வீரப்பெண்மணி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 2,798 
 
 

பேரரசான வளவ நாட்டின் அரசர் மார்த்தாண்டன் வரி கட்ட மறுக்கும் சிற்றரசான தமது மளவ நாட்டின் மீது போர் தொடுக்கப்போவதை தம் நாட்டு ஒற்றர் மூலம் அறிந்த பின்பு மிகவும் கவலைக்குள்ளானாள் மளவ நாட்டின் இளவரசி மாயவி.

மாயவி பேரழகி மட்டுமல்ல அறிவிலும், போர்கலையிலும் மிகுந்த தேர்ச்சி பெற்ற வீரப்பெண்மணியும் கூட. பல பேரரசர்கள் தங்களது இளவரசர்களுக்கு பெண் கேட்டும் யாரையும் மனதுக்குப்பிடிக்காததால் மறுத்துவிட்டாள். வளவ நாட்டின் அரசர் தன் கீழ் உள்ள மளவ நாடு வறட்சியின் பிடியில் இருப்பதால் தான் வரி கட்ட இயலவில்லை என்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்திருந்தும், இதை சாக்காக வைத்து மாயவியை தன் மகனான இளவரசன் மகேந்திரனுக்கு திருமணம் செய்ய சம்மதிக்கச்செய்யும் நோக்கமே போருக்கான ஏற்பாடாக இருக்குமென தமது நாட்டு மந்திரி ஒருவரின் கருத்தை ஆமோதித்தார் மாயவியின் தந்தையும், மளவ நாட்டின் அரசருமான கராவி.

“குழந்தாய்…”

“கூறுங்கள் தந்தையே…”

“வளவ நாட்டு பேரரசு நம் சிற்றரசு மீது போர் தொடுக்க உத்தேசித்துள்ளதையறிந்து எனது உறக்கம் தொலைந்து போனது. பேரரசை எதிர்த்து வெற்றி கொள்ளும் படை பலம் நம்மிடம் இல்லை. நன்றாக யோசித்துப்பார்த்தேன். ஒன்று நாட்டை அவர்களிடமே கொடுத்து விட்டு சாதாரண பிரஜைகளாக நாம் வாழத்தயாராக வேண்டும். அல்லது அவர்கள் கேட்பதை கொடுத்து விட்டு நாட்டை ஆள வேண்டும். “

“அவர்கள் கேட்பது நம் மண்ணை அல்ல. என் மனதையல்லவா கேட்கிறார்கள். மனதைக்கேட்பவர்கள் அதே போன்று தன்னிடமுள்ள மனதை கொடுக்க வேண்டும். ஒரு மனதை பாவம் அந்த பேரரசரின் மகன்‌ எத்தனை பேருக்கு கொடுப்பார்? ஏற்கனவே ஐந்து சிற்றரசுகளின் இளவரசிகளை போர் தொடுப்பதாக பயமுறுத்தி மனைவிகளாக்கி அந்தப்புறத்தில் ஆசை நாயகிகளாக அடைத்து வைத்துள்ளார். அதில் நான் ஆறாவதாக போய் சேர்ந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறீர்களா…?”

“உன்னை பட்டத்து மகாராணியாக வருங்காலத்தில் அரசரனாகும் போது அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார். மேலும் நமது நாட்டின் பாதுகாப்புக்கு படை வீரர்களை அனுப்புவதாகவும், தற்போது வறட்சியின் பிடியில் இருக்கும் நமக்கு ஐந்து வருடங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை அனுப்புகிறார்களாம். இதுவரை நாம் கட்ட வேண்டிய வரியை ரத்து செய்வதோடு, இனி எப்போதும் வரியே கட்டாமல் வரி வசூலிக்கும் சட்டத்தையே ரத்து செய்வதாகவும் கூறியுள்ளார்கள்” என கூறிய தந்தையின் தற்போதைய இக்கட்டான நிலையையும், நாட்டில் வாழும் மக்களின் தேவைகளையும், நலன்களையும் கருதிய இளவரசி மாயவி தனக்கு பிடிக்காவிட்டாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க வேறு வழியில்லாத நிலையில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க, மகிழ்ந்து போன தந்தை கராவியும் உடனே ஒற்றனை அழைத்து செய்தியை வளவ நாட்டிற்கு சொல்லச்சொல்லி அனுப்பி வைத்தார்.

“செய்தியைக்கேட்டதும் செய்தி சொல்ல வந்தவனுக்கு தன் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பரிசாகக்கொடுத்து விட்டு தன் ஒரே மகனும், பட்டத்து இளவரசனுமான மகேந்திரனை கட்டித்தழுவி மகிழ்ச்சியைப்பகிர்ந்து கொண்டார் வளவ நாட்டின் பேரரசர் மார்த்தாண்டன்.

எழுபது வயது நிறைவு பெற்ற நிலையிலும் இருபது வயது இளைஞனைப்போல உடலை திடகாத்திரமாக ஒரு மாவீரனைப்போல வைத்திருந்தார். கடந்த வருடம் தீராத நோயால் இறந்து விட்ட மகாராணியான மனைவி மந்திரையை எண்ணி மகிழ்ச்சியை இழந்தவருக்கு மகனுக்கு ஆட்சியைக்கொடுத்து விட்டு ஓய்வெடுக்க எண்ணமில்லை. தமது ஆட்சியை பரந்து விரிந்த தேசமாக உருவாக்க வேண்டுமென்ற பேராசை கொண்டவராகவே வலம் வந்தார். 

சுற்றிலும் இருக்கும் சிற்றரசுகளை போர் தொடுத்து பிடித்தவர் அவர்களிடம் வரி வசூல் செய்வதோடு அந்த நாடுகளின் இளவரசிகளை மகனுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களது எதிர்ப்பை திருமண உறவால் முறியடித்தார். 

மகாராணி இல்லாத மன்னர் கொம்பில்லாத காளைக்கும், தந்தமில்லாத யானைக்கும் சமம் என்பதை உடனிருக்கும் மந்திரிகளிடம் அடிக்கடி கூறுவார். 

மளவ நாட்டு மன்னன் தனது ஒரே மகளான மாயவிக்கு தனது அரண்மனையிலேயே திருமணத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த நிலையில், தங்களது அரண்மனையில் தான் திருமணத்தை நடத்த வேண்டுமென பேரரசர் கட்டளையிட, மறுக்க முடியாமல் தனது பரிவாரங்களுடன் அன்பு மகளையும் பல்லக்கில் அழைத்துக்கொண்டு வளவ நாடு நோக்கி புறப்பட்டார் கராவி.

பெரிய விழாவாக திருமண நிகழ்வு இருக்கும் என சென்றவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. திருமணத்துக்குரிய சுவடே தெரியவில்லை. தங்குவதற்கு சிறிய அரண்மனையை ஒதுக்கிக்கொடுத்தார்கள்.

குழப்பத்துடன் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த மண மேடைக்கு மாயவி அழைத்து வரப்பட்டு அமரவைக்கப்பட்டாள்.

அவர்களது வழக்கப்படி மணமகள் முகத்திரை அணிந்திருக்க வேண்டும். திருமணம் முடிந்து அந்தப்புற முதலிரவு அறையில் தான் தாலி கட்டிய கணவரின் முகத்தைப்பார்க்க வேண்டும்

எனும் நிலை வழக்கத்தில் இருந்தது.

திருமண நிகழ்வு நடந்த போது மளவ நாட்டினரின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. பதிலாக கண்ணீர் கரைபுரண்டு ஓட ஆசீர்வதித்தனர். தனது மகள் பெரிய பரந்த வளவ தேசத்தின் மகாராணியாகப்போகிறாள் என்பதைத்தவிர வேறு சிந்தனையை மனதுள் புக விடாமல் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக்கொண்டார் பல யுத்த களங்களில் வெற்றியைக்கண்டும் தன் மகள் விசயத்தில் தோல்வியைக்கண்ட கராவி.

அந்தப்புற முதலிரவு அறையில் எதிர்பார்ப்புடன் பணிப்பெண்களை வெளியே அனுப்பிவைத்த மாயவி, தாலி கட்டியவனின் முகத்தைக்காண ஆவலுடன் காத்திருந்தாள்.

திருமணத்தின் போது தனது முகம் வெளியே பார்க்க முடியாமல் மறைக்கப்பட்டிருந்தாலும் மணமகனின் கைகளைப்பற்றிய போதே வித்யாசத்தை உணர்ந்த போது தாம் இரண்டு வகையில் ஏமாற்றப்பட்டதைப்புரிந்து கொண்டவள், சாதாரண பெண்மணியாக இல்லாமல் வீரப்பெண்மணியாக, எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவளாக வளர்க்கப்பட்டதால் கலங்காமல், கண்ணீர் விடாமல் ‘வருவதை எதிர் கொள்வோம்’ எனும் மன நிலையில் இருந்த போது இளம் வயது வீரனின் காலடி சத்தம் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து மனதால் அதிர்ந்தாள். நாட்டின் இளவரசன் மகேந்திரன் அந்தப்புறத்தில் பிரவேசித்தான். 

“பேரழகே மாயவி….” என அவன் கூறிய போது மேலும் பேரதிர்ச்சியாக இருந்தது.

“உன்னை எனது மனைவியாக, இந்த பேரரசின் மகாராணியாக அடைய பல ஜென்மத்தில் நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த பூலோகத்தில்… இல்லையில்லை ஏழு லோகத்திலும் உன்னைப்போன்ற அழகியை காணவே முடியாது. அப்படிப்பட்ட தேவலோக அழகியான மளவ நாட்டு இளவரசியை எனக்கென்று மணம் முடிக்க அழைத்து வந்து, சூழ்ச்சி செய்து, தான் மணந்து கொண்ட கிழவனான எனது தந்தையை இப்போது சிரச்சேதம் செய்து விட்டுத்தான் ஒரு மன்னனாக உன்னைச்சந்திக்க இங்கே வந்துள்ளேன். அந்தக்கிழவன் கட்டிய தாலியை நானே அவன் தலையை வெட்டிய வாளால் அறுத்து விடுகிறேன். உடனே என்னிடமுள்ள தாலியை உனக்கு கட்டி மனைவியாக்கி, மகாராணியாக்குகிறேன்” என கூறி அவளிடம் மயங்கி நெருங்கிய மகேந்திரனிடமிருந்த வாளை லாவகமாக எடுத்துக்கொண்டாள் மாயவி.

“காலையில் உன் தந்தை என் கழுத்தில் தாலி கட்டியபோதே நான் இந்த நாட்டின் மகாராணியாகிவிட்டேன். நீ யார் அந்த பட்டத்தை எனக்கு தருவதற்கு? நான் பேரரசன் மார்த்தாண்டனின் மனைவியாகவே இருந்து விட்டுப்போகிறேன். அது தான் எனக்குப்பெருமை. காலங்காலமாக அரண்மனைப்பெண்களுக்கு கிழவர்களை கைப்பிடிப்பது புதிதல்ல. அனைத்தையும் சொல்லியே எனது தந்தை என்னை வளர்த்துள்ளார். எனது கணவனின் தலையை கொய்த உன் தலையை நான் கொய்யாமல் விட்டால் அது நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப்போய்விடும்” என்று கூறி ஒரே வீச்சில் அவனை வாளால் வெட்டிச்சாய்த்தவள், உடனே வீரர்களையும், மந்திரிகளையும் அழைத்து, அரச சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்தவாறு வளவ பேரரசின் பேரரசியாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *