வழிபடு தெய்வம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 27, 2022
பார்வையிட்டோர்: 18,306 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காதலனும் காதலியும் பிறர் அறியாதவாறு அன்பு செய்து பழகினார்கள். அவர்களுடைய காதல் வைரம் போல உறுதியாகி வந்தது. இனிமேல் இரகசியமாகச் சந்தித்து அளவளாவுவதை விட்டு, உலகறிய மணம் செய்து கொண்டு வாழ வேண்டுமென்று அவன் நினைத்தான். ஆனால் காதலியினுடைய தாய் தந்தையர் வேறு யாருக் கோ அவளை மணம் செய்விக்கும் எண்ணம் உடையவர் களாக இருந்தார்கள்.

காதலிக்கு உயிர்த்தோழி ஒருத்தி இருந்தாள். தலைவி யின் நிலை முதலியவற்றைத் தலைவனுக்குத் தெரிந்து கூறுப வள் அவள் தான். தலைவியின் பெற்றோர்களுடைய எண் ணத்தை உணர்ந்து தலைவனிடம் அவள் தெரிவித்தாள். அவள் மற்றொரு யோசனையும் கூறினாள். தலைவன் தலை வியை அழைத்துக் கொண்டு சென்று தன் ஊரில் மணம் செய்து கொள்ளலாம் என்றாள். அவனும் அதற்கு உடம் பட்டான்.

***

காதலர் இருவரும் புறப்பட்டுவிட்டார்கள்.

அது வரையில் யாரும் அறியாமல் வந்து காதலியோடு அளவளாவிச் செல்லும் காதலனுக்கு, இப்போது யாரு டைய தடையும் இன்றி யாருக்கும் அஞ்சாமல், முழு உரி மையோடு அவளுடன் குலவி மகிழும் நிலை கிடைத்திருக்கிறது.

போகின்ற வழி வளப்பமான இடம் அல்ல. பாலை நிலத்து வழியே தான் போக வேண்டும். அதில் நடப்ப தற்கு அவள் ஒரு கால் அஞ்சுவாளோ என்ற ஐயம் உண் டாயிற்று. இன்னும் கடுமையான பாலை நிலத்தின் இடைப் பகுதிக்கு வரவில்லை. அங்கே ஒரு புன்கமரம். அதன் நிழலிலே அவளுடன் அமர்ந்தான். ஆர அமர அவள் திருவுருவ எழிலைப் பார்த்தான்.

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று புன்னகை பூத்தபடியே அவள் கேட்டாள். அவளுடைய வெள்ளை வெளேரென்ற பற்கள் முத்துக் கோத்தாற்போல அழகாக இருந்தன. வால் எயிறு உடையவள் அந்த மடமங்கை.

“உன்னைச் சந்தித்துப் பேச வேண்டுமென்று இரவு நேரங்களில் நான் ஒருவரும் அறியாமல் வந்தேனே ! அப் போது உன்னைக் காண்பது எவ்வளவு அரிதாக இருந்தது! எவ்வளவு மனம் கலங்கினேன் ! இனிமேல் நீயும் நானும் பிரியாமல் யாருடைய கட்டுக் காவலும் இல்லாமல் பழகலாம்.’

அப்போதெல்லாம் நான் மாத்திரம் கலங்க வில்லையா?

“நீயும் கலங்கினாய். ஆனாலும் நான்தான் முயற்சி செய்தேன். இருவரும் அளவளாவி இன்புற்றாலும் உன் னைத் தேடிக் கொண்டு இரவில் காடு கடந்தும் ஆறு கடந் தும் ஓடி வந்தேனே! எனக்கல்லவா உன் அருமை தெரியும்?”

“நான் உங்களைத் தெய்வமாக மதித்து உங்களையே எண்ணி நாள் முழுவதும் அலமந்தேனே! அதனை நீங்கள் அறிவீர்களா?”

“எனக்கு நீ தான் இஷ்ட தெய்வம்; உபாஸனா மூர்த்தி; வழிபடு கடவுள் . நெஞ்சிலே முறுகிய அன்புடைய பக்தர் கள், ஆர்வத்தையுடைய மக்கள், தங்கள் இஷ்ட தெய் வங்களை வழிபடுகிறார்கள். எத்தனை துன்பம் அடைந்தா லும் அவற்றால் சோர்வு அடையாமல், அழிவிலராகி மேலும் மேலும் தங்கள் வழிபாட்டிலே ஈடுபட்டு நிற்கிறார் கள். தங்கள் ஆண்டவனுடைய திவ்ய தரிசனம் காண வேண்டுமென்று அலமந்து வேசாறி நிற்கிறார்கள். விரதம் இருந்தும் தவம் செய்தும் தானம் செய்தும் மந்திரங்களை உச்சரித்தும் போற்றுகிறார்கள். அவர்களுக்கு அந்தக் கடவுள் நேரில் எழுந்தருளித் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினால் எத்தனை ஆனந்தத்தை அடைவார்கள்!”

“வழிபடு தெய்வத்தைக் கண்ணிலே கண்டவர்கள் உண்டோ?”

“இல்லையென்று எவ்வாறு சொல்ல முடியும்? எவ்வள வோ அன்பர்கள் உலகில் இருக்கிறார்கள். கடவுள் அருளைப் பெற அவர்கள் ஆர்வத்தோடு முயலும் திறத்தை நாம் அறிய முடிவதில்லை. அவர்கள் அன்பு அற்புதமான ஆற் றலையுடையது. அந்த ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வத்தை இந்த ஊனக் கண்ணாலே கண்டு விட்டால் பெறும் ஆனந் தம் இத்தகையதென்று எனக்குத் தெரியும்.”

“எப்படித் தெரியும்? உங்கள் வழிபடு தெய்வம் எது?”

“அந்தத் தெய்வத்தை இடையீடில்லாமல் தரிசிக்க வேண்டுமென்று நான் முயன்றேன். தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டேன் என் றான். கடைசியில் தெய்வம் நேரிலே வந்து காட்சி அளித்து வரம் கொடுத்து விட்டது.”

“உங்கள் பேச்சு விளங்கவில்லையே”

“நான் வழிபடும் தெய்வம் இன்னதென்று இன்னுமா தெரியவில்லை? முன்பே சொன்னேனே! தன் முகம் தனக்குத் தெரியுமா?”

காதலிக்குக் காதலனுடைய உள்ளக் குறிப்புத் தெரிந்து விட்டது. நாணத்தால் தலை கவிழ்ந்தாள். தலைவன் அவள் தோளைத் தன் கையால் மெல்லத் தழுவினான்.

“இந்த அழகிய பருத்த தோளை அடைய நான் எத்தனை முயற்சிகள் செய்தேன்! இப்பொழுதல்லவா எளிதிலே இந்தப் பாக்கியம் கிடைத்தது? அழிவு இலராகி ஆர்வ முடைய மாக்கள் தம் வழிபடு தெய்வத்தைத் தம் கண்ணாலே தரிசித்தது போல உன்னை, அடைந்தேன். உன் அழகிய மெல்லிய பருத்த தோளை அணைந்தேன். இதுவரைக்கும் நான் எப்படியெல்லாம் திரிந்தேன்! காடென்றும் மலை யென்றும் பாராமல், மழையென்றும் இருளென்றும் நில் லாமல், ஆறென்றும் விலங்கென்றும் அஞ்சாமல் வந் தேன். ஆனாலும் மனம் சுழன்றது ; கலங்கியது; ஒவ்வொரு நாளும் உன்னைப் பார்க்க முடியுமோ, முடியாதோ என்று கலங்கியது. இத்தகைய வருத்தத்துக்கு இனிமேல் இடம் இல்லை. நம் மனம் போல முழு உரிமையுடன் பழகலாம்.”

“நாம் போகும் இடங்களில் இப்படி மரங்கள் நிறைய இருக்குமோ?”

“அங்கங்கே இருக்கும். இதோ இந்தப் புனக மரத்தின் தளிரைப்பார். எவ்வளவு அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது! இந்தத் தளிரைப் பறித்து உன் மார்பிலே அப்பிக்கொள். பொன்னிறப் பிதிர்வுடைய உன் அழகிய நகில்களிலே இந்தத் தளிரை அப்பு. அங்கே தெய்வம் வீற்றிருக்கிறது. அத்தளிர்களை அருச்சிப்பது போலத் திமிர்ந்து கொள்.”

“வழியிலும் பல மரங்கள் இருக்குமோ?”

“இருக்கும். எங்கெங்கே நிழலைக் காண்கிறோமோ அங்கங்கே தங்கலாம்; நெடுநேரம் தங்கி அளவளாவலாம். மணல் இருந்தால் அங்கே நீ விளையாடலாம். அப்படியே வருத்தம் இல்லாமல் நாம் வழி நடக்கலாம்.”

“வருத்தம் ஏன்?” என்று கேட்டாள் காதலி .

“வாலெயிற்றோய், உன் தாய் தந்தையரையும் தோழி மார்களையும் பிரிந்து வந்ததனால் ஒரு கால் உனக்கு வருத் தம் உண்டாகலாம். தளிரால் அலங்கரித்துக் கொண்டு, நிழலைக் காணுந்தோறும் இளைப்பாறிச் செல்வோம். விளை யாடவும் இடம் உண்டு. மணல் நிரம்பிய இடங்கள் இருக்கின்றன. அங்கே நீ கோடு கிழித்துக் கோலம் போட்டு வீடுகட்டிச் சிறு சோறு சமைத்து விளையாடலாம் வழியெல்லாம் உனக்கு மகிழ்ச்சி உண்டாகத் தக்கபடி மரமும் மணலும் இருக்கின்றன. தளர்ச்சியில்லாமல் போகலாம்.”

“வழியிலே என்ன என்ன மரங்கள் உண்டு?”

“காடு காடாக மரங்கள் சில இடங்களில் உண்டு. சில இடங்களில் மாஞ்சோலைகள் இருக்கின்றன. கம்மென்று மாம்பூ வாசனை வீசும். உள்ளே புகுந்தால் தண்ணென்று குளிர்ச்சியாக இருக்கும். மாமரம் நிரம்பிய நறுந்தண் பொழில் அவை. மாம்பூவின் அரும்பைக் கோதி இன் புறும் குயில்கள் இனிமையாகக் குரல் எடுத்துக் கூவும். கண்ணுக்கு அழகான காட்சி, மாமரமும் மாம்பூவும். உடம்புக்கு இனிதான நிழல்; தண்ணிய பொழில். நாசிக் கினிய நறுமணம். காதுக்கு இனிய குயிலின் இசை இத்தனை இனிமையும் உள்ள இடங்களின் வழியே நீ நடந்து செல்லப் போகிறாய்.”

“நான் மட்டுமா? நீங்கள்?”

வழிபடு தெய்வம் “நீ என்றா சொன்னேன்? தவறு. நாம் செல்லும் வழி யிலுள்ள கானங்கள் இத்தகைய நறுந்தண் பொழில்களை உடையன.”

“மனிதர்கள் வாழும் இடம் ஒன்றும் இல்லையா?”

“அடடா! அதைச் சொல்ல மறந்து போனேனே! எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன. சின்னச் சின்ன ஊர்களாகப் பல உண்டு. எல்லாம் நாம் போகும் வழி யிடையே நீதான் காணப் போகிறாயே” – அவன் ‘நாம்’ என்பதை அழுத்திச் சொன்னான்.

புன்கமரத்தின் புதுத் தளிரும், இனிய நிழலும், எழிலார்ந்த மணலும், குயிலும், மாம்பொழிலும், ஊர் களும் ஆகியவற்றைப் பற்றிப் பேசிய பேச்சினாலே

தன்னுடைய இன்பத் தெய்வத்தின் உள்ளத்தில் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் ஊட்டினான் காதலன். அவள் அதைக் கேட்டு ஆறுதல் பெற்றாள். அவனோடு ஒன்றிச் செல்வதே தனி ஆனந்தமல்லவா?

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கட்கண் டாஅங்கு
அலமரல் வருத்தம் தீர , யாழநின்
நலமென் பணைத்தோள் எய்தினம்; ஆகலின்,
பொரிப்பூம் புன்கின் எழில் தகை ஒண்முறி
சுணங்கு அணி வனமுலை அணங்குகொளத் திமிரி
நிழல்காண் தோறும் நெடிய வைகி
மணல் காண் தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வால் எயிற் றோயே!
மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்
நறுந்தண் பொழில் கானம்;
குறும்பல் ஊரயாம் செல்லும் ஆறே.

சோர்வு இல்லாதவராகி வழிபாட்டு வகை களாகிய முயற்சியைச் செய்யும் ஆர்வத்தையுடைய அன்பர் கள் தாம் வழிபடுகின்ற தெய்வத்தைத் தம் புறக்கண் முனனே கண்டால் வருத்தம் தீர்ந்து இன்பம் அடைதல் போல, களவுக்காலத்தில் பல நாள் நாம் பட்ட மனச்சுழற் சியும் வருத்தமும் தீரும்படியாக உன்னுடைய அழகும் மென்மையும் பருமையும் உடைய தோளை அடைந்தோம். ஆகையால் பொரியைப் போன்ற பூவையுடைய புன்க மரத்தின் அழகையும் பளபளப்பையும் உடைய தளிரைப் பொற்பிதிர் போன்ற சுணங்கை அணிந்த அழகையுடைய நகில்களில் அதற்குரிய தெய்வம் இருக்கை கொள்ளுமாறு அப்பி, நிழலைக் காணும் போதெல்லாம் நெடுநேரம் அங்கே தங்கி, மணலைக் காணும்போதெல்லாம் விளையாட் டிடத்தை அமைத்து விளையாடி வருத்தமடையாமல் செல்; தூய வெண்மையான பற்களை உடையவளே! மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில்கள் கூவுகின்ற நறுமணம் வீசும் தண்ணிய பொழில்களையுடையன, நாம் செல்லும் வழியில் உள்ள காடுகள் ; சிறிய பல ஊர்களை உடையவை, நாம் போகும் வழிகள்.

ஆர்வ மாக்கள் கண்டா அங்கு, தோள் எய்தினம்; திமிரி , வைகி, தைஇ, ஏகுமதி; கானம் பொழில ; ஆறு ஊர என்று கூட்டுக.

அழிவு – சோர்வு. ஆர்வம் – ஆவல். அலமரல் – மனம் சுழ லுதல் ; கவலை கொள்ளுதல். யாழ ! அர்த்தமில்லாத அசைச் சொல்; பாட்டின் ஓசைக்காகப் போடுவது. நலம் – அழகு. பணை – பெருமை; மூங்கிலைப் போன்ற என்றும் சொல்லலாம். தகை – இயல்பு. முறி – தளிர் . சுணங்கு – மகளிர் மேனியிலே பொன்னிறமாகக் காணும் அழகுத் தேமல் . வனம் – அழகு. அணங்கு – தெய்வம்; நகில்களில் வீற்றுத் தெய்வம் என்ற பெண் தெய்வம் இருப்பதாகச் சொல்வது மரபு. திமிரி – அணிந்து; அப்பி . நெடிய – நெடு நேரங்கள். வைகி – தங்கி, வண்டல் – விளையாட்டு. தைஇ – அமைத்து. ஏகுமதி – போ வால் எயிற்றோய் – வெண் பற்களை உடையவளே. நனை – அரும்பு – கொழுதி – கோதி. ஆலும் – கூவும். பொழில் – சோலைகளை உடையன. ஆறு – வழி.

‘உடன்போகா நின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது’ என்ற துறையில் அமைந்த பாட்டு இது. தலைவியை அழைத்துக் கொண்டு தலைவன் செல்வதை உடன்போக்கு என்று சொல்வார்கள்.

இதைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் அரசர்.

இது நற்றிணையில் ஒன்பதாவது பாட்டு.

– மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *