கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 29, 2012
பார்வையிட்டோர்: 19,631 
 
 

இரவு பத்து மணியிருக்கும். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே கதவை திறந்த பார்வதிக்கு, அஞ்சலை அந்த நேரத்தில் வந்தது ஆச்சரியமாக இருந்தது. வீட்டு வேலைகளை முடித்து மதியவாக்கில் போனால் அடுத்தநாள் காலைதான் வருவாள். அஞ்சலையின் முகத்தில் பதட்டம் தெளிவாக தெரிந்தது.

”என்ன அஞ்சலை இந்த நேரத்தில”…

”காமாட்சி இங்க வந்தாளாம்மா”…

”இல்லையே, எதுக்கு காமாட்சியை தேடுற”..

அஞ்சலையின் அடிவயிற்றிலிருந்து வந்த ஒரு கேவல் பெரும் அழுகையாக மாறியது.

”முதல்ல உள்ளே வா… அழாம விஷயத்தைச் சொல்லு” ….

“யெம்மோவ், காமாட்சி இன்னும் வூடு வந்து சேரலம்மா”..

”என்னாது, ஆறு மணிக்கே வந்திடுவான்னு சொல்லுவியே”…

“அதாம்மா எனக்கும் பயமா இருக்கு…அதான் உன்னாண்ட ஓடி வந்தேன்”…

“சரி, சரி ஒண்ணும் கலவரப்படாத.. அவ வேல செய்யற கார்மெண்ட்ஸ்க்குப் போய் பார்த்தியா”…

“போனேம்மா.. அவ கரீக்டா அஞ்சு மணிக்கே கிளம்பிட்டாளாம்”…

”அப்ப ஏன் இன்னும் வந்து சேரல… அவ சினேகிதிங்க வூட்டுக்கு போயிருப்பாளோ”….

“இல்லம்மா… பொழுது சாஞ்சப்பறம் யார் வூட்டுக்கும் போற பொண்ணில்லம்மா அவ”

“…. அப்ப எங்க போயிருப்பா…. நீ காலையில சண்டை கிண்டை ஏதாவது போட்டியா என்ன”…..

“அப்படி எதுவும் இல்லம்மா”….

கடந்த வருடம் தீவிரமான முதுகு வலியின் காரணமாக, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, தண்ணீர் பிடிப்பது, வெள்ளிக்கிழமைகளில் வீடு கழுவி தள்ளுவது போன்ற வேலைகளை செய்ய முடியாமல் பார்வதி திணறிய போது அஞ்சலைதான் அபயக்கரம் நீட்டினாள். கடைத்தெருவையொட்டியிருந்த குடிசைப்பகுதியைச் சேர்ந்தவள். மிகவும் நேர்மையானவள், தன்மானமிக்கவள். மீதமாகும் உணவை வாங்குவது, பழைய துணிகளை வாங்கிக்கொள்வதெல்லாம் அஞ்சலைக்குப் பிடிக்காது. ”மாசா மாசம் கரீக்டா பேசுன சம்பளத்தை கொடுத்துடு.. அதுபோதும்மா”. காபி போட்டு கொடுத்தால் மட்டும் குடிப்பாள். அவள் கணவன் முனுசாமி கட்டிடவேலைக்கு போகிறான். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். குரலெடுத்து பேசி யாரும் பார்த்ததில்லை. அவ்வளவு அமைதி. குடும்பத்தில் அஞ்சலையின் ஆட்சிதான். இரண்டு பெண்கள். மூத்தவள் காமாட்சி, படிப்பு ஏறவில்லை. கார்மெண்ட்ஸில் வேலை பார்க்கிறாள். இளையவள் பானு எட்டாவது வகுப்பு படிக்கிறாள்.

”அக்கம்பக்கம் விசாரிச்சியா, எப்படியும் வந்துடுவா.. கவலப்படாத”..

”சரிம்மா.. நான் வூட்டாண்ட போய் பார்க்கிறேன்” என்றபடி கலக்கத்தோடு செல்லும் அஞ்சலையைப் பார்த்தபடியே நின்ற பார்வதி அவளது மகள் ஹம்சாவைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப்போனாள். இப்படித்தான் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் ஹம்சாவும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பவில்லை.

வீட்டுக்குச் சென்ற அஞ்சலைக்கு மகள் இன்னும் வரவில்லை என்கிற செய்திதான் காத்திருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியக்காரியைப் போல புலம்பியபடி அங்கும் இங்குமாக அலைபாய்ந்து கொண்டிருந்தாள். இதற்குள் அவளது கணவன் முனுசாமியும் வந்து சேர்ந்தான். அவனை கட்டிப்பிடித்து அழுதபடி விஷயத்தைச் சொன்னாள். அவனுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. கடைசியாக நடுநிசி நேரத்தில் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து விட்டு வந்தார்கள். விடியும்வரை அஞ்சலை தெரிந்த, தெரியாத கடவுள்களை வேண்டியபடியே இருந்தாள்.காமாட்சி கிடைத்துவிட்டால் குடும்பத்தோடு திருப்பதிக்கு வருவதாக வேண்டிக்கொண்டாள்.

காலையில் நேரம் கடந்து சோர்வோடு உள்ளே நுழைந்த அஞ்சலையின் தோற்றத்திலிருந்தே இன்னும் காமாட்சி வீடு திரும்பவில்லை என்பதை பார்வதி புரிந்துகொண்டாள்.

”ஒண்ணும் தெரியலம்மா.. கண்ணக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு”… ”ஏதாவது காதல்கீதல்னு”….

”போலீஸ்காரங்களும் இதைத்தாம்மா துருவித் துருவிக் கேட்டாங்க…. எனக்கு தெரிந்து அப்படிபட்ட பொண்ணில்லம்மா…என்கிட்ட எதையும் மறைச்சதில்ல.. என்னான்னு தெரியல……மொத்தத்தில என் குடும்பத்துக்கு போதாத காலம் ஆரம்பிச்சிடிச்சின்னு நினைக்கறம்மா”…

“சேசே..அப்படியெல்லாம் பேசாத.. நீ வேணும்னா பாரு சாயந்திரத்துக்குள்ள வந்துடுவா..மனச வுட்டுடாத”…

“அய்யோ… என் செல்ல மகள.. எப்படியெல்லாம் பாடுபட்டு கண்ணுல வச்சு காப்பாத்தி இப்படி பறிகொடுத்துட்டனே…. எங்கே என்னாமாதிரி கஷ்டப்படறாளோ.. ஒரு தெய்வமாவது கண்ணத் தொறந்து காப்பாத்தாதா…அய்யோ என்மவளே காமாட்சி…எங்கிருந்தாலும் உடனே வந்துடம்மா…என்ன பெத்த ஆத்தா”..

அஞ்சலையின் ஒப்பாரி பார்வதியை கலங்கடித்துக் கொண்டிருந்தது… இன்னும் கொஞ்ச நேரம் போனால் பார்வதியும் அழ ஆரம்பித்து விடுவாள் போலிருந்தது. அழுதபடியே அழுக்குத் துணிகளை வாரி எடுக்க முனைந்த அஞ்சலையை தடுத்த பார்வதி…”இன்னைக்கு நானே பார்த்துக்கறேன்.. எலுமிச்சம்சாதம் இருக்கு, ராத்திரியெல்லாம் அழுதபடிதான் இருந்திருப்ப..வவுத்துல ஈரம் இருந்தாத்தானே அலையமுடியும். சொல்றத கேளு” என்று அஞ்சலையை வற்புறுத்தி கொஞ்சம் சாப்பிட வைத்தாள். கையைக் கழுவிய கையோடு, ஏதாவது தகவல் வந்திருக்காதா என்ற நப்பாசையுடன் அஞ்சலை வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள்.

பார்வதியின் மகள் ஹம்சா இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பார்வதியின் குடும்பமே இடிந்து போயிருந்தது. காவல் நிலையத்திற்கு போகவும் பயமாக இருந்தது. ஊர் என்ன சொல்லுமோ என்ற அச்சத்தில், யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு தெரிந்தவர்களிடம் நைச்சியமாக விசாரித்துப் பார்த்தார்கள். எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஹம்சாவின் செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது.

காவல் நிலையத்திற்கும், வீட்டிற்குமாக அலைந்துகொண்டிருந்த அஞ்சலை, பார்வதி தன்னை தேடி வருவாள் என எதிர்பார்க்கவே இல்லை. ”என்னங்கம்மா…இந்த பக்கம்”… என்ற அஞ்சலையை தனியே கூப்பிட்டு சென்ற பார்வதி, ”அஞ்சலை.. ஜங்ஷன் பக்கம் காமாட்சி, ஒரு பொம்பிளையோட நின்னுகிட்டு இருந்ததை என் புருஷன் பார்த்தாராம். சாலைக்கு எதிர்பக்கத்தில் நின்றிருந்தவரு காமாட்சி காமாட்சின்னு கூப்பிட்டாராம். இவரப்பார்த்த அந்த பொம்பிள காமாட்சியை தரதரன்னு இழுத்துகிட்டுப் போகப் பார்த்தாளாம், காமாட்சி நகர மறுக்கவே இவருக்கு சந்தேகம் வந்து காமாட்சியை நோக்கி ஓடியிருக்காரு. அந்த பொம்பிள சடாருன்னு காமாட்சியை அங்கேயே உட்டுட்டு ஆட்டோவில ஏறிப் போயிடிச்சாம்”…

”என்னம்மா சொல்றீங்க…என் மக இப்போ எங்கம்மா”…

”பதட்டப்படாத… என் புருஷன் அவளை பத்திரமா வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துட்டாரு”…

”அப்படின்னா, இப்ப உங்ககூட காமாட்சியை ஏம்மா கூட்டிக்கினு வரல”…

”அஞ்சல, அவள் இப்ப நடக்கிற நிலையிலஇல்ல”…

“அய்யோ..என்னங்கம்மாசொல்றீங்க”.

“அடடா…அவசரப்படாத அஞ்சல.. அவ லேசான மயக்கத்தில இருக்கறா..உன்ன கூட்டிகிட்டுப் போகத்தான் வந்தேன். உன் புருஷனையும் கூட்டிக்கிட்டு வா. நாம பக்கத்தில இருக்கற டாக்டரு கிட்ட போகலாம். மத்ததை அப்புறமா பேசிக்கலாம்.. சீக்கிரமா கிளம்பு”…

மருத்துவர் சொன்ன விஷயம் எல்லோரையும் திடுக்கிடவைத்தது. காமாட்சி மிருகத்தனமான வல்லுறவுக்கு பலியாகியிருக்கிறாள். கிழிந்த கந்தைத் துணி போல சுருண்டு படுத்திருந்த மகளைக் கண்டு மார்புவெடிக்க கதறிய அஞ்சலையை எப்படி தேற்றுவது என்றே பார்வதிக்கு தெரியவில்லை. முனுசாமி இடிந்து போய் ஒரு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்துவிட்டான். அடுத்து என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. சிகிட்சைக்குப் பிறகு காமாட்சியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பார்வதியும் கூடவே சென்றாள். காமாட்சி இப்போது ஓரளவு தெளிந்திருந்தாள்.

வீட்டிற்கு வந்தவுடன் தனது தாயை கட்டிப்பிடித்து ஓவென்று அழத்தொடங்கிய காமாட்சியை தேற்றி என்ன நடந்தது என்று அஞ்சலை கேட்டாள். மாலையில் வழக்கம் போல வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது அவளுடன் பணியாற்றும் கோமதி காமாட்சியை தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறாள். இவள் மறுத்தபோதும், போகிற வழியில்தான் தனது வீடு ஒரு எட்டு வந்து தேனீர் மட்டுமாவது குடித்து விட்டு போகவேண்டுமென்று கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றிருக்கிறாள். காமாட்சியை தனது வீட்டுக்குள் அழைத்து கூடத்தில் ஒரு நாற்காலியில் உட்கார வைத்த கோமதி, பால் வாங்கி வர மறந்து விட்டதாக கூறிச் சென்றவள், வாசல் கதவை வெளியே பூட்டிக் கொண்டாள். ”அக்கா, அக்கா” என்று குரல் கொடுத்தும் கோமதி கதவை திறக்கவில்லை. இதற்குள் உள்ளறையிலிருந்து ஒரு தடித்த ஆண் வந்து காமாட்சியை கட்டிப்பிடித்திருக்கிறான். அலறித்துடித்த காமாட்சி எவ்வளவோ கெஞ்சியும், மன்றாடியும் பார்த்திருக்கிறாள்.ஆனால் அந்த மிருகம் காமாட்சியின் கெஞ்சலுக்கு செவிசாய்க்காமல், ஓங்கி அறைந்திருக்கின்றான். அந்த காட்டுத்தனமான அறையால் சுயநினைவை இழந்துவிட்டாள். நினைவு திரும்பியபோது, கோமதி அங்கிருப்பதை பார்த்திருக்கிறாள். கத்துவதற்கு வாயை திறக்கையில், அவளுக்கு நறுக்கென்று ஊசி ஏற்றியிருக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்று காமாட்சிக்கு தெளிவாக தெரியவில்லை. ஆனால் அடுத்த நாள் காலை தன்னை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றது மட்டும்தான் தெரிகிறது, அதையும் தெளிவாக சொல்ல முடியவில்லை. கதறி அழுதபடி தலையை சுவற்றில் முட்டிக்கொள்ளப் பாய்ந்த காமாட்சியை பார்வதி பாய்ந்து சென்று தடுத்து அணைத்துக்கொண்டாள்.

ஹம்சா ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்ற குழப்பத்திலும், பயத்திலும் பார்வதியும் அவளது கணவனும் வாசல் கதவைப் பார்ப்பதும், இஷ்ட தெய்வங்களை வேண்டுவதுமாக இருந்தார்கள். அதிகாலை நான்கு மணியிருக்கும் பார்வதியின் செல்போன் சிணுங்கியது. அந்த நேரத்தில் கைப்பேசியின் சிணுங்கல் ஒலி வீட்டையே அதிரவைத்தது. ஓடிப்போய் எடுத்துப் பார்த்தால் அது ஹம்சாவின் எண். பார்வதி பதட்டத்துடன், ”ஹம்சா எங்கம்மா இருக்கே, ஏம்மா இன்னும் வரல்ல” என்று பேசிக்கொண்டே சென்றவளை ஒரு ஆண் குரல் தடுத்து நிறுத்தி, ”தோ பாரும்மா, இந்த பொண்ணோட அம்மாவா நீ, உடனே ஜங்ஷன் பக்கத்தில இருக்கற பார்க்குக்கு வந்து உன் பொண்ண இட்டுக்கினு போ” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டது.

பார்வதியின் கால்கள் கீரைத்தண்டுபோல துவண்டுவிட்டது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்ட்து. எப்படியோ கணவனுக்கு விஷயத்தை சொல்லி பைக்கில் இருவரும் வேகமாக சென்று பார்த்தால் பூங்காவின் சிமெண்ட் பெஞ்சில் ஹம்சா படுத்திருந்தாள். மூக்கை பொத்திக்கொள்ளும் அளவுக்கு சாராய வாடை. பக்கத்தில் யாரும் இல்லை. எப்படியோ அவளை எழுப்பி நடுவில் அவளை உட்கார வைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். ஹம்சாவை படுக்க வைத்த தாய்க்கும் தகப்பனுக்கும் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது என்பது புரிந்துவிட்ட்து. சத்தம் போட்டு அழவும் தைரியமின்றி தலையில் அடித்துக் கொண்டு விம்மலாயினர்.அடுத்த நாள் காலையில் கண்விழித்த ஹம்சாவுக்கு தான் எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என புரியவில்லை. அதற்குள் உள்ளே வந்த பார்வதி பல்லைக் கடித்தபடி, ”காலேஜ்ஜிலிருந்து நேரா வீட்டுக்கு வராம எங்கடி பொறுக்கப் போயிருந்த…..உனக்கு பார்க்குல என்னடி வேலை…எத்தனை நாளா இந்த குடிப்பழக்கம்….. நம்ம குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்காம ஓயமாட்ட போலிருக்கே…எந்த தகவலும் தெரியாம நாங்க பட்ட அவஸ்தையைப் பற்றி உனக்கு தெரியுமா…யாரு கொடுத்த தைரியத்துல இப்படியெல்லாம் ஆடற..சொல்லுடி”…. ஹம்சாவோ திடீரென பாய்ந்து அம்மாவைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்து விட்டாள். இது இன்னும் பார்வதிக்கு திகிலை கூட்டியது…

முந்தின நாள் மாலை வகுப்பு முடிந்ததும், நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் ஹம்சா நைன் பாயிண்ட் எடுத்ததைக் கொண்டாட நண்பர்களுடன் திரைப்படத்திற்கு சென்றிருக்கிறாள். அப்படியே ஓட்டலுக்கும் போகவேண்டியதாயிற்று..இந்த ஜோரில் வீட்டிற்கு தகவல் கொடுக்க மறந்துவிட்டாள். பொழுதுபோனதே தெரியவில்லை. வீட்டிற்கு கிளம்பும்போது இரவு பதினொன்று. போக்குவரத்து அடங்கிவிட்டிருந்தது.. அச்சமயம் அந்த வழியே வந்த ஆட்டோ, இவள் பக்கத்தில் வந்து நிற்கவே, இவளும் சட்டென ஏறிவிட்டாள். ஏற்கெனவே அதில் இரண்டு ஆண்கள் இருந்தார்கள், அவர்கள் குடித்திருந்தார்கள். பார்வையும் சரியில்லை. உடனே ஆட்டோவை நிறுத்தச் சொல்லி குரல் கொடுத்தும், ஆட்டோ நிற்காமல் போகவே சத்தம் போட துவங்கினாள். உடனே அவளது வாயைப் பொத்தி திமிற முடியாமல் அமுக்கிப் பிடித்துக்கொண்ட அந்த இரண்டு ஆண்களும், இருட்டாக இருந்த ஒரு இடத்திற்கு தூக்கிச் சென்று அவளுக்கு மதுவை பலவந்தமாக ஊற்றியது மட்டும்தான் ஹம்சாவுக்கு தெரியும்.

தனது மகள் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, பார்வதியின் இதயம் வெடித்து விடுமோ என்கிற அளவுக்கு வேகமாக துடித்தது. ”அய்யோ, என் மகளுக்கா இந்த சோதனை வந்திருக்க வேண்டும்… எவ்வளவு கனவு கண்டோம், இப்ப அத்தனையும் நொறுங்கிப் போயிடிச்சே”… ”ஒழுங்கா நேரத்தில வீடு வந்து சேர்ந்திருந்தா இப்படி ஆகியிருக்குமா, அய்யோ, குடும்ப மானத்தை குழிதோண்டி புதைச்சிட்டியே, இது வெளியில தெரியறதுக்குள்ள, குடும்பமே தூக்கில தொங்கறதுதான் ஒரே வழி”….பார்வதியின் கணவனும் அவன் பங்குக்கு புலம்ப ஆரம்பித்தான். ஹம்சாவின் தம்பிக்கு என்ன நடக்கிறது என்பது புரியாத வயது. யோசிக்க..யோசிக்க..பார்வதிக்கு எதிர்காலமே இருண்டு போன மாதிரி தெரிய ஆரம்பித்தது. விஷத்தை குடித்து குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாமா என்றெல்லாம் பிதற்ற ஆரம்பித்துவிட்டாள்.

எல்லோரும் கூடத்தில் மூலைக்கொருவராக முடங்கிக் கிடந்தனர். இரவிலிருந்தே எதுவும் சமைக்கப் படவில்லை.மதியம் ஒரு மணியிருக்கும். ஹம்சா மெதுவாக எழுந்து சமையல் அறைக்கு சென்றாள். சிறிது நேரத்திற்கெல்லாம், ஹம்சாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிப்போய் பார்த்தால், சமையலறையில் ஹம்சா எரிந்துகொண்டிருந்தாள். குடும்பத்தினர் முன்னிலையில் ஹம்சா கரிந்து போனாள். அவளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோற்றுவிட்டன. கடைசியாக, பார்வதியை, ஹம்சா பார்த்த பார்வை, குடும்பமானத்தை காப்பாற்ற தன்னால் செய்ய முடிந்தது இவ்வளவுதான் என்று சொன்னதுபோல் இருந்தது. சமையல் செய்யும்போது தெரியாமல் தீப்பிடித்துக் கொண்டதாக ஹம்சாவின் தற்கொலை மூடி மறைக்கப்பட்டது. பார்வதிக்கு மகளின் தற்கொலை துயரத்தைத் தந்தாலும், ஆழ்மனதில் எங்கோ ஒரு மூலையில் ரகசியமாக ஒரு நிம்மதியையும் தந்தது. ஐந்து வருடங்களாக, ஆறியது போல போக்குக் காட்டிய மனப் புண் இப்போது தனது சிவந்த ரணத்தை வெளிக்காட்டி பார்வதியை கலவரப்படுத்தியது.

தன்னை விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறு அஞ்சலையிடம் காமாட்சி மன்றாடியபோது, அங்கிருந்த அனைவரும் கதறி அழுதுவிட்டனர். தனது மகளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலை சட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய், ”நீ ஏண்டி சாகணும், உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கின நாயிங்க தாண்டி சாகணுவ்ம்…எழுந்திரு..அந்த சிறுக்கிமவ வீட்டைக்காட்டு”.. என கிளம்பிய போது, பார்வதி பதறியபடி தடுத்தாள். நடந்தது நடந்து போயிடுச்சி.. யாருக்கும் தெரியாம இதை மறைக்கிறதுதான் நம்ம பொண்ணுக்கு நல்லது. ஏற்கெனவே போலீஸ் ஸ்டேஷனுக்கு அவசரப்பட்டுப் போய் புகார் கொடுத்திட்ட…அது போதாதுன்னு இப்ப இதை இன்னும் பெரிசாக்கற மாதிரி நீ வேற கிளம்பற….வேண்டாம் அஞ்சலை…இத்தோடு போகட்டும்..அது வாழ வேண்டிய பொண்ணு, அதோட வாழ்க்கையை நாமளும் சேர்ந்து கெடுத்துடக்கூடாது அஞ்சலை… நிதானமா யோசிச்சு பாரு.. நான் எதுக்கு சொல்றேன்னு புரியும்”…

”பார்வதியம்மா, என்னோட உசுரக் கொடுத்தாவது என் பொண்ணை மகராசி போல வாழவைப்பேன்.. ஆனா இதை இப்படியே விட்டுடக்கூடாது… இன்னைக்கு என் மக.. நாளைக்கு இன்னொரு பொண்ணு…என்னோட நிலமை இன்னொரு தாய்க்கு வந்துடக்கூடாது… வாடி என்கூட”… காமாட்சியை இழுத்துக்கொண்டு ஆவேசமாக வெளியே சென்றாள்.

அடுத்த நாள் சீக்கிரமாகவே வந்த அஞ்சலையிடம், ”ஏன் காமாட்சியை தனியா விட்டு வந்த.. கொஞ்ச நாளு அவள் கூடவே இருந்து தைரியம் சொல்லு”…

”அம்மா, என் பொண்ண கோழையா வளர்க்கலம்மா…அவளுக்கு அம்மா, நான் இருக்கும்போது, அவள் ஏம்மா பயப்படணும்”… அஞ்சலையின் வார்த்தைகள் குத்தீட்டிகளாக பார்வதியின் இதயத்தை குறிபார்த்து பாயலாயின. இதைத் தாங்கமுடியாத பார்வதி ”ராத்திரி என்ன நடந்தது” என கேட்டு தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். ”என்ன ஆச்சா… நா அங்க போன போது.. அந்தத் தேவிடியாமக வீடு பூட்டி இருந்தது… அக்கம் பக்கம் விசாரிச்சப்போ அவள் தொழிலே இதுதானாம்….அப்பாவி பொண்ணுங்கள ஏமாத்தி பாழாக்குறதுதான் அந்த தொடப்பகட்டயோட பார்ட்டைம் வேலையாம். அவளுக்காக நான் அங்கேயே காத்துகிட்டிருந்தேன்”…

“ராத்திரி பத்துமணிக்கு மேல அந்த சிறுக்கிமவ, பூனை மாதிரி பதுங்கி பதுங்கி வந்தா… இவதாம்மான்னு, என் மகள் அடையாளம் காட்டுன அடுத்த நொடியே, நான் அவ மேல பாஞ்சு மூஞ்சு முகரையையெல்லாம் பேத்துட்டேன்….சரியான அடி… பத்து பதனஞ்சு தையல் அவளோட முகத்தில போட்டிருக்காங்கன்னா பாரேன். இங்க பாரு, .என் கைகூட அந்த முண்டையை அடிச்ச அடியில வீங்கிப்போயிடிச்சு….ஆத்திரம் தீரும் வரை அவளை புடைச்சுட்டுத்தான், அந்தத் தெருநாயைப் தரதரன்னு இழுத்துக்கினுப் போயி போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சேன்…. அவ கூட யாருயாரெல்லாம் இருக்காங்கன்னு விசாரிச்சிகிட்டு இருக்காங்க”….

”என் மககிட்ட தெளிவா சொல்லிட்டம்மா… அசிங்கத்தில கால வைச்சிட்டம்னா என்ன செய்யறோம்…அதே மாதிரிதான் இதையும் கழுவிட்டு நம்ம பொழப்பை பார்க்கணும்..ஒரு சொட்டு கண்ணீர்கூட விடக்கூடாதுன்னு தீர்த்து சொல்லிட்டேன்…நீயே சொல்லு நியாயத்தை.. என்மக மேல ரவோண்டு தப்பாச்சாவது இருக்குதா..சொல்லு..நம்ம ரத்தத்துக்கு நாமளே தைரியம் கொடுக்கலன்னா, வேற யாரு துணைக்கு வருவாங்க… என் மகளுக்கு எப்பாடு பட்டாவது நல்ல வாழ்க்கையை உருவாக்கித் தந்துட்டுத்தாம்மா இந்த கட்டை சுடுகாட்டுக்கு போவும்……இது நான் கும்பிடற ஏழுமலையான் மேல சத்தியம்”..என்று வலதுகையை ஓங்கி தரையிலடித்தபடியே தலையை நிமிர்த்திய அஞ்சலையின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை தாழ்த்திகொண்ட பார்வதிக்கு, தனது மகள் ஹம்சாவை எரித்த தீயின் செந்நாக்கு நீண்டு ஒரு தீக்கொடியாய் தன்னை உக்கிரமாக பற்றிப் படர்வதை உணர்ந்தாள்..

1 thought on “அஞ்சலை

  1. நல்ல கதை.

    அஞ்சலை போன்ற பெண்கள்தான் மாடர்ன் கண்ணகிகள். கண்ணகி மதுரையை எரித்தது கணவனுக்காக அல்ல. அந்தக் கணவன் நீதி தவறி கொல்லப்பட்டான் என்பதற்காகத்தான். ஊர் சொல்லும் கற்பு உதவாக்கரை கற்பு. உண்மையான கற்பு உள்ளத்தால் நெறி தவறாமைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *