கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 17, 2022
பார்வையிட்டோர்: 21,697 
 
 

அம்பத்தூரில் வசிக்கும் தங்கை கலாவிடமிருந்து ராகவனுக்கு அலைபேசி அழைப்பு.

“அண்ணே, அம்மாவுக்கு கொஞ்சம் ஒடம்பு அதிகமா இருக்கு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறேன்னா வரமாட்டேன்னு அடம்…”

“என்ன ஒடம்பு அவங்களுக்கு? நல்லாத்தானே இருந்தாங்க…”

“ஆமாண்ணே. போன வியாழக்கிழமை வீட்டுல பூஜை வெச்சிருந்தேன். நிறைய டெவோட்டீஸ் வந்திருந்தாங்க. சுவாமிக்கு அலங்காரம், புஷ்ப ஜோடிப்பு எல்லாம் அவங்கதான். வழக்கம்போல வந்தவங்க சிலர் கிட்டே மூஞ்சியைத் தூக்கி வெச்சிகிட்டு, எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாங்க. வழக்கமா கூட்டு வழிபாட்டுக்கு வர்றவங்க எல்லோரும் என் மேல பிரியம் உள்ளவங்க. அம்மாவோட குணம் முன்னாடியே தெரிஞ்சிருந்ததால, ஒர்த்தரும் அதைப் பெரிசா எடுத்துக்கல…”

“அம்மா குணம் தெரிஞ்சதுதானே? என்ன பண்ணுது?”

“ரெண்டு நாளா அவங்களால் எதையும் சாப்பிட முடியலை. கால் தம்ளர் பால் கொடுத்தேன். அதையும் வாந்தி எடுத்துட்டாங்க. கால் ரெண்டும் வீங்கியிருக்கு. சுறு சுறுப்பா வீட்டுல சுத்திச் சுத்தி வர்ற அவங்க ஒரே எடத்துலியே சுருண்டு படுத்துக் கெடக்கறதைப் பார்க்க முடியலை! “பெரியவனைப் பாக்கணும்”னு அப்பப்ப சொல்றாங்க. நீங்க வந்து பாத்து ரெண்டு வார்த்தை பேசினீங்கன்னா தெம்பா எழுந்து ஒக்காந்துடுவாங்க!”

“நான் ஒங்க அண்ணி ராஜத்தை மிஷன் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிட்டு, வீட்டுக்கும் ஆஸ்பிடலுக்கும் அல்லாடிகிட்டிருக்கேன். இப்ப, இது வேற ஒரு பிரச்சினையா?”

“நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்கண்ணே. பங்கஜமும் கெளரியும் இங்கதான் இருக்காங்க. அம்மாவை அவங்களும் கூட இருந்து பாத்துக்கறாங்க… ஏதாச்சும் அதிகமா அம்மாவுக்கு முடியலைன்னா போன் போடறேன்… வந்துடுங்க. அப்புறம், அண்ணிக்கு எப்டிண்ணா ஒடம்பு இருக்கு? ஆஸ்பத்திரியில் என்ன சொன்னாங்க? ஹார்ட்டுல ஏதோ பிராப்ளம். வால்வ் மாத்தணும்னும் லட்சக் கணக்குல பணம் செலவாகும்னும் சொன்னீங்க. ரொம்பக் கவலையா இருக்குண்ணா… அப்பா இறந்த பிற்பாடு, மூணு தங்கச்சிகளை நீங்களும் அண்ணியும்தான் பாத்துகிட்டீங்க. அண்ணிக்கும் அம்மாவுக்கும் ஒருத்தருக்கொருவர் பிடிக்காம போச்சே தவிர, எங்க எல்லோருக்கும் அண்ணின்னா கடவுள் மாதிரிண்ணே. அவங்களுக்குப் போய் இப்படியொரு கஷ்டம் வந்திருக்க வேணாம்!”

ராகவனுக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. “வெச்சிடறேம்மா. ஒங்க அண்ணி ஆஸ்பத்திரில பெட்லதான் இருக்கா. வர்ற வாரம் ஆபரேஷன். ஹார்ட் வால்வ் ரீப்ளேஸ் பண்ணப் போறதா பெரிய டாக்டர் சொல்றார். சரி, நா அப்புறம் பேசறேன்மா!”

போனை வைத்துவிட்டு ராகவன் தொலைவில் தெரிந்த கோயில் கோபுரத்தை வெறித்துப் பார்த்தார். ‘வாழ்க்கையில் மனிதருக்குக் கஷ்டங்கள் வரலாம். ஆனால், இப்படியா? என்ன கொடுமை? ஏன் எனக்கு மட்டும் இப்படி?’

மறுநாள் தகவல் வந்தது. ராகவனின் தாய் அன்னத்தின் கதை முடிந்து விட்டது என்று.

“சாயங்காலம் நாலு மணிக்கு அம்மா மூச்சு விட சிரமப்பட்டாங்க. பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் வழியிலேயே உயிர் போயிடுச்சு அண்ணே… அம்மாவின் உடம்பை இங்கேயே அடக்கம் பண்ணிட முடிவு செய்துடலாமா? அங்கே அண்ணி ஆஸ்பத்திரில இருக்கிறதால, இங்கேயே பண்றதுதான் சரியா இருக்கும்னு தோணுதுண்ணே. நானும் இங்கே தங்கைகளும் அதே முடிவைத்தான் எடுத்திருக்கோம்… நீங்க என்ன சொல்றீங்க?”

“என்ன பண்றதுன்னு தெரியாமக் கொழம்பிப் போயிருந்தேன் கலா. என் பளுவை நீ தீர்த்துட்டேம்மா. நீ சொல்றது ரொம்பச் சரி. அம்மாவுக்கும் என் மனைவிக்கும் தினம் மோதல் வந்து நான் கஷ்டப்பட்டப்ப, “அம்மாவை என்கிட்டே அனுப்பிடுங்கண்ணே, நான் பாத்துக்கறேன். எனக்கு ஏதும் சிரமமில்ல”ன்னு நீ சொன்னே. இப்ப, அங்கேயே அடக்கம் பண்ண ஏற்பாடு செய்றேன்னு சொல்லி என் வயித்துல பால் வார்த்திருக்கே. உனக்கு என்ன கைமாறு செய்யப் போறேன் கலா?”

“என்னண்ணே, பெரிய வார்த்தையெல்லாம். அண்ணியைப் பாத்துக்க ஆள் போட்டுட்டு, சீக்கிரம் இங்கே வாங்க. மூத்த பையன்கிறதால நீங்கதான் கொள்ளி போடணுமாம். நாளைக்கு மதியம் எடுத்துடலாம்னு சொல்றாரு என் வீட்டுக்காரரு..”

“சரிம்மா, நான் அடுத்த பஸ்சிலேயே கிளம்பி வந்துடறேன்…”

கண்ணாடிப் பேழையில் அன்னம் மீளாத் துயில் கொண்டிருந்தார். வாசலில் ட்ரம்ஸ் அடிப்பின் அதிர்வில் செவிப்பறை கிழிந்தது. வீட்டுக்கு முன், வீதி நடுவில செத்தை, குப்பைகளை எரித்து, அதைச் சுற்றி வட்டமாக நின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இளைஞர்கள். தோல் வாத்தியங்களை நெருப்பில் சூடு படுத்தி, இரண்டு கைகளிலும் குச்சிகள் வைத்து, ரிதத்துடன் அடித்து, அந்தப் பிரதேசத்தையே கலக்கிக் கொண்டிருந்தார்கள்.

அம்மாவின் மரணம் ராகவனை அதிகமாகப் பாதிக்கவில்லை. அவர் கண்ணில் ஒரு துளிக் கண்ணீர் கூட வெளிப்படவில்லை. அம்மா செய்த அக்கிரமம், அழிச்சாட்டியம் ராகவன் மனசில் கசப்பையே நிறைத்து வைத்திருந்தது. இருந்தாலும் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமை உணர்வு மனதில் உறுத்தவே ஓடி வந்திருந்தார்.

வந்தவுடன் ராகவன் தங்கை கலாவை வீட்டுக்குள் அழைத்துப் போய் தாயின் இறுதிச் செலவுக்குக் கொண்டு போயிருந்த பணத்தைக் கொடுத்தார். அவள் வாங்க மறுத்தாள். “அண்ணே, மாசாமாசம் நீங்க தவறாம அம்மாவுக்கு மணியார்டரில் அனுப்பின பணத்தை அம்மா செலவே பண்ணாம சேர்த்து வெச்சிருந்தாங்க. போன மாசம் அம்மா என்னை நகைக் கடைக்குக் கூட்டிப் போயிருந்தாங்க. தன் தோடு, மூக்குத்தி, கழுத்து செயின்கள், வளையல்கள் எல்லாத்தையும் வித்துப் பணமாக் கிட்டாங்க. அந்தப் பணத்துலேர்ந்துதான் தன் ஈமச் சடங்கு செலவைச் செய்ணும்னு சொல்லியிருக்காங்க. அதோடு மட்டுமில்லாம உயில் மாதிரி எனக்கு, தங்கைகளுக்குன்னு பணத்தைப் பிரிச்சு, கவர்களில் போட்டுத் தன் பெட்டியில் வெச்சிருக்காங்க. தன் சாவுக்கு அப்புறம் அதை சம்பந்தப் பட்டவங்களுக்குக் கொடுக்கற வேலையை எனக்குக் கொடுத்திருக்காங்கண்ணே!”

ராகவன் வியப்பின் எல்லைக்குப் போனார். வட்டிக்கு ரூபாய் வாங்கித் தன் தாயின் இறுதிச் செலவுக்குப் பணம் கொண்டு வந்திருந்தார் அவர். அம்மாவா இப்படி முடிவு செய்து, பணமும் கொடுத்து வைத்திருக்கிறாள்?

தங்கை கலா, அம்பத்தூரில் நிறையப் பேருக்குத் தெரிந்தவளாக இருந்தாள். காரணம், வீட்டில் வாரம் தவறாமல் அவள் நடத்தும் பூஜை, பஜன், கூட்டு வழிபாடு… நிறையப் பேர் வந்தார்கள். மாலை போட்டு அஞ்சலி செலுத்திப் போனார்கள். உறவினர்கள் வந்து கூடினார்கள்.

கண்ணாடிப் பேழைக்கு அருகில் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்திருந்தார் ராகவன்.

தனியார் கம்பெனியில் தலைமைக் குமாஸ்தா வேலை. ராஜம் அங்கே ஸ்டெனோவாக இருந்தாள். அவளுடைய அழகு, குணம் ராகவனை வசீகரித்தது. இருவரும் காதலித்தார்கள். வேறு வேறு ஜாதி ஆனாலும், ராகவனின் பெற்றோர் பச்சைக் கொடி காட்டினார்கள். ராஜத்தின் வீட்டில் சம்மதமில்லை.

நண்பர்கள் முன்னிலையில், ஒரு கோயிலில் எளிமையாகத் திருமணம் நடந்தது. சில மாதங்களில் கார் விபத்தொன்றில் ராகவனின் தந்தை மரணமுற்றார். தந்தை இல்லாத கவலையில் மகனும் மருமகளும் வேலைக்குப் போய்விட்ட நேரத்தில் அன்னம் மூன்று மகள்களுடன் பேசி அவர்கள் மனதைக் கலைத்தார்.

மகள்கள் நல்ல உடை, நாகரீக அணிகலன்கள் இல்லாத நிலையில் மருமகள் மட்டும் நாகரீக உடை, பண வசதியுடன் இருப்பது அவர்களை உறுத்தியது. தினமும் சண்டை, சச்சரவு. மருமகள் வெளியில் வேலைக்குப் போகிறவள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது ராகவனின் தாய்க்குப் புரியவில்லை.

ராஜம் கடன் வாங்கி ராகவனின் மூன்று தங்கைகளுக்கும் எளிய முறையில், பொன் வைக்கிற இடத்தில் பூ வைத்துத் திருமணம் செய்து கொடுத்தாள்.

நியாயமாக மருமகளைக் கோயில் கட்டிக் கும்பிட வேண்டிய ராகவனின் தாய் அன்னம், குரோதம் வளர்த்தாள். “அம்மா! அம்மா!” என்று பாசத்துடன் அழைத்து, மாமியாருக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்துக் கவனித்தாள் ராஜம். ஆனாலும், தன் மகள்களுக்கு இன்னும் தடபுடலான இடத்தில் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து கொடுக்கவில்லையே என்கிற மனக்குறை அன்னம்மாவுக்கு.

மகனிடம் கோள் சொல்லுவதே தாயின் வேலையாக மாறியது. “நான் தெருவில் தான் போய்ப் படுத்துக்கப் போறேன். என்னை ஃபேன் போட்டுக்கக் கூடாதுங்கறாடா ஒன் பெண்டாட்டி!” (“அவங்க ஒவ்வொரு ரூமிலும் ஃபேனைப் போட்டுவிட்டு ஆஃப் பண்ணாம வேற இடத்துக்குப் போயிடறாங்க. கரண்டு பில் அநியாயத்துக்கு எகிறுதுங்க” – மனைவியின் விளக்கம்.)

“எனக்குத் தண்ணியா காப்பி போட்டுத் தர்றாடா ஒன் அருமைப் பொண்டாட்டி!” “ஏம்மா, நீயே உனக்குப் பிடிச்ச மாதிரி காப்பி போட்டுக்க வேண்டியதுதானே?” “நான் கேஸ் அடுப்புகிட்டயே போகக் கூடாதுங்கறாளே?” (உங்க அம்மா கேஸ் அடுப்பை ஆன் பண்ணி, காப்பி போட்டுட்டு, மறதியாய் வால்வை மூடாமப் போயிடறாங்க. அதாங்க அவங்க கேஸ் அடுப்புகிட்டே போகக் கூடாதுன்னு சொன்னேன்!”)

வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டு தெருவில் போவோர் வருவோரிடம் “என் புள்ள கொணாந்திருக்கானே ஒரு அருமைப் பொண்டாட்டி, அவ பண்ற கொடுமை தாங்கலடி அம்மா, தெரு நாய்க்குச் சோறு போடறாப்புல தண்டத்துக்கு சோறு போடறா, காப்பி, கழுநீர்த் தண்ணி மாதிரி இருக்கு… நாய் கூட அதைக் குடிக்காது…” என்று பேசுவது அன்னம்மாவின் வழக்கம். இதை ஒருநாள் அறைக்குள் படுத்திருந்த ராகவன் தன் காதாரக் கேட்டுக் கொதித்து விட்டான்.

“நீ ஒன் பொண்டாட்டி பேச்சைத்தான் கேட்பாய். என்னைத் திட்டுவாய்!” என்று கூசாமல் ராகவனை வசை பாடினாள் அன்னம்.

காதலித்துக் கைப்பிடித்தவனுக்காகத் தன் குடும்பத்தைக உதறிவிட்டு வந்த மனைவி கவலையில் புழுங்க, “எனக்கு யாருமேயில்லை. நான் அனாதை மாதிரிக் கிடக்கேன்!” என்று ராகவன் முன்னே புலம்புவது அன்னத்தின் வழக்கம். மனைவி, தாய் இருவரையும் பிரித்தேயாக வேண்டும் என முடிவு செய்தார்.

ஒவ்வொரு தங்கையாகக் கேட்டார். “அம்மாவை என் வீட்டுல வெச்சுக்கறது ரொம்பக் கஷ்டம் அண்ணா. என் மாமனார், மாமியாருக்கும் எனக்கும் கலகம் மூட்டி விட்டுடுவாங்க…” என்று இரண்டு தங்கைகள் கைவிரித்துவிட, அம்பத்தூர் தங்கை கலா, “என்கிட்டே அனுபுங்கண்ணா. இங்கே பூஜை, பஜன், டெவோட்டீஸ்களுக்கு அன்னதானம்னு ஒரு அமைப்பு வெச்சுச் செய்துகிட்டிருக்கேன். அவங்களுக்கு இங்கே இருக்கவும் பிடிக்கும்…நான் பாத்துக்கறேன்!’ என்றாள்.

அம்பத்தூருக்கு அம்மாவை அனுப்பி வைத்தார். கூடவே, மாதாமாதம் தாயாருக்கும் தங்கைக்கும் பணம் அனுப்ப ஆரம்பித்தார். தங்கை கலா, “அண்ணே, அவங்க எனக்கும் அம்மாதான். எனக்குப் பணம் எதுவும் அனுப்ப வேண்டாம். அம்மா மனசுத் திருப்திக்கு ஏதாவது, அதுவும் அவங்க பேருக்கு மணியார்டர் அனுப்பி வையுங்க. ‘என் பையன் அனுப்பியிருக்கான்’னு மணியார்டர் ரசீதைப் பிரிச்சுப் பார்த்துத் தடவிக் கொடுத்து சந்தோஷப்பட்டுகிட்டிருக்காங்க..” என்றாள்.

வீட்டில் நிம்மதி திரும்பியது. ஆனால், மனைவி ராஜத்துக்கு நடந்தால் மூச்சு இரைப்பு, இருமல், அடிக்கடி களைப்பு, தலை சுற்றல், மயக்கம்… மிஷன் ஆஸ்பத்திரியில் பரிசோதித்து விட்டு, “இருதயத்தில் மிட்ரல் வால்வ் பழுது. வால்வ் ரீப்ளேஸ் செய்யணும். ரெண்டு ரெண்டரை லட்ச ரூபாய் தயார் பண்ணுங்க. சீக்கிரம் ஆபரேஷன் செஞ்சாக வேண்டும்!” என்று மருத்துவமனை கார்டியாலஜி சீஃப் டாக்டர் வில்லியம்ஸ் சொன்னார்.

சில நண்பர்களிடமும் ஆபீசிலும் கடன் கேட்டிருந்தான் ராகவன். தருவதாகச் சொல்லியிருந்தார்கள். அதற்குள் அம்மாவின் மரணம்…

நேரம் போய்க் கொண்டிருந்தது. ராகவனின் மீசை தாடி மழிக்கப்பட்டது. கோடி வேட்டி, துண்டு உடுக்கக் கொடுத்தார்கள். அம்மாவைச் சுற்றிப் பெண்கள் சூழ்ந்துகொண்டு சந்தனம், வாசனைப் பொடி, வாசனைத் திரவியங்கள் பூசினார்கள். கலா அம்மாவின் தலையை மடியில் சுமக்க, குடம் குடமாக நீர் விட்டுக் குளிப்பாட்டினார்கள். ராகவன் தாய்க்குச் செய்ய வேண்டிய சடங்குகளை அங்குள்ளவர்கள் சொன்னபடி செய்தார்.

ராகவனின் தாய் அன்னத்தின் உடல் ஏற்றப்பட்ட பல்லக்கு அமரர் ஊர்தி வாகனத்தில் வைக்கப்பட்டு, டென் தவுசண்ட் வாலா வெடிச்சரம் போகும் வழியெல்லாம் காது கிழிக்கும் அளவுக்கு வெடித்தபடி இறுதிப் பயணம் நடந்தது. அன்று சனிக்கிழமை. எனவே தனிப் பிணமாகப் போகாமல், ஒரு கோழியை பல்லக்கில் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.

சுடுகாட்டில் அடக்கம் முடிந்தது.

வீடு திரும்பி ராகவன் குளித்தான். தலை மகன் ஈமச் சடங்குக் கொள்ளி போட்டவன் என்பதால், பதினாறாம் நாள் காரியத்தை ராமேஸ்வரம் கடலில் செய்ய வேண்டுமென்று யாரோ சொன்னார்கள்.

தங்கை கலா, மற்ற தங்கைகளையும், ராகவனையும் ஒரு அறைக்குள் அழைத்து பீரோவுக்கு மேல் இருந்த அம்மாவின் பெட்டியை இறக்கினாள்.

“தன் காரியம் முடிஞ்சப் பொறவு இந்தப் பொட்டியைத் திறந்து கவர்களைப் பங்கீடு செய்யணும்னு அம்மா என்கிட்டே சத்தியம் வாங்கிட்டாங்கண்ணே!” என்று குரல் கம்மியபடி சொன்னாள் கலா.

அந்த இரும்புப்பெட்டியில் புடவைகளுக்கு அடியில் ஐந்து கவர்கள் இருந்தன. ஒவ்வொன்றின் மீதும் பெயர் எழுதப்பட்டிருந்தது. தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஈமச் செலவு என்று எழுதப்பட்ட கவர் காலியாக இருந்தது. “ரூபாய் 20,000 அதில் இருந்ததை எடுத்துத்தான் அம்மா காரியச் செலவு செய்தேன். மீதி கொஞ்சம் கையில் இருக்கு அண்ணே!” என்று சொன்ன கலா, தங்கைகள் பெயர் போட்டிருந்த கவர்களை அவரவரிடம் கொடுத்தாள். தன் பெயர் எழுதப்பட்ட கவரையும் எடுத்துக் கொண்டாள். தலா ரூ.20,000 ஒவ்வொரு கவரிலும் காணப்பட்டது.

கடைசியாக இருந்த கவர் பெரிதாக, கனமாக இருந்தது. “இந்தாங்க அண்ணே!” என்று அதை ராகவனிடம் நீட்டினாள் கலா. கவரில் இருந்த பெயரைப் பார்த்துத் திடுக்கிட்டார் ராகவன். எழுதப் பட்டிருந்த தொகையும் அவரை அதிர வைத்தது.

கவருக்குள் கையை விட்டு அதிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்துப் பிரித்தார்.

பென்சில் ஒன்றால் தாளில், கடிதம் போல எழுதியிருந்தார் ராகவனின் தாய். “நாங்க அடிக்கடி சண்டை போட்டுகிட்டாலும், எதிரும் புதிருமாக இருந்தாலும் என் பையனைக் காதலிச்சு, தன் வீட்டாரை உதறிட்டு வந்த ராஜம் என்னை “அம்மா”ன்னுதான் கூப்பிடுவா. ஆக, அவளும் எனக்கு மகள்தான். (மருமகள்). அவளோட இருதய ஆப்பரேஷன் செலவுக்காக இந்த மூணு லட்ச ரூபாயை என் மகன் வெச்சுக்கணும். என் மகனுக்கு நான் பணம் எதுவும் வைக்கலை. அவன் தான் காலம் பூராவும் கடமை தவறாம எனக்குப் பணம் அனுப்பிகிட்டிருந்தான். அவனுக்கு நான் பணம் கொடுக்கறதும் பிடிக்காது. ஏனோ என் புருஷன் போனப்புறம் எனக்கு இனிமே யார் இருக்கா என்கிற கவலையில் கொஞ்சம் புத்தி கெட்டுப் போச்சி… என்னை எல்லோரும் நல்லா பாத்துகிட்டீங்க. நல்லா வெச்சிருந்தீங்க… நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். இருப்பீங்க!” – இப்படிக்கு, அன்னம்.

அம்மா மீது கொண்டிருந்த கோபத்திலோ, மனைவிக்கு உடல்நலமில்லை என்ற வருத்தத்திலோ அம்மா இறந்த துக்கத்தில் அழாமல் இருந்த ராகவன், அந்தக் கடிதத்தைப் படித்த கணத்தில் உடைந்தார். சுய பரிதாபத்தால் பிறரிடம் கோபமும் எரிச்சலும் கொண்டாலும், அம்மா தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்தி விட்டாள். ராகவன் “மடார், மடா”ரென்று முகத்தில் அடித்துக் கொண்டார்.

“ஒன்னைக் கூடவே வெச்சுப் பாத்துக்க முடியாத பாவியாகிட்டேனே அம்மா… ஒன்னைக் கடைசிவரை புரிஞ்சுக்காமலேயே இருந்துட்டேனே… அம்மா!” என்று அவர் கதறி அழுதார்.

– ‘குமுதம்’ வார இதழ் 29-8-2018. முத்திரைக் கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *