கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 24,481 
 
 

வாய்க்காலோரம் ஒரு பாறையில் உட்கார்ந்து தன் மாடுகள் மேய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் சம்முவம். அரையில் ஒரு வேட்டி. அதை வேட்டி என்று சொல்வது மரியாதை கருதித்தான். ஒரு நாளும் அது அவருடைய முழங்காலுக்குக் கீழ் நீண்டதில்லை. மேலே ஒரு நீலத் துண்டு. எத்தனை நாள் ஆனாலும் அந்த துண்டு மாறாது. அவர் மனைவி மரிக்கொழுந்து “ஏன் இப்படி நாத்தம் பிடிச்சத் துண்டைப் போட்டுக்கிட்டு அலையுதீரு. கொண்டாரும் தோச்சித் தாரேன்.” என்று பிடுங்கிக் கொண்டு போய் துவைப்பாள். அது ஈரம் காயுமுன் மீண்டும் அவர் தோளுக்கு வந்து விடும்.

“மாடுகளை வெச்சிப் பொளப்பு நடத்துறது சங்கடம் தான். ஏதோ ரெண்டு பசு இருக்கோ நான் பொளச்சனோ? இல்லேன்னா? இந்த ஒத்தக் காளைய வெச்சுக்கிட்டு வண்டி கட்டிப் போகவா? இல்லை ஒளவுக்கு விட்டு சம்பாரிக்கவா? குடும்பமே பட்டினி கெடக்க வேண்டியது தான். மரிக்கொளுந்தும் சாணியக் கூட விடாம வரட்டி தட்டு வித்துடுறா. ஆனா கையில காசு நடமாட்டமே இருக்க மாட்டேங்குதே? இந்தப்பய மாடமுத்து நேத்து ஆட்டோ எறக்குன்னான். இன்னிக்கு அவன் ரெண்டு பிள்ளேளும் இங்கிலீஸ் பள்ளிக்கூடத்துல படிக்கி. என் மவன் செல்வம் பாவம் . ஆழ்வார்குறிச்சி ஸ்கூல்லயே படிச்சு காலேசும் அங்ஙனயே படிக்குறான்”

அவரது எண்ணத்தைக் கலைத்தது ரத்தினத்தின் குரலும் சைக்கிள் மணி ஓசையும்.

“என்ன மாமா? இங்க உக்காந்துருக்கீரு? சோலி எதுவும் இல்லியா?”

பதில் சொல்வதற்குள் அவன் சைக்கிளில் பறந்து விட்டான்.

“இவன் ஒரு கொறமாசத்துல பொறந்தவன். சோலி இல்லாம இருக்கப் போயித்தானே இங்ஙன உக்காந்துருக்கேன். அப்புறம் என்ன கேள்வி? இவ அப்பன் ஏளுமல பாடு தேவலாம். ரெட்டை மாடு. அதை தன்னோட நெலத்துலயே உளுதுக்கிடுதான். நான் எங்க போக நிலத்துக்கு? பாவம் செல்வம் ! காலேசுக்குப் போக ஒரு சைக்கிள் வாங்கித்தான்னு கேட்டுக்கிட்டே இருக்கான். நானும் இன்னா பாப்போம் , அன்னா பாப்போம்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். எப்படியாவது அவனுக்கு சைக்கிள் வாங்கிடணும். பளய சைக்கிள்னாலும் போதும்னிட்டான்.”

தூரத்தில் கமிசன் சதாசிவம் வருவது தெரிந்தது.

“இவன் எங்க வாரான்? பேசிக்கிட்டு நின்னதுக்கே கமிசன் கேப்பானே? இவன் கிட்ட எதுனா பளய சைக்கிள் இருக்கான்னு கேப்பமா?” நினைத்துக் கொண்டிருக்கும் போதே சதாசிவம் அருகில் வந்து ” என்ன? சம்முவம்? சொகந்தானா? வீட்டுல மயினி , மகன் எல்லாரும் நல்லாருக்காகளா?” என்றான்.

“எல்லாரும் நல்லா இருக்காக! அது சரி! நீ எதுக்கு இப்பம் என்னைத் தேடிக்கிட்டு வந்த? கமிசன் இல்லாத சோலியில நீ எறங்க மாட்டியே? என்ன விசயம்?”

“அது ஒண்ணுமில்ல சம்முவம். நம்ம ஊர்ல யார் யார் கிட்ட மாட்டு வண்டி இருக்கு?”

“இந்த வெவரம் உனக்கெதுக்குல? இருந்தாலும் சொல்லுதேன். முன்ன எங்க நாலு பேர்ட்ட மாடு இருந்துது. போன மாசம் தான் சீக்கு வந்து எசக்கியோட மயிலை செத்துப் போச்சி , சுடலை இந்த மாடு வெவகாரமே வேண்டாம்னு அதை விட்டுட்டான்.”

“பளய கதையை விடும். இப்பம் யார்ட்ட இருக்கு?”

“எங்கிட்ட ஒத்தைமாட்டு வண்டியும் , ஏளுமலை கிட்ட ரெட்டை மாட்டு வண்டியும் இருக்கு. ஏன் ஏதாவது வண்டிக்கு சோலி இருக்கா? அப்படி இருந்தாச் சொல்லப்பா! உண்டான கமிசன் குடுத்திடுறேன்”

“என்ன சம்முவம்? நான் உங்கிட்ட கமிசன் வாங்குவனா? நம்ம மொதலாளி இருக்காகள்ள? அவுகளுக்கு லோடு அடிக்க மாட்டு வண்டி தேவைப் படுது. ”

“என்னலே சொல்லுத? மொதலாளி தான் லோடு ஆட்டோ வெச்சிருக்காகளே? போதாதுன்னா அவுக மச்சான் தான் லாரி ஆபீசே வெச்சிருக்காகளே? மாட்டு வண்டியில எதுக்கு லோடு அடிக்கணும்?”

“அதெல்லாம் பெரிய எடத்து வெவகாரம். உனக்கு இஷ்டமான்னு மட்டும் சொல்லு. ”

“சொல்லுறது என்ன? இஷ்டம் தான். என்ன லோடு? எங்ஙன போயி ஏத்திட்டு எங்ஙன எறக்கணும்? இதெல்லாம் ஒண்ணும் சொல்லலியே? ”

” நம்ம ஊரு ஆத்தங்கரையோரமா மணல் இருக்கு பாரு அதை காலை கருக்கல்ல லோடு ஏத்திக்கிட்டு நம்ம அங்காளபரமேஸ்வரி கோயில் கிட்ட இருக்கற குடோன்ல எறக்கணும். காலையில மூணு நடை , இருட்னப்புறம் மூணு நடை.”

“என்னலே இது? எல்லாரும் லாரியில தானே மணல் அள்ளுவாக? உங்க மொதலாளி எதுக்கு மாட்டுவண்டியில அள்ளச் சொல்றாரு?”

“அதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசயம். லோடு அடிச்சமா? காசை எண்ணுனமான்னு இருக்கணும்.. நீ மட்டும் இந்த வேலையில எறங்கிட்டேன்னா காசு கொட்டும் பாரேன். அப்புறம் நீயே தேடி வந்து கமிசன் குடுப்ப”

“எப்பா சதாசிவம்! லோடு அடிச்சப் பொறகு அடுத்த வாரம் வா காசு தரேன் , ஒரு மாசத்து லோடுக்கு சேத்துக் காசு தரேங்கற வெவகாரமே நமக்கு ஆகாது. கையில காசு வாயில தோசை என்ன சொல்ற?”

“நீ என்ன? சின்னப்புள்ளை கணக்கா பேசுத? காலையில அடிச்ச லோடுக்கு அப்பமே காசு. அதே மாரி தான் சாயங்காலமும். சரி ஒரு லொடுக்கு என்ன குடுப்பாங்கன்னு நெனைக்கிற?”

“காலையில மூணு லோடுக்கும் சேத்து எப்படியும் முன்னூறு ரூவா வேணும். ஏன்னா எப்படியும் போக வர மூணு கிலோ மீட்டர் இருக்கும் பாரு!”

சிரித்தான் சதாசிவம்.

“அவுக ஒரு லோடுக்கு 150 ரூவா குடுக்காக! காலையில 450 , சாயங்காலம் 450 . இதுல எனக்குக் கமிசன் ஒரு நாளைக்கு 50 ரூவா போக 850 நிக்கும். உனக்கென்ன கசக்குதா? போ போயி மாட்டுக்கு நல்ல தீனியா வாங்கிப் போடு. உனக்கு நல்ல காலம் பொறந்துடிச்சி” என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.

சம்முவத்துக்கு மனம் துள்ளியது.

“ஒரு நாளைக்கு 850 ரூவாயா? ஏயப்பா! இதுல மாட்டுத்தீவனம் நிறையா வாங்கணும். அதுக்கு முன்னூறு ரூவான்னே வெச்சிக்கிட்டாலும் ஐநூறு ரூவாவும் எனக்குத்தானே? ஒரு நாளைக்கு ஐநூறுன்னா மாசத்துக்கு 15,000. ” தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது அவருக்கு. இதை முதலில் மரிக்கொழுந்திடம் சொல்ல வேண்டும். வீட்டுக்கு விரைந்தவர் எல்லா விவரங்களையும் சொன்னார்.

நெஞ்சில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள் அவள்.

“ஏளா! இனிமே நமக்கு நல்ல காலம்னு கமிசன் சொல்லுதான். நான் உனக்கு ஒரு அட்டியல் வாங்கிப் போடுதேன். என்ன?”

“முதல்லா மாடுங்களுக்கு நல்ல கொட்டாய் ஒண்ணு கெட்டணும்யா. அப்புறம் தான் எனக்கு” என்றாள் அந்த மனுஷி.

சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்த போது மகன் செல்வம் வந்து “எப்பா! எங்க மன்றத்துல இன்னைக்கு ஒரு மீட்டிங்க் போடப் போறோம் . நான் தான் செக்கரட்டரி. . அதை நம்ம வீட்டுல வெச்சிக்கலாமா?” என்றான்.

“நம்ம வீட்டுலயா? பெரிய பெரிய மனுசாள் எல்லாம் வருவாகளேப்பா! அவுக நம்ம வீட்டுக்கு வந்து தரையில உக்காருவாகளா?”

“எல்லாம் காலேஜ் பசங்க தான். கூட ரெண்டு மூணு புரஃபசர் வருவாங்க. அவுங்க எல்லாம் பாரபட்சம் பாக்க மாட்டாங்க! நம்ம வீட்டு வேப்ப மரத்தடி தான் சரியான எடம். இன்னிக்கு மதியம் மூணு மணிக்கு மீட்டிங்க். நான் இப்ப போயிட்டு அதுக்குள்ள வந்திடுறேன். அம்மா ! நீ எதுவும் செஞ்சு கஷ்டப்படாத. பலகாரமெல்லாம் நான் வாங்கிட்டு வந்துடுறேன். நீ டீ மட்டும் போடு போதும். ” என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக வெளியேறினான்.

சம்முவத்துக்குப் பெருமையான பெருமை.

“ஏளா! பாத்தியா எம்மவனை? எம்புட்டு படிச்சி பெரிய பெரிய புரோசருக்கு சமதையா மீட்டிங்கி போடுதான். இவனால தான் புள்ள என் தலை நிமிரணும்” என்றார் கண்களில் கனவுகளோடு.

மதியம் மூணு வாக்கில் ஒவ்வொருவராக வரத் துவங்கினர். எல்லாம் காலேஜ் மாணவர்கள். தவிர இரு பேராசியர்கள். எல்லார் கைகளிலும் மணலைத் திருடாதே! இயற்கை அன்னையை அழிக்காதே! என்ற ரீதியில் நிறைய தட்டிகள் ! படித்துப் பார்த்த சம்முவத்துக்கு வயிற்றில் ஊசி ஏற்றினாற் போல இருந்தது.

“இவுகள்ளலாம் ஏன் மணலை அள்ளக்கூடாதுங்காக? அது யாருக்கும் சொந்தமில்லியே? அப்புறம் என்ன? சரி அவுக என்ன பேசறாகன்னு கேட்டுக்கிடுவோம்” என்று முடிவு செய்து நல்ல வெள்ளை வேட்டி கட்டி மகனின் சட்டைகளில் ஒன்றை அணிந்து அதற்கு மேல் நினைவாக நீலத் துண்டையும் பொட்டுக் கொண்டு உட்கார்ந்தார். மனைவி துண்டைப் பார்த்து முறைத்தாள். அதை லட்சியம் செய்யவில்லை அவர்.

அனைவரும் வந்த உடன் பேராசிரியர் பேசத்துவங்கினார். தமிழில் தான் பேசினார் என்பதால் சம்முவத்துக்கு நன்றாகப் புரிந்தது. மொத்ததில் ஊர் ஆற்றில் மணல் அள்ள விடக்கூடாது. அது சட்ட விரோதம் என்றார். அது மட்டுமல்ல அது சுற்றுச் சூழலுக்கும் , மக்களுக்கும் நல்லதல்ல என்றும் கூறினார்.

“ஐயா! என்னைத் தப்பா நெனச்சிக்கிடக் கூடாது! ஆத்து மணலை அள்ளுனா மக்களுக்கு என்ன கஷ்டம்? அது வெத்தா தானேக் கெடக்குது? அதை எடுத்தா மக்களுக்கு வீடு கட்டப் பயன் படுமே?”

செல்வம் கையைக் காண்பித்தான். அவன் கண்களில் கோபம்.

“சும்மா இரு செல்வம்! உங்கப்பா கேக்குறது நல்ல கேள்வி! நாம இப்படி இவங்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்லாம இருக்கறதால தான் விவரமில்லாம இவங்க மணல் கொள்ளைக்கு ஒத்துழைப்புக் கொடுக்கறாங்க” என்றவர் சம்முவம் பக்கம் திரும்பி ” ஐயா ஆத்துல இருக்கற மணல் தான் தண்ணிய சுத்தமா வடிகட்டும் , அது மட்டுமில்லங்க ஆத்துத் தண்ணியில இருக்கற மீனெல்லாம் மணலுக்கு நடுவுல தான் முட்டை போட்டு இன விருத்தி பண்ணும். ஆனா நாம தை அள்ளிக்கிட்டே இருக்கோம்!”

“அதி சரி தான் ஐயா ! ஆனா அடுத்த மழை பேஞ்சா மணல் திரும்ப வராதா?”

“வராது. இந்த அளவு மணல் உருவாக பல ஆயிரக்கணக்கான வருசம் ஆகும். அது மட்டுமில்லை மணல் தான் ஆத்து வெள்ளத்தை ஊருக்குள்ள வர விடாமத் தடுக்குது. இப்படி மணலை அள்ளிக்கிட்டே போனா சுகாதாரமான தண்ணி கிடைக்காதுங்கறது ஒரு பக்கம். அப்புறம் மழைக்காலத்துல ஆத்து வெள்ளம் ஊருக்குள்ள வந்து ஊரை அழிச்சிடும்” என்றார். இன்னும் என்னென்னவோ கறுப்புப் பணம் , கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் , சுற்றுப்புற சீர்கேடு என்று சொல்லிக் கொண்டே போனார். அவை எதுவும் சம்முவத்தின் காதில் ஏறவில்லை. மணலை அள்ளினால் வெள்ளம் ஊருக்குள் வந்து விடும் என்பது மட்டும் பதிந்தது.

அதற்குக் காரணம் அம்பாசமுத்திரத்தில் 10 வருடங்கள் முன்னால் ஊருக்குள் வெள்ளம் வந்து கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் பலியாகின. அதில் சம்முவத்தின் தங்கை குடும்பமும் ஒன்று. அது நினைவுக்கு வர மௌனமானார் சம்முவம். மனதில் பலப்பல யோசனைகள்.

“நாசக்காரப் பாவியோ ! அரசாங்கம் கூடாதுன்னு சொல்லியும் செய்யிறானுவோ. அது தான் காலைக் கருக்கல்லயும் , இருட்னம் பொறவும் எடுக்கச் சொல்லியிருக்காக போலிருக்கு. ம்ஹூம்! நம்ம கிராமத்து மக்கள் சாக நானே கூட்டு நிக்கக் கூடாது. இந்த சோலி வேண்டாம்னு கமிசன் கிட்ட கறாராச் சொல்லிடுவோம். படிச்சவுக இவுக கூடச் சேந்து இந்த அநியாயத்தைத் தட்டிக் கேப்போம். ” என்று தீர்மானித்துக் கொண்டார்.

மீட்டிங்க் முடிந்து மகனைத் தனியே அழைத்தார்.

“செல்வம்! நீ இன்னிக்கு நல்ல சோலி பாத்த மகனே! நானே மணல் கொள்ளைக்கி கூட்டு நிக்கத் தெரிஞ்சேன்” என்று சொல்லி கமிசன் சதாசிவம் கூறியதை சொன்னார். “அதுனால நான் இந்த யாவாரமே வேண்டாம்னு சொல்லிட்டு வந்துருதேன். நீயும் வரியா?” என்றார் மகனை.

“எப்பா உனக்கென்ன கோட்டியா பிடிச்சிருக்கு? மாசம் 15,000 ரூவா கிடைக்குது. இதை யாராவது விடுவாங்களா? இது சட்ட விரோதம்னு சொல்லி மேற்கொண்டு அவங்க கிட்டக் காசு கேளு. நம்ம கையில காசு கொழிக்கும். எனக்கு பைக்கே வாங்கலாமே? ஜீன்ஸ் போடலாம் இன்னும் நல்லா வாழலாம். அதை விட்டுட்டு இப்படி பெரிய காந்தி மாதிரி நாட்டுக்காகத் தியாகம் பண்றியோ?” என்று சொல்லிக் கொண்டே போனான்.

கண்கள் இருட்டக் கீழே மயங்கி விழுந்தார் சம்முவம் . அவரது நீலத் துண்டும் செல்வம் காலடியில் விழுந்தது.

– 6.1.2014

Print Friendly, PDF & Email

1 thought on “ஆற்றோரம் மணலெடுத்து

  1. சம்முவம் ஆற்று மணலை எடுத்துப்போகும் லாபகரமான தொழிலைச் செய்யமாட்டார் என்று முதலிலேயே தெரிந்துவிடுகிறது. ஆனால், அவருடைய மகன் செல்வத்தின் மனசாட்சியற்ற சொற்கள் எதிர்பாராது அமைந்து கதைக்குச் சிறப்புச் சேர்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *