ஒருநாள் இரவு யாரும் எதிர்பாராத வேளையில் அவளுடைய அப்பா திடீரென இறந்துபோனார்.சடங்குகள் செய்து.தர்ப்பணம் கொடுத்து எல்லாம் முடிந்துவிட்டது.ஆனாலும் அவளுடைய அப்பா இன்னமும் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு இருப்பதாகவும்.எல்லாரும் வீட்டில் பத்திரமாக இருக்கும்போது அப்பா மட்டும் பாதுகாப்பின்றி தனியாக இருப்பதாகவும் அதீத கற்பனை அவளுக்குள்.கனத்த மழை பெய்யும் வேளைகளில் வெளியே இருக்கும் அப்பா மழையில் நனைந்து அல்லல்படுவதாக கற்பனையில் மருகுவதை இன்னும் நிறுத்தியபாடில்லை அவள்.சில வேளைகளில் அவளுடைய கற்பனை கருவுற்று கண்ணீரைப் பிரசவிப்பதும் உண்டு.
அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பாவைதானே அதிகமாய் பார்த்துக்கொண்டிருந்தாள்?அப்பாவுக்கும் அவளுக்குமிடையே இருந்த பந்தம் சட்டென்று மறந்துவிடக் கூடியதா என்ன?மிக அருகில் அவள் பார்த்த முதல் மரணம் அப்பாவினுடையதுதானே?மயக்கமாய் இருப்பதாய் நாற்காலியில் அமர்ந்த அப்பா தான் குடிப்பதற்குக் கொடுத்த ஒரு கரண்டி தண்ணீரில் உயிரை விட்டுவிடுவார் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லையே?மருத்துவமனையில் “வா.அப்பாவைப் பார்க்கலாம்,” என அண்ணன் அவளை அழைத்தபோதுகூட மெத்தையில் எழுந்து உட்கார்ந்திருக்கும் அப்பாவின் பிம்பத்தைக் கற்பனை செய்தவாறுதானே அந்த அறைக்குள் நுழைந்தாள்.அங்கே இரண்டு கைகளும் சட்டையோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த நிலையில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்தபோதுகூட அவள் மனம் ஏனோ அவர் இறந்துவிடவில்லை.மருத்துவர் ஏதோ தவறhக சொல்லியிருப்பார் என்றுதானே நினைக்கத் தோன்றியது.ஓடிப்போய் அவருடைய கைக்கட்டை அவிழ்த்துவிட்டு அவர் உடலில் சட்டையை அணிவிக்கவேண்டும் என்றுதானே நினைத்தாள்?
அண்ணன் வெளியே மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் அந்த அறைக்குள் படுத்திருந்த அப்பாவின் நெஞ்சுப் பகுதியைதானே பார்த்துக்கொண்டிருந்தாள்?தான் ஆசையாய் சாய்ந்து கொள்ளும் அப்பாவின் நெஞ்சு துடிக்க ஆரம்பித்தால் உடனே மருத்துவரை அழைக்கவேண்டும் என்பதற்காகதானே ஊழியர் வந்து சொல்லும்வரை அவள் அந்த அறையைவிட்டு வெளியே வரவேயில்லை.அந்த மலாய்க்கார ஊழியர் அவளிடம், “உன் அப்பாவை இன்னும் கொஞ்சநேரத்தில் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்.அப்போது அப்பாவைப் பார்க்கலாம்,”என்று கனிவாக சொல்லி அனுப்பியபோதுகூட அப்பா இறந்துவிட்டார் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை.அந்த எண்ணம் வரவில்லை என்பதைவிட அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை எனலாம்.
சில சமயம் அப்பா இறந்ததுபோன்று கனவு கண்டு பதைத்து எழுவாள்.உடனே அது வெறும் கனவுதான் என்று மூளைக்குள் ஏதோ ஒரு பட்சி கூவுகையில் மனத்தில் ஒரு நிம்மதி பரவும்.அந்த நிம்மதி இப்போது அவளுக்கு வரவில்லை.ஏனோ மனம் மரத்துப் போன உணர்வு.அதனால்தான் ஹாலில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவைப் பார்த்தபோது அவளுள் எந்தச் சலனமும் எழவில்லை.அப்பாவுக்கு எல்லா பிள்ளைகளைவிடவும் அவள்மீதுதான் அதிக பாசம்.அவளுக்கும்தான்.அதனால் அவள்தான் எல்லாரையும்விட அதிகமாய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணப்போகிறாள் என எல்லாரும் கலக்கமாய் பார்க்க அவளோ வாய்திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை;அமைதியாய் அப்பாவைப் பார்த்தாள்.
பாயிலும்.மெத்தையிலும் மட்டுமே படுத்து அவள் பார்த்திருந்த அப்பா.புது வேட்டி சட்டை அணிந்து தலைப்பாகை கட்டிக்கொண்டு நெற்றியில் நாமத்தோடு பெட்டிக்குள் படுத்திருந்தபோது அவளுடைய கண்களுக்கு எங்கோ ஒரு சிவன் கோயிலில் பார்த்த ஐயா சாமிதான் நினைவுக்கு வந்தது.ஏனோ அப்போதுகூட அவள் அழவில்லை,.அப்பாவிடம் கோபம் வந்தால் முறைத்துக்கொள்ளவும்.அவர் மனதைக் குளிர்விக்கவும் கண்ணாடியில் பலமுறை ஒத்திகை பார்த்திருக்கிறாள்.ஆனால் அப்பா இறந்தால் எப்படி அழவேண்டுமென்று மட்டும் அவள் எப்போதுமே ஒத்திகை செய்து பார்த்ததில்லை.அதனால்தான் அப்பா இறந்தபோது அவளுக்கு எப்படி அழுவதென்று கூட தெரியவில்லை.
அப்பாவைக் குளிப்பாட்டும்போது கைதவறி கீழே போட்டுவிட்டார்கள்.அப்போதுகூட அப்பாவுக்கு வலிக்குமே என கலங்கிதான் போனாள்.ஆனாலும் இலேசாக துளிர்விட்ட அழுகையை உடனே மென்று விழுங்கிவிட்டு.உணர்ச்சிகளற்ற இறுகிய முகத்தோடு அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.சிறுவயதில் அவள் படித்த ஒரு கதையில் ஓர் இளவரசனின் உயிர் ஒரு கிளிக்கூட்டில் இருந்ததாம்.அது மாதிரி அவளுடைய உணர்ச்சிகள் யாவும் அப்;பாவின் நெஞ்சுக்கூட்டில்தான் இருந்தன.அழுகை,துக்கம்,சிரிப்பு,சோகம்,வெறுப்பு யாவுமே அப்பாவிடம்தான் முதலில் வெடித்து கிளம்பும்.அதனால்தான் ஊரே அவளை மிக அமைதியானவள் என்று போற்றுகையில் அப்பாவுக்கு மட்டுமே கோபக்காரி.அப்பாவிற்கு மாரடைப்பு வந்தபோது அப்பாவை முந்திகொண்டு அவளுடைய உணர்ச்சிகள்தானே முதலில் இறந்துபோயின.
அவள் அழவில்லையே தவிர உள்ளுக்குள் நொறுங்கிப் போய்விட்டிருந்தாள்.அப்பாவின் மரணம் அவளை அதிகமாகவே பாதித்துவிட்டிருந்தது.இன்னும் எவ்வளவு நேரம் பார்க்க முடியும் என்ற ஆதங்கத்தில் அப்பாவைவிட்டு நகரவேயில்லை அவள்.அருகிலேயே இருக்கும் கழிவறைக்குப் போவதற்கு கூட துணை தேடுபவள் அப்பாவின் சாம்பலை அள்ளியதை,எலும்புகளைப் பொறுக்கியதை, பிண்டம் செய்து அபிnழூகம் செய்ததை,பால் ஊற்றியதை எல்லாவற்றையும் சுடுகாட்டில் ஒரு விறகுக்கட்டையின் மீது அமர்ந்து கொண்டு பார்த்தாள்.அப்பா கடைசிவரை எங்குதான் போகிறார் என பார்த்துவிடும் எண்ணம் அவள் மனத்தில் வெறித்தனமாய் வேருன்றியிருந்தது.
என்னதான் மிக இயல்பாக இருப்பதாய்க் காட்டிக்கொண்டாலும் சுடுகாட்டிற்குச் சென்று அப்பாவின் கடைசி பயணத்தைப் பார்த்தது அவளை மனதளவில் பாதித்திருக்கலாம்.பல நாள் கனவில் அப்பாவை எரிப்பது போன்று கனவு கண்டு பதைத்துப் போய் எழுந்திருக்கிறாள்.எழுந்தவுடனேயே அப்பாவின் ஞாபகம் அவளைத் தொற்றிக்கொள்ளும்;அழுதுவிடுவாள்.அதற்கும் காரணம் இருந்தது.
சராசரி பெண்ணல்ல அவள்.பகல்பொழுதுகளில் உறங்கி,நள்ளிரவுகளில் பூச்சிகளின் ரீங்காரத்தில் உலகத்தை இரசித்து இலயிக்கும் வெளவால் அவள்.அப்படி ஒரு மாலைவேளையில் உறங்கியபோதுதான் ஏதோ ஒரு அதிபயங்கர கனவு கண்டு பதைத்துப் போய் எழுந்தாள்.சுற்றிலும் இருட்டைக் கண்டு அவள் மனம் எதையோ எண்ணி துணுக்குற்ற வேளையில் தீர்க்கத்தரிசியாய் அறைக்குள் நுழைந்த அப்பா சட்டென விளக்கை எரியவிட்டு வாஞ்சையோடு அவள் தலையைக் கோதிவிட்டபோது அப்பாவை மீறி தன்னை எதுவும் பயப்படுத்திவிடாது என்ற நம்பிக்கை அவளுள் ஆழ பதிந்தது.அப்பாவும் அன்று முதல் அவள் உறங்கி எழும் மாலை வேளையில் அவளுடைய அறையில் விளக்கை எரியவிட்டு,அறைக்கதவைத் திறந்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஆனால் இப்போதெல்லாம் அவளுக்கு மாலைப்பொழுதுகளில் அவ்வாறு உறங்குவதற்குப் பயமாக இருக்கிறது.சட்டென்று கண்விழித்துப் பார்க்கும்போது அறைக்குள் இருக்கும் இருட்டும் தனிமையும் தன் அப்பா இவ்வுலகத்தில் இல்லை என்பதை அவளுக்குப் பறைசாற்றிக்கொண்டே இருக்கிறது.வேதனையளிக்கும் உண்மை!
இனி அப்பா என்றுமே அவள் அறைக்குள் நுழைந்து விளக்கை எரியவிடப்போவதில்லை.இனி அப்பா என்றுமே அவளுடைய கையைப் பற்றி நடக்கப்போவதில்லை.இனி அப்பா என்றுமே அவள் தலையை வருடிக்கொடுத்து சோறு ஊட்டிவிடப் போவதில்லை.அப்பாவை இனி எங்குமே பார்க்கமுடியாது!எத்துணை ரணமான நியதி?அப்பாவின் மூன்றாவது நாள் சடங்குகள் முடிந்து தாப்பா பட்டணத்தைவிட்டு கிளம்பும்போது எதிர்பட்ட ஒரு பழைய நண்பருக்காக அந்தச் சாலையில் இறங்கியபோது இதயத்தில் சுருக்கென்று ஒரு வலி.
அப்பாவின் கைப்பிடித்து ஆசையாய் சுற்றிய பேருந்து நிலையம்,நாசி லெமாக் கடை,சிடி கடை யாவுமே அப்பா இல்லாமல் வெறிச்சோடி சூன்யமாய்த் தெரிந்தன.அப்பாவுடன் அந்தச் சாலையில் அவள் நடக்காத இடமே இல்லை.கல்லு}ரி விடுப்புகளில் வந்து போகும் அவளுடைய துணிப்பையைத் தூக்கிச்செல்வதற்காக ஒவ்வொருமுறையும் அந்தப் பேருந்து நிலையத்தில் அவளுடைய அப்பா அலுக்காமல் காத்திருந்த சுவடுகள்,ஆசிரியை ஆகிவிட்ட பிறகும்கூட சிறுபிள்ளை போன்று தன் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டு அவள் பயணித்த அந்தப் பேருந்துகள் யாவுமே அப்படியேதான் இருந்தன.ஆனால் அப்பா மட்டுமே இல்லை.சுகமான தருணங்கள் யாவும் மறைந்து வெறும் வலிகள் மட்டுமே அந்தச் சாலையெங்கிலும் வியாபித்திருந்தன.
அப்பாவை நினைக்காமல் இருப்பதென்பது அவளுக்கு அவ்வளவு இலகுவானதாக இல்லைதான்.அப்பா இறக்கும்வரை அவளைப் பற்றியேதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.அம்மா சொன்னாள் .அப்பா இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அம்மாவிடம் அவளைப் பற்றியேதான் பேசிக்கொண்டிருந்தாராம்.அவள் சமீபகாலமாய் எதையோ பறிகொடுத்தவள் மாதிரி சோகத்தில் திளைத்திருப்பதை எண்ணி வருந்தியிருக்கிறார்.ஒருவேளை அவளைப் பற்றிய அதிக கவலையினால்தான் அப்பாவுக்குத் திடீர் மாரடைப்பு வந்திருக்கக்கூடும் என அம்மா அழுதுக்கொண்டே சொன்னாள்.
இறக்கும்வரை தன்னையே நினைத்த அப்பாவின் மரணத்தை எப்படிதான் அவளால் ஏற்றுக்கொள்ள இயலும்?
அவளுடைய பேஸ்புக் இணையத்தள நண்பன் ஒருவன் இறந்து போன தன் அம்மாவைத் தேவதையாக வர்ணித்து அதி அற்புதமான கவிதை ஒன்றை வடித்திருந்தான்.தேவதைகளுக்கும் பூமியில் வாழ்வதற்கு கால எல்லை விதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தான்.எத்துணை உண்மை?அவள் அப்பாவும் தேவதைதான்.அந்தத் தேவதைக்கும் பூமியில் வாழ்வதற்காக காலம் போதுமானதாக இல்லைதான்.சத்தியவான் சாவித்திரி போன்ற புராணக் கதைகளில் வருவதுபோன்று அவள் அப்பாவையும் யாராவது உயிர்ப்பித்துக்கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?
அவளுக்கு இறைவன் தன் அப்பாவின் மரணத்தில் அவசரப்பட்டுவிட்டான் என்றேதான் நினைக்கத் தோன்றுகிறது.பூஜையறையில் அவள் கும்பிடும் முருகன் சாமி கூட தன் அப்பாவுடன்தானே இருந்தது,இறைவனுக்கே அப்பா தேவைப்படுகிறார் எனும்போது சாதாரண மனுஷியான அவளுக்கும் அப்பா தேவைதானே?யாராவது அவளிடம் கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினால்கூட உடனே அப்பாவின் ஞாபகம் வந்து அவளை அழவைத்துவிடுகிறதே?ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு சிலரிடமிருந்து அவளைப் பாதுகாக்க அவளுக்கு அப்பா எனும் கவசம் தேவைப்படுகிறதே?
எல்லா ஆண்களும் அவளுடைய அப்பாவைப் போன்றே பிற பெண்களையும் தன் மகள் போன்று நடத்தும் சிந்தனை உடையவர்களாக இருந்துவிடுவார்களா என்ன?அதையெல்லாம் உணரவில்லையே என முருகன் சாமியின்மீது கோபம் வந்தது.அப்பா இறந்தபிறகு சாமியுடன் சண்டை போட்டு.சாமி கும்பிடுவதையே நிறுத்திவிட்ட அவள் எப்போதாவது செல்லும் ஒரே கோயில் தலைப்பாகை கட்டிக்கொண்டு நெற்றியில் நாமத்தோடு ஐயா சாமி குடியிருக்கும் பூச்சோங் பிரிமா சிவன் கோயில் மட்டுமே.கோயிலுக்குச் சற்று தள்ளி வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு சுருட்டோடு இருக்கும் ஐயாசாமியைப் பார்த்தால் தன் அப்பாவே வந்து உட்கார்ந்திருப்பதைப் போன்று தோன்றும்.கண்களில் கண்ணீர் வழிந்தோடும்.ஐயாசாமியைப் பார்த்து ஆசை தீர அப்பா அப்பா என அரற்றிக் கொண்டேயிருப்பாள்.
அவளுடைய அப்பா அவளுக்கு நிறைய கதைகளைக் கூறியிருக்கிறார்.தோட்டப்புறங்களில் வாழ்ந்த நல்லெண்ணம் கொண்ட மாமனிதர்கள்தான் அம்மண்ணைப் பாதுகாக்கும் காவல் தெய்வமாக உருவெடுப்பார்கள் என அப்பா சொல்லி கேட்டிருக்கிறாள்.அப்படியென்றால் கடைசி வரை தான் வாழ்ந்த தோட்டத்து மண்ணை நேசித்த அப்பாவும் ஐயாசாமியாகதானே மாறியிருப்பார்?ஐயாசாமி போன்று அவள் அப்பாவும் வேட்டியைதான் விரும்பி அணிவார்.ஐயாசாமி போன்று அவள் அப்பாவுக்கும் சுருட்டு பிடிக்கும் பழக்கம் இருந்தது.அப்பாவின் மீது கொண்டிருந்த அதீத அன்பினால் ஒருமுறை அவருடைய சுருட்டு சாம்பலைக் கூட ஒரு பொட்டலத்தில் மடித்து சேமித்து வைத்திருந்தாள்.ஆனால் அவள் அப்பாவை எரித்த சாம்பலின் மிச்சம் கூட இன்று அவளிடம் இல்லை.
அப்பாவின் சில பொருட்கள் அவளிடம்தான் இருக்கின்றன.அதை யாரிடமும் கொடுக்க மறுதலிக்கிறது மனம்.அப்பா கடைசியாய் உயிரைவிட்ட நாற்காலியைகூட தன்னைத் தவிர யாரும் தொடவே கூடாதென்ற பிடிவாதத்தை மாற்றிக்கொள்ளவே விரும்பவில்லை அவள்.அப்பா இறந்துவிட்ட பிறகு அவளே எழுதிக்கொண்ட உயிலின்படி அப்பாவின் மூக்குக் கண்ணாடி,துணிமணிகள்,காலணி,கைக்கடிகாரம் போன்ற சில பொருட்களை பொக்கிஷமாய் சேமித்து வைத்திருக்கிறாள்.அவளுடைய புத்தக அலமாரியில் சிறைவைக்கப்பட்டிருந்த அப்பாவின் கைக்கடிகாரம் கூட சில நாட்களுக்கு முன்னர்தான் தன் கடைசி துடிப்பை நிறுத்தியது.அப்பா மட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரமாய்…????
அப்பாவின் எந்தப் பொருளையும் யாரிடமும் கொடுக்கப் போவதில்லை அவள்.அப்பாவின் உடைகளை யாரிடமாவது கொடுத்து அணிந்து கொள்ள சொல்லலாம்தான்.ஆனால் அப்பாவின் ஆத்மாவை யார் அணிந்து கொள்ள முடியும்?எவ்வளவு உன்னதமான ஆத்மா அது?யாரையும் காயப்படுத்தாமல் தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்ளாமல் எல்லாருக்கும் கொடுத்து கொடுத்தே பழகிப் போன அன்பான ஜீவன்.அப்பாவுக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு ஒன்றுதான்.அந்த ரப்பர் காடுதான் அப்பாவின் உலகமாக இருந்தது,கங்காணி பதவி கிடைத்தபோதுகூட வெறுமனே வேலை வாங்கி கொண்டு வாளாவிருக்கவில்லை அவர்.வேலையில் அவர் ஓய்வெடுத்து அவள் பார்த்ததேயில்லை.அதற்காகவே மழைக்காலங்கள் அவளுக்குப் பிடித்தவையாக இருந்தன.அப்போதுதானே அப்பா வீட்டிலிருப்பார்?
அப்பாவின் உடமைகளோடு அவரைப் பற்றிய கற்பனைகளும்,கனவுகளும் மட்டுமே அவளிடம் மிச்சமிருக்கின்றன,அப்பா இறந்தபிறகு வரும் அவளுடைய ஆரம்ப கால கனவுகளில் உயிரோடு இருக்கும் அப்பாவைக் காப்பாற்ற எங்காவது ஓடிக்கொண்டே இருப்பாள்,மெகாசீரியல் மாதிரி ஒவ்வொரு நாளும் கனவில் கொஞ்சங் கொஞ்சமாய் இறந்து கொண்டிருந்த அப்பா அதன்பிறகு ஒருநாள் கனவிலும் முழுமையாக இறந்துவிட்டார்,அதன்பிறகு வரும் கனவுகளில் எல்லாம் அப்பா வேலை செய்த ரப்பர் மரங்களுக்கிடையேயும்,அவர் நடமாடிய இடங்களிலும் அப்பாவைத் தேடி ஓடிக்கொண்டேதான் இருக்கிறாள்.ரொம்ப தூரம் தேடி ஓடினால் அவர் இருக்குமிடத்தை நிச்சயம் ஒருநாள் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை வெகு ஆழமாய் பதிந்துவிட்டதால் கனவில் தன் ஓட்டத்தையும் தேடலையும் அதிகப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறாள்.என்றேனும் ஒருநாள் அவள் தன் அப்பாவைச் சந்திக்கக்கூடும்.அப்பாவிடம் இழந்த அன்பையெல்லாம் மீண்டும் அவள் பெறக்கூடும்.அவருடைய அரவணைப்பில் மீண்டும் ஓர் அழகான வாழ்க்கையைப் அவள் வாழக்கூடும்.அதுவரையில் அவளுடைய கண்ணீரிலும் கற்பனையிலும் அப்பாவைப் பற்றிய புதுப்புது கதைகள் பிரசவமாகிக்கொண்டேதான் இருக்கும்.
– 2010 ஆம் ஆண்டு மலேசியாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்வான கதை