ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 23, 2012
பார்வையிட்டோர்: 15,462 
 
 

ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம்
நிசப்தத்துடன் இருந்தது. மரம், செடி, கொடி என அனைத்தும் துயில் கொண்டுகிடந்தன.
சில சிறு காற்றின் அலைக்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன. குடிசையின் உள்ளே
கூரையில் பனியின் சுவடு தெரிந்தது. அம்பறாத்தூணியில்இருந்து கொத்துக் கொத்தாக
அம்புகள் பாய்வது போல குளிர் உடலெங்கும் குத்திவாட்டியது. அருகில் இருந்த
குடிசையில் இருந்து எந்த சப்தமும் வரவில்லை. சீடர்கள் இந்நேரம் தங்களுடைய
அரண்மனைகளில் இருந்து புறப்பட்டிருந்தால்வந்து சேர எப்படியும் சில நாட்கள்
ஆகும். தனது புலமையையும், அறிவுக்கூர்மையையும் போற்றும் இந்த மன்னர்களை
நினைத்து அவரது மனம் கொஞ்சம்பெருமை அடைந்தது. முதுமை அடைந்து வருவதை கண்களில்
இருந்து நழுவிச்சென்ற தூக்கம் உணர்த்தியது. எழுந்து உட்கார்ந்தார் ஆதிகவி. தரை
சில்லிட்டுஇருந்தது.

குடிசையை விட்டு வெளியே வந்தார். இடது பக்கம் இருந்த மரத்தடியில் கட்டப்பட்ட
பசு அவரை பார்த்ததும் எழுந்து நின்றது.அருகே சென்று அதை அன்பாக தடவி விட்டார்.
சிறிது புல்லை எடுத்துப் போட்டார்.

இருபுறமும் செடிகள் அடர்ந்த ஒற்றையடி காட்டுப் பாதையில் தடாகம் நோக்கி மெல்ல
நடந்தார். கண் காணாத தொலைவு நோக்கி ஓடிக் கொண்டிருந்தன அடிவானத்தில் தெரிந்த
நட்சத்திரங்கள்.

தடாகத்தின் மேல் பனிப் புகை மண்டலம் எழுந்து உயர்ந்து கொண்டிருந்தது. காற்றின்
சிலுசிலுப்பு மனதை ஏதோ செய்தது. கவிதை புனைய ஏற்ற நேரமிது. இருப்பினும் மனதில்
தோன்றிய எண்ணத்தை அடித்து விரட்டினார். போதும் கவிதை எழுதியது என்று தனக்குள்
கூறிக் கொண்டார்.

குரங்கொன்று தாவிக் குதித்ததைக் கண்டு அஞ்சிய பறவைகள் வேறு கிளைகளில் பறந்து
அமர்ந்தன. தடாகத்தின் கரையில் விழுந்து கிடந்த பெரிய மரம் ஒன்றின் மீது ஏறி
அமர்ந்தார் ஆதிகவி. பல் துலக்கும் போது எதிரே இருந்த பாறை மேலிருந்து ஒரு தவளை
அவரையே உற்றுப் பார்த்தது. தள்ளி அமர்ந்தார். மறுகரையில் இருந்த மரங்களின் ஊடே
பாய்ந்து மறைந்தது புள்ளிமான் ஒன்று. “தொளக்’ சப்தம் கேட்டுத் திரும்பிப்
பார்த்தார். தடாகத்தின் கரையில் ஒரு வரையாடு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததை
தவிர யாரும் தென்படவில்லை. கதிரொளி இக் கானகத்தில் இறங்கி நடக்க இன்னும் வெகு
நேரம் ஆகும். இந்நேரத்தில் மரக்கூட்டம் நடுவில் பிளிரும் களிறுகள் நின்றாலும்
தெரியப் போவதில்லை என்று எண்ணியபடியே மெல்ல நீரில் இறங்கி குளிக்கத்
தொடங்கினார்.

நீராடல் முடித்து திரும்பி கரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அங்கே நின்ற
உருவத்தைப் பார்த்த போது மனம் ஒரு நொடி அதிர்ந்தது. கண்கள் மின்ன நீண்ட
தலைமுடியுடன் ஒரு முதியவர் அவரையே பார்த்து புன்னகைத்தார்.

“”யார் நீங்கள்…இந்தக் கானகத்தில் இங்கே என்னை பார்த்துக் கொண்டு
நிற்கிறீர்கள்?”

“”தவம் செய்ய இந்தக் கானகத்தில் அலைகிறேன் ஆதிகவி.”

காட்டுப்புற்களின் மீது பட்டுத் தெறிக்கும் மழைபோல் அவரது குரல் சில்லிட்டுக்
கேட்டது. ஏதோ ஒரு தெளிவு அவரது முகத்தில் தெரிந்தது.

“”என் பெயர் உங்களுக்கு எப்படி..”

“”இந்த மலைக்கு அப்பால் உள்ள நாட்டின் இளவரசன் உன்னிடம் படித்தவன். அவன் உன்
அருமை பெருமைகளை அரண்மனையில் கூறியதை கேட்டு உனைக் காண வந்தேன்.” என்று வினா
விழும் முன்பே விடையிறுத்தார்.

“”என்னைத் தேடி எதற்காக வந்தீர்கள்..?”

வா உன் குடிசையில் அமர்ந்து பேசுவோம். முன்னே நடந்தார் முதியவர். தலை முடியின்
ஈரத்தை துவட்டிய படியே பின் சென்றார் ஆதிகவி. குடிசையின் முன் மரத்தடியே
இருந்த பெரிய கல்லின் மீதமர்ந்தார் அவர். எதிரே கிடந்த மரத்துண்டு மீது ஆதிகவி
அமர்ந்தார்.

எதையோ சிந்தனை செய்தபடி இருந்துவிட்டு அமைதி கலைத்துக் கேட்டார். “”நீ இப்போது
எல்லாம் என்ன செய்கிறாய் ஆதிகவி?”

இப்போது `எல்லாம்’ என்று அவர் கேட்டதில் இருந்தே தனது கடந்த காலத்தை அறிந்தவர்
என உணர்ந்தார்.

“அரசகுல மக்களுக்கு போர் பயிற்சியும் வாழ்வியல் கல்வியும் கற்றுக்
கொடுக்கிறேன்”

சில ஆண்டுகளுக்கு முன் நீ படைத்தாயே இம்மொழியின் இலக்கணம் அதைப் பற்றி.?
ஆம்..அதையும் தான்.

“இம்மொழி பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும்..நின் புகழ் வானுயர்ந்து
நிற்க நான் ஒன்று சொல்கிறேன். மொழி நம் இருவருக்கும் இடையே உணர்வுகளை அறியச்
செய்ய வந்த கருவி.”

“நீங்கள் வந்த நோக்கம் என்ன துறவியே…”தீர்க்கமாகக் கேட்டார் ஆதிகவி.

“சொல்கிறேன் கேள். நீ படைத்த இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் என வகுத்துப்
படைத்திருக்கிறாய். நன்று. ஆனால் பொருளுக்கு அப்பால் என்ன அல்லது எழுத்துக்கு
முன் இருப்பது என்ன?”

“இந்த அதிகாலை நேரத்தில் என்னைக் குழப்பவே வந்தீர்களா?” பேச்சில் வெப்பம்
தெறித்தது.

“நான் பேசுவதை நீ புரிந்து கொள்கிறாய் என்றால் என் வாயில் இருந்து வரும்
சொற்கள் ஒரு பொருளை உணர்த்துகின்றன. அதற்குக் காரணம் சொற்கள். எழுத்தால் ஆனவை
சொற்கள். எழுத்துக்கு முன் ஒலி. அதாவது அ என்பது ஒரு ஒலி வடிவம். ஏ என்பது
வேறோர் ஒலி வடிவம். ஆக பொருளுக்கு முன் சொல். சொல்லுக்கு முன் எழுத்து.
எழுத்துக்கு முன் ஒலி. ஒலிக்கு முன் என்ன?”

நீண்ட நாள் தான் மறந்திருந்த கனவை மீண்டும் தட்டி எழுப்பிய அவரை ஆழமாக
பார்த்தார் ஆதிகவி. புன்னகையின் கீற்று அவர் இதழோரம் எட்டிப் பார்த்துச்
சென்றது.

“பேசுபவன் மொழிக்கு இலக்கணம் படைக்கலாம். பேச முடியாதவன் எப்படி புரிகிறான்.
வெறும் கையசைவில் மட்டும் தானா? அதற்கும் மேல் ஏதோவொன்று இரு பேச முடியா
மனிதரிடத்தில் உள்ளது. அது என்ன? அவன் மொழிக்கு உன்னால் இலக்கணம் படைக்க
முடியுமா? அப்படி செய்தால் அது உன் புகழை நிலைநிறுத்தும்.”

“சில காரணங்களால் நான் கவிதை எழுதுவதை நிறுத்தி பல்லாண்டுகள் ஆகின்றன துறவியே.
இனித் தொடரும் எண்ணமும் இல்லை. என்னை விட்டுவிடுங்கள்.”

“அப்படியானால் கொலைத் தொழில் புரியும் அரச குல மக்களுக்கு அறிவை புகட்டிக்
கொண்டிரு. உன் எழுத்தாணியை தீயிலிட்டு கருக்கிவிடு” என்று கூறிவிட்டு
விறுவிறுவென மரங்களின் ஊடே நடந்து மறைந்தார் துறவி. துறவிக்கே உரிய சினம்.
அவர் சென்ற திசையில் பறவைகள் கத்தியபடி பறந்தன.

“யார் இவர். எதற்காக என்னை வந்து இப்படி எழுதக் கேட்கிறார். இதற்கு முன்
பார்த்தது இல்லையே. பெயரைக்கூட கேட்க மறந்துவிட்டோமே…எழுத்துக்கு முன் ஒலி.
ஒலிக்கு முன்…ஒலி தோன்றுமிடம்…”உந்தி முதலா முந்து வளி தோன்றி கழுத்தினும்
மிடற்றினும்…” தனது கவிதை வரிகள் நினைவில் அசைந்தாடின. என் கனவு இவருக்கு
எப்படித் தெரிந்தது. அதை மறந்தும் நினைவூட்ட வந்த இவர் யாராக இருக்கும்…அய்யோ
துறவியே நில்லுங்கள்…ஆதிகவி கானகம் நோக்கி ஓடினார். முதுமையை மறந்து வேகமாக
ஓடினார். காய்ந்து கிடந்த இல்லை சருகுகளின் மீது கால்கள் பட்டு தடதட ஓசை
எழும்பி கானகத்தில் எதிரொலித்தது. மலையின் சரிவை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்
ஆதிகவி.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் வனத்துக்கு அருகே அமைந்த அந்தப்
பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் விடுதியின் 13-ம் எண் அறையில் படுத்திருந்த
மொழியியல் ஆய்வு மாணவன் கவிச்செல்வன் திடுக்கென எழுந்து உட்கார்ந்தான். ஒரே
புழுக்கமாக இருந்தது. மின்விசிறியை சுழல விட்டான். வெகு நேரம் கால்கள் எங்கோ
ஓடிக் கொண்டிருந்தது போல் உணர்ந்தான். கால்களைத் தடவிக் கொண்டான். தண்ணீர்
குடித்துவிட்டு சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடி படுத்துக் கிடந்தான். இதோடு
பல நாட்கள் இப்படி நிகழ்ந்துவிட்டது. மெல்ல மெல்ல மின்விசிறியின் ஒலி
உயர்ந்தது. அலை அலையாக எழுந்து அவன் காதுகளில் ரீங்காரமிட்டது.

தட்தட்…ஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்..காதுகளில் விழும் ஒலிக்கேற்ப வாய்விட்டுச் சொல்லிக்
கொண்டிருந்தான் வெகுநேரம். காற்று, விசிறி, ஒலி…அதுக்கு முன்னாடி என்ன? மயில்
ஒன்று க்வாக் என அகவியது. க்வாக்..க்வாக்…க்…வா…க் என்று அவனும் சத்தமிட
ஆரம்பித்தான். விடிந்தது கூடத் தெரியாமல் கத்திக் கொண்டிருந்தான்.

சத்தம் கேட்டு நான் அவன் அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். சிரசாசனம்
செய்வதுபோல் தலைகீழாக நின்று கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். பயந்துபோய்
ஓடினேன்.

“டேய் ரமேஷ்…எழுந்திருடா…கவிக்கு என்னமோ ஆயிருச்சு…தடதடஸ்ஸ்புஸ்னு என்னமோ
கத்திட்டு இருக்கிறான்டா”

“இவனுக்கு இதே பொழப்பா போச்சுடா…வா பார்க்கலாம் என்று ஒரு சிகரெட்டை எடுத்து
பற்ற வைத்துவிட்டு என்னிடம் ஒன்று நீட்டியபடியே வெளியே வந்தான். கவிச்செல்வன்
அறைக்குச் சென்றோம்.

“டேய் கவி…என்னடா ஆச்சு..எதாவது கனவு கண்டயா மாப்ள.”

“ஒன்னும் இல்லயே…நான் நல்லாத்தான் இருக்கேன். எதுக்கு எல்லோரும் ஒன்னா
வந்திருக்கிறீங்க…” அவன் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதை கண்கள் இரண்டால்
அறிந்தேன்.

“இல்ல.. டீ சாப்பிட…தம் அடிச்சுட்டு வரலாம்னு..”என்று ஏதோ சொல்லிவிட்டு இடத்தை
காலி செய்தோம்.

குளித்துவிட்டு கிளம்பி டிபார்ட்மென்ட் போகும் போது அவன் அறையைத் தட்டினேன்.
திறக்கவில்லை. மீண்டும் ஜன்னல் வழியே பார்த்தேன். க்வாக் என்று கத்தியபடி
எதேயோ எழுதுவதும் பின்னர் அமைதியாக இருப்பதும் மீண்டும் எழுதுவதுமாக
இருந்தான். அருகில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம், நோம் சோம்ஸ்கியின்
லாங்குவேஜ் அண்ட் மைண்ட் புத்தகம் கிடந்தது.

அதற்குள் மற்ற துறை நண்பர்கள் வந்தனர். கூட்டம் கூடியது. “இந்த ரூமுக்கு
பின்னாடி எவனோ தூக்கு மாட்டி செத்துட்டான் மாப்ள. அந்த ஆவி
அடிச்சிருக்குமோ…”சிரித்தான் எகனாமிக்ஸ் பிரதீப்.

“ஆவியும் இல்ல இட்லியும் இல்ல…இது ஏதோ ஸ்பிலிட் பெர்சனாலிட்டி மாதிரி” என்றான்
உளவியல் ஆய்வு மாணவன் சித்தார்த்.

” இங்க பார்றா அந்நியன்…”சிரித்துக் கொண்டே சென்றான் கெமிஸ்ட்ரி ஜான்.

“அவன வரச்சொல்லுடா மாப்ள…நம்ம புரபொஸர்கிட்ட காட்டி கவுன்சலிங் கொடுக்கலாம்”
என்றான் சித்தார்த்.

“கவி…டிபார்ட்மென்ட் போகலாமா?. நான் ரெடி என்று கசங்கிய சட்டையுடன் முன்னே
வந்தான். குளிக்கலையா? பெர்பியும் எடுத்துக் காட்டினான். என்னடா மனசு எதாவது
சரியில்லையா…தீபிகா எதாவது சொன்னாளா…லவ் எதாவது…

“கருமம்டா…என்று ஒரே வார்த்தை சொன்னபடி தலையில் அடித்துக்கொண்டான் கவி.

மெஸ்ஸில் சாப்பிடும் போது தட்டை தூக்கி எறிந்தான். அது டிங்டடாங் என்று ஒலி
எழுப்பி அடங்கியது. அதை உரக்கச் சொல்லிப் பார்த்தான். உனக்கு என்னடா
பைத்தியமா..பளார் என்று அறைவிட்டேன். அந்த சத்தத்தையும் உச்சரித்தான். “இப்போ
நீ அடிச்சயே..இந்த சத்தம் அங்க இருந்ததா இல்ல இங்க இருந்ததா? இருந்துச்சு
அப்படின்னா ஏன் அதுக்கு முன்ன கேட்கல? என்னையே உற்றுப் பார்த்தான். எனக்கு
கைகள் நடுங்கின.

எல்லோரும் வலுக்கட்டாயமாக அவனை இழுத்துக் கொண்டு சைக்காலஜி
டிபார்ட்மென்ட்டுக்குச் சென்றோம். அதற்குள் மொழியியல் துறை தலைவர் சண்முகம்
அங்கு வந்திருந்தார். கவிச்செல்வனின் ஆய்வு வழிகாட்டி அவர். நான், கவி, ரமேஷ்,
சித்தார்த் நான்கு பேரும் துறைத்தலைவர் கணேசன் அறைக்குச் சென்றோம்.

அறையில் ஏ.சி.குளிர் இருந்தது. புத்தக அடுக்குகள் நூலகத்தை நினைவு படுத்தின.
ஏதோ சிந்தனையில் கைகளைக் கட்டியபடி ஃப்ராய்டு உட்கார்ந்திருந்தார். அந்தப்
படத்துக்கு கீழே கணேசன் அமர்ந்தார்.

“என்னய்யா பிரச்னை…காலங்காத்தால”

“சார் கொஞ்ச நாளா இவன் நடு ராத்திரியில திடீர்னு தடதட இஸ் புஸ்னு ஏதேதோ சத்தம்
போடறான். காலைல வரை இப்படித்தான் இருக்கிறான். வெறிச்சு பாத்துட்டு
இருக்கிறான். என்னனு கேட்டா ஒன்னும் இல்லைன்னு சொல்றான். எல்லோரும் ஒரு
மாதிரியா பேசுறத கேட்டா பாவமா இருக்கு சார்…” கவியை பார்த்தபடி சொன்னேன். அவன்
வெகு தொலைவில் ஏதோ சிந்தனை செய்து கொண்டிருந்தான்.

“கவிச்செல்வன் கனவு ஏதாவது கண்டு பயந்திட்டயா?”

“இல்ல சார்”.

“அப்புறம் ஏன் இப்படி இருக்கீங்க…?”

“நான் ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இருக்கிறேன் சார்”.

“வெரிகுட். டாக்ட்ரேட் வாங்கிறதுக்கு முன்னே புக் பப்ளிஷிங் பண்றது நல்ல
விஷயம்தான். ஆல் த பெஸ்ட். என்ன புத்தகம் அது?”

“ஒலிக்கு முந்தைய வடிவம் பற்றியது”.

“பிஸிக்ஸ்ல வருமே அந்த ஒலியா?” இல்லை. மொழியியலில் வருமே அந்த ஒலி..அதாவது
phonetics. கணேசன் சற்று கவனமாக அவனைப் பார்த்தார்.

“அதென்ன வடிவம் ஒலிக்கு முன்னாடி?”

“அதாவது சார்…கைகள் இரண்டையும் மேசை மீது வைத்து சுவாரஸ்யத்துடன்
முன்னகர்ந்தான். “ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. அந்த சொல் எழுத்தால்
ஆனது..அந்த எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒலி வடிவம் உண்டு. அந்த ஒலி
துவங்குவதற்கு முன்னாடி இருந்தது என்ன?” அவரையே உற்று நோக்கினான். கணேசன்
புரியாமல் பார்த்தார்.

” என்ன சார்?”

“நீயே சொல்லுப்பா…”

“அந்த ஒலிக்கு முன்னாடி இருக்கிற ஏதோ ஒன்னுதான் நம்மோட புரிதலுக்கு
அடிப்படை…நீங்க சில விஷயம் பாத்திருப்பீங்க. பஸ்ல, பார்க்ல, இங்க
யூனிவேர்சிடில ஏன் எங்கவேணா….ஒரு பயனும் பெண்ணும் எவ்ளோ கூட்டம் இருந்தாலும்
பேசாம ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டே இருப்பாங்க. ஆனா அவங்க கண்கள் நான்கும்
பேசிட்டு இருக்கும். ஆனா புரிஞ்சுப்பாங்க…எப்படி இது சாத்தியம். சொல் இல்லை,
எழுத்தில்லை, ஒலி இல்லை ஆனாலும் எதோ ஒன்னு ரெண்டு பேரு மனசுக்கு உள்ளேயும்
ஓடுது. எப்படி புரிஞ்சுகிறாங்க? இதே போல பேச்சுத்திறன் இல்லாதவங்களும் எப்படி
புரியறாங்க?” என்று சொல்லிவிட்டு சாய்ந்து உட்கார்ந்தான்.

எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.

மீண்டும் முன் நகர்ந்தான். ”இப்ப பச்சை மாங்காய் அப்படின்னு சொன்னா உங்களுக்கு
என்ன நினைவுக்கு வரும்?” என்னையும் பார்த்து கேட்டான்.

எனக்கு ஏனோ பயோடெக் மஞ்சுளா ஞாபகத்துக்கு வந்தாள்.

“வாயில் எச்சில் ஊறுன மாதிரி இருக்கும், பல் கூசும்” என்றார் கணேசன்.

”அதேதான். புளிப்பு மாங்காய் அப்படின்னு சொன்னா பல் கூசுது. அப்ப புளிப்பு
எங்க இருக்கு? எழுத்திலயா, சொல்லுலயா, உங்க வாயிலயா? இங்கதான் மாங்காய்
இல்லையே” கைகளை ஆட்டினான்.

இப்போது கவுன்சலிங் நடப்பது யாருக்கு என்று எனக்கே சற்று குழப்பமாக இருந்தது.

“அதைத்தான் நான் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கேன். இது தொல்காப்பியத்தின்
தொடர்ச்சி. இதை எழுத வேண்டும் என்று தொல்காப்பியருக்கு ஒரு சிந்தனை இருந்தது.
அதைக் கனவுன்னும் சொல்லலாம்.”

இப்போது அவனது ஆய்வு வழிகாட்டி சண்முகமும் அதிர்ந்து பார்த்தார்.

”கவிச்செல்வன்..நீங்க ஏதோ கனவு கண்டு குழம்பத்துல இருக்கீங்க…ஸ்ட்ரெஸ் அதிகமா
இருந்தா இப்படித்தான். நிறைய யோசிக்காதீங்க…டேக் இட் ஈஸி…இந்த மாத்திரையை
சாப்பிட்டு நல்லா தூங்குங்க” என்று சில மாத்திரைகளை கொடுத்தார்.

“அமுக்கப்பட்ட வேட்கைகள் கனவுகளில் நிறைவேறத் துடிப்பதால் அவை வரம்பற்று
வெளிப்படும் அப்படின்னு ஃப்ராய்டு சொல்லியிருக்கிறார்” என்று சண்முகத்திடம்
கூறினார் கணேசன்.

“இல்ல சார்..நீங்க சொல்ற ஃப்ராய்டு, பலரோட கனவுகளை ஆராய்ச்சி பண்ணி 1900ம்
வருஷம் interpretation of dreams எழுதினார். அதாவது ஃப்ராய்டு ரிசர்ச்
பண்றதுக்கு முன்னயே பலருக்கு கனவுகள் இருந்திருக்கு..அதையெல்லாம் அவர்
ஆராய்ச்சி பண்ணி இருக்கிறாரா? அப்படி பண்ணத்தான் முடியுமா? நீங்க அதைப்
படிச்சுட்டு எங்கிட்ட பேசாதீங்க…கணேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

”உந்தி முதலா முந்து வளி தோன்றி…அதாவது, வயிற்றிலிருந்து வரும் காற்றின்
அழுத்தம் கழுத்து, நெஞ்சு, தலை போன்ற இடத்தில் நிலை பெறும். அண்ணம், நாக்கு,
பல் என்று படுவதால் ஒவ்வொரு எழுத்தும் எப்படி தோன்றுதுன்னு தொல்காப்பியர்
சொல்கிறார். அதுக்கு முன்னாடி அந்த ஒலிக்கு முன்பு இருந்தது என்ன? என்ன?
டேபிளை ஓங்கி அடித்தான்.

பேப்பர் வெயிட்டை எடுத்து ஜன்னலில் வீசினான். சலார் என்று கண்ணாடி உடையும்
சத்தம் கேட்டது. அந்த சப்தத்தையும் உச்சரித்தான். கணேசனின் செல்போனை எடுத்து
அவர் மீது வீசினான்.

விபரீதம் ஏற்படும் முன் நாங்கள் அவனைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். அவன்
அறைக்கு கொண்டு சென்று மாத்திரை சாப்பிட வைத்து தூங்க வைத்தோம்.

“அவங்க வீட்டுக்குச் சொல்லி அனுப்புங்க சண்முகம் சார். ஒரு மாதிரி ஆகிட்டு
வர்றான். இப்படியே போனா சீரியஸ் ஆயிடும்” என்று அவருடன் பேசிக்கொண்டே
கிளம்பிச் சென்றார்.

இரவு மெஸ்ஸுக்கு போகும் முன் அவன் அறையை எட்டிப் பார்த்தேன். நன்றாகத்
தூங்கிக் கொண்டிருந்தான். நான் மட்டும் சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பி
வந்து தூங்கிவிட்டேன்.

அதிகாலை திடீர் விழிப்பு வந்து எழுந்தேன். முதலில் கவியின் அறைக்குச் சென்றேன்.

கதவு திறந்து கிடந்தது. அறையில் அவன் இல்லை. புத்தகங்கள் இறைந்து கிடைந்தன.
விடுதி முழுவதும் தேடினேன். கால்கள் வலித்ததுதான் மிச்சம். நண்பர்களை
எழுப்பும் முன் மீண்டும் அவன் அறைக்குச் சென்று பார்த்தேன். திறந்த நிலையில்
கட்டிலில் ஒரு நோட்டு கிடந்தது. அதில் ஏதோ எழுதி இருந்தான் கவி.

பொருளுக்கு முன் சொல், சொல்லுக்கு முன் எழுத்து, எழுத்துக்கு முன்
ஒலி….ஒலிக்கு முன்…மௌனம். அமைதி. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பது
மௌனம். வாய் பேசாதவனும் உணர்ந்து கொள்ளும் ஓர் உயர் தத்துவம் மௌனம். மௌனத்தில்
எல்லாமும் உண்டு. அதை நான் எழுதுவேன். அதற்கு இலக்கணம் படைப்பேன். அதற்கு கீழே
கவிச்செல்வன் என்கிற ஆதிகவி என்கிற தொல்காப்பியன் என்று எழுதியிருந்தான்.

எனக்கு ஏனோ அழ வேண்டும் போல் இருந்தது.

பிரசுரம்: திண்ணை.காம் மே 14, 2009.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10905121&format=html

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *