கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 15, 2023
பார்வையிட்டோர்: 1,811 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ஒரு சிறிய வீடு. தாழ்ந்த கூரையையும் அதனைத் தாங்கும் நல்ல மரத்தூண்களையும் உடையது. வீட்டின் வெளியே இருந்து கண்டால் அடர்த்தியான மலைப் பகுதியிலுள்ள ஒரு குகையைப் போலத் தென்பட்டது. மறக்குடியினராகிய வீரப் பெருமக்கள் வசிக்கின்ற வீதி அது. 

அந்த வீட்டில் ஓர் இளைஞனும் அவனுடைய தாயும் வசித்து வந்தனர். தாய் வயதான கிழவி. கணவனை இழந்தவள். மகன் போர்வீரன். கண்டவர்கள் இமையால் நோக்கி மகிழத்தக்க கட்டழகன். இளமைக் கொழிப்பும் அழகான தோற்றமும் வீரப் பண்பும் ‘நாங்கள் இந்த இளைஞனை விட்டு நீங்கமாட்டோம்’ என்று சொல்லிக் கொண்டிருப்பனபோல அவன் உடலில் ஒன்றுபட்டுக் கலந்திருந்தன. 

இந்த ஆணழகனும் இவன் தாயும், வசித்த அதே வீதியில் இவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் வேறொரு மறவர் குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தில் வாலைப் பருவத்துக் கன்னிப் பெண் ஒருத்தி இருந்தாள்.ஆழகையும் ஆண்மையையும் தேடிக் கண்கள் துறுதுறுப்புக் கொண்டு திரியும் பருவம் அவளுக்கு. கிழவியின் மகன் வீட்டிலிருந்து வெளியே போகும்போதும், வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போதும் தன் வீட்டுப் பலகணி வழியே அவன் அழகைப் பருகும் வாய்ப்பை அவள் தவறவிடுவதே இல்லை. பலகணியின் வழியாக வெளியே தெரியும் அந்த ஆண்மையின் எடுப்பான அழகைத் தன்னுடைய நீள் விழிகளுக்குள் அடக்க முயலும் முயற்சியில் அவளுக்கு வார்த்தை களால் விளக்க முடியாத ஒரு தனி விருப்பம் இருந்தது. 

சில சமயங்களில் இளைஞன் வெளியே சென்றிருக்கும் நேரங்களில் அவன் வீட்டிற்குச் சென்று கிழவியிடம் அவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிற பழக்கமும் அவளிடம் உண்டு. அத்தகைய போதுகளில் எல்லாம் தன்னைக் கவர்ந்த ஆணழகனின் தாயோடு பேசுகிறோம் என்ற பெருமிதம் அந்தப் பெண்ணின் மனத்தில் பொங்கிச் சுரக்கும். அவள் காலம் போவதே தெரியாமல் கிழவியிடம் அவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பாள். அவன் விரும்பி உண்ணும் உணவுப் பொருள்கள், உடுக்கும் உடைகள், பேசும் பேச்சுக்கள், பழகும் பழக்கவழக்கங்கள், எல்லாவற்றையும் வாய் அலுக்காமல் கிழவியிடம் கேட்டுக் கொண்டிருப்பாள். 

அன்புடையவர்களைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் அறிந்து கொள்ளத் துடிதுடிக்கும் ஆர்வம் ஒன்றுதான் அன்பு என்ற உணர்ச்சிக்கு ஏற்ற அடையாளம் போலும்! 

சில நாட்களாக அந்தக் கன்னியின் கண்களும் பலகணியும் அவளை ஏமாற்றின. அந்தக் கட்டிளங்காளை வீதியில் அடிக்கடி தென்படவில்லை. அவ்வளவேன்? அவனைக்காணவே காணோம். வயதான கிழவியாகிய தாயைவிட்டு விட்டு அந்த வீர இளைஞன் எங்கே போயிருக்க முடியும்? அவள் சிந்தித்தாள். அவளுக்குப் புரியவில்லை. புரிந்து கொள்வதற்கு ஆசை. ஆனால் அதே சமயத்தில் தயக்கம்; பெண்மைக்கு உரிய வெட்கம். 

பக்கத்து வீட்டிற்குப் போய்க் கிழவியிடம் கேட்டுவிட வேண்டுமென்ற ஆசை முதிர்ந்தபோது அவள் வெட்கத்தைக் கைவிட்டாள். வெட்கம் ஆசைக்காக விட்டுக்கொடுத்து விட்டது. மனத்தில் துணிவை உண்டாக்கிக் கொண்டு கிழவியைக் காண்பதற்குச் சென்றாள். 

“வா! அம்மா வா! எங்கே உன்னைச் சில நாட்களாகக் காணவில்லை? உட்கார்ந்துகொள்.” 

கிழவி அவளை வரவேற்றாள். அவள் உட்காரவில்லை. நாணிக்கோணியவாறு அருகிலிருந்த தூண் ஒன்றைப் பற்றிக் கொண்டு நின்றாள். 

“என்னடி பெண்ணே! உட்காரச் சொன்னால் உட்காராமல் தூணைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாய்?” 

“…..”

“வீட்டில் ஆண்பிள்ளைகள் யாரும் இல்லையே? உனக்கு ஏன் இந்த வெட்கம்?” 

“அதற்கில்லை பாட்டி! உங்களை ஒன்று கேட்க வேண்டும். அதுதான்.” 

“ஏன் தயக்கம்? என்ன கேட்க வேண்டுமோ கேளேன்! சொல்கிறேன்.” 

“அவர் எங்கே பாட்டி? சில நாட்களாகத் தென்படவே இல்லையே?”

”அவரா? நீ யாரைக் கேட்கிறாய்?” 

“அவர்தான் பாட்டி! உங்கள் பிள்ளை..” 

தரையில் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த கிழவி தலையை நிமிர்த்திப் பார்த்தாள். தூணைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பெண்ணின் தலை கவிழ்ந்திருந்தது. கன்னங்கள் சிவந்திருந்தன. கால் கட்டைவிரல் தரையைக் கீறிக் கொண்டிருந்தது. உதடுகளை மீறி வெளிவர முயன்ற குறுப்புச் சிரிப்பை வலிய முயன்று அடக்கிக் கொண்டாள் கிழவி. 

“யார்? என் மகனைப் பற்றியா கேட்கின்றாய்? ‘புலி எங்கே போயிருக்கிறது?’ என்பது குகைக்குத் தெரியுமா பெண்ணே?” 

“புதிர் போடாதீர்கள் பாட்டி! தெளிவாகச் சொல்லுங்கள்”

“புதிர் இல்லையடி பெண்ணே! பெற்றவள் இதோ இருக்கிறேன். பெற்ற வயிறும் இதோ இருக்கின்றது. ஆனால் அவன் எந்தப் போர்க்களத்தில் சென்று போர் புரிந்து கொண்டிருக்கின்றானோ?” 

பெற்றவள், தன் மகன வீரன் என்ற பெருமிதத்தோடு கூறினாள்.புலி வாழும் குகைக்குப் புலியினால் ஏற்பட்ட 
பெருமையைப்போல அவளும் அவள் வயிறும் வீரமகனைப் பெற்றதால் பெருமை கொண்டாடின. 

தூணைப் பற்றியவாறு நின்று கொண்டிருந்த பெண்ணின் விழிகள் மலர்ந்தன. இதழ்கள் சிரித்தன. அந்தச் சிரிப்பும் மலர்ச்சியும் ‘உங்கள் மகனின் அழகை மட்டுமே இதுவரை மதிப்பிட்டேன். இன்று வீரத்தையும் மதிப்பிடச் செய்து வீட்டீர்கள்’ என்று கிழவியிடம் சொல்லாமற் சொல்வது போலிருந்தன. 

ஓர் ஆண்மகனின் வீரம் இரண்டு பெண்களுக்கு எவ்வளவு பெருமையைக் கொடுக்கிறது பாருங்களேன்! 

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோஎன வினவுதி என்மகன் 
யாண்டுளன் ஆயினும் அறியேன் ஒரும் 
புலிசேர்ந்து போகிய கல்லளை போல 
ஈன்ற வயிறோ இதுவே 
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே!  (புறநானூறு-86) 

சிற்றில் = சிறிய வீடு, நற்றூண் நல்ல தூண், வினவுதி கேட்கிறாய், யாண்டு = எங்கு, கல்லளை = கற்குகை, சேர்ந்து = தங்கி.

– புறநானூற்றுச் சிறுகதைகள், இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2001, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை

'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *