கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 19, 2023
பார்வையிட்டோர்: 3,862 
 
 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-4 | அத்தியாயம் 5-8

1.சந்திர கிரகணம் 

“இகபர செல்வங்களுக்கெல்லாம் இருப்பிடமான கச்சியம்பதி இன்னும் எத்தனை தூரந்தான் இருக்கும்?” என்று நீண்ட பயணத்தினால் அலுத்துக் கொண்ட அந்த வாலிபன், அடர்ந்த கானகத்துக்குள்ளும் நுழைந்த அந்திக் கதிரவனை, மரக்கிளைகளின் ஊடே தெரிந்த இடைவெளி மூலமாகப் பார்க்கப் பிரயாசைப்பட்டான். ஆனாலும் முழுக்கதிரவனும் தெரியாததால் கதிரவனிடமும் சிறிது சீற்றங்கொண்டான். “காட்டை அழித்து நாட்டைப் படைத்ததால் காடவர் என்று பிரசித்து பெற்ற ஆதி பல்லவர் இந்தக் காட்டை மட்டும் ஏன் அழிக்கவில்லை?” என்று மறைந்துவிட்ட அந்தப் பழைய குடிகளையும் நிந்தித்தான். “தேரோடும் வீதிகளும் பழங்குடிகளும் மதிலும் கொண்டு பழைமையும் சிறப்பும் பெற்று விளங்கும் நகரங்களுக்குள் தலைமையானது என்று உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை புகழ்பாடும் அந்த மாநகரத்தை அடைய இதுபோன்ற அடர்ந்த அடவிகள் தேவையா?” என்றும் இதயத்துக்குள் வினவிக் கொண்டான். “நகர்ப்புறக் காடுகளிலும் நாகரிகம் இருக்குமென்று பழைய நூல்களில் படித்தேனே, அந்த நாகரிகம் இங்கு ஏன் காணப்படவில்லை? சில குடிசைகளாவது இருக்கலாமல்லவா?” என்றும் கேட்டுக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். 

ஆனால் அந்த அடர்ந்த காடுகூட அந்தி வேளையில் மனத்தைப் பறிக்கும் அழகுடன் விளங்கியதைக் கவனித்த அந்த வாலிபன் சற்றே திருப்தியும் அடைந்தான். ஆங்காங்கு காற்றின் அசைவினால் நானாவித மலர்கள் உதிரத் தொடங்கின. அவை உதிர்ந்தபோதே அவற்றைத் தாக்கிய அந்திவேளை தங்கக் கிரணங்கள் அவற்றின் நிறங்களை லேசாக மாற்றியது ஏதோ இந்திரஜால வித்தை நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. மரக்கிளைகளின் ஊடே நுழைந்த அந்தி சூரியக் கிரணங்களில் சில அந்த வாலிபனின் நீண்ட வாளின் பிடியிலும் படவே அந்த எதிரொளி இன்னொரு சின்னஞ்சிறு சூரியனைப் படைத்தது. அவன் அமர்ந்திருந்த வெள்ளையும், பழுப்பும் திட்டு திட்டாகக் கலந்த புரவியின் நெற்றி உலோகப் பட்டயம் பெரிதாகப் பளபளத்து அதை தெய்வலோகப் புரவியாக்கியது. 

மாலைவேளை முற்றிக் கொண்டிருந்ததால் பட்சி ஜாலங்கள் எங்கும் இன்பமாகக் கூவத் தொடங்கின. மரப் பொந்துகளுக்குள் புக எண்ணிய அணில்களின் கீச் கீச்சென்ற ஒலியும், எங்கிருந்தோ கேட்ட குயிலின் இனிய குரலும், ஏன்-ஆந்தையின் கரகரத்த அப சப்தமும்கூட இயற்கையின் அந்தச் சூழ்நிலையில் இன்பமாகவே இருந்தன. பத்தொன்பது வயதையே தாண்டியிருந்த அந்த வாலிபன் இந்தச் சூழ்நிலைக்கு மனத்தைப் பறிகொடுத்தான். ஆனாலும் அதை முற்றும் அனுபவிக்கும் உற்சாகமில்லாததாலும் பயணக் களைப்பாலும் ஆசுவாசப் பெருமூச்சை விட்டுத் தனது புரவியின் வயிற்றில் லேசாக உதைத்து அதைச் செலுத்த முற்பட்டான். 

தலைவன் குறிப்பறிந்த அந்தப் புரவியும் மெதுவாகவும் கம்பீரமாகவும் அடவியின் ஒற்றையடிப்பாதையில் நடந்தது. மேலும் இரண்டு நாழிகைப் பயணம் செய்தும் நகர்ப்புறக் குடில்கள் கூடத் தெரியாததால், “தந்தை ஏன் இப்படி என் கண்ணைக் கட்டிக் காட்டில் தவிக்க விட்டார்?” என்று தந்தையையும் கடிந்து கொண்டான். அவர் சொன்னது அப்பொழுதும் நினைவிலிருந்தது அவனுக்கு. ‘மகனே! நீ செல்லுமிடம் நாகரிகத்துக்கு உலகப் பிரசித்தி பெற்றது. ஆனால் அந்த நாகரிகத்துக்கே இழுக்கு வரும் காரியங்கள் அங்கு நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். பசுக்கள் கூட்டம் கூட்டமாக மறைவதாகக் கேள்விப்படுகிறேன். காடுகளில் மேய்ச்சலுக்குப் போகும் பசுக்கள் திரும்புவதில்லையென்ற செய்தி அடிக்கடி வருகிறது. ‘ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்’ என்று குறள் சொல்கிறது. ‘மாட்டின் மடியில் பால் வற்றினாலும், படித்தவர் படிப்பை மறந்தாலும் அங்கு அராஜகம் நடக்கிறது’ என்ற பொருள் உள்ள அந்தக் குறளுக்கு எடுத்துக் காட்டாக இப்பொழுது காஞ்சி இருப்பதாகக் கேள்வி. நீ போய் நிலைமையை ஆராய்ந்து வா. நமது ஆட்சியிலிருக்கும் நாட்டில் இந்தக் குறைகள் கூடாது என்று தந்தை அப்பொழுதும் சொல்வதைப் போலிருந்தது அவனுக்கு. 

ஆகையால் நகர்ப்புறக் காட்டின் அரவமற்ற அமைதியைக் கண்ட அந்த வாலிபன், “தந்தை ஏதோ பழைய கற்பனையி லிருக்கிறார். அஞ்சா நெஞ்சம் படைத்த மறக்குடி வீரர்கள் பசுக்களைப் பகைப்புலத்திலிருந்து ஓட்டி வந்து அவற்றைக் கள்ளுக்கு விலையாக விற்று, தோப்பில் கள்ளைப்பருகிக் கூத்தாடுவார்கள் என்ற பெரும்பாணாற்றுப் படையின் பழைய நாகரிகத்தை இக்காலத்துக்குப் பொருத்திக் கனவு காண்கிறார். சமணம் ஓங்கியுள்ள இக்காலத்தில், அதுவும் காஞ்சியில் இத்தகைய நிலைமை எப்படி நிலவ முடியும்?” என்று தந்தையையும் கண்டித்த வண்ணம் இன்னும் சிறிது தூரம் பயணம் செய்வதற்குள் காட்டில் நல்ல இருள் சூழ்ந்தது. அந்த இருளையும் எட்டாம்பிறை வளர்மதி லேசாசக் கிழித்தாலும் பயணம் மிகக் கடுமையாகவே இருந்தது. எந்தக் கடுமையையும் சுகமென நினைக்கும் அந்த வாலிப வீரன் கஷ்டத்தை அதிகமாகப் பொருட்படுத்தாமலும் புரவியை இஷ்டப்படி நடக்கவிட்டும் அடுத்த அரைநாழிகை பயணம் செய்த போதுதான் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி விளைந்தது. 

அடர்ந்த அந்த அடவியின் அமைதியை திடீரெனக் கிழித்தது ஒரு அலறல்! அதைத் தொடர்ந்து பல கால் நடைகள் ஓடும் பேரரவம், அடுத்து விர்விர்ரென்று பறந்து வந்த வாளிகள் நான்கு பக்கமும் மரங்களில் தைத்து இறகுகள் ஆடி நின்ற காட்சி! இவை யனைத்தையும் கேட்டும் பார்த்தும் சட்டென்று நிமிர்ந்த அந்த வாலிபன் தனது புரவியின் கடிவாளத்தை இழுத்து அதன் கழுத்தில் ஒரு தட்டு தட்ட புரவி வெகு வேகமாகப் பறந்தது. அலறலும் மாடுகள் ஓடும் அரவமும் வந்த திசையை நோக்கிப் புரவியைச் செலுத்திய வாலிப வீரன் கண்களுக்குச் சற்று எட்டஒரு விளக்கு வெளிச்சம் தெரியவே அங்கு விரைந்தான். தூரத்தில் ஒரு மாட்டுக் கூட்டம் ஓடுவது கண்ணில் புலப்படவே அவற்றைச் சுற்றி வளைக்கத் தனது புரவியைச் சக்கிரவட்டமாக வளைத்து ஓட்டினான். புரவி ஆங்காங்கு சென்று வளைத்ததால் மாட்டுக் கூட்டம் ஒன்றாகக் கூடி திரண்டு நிற்கவே புரவியை அவற்றின் ஊடே செலுத்தி சில மாடுகளைத் தட்டிக் கொடுத்தான். சிலவற்றின் மூக்கைத் தடவிக் கொடுத்தான். இப்படி அந்த மாட்டுக் கூட்டத்தில் கைகளைத் துழாவிச் சென்ற வாலிபன் மீண்டும் புரவியைச் செலுத்தி மாடுகளை ஒன்றாக வளைத்து எட்ட இருந்த குடிசையை நோக்கிப் புரவியைச் செலுத்தினான். 

குடிசையை அணுகியதும் எதிரே விரிந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியுற்று புரவியிலிருந்து கீழே குதித்து, மேட்டிலிருந்த குடிசைக்கு முன்னிருந்த சரிவில் உருண்டு கிடந்த ஒரு மனிதனைப் பார்த்தான். அவன் உடலிருந்த நிலையாலும், மார்பில் தைத்திருந்த வாளியாலும் அவன் இறந்து விட்டானென்பதைப் புரிந்து கொண்டு, ‘இந்தக் கொலையைச் செய்தது யாராயிருக்கும்?’ என்று வினா வொன்றைத் தனக்குள் எழுப்பிய சமயத்தில் குடிசைக் குள்ளிருந்து கைவிளக்கு ஒன்றை ஏந்தி ஒரு பெண் வந்தாள். விளக்குடன் வாயிற்படியைத் தாண்ட முயன்ற அவள், எதிரே குனிந்து மாண்டவனை நோக்கிக் கொண்டிருந்த வாலிபனையும் அவனது பெரும் புரவியையும் கண்டதும் குடிசைக் கதவுக் கருகிலேயே நின்று விட்டாள். 

கொலையுண்ட மனிதனை விட்டுக் குடிசைக் கதவுக்கருகில் நின்ற பெண்ணைப் பார்த்ததும், “பெண்ணே இப்படி வா. இவனை யார் கொலை செய்தார்கள்?” என்று வினவினான். 

அந்த வாலிபன் குரலில் பிரதிபலித்த அதிகாரத்தையும் விசாரணை செய்த தோரணையையும் கண்ட அந்தக் காரிகை இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. இருந்த இடத்திலிருந்தே “நீ யார்? எங்கு வந்தாய்?” என்று வாலிபனை நோக்கி வினவினாள். 

“நான் யாரென்பதைப் பற்றி அக்கறையில்லை. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்” என்றான் வாலிபன். 

அப்பொழுதும் அவள் மசியவில்லை. “விபரம் கேட்க நீ யார்?” என்று வினவினாள் அந்தப் பெண். 

“மரணம் ஒன்று ஏற்படும்போது, அதுவும் வாளியால் கொலை நடக்கும்போது, அதை விசாரிக்க யாருக்கும் உரிமையுண்டு. கேள்விக்குப் பதில் சொல்” என்ற வாலிபன் குரலில் கடுமை ஒலித்தது. 

”நான்தான் கொன்றேன். கொல்ல உத்தேசமில்லை. காயப்படுத்த கையை நோக்கிக் கணை எய்தேன். அவன் திடீரெனத் திரும்பியதால் கணை மார்பில் பாய்ந்து விட்டது” என்று விளக்கிய அந்தப் பெண், ”உனக்குத் தெரியவேண்டியது தெரிந்துவிட்டதல்லவா? இனி உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்று சீறினாள். 

அந்தப் பெண்ணை அப்பொழுதுதான் முழுதும் ஏறெடுத்து அவன் நோக்கினான். அவள் பருவத்தால் மலர்ந்திருந்தாள். அவள் அழகு, கவிகள் வர்ணிக்கவே ஏற்பட்டது போல தோன்றியது. கதவில் சாய்ந்து ஒடித்து நின்ற அவள் சாயல் மயிலைப் போலிருந்தது. சந்திரவதனத்தில் செண்பகமொட்டு நாசிக்கு இருபுறத்திலும் இருந்த கண்கள், வேல்களை வீசிக்கொண்டிருந்தன. கோபத்தால் துடித்த செம்பருத்தி உதடு விளக்கின் வெளிச்சத்தில் மாணிக்க ஆபரணமாக மாறி இருந்தது. இடை இருக்கிறதா என்று புரியவில்லை. மற்ற எழுச்சிகள் இடையின் சிறுமையைப் பெரிதும் ஈடு செய்தன. 

மிகவும் அழகாயிருந்த பெண், அந்த வாலிபன் தன்னைப் பார்த்து மலைப்பதைக் கண்டு, “ஏன் நிற்கிறாய்?” என்று கோபத்தைக் குரலில் காட்டினாலும், வந்திருக்கும் வாலிபன் சாதாரணமானவனல்ல என்பதை உணர்ந்திருந்தாள். அவன் வலிய கைகளும், முகத்தில் படர்ந்த குறுநகையும், நின்ற உறுதியும், அவன் எந்த மிரட்டலுக்கும் பணியாதவன் என்பதைப் பறைசாற்றுவதைப் புரிந்து கொண்டாள். அதன் விளைவாக உள்ளே செல்லவும் திரும்பினாள். “சற்று நில் பெண்ணே” என்ற அவன் சொற்கள் அவளை மீண்டும் திரும்ப வைத்தன. 

”உன்பெயரை நான் அறியலாமா?” என்று விளவினான் அவன். 

சற்று சிந்தித்தாள் அவள். “அறியலாம். என் பெயர் தாமரைச் செல்வி” என்று கூறினாள். 

”உன் தந்தை எங்கே?” 

“கடைக்குப் போயிருக்கிறார்.” 

“என்ன கடை?” 

பதிலால் அவன் அதிர்ச்சியடைந்தான். சங்கடம் நிலவிய குரலில் அவள் சொன்னாள், “கள்ளுக்கடை” என்று. 

“கள்ளுக்கடையா!” என்று வியப்புடன் வினவிய வாலிபன் தான் வந்த அலுவலுக்கும் இந்த குடிசைக்கும் பெரும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான். விதிதான் தங்களை இணைத்திருக்கிறது என்றும் சந்தேகமற உணர்ந்து கொண்டான். உணர்ந்ததன் விளைவாக தாமரைச்செல்வியை மீண்டும் ஏறெடுத்து நோக்கினான். அவள் செந்தாமரை வதனத்தில் துன்பம் மிகவும் படர்ந்து கிடந்தது. சந்திரகிரணம் என்றால் கிட்டத்தட்ட இப்படித் தானிருக்கும் என்று நினைத்தான் அந்த வாலிப வீரன். 

2.அழைத்த விழிகள் 

கையிலேந்திய விளக்கின் ஒளியில் அந்தக் காரிகையின் வதனத்தில் துன்பச்சாயை பெரிதும் படர்ந்து விட்டதை தூரத்தி லிருந்தே கவனித்த அந்த வாலிபன் அவள் வாழ்கிகையில் சந்துஷ்டி ஏதுமில்லை என்பதை சந்தேகமறப் புரிந்து கொண்டான். ஆதலால் அவளை நோக்கி, “பெண்ணே! நீ மறக்குடி மகள்தானே?” என்று மிகவும் மெதுவான குரலில் வினவினான். 

அவன் கேள்வியைக் காதில் வாங்கிய அந்தப் பெண்ணின் முகத்திலிருந்து துன்பச்சாயை மறைந்து அந்த இடத்தை சினம் ஆக்கிரமித்துக் கொள்ளவே “நான் எந்தக் குலமகளாயிருந்தால் உனக்கென்ன?” என்று கடுமையான குரலில் வினவினாள். 

வாலிபன் முகத்தில், அவள் கேள்வியினாலும் கேள்வியில் ஒலித்த கடுமையாலும் சிறிதளவேனும் சினம் துளிர்ப்பதற்குப் பதில் அனுதாபமே துளிர்த்தது. அப்படி அனுதாபம் துளிர்த்த குரலில் வினவினான். “நான் கேட்பதற்குக் காரணமிருக்கிறது. இங்கு நீ தன்னந்தனியாக இருக்கிறாய். என் காலடியில் கிடக்கும் சடலத்திலிருந்து இங்கு உன்னை தொந்தரவு செய்ய அடிக்கடி கள்வர்கள் வரலாம், அவர்களை எதிர்க்கும் சக்தியும் வீரமும் துணிவும் உனக்கிருக்கிறது. மறக்குடிப் பெண்களைத் தவிர வேறு யாருக்கும் இத்தகைய துணிவிருக்கக் காரணமில்லை. உங்கள் இனத்தை மறக்குடிவீரர்கள் என்று பழைய நூல்கள் பலவும் அழைக்கின்றன” என்றான். 

அவள் சிறிது சிந்தித்தாள். “ஆம்; நான் மறவர் பெண்தான். மேலும் உனக்கு என்ன தெரிய வேண்டுமோ? அதைக் கேட்டுவிட்டுச் சென்றுவிடு” என்று அவள் கூறினாள். 

அவன் அடுத்த கேள்வி அவளை பிரமிக்கச் செய்தது. “இந்தப் பசுக்களை எங்கிருந்து உன் தந்தை திருடினார்?” என்று வினவிய வாலிபன் அவளைக் கூர்ந்து நோக்கினான். 

அவன் கேள்விக் கணை அவள் இதயத்தில் பாய்ந்திருக்க வேண்டும். “இதை நாங்கள் திருடியதாக யார் சொன்னது உனக்கு?” என்று அவள் கேட்டாள், சினமும் தயக்கமும், ஏன்-அச்சமும் கூடக் கலந்த குரலில். 

வாலிபன் அவள் முகத்தில் படர்ந்த அச்சத்தைக் கவனிக்கவே செய்தான். “சங்க இலக்கியம் கூறுகிறது” என்றான் நிதானமாக. 

“பெரும்பாணாற்றுப் படையைச் சொல்கிறீர்களா? அதெல்லாம் பழைய கதை. இப்பொழுது காலம் மாறி விட்டது” என்றாள் தாமரைச் செல்வி. 

அவள் பதில் அந்த வாலிபனுக்குப் பேரதிர்ச்சியை அளிக்கவே, “இந்தக் காட்டில் வசிக்கும் நீ எப்படிப் பழைய இலக்கியம் கற்றாய்?” என்று வினவினான். 

அவள் லேசாகப் புன்முறுவல் செய்தாள் முதன்முதலாக. “முன்பெல்லாம் காட்டிலிருப்பவர்கள்தான் படித்தார்கள். காட்டிலிருக்கும் முனிவர்கள்தான் வேதங்களை இயற்றினார்கள். தவம் செய்ய காட்டைத்தான் தேடிச் சென்றார்கள். காட்டில் இயற்கைச் சூழ்நிலையும் அமைதியும் இருக்கிறது. அங்குதானே இலக்கியம், தத்துவம் எல்லாம் விளையமுடியும்?” என்றாள் தாமரைச் செல்வி, புன்முறுவலின் ஊடே. 

அவள் பேசப்பேச வாலிபன் வியப்பு எல்லை மீறியது. ‘இந்தக் கானகத்தில் யாருமில்லாத இடத்தில், கள்ளுக்குடிக்கும் தந்தையுடன் வசித்துவரும் இவளுக்கு இத்தனை இலக்கிய அறிவு எப்படி ஏற்பட்டது?’ என்று தன்னைத் தானே வினவிக் கொண்டாலும், அதை வெளிப்படையாகச் சொல்லாமல், “தாமரைச் செல்வி!” என்று பெயர் கொண்டு அழைத்தான், முதன் முதலாக. 

“என்ன?” என்று அவள் கேட்டாள், அலட்சியமான குரலில். “இங்கு நீ ஒரு மனிதனைக் கொன்று விட்டாய்” என்று கூறித் தனது காலடியில் கிடந்த சடலத்தை சுட்டிக் காட்டினான். 

“அதை நானே ஒப்புக்கொண்டாகி விட்டது” என்றாள் அவள். 

“இதற்கெல்லாம் இங்கு விசாரணை கிடையாதா?” என்று அவன் கேட்டான். 

“கிடையாது…” -அவள் திட்டவட்டமாகப் பதில் சொன்னாள். 

“ஏன்? இங்கு ராஜ்யம், நீதி ஸ்தலம் ஏதும் கிடையாதா?” 

“காஞ்சியில் இருக்கிறது. அங்கிருந்து இங்கு யாரும் வருவதில்லை. 

அதோ! எட்ட இவன் வந்த குதிரை நிற்கிறது. அதன் முதுகில் பிணைத்து அதை விரட்டினால் அது அவன் இல்லத்துக்குப் போய்ச் சேரும். அவன் உறவினர்கள் அவனைப் புதைத்து விடுவார்கள்.” 

“இதுதான் இந்த ஊர் முறையா?” 

“ஆம்.” 

“விசித்திரமாக இருக்கிறதே!” 

“விசித்திரம் ஏதுமில்லை. தினசரி இந்த மாதிரிக் கொலைகள் நடப்பதால் விசாரணை செய்வதற்கு அதிகாரிகளுக்கு அவகாசமில்லை:” 

தாமரைச் செல்வியை அந்த வாலிபன் ஏறெடுத்து நோக்கினான். “பெண்ணே! இது அநீதி. இங்கு அராஜகம் நடக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்றான் உறுதியான குரலில். 

தாமரைச்செல்வியின் வதனத்தில் மீண்டும் துயரத்தின் சாயை படர்ந்தது. “வீணாக உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடாதீர்கள். இங்கு நீதியை நிலைநிறுத்துவது வீண் கனவு. அதற்கு முயன்றவர்கள் கடுமையாகக் கொலை செய்யப்பட்டார்கள். உங்களுக்கு உயிரின் மீது ஆசையிருந்தால் நீங்கள் வந்த வழியைப் பார்த்துக்கொண்டு செல்வது நல்லது” என்று துன்பம் மிகுந்த குரலில் சொன்னாள். “தவிர நீங்கள் வாலிபன், சாகும் வயதல்ல இது” என்றும் தொடர்ந்து கூறினாள். 

வாலிபன் மேற்கொண்டு அவளுடன் விவாதத்தில் இறங்கவில்லை. சற்ற தூரத்தில் நின்றிருந்த செத்தவன் புரவியைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து வந்து அதன் முதுகில் அவன் சடலத்தைத் தூக்கிக் குறுக்கே படுக்க வைத்தான். பிறகு அந்தச் சேணக் கயிற்றினாலேயே அவனைப் புரவியின் முதுகில் இறுகப்பிணைத்து புரவியின் முதுகில் வேகமாக அறைந்தான். புரவி பெரும் பாய்ச்சலில் சென்றது, எஜமான் சடலத்தைத் தாங்கி. அந்த அலுவலை முடித்த பின்பு கூட்டமாகத் தான் திரட்டிய மாடுகளையும் அவற்றின் பின்புறத்திலிருந்த சூடுகளையும் கவனித்தான். பிறகு ஒரு நிச்சயத்துக்கு வந்து தாமரைச் செல்வி நின்றிருந்த குடிசையை நோக்கி நடந்து அதன் வாசலில் வந்து நின்றான். 

அப்போதும் தாமரைச் செல்வி குடிசைக் கதவில் சாய்ந்த வண்ணம் விளக்கை ஏந்தியபடியே நின்றிருந்தாள். அவளை அதிகமாக நெருங்காமல் சற்று எட்டவே நின்று அவளை அளவெடுத்த வாலிபன் அவள் அழகு ஈடு இணையற்றது என்ற முடிவுக்கு வந்தான். தூரத்திலிருந்து முதலில் கவனித்ததைவிட அருகில் வந்ததும் அவள் அழகுகளின் விவரம் அதிகமாகத் தெரியவே, ‘இந்தக் காட்டில் இத்தனை பெரிய ஒரு அழகியா!’ என்று பிரமித்தான். 

அவள் நல்ல உயரத்துடன் கிட்டத்தட்ட அவன் தோளுக்கு வந்தாள். அவள் தலைக் குழல் மேகத்தைத் தோற்கடித்தது. அதிக உருண்டையாக இல்லாமலும் அதிகமாக நீளமில்லாமலும் அளவோடு இருந்த முகம் செந்தாமரை மொட்டைப் போலிருந்தது. கண்களில் சதா ஒரு வீரஒளி துளிர்த்துக் கொண்டிருந்தாலும் அவன் அருகில் வந்ததும் அந்த ஒளி சாந்தத்தின் இருப்பிடமாக மாறி அழகுடன் சலனமும் அடைந்தது. நாசியும் அதை அடுத்த செவ்விய உதடுகளும் வலிய முத்திரைகளை ஏற்க சித்தமாயிருந்தாலும் அதை வெளிக் காட்டாத ஒரு உறுதியும் இருந்தன. பொய்யோ எனும் இடை பருத்த மார்புகள், சரிந்த வயிறு, அதற்குக் கீழே பருத்த இரு வாழைத் தண்டுகள், அவற்றின் இடையே மறைந்த சொர்க்கபூமி, இவையனைத்தையும் சேலை மறைத்தாலும் ஊகிக்கும்படியாக ஆங்காங்கு சேலை உட்புகுந்தும் மேலே தாவியும் காட்சியளித்தன. 

இந்த அழகில் நீண்ட நேரம் மலைத்து நின்ற வாலிபனை அவள் குரல் சுயநிலைக்குக் கொண்டு வந்தது. “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கு போகிறீர்கள்?” என்ற கேள்விகள் அவன் கனவைக் கத்தரிக்கவே அவன் மெதுவாகப் பதில் சொன்னான், “ஆந்திரப் பாகத்திலிருந்து வருகிறேன். காஞ்சிக்குப் போகிறேன்” என்று. 

சிறிதே சிந்தித்தாள் தாமரைச்செல்வி. “இரவு ஏறிவிட்டது. இனி நீங்கள் காஞ்சியை அடைவது கஷ்டம். இங்கிருந்து திருவேஃகாவே ஒரு காதம் இருக்கிறது” என்று சொன்னாள். 

“அதனால் பாதகமில்லை. இருட்டில் பயணம் செய்து பழக்கமுண்டு.” 

“வழியில் ஆபத்தும் இருக்கிறது.” 

“என்ன ஆபத்து?” 

”மறவர் இருக்கிறார்கள். குடித்துவிட்டு வருவார்கள். உங்களை என்ன செய்வார்களென்று சொல்ல முடியாது?” 

“எனக்கும் பயத்துக்கும் வெகுதூரம் பெண்ணே!” 

தாமரைச்செல்வி கையிலிருந்த விளக்கைக் குடிசை வாயிலில் வைத்துவிட்டு வெளியே வந்து “நீங்கள் வீரரென்பதை உங்கள் நடையிலிருந்தும் உங்கள் பெருவாளிலிருந்தும் புரிந்து கொண்டேன். இருப்பினும். உங்களை வளைக்கும் மறவர்களை சமாளிக்க முடியாது. வெறி பிடித்தவர்கள். நேரிலும் தாக்குவார்கள், மறைவிலிருந்தும் தாக்குவார்கள்” என்று எச்சரித்த அவள் குரலில் அனுதாபம் மிதமிஞ்சி ஒலித்தது. 

வாலிபன் புன்முறுவல் செய்து, “என்னிடம் உனக்கு இவ்வளவு பரிவுவரக் காரணம்?” என்று வினவினான். 

”இங்கு வந்து உட்காருங்கள் சொல்கிறேன்” என்று கூறிய தாமரைச் செல்வி குடிசை வாயிலில் தான் உட்கார்ந்து, அவன் உட்காரவும் தன் பக்கத்தில் இடம் காட்டினாள். 

அங்கு உட்காரச் சிறிது சங்கடப்பட்டான் அந்த வாலிபன். “தாமரைச்செல்வி! உன்னருகில் நான் உட்காருவதை உன் தந்தை பார்த்தால் என்ன நடக்கும்?” என்று வினவினான். 

தாமரைச்செல்வி நகைத்தாள் மதுரமாக, “ஏதும் நினைக்கமாட்டார். முதலில் அவர் இன்றிரவு இங்கு வருவதே கஷ்டம். குடிமயக்கத்தில் கள்ளுக்கடை முன்பே கிடப்பார். இங்கு வந்தாலும் தள்ளாடி வந்து இந்தக் குடிசை வாயிலில் காலை வைத்து விழுவார். அந்தச் சமயத்தில் அவருக்கு யாரையும் தெரியாது. ஆகையால் பேசாமல் உட்காருங்கள்” என்றாள் இன்பமான குரலில். 

அதற்குமேல் ஆட்சேபணை கிளப்பாமல் உட்கார்ந்தான் அந்த வாலிபன். அவன் உட்கார்ந்ததும், தூரத்திலிருந்து அவனபுரவியும் அவனருகே வந்து நின்று அவன் தோளில் கழுத்தை வைத்து கன்னத்தை அவன் கன்னத்துடன் உராய்ந்தது. அதன் காதில் வாலிபன் ஏதோ முணுமுணுக்க, அந்தப் புரவி தாமரைச்செல்வி யிடம் சென்று அவள் கன்னத்தில் உராய்ந்து தனது வாயால் முத்தமும் கொடுத்தது. புரவியின் செயலைக் கண்ட தாமரைச் செல்வி பெரிதும் வியப்படைந்தாள். “புரவியை நன்றாகப் பழக்கியிருக்கிறீர்கள்!” என்றும் சொல்லி வெட்கப் புன்முறுவல் செய்தாள். 

“தாமரைச் செல்வி! அது புரவியல்ல. எனது ஆருயிர் நண்பன். குறிப்பறிந்து நடக்கக் கூடியவன். என்னை எத்தனையோ முறை காப்பாற்றியிருக்கிறான். அவனை உனக்கும் நண்பனாக்கி விட்டேன். இனி உன் இஷ்டத்திற்கு விரோதமாக உன்னை யாரும் நெருங்க முடியாது. நெருங்கினால் உயிருடனிருக்கவும் முடியாது!” என்றும் கூறினான். 

தாமரைச்செல்வி புரவியின் கழுத்தைத் தனது இருகைகளாலும் அணைத்து இழுத்து அதன் கன்னத்தில் முத்தமிட்டாள். புரவி லேசாகக் கனைத்தது. பற்களை நன்றாகத் திறந்து காட்டியது. அதைக் கண்டு ஆசை முகத்தில் விரிய தாமரைச்செல்வி கேட்டாள். “இந்தப் புரவியை எனக்குத் தருவீர்களா?” என்றாள். 

“தரலாம், ஆனால் தனியாக அதைத் தரமுடியாது” என்றான் வாலிபன். 

“நீங்கள் சொல்வது புரியவில்லை?” என்றாள் அவள். 

“என்னைவிட்டு அது பிரியாது. அதை வாங்க வேண்டு மென்றால் என்னையும் சேர்த்துத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்” என்ற அவன், புன்முறுவல் செய்தான். 

தாமரைச்செல்வி சங்கடத்தால் அசைந்தாள். “என் தனிமையை நினைத்துத் துணிவு கொண்டீர்கள். சற்று முன்பு கொன்றவனைப் போல் உங்களையும் கொல்ல வாளிகள் குடிசைக்குள் இருக்கின்றன” என்று சீறினாள். 

வாலிபன் நகைத்தான். “அடிபைத்தியமே! என்னைக் கொல்ல அந்த வாளிகள் எதற்கு? உன் கண்களே கொல்லுமே” என்று கூறியவன் எழுந்தான். 

அவன் சொற்களால் அவள் உணர்ச்சிகள் அவளைத் திக்குமுக்காடச் செய்தன. நீண்டநாள் தனிமையும், துன்ப வாழ்க்கையும் அவள் இதயத்தில் மாறுதலை விளைவித்தன. வாலிபனை ஒருமுறை உற்று நோக்கினாள். அவன் நெறியுள்ளவன் என்பது அவன் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது. ஆனால், அவன் முன்னிலையில் அதிக நேரம் நிற்கப் பயந்து குடிசைக்குள்ளே சென்றாள். சென்றபோது குடிசை வாயிலில் நின்று அவனை நோக்கி ஒருமுறை தனது கண்களை அவன்மீது வீசினாள். அவள் கண் வீச்சில் அழைப்பும் இருந்தது. 

3.முறைப்பிள்ளை 

வந்த வாலிபனின் வீரமும் அழகும் கலந்த வதனத்தாலும், புரவியுடன் தன்னையும் சேர்த்துத்தான் வாங்கிக் கொள்ள வேண்டுமென்று பேசிய வேடிக்கைப் பேச்சினாலும் சற்றே அச்சங்கொண்ட தாமரைச்செல்வி குடிசை வாயிலில் விளக்கை வைத்துவிட்டுச் சென்ற போது, அந்த விழிகளில் அழைப்பு இருந்தாலும் அதை ஏற்கவில்லை அந்த வாலிப வீரன். அவள் உள்ளே சென்று நீண்ட நேரமாகியுங்கூட இருந்த இடத்தை விட்டு நகராமல் தரையிலேயே உட்கார்ந்து ஆகாயத்தையும் சுற்றுப்புறத்தையும் நோக்கினான். குடிசைக்கு எதிரே மரங்கள் அடர்த்தியாயில்லாத காரணத்தினால் எட்டாம் பிறைமதியின் பால்நிலவு எங்கும் பரந்து காட்டின் இந்தப் பகுதியை மிகக் கவர்ச்சியாகக் காண்பித்தது. அத்தகைய பால்நிலவில் குடிசை வாயில் விளக்கு அர்த்தமற்றதாயிருந்தாலும், குடிசைக்கு உள்ளிருந்த இருளை நோக்கிய வாலிபன் உலகத்தில் எதற்கும் ஒரு சம்பந்த மிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதால் சற்று புன்முறுவலும் கொண்டான். உள்ளே இருந்த இருளின் விளைவாகத் தாமரைச் செல்வியை அவன் பார்க்க முடியாவிட்டாலும், அவள் அவனை நன்றாகவே பார்க்க முடிந்ததால் அவன் அழகையும் தோரணையையும், ஏன், அறிவையுங்கூட அவள் உள்ளிருந்தே ரசித்துக்கொண்டிருந்தாள். விண்ணை நோக்கி விநாடிகளை எடை போட்ட அவன் வீரக் கண்களின் ஒளியும், பிறகு அவன் செய்த மந்தகாசமும் தாமரைச் செல்வியின் மனத்தை மிகவும் ஈர்த்தன. இருந்தபோதிலும் உள்ளே பானைகளுக்கிடையில் நின்றிருந்த அவள் வெளியே வராமல் அவன் மேற்கொண்டு என்ன செய்கிறான்? என்பதைப் பார்க்கலானாள். 

விண்ணைக் கவனித்த அவன் விழிகள் மண்ணையும் கவனிக்கத் தொடங்கி சற்று முன்பு அவனால் வளைக்கப்பட்ட ஆவினங்கள் மீது பதிந்ததைக் கண்ட தாமரைச்செல்வி, அவன் வதனத்திலும் திடீரென ஏதொ சிந்தனை படர்ந்துவிட்டதைக் கவனித்தாள். அந்தச் சிந்தனையின் விளைவாகவோ என்னவோ அவன் திடீரெனக் குடிசை வாயிலில் அவள் வைத்துவிட்டுப் போயிருந்த விளக்கை ஊதி அணைத்தான். விளக்கை அவன் அணைத்ததுமே அவன் குடிசைக்குள் வருவான் என்று எண்ணமிட்ட அந்த ஏந்திழை அவன் வந்தால் வரவேற்க ஒரு கூரிய வாளியையும் கையிலெடுத்துக் கொண்டாள். உள்ளே வரும் நினைப்பு அந்த வாலிபனுக்கு லவலேசமுமில்லாததால் வாளியை ஏந்திப் பிடித்த கை வாளியைப் பிடித்த வண்ணமே நின்றுவிட்டது. நேரம் ஓடியதே தவிர அவன் முதலில் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராததால் அவன் எத்தனை கண்ணியமுடையவன் என்று உள்ளூர நினைத்து, உவகை கொண்ட தாமரைச்செல்வி ‘உண்மையில் இவன் கண்ணியமுள்ளவன்தானா? எனது விழிகளின் அழைப்பு அவனுக்குப் புரிய வில்லையா? புரிந்துதான் ஏமாற அவனுக்கு இஷ்டமில்லையா? இல்லை அவன் எனது விழி அழைப்பு போலியென்று புரிந்து கொண்டு விட்டானா?’ என்று பல கேள்விகளைத் தன்னுள் எழுப்பிக் கொண்டாள். 

இத்தனைக்கும் அவள் விடையேதும் காணவில்லை. வாலிபன் மிகுந்த அசட்டையுடன் நடந்து கொண்ட காரணத்தால் நீண்ட நேரத்திற்குப் பிறகு தாமரைச் செல்வி தனது அம்பை இடையில் செருகி மேல்தலைப்பை நன்றாகப் போர்த்தி உடலுடன் அம்பையும் மறைத்துக் கொண்டு வெளியே வந்தபோது விசித்திரமான காட்சி யொன்றைக் கண்டாள். அவன் புரவி புல்தரையில் ஒருக்களித்து அவன் மடியில் தலையை வைத்துப்படுத்திருந்தது. அதன் பிடரிமயிரை அவன் பதம் பார்த்துப் பிரித்துச் சிக்கெடுத்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து அவள் லேசாக நகைத்த ஒலி இரவின் அமைதியில் இசைக்கப்பட்ட ஸ்வர ஜாலங்களைப்போல் ஒலித்ததால் தலையைத் தூக்கி அவளை நோக்கினான் அவன். 

குடிசையின் கதவுக்கருகில் முன்னைப் போலவே இடையை ஒடித்துச் சாய்ந்து ஓவியப் பாவையென நின்றிருந்தாள் அவள். மெதுவாகப் பேச்சும் கொடுத்தாள். “உலக வழக்குக்கு விரோதமாக இருக்கிறதே” என்று. 

அவன் அவள் முகத்தைச் சில விநாடிகளே ஆராய்ந்து விட்டு, “இதில் எது உலக வழக்குக்கு விரோதம்?” என்று வினவினான், ஏளனம் லேசாக ஒலித்த குரலில். 

அவன் குரலிலிருந்த ஏளனத்தைக் கவனித்தாலும் கவனிக்காதது போலவே நடித்த தாமரைச்செல்வி, “மிருகம் உங்கள் மடியில் படுத்திருப்பதும் அதன் பிடரி மயிர்களை நீங்கள் பிரித்து சிக்கெடுப்பதும் உலக வழக்கத்துக்கு விரோதமல்லவா?” என்று கேட்டாள். 

“இல்லை. நாய், பூனை முதலியவற்றை மனிதன் வளர்ப்பதும், கொஞ்சுவதும், அவன் அவற்றை மடியில் கிடத்திக் கொள்வதும் தான் உலக வழக்கு. மிருகத்தின் மடியில் மனிதன் தலை வைத்துப் படுப்பதுதான் உலக வழக்குக்கு முரணானது, காணமுடியாத விசித்திரம்” என்று விளக்கிய அந்த வாலிபன், “மனிதன் படுக்கும் மடிகளும் உண்டு” என்று சொன்னான். 

”அது எதுவோ?” -அவன் எண்ணம் ஓடும் திக்கைப் புரிந்து கொண்டு வினவினாள் அவள். 

இதற்கு அவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சொன்னபோது அவன் குரலில் தயக்கம் இருந்தது. “பெண்ணின் மடி” என்றான் மெதுவாக. 

தாமரைச் செல்வியின் விழிகளில் சீற்றம் தோன்றியது. “என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டாள் சீற்றம் குரலிலும் ஒலிக்க. 

“இயற்கையின் நியதியைச் சொன்னேன்.”

“எது இயற்கையின் நியதி?” 

“பெண்ணின் மடியில் படுப்பது. அது….!” 

“அது?” 

“சொர்க்கம்” 

“என்ன உளறுகிறீர்கள்?” 

“உளறவில்லை தாமரைச்செல்வி. உண்மையைச் சொல்கிறேன். பிள்ளைப் பருவத்தில் தாயின் மடி. வாலிபத்தில் மனையாள் அல்லது…?” 

“அல்லது?” 

“மனையாளாகக் கூடியவளின், அதாவது தான் காதலிக்கும் பெண்ணின் மடி. இது இயற்கையின் நியதி” என்ற வாலிபன், “பெண்ணே! வீணாக என் வாயைக் கிண்டாதே. பிறகு தவறாகப் பொருள் கொள்ளாதே” என்றும் கூறினான். 

பிறகு தாமரைச்செல்வியை அவன் ஏறெடுத்தும் பார்க்காமல் புரவியின் பிடரியிலேயே தனது கவனத்தைச் செலுத்தி மயிர்களைப் பிரித்து சிக்கெடுப்பதில் முனைந்தான். அவன் தன்னை எச்சரித்த சொற்களாலும், தன்னை அசட்டை செய்து கவனத்தைப் புரவியின் மீது செலுத்துவதைக் கண்டதாலும் அவள் சினத்தின் வசப்பட்டு, “இந்த மாதிரி சிக்கு எடுப்பதுதான் உங்கள் வேலையா?” என்று குரலில் சினத்தைக் காட்டி கேட்டாள். 

அவன் அவளை ஏறெடுத்துப் பார்க்காமலே, “ஆம்” என்றான். 

”என்ன ஆம்?” என்று கேட்டாள் தாமரைச்செல்வி கோபத்துடன். 

“இங்கு நான் வந்ததே சிக்கு எடுக்கத்தான்” என்றான் அவன். 

அவள் அவனைத் தவறாகப் புரிந்து கொண்டாள். அவன் தன்னைப் பற்றித்தான் ஏதோ சொல்வதாக நினைத்து மடியிலிருந்த அம்பை எடுத்து அவன் கையை நோக்கி முனைதிருப்பி எறிந்தாள். அடுத்த விநாடி பிரமிக்கத்தக்க துரித நிகழ்ச்சிகள் துவங்கின. வேகமாக எறியப்பட்ட அம்பு அவன் கையைத் தீண்டுமுன்பே தனது கையை வளைத்து அதன் இறக்கைப் பகுதியைப் பிடித்து முனையின் குறியைத் திருப்பி அம்பை தூர எறிந்தான் அந்த வாலிபன். அடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் கையை அவன் பலவந்தமாகப் பிடித்து இழுத்து தனது புரவியின் தலைமீது அவளை உட்கார வைத்து அவள் குழலைப் பிரித்தான். அவள் புரவியின் தலைமீதிருந்து எழுந்திருக்க முயன்றபோது அவனது ஒருகை அவள் இடையை இரும்பெனப் பிடித்தது. அவன் ஏதோ சைகை செய்யவே புரவி மீண்டும் அவள் மடியில் தலையைவைத்து இறுக்கவே, அவள் நகர முடியாத நிலைக்கு வந்தாள். 

அதற்குமேல் அவள் கையை விடுவித்து, பிரித்து அவள் தலைக்குழலைச் சிக்கெடுக்க முற்பட்டான். அவள் செய்வதறியாது திகைத்தாள். “என்ன செய்கிறீர்கள்?” என்று நகர முடியாத நிலையில் கேட்டாள். 

“புரவிக்குச் செய்ததை உனக்குச் செய்கிறேன்” என்ற அவன், அவள் குழலை சிக்கெடுப்பதில் முனைந்து “அப்பா… என்ன அடர்த்தியான கரிய குழல்” என்றும் சிலாகித்தான். 

“நான் புரவியல்ல” என்றாள் தாமரைச்செல்வி. 

“தெரிகிறது.” 

“என்ன தெரிகிறது?” -என்றாள். 

“நீ புரவியல்லவென்று.”

“மகிழ்ச்சி!” 

“இதில் மகிழ்ச்சிக்கு ஏதுமில்லை. புரவி என் உயிரைப் பல சமயங்களில் காப்பாற்றியிருக்கிறது. நீ சற்று முன்பு என்னைக் கொல்ல முயன்றாய்” என்ற அவன் வார்த்தைகளை முடிக்க விட வில்லை அவள். 

“தவறு தவறு. உங்களை நான் கொல்ல நினைக்க வில்லை. கையில் காயப்படுத்தத்தான் எத்தனித்தேன்” என்று பதட்டத்துடன் பேசினாள். 

“என் புரவி என் கையைக் கூட காயப்படுத்த முயன்றதில்லை. புரவியை விட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவளல்ல. அதற்கு இருக்கும் நன்றி உனக்குக் கிடையாது.’ இதைத் திட்டமாகச் சொன்னான் வாலிபன். 

“உங்களிடம் எனக்கு எதற்காக நன்றி இருக்க வேண்டும்?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். 

வாலிபன் சில விநாடிகள் பதில் சொல்லாமலேயே குழலை சிக்கெடுத்து சீர்செய்து கொண்டிருந்தான். “என் தனிமையை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உன் கண்கள் என்னை உள்ளே அழைத்தபோது நான் தொடரவில்லை. தொடர்ந்து உன்னை நான் கெடுத்திருக்க முடியும். நீ இப்பொழுது எறிந்த வாளியைப் போல் ஆயிரம் வாளிகள் இருந்தாலும் என்னை எதுவும் செய்து விட முடியாது. என் உடலில் ஓடும் சுத்தமான ரத்தம், நான் பிறந்த குலம், இவைதான் உன்னைக் காத்தன” என்று சொன்னான் அவள் குழலை சீர்செய்த வண்ணம். 

அவள் உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. “உன் குலமா? அதென்ன அப்பேர்ப்பட்ட குலம்?” என்று அவள் விசாரித்தாள். அவள் குரலில் அதுவரை காணப்படாத பயம் இருந்தது. அதன் விளைவாக லேசான நடுக்கமும் தெரிந்தது. 

“வீரர் குலம், எதையும் சீர் செய்யும் குலம்” என்றான் அவன் பதிலுக்கு. 

“எல்லாவற்றையும் சீர் செய்வதற்கு ஒரு தனிக்குலமா?” -அவள் விசாரித்தாள். 

“ஆம், காட்டைக் கூட நாடாக்குவோம். அதில் ஒரு நீதியை நிலை நிறுத்துவோம்” என்ற அந்த வாலிபன் அவள் குழலை சிக்கெடுப்பதை நிறுத்தி. “இப்பொழுது உன் குழல் சீராகிவிட்டது” என்று கூறி அதை எடுத்துச் சுழற்றி முடிச்சுப்போட்டான். முடிச்சுப் போட்டதும் குழலால் மறைக்கப்படாத அவள் பின்கழுத்து தங்கம் போல் பளபளத்தது. அதன் அழகை ரசித்தான். பிறகு லேசாக அதில் கையும் வைத்தான். அவன் கையை அவள் அகற்ற முயலவில்லை. மடியை மட்டும் சிறிது அசக்கினாள். புரவியின் தலை அசைந்ததால் வலி எடுத்தன் விளைவாக அவள் வலியைப் புரிந்துகொண்ட வாலிபன் அவள் இடை மீது தனது கையைத் தவழவிட்டுப் புரவியின் கன்னத்தை தட்டவே அது தலையைத் தூக்கி அவளை விடுவித்து எழுந்து நின்றது. அவளும் எழுந்திருக்க முயன்று முடியாததால் காலின் மேற்புறத்தைப் பிடித்துக்கொண்டாள். அவள் நிலையைப் புரிந்துகொண்ட அந்த வாலிபன் “அவன் சற்று பலமாகப் படுத்து விட்டான் போலிருக்கிறது!” என்று சொல்லிவிட்டு “டேய்! மடையா! போ அப்புறம்” என்று மிரட்ட, புரவி நகர்ந்து மேட்டுச் சரிவில் இறங்கிச் சென்றது. பத்தடி சென்று திரும்பிப் பார்த்துக் கனைத்தது. அந்த வாலிபன் நிற்கமுடியாத அவள் காலின் பணைத்த பகுதியின் தசையை வருடினான் இரு கைகளாலும். ”உள்ளே சென்று படுத்துக் கொள்” என்று அன்புடன் கூறி அவளை குடிசைவாயிலுக்கு அழைத்துச் சென்றான், அவள் தோளைப் பற்றிய வண்ணம். கால் நடக்க முடியாததால் சற்று அவன்மீது சாய்ந்தே அவள் நடந்தாள். இரவின் மனோகரச் சூழ்நிலை, மதியின் மயக்கமான ஒளி, இரண்டும் அவளையும் உணர்ச்சிக்குள்ளாக்கி இருக்கவேண்டும். அதன் விளைவாக அவன் மீது சற்று அதிகமாகவே சாய்ந்தாள். 

அவள் அழகிய உடலை தன்மீது சாய்த்தபடி குடிசை வாயிலுக்கு அவளை அழைத்துச் சென்ற சமயம் அந்தப் பயங்கரச் சிரிப்பு கேட்டது. குடிசைமேட்டில் தாமரைச்செல்வியை நோக்கி ஒரு வாலிபன் வந்து கொண்டிருந்தான். 

அவனைக் கண்ட தாமரைச்செல்வி பதறினாள். “ஏனடி தாமரைச் செல்வி! உனக்கு ஒரு ஆசை நாயகனும் ஏற்பட்டு விட்டானா? அவனை இப்பொழுதே யமனிடம் அனுப்பி வைக்கிறேன்” என்று சீறியவண்ணம் இடையிலிருந்து குறுவாளை எடுத்து வாலிபன் மார்புக்குக் குறி வைத்தான். வாலிபன் வாழ்வு முடிந்ததென்றே நினைத்த தாமரைச்செல்வி, “பொறுங்கள். இவர் இந்த ஊருக்கே புதிது” என்று அலறினாள். அடுத்தமுறை அலறியது அவளல்ல. புதிதாக வந்து குறுவாளை ஏந்தியவன் அலறினான். 

அவன் அலறிய காரணத்தை அறிய தாமரைச்செல்வி தனது கண்களை அவன் மீது செலுத்தினாள். அப்போது அவன் நின்ற நிலையில் இல்லை. தரையில் கிடந்தான் மல்லாந்து. அவன் மீது தனது இரு கால்களையும் வைத்து நின்றிருந்த வாலிபனின் புரவி வாயைத் திறந்து பற்களால் அவன் முகத்தைக் கவ்வவும் முயன்றது 

“ஐயோ! அவரைக் காப்பாற்றுங்கள் புரவியிடமிருந்து” என்று கெஞ்சினாள் தாமரைச்செல்வி. 

“அவனிடம் உனக்கென்ன அத்தனை அக்கறை?’ என்று கேட்டான் வாலிபன். 

“அவன் என் மாமன். என்னை மணக்கும் உரிமை பெற்றவன். முறைப்பிள்ளை” என்ற தாமரைச்செல்வி தனது தலையைக் குனிந்து நிலத்தை நோக்கினாள். 

4.பப்பகுமாரன் 

புதிதாக வந்தவன் புரவியால் முட்டித் தள்ளப்பட்டுக் குடிசைச் சரிவின் புல்தரையில் விழுந்து அலறியவன் தாமரைச் செல்வியின் தாய்மாமனென்பதையும், அவளை மணக்கும் உரிமை பெற்ற முறைப்பிள்ளையென்பதையும் தாமரைச்செல்வியே சொல்லிக் கேட்டதால், “டேய் அவனை விட்டுவிடு” என்று குடிசை வாயிலிலிருந்தே வாலிபன் கூறியதும், புதிதாக வந்தவன் முகத்தைக் கடிக்கப் போன புரவி தனது வாயை மூடியது. கால்களையும் அவனது மார்பின் மீதிருந்து எடுத்து விட்டது. அதனால் விடுதலையடைந்து “அப்பாடா!” என்று முனகி எழுந்திருந்த அந்த புதிய வாலிபன் தனது கையிலிருந்த குறுவாளை மீண்டும் கச்சையில் செருகிக் கொண்டு குடிசை வாயிலைக் கவனிக்கவே, அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் துவங்கியதன்றி பழைய வேகமும் மறுபடியும் திரும்பவே, “டேய்! அவள் தோளிலிருந்து உன் கையை எடு” என்று முதலில் வந்த வாலிபனை நோக்கிக் கூவினான். 

ஆனால் தாமரைச்செல்வியின் தோளில் கையை ஆதரவாக வைத்துப் பிடித்துக் கொண்டிருந்த அந்தப் பழைய வாலிபன் தனது கையை எடுப்பதற்குப் பதிலாக அவள் தோளைக் கையினால் அதிகமாக அழுத்தவே செய்தான். அந்த அழுத்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தாமரைச்செல்வி முயன்றும் முடியாமற் போகவே, “அந்த மூர்க்கனிடம் வம்பு வைத்துக் கொள்ளாதீர்கள். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்” என்று ரகசியமாக வேண்டினாள். 

அப்பொழுதும் அவள் தோளை விடாத அந்த வாலிபன், “உன் முறைப் பிள்ளை பற்றி நீ பேசும் முறை சரியாக இல்லையே” என்று சுட்டிக் காட்டினான். 

தாமரைச்செல்வி தனது தாமரை நயனங்களைப் பக்கத்தில் நின்ற வாலிபனை நோக்கித் திருப்பி, “உள்ளதைச் சொன்னேன். மகா மூர்க்கன். சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடம். எனது தந்தையைக் கெடுத்தவனே இவன்தான்” என்று சொன்னாள். அவள் குரலில் துன்பம் தோய்ந்து கிடந்ததன்றி, கண்களிலும் அதன் சாயை விரிந்திருந்தது. 

“இப்பேர்ப்பட்டவனையா மணக்கப் போகிறாய்?” என்று வினவிய வாலிபன் அவள் உடலைத் தன்மீது நன்றாகச் சாய்த்தான். 

“ஐயோ வேண்டாம் விடுங்கள் என்னை, அடுத்து அவள் என்ன செய்வானென்று சொல்ல முடியாது?” என்று கெஞ்சினாள் தாமரைச் செல்வி. 

“எனக்குத் தெரியும் பெண்ணே. நாமிருக்கும் நிலை கண்டதும் அவன் வாளை எடுத்துக்கொண்டு என்னிடம் சண்டைக்கு வருவான். நான் அவனைக் கொன்று விடுவேன். உன்னைப் பிடித்த பீடை விட்டுவிடும்” என்று தனது உத்தேசத்தை விளக்கிய வாலிபனைத் துயரம் மிகுந்த கண்களால் நோக்கிய தாமரைச்செல்வி, ”வேண்டாம். என்னால் உங்கள் பெயருக்கு மாசு வர வேண்டாம். உங்கள் வாளால் இறப்பதற்கு இவன் தகுதியற்றவன்” என்று சொன்னாள். 

புரவியிடமிருந்து விடுபட்ட முறைப்பிள்ளை குடிசைக்கருகே நின்று, இருவரும் தொடர்ந்து நெருங்கி அந்நியோன்னியமாக இருப்பதையும், தன்னைக் கண்ட பின்பும் விலகி நிற்காததையும் கண்டதால் உள்ளூர சினம் கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டினானில்லை. மெதுவாகக் குடிசை மேட்டில் ஏறி அவர்களை அணுக முயன்றவன் தள்ளாடித் தள்ளாடி ஏறினான். இருமுறை தரையில் விழுந்து எழுந்து கஷ்டப்பட்டே நடந்தான். ஆனால் ஒவ்வொரு முறை எழுந்த போதும் தனது ஆடைகளை சீர் திருத்திக் கொண்டும், ஆடையில் ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டும். அடிக்கடி குடிசை வாயிலை ஏறிட்டு வெறிப் பார்வையாகப் பார்த்துக் கொண்டும் வந்தவன், குடிசை வாயிலை அடைந்ததும் அங்கிருந்த இருவர் மீதும் தனது பார்வையைச் செலுத்தி விட்டுக் கீழே உட்கார்ந்ததன்றி, “நீங்களும் உட்காரலாம், அனுமதி அளித்து விட்டேன்” என்று கூறிப் பெரிதாகச் சிரித்தான். அவன் சொற்கள் குழம்பி உளறலாக வெளி வந்தன. சிரிப்பில் கள்வெறி நன்றாகப் புலனாகியது. 

முறைப்பிள்ளையை மிகுந்த வெறுப்புடன் நோக்கிய வாலிபன் “தாமரைச்செல்வி! உன்னிடம் அனுதாபப்படுகிறேன். இவனா உன் மணாளனாகப் போகிறவன்?” என்று வினவவும் செய்தான். 

“அவளைக் கேட்க வேண்டாம். என்னைக் கேள் சொல்கிறேன். இவள் எனது முறைப் பெண்” என்றான் முறைப்பிள்ளை. 

அதுவரை பேசாதிருந்த தாமரைச்செல்வி, “முறைப் பிள்ளையைத்தான் மணக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை” என்றாள் சினத்துடன். 

முறைப்பிள்ளை வெளிக்கண்ணால் அவளை நோக்கி “நம் விஷயத்தில் இருக்கிறது, நீ என்னைத் தவிர வேற யாரையும் மணக்க முடியாதபடி செல்வி” என்றான், நகைத்தான். 

“ஏன் முடியாது? யார் என்னைத் தடுக்க முடியும்?’ என்று வினவினாள் தாமரைச்செல்வி. 

முறைப்பிள்ளை இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. வட்ட வட்டமாக நினறிருந்த பசுக்கூட்டத்தின் மீது தனது கண்களை ஓடவிட்டான். பிறகு சொன்னான், “நான் தடுக்க முடியும் செல்வி. வேறு யார் உன் மீது நாட்டம் வைத்தாலும் அவனை அழிக்கும் வழி எனக்குத் தெரியும். அது மட்டுமல்ல, அவனுடன் சேர்த்து உன் தந்தையையும் ஒழித்துவிட என்னால் முடியும். அதோ அந்தப் பசுக் கூட்டத்தின் கதையைக் காஞ்சி அதிகாரிகளிடம் சொன்னால் நாளையே உன் தந்தை பல்லவர் சிறையில் உருண்டு கிடப்பார்” என்று. 

முறைப்பிள்ளையின் போதை தலைக்கேறியிருந்தாலும் அவன் தொடர்ச்சியாகப் பேச முடிந்ததைக் கண்ட வாலிபன் அவன் வாயை மேலும் கிண்ட முயன்று “பசுக் கூட்டத்துக்குக் கதை வேறு உண்டா மாப்பிள்ளை?” என்று வினவினான். 

‘மாப்பிள்ளை’ என்று தன்னை வாலிபன் அழைத்ததும் பெரு மகிழ்ச்சி அடைந்த முறைப்பிள்ளை, “டேய்! நீ புத்திசாலி. என்னைச் சரியான பெயர் கொண்டு அழைக்கிறாய். ஆனால் நான் உனக்கு எப்படி மாப்பிள்ளையாக முடியும்? இவள் உனக்குப் பெண் முறையா?’ என்று கேட்டான். 

“அவ்வளவு வயது எனக்கு ஆகவில்லையே!” என்று விசனப்பட்டான் வாலிபன். 

“பின் எப்படி நான் மாப்பிள்ளையாக முடியும்?” 

“சகோதரி புருஷனும் மாப்பிள்ளைதானே?’ 

“ஓ! புரிந்தது, புரிந்தது!”. 

“என்ன புரிந்தது?” 

”உனக்கு இவள் சகோதரி என்பது. இல்லாவிட்டால் இவளை எப்படி நீ கட்டிக்கொண்டு நிற்க முடியும்?” 

இப்படிச் சமாளித்துக் கொண்ட முறைப்பிள்ளை குடிசைக்குள்ளே சென்று ஒரு சிறு கலயத்துடன் வந்து அதிலிருந்த பழைய கள்ளை இரண்டு வாய் உறிஞ்சினான். பிறகு கலயத்தைத் தரையில் வைத்து வாலிபனை நோக்கி “நீ ஏன் அவளுடன் நிற்கிறாய்? உட்கார்ந்து கொள். இதை ருசி பார்” என்று கலயத்தைச் சுட்டிக் காட்டினான். 

“பழக்கமில்லை” என்று மறுத்தான் வாலிபன். 

“மச்சான்! பழக்கப்படுத்திக் கொள். மது, மாது இரண்டுக்கும் கால் ஒன்றுதான் வித்தியாசம். ஆனால் இரண்டின் குணமும் ஒன்றுதான். இரண்டும் ஆளை மயக்கும்” என்று உவமை காட்டிப் பேசினான் முறைப்பிள்ளை. 

அவன் தன்னை உறவு கொண்டாடியதை நினைத்துப் புன்முறுவல் கொண்ட வாலிபன் கலயத்தை எடுத்து, “இன்னும் கொஞ்சம் அருந்துங்கள்’ என்று உபசாரம் செய்தான். முறைப்பிள்ளை இம்முறை சிறிது அதிகமாகவே கள்ளை அருந்தியதும், “மாப்பிள்ளை” என்று அவனை அழைத்தான் வாலிபன். 

போதை அதிகமாக ஏறி இருந்ததால் “மாப்பிள்ளை! மாப்பிள்ளை! அதாவது பெரிய பிள்ளை. இந்த வீட்டுக்கு நான் பெரிய பிள்ளையானால் இவளுக்கு சகோதரன் முறை. அப்படியானால் இவளை மணக்க முடியாதே” என்று விமர்சனம் செய்து நகைத்தான், களுக் களுக்கென்று இடைவெளியிட்டு. 

வந்த வாலிபன் மறுபடியும் பேச்சுக் கொடுக்கத் துவங்கி, “மாப்பிள்ளை! இவளில்லாவிட்டால் உலகத்தில் வேறு பெண்களே கிடையாதா நீங்கள் மணப்பதற்கு?” என்று தூண்டினான். 

“ஏன் இல்லை? எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னை மணக்கத் துடிக்கிறார்கள்” என்ற முறைப்பிள்ளை “மச்சான்! எனக்கு நீயே ஒரு பெண்ணைப் பார்க்கிறாயா?” என்று வினவினான். 

“ஆஹா! பார்க்கிறேன்.” 

“அவளிடம் பணம் நிறைய இருக்க வேண்டும்.” 

“குணம்?” 

“அது எதற்குப் பிரயோசனம் பணந்தான் வேண்டும்!” 

“காதல்?” 

“காதல் ஒரு சனியன். அதில் சிக்கியவர்கள் செத்துத்தான் போனார்கள். சாக எனக்கு இஷ்டமில்லை.” 

குடிவெறியிலும் பற்பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டுபோன முறைப்பிள்ளையை நோக்கிய வாலிபன் ‘குடிவெறியிலும் இவனுக்குச் சில திட்டமான கருத்துக்கள் இருக்கின்றன. குடியால் பல பயன்கள். இருக்கின்றன. உண்மைக் குணங்களை, ஒருவன் தனது ரகசியங்களை வெளிப்படுத்தும் சக்தி குடிக்கு இருக்கிறது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். 

இத்தனைக்கும் தாமரைச்செல்வி எதுவும் பேசவில்லை. தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள். வெட்கத்தையும் மீறிய நிலையில் அவள் உணர்ச்சிகள் உறைந்து கிடந்தன. அவள் மௌனத்தை முறைப்பிள்ளையின் கேள்வி உடைத்தது. “மச்சான்! இத்தனைக்கும் உனது பெயரை நீ சொல்லவில்லையே?” என்று கேட்டவன், தாமரைச்செல்வியை நோக்கி “மச்சான்தான் சொல்லவில்லை, நீயும் ஏன் சொல்லவில்லை?” என்று கேட்டான். 

“எனக்குத் தெரியாது” என்றாள் அவள் நிலத்தைப் பார்த்த வண்ணம். 

“ஏன்?” – முறைப்பிள்ளை கேட்டான். அவளை முறைத்தான். 

“சற்று முன்புதான் அவர் ஊரிலிருந்து வந்தார்” என்றாள் தாமரைச்செல்வி. 

“எந்த ஊரிலிருந்து?”-சொற்கள் தடுமாறி வந்தன. 

“அதுவும் தெரியாது”-தாமரைச்செல்வி இதைச் சொல்லிவிட்டு எழுந்திருக்க முயன்றாள். 

“அப்படியானால் இவன் உன் அண்ணனல்ல. ஊர் பேர் தெரியாதவனை நீ எப்படிக் கட்டிக்கொண்டு நின்றாய்? இவன் உன் கள்ளக்காதலன்; இவனையும் வெட்டி உன்னையும் வெட்டி விடுகிறேன்” என்று எழுந்தான் முறைப்பிள்ளை. 

அவன் கையை வாலிபனின் இரும்புக் கை பிடித்து உட்கார வைத்து. “மாப்பிள்ளை, எதிலும் ஆத்திரம் கூடாது” என்றான். 

“கூடாது. எனக்கு ஆத்திரமில்லை.” 

“நிதானத்துடன் எதையும் ஆராய வேண்டும்.” 

“நிதானத்துடன் இருக்கிறேன். ஆராய்வோம்.” – இதைச் சொல்லி எழுந்த முறைப்பிள்ளை சட்டென்று தரையில் விழுந்தான். 

அவன் விழுந்ததைப் பற்றி தாமரைச்செல்வி எந்த அக்கறையும் காட்டவில்லை. “இப்படிக் குடித்து விழுவது இவருக்கு சகஜம்” என்று கூறிவிட்டு, “ஆமாம்! நானும் மறந்து விட்டேன்; உங்கள் பெயரைச் சொல்லவில்லையே நீங்கள்?’ என்று கேட்டாள். 

சிறிது நேரம் சிந்தனையில் இறங்கிய வாலிபன், “என் பெயர் பப்பகுமாரன். சுருக்கமாக என்னை குமாரன் என்று அழைக்கலாம்” என்றான் சிந்தனைக்குப் பிறகு. 

அவன் தன்னைப் பற்றிய முழு உண்மையையும் சொல்ல இஷ்டப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்ட தாமரைச்செல்வி அவனை மேற்கொண்டு எதுவும் கேட்காவிட்டாலும், மயங்கிக் கிடந்த முறைப்பிள்ளை சிறிது மயக்கம் நீங்கவே, வாலிபன் சொன்னதை அரைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு, “பாப்பா குமாரன், நீ சொல்வது சரி. நீ பாப்பாவல்ல. குமாரன் தான். சரி. பாப்பாவாயிருந்து அவளைக் கட்டிக் கொண்டால் நான் எதிர்க்கமாட்டேன். குமாரனாயிருந்து கட்டிக்கொண்டதுதான் தவறு” என்று உளறினான். 

அந்தச் சமயத்தில் திரண்டு நின்ற பசுக்களிடையே அரவம் உண்டாயிற்று. பசுக்கள் சில ‘அம்மா’வென்று கத்தின. அந்தப் பசுக்கூட்டத்திற்குள் புகுந்து ஆஜானுபாகுவான ஒரு மறவன் குடிசைமேட்டில் ஏறி வந்தான். அவன் பின்னால் மற்றும் நான்கு மறவர்கள் வேல்களைத் தாங்கி வந்தார்கள். அவர்களிடம் குமாரனைக் காட்டிய பெரிய மறவன், “அவனைப் பிடித்து மரத்தில் நட்டுங்கள். உண்மையைக் கக்க வைப்போம்” என்று உத்தரவிட்டான். 

“யார் அவன்?” – மறவரில் ஒருவன் கேட்டான். 

“அவன் மன்னரின் ஒற்றன். நம்மை வேவு பார்க்க வந்திருக்கிறான்” என்றான் பெரிய மறவன். 

அதற்குப் பிறகு மற்ற மறவர்கள் காத்திருக்கவில்லை. ஈட்டிகளை குமாரனை நோக்கிப் பிடித்த வண்ணம் மேட்டில் ஏறலானார்கள்.

– தொடரும்…

– பல்லவ பீடம், பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *