(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பிசிர் ஆந்தையார் என்ற பெயரைக் கேட்டாலே வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? பிசிர் என்பது ஒர் ஊர்; பாண்டி நாட்டில் உள்ளது. ஆந்தையார் அந்த ஊரில் இருந்த புலவர். நன்றாகப் படித்தவர்; அருமையான கவிஞர்: மிகவும் தங்கமான குணம் உடையவர். அவர் எவ்வளவு நல்லவரோ அவ்வளவு நல்லவர்கள் அவர் வீட்டில் இருக்கிற எல்லோரும்.
அப்போது மதுரையில் ஒரு பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு அறிவுடை நம்பி என்று பேர். அரண்மனைச் செலவு அதிகம் ஆகிவிட்டது என்று அவன் வரி அதிகமாகப் போட்டுவிட்டான், அதனால் மக்களுக்குத் துன்பம் உண்டாயிற்று. அரசனிடம் போய்த் தங்கள் கஷ்டத்தைச் சொன்னால் கேட்பானே கேட்கமாட்டானே என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. பயப்பட்டால் நடக்குமா? வரிப் பாரம் அவர்களை அழுத்தியது. அரசர்கள் எவ்வளவுதான் அதிகாரம் உடையவர்கள் ஆனாலும், புலவர்களுடைய அறிவுக்கு மதிப்புப் கொடுத்து அவர்கள் சொல்வதைக் கேட்பார்கள். புவியரசரைவிடக் கவியரசருக்கு அந்தக் காலத்தில் மதிப்பு அதிகம்.
பிசிர் ஆந்தையாரிடம் போய்க் குடிமக்கள் தங்களுடைய குறையைச் சொல்லிக்கொண்டார்கள். அவர், “நான் அரசனைப் பார்த்து என்னால் இயன்றதைச் செய்கிறேன்” என்று சொல்வி அவர்களை அனுப்பினார். பிறகு மதுரைக்கு வந்து பாண்டியன் அறிவுடை நம்பியை நாடிச் சென்றார்.
அவரைக் கண்டவுடன் பாண்டிய மன்னன் வரவேற்று உபசாரங்கள் செய்தான். உயர்ந்த இடத்தில் அமரச் செய்து பேசிக்கொண்டிருந்தான். பேச்சுக்கு நடுவிலே கவிஞர், மெல்ல யானையைப்பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தை உண்டாக்கிக்கொண்டார்.
“ஒருவன் யானை ஒன்றை வைத்திருந்தான். அவனுக்குச் சின்ன வயல் ஒன்றும் இருந்தது. அந்த வயல் விளைந்து வந்ததும் நெல்லைச் சேமித்து வைத்தான். தான் சோறு சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் யானைக்குக் கவளம் கொடுப்பதை மறக்க மாட்டான். அந்த வயலில் விளைந்த நெல், யானைக்கும் அவன் குடும்பத்துக்கும் போதுமானதாக இருந்தது. ஒரு நாள் அந்த வயலுக்கு ஆபத்து வந்துவிட்டது.”
“என்ன ஆபத்து?” என்று பாண்டியன் கேட்டான்.
“யானேயினாலே வந்த ஆபத்து.”
“பழகின யானைதானே?”
“ஆமாம், பழகின யானைதான். அதற்கு என்னவோ ஒரு நாள் உற்சாகம் உண்டாகிவிட்டது. வயலில் விளையும் நெல்லை அறுத்து வந்து, சோறாக்கி, ஆண்டு முழுதும் கொடுத்து வந்தது பிடிக்கவில்லை போல் இருக்கிறது! நேரே வயலிலே புகுந்து விட்டது.”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன?”
“ஒரே குழப்பந்தான். வயல் முழுவதையும் அழித்துவிட்டது. அதுவாவது வயலில் இருந்த பயிர் முழுவதையும் தின்றதா? இல்லே, இல்லை. அதன் வாய்க்குள் போனதைவிடக் காலால் துகைபட்டு அழிந்தது அதிகம்.”
“அந்த யானைக்காரன் என்ன ஆனான்?”
“அதை மறுநாளே விற்றிருப்பான். அவனைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யானையாவது விலங்கினம். அறிவுடையவர்கள் அந்த யானையைப்போல் நடந்துகொண்டால் எவ்வளவு துன்பம் உண்டாகும் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.”
“நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே” என்று கேட்டான் அரசன்.
“அரசர்கள் யானைக்குச் சமானமானவர்கள். குடிமக்கள் வயலைப் போன்றவர்கள். அளவு தெரிந்து வரி வாங்கினால் குடி மக்களுக்கும் நல்லது அரசர்களுக்கும் நல்லது. அளவுக்கு மிஞ்சிக் குடிகளிடம் வரி தண்டுவதாக இருந்தால், யானே புகுந்த வயல் போலத்தான் நாடு ஆகிவிடும்.”
அவர் இதைச் சொன்னபோது அரசனுக்குச் சொரேர் என்றது. கவிஞர் தன்னை நினைத்துத்தான் சொல்கிறாரென்பதை உணர்ந்துகொண்டான். புலவர் மறுபடியும் பேசலானார். “அரசன் நல்லவனாக இருந்தாலும் உடன் இருக்கும் மந்திரிகள் அவனைக் கெடுத்துவிடுகிறார்கள். வரி போடலாமா என்று அரசன் கேட்டால் தாராளமாகப் போடலாம் என்று தலையாட்டுகிறார்கள். குடிகள், அந்த அரசனே அண்டுவதற்குப் பயப்படுகிறார்கள்” என்று சொல்லி நிறுத்தினார்.
பாண்டியன் தான் செய்த பிழையை உணர்ந்துகொண்டான். புதிதாகப் போட்ட வரியை நீக்கிவிட்டான்.
புலவருடைய புகழ் தமிழ் நாடெங்கும் பரவியது. சோழ காட்டில் உறையூரில் கோப்பெருஞ் சோழன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்குத் தமிழ்ப் புலவர்களிடம் அளவு கடந்த அன்பு. பிசிராங்தையாரைப் பற்றி அவன் கேள்வியுற்றான். அவரிடம் அவனுக்கு அன்பு உண்டாயிற்று. மதுரைப் பக்கத்திலிருந்து யார் வந்தாலும் பிசிராங்தையாரைப் பற்றி விசாரிப்பான். மதுரைக்குப் போகிறவர்கள் மூலம் அந்தக் கவிஞரிடம் கொடுக்கும் படி பரிசுகளைக் கொடுத்தனுப்புவான். பிசிராங்தையாருக்கும் கோப்பெருஞ் சோழனிடம் பேரன்பு உண்டாயிற்று. அவனைப்பற்றிய விவரமெல்லாம் அவர் தெரிந்துகொண்டார்.
இந்த இரண்டு பேரையும் தெரிந்து கொண்ட புலவர்களும் மற்றவர்களும் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் ஆழ்ந்த நட்பைக் கண்டு வியப்படைந்தார்கள், ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. ஆனாலும் எவ்வளவு சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள்! நட்புக்கு உள்ளந்தான் காரணம் போல் இருக்கிறது? என்று பேசிக்கொண்டார்கள்.
பிசிராங்தையார் கோப்பெருஞ் சோழனேப் புகழ்ந்து கவிதை எழுதி அனுப்புவார். அதைப் பார்த்துப் பார்த்து ஆனந்தக் கூத்தாடுவான் சோழ அரசன். ஒரு நாள் அவர் வானத்தில் ஓர் அன்னப்பறவை பறப்பதைப் பார்த்தார். அது அன்னமோ வேறு பறவையோ நிச்சயம் இல்லை. ஆனாலும் அவருக்கு அது அன்னம்போலத் தோன்றியது. இமயமலையில் மானச சரஸ் என்ற பெரிய ஏரி இருக்கிறது. அங்கே அன்னங்கள் வாழும். அன்னம் தமிழ் நாட்டில் தென்கோடியில் உள்ள கன்யாகுமரிக்குச் சென்று, அங்குள்ள மீனை உண்டுவிட்டு, இமய மலைக்குப் பறந்து செல்வதாகக் கவிஞர் எண்ணினார். அதைப் பார்த்து ஒரு பாட்டுப் பாடினார். “ஏ ஆண் அன்னமே! நீ குமரி மீனை உண்டு இமய மலைக்குத் தானே போகிறாய்? போகிற வழியில் சோழ நாடு இருக்கிறது. அதில் உள்ள உறையூர் வழியே போனால் கோப்பெருஞ் சோழனுடைய அரண்மனையைக் காண்பாய். அங்கே மெதுவாக உள்ளே போய் அவனைப் பார். நான் பிசிராங்தையாருக்கு வேண்டியவன் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்; உடனே அவன் உனக்கு வேண்டியதைக் கொடுத்து உன் பேடைக்கு நல்ல ஆபரணங்களைக் கொடுப்பான்” என்று ஒர் அழகான பாட்டைப் பாடினார். அன்னம் போயிற்றோ என்னவோ? அந்தப் பாட்டுச் சோழ மன்னனிடம் போயிற்று. அடடா அதைப் பார்த்து அவனுக்கு உண்டான ஆனந்தத்தை என்னவென்று சொல்வது!
சோழன், இனிமேல் நமக்கு ஆட்சி வேண்டாம் என்று உலக வாழ்வை வெறுத்துத் துறவி ஆனான். அப்போதும் பிசிராந்தையாருடைய நட்பை மறக்கவில்லை. அவனுடைய உடம்பு மெலிந்து மரணதசை உண்டாயிற்று. ஒரு முறையாவது பிசிராங்தையாரைக் கண்ட பிறகு உயிர் விட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அவர் நிச்சயமாக வருவார் என்ற நம்பிக்கையும் தோன்றியது. உடன் இருந்தவர்களிடம், “பிசிராந்தையாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மாத்திரம் எனக்கு இருக்கிறது. எங்களிடையே உள்ள நட்பு உத்தம நட்பானால் அவர் நிச்சயமாக வருவார்” என்று சொன்னான். சோழன். உடம்பு சரி இல்லாமல் இருக்கிறான் என்ற செய்தி பிசிராங்தையாருக்குத் தெரியாது. ஆனாலும் அவர் மனசில் ஏதோ ஒன்று, அவரை உந்தியது. உண்மையான அன்பு இருந்தால் இப்படி சேரும். சோழனேப் பார்க்கவேண்டும் என்ற ஆசை மிகுதியாயிற்று. அவர் புறப்பட்டு விட்டார்.
பிசிராந்தையார் உறையூர் வந்து சேர்ந்தார். மாளிகையை விட்டுத் தவச்சாலையில் உயிர் விடுந் தறுவாயில் இருந்த கோப்பெருஞ் சோழனைக் கண்டார். அவர் வரவைக் கண்ட எல்லாரும் வியப்பில் ஆழ்ந்தனர். “என்ன ஆச்சரியமான நட்பு! ஒருவரை ஒருவர் பார்த்ததே இல்லே. அரசன் அவர் வருவார் என்று சொன்னான். அவருக்குச் செய்தி சொல்லுவார் யாரும் இல்லை. அப்படியிருந்தும் இவன் சொன்னதுபோலவே கவிஞர் வந்துவிட்டாரே! இரண்டு பேருடைய மனசும் அப்படி ஒத்திருக்கின்றன!” என்று பேசிக்கொண்டார்கள். அன்புக்கு எத்தனை ஆற்றல் இருக்கிறதென்பதை எண்ணி வியந்தார்கள்.
பிசிராந்தையாரைப்பற்றி அவர்கள் பல காலமாகக் கேள்விப்பட்டிருந்தார்கள். அவர் தலை நரைத்த கிழவராக இருப்பார் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் அக்கவிஞர் தலையில் ஒரு நரைமயிர் இல்லை. அதுவேறு அவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. “புலவர் பெருமானே! உங்களைப்பற்றிப் பல வருஷங்களாக நாங்கள் கேள்விப்படுகிறோம், உங்களுக்கு நிரம்ப வயசாகி இருக்கவேண்டுமே ஆனாலும் தலை நரைக்கவில்லையே! என்ன மருந்து சாப்பிட்டீர்கள்?” என்று கேட்டார்கள். அவர் என்ன சொன்னார் தெரியுமா?.
“எப்படி நரைக்காமல் இருக்கிறதென்றா கேட்கிறீர்கள்? எனக்குக் கவலையே இல்லை. என் மனைவி எனக்கு வேண்டியதைச் செய்யும் குணம் படைத்தவள். என் மக்கள் அறிவும் அடக்கமும் உடையவர்கள். என் வேலைக்காரர்கள் என் குறிப்பறிந்து வேலை செய்வார்கள். அரசன் செங்கோலாட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால் நான் கவலையில்லாமல் வாழ்கிறேன். கரைக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம்” என்றார்.
நெடுநாளாகக் காணாமல் மனத்தால் ஒன்றுபட்ட நண்பர்கள் கூடினார்கள். சோழன் அவரிடம் கடைசி விடையைப் பெற்றுக் கொண்டான்: உலக வாழ்வை நீத்தான். “நீ முன்னே போ: நான் பின்னே வருகிறேன்” என்று புலவர் சொன்னார். உடம்பு இரண்டு, உயிர் ஒன்று என்று சொல்லும்படியாக இருந்தது அவர்களுடைய நட்பு. தம் நண்பன் இறந்ததைக் கண்ட புலவர், அவன் இல்லாத உலகத்தில் வாழ விரும்பவில்லை. விரதமிருந்து உயிர் நீத்தார். அதைக் கண்டு மூன்றாவது முறையாகப் புலவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். “நட்பென்றால் இதுவல்லவா உத்தமமான நட்பு!” என்று மக்கள் எல்லோரும் பாராட்டி வாழ்த்தினார்கள்.
– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு