(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 5-8 | அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-16
9.தாமரை மது
அழகுக்கும் ஆபத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. அழகான மதுமண்டபம் அந்தவிதிக்கு அத்தாட்சியாக விளங்கியது. அந்த மண்டபத்தில்தான் விபரீத சண்டைகளும் கொலைகளும் நடந்திருக்கின்றன என்பது காஞ்சியில் மட்டுமின்றி வெளி ஊர்களிலும் மிகப் பிரசித்தம். அந்த இடத்தில் கஞ்சியின் தலைவனைப் பார்க்கலாமென்று நிருபவர்மர் சொன்னதிலிருந்து அவனே இந்தப் பூசல்களுக்கும் கொலைகளுக்கும் காரணமாயிருக் கலாமென்று பப்பகுமாரன் தீர்மானித்ததால் நிருபவர்மரின் எச்சரிக்கையையும் மீறி அந்த மது மண்டபத்துக்கு வந்தான். அதன் சூழ்நிலையிலும் அழகிலும் அவன் மனதைப் பறிகொடுத்திருந்த சமயத்தில்தான் தாமரைச்செல்வி அலறிக்கொண்டு மண்டபத்தி லிருந்து தலைவிரிகோலமாக வெளியே ஓடிவந்தாள். அப்படி வந்தவள் சேலை பல இடங்களில் கிழிந்திருந்ததையும் அவள் முகத்திலும் நகக் கீறல் ஒன்று தெரிந்ததையும் கண்ட குமாரன், அவள் குழலைப் பிடித்து வீரனொருவன் இழுக்க முற்பட்டதுமே வேகமாகச் செயலில் இறங்கினான். தாமரைச்செல்வியின் குழலைப் பற்றி இழுத்தவன் மீது தனது புரவியைப் பாயவிட்ட பப்பகுமாரன், புரவி அவனை ஒரே தாண்டில் அடைந்ததும் புரவியிலிருந்தபடியே அவனைக் காலால் பலமாக உதைத்தான். அந்த உதையால் கீழே விழுந்த அந்த வீரன் மீது புரவிலியிருந்து குதித்தான் குமாரன் பிள் அவனைத் தூக்கி நிறித்தித் தனது முஷ்டியால் அவன் முகத்திலும் மார்பிலும் வேகமாகக் குத்தினான். முதல் குத்து அந்த வீரனின் மூக்கில் விழவே, அவன் உள்ளிமூக்கு உடைந்து மூக்கின் வழியாக ரத்தம் மளமள வென்று வழியத் தொடங்கியதால், மார்பிலும் வயிற்றிலும் பாய்ந்த குத்துகள் அவன் மூச்சைத் திணற அடித்து அவனைப் பின்னடையச் செய்யவே. அவன் பின் பக்கமாகத்தள்ளாடி ஓடி மதுமண்டப வாயில் தூணொன்றில் பின்தலை மோத, திடீரென அந்தத் தூணுக்கடியில் உட்கார்ந்து மயக்கத்தால் கண்களை மூடினான்.
அந்தச் சண்டையில் அங்கிருந்த யாரும் அதுவரை தலையிடாததால் தாமரைச்செல்வியைத் தனது இடது கையால் பிடித்து இழுத்துக்கொண்ட குமாரன், “டேய் யாரங்கே! இவளுக்கு ஒரு புரவி கொண்டுவா” என்று காவலனொருவனுக்கு உத்தர விட்டான்.
ஆனால், காவலன் அதைக் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. மண்டப முகப்புத் தூணில் சாய்ந்த வண்ணம் குடுவையிலிருந்த கள்ளை அருந்திக்கொண்டிருந்தான்.
பப்பகுமாரன் அவனுக்கு அடுத்தபடி ஏதும் உத்தரவு இடவில்லை. அவனிருந்த இடத்தை அணுகி அவன் கையிலிருந்த குடுவையைப் பிடுங்கித் தூர எறிந்தான். பிறகு அவன் கையைப் பிடித்துத் திருகி “நான் சொல்வது காதில் விழவில்லை? ஒரு புரவி கொண்டுவா” என்று கூறி அவன் கையை மறுபடியும் திருகி அவனைச் சுழல விட்டான் ஒருமுறை.
இதற்குப் பின் அங்கிருந்தவர்கள் யாரும் செயலற்று இருக்கவில்லை. இரு வீரர்கள் வாட்களை எடுத்துக் கொண்டார்கள். மதுவைக் குடித்திருந்த அவர்கள் தள்ளாட்டத்திலிருந்ததால் அந்த வாட்களால் ஏதும் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்ட குமாரன், “வீணாக மடியாதீர்கள். வாட்களைக் கீழே போடுங்கள்” என்று இரைந்து கூவினான்.
அவர்கள் வாட்களைக் கீழே போடவில்லை. மற்றும் சிலரும் அவர்களுடன் சேர்ந்து கூட்டமாக குமாரனை நெருங்க முற்படவே. தனது புரவியில் தாமரைச்செல்வியைத் தூக்கி உட்கார வைத்துவிட்டு, ‘செல்வி! நீ உன் இல்லத்துக்குச் செல். நான் சிறிது நேரத்தில் உன்னைச் சந்திக்கிறேன்’ என்றான். பிறகு வாளை உருவிக் கொண்டு தன்னை நோக்கி வந்த கூட்டத்தை எதிர்க்கச் சித்தமானான். சில விநாடிகள் சென்றிருந்தால் மது மண்டபத்தின் முன் வாசல் ரணகளமாகியிருக்கும். ஆனால் மண்டபத்திற்குகுள்ளிருந்து வந்த ஆஜானுபாகுவான ஒரு வீரன், ‘யார் சண்டை துவங்கினாலும் சிறைக்குப் போவீர்கள். வாட்களைக் கீழே போடுங்கள்” என்று அதிகாரக் குரலில் கூறியதும் குமாரனை நோக்கி முன்னேறிய கூட்டம் சட்டென்று நின்றது. வாளை வைத்திருந்தவர்கள் அதைக் கீழே போட்டார்கள்.
வந்த மனிதன் தோரணையிலிருந்தும், அவன் அணிந்திருந்த பகட்டான ஆடையிலிருந்தும், அவன் சொல்லுக்கு மதுமண்டபக் கூட்டமே பணிந்ததிலிருந்தும் அவன் தான் காஞ்சியின் பிரதான படைத் தலைவனாயிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்த பப்பகுமாரன் அவனை நோக்கித் தலைவணங்கி, “காஞ்சியின் படைத்தலைவருக்கு நன்றி” என்றும் சொன்னான்.
காஞ்சியை, மன்னனுக்குப் பதிலாக ஆண்டு வந்த அந்த தலைவன் உயரத்துக்குத் தகுந்த பருமனையும் கொண்டு ராட்சஸன் போலக் காட்சியளித்தான். அவன் ஒரு காதில் இருந்த தங்க வளையம் அவனைக் கொள்ளைக் காரத் தலைவனைப் போல் காட்டியது. அவன் கழுத்தில் விலை உயர்ந்த மாணிக்கமொன்று பதித்த சங்கிலியொன்றை அணிந்திருந்தான். அவன் இடைக் கச்சையில் நீண்ட வாள் எதுவும் இல்லாவிட்டாலும் அரைவாளுக்கு இணையான நீண்ட குறுவாளொன்று காட்சியளித்தது. உலக்கைகள் போலிருந்த கைகளும் கால்களும் அவன் மிதமிஞ்சிய பலத்துக்கு அத்தாட்சியாக விளங்கின. அவன் கன்னங்களின் புடைப்பு அவன் கண்களைச் சிறியவைகளாகத் தோற்றுவித்தாலும் அந்தக் கண்களில் குரூரம் நன்றாக ஒளிவிட்டது. தடித்த உதடுகள் அவன் காமுக னென்பதைச் சந்தேகமற விளக்கின.
காஞ்சியின் படைத்தலைவன், குமாரன் செலுத்திய நன்றிக்கு பதில் சொல்லவில்லை. தலைவணங்கியதற்கு திரும்ப வணக்கமும் தெரிவிக்கவில்லை. குமாரனை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான். கடைசியாக அவன் பேச முற்பட்டபோது சொற்கள் கரகரத்த குரலில் வெளிவந்தன. “நீ யார்? எந்த ஊர்?” என்று வினவினான்.
குமாரனும் அவனை உற்று நோக்கினான். அவன் கண்களுடன் தன் கண்களையும் கலக்கவிட்டான் சில விநாடிகள். “நான் தற்சமயம் இந்த ஊர்தான்” என்று பதில் சொன்னான்.
அதைக்கேட்ட காஞ்சி படைத்தலைவன் புருவங்கள் மேலே உயர்ந்தன. ஒரு விநாடி சிந்தனை செய்யும் முறையில், பிறகு கேட்டான், “உன் இருப்பிடம் எது?” என்று.
“பெரியதனக்காரர், இந்த ஊர் நீதிபதி. அவர் வீட்டில்தான் நான் இருக்கிறேன்” என்றான் குமாரன்.
இதைக்கேட்டதும் சற்றுத் தயங்கிய படைத்தலைவன் “எத்தனை நாளாக அவருடன் இருக்கிறாய்? என்று வினவினான்.
“நேற்று வேலைக்கு அமர்ந்தேன்.” -இதை சர்வசாதாரணமாகச் சொன்னான் குமாரன்.
“என்ன வேலை உனக்குக் கொடுத்தார் நீதிபதி?” -படைத்தலைவன் கேள்வி சற்று அதிகாரத்துடன் வந்தது.
”அவர் வீரர்களின் தலைவன்.” -குமாரன் இதை மிகுந்த பணிவுடன் சொன்னான்.
சிறிது சிந்தனை செய்த படைத்தலைவன், “நேற்று வேலைக் கமர்ந்தாய் நீதிபதியிடம். இன்று இங்கு வந்து குழப்பம் விளைவிக் கிறாய். இது விசாரணைக்கு வந்தால் என்ன ஆகும்?” என்று கேட்டான்.
”அபலையான ஒரு பெண்ணை மானபங்கப்படுத்துவதும், சேலையைக் கிழிப்பதும், தலைமயிரைப் பிடித்து இழுப்பதும் சரியான பணி? அதை நான் தடுப்பது குழப்பத்தை விளைவிப்ப தாகும்? உங்கள் கண்ணோட்டம் மிக அழகு!” என்று வலிப்புடன் பேசிய குமாரன், “இந்தக் காஞ்சியில் எங்கு தர்ம விரோதமான செயல்கள் நடந்தாலும்” அது பசு திருடுவதானாலும், பெண்களை இம்சைப்படுத்துவதானாலும் அடக்க எனக்கு உத்தரவிட்டிருக் கிறார் நீதிபதி. அதை நான் செய்து முடிக்காமல் விடமாட்டேன். அப்படிக் குற்றம் செய்யும் யாரையும் தண்டிக்க நீதிபதி எனக்கு உத்தரவிட்டிருக்கிறார்” என்றான்.
குமாரன் சொற்களைக் கேட்டதும் படைத்தலைவன் அடியோடு மாறிவிட்டான். “நீதிபதியின் கட்டளை அதுவானால் அதை நிறைவேற்றுவது தவறில்லை” என்று சொன்ன படைத்தலைவன், ‘வீரனே! நீதிபதியிடமிருக்கும் வேலையை நீ விடுவதானால் என்னை வந்து அரண்மனையில் பார்” என்று கூறினான்.
“நீதிபதி அனுப்புவதானால் நான் வரலாம். ஆனால் அவர் என்னை விடமாட்டார்” என்று கூறிய குமாரன் “எதற்கும் தங்களை நாளை அரண்மனையில் சந்திக்கிறேன். வருகிறேன்” என்று கூறி தனது புரவியின் கடிவாளத்தைப் பிடித்து அதை நடத்தி அழைத்துக் கொண்டு மதுமண்டப எல்லையிலிருந்து அகன்றான்.
புரவியிலிருந்து கீழே இறங்க முற்பட்ட தாமரைச்செல்வியிடம் கடிவாளக் கயிறுகளைக் கொடுத்த குமாரன் “இறங்காதே. அப்படியே வா” என்று கட்டளை யிட அவள் புரவியை நடக்கவிட்டாள், தனது காலால் புரவியின் வயிற்றில் லேசாக உதைத்து.
புரவியைப் பிடித்த வண்ணம் காஞ்சியின் வீதிகளைத் தாண்டிக் காட்டுக்குள் புகுந்த குமாரன் ஏதும் பேசாமலே நடந்தான். தாமரைச்செல்வியும் ஏதும் பேசாமலும் அவமானத்தால் குனிந்த தலை நிமிராமலும் புரவிமீது உட்கார்ந்திருந்தாள். காடு அடர்த்தியானதும், ‘செல்வி! நீ வேண்டுமானால் சற்று ஆடையைச் சரிப்படுத்திக்கொள். அதோ அந்த இரண்டு மரங்களுக்கப்பால் சிறுகுளம் ஒன்று இருக்கிறது. அங்கு உன் முகக் கீறலில் இருந்து வரும் குருதியையும் துடைத்துக் கொள்ளலாம்” என்று கூறினான் குமாரன்.
அவள் இசைந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள். குமாரன் புரவியின் கடிவாளத்தைப்பிடித்து இழுத்துக்கொண்டு மெல்ல தூர இருந்த இரட்டை மரங்களை நோக்கி நடந்தான். அந்த மரங்களுக்கிடையில் புரவியை நிறுத்தி தாமரைச்செல்வியைக் கீழே இறக்கக் கைகளை நீட்டினான். அந்தக் கைகளுக்குள் இறங்கிய தாமரைச்செல்வியைத் தழுவி இறக்கிவிட்டு மெல்ல அவளை அழைத்துக்கொண்டு. “வா! உன் முகக் குருதியைக் குளத்தில் கழுவி விடுகிறேன்” என்று கூறினான்.
அவள் நகரவில்லை. புயலில் ஆடும் கிளைபோல் ஒரு முறை ஆடினாள். அவளைத் தழுவி இறுகப் பிடித்தான் குமாரன். அவன் தோளில் தனது முகத்தைப் புதைத்துக் கொண்ட தாமரைச்செல்வி திடீரெனக் குலுங்கிக்குலுங்கி அழுதாள்.
“ஏன் அழுகிறாய் செல்வி?” என்று அனுதாபத்துடன் கேட்டான் குமாரன்.
பதிலுக்கு அவள் கைகள் அவன் கழுத்தைச் சுற்றின. “என்னைக் கொன்று விடுங்கள். நான் உயிர் வாழவிரும்பவில்லை” என்று விக்கல்களுக்கிடையில் சொற்களை உதிர்த்தாள்.
அவன் கைகள் அவளை இறுகத் தழுவின. அவள் முகத்தை லேசாகத் தூக்கினான். அவன் இதழ்கள் அவள் இதழ்களுடன் இணைந்தன. பிணைந்த இரு உடல்களும் நீண்ட நேரம் பிரியவில்லை. அவள் இதழ்களைச் சுவைத்த குமாரன் மெதுவாக உதடுகளிலிருந்து நீங்கி, “தாமரைச் செல்வி! உன் தாமரை உதடுகள் மதுவைச் சிந்துகின்றன. நீதான் மது மண்டபம்” என்றான்.
10.முறையும் இயற்கையும்
அடர்த்தியான அடவியின் அருகில் தெரிந்த குளத்தின் ஆகாயமளாவிய இருபெரும் மரங்களுக்கு இடையில் தாமரைச் செல்வியின் செங்கமல இதழ்களிலிருந்து மீண்ட பப்பகுமாரன் செல்வியை மது மண்டபம் என்று அழைத்ததும் அவள் குனிந்த தலை நிமிராமல் மெல்ல நகைத்தாள். ஜலதரங்கம் போல் உதிர்ந்த அந்த நகைப்பொலியைக் காதில் வாங்கிய குமாரன் செல்வியை அணைத்திருந்த கைகளை நீக்காமலே “ஏன் நகைக்கிறாய் செல்வி?” என்று வினவினான் அவள் காதுக்கருகில் ரகசியமாக. கேள்வி கேட்பதை சாக்காக வைத்துக்கொண்டு அதனருகே இருந்த மாம்பழக் கன்னத்திலும் உதடுகளைப் புதைத்தான்.
அவன் கேள்விக்கு அவள் உடனே பதிலேதும் சொல்லவில்லை. அவன் தனது குடிசை மேட்டிலேயே தன்னைத் தொட்டிருந்ததாலும், மது மண்டபத்தின் விபரீதவிளைவுகளுக்குப் பின் அவன் தன்னை வலியத் தழுவியதாலும், சொந்தமுடன் இதழ்களைக் கவ்விச் சுவைத்ததாலும் உணர்ச்சிகளுள் சுழன்றதால் அவள் பேசவும் சக்தியற்றவளானாள். ஆகையால் மீண்டும் அவன் கைகளுக்குள் ளேயே திரும்பி அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அவன் இதயத்துக்குச் செய்தி சொல்வதுபோல, ‘என்னை மதுமண்டபம் என்று சொன்னீர்களே, அதற்குத் தான் நகைத்தேன்” என்றாள்.
மார்பில் புதைத்த முகத்தை அவன் தனது கையொன்றால் நிமிர்த்தி, “ஏன்? உவமை சரியில்லையா?” என்று வினவினான்.
“இல்லை” என்றாள் தாமரைச்செல்வி,
“என்ன தவறு அதில்?” என்று கேட்டான் குமாரன்.
“மது மண்டபத்தில் நடப்பதெல்லாம் கள்வெறி, மானபங்கம், பூசல், களவு இவைதான். அந்த மாதிரியா நான்?” என்று அவள் முணுமுணுத்தாள்.
அப்படி முணுமுணுத்தபோது அவள் செவ்விய அதரங்கள் லேசாக மூடி மூடித் திறந்த அழகைப் பருகினான் குமாரன் தன் கண்களால். அடுத்து அவன் உடனடியாக ஏதும்பேசாமல் அவள் முதுகை லேசாக வருடினான். வருடிய கை முதுகின் அடியில் இருந்த ஏழுச்சியிலும் அலையவே சிறிது நெளிந்த செல்வியின் உடல் அவன் மார்பையும் அசைந்து தீண்டவே உணர்ச்சியில் ஆழ்ந்த குமாரன் மெதுவாகப் பேசினான். “செல்வி! மது மண்டபத்தில் நடப்பதெல்லாம், நீ விவரித்தவை, உன்னிடமும் இருக்கின்றன. உன் கவர்ச்சிப் பிரதேசங்கள் எனக்குள் வெறியூட்டுகின்றன. உணர்ச்சி வேகத்தில் உன்னை நான் அத்துமீறித் தொட்டதால் உன் மானபங்கமும் விளைந்திருக்கிறது. என் மனதைக் காமப்பூசல் தாக்குகிறது. அடுத்தது என்ன சொன்னாய்? களவா? அதை நீயும் தானே செய்துவிட்டாய்! என் மனத்தை நீ களவாடியது மட்டும் களவில்லையா?” என்று சொன்ன குமாரன், “என் மார்பில் நீ முகம் புதைத்து என் இதயத்துடன் பேசினாய். நானும் அப்படிப் பேசட்டுமா?” எனக் கேட்டான்.
“நல்ல கேள்வி” என்று புன்சிரிப்பு கொண்டாள் செல்வி.
“கேட்கக் கூடாதா?”
“எல்லாவற்றையும் கேட்டுச் செய்வது நடக்குமா?”
“ஏன் நடக்காது?”
“ஒப்புதல் தராவிட்டால் கேள்வி பயனற்றுவிடுமே.”
“புரியவில்லை செல்வி.”
“பெண்கள் சம்மதத்தை சிலவற்றுக்குத்தான் கேட்கலாம்.”
“ஓகோ!”
“என்ன ஓகோ?”
“புரிந்து கொண்டேன்” என்ற குமாரன் தனது தலையை இறக்கி அவள் மார்பில் புதைத்துக்கொண்டான். அங்கிருந்தே பேசினான். “செல்வியின் இதயமே, செல்விக்குத்தான் புரியவில்லை. உனக்குப் புரிகிறதல்லவா எனது மனம்? காஞ்சி ஆட்சியில் சிக்கலை அவிழ்க்க வந்த நான் இந்தக் காஞ்சன அழகியின் கூந்தலைச் சிக்ககெடுத்தேனே அதிலிருந்தே என் மயக்கம் புரிகிறதல்லவா? காதலில் முறைப்பிள்ளை, முறையில்லாத பிள்ளை என்பது உண்டா? எங்கு நீ இணங்குகிறாயோ அவன்தானே முறைப் பிள்ளை? விரிந்துகிடக்கும் மலர், வண்டை வராதே, அண்டாதே, மதுவைக் குடிக்காதே என்றால் வண்டு சும்மா இருக்குமா? இயற்கையின் தர்மத்தை யாராவது தடுக்க முடியுமா?” என்ற கேள்விகளை அவள் மார்பில் தலையை இணைத்தபடியே கேட்டான்.
அவன் கேளவிகளைக் காதில் வாங்கிக்கொண்ட அந்தப் பருவ மங்கை, “கேட்டது போதும். எழுந்திருங்கள்” என்று தனது தலையைக் குனிந்து அவன் காதில் சொன்னாள். அப்படி அவள் குனிந்து அவன் காதுக்கருகில் வந்ததன் விளைவாகவும் அவள் அவன் தலையை அழுத்தியதன் விளைவாகவும் மார்பின் எழுச்சி யொன்றின் மீது அதிகமாக அழுந்திய அவன் முகத்தால் உந்தப்பட்ட உணர்ச்சிகளால் அவள் ஏக்கப் பெருமூச்சு விடவே செய்தாள்.
அவன் உணர்ச்சிகளும் அவள் உணர்ச்சிகளுக்குக் குறைவா யில்லா ததால் அவன் தனது இதழ்களை அவள் இடதுபுற மார்பின் மீது படிய வைத்துப் பிறகு நீங்கி அவளை ஏறெடுத்துப் பார்த்தான். அதே சமயத்தில் அவன் வலது கை அவள் உடலில் கழுத்து முதலிய முன்னழகுகளில் உலாவ அவள் காற்றில் வளையும் மூங்கிலைப் போல் வளைந்தாள். அப்படி வளைந்தபோது அவளது முகத்திலிருந்த நகக்கீறல் அவனது கன்னத்தில் படவே அவன் சட்டென்று அவளிடமிருந்து லேசாகப் பிரிந்து நின்றான்.
அதனால் வியப்புக்குள்ளான தாமரைச்செல்வி “ஏன்? என்ன?” என்று வினவினாள்.
அவள் கேள்வியால் சற்றே குழப்பமடைந்த குமாரன். “உன் முகக்கீறலை மறந்துவிட்டேன். அதற்கு மருத்துவம் பார்க்கவில்லை நான்” என்றான்.
அவள் அவனைப் பார்க்கவும் மறுத்தாள். “அதனாலென்ன? மருத்துவம் மற்ற இடங்களில் பார்த்தீர்களே, அது போதாதா?” என்று சொல்லி வெட்க நகை கொட்டினாள்.
“அங்கெல்லாம் கீறல் இல்லையே. காயம் எதுவும் இல்லையே” என்றான் குமாரன்.
“ஏனில்லை?” -மெதுவாகக் கேட்டாள் தாமரைச் செல்வி.
“எங்கிருக்கிறது? கண்ணுக்குத் தெரியவில்லையே.” -குமாரனும் மெதுவாகப் பேசினான்.
தாமரைச்செல்வி அவனை மீண்டும் நெருங்கி -“வீரரே!” என்று அழைத்தாள்.
“என்ன செல்வி?”
“உள் காயங்கள் கண்ணுக்குத் தெரியுமா?”
“தெரியாது.”
“தெரியாவிட்டால் இல்லையென்று பொருளா?” என்று கேட்டாள் செல்வி.
இதற்குப் பதில் சொல்லவில்லை குமாரன். அவள் சேலை கிழிந்து கிடந்த இடங்களைப் பார்த்தான். மார்புக்கச்சையும் கிழிந்து விரிந்து கிடந்தது. அந்தக் கிழிசல்கள், விரிசல்கள் புலப்படுத்திய அழகிடங்கள் அவன் கண்களை ஈர்த்தன. மனத்தை அலைக் கழித்தன. அதனால் உந்தப்பட்ட உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அவள் இடையைப் பிடித்து இழுத்து, ‘செல்வி! வா முதலில் புறக்காயங்களை பார்க்கிறேன்” என்று அவளைப் பலவந்தமாக அழைத்துக் கொண்டு அருகில் தெரிந்த குளத்துக்குச் சென்றான்.
அந்தக் காட்டுக்குள் குளம் மிக அழகாயிருந்தது. சுற்றிலும் மரங்கள் இருக்க அது மட்டும் தனித்திருந்ததால் வெண்ணிலவு அதன்மீது பூர்ணமாகக் காய்ந்து அதன் தெள்ளிய நீரை வெள்ளித் திரவமாக அடித்திருந்தது. லேசான காற்றில் கிளம்பிய சிற்றலைகள் அந்தக் காதலர்களுக்குக் கண்ணாடி காட்டின. காட்டிலிருந்த நறுமலர்ச் செடிகளிலிருந்து சுகந்தம் வந்து கொண்டிருந்ததால் பெருமயக் கத்தை ஏற்படுத்திய அந்தச் சூழ்நிலையைச் சிறிது அனுபவித்த குமாரன் அங்கிருந்த பாறாங்கல் ஒன்றில் அவளை உட்கார வைத்தான். அந்த நீளப் பாறாங்கல்லும் கரையில் பாதியும் நீரில் பாதியுமாக இருந்ததால் அவள் கணுக்கால்கள் நீரில் மறைந்தன. நியாயமாக மறைக்கப்பட வேண்டிய மேற்பகுதிகளில் சேலை கிழிந்திருந்த கிழிசல் அவள் வழ வழத்த மேற்காலின் திண்ணிய பகுதியை வெளேரெனத் தெரிய வைத்தது. வயிற்றுப் புறத்தின் கிழிசல் ஆலிலை வயிற்றின் அழகைப் புலப்படுத்தியது.
இவற்றையெல்லாம் பார்த்த குமாரன். ‘செல்வி! முதலில் உன் காலைக் கவனிக்கிறேன்” என்று சொல்லிக் குனிந்து அவள் கால்களை நீரில் கழுவினான். பிறகு தொடையில் கிழிந்த இடத்தை லேசாக இழுத்து மறைத்தான். மார்புக் கச்சையையும் வயிற்றின் மீதிருந்த சேலைக் கிழிசல்களையும் மடித்து மறைத்தான். பிறகு முகத்தை நோக்கினான். அவள் வதனத்தின் வலது புறத்திலிருந்த நீண்ட அந்த நகக்கீறல், அதிலிருந்து புள்ளி புள்ளியாய் கிளம்பி உறைந்துவிட்ட குருதித் துளிகள் தங்கத் தகட்டில் சின்னஞ்சிறு மாணிக்கங்களைப் புதைத்த பிரமையை ஏற்படுத்தின.
அவள் வதனத்தைத் தடவிக் கீறலின் தன்மையைக் கவனித்த குமாரன், “செல்வி! சிறு கீறல்தான். வடுகூட இருக்காது மறைந்துவிடும்” என்று அவளுக்குத் தைரியம் சொல்லிக்கொண்டே தனது அங்கியின் முனையை நீரில் நனைத்து குருதிப் புள்ளிகளை மெதுவாகத் துடைத்தான். கீறலிலிருந்து மேற்கொண்டு ரத்தம் வராது போகவே, ‘செல்வி! மிகவும் லேசான கீறல். இரண்டு நாட்களில் வடுவும் மறைந்து விடும். அதற்கும் வைத்தியம் செய்கிறேன். இன்று இதற்கு வைத்தியம் தேவையில்லை” என்று சொல்லிக் கொண்டு எழுந்தான்.
அவள் உதடுகளில் மந்தகாசம் விரிந்தது. “நீங்கள் என்ன மருத்துவரா?” என்று வினவினாள்.
“அதுவும் லேசாகத் தெரியும்” என்றான் குமாரன் மெல்ல நகைத்து.
“எல்லாம் லேசாகத்தான் தெரியுமா?”
‘”ஆம்.”
“சண்டை மாத்திரம் கனமாகத் தெரியும் போலிருக்கிறது”
“எப்படித் தெரியும் உனக்கு?”
“இன்று காஞ்சியில் படைத்தலைவன் முன்பாக அத்தனை மறவர்களையும் அலட்சியம் செய்து என்னை மீட்டீர்களே!”
“உன் காயத்தைக் கண்டு, உன் நிலையைக் கண்டு உணர்ச்சி வேகத்தில் நடந்து கொண்டு விட்டேன். அவ்வளவுதான்’ என்று அவளை மீட்ட கதையைச் சாதாரணமாக எடுத்துரைத்தான்.
தனது வீரத்தைக் குறைத்துப் பேசும் அந்த மகா வீரனின் அடக்கம் அவளுக்கு மேலும் வியப்பை விளைவித்தது. “உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்வீர்கள் போலிருக்கிறது?’ என்றாள் செல்வி வியப்பு, குரலிலும் தெரிய.
”உணர்ச்சி அச்சத்தை அறுத்து விடுகிறது. அப்பொழுது விளைவதைப் பற்றி மனம் கவலைப்படுவதில்லை” என்றான் குமாரன்.
“இப்பொழுது மனம் எப்படி இருக்கிறது? உணர்ச்சி எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள் தாமரைச்செல்வி.
“எனக்கு சொல்லத் தெரியவில்லை. மயக்கத்தில் இருக்கிறேன்” என்றான் குமாரன். “செல்வி! இப்படியே நாம் பேசிக் கொண்டிருந்தால் பொழுது விடிந்துவிடும் வா. உன் குடிசைக்குப் போவோம்” என்று அவள் கைகளைப் பிடித்துத் தூக்கினான். அவள் எழுந்து அவன் பிடியிலிருந்து விலகி மரங்களை நோக்கி நடந்தாள்
அவள் போவதைப் பார்த்துக் கொண்டு பாறைக்கருகிலேயே நின்ற குமாரன் அவள் பின்னழகுகள் இயங்கும் முறையைக் கண்டான். ஒவ்வொரு அசைவிலும் மோதலிலும் அழைப்பு இருப்பதையும் கண்டான். இருந்தாலும் அவள் தனிமையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாததாலும், கண்ணியம் உடலில் ஊறியிருந்த காரணத்தாலும் அவனும் அவளைத் தொடர்ந்து மெதுவாக நடந்தான்.
குளக்கரையிலிருந்து நடந்து சென்ற தாமரைச்செல்வி முதலில் நின்றிருந்த இரண்டு மரங்கள் சிருஷ்டித்த இயற்கை வாயிலுக்கு வந்து ஒரு மரத்தின் மீது சாய்ந்து நின்றாள். தலையை ஒரு புறமாகச் சாய்த்து குமாரனைத் தனது விழிகளால் பார்க்கவும் செய்தாள். அந்தப் பார்வையிலும் அழைப்பு இருந்ததைக் கண்ட குமாரன் மனம் திக்திக்கென்று அடித்துக்கொள்ள அவன் சாய்ந்து நின்று, ‘செல்வி! நேரம் ஓடிவிட்டது” என்று சொன்னான்.
“ஆம்” என்றாள் அவள்.
“போவோம்” என்று சொல்லி அவளைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அடவிக்குள் சென்றான். அவள் பேசாமல் நடந்தாள் அவனுடன். “நேரம் அதிகமாகி விட்டது” என்றாள் புரவிக்கருகில் சென்றதும்.
அவள் குரலில் இருந்த ஏதோ ஒரு கேலி அவனைச் சரேலெனத் திரும்பச் செய்தது. அடுத்து அவள் அவன் பிணைப்பிலிருந்தாள். “தலைக்கு மேல் ஓடியவெள்ளம்” என்றாள் செல்வி.
அதிர்ச்சியடைந்த குமாரன். “முறை என்று ஒன்று உண்டு” என்று குறிப்பிட்டான். ஆனால் அவன் கைகள் முறைக்கு உட்படவில்லை. முறையை மீறிக் கொண்டிருந்தன. இயற்கையும் முறையும் போரிடும்போது வெற்றி பெறுவது இயற்கைதான் என்பதை இருவருமே புரிந்து கொண்டார்கள்.
11.அவள் வேண்டிய சிறை
மனிதனால் இயற்றப்பட்ட விதிமுறைகளும் இயற்கையும் மோதும்போது வெற்றிபெறுவது இயற்கைதான் என்பதை குமாரனும் தாமரைச்செல்வியும் உணர்ந்திருந்தாலும், உடலின் ரத்தத்தோடு பிறக்கும் பண்பாடு இயற்கையைக் கூடக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் அந்த இரவில் அறிந்து கொண்டார்கள். பப்பகுமாரனான அந்த வாலிபன் தாமரைச்செல்வியைக் காம மிகுதியால் முதலில் இறுகவே அணைத்தான். அவள் இதழ்களையும் தனது இதழ்களால் இழைத்தான். அவள் உடலிலும் கைகளைத் தவழவிட்டான். தாமரைச்செல்வியின் உணர்ச்சிகளும் எல்லை மீறிவிட்டதால். அவள் அவன் சரசம் எதையுமே தடை செய்யவில்லை. அவன் கைகளில் தனது உடலைப் பூர்ணமாக அர்ப்பணித்துச் செயலற்று நின்றாள். அவள் அழகு உடலில் படக்கூடாத இடங்களிலெல்லாம் பாய்ந்த அவன் கைகள் என்ன காரணத்தினாலோ திடீரென நின்றன இரண்டு விநாடிகள். பிறகு அவள் உடலுக்கு விடுதலை அளித்தன.
திடீரென அவன் பிணைப்பு நீங்கியதால் வியப்படைந்த தாமரைச்செல்வி, “என்ன?” என்று ஒரு ஒற்றைச் சொல் வினாவை வீசினாள்.
பப்பகுமாரன் பதில் சொல்லத் தயங்கி, “எதற்கு என்ன?” என்று கேட்டுவிட்டுச் சற்று விலகி நின்று ‘செல்வி! நேரம் அதிகமாகி விட்டது” என்றும் சொன்னான்.
தாமரைச்செல்வி அவனை அணுகி அவன் மார்பு மீது தனது முகத்தைப் புதைத்துக் கொண்டாள். “நேரம் அதிகமானால் என்ன?” என்று மிக ரகசியமாகக் கேட்டாள்.
மார்பில் புதைத்திருந்த அவள் முகத்தை அவன் நிமிர்த்திப் பார்க்கவில்லை. தலைக்குழலை மட்டும் கோதிவிட்டு, ‘செல்வி! அதிக நேரமாகி நாம் உன் குடிசைக்குச் சென்றால் உன் தந்தை சந்தேகப்படுவார்” என்று கூறி, “வா, போவோம் உன்னிருப் பிடத்திற்கு” என்றும் சொல்லி அவளைப் புரவியை நோக்கி இழுத்துச் சென்றான்.
அவன் இழுத்த இழுப்புக்கு உடன்படச் சித்தமாயிருந்த செல்வி, தன்னை திடீரென உதறிவிட்டுப் புரவியிடம் அழைத்துச் செல்லும் காரணமென்னவென்று சிந்திக்கலானாள். தனது தனிமையையும், சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட சந்தர்ப்பங்களையும் உபயோகப் படுத்திக்கொள்ள அவன் பண்பாடு இடம் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டதால் அவனுக்கும், தன்னை அடைய முயன்ற மதுமண்டபக் காவலனுக்கும் எத்தனை மாறுபாடு இருக்கிறது என்று எண்ணிப்பார்த்து அவன் தன்னிடம் மையல் கொண்டது தனது பாக்கியம் என்றும் எண்ணமிட்டாள். இத்தகைய எண்ணங்கள் அவளைப் பிடித்துக் கொண்டிருக்கையில் அவளை அழைத்துச் சென்ற பப்பகுமாரன் அவளைத் தூக்கித் தனது புரவி மீது உட்கார வைத்து, தானும் புரவியில் ஏறிக்கொண்டு அதை நடத்தினான் காட்டு வழியில்
அப்படி அவளுக்குப் பின்னால் உட்கார்ந்து ஒரு கையால் சேணத்தைப் பற்றி இன்னொரு கையால் செல்வி விழாதிருக்க அவள் உடலை அணைத்துப் புரவியை நடத்திய பப்பகுமாரன் அந்த நிலையால் தனது உணர்ச்சிகள் முன்னைவிட அதிகப்பட்டதையே உணர்ந்தான். புரவியின் நடையின் விளைவாக அசைந்த அவள் பின்னெழில்கள் தன்னுடன் இணைந்ததால் அதிகமான உணர்ச்சி வேகத்துக்கு ஆட்பட்ட அந்த வாலிபன், ‘குமாரா! நீ இத்தனை பலவீனனா?’ என்று விசாரித்துக் கொண்டான். இருப்பினும் அவன் குடும்ப பலமும் இரும்பு மனமும் அவனை எந்தச் செயலுக்கும் தூண்டாததால் அவன் நெட்டுக்குத்தாகப் புரவியில் உட்கார்ந்தவண்ணம் பயணம் செய்தான்.
ஆனால் தாமரைச்செல்வியின் நிலை அவன் நிலைக்கு முற்றும் மாறாக இருந்தது. அந்த வாலிபன்மீது தனது எழில்கள் பட்டும், வேண்டுமென்றே தான் அவன்மீது சாந்துங்கூட அவன் இரும்புபோல் உட்கார்ந்திருந்ததைக் கவனித்த தாமரைச்செல்வி அவன் பண்பாட்டையும், கௌரவத்தையும் நினைத்துப் பெருமையும் கொண்டாள். இருப்பினும் அந்தப் பெருமை அவளுக்குத் திருப்தியளிக்காததால் மெல்லப் பேச்சுக் கொடுத்தாள். “நீங்கள் எனது குடிசைக்கே வருகிறீர்களா?” என்று.
“வேறெங்கு போவது?” -முரட்டுத்தனமாகக் கேட்டான் குமாரன்.
“குடிசையில் தந்தை இல்லை.’ -இதை மெதுவாகச் சொன்னாள் தாமரைச்செல்வி.
இதைக் கேட்ட குமாரன் திகைத்தான். “வேறெங்கு இருக்கிறார்?” என்று கேட்டான் அச்சம் லேசாகக் குரலிலும் ஒலிக்க.
“மது மண்டபத்தில்” என்றாள் செல்வி.
“அதை ஏன் அப்பொழுதே சொல்லவில்லை?” என்று குமாரன் கேட்டான்.
“அங்கிருந்த நிலை நான் பேசும்படியாகவா இருந்தது?” என்று வினவினாள் செல்வி.
அவளிருந்த நிலையில், அங்கு நடந்த குழப்பத்தில் அவள் ஏதும் சொல்ல முடியாதென்பதைப் புரிந்து கொண்ட குமாரன், “ஆம். அப்பொழுது முடியாதுதான். ஆனால் இங்கு வந்தபின்பு சொல்லி யிருக்கலாமே?” என்று கேட்டான்.
தாமரைச்செல்வியின் முகம் சட்டென்று சிவந்தாலும் அதைப் பார்க்க முடியவில்லை குமாரனால். அவள் முகம் முன்புறத்தை நோக்கிக் கொண்டிருந்ததால் சிறிது நேரம் அந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. பிறகு பதில் சொன்னபோது குரலில் வெட்சத்தின் ஒலி பூர்ணமாக இருந்தது “இங்கிருந்த நிலை மட்டும் எப்படி இருந்தது?” என்று கேட்டாள் அவள்.
“இங்கிருந்த நிலைக்கென்ன? நாமிருவரும் தனிமையாகத்தானே இருந்தோம்?”
”ஆம்!”
‘தனிமையில் சொல்லத் தடை என்ன?” -குமாரன் குரல் திடமாக இருந்தது.
“இந்த ஆண்கள் சில சமயங்களில் எத்தனை அறிவற்றவர்களாகி விடுகிறார்கள்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டே செல்வி மெதுவாக, “நீங்கள் எங்கு என்னைப் பேசவீட்டீர்கள்?” என்று வெளிப்படையாகக் கேட்டாள்.
“உன்னை நான் என்ன, பேசாமலிருக்கத் தடையா விதித்தேன்?” என்று மேலும் கேட்டான் குமாரன்.
“தடை என்று தனியாகச் சொற்களால் விதிக்க வேண்டுமா?”
“வேறு வழி இருக்கிறதா?”
”ஏனில்லை?”
“எந்த வழி அது?”
“வாயை மூடிவிட்டால்?”
”நான் எங்கே மூடினேன்?” என்று கேட்ட குமாரன் அவள் இதழ்களைத் தனது இதழ்கள் அடைத்துவிட்டதை எண்ணித் திருதிரு என்று விழித்தான். அந்த எண்ணத்தின் விளைவாக, “ஓகோ!” என்று சொன்னவன் அதற்கு மேல் ஏதும் பேசாமல் புரவியை நடத்தினான். சுமார் இரண்டு நாழிகைகளுக்கெல்லாம் தாமரைச்செல்வியின் குடிசை மேட்டை அடைந்த குமாரன் புரவியிலிருந்து தான் முதலில் இறங்கி, அவளையும் இரு கைகளால் தூக்கி இறக்கி விட்டான்.
அப்படி அவளை இறக்கிவிட்ட பிறகும் செல்வி உடனடியாக மேட்டின் மீதிருந்த குடிசையை நோக்கிச் செல்லவில்லை. அவனை விட்டுப்பிரிய மனமில்லாமல் நின்றிருந்த செல்வியை நோக்கிய குமாரன், “செல்வி! குடிசைக்குப் போ. நேரமாகிறது” என்றான்.
அவள் அப்பொழுதும் நகரவில்லை. “குடிசையில் யாருமில்லை. தனியாக இருக்க அச்சமாக இருக்கிறது” என்றாள் தலைகுனிந்த வண்ணம்.
”உன் தந்தை வந்துவிட மாட்டாரா?” என்று குமாரன் வினவினான்.
”அதுவரை?” -மெதுவாகக் கேட்டாள் செல்வி.
“நான் முதல் நாள் வந்தபோது தனியாகத்தானே இருந்தாய்?” என்று வினவினான் குமாரன்.
“அப்பொழுது தைரியமிருந்தது…” என்று இழுத்தாள் தாமரைச்செல்வி.
“இப்பொழுது?”
“இல்லை.”
“அதற்குள் எப்படி மாறிவிட்டாய்?”
“அப்பொழுது காப்பாற்றுவார் யாருமில்லை.”
“இப்பொழுது?”
“ஒருவர் ஏற்பட்டு விட்டார்.”
அவள் நோக்கம் நன்றாகப் புரிந்தாலும் குமாரனுக்கு அவளோடு தனியாக இருக்கும் துணிவு இல்லாததால், “செல்வி! இப்பொழுது எனக்குப் புதிய பொறுப்பு ஒன்றிருக்கிறது…” என்று சொன்னான்.
“என்ன பொறுப்போ? என்னைக் காப்பதைவிடப் பெரிய பொறுப்போ?” என்று சிணுங்கினாள் செல்வி.
குமாரன் முகத்தில் முறுவலின் சாயை விரிந்தது. “நான் காஞ்சி நீதிபதியின் காவலர் தலைவன். அவர் இல்லத்தையும் சொத்தையும் காப்பது எனது கடமை” என்றான் குமாரன்.
“அப்படியானால் என்னைக் காப்பாற்றும் கடமை கிடையாதா?”
”உண்டு.”
“அப்படியானால் வாருங்கள்” என்று கூறி குடிசை மேட்டில் ஏறிச் சென்றாள் செல்வி. அவளைத் தொடர்ந்து குமாரன் செல்ல, புரவி இருவரையும் தொடர்ந்தது.
மேடு ஏறிக் குடிசையை அடைந்ததும் செல்வி குடிசைக்குள் சென்றாள். குமாரன் குடிசை வாயிலிலிருந்து சிறிது தள்ளியே உட்கார்ந்தான். குடிசைக்குள் சென்று கிழிசல் ஆடையைக் களைந்து வேறு ஆடை புனைந்து வெளியே வந்து செல்வி குடிசை வாயிலிலேயே உட்கார்ந்து எட்ட உட்கார்ந்திருந்த குமாரனை நோக்கி, “ஏன் அத்தனை தூரத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
“உன் தந்தை வந்தால் முன் தடவையைப்போல் என்னைச் சந்தேகிக்காதிருக்க” என்று சொன்ன குமாரன் ஆகாயத்தைக் கவனித்தான். ”செல்வி! இரண்டாம் ஜாமம் தாண்டி விட்டது. எதற்கும் நீ படுத்துக் கொள். நான் காவலிருக்கிறேன் உன் தந்தை வரும் வரையில்” என்று சொன்னான்.
“எனக்குத் தூக்கம் வரவில்லை” என்றாள் செல்வி “கண்ணை மூடிப்படு. தூக்கம் வரும்” என்றான் குமாரன்.
“கண்ணை மூடினால் தூக்கம் வராது.”
“வேறென்ன வரும்?”
“சொப்பனம் வரும்?”
“வந்தாலென்ன?”
“அதில் நீங்கள் வருவீர்கள்.’ -இதைச்சற்று இழுத்தே சொன்னாள் தாமரைச்செல்வி.
குமாரன் விழிகள் அவளை உற்று நோக்கின. குடிசைக்கு வெளியே காய்ந்த நிலவில் அவள் முகம் மோகனகரமாகத் தெரிந்தது. அவள் லேசாக மந்தகாசம் செய்தாள். முத்துப் பற்கள் இரண்டு முகத்தின் வெண்மையைவிட அதிகமான வெண்மையைக் காட்டின.
மீண்டும் குமாரனின் உணர்ச்சிகள் வேகமாகச் சுழன்றன. அவள் எழுந்து அவனை நோக்கி நடந்துவந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் கையொன்று அவன் கையைப் பற்றியது. பற்றிய மலர்க் கையுடன் அவன் கையும் இணைந்து அவள் விரல்களை நெரித்தது. என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நின்றபோது அந்தக் குழப்பத்தை உடைக்க நான்கு புரவிகள் விரைந்து வந்தன. அதன் தலைவனாக வந்தவன் புரவியிலிருந்து குதித்து, “தாமரைச்செல்வி!” என்று அழைத்தான்.
தாமரைச்செல்வி சட்டென எழுந்து நின்றாள். “என்ன விசேஷம்? இந்த இரவு நேரத்தில் எங்கு வந்தீர்கள்?” என்று விசாரிக்கவும் செய்தாள்.
“எங்களுடன் உடனடியாக வரவேண்டும்” என்றான் தலைவன்.
“எதற்கு?” என்று கேட்டாள் தாமரைச்செல்வி.
“உன்தந்தை சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்” என்றான் காவலன்.
தூக்கிவாரிப்போட்டது செல்விக்கு. “யார் சிறைப்படுத்தியது? என்ன குற்றத்திற்காக?” என்று சீற்றமும் அச்சமும் கலந்த குரலில் வினவினாள் செல்வி.
“ராஜத்துரோகக் குற்றம். அரசாங்கத்து மாடுகளைத் திருடியிருக்கிறார்” -காவலன் திட்டமாகச் சொன்னான்.
செல்வி இணையிலா திகிலின் வசப்பட்டாள். “குற்றம்சாட்டியது யார்?” என்று கேட்டாள் திகிலுடன்.
“உங்களை மணக்க இருப்பவர். முறைப்பிள்ளை” என்று காவலன் திட்டமாக அறிவித்தான்.
தாமரைச்செல்வியின் இதயம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. அவள் ஏதோ சொல்ல முயன்றாள். வாயில் வார்த்தைகள் வராதிருக்கவே அதுவரை அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குமாரன், “இதற்கு விசாரணை உண்டா?” என்று வினவினான்.
காவலன் அவனை உற்று நோக்கிவிட்டு “நீங்கள் யார்?” என்று விசாரித்தான்.
“நீதிபதி நிருபவர்மரின் காவலர் தலைவன்” என்று அறிவித்த குமாரன் “விசாரணை எப்பொழுது என்று சொன்னால் அந்தச் சமயத்துக்கு பெரிய மறவர் மகளை நான் அழைத்து வருகிறேன்” என்றான்.
இதைக்கேட்டு மலைத்தான் காவலன். “இவளை அழைத்து வர உனக்கு உரிமை இருக்கிறதா?” என்று கேட்டான்.
“இருக்கிறது.”
“என்ன உரிமை?”
“இப்பொழுது இவள் என்னிடம் சிறையிருக்கிறாள். அவளைக் காக்கத்தான் நான் இங்கு உட்கார்ந்திருக்கிறேன்.”
“சிறைசெய்ய யார் உத்தரவிட்டது?”
“யார் உத்தரவும் தேவையில்லை. நீதிபதியின் காவலர் தலைவனுக்கு யாரைச் சிறை செய்யவும் உரிமை உண்டு” என்ற குமாரன் எழுந்து நின்று, “நீ போய் வா. நாளை விசாரணை சமயத்துக்கு இவள் வருவாள்” என்று அதிகாரம் ஒலித்த குரலில் கூறினான்.
சிறிது சிந்தித்தான் காவலர் தலைவன். “நான் போக மறுத்தால்?” என்று கேட்டான்.
”உன்னையும் சிறை செய்வேன்” என்றான் குமாரன்.
“என்னுடன் இன்னும் மூவர் இருக்கிறார்கள்…” என்று சுட்டிக்காட்டினான் காவலர் தலைவன்.
குமாரன் நகைத்தான் பெரிதாக. “முட்டாள்! சென்று விடு, இல்லையேல்…?” என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்தான்.
அடுத்து அந்த வீரன் நிற்கவில்லை. “நாளை விசாரணையில் சந்திக்கிறேன்” என்று சினத்துடன் சொற்களைக் கூறிவிட்டுத் தனது காவலர்களுடன் சென்று விட்டான்.
அவர்கள் சென்ற பிறகு தாமரைச்செல்வி குமாரன் அருகில் வந்தாள். அவனிடம் நெருங்கி நின்ற வண்ணம் சொன்னாள். “இவர்கள் அரசாங்க வீரர்கள் அல்ல” என்று.
“இந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் அல்ல” என்றான் குமாரன்.
“வேறு யார்?” -சந்தேகத்துடன் கேட்டாள்.
“அதைக் கண்டுபிடிக்கத்தான் நான் வந்திருக்கிறேன்” என்ற குமாரன், “எனக்கு மெல்ல மெல்ல நிலைமை புரிகிறது” என்றான். அவன் குரலில் ஆழ்ந்த சந்தேகம் ஒலித்தது.
அதற்குக் காரணம் செல்விக்குப் புரியவில்லை. “நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்” என்றாள் செல்வி.
“எல்லாம் காலத்தில் தெரியும்” என்ற குமாரன். ”சரி! நீ போய்ப்படு” என்று கூறி அவளைக் குடிசைக்குள் இழுத்துப் போனான். குடிசை வாயிலைத் தாண்டியதும் அவள் அவன் மீது சாய்ந்து, “என்னைச் சிறைப்படுத்துங்கள்” என்றாள். அவன் கைகள் அவள் பூவுடலைச் சுற்றின. ஆனால் எண்ணம் மட்டும் எங்கோ ஓடிக்கொண்டிருந்தது.
12.நீதி மண்டபம்
குமாரனின் வலிய கைகளுக்குள் தாமரை மலர் போன்ற மென்மையான தாமரைச்செல்வியின் உடல் சிறைப்பட்டிருந்தாலும் அவன் இரும்புக் கைகள் அவள் உடலை அளவுக்குமீறி இறுக்கினாலும், அந்த இறுக்கலின் விளைவாக அவள் உடலில் வலி எடுத்தாலும், அதனால் அவள் சிறிது இன்ப ‘உம்’ காரம் ஒன்றை வெளிப்படுத்தினாலும், குமாரன் மனம் மட்டும் அவளைவிட்டு எங்கோ பறந்து கொண்டிருந்ததால், அவன் அவளை அணைத்த தைத் தவிர வேறு சரசங்களில் இறங்கவில்லை. அவன் கைகள் தன்னை இறுக்கினாலும் அவன் உள்ளம் எங்கோ ஓடிவிட்டதைப் புரிந்து கொண்ட செல்லி, “எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசிக்கிறீர்கள்?” என்று வினவினாள்.
“காஞ்சியின் கோட்டையை.’ – இதை மெதுவாகச்சொன்னான் குமாரன். அவன் சொற்களும், சொற்கள் ஒலித்த முறையாலும் அவன் எண்ணம் வேறிடத்துக்குப் பறந்து விட்டதை உணர்ந்த செல்வி தன்னை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ள சொன்னாள்.
அவனும் அவளைத் தனது பிடியிலிருந்து விடுவித்து. “நேரமாகிறது செல்வி! படுத்துக்கொள். காலையில் பேசுவோம்” என்று சொன்னான்.
“நீங்கள்…?” என்று ஒரு கேள்வி வீசினாள். சிறிது சந்தேகத்துடன். ‘உனக்குக் காவலிருக்கப் போகிறேன்.”
“இத்தனை நாள் எனக்குக் காவல் யார் இருந்தார்கள்?”
“இத்தனை நாள் உன் தந்தை தனிமையில் விட்டுப் போனதே தவறு. இனிமேலும் அந்தத் தவறு நடக்கக் கூடாது. தவிர, முன்புபோல உன் நிலையும் இல்லை.”
“என்ன எனது நிலைக்கு?”
“இப்படி அடிக்கடி உன்னிடம் வம்பு இழுக்க ஆட்கள் வந்ததில்லை. இப்பொழுது வந்தவர்களும் அரசாங்க வீரர்கள் அல்ல என்று நீயே சொன்னாய். ஆகையால் எச்சரிக்கை தேவையாயிருக்கிறது.” -இதை வெகு திட்டமாகச் சொன்ன குமாரன் அவளை மீண்டும் அணைத்து இழுத்துக்கொண்டு குடிசைக்குள் சென்றான். அங்கு மூலையில் இருந்த பாயொன்றை எடுத்து விரித்து அவளைத் தனது கைகளாலேயே படுக்க வைத்தான்.
அவள் மல்லாந்த நிலையில் கிடந்ததைக் கவனித்த குமாரன் தனது பலவீனத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற திடமனத்துடன் இருந்தாலும் படுத்துக்கிடந்த அவளை ஒருமுறை தழுவி அவள் தோள்களையும் மெல்லத் தனது உதடுகளால் தொட்டுவிட்டு எழுந்திருக்க முயன்றான்.
இம்முறை அவள் கைகள் அவனை இறுகப் பிணைத்துத் தன்மீது சார்த்திக்கொள்ள முயன்றன. அதற்கு இடம் கொடுக்காத குமாரன், “இதற்குச் சந்தர்ப்பம் வரும் ஃெசல்வி. அப்பொழுது நீ தடுத்தாலும் கேட்க மாட்டேன். நீ எனக்குச் சொந்தமானதும் நீயே புரிந்து கொள்வாய்” என்று கூறினான்.
“சொந்தமாவது எப்பொழுது?” என்று கேட்டாள்.
“வெகு சீக்கிரம். காஞ்சியின் பிரச்சினை முடிந்ததும்” என்று அவன் சொன்னான்.
“காஞ்சிதான் முக்கியமா?”
“ஆம் செல்வி.”
“நான்?”
“நீயும் முக்கியம்.”
“காஞ்சி என்னைவிட முக்கியமா?”
“செல்வி!”
“உம்…”
“காஞ்சி எனது தாய். ஒரு மனிதனிடம் தாய்க்கும் உரிமை உண்டு. மனைவிக்கும் உரிமை உண்டு. ஒன்றின் உரிமையை இன்னொன்று பறிக்க முடியாது” இதை மிகுந்த உறுதியுடன் சொன்ன குமாரன் எழுந்து வெளியே செல்ல முயன்றவனின் கால்களை செல்வி பிடித்தாள்.
“செல்வி! நீ என் காலைப் பிடிக்கலாமா?”
“கணவன் காலைப் பிடிப்பது தவறா?”
“தவறில்லை. உண்மையில் நான்தான் உன் காலை இப்பொழுது பிடிக்க வேண்டும்.”
“பிடியுங்களேன்.”
“பிடிக்கலாம். விவகாரம் அத்துடன் நிற்பதாயிருந்தால்…” என்று இழுத்துப் பேசிவிட்டுக் கால்களை விடுவித்துக் கொண்டு வெளியே சென்றான்.
குடிசையை விட்டு வெளியே வந்த குமாரன் குடிசையைச் சுற்றிலுமிருந்த காட்டை நோக்கித் தனது பார்வையைச் செலுத்தினான். பிறகு திருப்தியுடன் தலையை அசைத்துவிட்டுத் தனது புரவியை அருகில் வரும்படி சைகை செய்ய அது அவனை நோக்கி வந்து நிற்கவே, அதனிடம் பேசலானான். “நான் இங்கேயே படுத்திருக்கிறேன். நீ மேட்டின் அடிவாரத்தில் படுத்துக்கொள். யார் வந்தாலும் குரல் கொடு” என்று சொல்ல, புரவி அவன் கூறியபடி மேட்டின் அடிக்குச் சென்று கீழேபடுத்து மல்லாந்து முதுகை ஒருமுறை தேய்த்துக் கொண்டது. பிறகு படுத்து தலையை ஒருமுறை ஆட்டிக்கொண்டது.
இந்த விநோதங்களை உள்ளிருந்தே கவனித்த செல்வி மிகவும் வியப்புற்றாள். ‘இந்தப் புரவி உண்மையில் மனிதனுக்குப் பிறந்திருக்க வேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அத்துடன் வெளியே கண்களை ஓட்டி, வாளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்து உறங்கிவிட்ட குமாரனைக் கவனித்தாள். “இத்தனை அபாயத்திலும் இவரால் எப்படி உறங்க முடிகிறது? கவலை சிறிதும் இல்லாத மனிதர். கொடுத்து வைத்தவர்” என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள். ‘எனக்கு உறக்கம் வராதிருக்க இவர் மட்டும் எப்படி உறங்குகிறார்?’ என்று தனக்குள்ளே வினா எழுப்பி, இரும்பு மனம் படைத்தவர்’ என்று அவனைத் தூற்றவும் செய்தாள்.
அவள் கண்களுக்கு நன்றாகத் தெரிந்த அவன் படுத்த நிலையிலேயே ஒரு தீரமும் எச்சரிக்கையுமிருந்ததைக் கவனித்தாள் தாமரைச்செல்வி. மல்லாந்து படுத்த நிலையிலும் அவன் வலது கை பக்கத்திலிருந்த வாளைத் தொட்டுக் கொண்டிருந்தது. இடைக் கச்சையிலிருந்த குறுவாளின் பிடிமீது இடது கை லேசாகக் கிடந்தது. எந்த விநாடியிலும் அந்தக் கைகள் இயங்குமென்பதையும் புரிந்து கொண்டதால் அவனை காதலனாக அடைந்ததைப் பற்றிப் பெருமையே கொண்டாள். இத்தனைக்கும் அவன் தன்னைப் பற்றிய முழு விவரத்தையும் சொல்லவில்லையென்பதை எண்ணிப் பார்த்து, ‘இவர் என்னையும் சந்தேகித்திருக்கிறாரே?’ என்றும் எண்ணமிட்டாள். அவனைப்பற்றிய எண்ணங்கள் சிந்தையிலோட மெதுவாகக்கண்களை மூடினாள். மூடிய கண்கள் பயனளிக்க வில்லை. புறக்கண் மூடியதும் அகக்கண்கள் திறந்ததால் அதிலும் குமாரனே வந்து அவளை இம்சைப்படுத்தலானான்.
மறுநாள் காலை நீண்ட நேரம் குமாரன் எழுந்திருக்கா விட்டாலும் செல்வி மட்டும் எழுந்து பசுக்களின் பாலைக் கறந்து சுடவைத்து அவனை எழுப்பினாள். மலர்ந்த முகத்துடன் குமாரன் “இத்தனை நேரமா தூங்கிவிட்டேன். எஜமான் இல்லத்துக்குப் போகவேண்டுமே!” என்று சொல்லிப் பல்துலக்கி முகம் கழுவி செல்வி காய்ச்சிக் கொடுத்த பாலை அருந்தினான்.
“பால்தான் எத்தனை சுவை?” என்று சிலாகிக்கவும் செய்தான்.
“சர்க்கரை கூடப் போடவில்லை” என்றாள் தாமரைச்செல்வி.
“சர்க்கரை எதற்கு?” என்றான் குமாரன்.
“இல்லாவிட்டால் பால் இனிக்குமா?” என்று அவள் கேட்டாள். “கொடுக்கும் கையைப் பொறுத்தது” என்று சொன்ன குமாரன், “சரி சரி சீக்கிரம் கிளம்பு” என்று உத்தரவிட்டான்.
“எங்கு?” என்று அவள் விசாரித்தாள்.
“விசாரணைக்கு” என்றான் குமாரன்.
“நான் குளிக்கவில்லை” என்று ஏதோ சொல்ல முயன்றவளை, ”நானிருக்கும் விடுதியின் பின்னால் குளமிருக்கிறது. உலர்ந்த ஆடையை மட்டும் எடுத்து வா” என்று துரிதப்படுத்த, அவள் புறப்பட்டாள்.
தனது புரவியிலேயே அவளை ஏற்றித் தானும் ஏறிக்கொண்டு குமாரன் காஞ்சி எல்லை வரையில் பயணம் செய்து, எல்லை வந்ததும் தான் புரவியிலிருந்து இறங்கி புரவியின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு முன் நடந்தான். நிருபவர்மர் இல்லத்தருகில் வந்ததும் அவளை இறக்கிவிட்டு, காவலர் இல்லத்துக்கு அழைத்துச் சென்று அங்கு தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையைக் காட்டினான். நீதிபதி மாளிகையின் பின்புறக் குளத்தையும் காட்டி, “அங்கு நீராடி இந்த அறையில் புத்தாடை புனைந்து இரு. நான் நீதிபதியைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு நிருபவர்மர் மாளிகைக்குள் சென்றான்.
நிருபவர்மர் கூடத்து ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். குமாரன் வந்ததும் கேள்வி ஏதும் கேட்கவில்லை. அவர் புருவங்களை மட்டும் கேள்வி கேட்கும் பாவனையில் உயர்த்தினார்.
குமாரன் முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து “காஞ்சியின் காவலன் பெயரால் வேறு சிலரும் செயல்படுகிறார்கள்” என்றும் கூறினான்.
புரிந்ததற்கு அறிகுறியாக நீதிபதி தலையசைத்து “அந்தப் பெண் எங்கே?” என்று கேட்டார்.
“எனக்கு நீங்கள் அளித்த பின்வீட்டில் இருக்கிறாள்.”
இதைக் கேட்டதும் நீதிபதி அஞ்சுவாரென்றோ, அதிர்ச்சி அடைவாரென்றோ குமாரன் நினைத்ததால் ஏமாந்தே போனான் அவன் சொன்ன செய்தியை சர்வ சாதாரணமாக ஏற்றுக்கொண்ட நீதிபதி பெரியதனக்காரர், “அவளை அழைத்துக்கொண்டு பத்து நாழிகைக்கு மேல் நீதி மண்டபத்துக்கு வந்து சேர்” என்று கூறி விட்டார்.
அவர் சொற்படியே குமாரன் செல்வியை அழைத்துக் கொண்டு காஞ்சி அரண்மனையின் ஒரு பகுதியிலிருந்த நீதி மண்டபத்தை அடைந்தான். அங்கு காஞ்சியின் தலைவன் நீதிபதிக்குக் கீழே இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தான். சற்று உயர்ந்த மேடையில் அமர்ந்திருந்த நீதிபதி அவர்களைப் பார்த்தும் பார்க்காதது போலவே நடந்து கொண்டார். முதலில் சில வழக்குகளை விசாரித்துவிட்டு தாமரைச்செல்வியைப் பற்றிய வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, தாமரைச்செல்வி அவர் முன்பு நிறுத்தப்பட்டாள்.
அந்த சமயத்தில் திடீரென்று எழுந்த காஞ்சியின் தலைவன், “நீதிபதியவர்களே! மன்னிக்க வேண்டும்” என்றான்.
“என்ன தலைவரே?” என்று கேட்டார் நீதிபதி.
“இந்த விசாரணையைத் தாங்கள் நடத்த முடியாது” என்றான் காஞ்சியின் தலைவன்.
”ஏன்?” -நீதிபதி சிறிதும் கலங்காமல் சர்வசாதாரணமாகக் கேட்டார்.
“இந்த வழக்கில் தங்கள் காவலர் தலைவன் தலையீடு இருக்கிறது. இவளைச் சிறை செய்ய நான் அனுப்பிய வீரர்களை இவன் திருப்பி அனுப்பி விட்டான்” என்றான் தலைவன்.
“அவர்கள் ஏன் கடமையைச் செய்யாமல் திரும்பினார்கள்?”
“தங்கள் காவலர் தலைவன், தானே அவளைச் சிறை செய்வதாகக் கூறினானாம்.”
“அதை அவர்கள் கேட்பானேன்?”
“தங்கள் பெயரைக் கூறியதால். தங்கள் பெயரால் அவளைத் தானே சிறை செய்திருப்பதாக இவன் அறிவித்ததால்?”
நீதிபதி சிறிதும் சிந்திக்கவில்லை. “என் காவலர் தலைவனுக்குச் சிறைசெய்ய உரிமையில்லையா?” என்று வினவினார் நீதிபதி.
”உண்டு. ஆனால் அவன் அவளைச் சிறை செய்திருந்தால் சிறைக்கோட்டத்திற்கு அவளை அழைத்து வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. உங்கள் இல்லத்திலிருக்கும் தனது விடுதிக்கு அழைத்து வந்திருக்கிறான். அதற்குத் தாங்களும் சம்மதித்திருக்கிறீர்கள். இங்கு இந்த வழக்கில் தங்களிடம் நீதி கிடைக்காது” என்று சற்று உரத்த குரலில் கூறினான். அத்துடன் நிறுத்த வில்லை அவன். “குற்றவாளிக்கும் இவனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது” என்றும் சொன்னான்.
“அதற்கு சாட்சி உண்டா?” என்று கேட்டார் நீதிபதி. ”உண்டு” என்ற தலைவன், “சாட்சி இங்கு வா” என்று அழைக்க, நீதிமண்டபத்தின் ஒரு மூலையிலிருந்து ஒருவன் நடந்து வந்தான். அவன் செல்வியின் முறைப்பிள்ளை.
– தொடரும்…
– பல்லவ பீடம், பாரதி பதிப்பகம், சென்னை.