மங்கார்னன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 33,506 
 

சோற்றால் மடையடைக்கும் சோழவளநாட்டினை தஞ்சையை தலைநகராக கொண்டு விஜயராகவ நாயக்கன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலமது. திருஇந்தளூர் வளநாட்டு திருசெம்பொன்பள்ளி கூற்றத்திற்கு தென்திசையிலும் திருக்கடவூர் கூற்றத்துக்கு மேல் திசையிலும் இருக்கும் மேலமாத்துர் கிராமத்திற்கு கிழக்கு திசையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறியகுடிசைக்குள் நுழைகிறோம். உள்ளே கணவன் மனைவி என்று வர்ணிக்கதக்க வகையில் இருக்கும் இளம் தம்பதியினரான ஆணும்பெண்ணும் அமர்ந்து உரையாடி கொண்டிருகின்றனர்.

அந்த ஆண்மகனின் பெயர் அரனையான். கறுத்த நிறத்தில் கட்டிளம் காளையென இருக்கும் அவனது தேகத்தை பார்த்தாலே உழைத்து உழைத்து உறமேறிப்போனவன் என்று சொல்லலாம். தலைமுடியை நீளமாக வளர்த்து அதற்கு எண்ணெய் பூசி பின்கட்டாக முடிந்திருக்கிறான். அளவாக முறுக்கிவிடப்பட்ட மீசை நெற்றியில் மூன்று பட்டைகளாக திருநீறு துலங்குகிறது. அந்த கிராமத்தின் பாடிக்காவலன் பொறுப்பில் இருக்கும் அவனுக்கு திருமணமாகி மூன்று மாதங்களாகிறது. அவள் பெயர் நல்லமங்கை. அரனையனும் அக்கம் பக்கத்தினரும் இவளை சுருக்கமாக மங்கை என்று அழைப்பதால் நாமும் மங்கை என்றே குறிப்பிடுவோம். மங்கை, அரனையனின் மாமன் மகள்தான். சிறுவயது முதல் அரனையன் மீது அளவில்லா பிரியம் வைத்திருந்தவள், தன் தகப்பனிடம் போராடித் தோற்று பிறகு உடன்போக்கு என்னும் சங்ககால திருமணமுறையை செயல்படுத்தி அரனையனை கைபற்றிக் கொண்டுவிட்டாள்

காரணம் மங்கையின் தகப்பனுக்கு அரனையனை மருமகனாக ஏற்க பெரிதும் விருப்பம் இல்லை ஏனென்றால் அவருக்கு பங்காளி வழி சொந்தத்தில் சகோதரி முறையானவள் அரனையனின் தாய். அரனையன் இளம்பிராயத்தினனாக இருந்த பொழுது ஊர் பாடிக்காவலனாக இருந்த அவனது தந்தை கள்வர்களால் கொல்லப்பட்டுவிட்டார். பாடிக்காவலன் என்றால் இன்றைய வழக்கில் தலையாரி என்று வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலான கிராமங்களில் இந்த தலையாரி முறை தற்காலத்தில் ஒழிந்தேபோய்விட்டது. ஊருக்கே காவலதிகாரி போல இருந்த இந்த தலையாரிகளின் வேலை இன்றைய காலகட்டங்களில் வயல்வெளிகளில் ஆடுமாடு மேயாமல் பார்த்துக்கொள்வது என்ற அளவில் சுருங்கிவிட்டது.

ஆனால் பழங்கால பாடிக்காவலர்களின் பணியானது ஒவ்வொரு கிராமத்தினருக்கும் இன்றி அமையாததாக இருந்தது. இரவு நேரங்களில் ஊர் எல்லையினை சுற்றிவந்து காவல் காப்பது, ஆற்றுமடை, வாய்க்கால் மடை போன்றவற்றை எவரேனும் சேதப்படுத்தாமல் பார்த்து கொள்ளவேண்டியது, வெளியூர்களில் இருந்துவந்து ஆட்டுக்கிடை மாட்டுக்கிடை போட்டிருக்கும் ஆயர்களின் ஆடுமாடுகளுக்கு பாதுகாப்பு வழங்குவது, நெல்பட்டறைகளுக்கு காவல் இருப்பது போன்றவை இந்த பாடிக்காவலர்களின் பணி. பகல் நேரங்களில் அன்றாட பணிகள், சொந்த வேலைகள், விவசாயம் போன்றவற்றை இவர்கள் பார்த்துக்கொண்டாலும் இரவுநேரங்களில் தவறாமல் பாடிக்காவலுக்கு சென்றுவிட வேண்டும்.

இரவு உணவினை இல்லத்தில் முடித்துக்கொண்டு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட வீச்சரிவாள் (வீசி எரிந்து வெட்டக்கூடியது), நீண்டவாள், வளைஎறி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தீப்பந்தத்துடன் ஊரை சுற்றிவந்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடும் புதியநபர்களை மடக்கி விசாரிப்பதும், ஆங்காங்கு மாங்காய் தேங்காய் தோப்புகளிலும் கரும்பு தோட்டங்களிலும் கைவரிசை காட்டும் உள்ளூர் ஆட்களை பிடித்து ஊர்சபையில் நிறுத்தவேண்டியதும் இவர்கள் பொறுப்பு. தனியொரு ஆளாக பாடிக்காவலில் ஈடுபடும் இவர்கள் நெஞ்சுரம் மிக்கவர்களாகவும், உடல்பலம் உடையவர்களாகவும், ஆயுத பயிற்சி கொண்டவர்களாகவும் இருத்தல் அவசியம் என்பதால் சென்ற தலைமுறை பாடிக்காவல் பொறுப்பு சிலம்ப ஆச்சாரியரான நல்லரவான் எனும் அரனையனின் தகப்பனிடம் வந்து சேர்ந்தது.

பாடிக்காவலனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் சவாலாக இருந்த விஷயம் என்னவென்றால் நெல்பட்டறை திருட்டுதான். ஆவணியில் அறுவடைக்காணும் குறுவைநெல்லும் தையில் அறுவடைக்காணும் சம்பாநெல்லும் தற்காலங்களில் நேரடியாக மூட்டையில் பிடிக்கப்பட்டு கொள்முதல நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது, அவசர பணத்தேவையினால் நெல்விலை ஏற்றஇறக்கத்தினை பொருட்படுத்தாமல் உடனே விவசாயிகள் விற்றுவிடுகின்றனர். ஆனால் பழங்காலங்களில் நெல்லின் விலைக்குறைவாக இருக்கும் பட்சத்தில் அவற்றை விற்பனைக்கு அனுப்பாமல் களத்திலேயே குவித்து, சாணத்தை கரைத்து குவிந்துகிடக்கும் நெல்லின் மீது தெளித்து வைக்கோல் போட்டு மூடிவிடுவர். தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு அது வைக்கோல்போர் போன்று தோற்றமளித்தாலும் அதன் கூம்புவடிவத்தை கொண்டு விஷயம் தெரிந்தவர்கள் அது நெல்பட்டறையா வைக்கோல்போரா என்று கண்டு பிடித்துவிடுவார்கள். ஒருவேளை உரிமையாளர் இன்றி பட்டறை திறக்கப்பட்டு நெல் திருடப்பட்டிருந்தால் மேலே தெளிக்கப்பட்டிருந்த சாணக்குறி மாறியிருப்பதை வைத்து நெல்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு அதன் தண்டம் ஊர்பாடிக்காவலனை போய்ச்சேரும்.

அதனாலேயே நெல்பட்டறை மீது பாடிக்காவலர்கள் தனிகவனம் செலுத்தி வருவது உண்டு. ஒருமுறை அரனையன் சிறுவயதாக இருக்கும் பொழுது பிடாரித்திடலில் திருவிழா கொண்டாடப்பட்டது. பிடரித்திடல் என்பது அவ்வூருக்கு கீழ்புறத்தில் இருக்கும் தனிப்பட்டத்திடல். அந்த ஊரின் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக பிடாரி விளங்கி வந்ததால் பங்குனிமாத உத்திரத்தில் கிராமத்தினர் சிறப்பாக விழாஎடுப்பது தொன்றுதொட்டு வரும் பழக்கம். பெரும்பாலும் இதுபோன்ற காவல்தெய்வங்கள் உரல்உலக்கை இடிக்கும் ஓசை, குழந்தையழும் ஓசை, அம்மியரைக்கும் ஓசை போன்றவற்றால் எரிச்சலடையும் என்ற கருத்து நிலவுவதால் பிடாரிக்கோயிலானது வீடுகள் இல்லாத வயல்வெளியின் நடுவில் இருக்கும் தீவாந்திரம் போன்ற பெரியத்திடலில் அமைக்கப்பட்டிருந்தது. திருவிழாவை ஒட்டி மயானகாண்டம் நடைபெறுவதால் ஊரே அங்கு கூடியிருந்தது. சிறுவயது அரனையன், தகப்பனும் தங்களோடு நாடகம் பார்க்க வரவேண்டும் என்று அழுதகாரணத்தால் நல்லரவானும் நாடகம் பார்க்க வருவதாய் ஒப்புக்கொண்டு பிடாரித்திடலை நோக்கி குடும்பத்தினருடன் நடக்கத்துவங்கி இருந்தார். இதனை கவனித்து வைத்துக்கொண்ட அவ்வூரின் முரட்டு வாலிபர்கள் சிலர் நெல்திருட முடிவெடுத்து திருவிழாத்திடலுக்கு நேர்மேற்கே இருக்கும் குந்தாரமங்கலம் எனும் திடலில் கிடக்கும் இராமநாயக்கனின் நெல்பட்டறையை நோக்கி நடக்கலாயினர்.

நாடகத்தில் தர்ப்பைப்புல் பறிக்கப்போன மகனைக்காணாமல் சந்திரமதி அழுது புலம்பிகொண்டிருந்தார். ஊரே மெய்மறந்து நாடகத்தில் கவனம் வைத்திருப்பது போன்றே காட்சியில் லயித்துபோயிருந்த நல்லரவானுக்கு சட்டென்று பொறிதட்டியது.

அய்யோ!! ஊர்வலம் போவாமல் கேனைத்தனமாக நாடகத்தில் லயித்துவிட்டோமே!! என்று சுதாரித்துகொண்டு மனைவியிடம் விடைபெற்று, தூங்கி கொண்டிருக்கும் அரனையனை நெற்றியில் முத்தமிட்டு நல்லரவான் அங்கிருந்து அகன்றார். திடலில் இருந்து நேரடியாக புறப்பட்டுவிட்டதால் நல்லரவான் வழக்கமாக கையில் வைத்திருக்கும் நீண்டதடியை மட்டுமே தாங்கியபடி மேற்குநோக்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தார்.

பங்குனி உத்திரபவுர்ணமி என்பதால் அந்த கோடைநாளில் நிலவொளி பளீரென இருந்தது, இந்த வெளிச்சமே போதுமென்று நினைத்ததால் அவர் தீப்பந்தமும் எடுக்காமல் வேகமாக குந்தாரமங்கலத்தை குறிவைத்து நடந்து கொண்டிருந்தார். ஊரில் அதிக நிலம் வைத்திருக்கும் இராமநாயக்கரின் நெல்முழுவதும் அங்குதான் பட்டறை போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கவனக்குறைவாக இருந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில் சென்றவருக்கு திடலை நெருங்கும் பொழுதே அங்கு ஆளரவம் தெரியவே அடேய்!! யாரடா அது? அங்கு என்ன செய்கிறீர்கள்? என்று சத்தமிட்டவாறே வேகமாக ஓடினார். நெல்திருடிகள் சுதாரிப்பதற்குள் திடலை நெருங்கிய நல்லரவானுக்கு திடலில் நிற்பது யார்யார் என்று நிலவொளியில் தெளிவாக தெரிந்து விடவே அவர்களின் பெயர்களை உச்சரித்து இப்படி சொந்த ஊரிலேயே திருடித்திங்கிறீங்களே உங்களுக்கு வெக்கமாக இல்லையா? என்று கத்தினார். திருட்டு, பாடிக்காவலனுக்கு தெரிந்த பச்சத்தில் அது ஊர்சபைக்கு நிச்சயம் போய்த்தீரும், கொலைக்கு கூட குறைந்த தண்டனைதான் திருட்டுக்கு கடும்தண்டனை என்றுணர்ந்த அந்த நெல்திருடிகள் நிராயுதபானியாக இருக்கும் நல்லரவானை அவர்கள் வைத்திருந்த கத்திமுதலான ஆயுதங்களை கொண்டுத்தாக்க துவங்கினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத நல்லரவான் கைத்தடிக்கொண்டு அவர்களை தாக்கவே, ஒரு சிறுயுத்தம் அங்கு நிகழ்த்தப்பட்டு முடிவில் நெல்திருடவந்த நான்கு பேரால் பாடிக்காவலனான நல்லரவான் கொலைசெய்யப்பட்டார். நெல்திருடிகள் மேற்கொண்டு நெல்லை திருடாமல் அப்படியே போட்டுவிட்டு பதவிசுக்கள் போல நாடகத்திடலுக்கு போய் சேர்ந்தனர்.

பொழுதுவிடிந்து அந்த பக்கமாக வந்தவர்கள் நல்லரவானின் உடலை கண்டு ஊரைக்கூட்டினர். அரனையனின் தாய் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள், நெல்திருட்டை தடுக்கும் பொருட்டு வீரமரணம் எய்திய நல்லரவானுக்கு அந்த இடத்திலேயே ஒரு நடுகல் இடப்பட்டது. திருச்செம்பொன்பள்ளி கூற்றத்து நடுவலதிகாரி கோவிந்தநாயக்கர் அங்கு எழுந்தருளி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார் அதுவென்னவெனில் நல்லரவானின் குடும்பத்தினருக்கு மாதம் மூன்றுகலம் நெல்லை ஊதியமாக ஊர்சபை அளிக்கவேண்டும், அரனையன் ஆயுதப்பயிற்சி பெற்று பாடிக்காவலனாக பொறுப்பு வகிக்க விரும்பினால் அவனை பாடிக்கவலனாக நியமிக்க வேண்டும் என்பதுதான். தற்காலிகமாக தனது காவலர்களில் இருந்து இருவரை அவ்வூருக்கு பாடிக்கவலனாக நியமித்துவிட்டு அரனையான் ஆயுதப்பயிற்சி பெறவேண்டின் செம்பொன்பள்ளிக்கு வந்து தன்னை சந்திக்கும் படிகூறிவிட்டு போய்சேர்ந்தார் அவர்.

வருடங்கள் இரண்டு ஓடியது வயது பதினைந்து ஆகியது அரனையானுக்கு. அவனது தாய்க்கு அவன் பாடிக்காவலன் பணிக்கு செல்வதில் துளியும் விருப்பம் இல்லையென்பதால் அவன் ஆயுதப்பயிற்சி பெறுவதற்கு இதுவரை அனுமதி அளிக்காமல் இருந்தாள். இனியும் பொறுப்பது தாமதம் என்று உணர்ந்த அரனையான் தாயிடம் சொல்லிக்கொள்ளாமலேயே ஒருநாள் கோவிந்தநாயக்கரை போய்பார்த்தான் அவரும் திருஇந்தளூர் வளநாட்டு பயிற்சிப்பள்ளிக்கு முறிகொடுத்து அனுப்பினார்.

வாள்வீச்சு, ஈட்டிஎறிதல், வளைஎறி, சிலம்பம், குதிரையேற்றம் போன்றவற்றை மூன்று ஆண்டுகளில் முறையாக கற்றான் அரனையன். இடையில் ஓரிருமுறை கிராமத்திற்கு சென்று தாயைப்பார்த்து வந்தான். பயிற்சியினை முடித்துக்கொண்டு ஆணேறுபோல வடிவெடுத்து ஊர்சபை முன்பு கைக்கட்டிநின்று பாடிக்காவலன் பொறுப்பு கேட்டான். ஊர் அவனது திறமையை பரிசோதிக்க எண்ணியது, வாள்சுழற்றி வலைஎறிந்து ஈட்டியை தூரத்தில் இருக்கும் மரமொன்றில் எறிந்து தைத்துக்காட்டினான். ஊர்சபை ஆரவாரம் செய்தது. பாடிக்கவலனாக நியமித்து மாதம் ஐந்துகலம் நெல் ஊதியமும் பிடாரிதிருவிழாவில் முதல் மரியாதையும் என்று ஓலை எழுதி கொடுத்தது. அதனை பணிந்து பெற்றுக்கொண்ட அரனையான் தந்தையின் தியாகத்திற்காக மாதாமாதம் வழங்கப்படும் மூன்றுகலம் நெல் இனி தன்குடும்பத்திற்கு தேவையில்லை என்று கூறினான். ஊர்சபை அவனது நேர்மையை பாராட்டியது பெற்றதாய் உள்ளம் பூரித்து போனாள்.

இந்த மூன்று ஆண்டுகளில் அவளுக்கு துணையாக பிறந்த இடத்தில் இருந்து வந்து உடன்தங்கியிருந்த அண்ணன்மகள் நல்லமங்கையும் அகம் குழைந்து போனாள், தன் ஆசைக்காதலன் உருவத்தையும் உள்ளதையும் கண்டு பூரித்து போனாள்

ஆனால் ஊர்சபை அவனுக்கு வேறொரு வாய்ப்பு வழங்கியது, உன் தந்தையின் உயிர்த்தியாகத்திற்கு வழங்கப்படும் சன்மானத்தை நிறுத்துவது பொருத்தமாக இருக்காது அதனால் அதற்கீடாக வேறு ஏதேனும் ஊர்சபையிடமிருந்து நீ பெற்றுக்கொள்ளலாம்.

சற்று யோசித்த அரனையான் தனக்கொரு குதிரை வேண்டும் என்றுகேட்டு வாய்புதைத்து நின்றான். சரிதான்!! தானொரு வீரன் என்பதை நிரூபிக்கிறான் என்று சபை மகிழ்ந்தது. சில வயிற்றெரிச்சல் பேர்வழிகளின் வயிறுபுகைந்தது. இரண்டு பொற்காசு மதிப்பில் அரனையனுக்கு ஒரு வெள்ளைநிற உயர்ந்தகுதிரை நடுவலதிகாரியிடம் இருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஓராண்டுகாலத்தில் ஊர் அவனுக்கு வழங்க வேண்டிய முப்பத்தாறு கலநெல்லின் விலைதான் அந்தகுதிரையின் விலை என்றாலும் மொத்தமாக ஒருகுதிரை என்பது ஊரில் பலருக்கு மனக்கேதத்தை உண்டாக்கியது. சபையிலொருவன் எழுந்துநின்று பேசினான். ஒரு சாதாரண பாடிக்காவலனுக்கு இத்துணை முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே!! நமது பிடாரிக்கோயில் முன்புபோல் இப்பொழுது இல்லை, கடந்த ஆண்டு இங்கு எழுந்தருளிய பெரியநாயக்க மன்னர் பத்தாயிரம் கழஞ்சு மதிப்புள்ள நகைகளை பிடாரிக்கு வழங்கி சென்றுள்ளார் அந்த நகைகளுக்கும் பாடிக்காவலந்தான் பொறுப்பு இவற்றுக்கு அரனையான் தகுதி உடையவந்தானா என்று சிந்தித்து முடிவெடுங்கள்

ஊர்திகைத்தது, அரனையான் முகத்தில் கருமை படர்ந்தது. அவன் இரண்டடி நடந்துவந்து சபையின் முன்பு மண்டியிட்டு, பிடாரியம்மன் நகைகளுக்கும் ஊரின் பாதுகாப்புக்கும் குந்தகம் நேர்ந்தால் இந்த அரனையான் நவகண்டம் கொடுத்து அந்தக்கடனை தீர்ப்பான் இது என் தாயாணை!! என்று நிலத்தில் அறைந்து சத்தியம் செய்தான். ஊர் வாயடைத்து போனது, சபை எழுந்து நின்று வணங்கியது, அரனையனின் தாயும் நல்லமங்கையும் பதறிப்போனார்கள். சபைகலைந்தது.

வாலிபன் ஒருவன் இருக்கும் இல்லத்தில் வயதுக்குவந்த முறைப்பெண் ஒருத்தி இருப்பது தகாது என்றெண்ணிய மங்கையின் தகப்பன் வந்து அவளை அழைத்து சென்றார். போவதற்குமுன் மங்கையானவள் அரனையனை தனியாக சந்தித்து, என்கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறுனா அது உன்கையாலதான் இருக்கணும், எங்கப்பன்ட்ட வந்து பொண்ணு கேளு என்று கூறிச்சென்றாள். அரனையனுக்கும் அவள்மீது ஆசைதான்.

கொல்லையில் காடுசுத்தபடுத்தும் பொழுது அரனையனின் தாய் ஒருநாள் பாம்புகடித்து செத்துபோனாள். தனித்து நின்ற அரனையனை திருமணம் செய்து கொள்ளும்படி ஊரார் வேண்டினார்கள், பெண்கொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாய் வைத்துக்கொள்ளவும் சிலர் விரும்பினார்கள் என்றாலும் அரனையன் விரும்பியது மங்கையைத்தான். ஊரில் நல்லபெயர், அதிக வரும்படி உள்ள உத்தியோகம் கொண்ட மாப்பிள்ளைக்கு பெண்கொடுக்க நீ நான் என்று போட்டிபோடும் காலத்தில் மங்கையின் அப்பன் மறுத்துவிடுவானா என்ன? என்ற எண்ணத்தில் சுற்றமும்நட்பும் புடைசூழ தட்டுதாம்பாளங்களுடன் பெண்கேக்க சென்றவனுக்கு அவமானமே மிஞ்சியது.

ஏற்கனவே பாடிக்காவலனாக இருந்து என் தங்கையை பாதியில் முண்டச்சியாக்கிய இவன் அப்பனுக்கு பெண்கொடுத்து யாம் அனுபவித்த வேதணைகள் வேண்டியமட்டும் மிச்சம் உள்ளது, இதில் என்மகளையும் இவனுக்கு கொடுத்து அவளையும் வைதவ்யம் எய்தவைக்க எங்களுக்கு விருப்பம் இல்லை போதாதக்குறைக்கு இவன்வேறு நவகண்டம் கொடுப்பதாய் சபதம் செய்துள்ளான் அதனைத்தெரிந்தும் பெண்கொடுக்க நாங்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை என்று ஒரேடியாக கைவிரித்தான் மங்கையின் அப்பன்.

அவன் கூறும் தரவு சரியாய் இருப்பதாகவே பட்டது அரனையனுக்கு எனவே மேற்கொண்டு ஏதும் கூறாமல் மெல்லஎழுந்து கூடத்தை விட்டு வெளியேறினான். இதனை உள்ளிருந்து கண்ணோக்கிய மங்கையின் மாந்தளிர் உள்ளம் பதைபதைக்க, அவள் வெளியே ஓடிவந்து

மாமா!! நில்லுங்கள் நூறாண்டு வாழ்ந்தாலும் நொடிப்பொழுது வாழ்ந்தாலும் அது உங்களோடுதான் என்னையும் உங்களோடு அழைத்து செல்லுங்கள் இல்லையெனில் இருக்கிறது கொல்லைபக்க கிணறு, என்றாள்.

என்மானத்தை கெடுக்க மகளாய் பிறந்த மதிகெட்டவளே உள்ளேபோ!! என்றான் அவளது அப்பன். அவள் பிடிவாதமாய் முன்னேறி அரனையனின் கரங்களை பற்றினாள்

இனியொன்றும் பேசுவதற்கு இல்லை அவளை அழைத்துவா அரனையா!! என்றனர் ஊரார். பிடாரியம்மன் கோயிலில் தாலிக்கட்டி இல்லறத்தை துவங்கினர் அரனையனும் மங்கையும் இதோ மூன்றுமாதம் ஓடிவிட்டது.

இத்துணை நாள் இல்லாதொரு சிறுபிணக்கு இருவருக்கும் இன்று ஏற்பட்டுவிட்டது. அதுவென்னவெனில் மங்கையவள் வைத்த மீன்குழம்பை சுவைபார்க்காமல் அரனையன் புறப்பட்டுவிட்டதுதான்.

எப்பொழுது பார்த்தாலும் வேலை!வேலை! ஒருவேளை சோற்றை ஒழுங்காய் தின்னாமல் அப்படியென்ன வேலையோ தெரியவில்லை? என்று கண்களை கசக்கினாள் அவள்

பெண்ணே!! இதென்ன புதிதாயிருக்கிறது? என்றுமில்லாமல் இன்று கண்களை கசக்கி கொண்டிருக்கிறாய்!!

பிறகென்ன? என்றைக்கு தாங்கள் பாடிக்காவல் பொறுப்பெடுத்து வெள்ளை புரவியேறி வலம் வரத்துவங்கினீர்களோ அன்றிலிருந்து ஊரில் திருட்டுபயம் அறவே ஒழிந்து விட்டது இருந்தும் ஏன்தான் இப்படி காஞ்சநீரை காலில்கொட்டி அலைகிறீர்கள்?

சரிசரி அழாதே சோற்றைப்போடு என்றவன் அதனை ஆறஅமர தின்று கொண்டிருந்த நேரம் பிடாரியம்மன்கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருக்கும் நகையை திருடும் நோக்கில் ஐந்துபேர் கொண்ட குழுவினர் ஊரின் கீழ்ப்புறத்தில் நெருங்கி கொண்டிருந்தனர். ஐந்துபேரும் ஆயுதபாணிகளாய் இருப்பதிலிருந்து அவர்கள் சாதாரண கள்வர்கள் அல்ல தொழில்முறை கள்வர்கள் என்று அறிந்துகொள்ளமுடிகிறது. ஊரின் போக்கையும், பாடிக்காவலன் நடவடிக்கைகளையும் கவனமாக ஆராய்ந்து வைத்திருந்து அனைத்திற்கும் தயாராக பிடாரித்திடலில் இருக்கும் புதரில்வந்து மறைந்திருக்கும் அந்த கள்வர்களுக்கு துணிச்சல் சற்று அதிகம்தான் போலிருக்கிறது. இன்னும் சிறிதுநேரத்தில் பாடிக்காவலன் இந்த பகுதி வழியேவந்து உலாத்திவிட்டு செல்வான் பிறகு ஊர்முழுவதும் சுற்றிவிட்டு மூன்று ஜாமம் கழித்துதான் இப்பகுதிக்கு வருவான் என்று அவர்கள் ஒருவருகொருவர் பேசிகொண்டிருந்த நேரத்தில் தொலைவில் குதிரைக்குளம்படி ஒசைக்கேட்பதை வைத்து பாடிக்காவலனான அரனையன் வந்துகொண்டிருக்கின்றான் என்று அமைதி காத்தனர் அந்த ஐந்து கள்வர்களும்

அரனையன் பிடாரிக்கோயிலின் வாசலில் குதிரையைநிறுத்தி இறங்கி மண்டியிட்டு அன்னைக்கு ஒரு வணக்கத்தை போட்டான். பிறகு மெல்ல கோயிலை சுற்றிவந்து அணுவணுவாக ஆராய்ந்தான், ஆலயத்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தவனுக்கு வாசல் பகுதியிலேதோ சலங்கை சத்தம் கேட்பதுபோல இருந்தது. கள்வன் ஒருவனின் கால்கழலில் இருந்து வந்த ஓசைதான் அது. துணுக்குற்ற அரனையன் அவசரமாக வாயிற்பகுதிக்கு சென்றான், திரும்பவும் உற்று கவனித்தான் ஒருவேளை பிரமையாக இருக்குமோ? என்று எண்ணியவனுக்கு பிறகுதான் அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வரவே ஓ!! அன்னை வெளியே புறப்படபோகிறாள் போலிருக்கிறது என்று எண்ணிகொண்டான். பிறகு குதிரையில் ஏறி கீழ்த்திசை எல்லைவரை ஒருமுறை சென்று பிடாரிக்கோயிலை தாண்டி மேல்திசையில் இருக்கும் குந்தாரமங்கலம் நோக்கி குதிரையை விரட்டினான்.

சலங்கை ஒலி எழுப்பிய கள்வனுக்கு புதருக்குள்ளேயே பளார்!! என்று அறைவிழும் சத்தம் கேட்டதை தொடர்ந்து ஒவ்வொருவராக புதரைவிட்டு வெளியேறினர். ஆலயத்தின் கதவில் தொங்கும் பூட்டில் கையோடு கொண்டுவந்திருக்கும் கள்ளசாவிகளை வைத்து பொருத்தி பார்த்தனர். பலசாவிகளுக்கு அசைந்து கொடுக்காத அந்த பூட்டு மடக் என்று ஓசை எழுப்பி கடைசிகட்டமாக திறந்து கொண்டுவிட்டது. இருவர் வாயிலில் காவலிருக்க மூவர் உள்ளே சென்றனர், மெலிதாக எரியும் நெய்விளக்கொளியில் அன்னையின் முகம் அமைதி தழுவ காட்சி அளித்தது, மூன்று கள்வர்களும் தரையில் விழுந்து பிடாரியை வணங்கிவிட்டு எழுந்துபோய் சிலையின் கழுத்தில் இருக்கும் மூன்றுவட காசுமாலையை கழற்றிய அதேநேரம் குந்தார மங்கலத்தில் இருந்த அரனையனின் மனது சில்லென்று துணுக்குற்றது. அந்த சலங்கையொலி எப்படி ஏற்பட்டிருக்கும்? ஒருவேளை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோமா? இதுவரை ஒருவெள்ளிக்கிழமையிலும் கேட்காத ஓசை இன்றெப்படி கேட்டது? என்று ஆயிரம் கேள்விகள் அவன் மனதை பிசையவே குதிரையை கிளப்பிக்கொண்டு மீண்டும் கோயில் திசை நோக்கி விரைந்தான். தூரத்தில் இருந்து நோக்கும் பொழுதே ஆலையவாசலில் ஆளரவம் தெரிந்ததை ஒட்டி சுதாரித்த அரனையன் தன் ஆயுதங்களை எடுத்துகொண்டு குதிரையை விட்டிறங்கி சந்தடி செய்யாமல் ஆலயத்தை நெருங்கவும் கள்வர்கள் பிடாரியின் நகையை எடுத்துகொண்டு அங்கிருந்து புறப்படவும் சரியாக இருந்தது.

அடேய் திருட்டுநாய்களா! என்று கூவியபடி வாளை உருவிக்கொண்டு ஓடினான் அரனையன். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த கள்வர்கள் சிறிது அதிர்ச்சியடைந்து அவரவர்களும் தங்களுடைய வாட்களை உருவிக்கொண்டனர். கண்இமைக்கும் நேரத்தில் வாட்கள் களீர் களீரென்று மோதிக்கொண்டன, அந்த ஓசை கிழக்கிலிருந்து கிளம்பி வந்த காற்றில் கலந்து ஊரைநோக்கி போய் உறங்காமல் கிடக்கும் ஒருசிலரின் கவனத்தை ஈர்த்தது. வெளியே வந்து பார்த்த அவர்கள் பிடாரித்திடலில் ஒரே களேபரமாய் இருப்பதை உணர்ந்து ஊரில் உள்ள மற்றவர்களை எழுப்பிக்கொண்டு தீப்பந்தங்களை கொளுத்திக்கொண்டு திடலுக்கு விரைந்தனர். ஒற்றை ஆளாய் ஐந்துபேரை சமாளித்து கொண்டிருந்த அரனையன் வாள்சுழற்றுவதில் ஒரு மாவீரன் என்று அந்த கள்வர்களுக்கு சிறிது நேரத்திலேயே புரிந்து விட்டிருந்தது. இருந்தும் சற்றும் சளைக்காமல் ஈடுகொடுத்து கொண்டிருந்தனர் அந்த ஐந்து கள்வர்களும். இனியும் தாமதிப்பது தகாது என்று உணர்ந்த அரனையன் ஒருகையால் வாலை சுழற்றிக்கொண்டே மறுகையால் இடுப்பில் சொருகியிருந்த பட்டாகத்தியை உருவி ஒருகள்வனின் நெஞ்சை நோக்கி வீசினான் அது பறந்துபோய் அந்த கள்வனின் மார்பை பிளந்து அவனை மண்ணில் சாய்த்தது. இதனை மற்ற நால்வரும் சுதாரித்த கணத்தில் மறுபக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த வீச்சரிவாளை ஒருவன் மீது அரனையன் பிரயோகிக்க அவனும் இரத்தவெள்ளத்தில் விழுந்தான். அதன்பிறகு மற்ற மூவரையும் சமாளிப்பது சுலபமாய் இருந்தது அவனுக்கு. இருவர் மரணத்தில் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த மற்றமூவரின் வாளின் வேகம் குறைவதை வைத்து சட்டென்று ஒருவனின் கழுத்தை நோக்கி அரனையன் வாள்வீச அந்த கள்வன் தலைவேறு முண்டம் வேறானான். அதே வேகத்தில் இன்னொருவனின் வயிற்றில் வாளை பாய்ச்சிய அரனையன் சுதரிப்பதற்குள் ஐந்தாமானவன், நகை நம்மிடம் தான் இருக்கிறது இனி போராடி உயிர்விடுவதைவிட ஓடித்தப்பிப்பது சிறந்தது என்று எண்ணி நகையுடன் ஓட்டமெடுத்தான்.

அரனையான் இடுப்பில் இருந்த வளைஎறியை ஐந்தாம் கள்ளனின் மீது வீசவே அது அவனது தலையை நச்சென்று தாக்கியது. அவன் அம்மா!! என்று அலறியபடி அங்கேயே விழுந்தான். ஓடிச்சென்று கள்ளனின் இடுப்பில் இருந்த பிடாரியின் நகையை அரனையன் எடுக்கவும் ஊர்மக்கள் முழுவதும் திடலில் கூடவும் சரியாய் இருந்தது. ஓடிப்போய் மயங்கி விழுந்த ஐந்தாம் கள்ளனை ஊர்விடலைகள் சிலர் அடித்தே கொன்றனர். நான்குபேரை வேட்டையாடி ரௌத்திர ஸ்வரூபனாய் நின்றிருந்த அரனையனை ஊர்மக்கள் நன்றியுடன் நோக்கி கையெடுத்து கும்பிட்டனர்.

மங்கை அங்கு ஓடிவந்து அன்புக்கணவனின் வீரதீரத்தை கண்டு உள்ளம் பூரித்து போனாள். ஊர் சபைத்தலைவரிடம் அன்னையின் ஆபரணத்தை ஒப்படைத்தான் அரனையன். அவர் கோயில் பூசாரியிடம் ஒப்படைத்து மீண்டும் பிடாரிக்கு பூட்டச்சொன்னார். அப்பொழுது அரனையன்,

நிலுங்கள் ஐயா!! என்னுடைய காவல் பொறுப்பிலிருக்கும் ஊரில் அன்னை பிடாரியின் தெய்வ ஸ்வரூபம் கள்வர்களின் கரங்கள் தீண்டபெற்று நகைத்திருட்டு நடக்கும் வரை போனது முழுக்க முழுக்க எனது கவனக்குறைவே அன்றி வேறில்லை. அன்னைக்கும் இந்த ஊருக்கும் இத்தகைய களங்கம் உண்டாகியிருப்பது என்பொருட்டுதான் என்பதால் ஊர்சபையில் சபதமிட்டவாறு நான் நவகண்டம் கொடுப்பதுதான் சாலச்சிறந்தது, முதலில் நான் நவகண்டம் கொடுக்கிறேன் பிறகு அன்னைக்கு நகையை பூட்டுங்கள் என்று ஆணித்தரமாக கூறினான்,

ஊர் திகைத்தது, தாய்மார்கள் யோசித்து செய்யப்பா!, வேண்டாமப்பா! என்று கதறினர். சபையதிகாரிகள் முன்வந்து சமாதானம் செய்தனர். ஆனால் எதுவும் அரனையனின் காதுகளில் ஏறவில்லை நவகண்டம் உறுதி அனைவரும் விலகுங்கள் என்றான். அனைவரும் விலகினர். அவன் ஓரமாக நின்றிருக்கும் மங்கையை பார்த்தான், அவளது முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை கண்ணீர் மட்டுமே வழிந்து கொண்டிருந்தது.

இதனை சம்மதமாக ஏற்றவன் பிடாரிக்கோயிலின் பின்புறம் இருந்த மூங்கில்குத்து ஒன்றில் இளமூங்கில் மரமொன்றை வெட்டியெடுத்து வந்து தரையில் வாளால் குழிபறித்து நட்டான்.

பிறகு தனது தலைக்குடுமியை அவிழ்த்து அதன் நுனியை மூங்கில் கம்பின் நுனியின் இறுகக்கட்டி பிடாரியை நோக்கி மண்டியிட்டு அமர்ந்தான். தன்னுடைய நீண்ட வாளை கையில் எடுத்துக்கொண்டு,

வாழ்க்கை கிராமத்தின் காவல் தெய்வமான பிடாரியின் நகையானது திருட்டுபோகும் அளவிற்கு கவனக்குறைவாக இருந்த பாடிக்காவலனாகிய நல்லரவான் மகனான அரனையான் எனும் நான் குற்றத்திற்கு பொறுப்பேற்று அன்னையின் கோபம் தீரும் பொருட்டு நவகண்டம் கொடுக்கிறேன் என்று கூறியபடி மேலும் குனிந்தான், தலைமுடியில் முடியபட்டிருந்த இளமூங்கில்கழி மேலும் வளைந்தது,

தாயே!! என் நவகண்டத்தை ஏற்றுக்கொள் என்று உரக்க கத்திய அரனையான், கைவாளை கொண்டு தன்கழுத்தை நோக்கி அடித்தான். அடித்த வேகத்தில் கழுத்து துண்டாகி தலைமட்டும் மூங்கில் கழியுடன் மேலெழும்பி நாலாப்புறமும் இரத்தம் தெறிக்க அலைந்தது. அரனையனின் உடல் தரையில் கிடந்தது துடித்தது, ஊர் கதறியது. பெண்கள் கண்மூடிக்கொண்டனர், ஆண்கள் சென்னிமேல் கரம்கொண்டு வணங்கினர். மங்கை ஓடிவந்து மூங்கில் கழியின் உச்சியில் தொங்கும் தலையை பற்றிகொண்டு சிறிது நேரம் அழுதாள். பின் சட்டென்றுவிலகி கீழே கிடந்த அரனையனின் வாளை எடுத்து, நாதன் இல்லாத உலகத்தில் இந்த நாயிக்கு என்ன வேலை? என்று கூவியபடி அதனை வயிற்றில் பாய்ச்சி கொண்டவள் தரையில் சாய்ந்து உயிரை விட்டாள்.

கண்ணீர் விட்டு கதறியது ஊர். விடிந்த நேரத்தில் நடுவலதிகாரி கோவிந்த நாயக்கர் வந்து இருவரது உடலுக்கும் வணக்கம் செலுத்தி பிறகு அந்த உடல்களை பிடாரித்திடலுக்கு மேற்கே இருக்கும் மற்றொரு திடலில் புதைக்க ஆணையிட்டார். இருவரையும் புதைத்த இடத்தில் அவசரமாக சிறிய மாடம் ஒன்று எழுப்பப்பட்டு அவர்கள் நினைவாக இரண்டு கருங்கற்கள் அதில் ஸ்தாபிக்க செய்து இரண்டு திருவிளக்குகள் ஏற்றி வைத்து அதற்கு மங்கையரனையன் கோயில் என்று பெயரிட்டார். கோயிலுக்கு தினம் நெய்விளக்கு ஏற்றும்படி மூன்று பசுக்களை ஊர்சபைக்கு தானமாக வழங்கினார். காலப்போக்கில் மங்கையரனையன் கோயில் மங்கார்னன் கோயில் என்று பெயர் திரிந்து இன்றளவும் வழிபாட்டில் உள்ளது. மங்கையும் அரனையனும் ஊரைக்காவல் காக்கும் தெய்வங்களாக உருபெற்று கிழக்கு நோக்கி கல்வடிவில் அங்கு உறைந்தனர்.

– நிறைந்தது

கதையின் கதை

எங்கள் ஊருக்கு கிழக்கே கையில் நீண்ட வாளுடன் தம்பதி சமேதராய் மண்பூட சிலாரூபத்தில் அருள்பாலிக்கும் மங்கார்னன் சுவாமி என்னும் தெய்வம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது என்று ஊர் பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி இந்த சுவாமியின் புதுமைதான் என்னவென்று விசாரித்த எனக்கு, அரனை என்பவர் ஊர் தலையாரியாக இருந்த பொழுது நடந்த திருட்டுக்கு பொறுப்பேற்று அவர் தன்தலையை தானே அறிந்து கொண்டாராம், துக்கம் தாளாத அவரது மனைவி மங்கையும் உயிரைவிட அவர் நினைவாக எடுக்கப்பட்ட கோயில்தான், மங்கார்ணன் கோயில் என்ற செவிவழிக்கதை சொல்லப்பட்டது. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை எங்கள்பகுதி நாயக்கர்கள் வழி ஜமீன் ஆட்சியின் கீழ் இருந்தது. அதனால் இந்த கதையும் நாயக்கர் காலத்தில் நடப்பதாய் புனைந்து விரித்து எழுதியுள்ளேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *