கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 19,142 
 

நான் பேசாமல் அவர் முன்னால் நின்றுகொண்டிருந்தேன்

“அப்ப அவளுக்கு பதினஞ்சு பதினாறு வயசுதான் இருக்கும். ஸ்கூல் டூர் போனப்ப, பஸ்ஸ எப்பிடியோ தவற விட்டுட்டா. டில்லியில. பாவம் கொழந்தைக்கு பாஷையும் தெரியாம யாரையும் தெரியாம, யாரையோ நம்பி எங்கயோ போயி.” அவர் குரல் கம்மியது.

“நாலஞ்சு பேரு மாப்பிள்ளை. தா**லிங்க யாருக்கும் மீசை கூட சரியா முளைக்கல. எம் பொண்ண, எம் பொண்ண.” அவர் விக்கித்து அழ ஆரம்பித்தார். நான் அவரை தேற்றுவதா என்னை நானே தேற்றிக்கொள்வதா என்ற குழப்பத்தில் இருந்தேன்.

“போலீஸ் கேஸ் வேற. பத்திரிக்கை கிட்ட இருந்தும் கேமரா கிட்ட இருந்தும் என் பொண்ண காப்பத்தறதுக்கே பாதி உயிர் போய்டுச்சு. நொறுங்கி போய்ட்டா எம்பொண்ணு. உடம்பு முழுக்க சிராய்ப்பு, கண்ணு வீங்கி போய்.., தன் பொண்ணோட உறுப்புல இருந்து ரத்தம் வர்றத, கடவுளே, எந்த அப்பனுக்கும் நடக்க கூடாது” அவர் தொடர்பில்லாமல் என்னென்னவோ பேசி அழுதார்.

“எல்லாருக்கும் கற்பழிப்பு செய்தில ஒரு இச்சை இருக்கு மாப்பிள்ளை. தன்ன நல்லவனா காண்பிச்சுக்க ஒரு சந்தர்ப்பமா ஆளாளுக்கு அத பயன்படுத்திக்கறாங்க. தெரியல மாப்பிள்ளை, ஒருவேளை அவளுக்கு அம்மா ன்னு ஒருத்தி இருந்திருந்தா, இது நடந்திருக்காது போல” மீண்டும் விம்மினார்.

சில நிமிடம் வரை அவர் விசும்பல் நிலைத்து, குறைந்து, பின் மௌனமானது.

“ஒரே நாள்ல வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு மாப்பிள்ளை. எல்லார் கண்களும் அவள ஊடுருவி பாத்துச்சு. எதுவும் தேவை இல்லன்னு எல்லாத்தையும் வித்துட்டு யார் கிட்டயும் சொல்லிக்காம இங்க transfer வாங்கிட்டு வந்துட்டேன். அன்னில இருந்து, சொந்தக்காரங்க, friends ன்னு எந்த ஒட்டு உறவும் கெடையாது. யாரும் என் பொண்ணுக்கு அந்த சம்பவத்த நினைவு படுத்திரக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன்”

“என்ன பண்ணி என்ன பிரயோஜனம். இன்னைக்கு வரைல எம்பொண்ண அது கொன்னுட்டு இருக்கு”

மீண்டும் மௌனம் நிலைத்தது.

“நான் வரேங்க.” என்றேன்.

அவர், “மாப்பிள்ளை” என்று ஏதோ துவங்க,

“இனிமேல் இத பத்தி நாம பேச வேண்டாம்” என்றவாறு வாசலை நோக்கி நடந்தேன்.

ஒரு நிமிடம் திரும்பி, “இருந்தாலும், என்கிட்ட ஒரு வார்த்தை நீங்க சொல்லி இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு வெளியே விரைந்தேன்.

‘சே, எதற்காக இவரிடம் இப்படி நடந்து கொண்டேன். சொல்லியிருந்தால் மட்டும் என்ன செய்திருப்பேன். ஒருவேளை.. சே! அவ்வளவு கீழானவனா நான். இதில் அவர் தவறு என்ன இருக்கிறது. அவள் மட்டும் என்ன செய்வாள். பிறகு நான் மட்டும் என்ன தவறு செய்தேன். எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை. ஐயோ, இதை தண்டனையாக பார்க்கும் மனம் வந்துவிட்டதா எனக்கு. திருமணமாகி மூன்று வருடத்துக்கு பின், ஒரு குழந்தைக்குப்பின், இப்படியா ஒரு இடி விழ வேண்டும். அதுவும் காதல் திருமணம் வேறு. அப்பொழுது கூட அவள் எதுவும் சொல்லவில்லையே. என்னிடம் நம்பிக்கை இருந்தால் சொல்லியிருக்க வேண்டும் அல்லவா. ஒருவேளை அதனால்தான்.. சே! இப்பொழுது மட்டும் ஏன் சொன்னாள். ஒரு சின்ன வாக்குவாதம் இப்படியா போக வேண்டும்.’

அன்று நல்ல மழை. அவள் உள்ளே சமைத்துகொண்டிருக்க நான் மேட்ச் பார்த்துகொண்டிருந்தேன். பையன் தூங்கிக்கொண்டிருந்தான். அவளுக்கு கிரிக்கெட் என்றாலே ஆகாது. வேண்டுமென்றே ஏதாவது வம்பிழுப்பாள்.

“என்னங்க..” என்று சமையலறையில் இருந்து குரலை மட்டும் வெளியே அனுப்பினாள்.

“என்ன”

“Sound அ குறைங்க. பையன் தூங்கறான்ல.”

குறைத்தேன்.

“என்னங்க. Motor போட்டு விடுங்க. Sink ல தண்ணி வரல”

“ப்ச். நீயே போய் போட்டுக்கடி.”

“நான் வேலையா இருக்கன்ல. உன்னால இத கூட செய்ய முடியாதா”

அவள் கோபம் வந்தால் ஒருமையில் தான் பேசுவாள்.

“Match பாத்தாலே உனக்கு பொறுக்காதே” என்று முணுமுணுத்தவாறு சென்றேன்.

அடுத்த ஓவர் முடியும் முன்.

“பையன் முழிச்சிட்டேன் போல இருக்கு. போய் ஏனைய ஆட்டி விடுங்க.”

“எதுனா சொல்லிட்டே இருப்பியா நீ”

“பையனைவிட உனக்கு cricket முக்கியமா போச்சா. அவன் siren on பண்றதுக்கு முன்னாடி சீக்கிரம் போ”

“Match போடறதுக்கு முன்னாடி பொண்டாட்டிய ஊருக்கு pack பண்ணனும் போல இருக்கு” என்றவாறு பையனிருந்த அறைக்கு சென்றேன். அவள் சிரித்தது அப்பட்டமாக கேட்டது.

குழந்தை தூங்கியபின் வெளியே வந்தபோது, அவள் வேறு எதோ பாடல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“மேட்ச் போடு. இன்னும் நாலு ஓவர் தான் இருக்கும்.”

“இத்தன நேரம் நீங்க பாத்திங்க இல்ல. கொஞ்ச நேரம் நான் பாக்க கூடாதா?”

“எங்கடி என்ன பாக்க விட்ட. அத செய் இத செய்னு உயிர எடுத்துட்டு, சட்டம் பேசறியா. ஒழுங்கா மாத்திரு!”

ரிமோட்டை, தூக்கி எறிந்துவிட்டு ஒரு சின்ன சிரிப்புடன் உள்ளே சென்றாள். நான் சேனலை மாற்றியபோது மேட்ச் முடிந்திருந்தது. வெளியே வந்ததும் களுக்கென்று சிரித்தாள். எனக்கு எரிச்சலும் வந்தது. சிரிப்பும் வந்தது.

“எதுனா பாட்டு வெக்கலாம்ல”

நான் நியூஸ் வைத்தேன்.

அப்போதுதான் அந்த செய்தி வந்தது. நான்கு பேர் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். அந்த பெண் மருத்துவமனையில் குற்றுயிராகக் காணப்பட்டாள். சேலம் அருகே ஏதோ ரயில் நிலையத்தில் தண்ணீர் வாங்க இறங்கி, மற்றவையை கற்பனை செய்துவிடலாம்.

“நம்ம ஊர்ல ‘பெண்’ங்கறவ ரொம்ப மலிவா கிடைக்ககூடிய ஒரு பொக்கிஷம். ஒரு பொண்ணு அவளுக்கு சம்பந்தம் இல்லாத இடத்துல, சம்பந்தம் இல்லாத நேரத்துல இருந்தான்னா, அவ ‘அப்படி’ பட்ட பொண்ணுதான்னு முத்திரை குத்திருவாங்க. ‘அப்படி’ இருக்கிறது சரியா தப்பாங்கறத விட, ‘அப்படி’ ப்பட்ட பொண்ண கற்பழிகறத ஒரு பெரிய விஷயமா நம்ம சமூகம் எடுக்கறதில்ல.”

பேசிக்கொண்டிருந்தவள் ஏதோ மகளிர் அமைப்பை சேர்ந்தவள் போலும். மேலும், 1 மணி நேரத்தில் எத்தனை பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர், போன்ற அதிகபட்ச புள்ளிவிவரங்களோடு வாதம் தொடர்ந்தது. எனக்கு வேடிக்கையாக இருந்தது. நால்வரும் அந்த சம்பவம் நடக்கவே காத்திருந்தவர்கள் போல பேசிக்கொண்டிருந்தனர்.

“சே! பரதேசிங்க. இவனுங்களையெல்லாம் நடு ரோட்ல அம்மணமா நிக்க வச்சு கொட்டையடிக்கணும்” என்றேன்.

அவள் என்னை தீர்க்கமாக பார்த்தாள். என் உள்ளுணர்வில் ஏதோ தவறாகப்பட்டது.

“வேற சேனல் வைங்க” என்றாள்

“ஏன்?”

மௌனம்.

‘மேடம், இத ரொம்ப உணர்ச்சிப்பூர்வமா பாக்கறீங்க. கொஞ்சம் practical அ பாத்தீங்கன்னா, இப்ப பாதிப்பு யாருக்கு. இப்படி விழிப்புணர்வு இல்லாம, அந்த பொண்ணு தனியா போயி, யோசிக்காம ரயில விட்டு இறங்கி..’

‘சார், இப்படி மூடத்தனமா பிற்போக்கு வாதம் பேசாதீங்க. என்ன நடந்தாலும் பொண்ணுங்கள குறை சொல்ற ஒரு சராசரி ஆணோட பேச்சு இது.’

‘அப்படி இல்லங்க, எங்க வீட்லயும் பெண்கள் இருக்காங்க. நாட்ட திருத்தறதுக்கு முன்னாடி அவங்களோட பாதுக்காப்பு தான் முக்கியம்னு நெனைக்கற ஒரு சராசரி ஆண் மனசு தான் இது.’

“இவன் சொல்றது சரியாதான இருக்கு. நேரங்கெட்ட நேரத்துல வெளிய போயிட்டு, பாதுகாப்பில்லன்னு சொன்னா இதென்ன பைத்தியகாரத்தனம்”

அவள் கண்கள் சலனமுற்றது.

“என்னாச்சு” என்றேன்.

“அப்ப பொண்ணுங்க வெளியவே போக கூடாதுங்கறீங்களா ?”

“அப்படி சொல்லல. பாதுகாப்பு இல்லாம போக கூடாது. நேச்சுரலாவே ஆம்பளைங்களுக்கு..”

அவள் விருட்டென்று எழுந்து உள்ளே சென்று கதவை தாளிட்டுக்கொண்டாள். நான் கதவைத்தட்டினேன்.

“வித்யா.. வித்யா.. கதவ திற.. இப்ப என்ன ஆச்சு. ஏன் இப்டி நடந்துக்கற. நான் ஏதும் தப்பா பேசலியே.. வித்யா..”

மீண்டும் பலமாக தட்டினேன்.

“கதவ திறம்ம்மா என்னாச்சு.. வித்யா..”

கிட்டத்தட்ட 20 நிமிட போராட்டத்துக்கு பின்,

“வித்யா கொழந்த அழறான். கதவ திற.” என்று பொய் சொன்னேன்

திறந்தாள். குழந்தையின் சத்தம் இல்லாததை உணர்ந்து, மீண்டும் படுக்கைக்கு சென்று அமர்ந்தாள்.

அவளை பார்க்கவே கொஞ்சம் பயமாக இருந்தது. எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தாள். நான் அவள் அருகே சென்று அவள் தோளைத் தொட்டேன். ஒரு நிமிடம் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். மீண்டும் அவள் பார்வை சரிந்தது. கண்கள் முழுவதும் நீர் தேங்கியது.

“என்னடா ஆச்சு. நான் எதுனா தப்ப பேசினேனா?”

மௌனம்

“சொன்னாதானம்மா தெரியும்” என்றவாறு அவள் கையை பற்றினேன்.

ஒரு நீண்ட மௌனதுக்குப்பின் உறுதியாக சொன்னாள்.

“I WAS RAPED”

குழந்தை அழத்தொடங்கினான். அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

அந்தி மங்கி இருள் சூழ்ந்துகொண்டிருந்தது. கடற்கரையில் பெரிதாக கூட்டம் இல்லை. கருநீல பின்புலத்தில், சில படகுகள் வெகு தூரத்தில் அலையாடின. சிறுவர்கள் சிலர், இருந்த நிலா வெளிச்சத்தில் நண்டு பிடித்துக்கொண்டிருந்தனர்.

எங்கள் இருவருக்குமிடையில் ஏதோ ஒன்று அறுந்து விழுந்தது போல தோன்றியது. அதற்கு இதுதான் காரணம் என்பது இன்னும் அருவருப்பை ஏற்படுத்தியது. அவளுடனான எனது உறவு வெறும் உடல் சார்ந்தது தானா. எதற்காக இந்த விசனம். Yes, She was raped. ஆனால் நிச்சயமாக, அதற்கு நான் தயாராயில்லை.

அவள், தன் தந்தையிடம் சில நாட்கள் இருப்பதாக சொன்னபோது நான் தடுக்கவில்லை. என் மனதில் ஒரே ஒரு கேள்வி தான் நிழலாடியது. என்னிடம் ஏன் மறைத்தாள். முன்னமே சொல்லியிருந்தாள் என்ன செய்திருப்பாய் என்று கேட்டால், நிச்சயமாக என்னிடம் பதில் இல்லை. 16 வயதில் நடந்த ஒரு விபத்து இன்னும் அவளை துரத்துகிறதென்றால், இவ்வளவு நாட்கள் எத்தனை துன்பம் அடைந்திருப்பாள். திரை கிழிவதுதான் கற்பு, என யார் ஏற்படுத்தியது. ஏன் அதை அங்கீகரித்தோம். ஒருவேளை அதனால் தான் முன்பெல்லாம் என்னிடம் பயந்… சே! என்ன இதெல்லாம்.

ஒரு பெரிய அலை என் காலை நனைத்தபோது, என் இருப்பை உணர்ந்தேன். காற்று கொஞ்சம் என்னை இலகுவாக்கியது. திரும்பிப்பார்த்தபோது ஒரு ஜோடி தன்னை மறந்து சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர். சில வருடங்களுக்கு முன் நானும் அவளும் இதே போல் இங்கு இருந்திருக்கிறோம். அவளுடனான நினைவுகள் அனைத்தும் சரம் சரமாக என்னை இழுத்தது.

“என்ன வந்ததிலிருந்து ஒரு மாதிரியா இருக்க?”

“ஒன்னுமில்ல?” என்றேன்

“ப்ச் சொல்லு. பரவால்ல. ஐஸ்க்ரீம் வேற ஆறுது”

நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன்.

“பின்ன சொல்லுடா, என்ன பிரச்சன?”

“ராஜும் பிரியவும் இருக்காங்க இல்ல”

“இருக்காங்க”

“இத பார், கேக்கறதுன்ன கேளு.இல்லாட்டி விடு. இட்ஸ் இர்ரிடேட்டிங்”

“சரி சரி. சொல்லுங்க” நான் கோபமாக பேசும்போது அவள் மரியாதையாக பேசுவாள்.

“…”

“ப்ச் சொல்லுங்க. இனி அப்படி பேசமாட்டேன். ராஜ்க்கும் ப்ரியாக்கும் என்ன? ”

“ஒன்னுமில்ல. ப்ரேக்-அப்”

“ஓ ! ஏன் என்னாச்சு? நல்லாதான இருந்தாங்க.”

“சொன்னா நம்பமாட்ட”

“என்ன?”

“அந்த பொண்ணு குடிப்பாளாம்”

“யாரு ப்ரியாவா? ச்சீ!! நோ சான்ஸ்”

“சத்தியமா. அவனே சொன்னான். சரக்குல உளறிட்டான்”

“ம்க்கும். அப்ப சரியான ஜோடிதான. இதுக்கு நீ ஏன் சீன் போடற ?”

“எல்லாரும் ப்ரேக்-அப் ஆறத பார்த்தா பயமா இருக்கு வித்யா” என்றவாறு அவளை நெருங்கினேன்.

மெள்ள அவள் விரல்களைப்பற்றி இன்னும் நெருங்கினேன். அவள் மிரண்டாள். தலை குனிந்துகொண்டாள். அவள் முகவாயை நிமிர்த்தி அவள் உதடருகே சென்றேன். அவள் மருண்டு பின்னோக்கி வளைந்தாள். நான் அவளிடம் இம்மாதிரி நடப்பது இதுவே முதல் முறை.

“என்ன?” என்றாள் மூச்சுக்காற்றில் பயந்தவாறு.

“எனக்கு நம்பிக்கை இல்ல” என்றேன்

“ம் ?”

சுவாசத்தில் பேசினேன்,

“கொஞ்சம் ஊது” என்றவாறு மெலியதாய் சிரித்தேன்.

அவளுக்கு முதலில் உறைக்கவில்லை. நான் பலமாக சிரித்தபிறகே, வெட்கமடைந்து, சிரிப்பை பற்களால் கடித்துக்கொண்டே,

“உன்னைய… நாயே.. நாயே.. ” என்றவாறு கைப்பையைக்கொண்டு அடித்தாள். நானும் சிரித்தவாறே, இரண்டு கைகளாலும் தலையை மறைத்துக்கொண்டேன்.

அவள் கிடைத்த இடத்திலெல்லாம் கிள்ளினாள்.

“ஏய் ஏய், அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்.”

“வாய மூடுடா” என்றவாறு கன்னத்தை கடித்தாள்.

எல்லாம் கனவு போல இருந்தது. அவளுடன் நான் சந்தோஷமாக தான் இருந்தேன். அவளும் தான். இடையில், இது என்ன.

திடீரென ஒரு பேரிடி இடித்தது. ஆந்தையின் ஒற்றைக்கண்போல, கலங்கரை விளக்கத்தின் ஒளி, தலையை சுற்றிக்கொண்டிருந்தது. நான் ஒருவன் மட்டும் தனியாக அமர்ந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். மணி பதினொன்றாகியிருந்தது. நான் வீட்டிற்கு போகலாம் என்று திரும்பியபோது தான், அவனை கவனித்தேன்.

“டைம் இன்னா சார் ஆச்சு?” என்றான்.

“பதினொன்னு” என்றவாறு நடக்க ஆரம்பித்தேன். அவனும் என்னுடன் நடக்க ஆரம்பித்தான்.

“இப்போ பஸ்சு கடியாதே சார், ரிக்ஷா இட்டாரட்டா”

“வேணாம்”

“லாட்ஜ் எதுன வாணுமா சார். டீஜெண்ட் லாட்ஜு. இன்னா வாணாளும் கெடிக்கும். 100% சேஃப்” என்றான்.

அப்போதுதான் அவனை பார்த்தேன்.

“வா போகலாம்”

அவனது ரிக்ஷாவில் என்னை எங்கேயோ கடத்திக்கொண்டிருந்தான். நான் செலுத்தப்பட்டேன் என்றே சொல்ல வேண்டும். எதற்காக இதை செய்கிறேன். அவளை பழி வாங்குகிறேனா. ஐயோ, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்.

“ஒன்னியும் கவல படாத சார். பார்டி செம பார்ட்டி. என் பொஞ்சாதிதான். சும்மா தள தள ன்னு, ரோசாப்பூ கணக்கா இருப்பா”

“வண்டிய நிறுத்து” என்றேன்.

அவன் வண்டியை நிறுத்திவிட்டு, ஒருக்களித்து கழுத்தை திருப்பி என்னைப்பார்த்து, “இன்னா சார்” என்றான்

“யாருன்னு சொன்ன?”

“என் பொஞ்சாதி சார். 2 மாசம் முந்திதான் கலியாணம் பண்ணிட்டோம். லவ் மேரேஜு”

“வேண்டாம். வண்டியை திருப்பு. என்னை கொண்டுபோய் ஸ்டேசன்ல விடு”

“ஏன் சார், ஆள பாத்துட்டு சொல்லு சார்”

“வேண்டாம்னா வேண்டாம்.”

“ஏன் சார் பாதில பேஜார் பண்ற. உனுக்கு இன்னா தான் சார் பிரச்சினி”

“உன்ன மாதிரி பெண்டாட்டிய விக்கறவனுக்கு, அதெல்லாம் புரியாது” என்றேன்.

அவன் முகம் கறுத்தது. எனக்கு நானா இப்படியெல்லாம் பேசுகிறேன் என்றிருந்தது. அவன் என்னை அடித்தாலும், அந்த நிமிடம் நான் அதை எதிர்பார்த்தே செயல்பட்டேன்.

1 நிமிடம் இருவருமே பேசவில்லை. பிறகு அவன்,

“சார், என் பொஞ்சாதி எவன்கூட படுத்தாலும் என்ன நெனச்சுட்டுதான் சார் படுப்பா. எனுக்கு அது போதும். உன்ன மாறி ஆளுங்கனால இதெல்லாம் புரிஞ்சுக்க முடியாது”

நான் அவனை அப்போதுதான் மனிதனாக பார்த்தேன். எனது வளர்ப்பு, நாகரீகம், படிப்பு, பகுத்தறிவு அனைத்தையும் ஒரே நொடியில் அவன் சுக்கு நூறாக உடைத்தது போல் உணர்ந்தேன். எதுவும் பேசாமல் மெளனமாக தலை குனிந்துகொண்டேன்.

“என்னை மன்னிச்சிரு” என்றேன்.

அவன் வண்டியை மிதிக்க ஆரம்பித்தான். இடுப்பில் சுற்றிவைத்திருந்த பீடியை எடுத்து வாயில் வைத்துவிட்டு, ஒரு கையாலேயே தீப்பெட்டியை கொளுத்தி, பொருத்தினான். ஒரு நீண்ட இழுப்பு இழுத்துவிட்டு புகையை வெளியே விட்டுக்கொண்டே சொன்னான்.

“என்ன உன் பிரதரு மாரி நெனச்சுக்கோ சார். என்னாண்ட சொல்லு. உன்கு இன்னா பிரச்ன”

இந்த நாகரீக உலகில், ஒரு மூன்றாமவன், என்னிடம் இத்தனை உரிமை எடுத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இல்லை. மாறாக அதற்காகவே காத்திருந்தது போல் அழத்தொடங்கினேன். ஒரு நிமிடம் முழுவதும் முகத்தை மூடிக்கொண்டு அசிங்கமாக அழுதேன். அவன் காத்திருந்தான்.

“என் வைஃப் அ, என் வைஃப் அ, நாலு பேர் சேந்து..”

அழுதேன்.

அவன் வண்டியை திருப்பினான்.

“எப்ப சார்?”

“அது.. அது.. அவ பத்தாவது படிக்கும்போது ஸ்கூல் டூர்…”

அவன் சிரித்துவிட்டான்.

எனக்கு அசிங்கமாக போய்விட்டது. சே! யாரிவன். எதற்காக இவனிடம், என் அந்தரங்க நண்பனிடம்கூட சொல்ல முடியாததை சொல்லிக்கொண்டிருக்கிறேன். அந்த சம்பவத்தின் நினைவுகள் என் முதுகை அழுத்த கூனிக்குறுகிப் போனேன்.

ஸ்டேஷன் வாசலை அடையும்வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வண்டி நின்றதும் இறங்கி அவனிடம் காசை எடுத்து நீட்டினேன். அவனும் வாங்கிகொண்டான்.

“வரேன்” என்றேன்.

நான் திரும்பியதும் அவன் “சார்” என்றான்.

திரும்பினேன்.

“கற்பு இக்குற வரிக்கும் கற்பயிப்பு இருக்கத்தான் செய்யும் சார். நீ பேஜர் ஆவுற அளவுக்கு அது மேட்டர் இல்ல சார். பொஞ்சாதி கூட போய் சந்தோசமா இரு” என்று ஒரு சலாம் வைத்தான்.

நான் அவள் வீட்டிற்கு செல்லும்போது மணி 2 இருக்கும். அவள்தான் கதவை திறந்தாள். கண்கள் வீங்கியிருந்தன.

“பையன் தூங்கிட்டானா?”

“ம்” என்றாள்.

உள்ளே சென்றதும் மெதுவாக அவள் கையை பிடித்தேன். அவள் கண்கள் கலங்கின. அவளை என் பக்கம் திருப்பி, அணைத்து, முத்..

அவள் வெறி பிடித்தவள் போல் விலகி சென்றாள். வெடித்து அழ ஆரம்பித்தாள்

“தொடாதீங்க.. என்ன.. என்ன.. நான்… நான்.. நாலு பேருங்க. எனக்கு.. பதினஞ்சு.. ஒருத்தன் கால புடிச்சு… ஒருத்தன்.. ஒருத்தன்….” அவள் தொடர்பில்லாமல் வெட்டி வெட்டி விம்மி அழுதாள்.

நான் அவளை மூர்க்கமாக இழுத்து அணைத்துக்கொண்டேன். அவள் இதழை முத்தமிட்டபோது அவள் கண்ணீர் கரித்தது. அவள் திமிறத்திமிற இன்னும் மூர்க்கமாக அணைத்துக்கொண்டேன். சிறிது நேரத்தில் அவள் உடல் தளர்ந்தது. என்னை இறுக கட்டிக்கொண்டே, மார்பில் முகம் புதைத்து அழுதாள். அவள் முகத்தை என் இரு கைகளில் ஏந்திக்கொண்டேன். அவள் கன்னத்தில் முத்தமிட்டு காதில் சொன்னேன்.

“ஒன்னுமில்ல விடு, ஐ லல் யூ!”

– கல்கி சிறுகதை போட்டி – 2017 யில் முதல் பரிசு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *