழித் தெறிந்து விடாதா?

ஒரே வீட்டில் தாயும் மகளும் மகப்பேற்றிற்காகக் காத்திருக்கும் பேரதிசயம் எங்கள் வீட்டில் தான் நிகழ்ந்தது.

திடீரென உன் தந்தை அந்தர்தியானமாகிவிட்டார்.

எங்கள் வீட்டில் வாய்கள் மூடிக்கொள்கின்றன. ஆனால் இதயங்கள் எரிமலையாகிக் குமுறுகின்றன! வாய் திறந்து ஆத்திரத் தைக் கக்கமுடியாத, திருடனுக்கு கேள் கொட்டின நிலை…வெளியே தெரிந்தால்…

அவமானம்-இழிவு-இளக்காரம்! உன் அப்பா-என் தந்தை என்னையும் அம்மாவையும் அழைத்துக் கொண்டு கொழும்புக்கு வெளியேறுகிறார்.

பரபரப்பும் சந்தடியும் நிறைந்த கொழும்பு மாநகரில் எம்மைக் கவனிப்போர் யாருமிலர்… அப்படிக் கவனித்தா லும் நின்று விசாரிக்க யாருக்கு பொழுதிருக்கிறது?….

நானும், அம்மாவும் ஒரே ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்படுகிறோம்.

அம்மாவுக்குப் பிரசவமாகி, குழந்தையும் உடனேயே இறந்து விடுகிறது…

என் அருகே நீ குஞ்சுக் கரங்களையும், கால்களையும் அசைத்து மெல்லப் புரள்கிறாய். உன் ஸ்பரிச உணர்ச்சி என்னைச் சிலிர்க்க வைக்கிறது…உன் பஞ்சுடலை என் கரங்கள் வருடி அதன் மென்மையை ரசிக்கின்றன..

அப்போது…

நீள்வது கடற்சிலந்தியின் கோரக் கரங்களா?…

உன்னை வாரியணைத்து எடுத்துச் சென்று என் அம்மா வின் படுக்கைக்கருகே காணப்பட்ட சின்னஞ்சிறு தொட்டிலில் இடுகிறார் என் தந்தை எனக்கு எல்லாமே புரிந்து விடுகிறது…

“ஐயோ!” என்றலறிவிடுகிறேன்.

”பிள்ளை நான் சொல்லுறதைக் கொஞ்சம் கவன மாகக் கேள். உன்மை பிள்ளையை அம்மா தன்ரைபிள்ளை யாக வளர்க்கட்டும். இது உன்ர பிள்ளை எண்டு வெளி யில் தெரிஞ்சா எவ்வளவு மானக்கேடு… நாங்க தெரு விலே தலைகாட்டமுடியாது மேலும் உன்ர உடலும் எவ்வளவு பலவீனமாக இருக்கு. நீ எப்படி குழந்தையை வளர்ப்பாய். நாம் திரும்பவும் கண்டிக்குப் போகேக்க அம்மா தன்ரை பிள்ளை எண்டாக் கேள்விக்கு இடமிருக் காது. நெடுக நீ இப்படி இருந்திடுவியே. உனக்கொரு கலியாணத்தைச் செய்து போட்டா எல்லாம் சரியாய்ப் போய்விடும்”

“ஐயா! என்னைக் கொல்லாதீர்கள். என்னவும் செய்யுங்கள். எனக்குக் கலியாணம் எண்ட பேச்சைமட்டும் எடுக்காதீங்கள் ஐயா” – என்று கும்பிடுகிறேன்.

“அப்ப உன் பிற்கால வாழ்வு?”

“நான் டீச்சராகப் போறேனய்யா!”

கண்ணீரைத் துடைப்பவர்… ‘பிள்ளை! நீ எனக் கொரு சத்தியம் செய்து தரவேண்டும்’ என்கிறார்.

“என்ன சத்தியம்?”

“என்ன தான் நேர்ந்தாலும் இவனுக்கு நீ தான் தாயென்பதைச் சொல்லமாட்டேன். இவனுக்கு ‘அக்கா’ வாக மட்டும்தானிருப்பேன் எண்டு சத்தியம் செய்.”

“அப்படியே நான் ஒருபோதும் என் ரமகன் என்று சொல்லமாட்டேன் ஐயா” தலையணையில் முகத்தைப்புதைத்துக் கொள்கிறேன். தலையணை ஈரமாகிறது.

அமைதியின் இறகுகள் பிறப்புப் பதிவில் நீ என் தந்தையின் மகனாகிறாய். பேரன் மகனானால்…? மகள்..? ஐயோ. இதென்ன அபச்சாரம்…

நீ பாலுக்காக அழும்போதெல்லாம் என் மார்பகங்கள் விம்முகின்றன….வேதனையாக குடைகின்றன. உன்னை வாரியணைத்து அமுதூட்டத் துடிக்கின்றேன்…ஆனால்…

அம்மா வாரியணைத்து பாலூட்டுகிறாள். என் மார் பகங்கள் நனைந்து விடுகின்றன. மனதுக்குள் அழுகிறேன்.

காலமும் மெதுவாக நகர்கின்றது…

என் இதய தாபமும் அதிகரிக்கின்றது… என் நிலை யுணர்ந்து என் தாபத்தை தீர்க்க, என் தந்தையறியா வண் ணம் நடுநிசியில் உன்னை தூக்கிவந்து என்னருகே கிடத்துகிறாள்… நான் உன் இதமான அணைப்பில் என்னை மறக்க… நீயோ… விழிப்புக் கண்டு கத்தத் தொடங்குகிறாய். அம்மா வந்து உன்னைத் தூக்கிச் செல்கிறாள்.

என் மனம் ருத்திர பூமியாகிறது. இப்படி எத்தனையோ நாட்கள்.

நீ வளர்ந்து விடுகிறாய்…நீ அக்கா…அக்கா…என்று என் முன்னால் ஓடி வரும் போதெல்லாம் எனக்கு ஆத்திரம் கோபம் கையாலாகாத்தனம்…எல்லாம் வருகிறது…உண்மையைச் சொல்லிவிடலாமா?…என்று துடிக்கிறேன்…ஆனால்…

உண்மை கொடிதா?…

உன் இதயத்தை அந்த உண்மை கசக்கிப் பிழிந்து விட்டால்..

அதன் தாக்கத்தை உன் பிஞ்சு இதயம் தாங்க முடியாமல் சிதறிவிட்டால்…..

என்னைப்பற்றிய தவறான–நச்சு அபிப்பிராயத்தை உனக்கு ஊட்டி விட்டால்…

அதனால் என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டால்… மனதுக்குள் ‘ஹோ!’ என்று அழுகிறேன்.

ஒரு நாள் உன் தோழி என்று ஒருத்தியைக் கொண்டு வந்து அறிமுகப் படுத்துகிறாய்…

நான் திடுக்கிட்டு விடுகிறேன். எவ்வளவு துணிச்சல் உனக்கு… இக்கால வாலிபனல்லவா?….இந்தத் துணிச்சல் உன் தந்தைக்கு அன்றிருந்தால் –

“தம்பி! என்று மெதுவாக அழைக்கிறேன் என் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட நீ குறும்புச் சிரிப்புடன், என்னைப் பார்க்கத் துணிவின்றித் தலையைக் குனிந்து கொள்கிறாய்….

“அக்கா!” என்று அன்புடன் கூறிக்கொண்டே வந்து என் கரங்களை ஆதரவுடன் உன் தோழி பற்றுகிறாள்….

நான் அதிர்கிறேன். “அக்கா” உன்குரலின் எதிரொலி… மகனின் மனைவிக்கு அக்கா. மாமியாரா?… மச்சாளா?…

என் வாழ்வில் ஒரேயொருமுறை ஏற்பட்ட வழுக் கல் ஏன் இப்படி பரம்பரையாகத் தொடர்ந்து வரவேண் டும்….’பெண்மை ‘ வழுக்கிவிட்டால்

மகன் தம்பியாக. மகனின் மனைவிக்கு அக்காவாக. நாளை… மகனின் மகனுக்கு…. மாமியா?…

மகனே உன்னைத்தான் மகன் என்ற உரிமை பாராட் டிக் கொள்ள முடியாவிட்டாலும் உன் மனைவியைக் கூடவா ‘மருமகள்’ என பாராட்டிக் கொள்ளக்கூடாது?…

மாமியாக நின்று மருமகளை மணவறைக்கு அனுப்ப வேண்டிய நான்!.

உன் திருமணம் முடிந்து விடுகிறது!…

என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பனிக்கிறது!… மகனே!.. உன் திருமணக்காட்சியைக் கண்டது தான் என் வாழ்வின் இன்பத்தின் எல்லையடா கண்ணே!. இதற்கா கத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேனடா, என் செல்வமே! அதனையும் கண்டு களித்துவிட்டேன்…இந்த மகிழ்ச்சியோடு உன்னிடம் நான் விடை பெறுகிறேனடா!..

இனியும் நான் இங்கே இருந்தேன் என்றால் என் னையே அடக்க முடியாமல் உண்மையைச் சொல்லி உன் வாழ்க்கையை சீர்குலைக்க நேரிடும்.!… இதுவரை நீ என் தம்பி என்ற பெயரில் இருந்தாய்.!…. ஆனால் இன்றோ?..

புது வாழ்க்கையில் காலடி பதிக்கும் ஒரு குடும்பத் தலைவன்! கப்பலை வழி நடத்திச் செல்லும் மாலுமி. வாழ்க்கை செவ்வனே நடைபெற மன அமைதி மிக மிக முக்கியம். அமைதியில்லாவிட்டால் ?

மாலுமி கலங்கினால், கடலில் கப்பல செல்லுமா?….

மகனே!.. நான் கேட்டிருந்த இடமாற்றம் கிடைத்து விட்டது!… இனி நான் இலங்கையின் எங்கோ ஒரு மூலை யில் உன் நல்வாழ்வுக்காக பிரார்த்தித்துக் கொண்டே வாழ்ந்து விடுவேன். இந்த அன்புள்ளத்தை நீயும் உன் சந்ததியும் மறந்து விட்டாலும், நான் உன்னை, உன் குடும்பத்தை மறக்கவே மாட்டேன்!….

கடைசிமுறையாக உன்னை வாய்விட்டு.. என் தாபம் தீர, மீண்டும் ஒருமுறை அழைக்கின்றேன்…

‘ம.க.னே!….’

– 1962 ‘கலைச்செல்வி’ சிறுகதைப்போட்டியில் முதற் பரிசுக்கதை – அமைதியின் இறகுகள் –

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *