கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 15, 2023
பார்வையிட்டோர்: 1,624 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் உடன் பிறந்த உறவு முறை உடையவர்கள்தாம். ஆனாலும் பகைமை, பொறாமை என்று ஏற்பட்டுவிட்டால் பின்பு உறவையும் உடன் பிறப்பையும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடியவர்கள் யார்? 

பல காரணங்களால் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த சுமுகமான நிலையும் உறவும் முறிந்துவிட்டன. ஒருவரை ஒருவர் தாக்குவதற்கும் தூற்றுவதற்கும் கருவிக் கொண்டு திரிந்தனர். 

நலங்கிள்ளி கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். நெடுங்கிள்ளி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இருவரும் ஒரே சோழர் குடியில் பிறந்திருந்தும் அந்தக் குடியின் பரம்பரையான ஒற்றுமை குலைந்து போகும்படியாக நடந்து கொண்டுவிட்டார்கள். 

தலைமுறை தலைமுறையாகப் பிளவு பட்டறியாத காவிரிக் காவல் பூண்ட சோழர்குடி இந்த இரு இளைஞர்களின் பொறாமையினால் பிளவுபட்டுப் போயிருந்தது. உடன் பிறந்த பெருமையை மறந்து ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பமிடுவதற்குக் காலம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

காலம் முதலில் நலங்கிள்ளிக்கு வாய்த்தது. அவன் படையெடுத்து வந்து உறையூர்க் கோட்டையையும் நெடுங்கிள்ளி யையும் வளைத்துக் கொண்டான். நெடுங்கிள்ளியோ பொறியில் அகப்பட்ட எலியைப் போலக் கோட்டைக்குள்ளே மாட்டிக் கொண்டான். 

‘நலங்கிள்ளி உறையூர்க் கோட்டையை வளைத்துக் கொண்டான்’ என்ற செய்தி இதற்குள் தமிழகமெங்கும் பரவிவிட்டது. பலர் செய்தியறிந்து வியந்தார்கள். 

‘ஒரு குடியில் பிறந்த சகோதரர்கள் தங்களுக்குள் இப்படிப் போரிடுவது கேவலமான நிகழ்ச்சி அல்லவா? என விவரமறிந் தவர்கள் இதைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள். வேறு சில அரசர்கள் சகோதரச் சண்டைக்கு நடுவே தாங்களும் புகுந்து சோழ நாட்டையே பறித்துக் கொள்ளும் முயற்சியில் இரகசியமாக ஈடுபட முஸ்தீபுகள் செய்து கொண்டிருந்தனர். அண்ணன் தம்பி சண்டையும் சமாதானமோ, அல்லது போரோ ஒரு முடிவுக்கும் வராமல் வெறும் முற்றுகை அளவிலேயே இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் சோழர் குடிக்கு மிகவும் வேண்டியவராகிய கோவூர் கிழாருக்கு எட்டியது செய்தி. புறநானூற்றுக் காலத்தில் தமிழகத்தை ஆண்ட வல்லரசுகளுக்கு நடுவே துன்பம் நிகழாமல் தடுத்து வந்த ஒரே ஒரு சமாதானத் தூதுவர் எனலாம் இந்தக் கோவூர் கிழார் என்ற புலவரை. 

செய்தி யறிந்ததுமே உறையூருக்கு ஓடோடிச் சென்றார். நலங்கிள்ளியையும் நெடுங்கிள்ளியையும் சந்தித்தார். 

“நலங்கிள்ளி! நெடுங்கிள்ளி! சோழர் குடியின் பெருமையைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் பிறந்தீர்களா! கெடுப்பதற்கு என்று பிறந்தீர்களா? உங்களில் ஒருவன் பனம்பூவை அணிந்த சேரனு மில்லை. கரிய கண்களை உடைய வேப்பமாலை அணிந்த பாண்டியனு மில்லை. இருவருமே அத்திமாலையை அணிந்த சோழர்கள். நீ அணிகின்ற மாலையிலும் அத்திப் பூ! உன்னோடு போரிடுகின்றவன் அணிகின்ற மாலையிலும் அத்திப் பூ! உங்கள் இரண்டு பேரிலும் யாராவது ஒருவர் தோற்றாலும் அந்தத் தோல்வி சோழர் குடிக்கே ஏற்பட்ட தோல்விதான். சோழர்குடி, உங்களைப் பெற்று வளர்த்த பெருங்குடி இல்லையா? அதற்குத் தோல்வி ஏற்படும்படியாக விடலாமா? போர் என்றால் அதைச் செய்கின்ற இருவருமே வெற்றிபெற முடியாது! எவராவது ஒருவர்தான் வெல்ல முடியும்! உங்கள் இருவருக்கும் இடையே உள்ள இந்தப் பகைமையைக் கேட்டு வேறு அரசர்கள் இகழ்ந்து நகையாடுவார்கள். உங்கள் இருவரையுமே எதிர்த்துச் சோழ நாட்டையே அபகரித்துக் கொள்வதற்குக்கூட முயல்வார்கள். சோழ சகோதரர்களே! என் சொல்லைக் கேளுங்கள். வேண்டாம் இந்தப் போர்! குடிகெடுக்கும் போரை நிறுத்துங்கள். உங்கள் காவிரி காக்கும். களங்கமற்ற குடிப்பெருமையின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்.” 

கோவூர்கிழார் கூறிமுடித்தார். நலங்கிள்ளி முற்றுகையை நிறுத்தினான். நெடுங்கிள்ளியைத் தழுவி மன்னிப்பு கேட்டுக் கொண்டான். கோவூர்கிழார் மனமகிழ்ந்து இருவரையும் வாழ்த்தினார். 

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன். 
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே 
நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே 
ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே 
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால் 
குடிப்பொருள் அன்றுநும் செய்தி கொடித்தேர் 
நும்மோரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி 
உவகை செய்யும் இவ்விகலே. (புறநானூறு-45) 

வெண்தோடு = வெள்ளிய இதழ்கள், மலைந்தோன் = அணிந்தவன், சினை = கிளை, தெரியல் = மாலை, கண்ணி மாலை, ஆர் = ஆத்தி, பொருவோன் = போர் செய்கிறவன், வேறல் = வெற்றி பெறுதல், செய்தி = செயல், இகல் பகைமை, மெய்ம்மலி உவகை = உடம்பு பூரிக்கும்படியான மகிழ்ச்சி 

இன்று உலக நாடுகளின் சபை தனது பாதுகாப்புக் கவுன்சிலால் செய்யத் திணறும் காரியத்தை அன்றே தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப்புலவர் செய்து முடித்திருக்கிறார்! ஆச்சரியமில்லையா, இது?

– புறநானூற்றுச் சிறுகதைகள், இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2001, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை

'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *