பஞ்ச கல்யாணிக் குதிரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 25, 2022
பார்வையிட்டோர்: 3,959 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நான் கதை சொல்கிறேன்; கேட்கிறாயா?” என்ற சத்தம் கேட்டது. வண்டிக்காரச் செல்லாண்டி, யார் இப்படிக் கேட்கிறதென்று கவனித்தான். அவனுடைய வண்டிக் குதிரைதான் பேசுகிறது! “ஹும்” என்று சொல்லிவிட்டு அந்தக் குதிரையின் கதையைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தான்.

துரகபுரி, துரகபுரி, என்ற ஊரிலே துரங்கப்பிரியன் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுடைய ராஜ்யத்தில் தர்ம தேவதை நாலு காலிலும் நின்று கொண்டிருந்தது. ஒரு துறையில் பசுவும் புலியும் சேர்ந்து நீர் குடித்தன. துரங்கப் பிரிய மன்னனுக்கு நல்ல லட்சணமான குதிரை களைக் கண்டால் ஆசை அதிகம். எத்தனை பொன்னாக இருந்தாலும் விலை கொடுத்து வாங்கிவிடுவான். உலகில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அபூர்வமான அசுவ ஜாதிகளை அவன் சேகரித்துப் பாதுகாத்து வந்தான்.

துரங்கப்பிரியனுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அசுவபதி என்ற பெயரை அவனுக்குச் சூட்டி வளர்த்து வந் தான். அரசர்களுக்குரிய வித்தைகளை யெல்லாம் கற்பித் தான். முக்கியமாகக் குதிரையேற்றத்தில் அவனைச் சிறந் தவனாகத் தக்கபடி கற்பிக்கச் செய்தான். அசுவபதியும் தன் தந்தையைப் போலவே பரிமாக்களிடத்தில் அதிக அன்புடையவனாக இருந்தான். பஞ்சபாண்டவர்களுள் ஒருவனாகிய நகுலனைக் குதிரையேற்றத்தில் சிறப்புடைய வனாகச் சொல்வது வழக்கம். இவன் பரிக்கு நகுலன் என்ற பெயரை எடுக்க வேண்டுமென்று துரங்கப்பிரியன் ஆசைப்பட்டான்.

இப்படி இருந்து வரும்போது, யாரோ வெளிநாட்டி லிருந்து ஒரு குதிரைக்காரன், எல்லா லட்சணங்களும் பொருந்திய பஞ்சகல்யாணிக் குதிரை ஒன்றைக் கொண்டு வந்தான். துரங்கப்பிரியன் அந்தக் குதிரையைப் பார்த் துப் பிரமித்துப் போனான். அதுவரையில் அவன் காணாத அற்புத அழகோடு விளங்கியது அந்தக் குதிரை. அரச குமாரனாகிய அசுவபதியும் பார்த்தான். அந்தக் குதிரையை தனக்குரியதாக்கி உலக முழுவதும் ஒரு சுற்றுச் சுற்றி, “இந்தக் குதிரை நமக்குக் கிடைக்கவில்லையே!” என்ற பொறாமைத் தீயை மற்ற நாட்டு அரச குமாரர் களிடம் எழுப்பிவிட்டு வரவேண்டுமென்று அவன் விரும் பினான்.

குதிரைக்காரன் தான் எதிர்பார்த்ததற்கு மேலாகவே பொருள் பெற்றான். ” இந்தக் குதிரை போகும் இடங்களெல்லாம் மேலும் மேலும் சுபிட்சம் உண்டாகிக் கொண்டே இருக்கும். உங்கள் ராஜ்யத்தில் சகல சௌபாக்கியங்களும் நிரம்பிவிடும்” என்று சொல்லிக் குதிரையை அரசனிடம் ஒப்பித்தான். பிறகு, “ஒரு சின்ன விஷயம் மகாராஜாவிடம் தெரிவிக்க எண்ணுகிறேன். குதிரைகளின் பெருமையைத் தாங்கள் உணராதவர் அல்ல. இந்தக் குதிரை தெய்விகம் பொருந்திய குதிரை. ஆகையால் இதை வீரமுடையவர்கள் ஏறி நடத்த வேண்டும். கண்டவர்களிடம் கொடுக்கக்கூடாது. முக்கியமாக இரண்டு விஷயங்களை வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன். ஒன்று: இதைத் தனியே சவாரி விடவேண்டுமே ஒழிய ரதத்தில் பூட்டக்கூடாது; இரண்டு: ராஜகுலத்தில் பிறவாத பெண்கள் இதன்மேல் ஏறக்கூடாது. இந்த இரண்டு நிபந்தனைகளையும் கடைப்பிடித்து ஒழுகினால் உங்கள் ராஜ்யம் முழுவதும் இந்திரலோகத்தைப் போன்ற விபவத்தை அடையும். இந்த இரண்டு விஷயங்களிலும் தவறு நேர்ந்தால் இந்தக் குதிரைக்கும் கெடுதி உண்டாகும்; இதை உடையவர்களுக்கும் தீங்கு நேரும்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றான்.

அந்தப் பஞ்சகல்யாணிக் குதிரையை மிகவும் ஜாக் கிரதையாக வைத்துப் பாதுகாத்து வந்தான் அரசன். அரசகுமாரனாகிய அசுவபதி எப்போதும் அதைக் கவனிப்பதிலேயே தன் காலத்தைச் செலவிட்டு வந்தான். ஒரு நல்ல நாளில் அக்குதிரையின் மேல் ஏறிச் சவாரி செய்தான். அதுவரையிலும் அவன் அத்தகைய ஆனந்தத்தை அடைந்ததே இல்லை. தனக்காகவே தேவலோகத் திலிருந்து அந்தக் குதிரை வந்திருப்பதாகக் கருதினான்.

நாளடைவில் அசுவபதிக்குக் குதிரையேற்றப் பித்து அதிகமாய்விட்டது. காலையிலும் மாலையிலும் குதிரைமேல் ஏறி நெடுந்தூரம் சென்று வருவான். குதிரை வாயுவேகம் மனோவேகமாகப் போகும். அசுவபதியின் குறிப்பை அறிந்து அந்தத் திக்கிலேயே செல்லும். வேலிகளையும் கால்வாய்களையும் அநாயாசமாகத் தாண்டிச் செல்லும். அதன் வேகத்தைத் தடுக்கும் வல்லமை உள்ள பொருள் எதுவுமே இல்லை.

இந்தக் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு, மற்றத் தேசங்களையெல்லாம் ஒரு சுற்றுச் சுற்றிவரவேண்டும் என்ற விருப்பம் ராஜகுமாரனுக்கு உண்டாயிற்று. தன் தந்தை யிடம் அனுமதி பெற்று ஒருநாள் புறப்பட்டான். பலப்பல ஊர்களுக்கும் நகரங்களுக்கும் சென்றான். அங்கங்கே உள்ள அதிசயங்களையெல்லாம் பார்த்தான். அங்கிருந்த ஜனங்களெல்லாம் அவனுடைய குதிரையை ஓர் அதிசயப்பொருளாக எண்ணிப் பார்த்தார்கள். ஒரு சமயம் ஏதோ ஓர் ஊருக்குப் போனான். அங்கே ராஜ வீதியின் வழியே அசுவாரூடனாகச் சென்று கொண்டிருந்தபோது, அரண்மனையின் மேல் உப்பரிகையில் அந்த ஊர் ராஜகுமாரி நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜகுமாரன் பஞ்ச கல்யாணிக் குதிரையின் மேல் இருக்கும் கோலத்தைக் கண்டு, அவள் சொக்கிப் போனாள். குதிரையின் ஜாஜ்வல்ய மான அழகும், அசுவபதியின் வீரத்தடந்தோளும் அவளை மயக்கின. அவனுடைய முகத்தின் அழகிலே அவள் உள் ளம் சிக்குண்டது. தான் அவனைக் கவனிப்பது போலத் தன்னையும் அவன் கவனிக்க வேண்டும் என்ற ஆசை அவ ளுக்கு உண்டாயிற்று. உடனே தன் கையில் இருந்த தாமரை மலரை அரசகுமாரன் மேலே படும்படி வீசி எறிந்தாள். ஒருவரும் கவனிக்காத சந்தர்ப்பம் பார்த்தே அப் படி எறிந்தாள். அது தன்மேல் விழுந்ததைக் கண்டு அசுவபதி மேலே நிமிர்ந்து பார்த்தான். நல்ல அழகி ஒருத்தி உப்பரிகையின் மேல் நின்று கொண்டிருந்ததைக் கண்டான். அவள் தன் முத்துப் பற்கள் தோன்றும்படி புன்னகை பூத்தாள்; கண்ணைச் சிமிட்டினாள். அரசகுமா ரன் உடம்பு புளகம் போர்த்தது.

சிறிது நேரம் குதிரையை அங்கேயே நிறுத்திவிட்டான். நடுத்தெருவில் இப்படி நிற்பதும் மேலே பார்ப்பதும் அபாயம் என்பதை அவனுக்கு உணர்த்துபவளைப்போல ராஜகுமாரி மறைந்துவிட்டாள் .

ராஜகுமாரன் அந்தப் பெண்ணின் மேலே ஞாபகமாக இருந்தான். அந்த ஊரில் ஓர் அம்மையார்க் கிழவி வீட்டில் தங்கி, எப்படியாவது ராஜகுமாரியின் சிநேகத்தைப் பெறுவதென்று தீர்மானித்தான். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு சமயத்தில் தன் குதிரையின் மேல் ஏறிக் கொண்டு ராஜ வீதியின் வழியாகப் போவான். அப்போது ராஜகுமாரி உப்பரிகையின் மேல் நிற்பாள். இருவரும் கண்ணாலே பேசிக்கொள்வார்கள். புன்னகை மூலம் சம்பா ஷணை செய்வார்கள்.

ஒரு வாரம் இப்படி நடந்து கொண்டு வந்தது. ஒரு நாள் அசுவபதி, “ராஜகுமாரிக்குக் கல்யாணம் ஆக வில்லையா?” என்று அம்மையார்க் கிழவியைக் கேட்டான். “அவளுக்கு எங்கே கல்யாணம் ஆகப்போகிறது? யாருக்குக் கல்யாணம் ஆகவேணுமோ அந்தப் பெண் ணின் விருப்பத்தைத் தெரிந்து கொண்டு அவளுக்கு ஏற்ற கணவனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது ராஜ குடும் பங்களின் சம்பிரதாயம். இந்த ஊரில் அது இல்லை. அந் தப் பெண்ணின் தாய்க்குப் பிரியமான ராஜகுமாரனுக்குத் தான் அவளைக் கொடுக்கப்போகிறார்களாம். எங்கும் இல் லாத அதிசயமாக இருக்கிறது!” என்று அவள் சொன்னாள்.

“அந்தப் பெண்ணும் என்ன என்னவோ விரதம் இருக்கிறாள். இதோ இன்னும் நாலு நாளில் நவராத்திரி வருகிறது. நவராத்திரி ஒன்பது நாளும் அந்தப் பெண் தன் கையாலேயே பரதேசிகளுக்கு ஆடையும் அரிசியும் பொன்னும் தானம் செய்கிறாள்” என்ற ஒரு புதிய செய்தியையும் கிழவி வெளியிட்டாள். ராஜகுமாரனுக்குப் புதிய நம்பிக்கை உதயமாயிற்று.

நவராத்திரியில் தானம் வாங்கும் பரதேசிகளில் அசுவபதியும் ஒருவனானான். பரதேசி வேஷம் புனைந்து ராஜகுமாரிக்கு முன்னால் நின்றான். முதல் நாள் அவனை அவள் கண்டு கொள்ளவில்லை. இரண்டாவது நாள் அவள் ஒருவாறு தெரிந்து கொண்டாள். மூன்றாவது நாள், “உன் ஊர் எது? இதற்கு முன் இந்த ஊருக்கு வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள். ராஜகுமாரன் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்து, “நடுவீதிப் பட்டணத்தில் கமலமலர் வீசும் தேவியை உபாசிக்கிறவன் நான். இதற்கு முன் இங்கே வந்ததில்லை” என்று குறிப்பாகச் சொன்னான். ராஜ குமாரிக்கு உண்மை புலப்பட்டது. அன்று அதோடு விட்டு விட்டாள்.

நான்காவது நாள் தானம் வாங்கும் போது, “கமல மலர்த் தேவியின் கருணை கிடைத்ததுண்டா’ என்று கேட்டாள் ராஜகுமாரி. “கிடைக்குமென்ற நம்பிக்கையினால் இன்னும் உபாசிக்கிறேன்” என்றான் அரசகுமாரன். “தேவியைப் புறத்திலே வைத்துப் பூஜிக்கிறாயா? அகத்திலே வைத்துத் தியானிக்கிறாயா?” என்று அடுத்த கேள்வி வந் தது. “முதலில் உயரத்தில் வைத்துப் பூஜித்தேன்; இப் போது நேருக்கு நேர் வைத்துப் பூஜிக்கிறேன். இனி மேல் தான் என் அகத்தில் வைத்துப் பூஜிக்க வேணும்” என்றான். அன்று அதற்குமேல் பேச்சு நடக்கவில்லை. ராஜ குமாரியின் பேச்சுப் போக்கிலிருந்து அவளுக்கும் தன் மேல் ஆசை உண்டென்று அறிந்து கொண்டான் அசுவராஜகுமாரியும் நேருக்கு நேரே அவனுடைய அங்க லட்சணங்களைக் கண்டு மகிழ்ந்தாள். அவளுக்கு எப்படி யாவது அவனுடன் போய் விட வேண்டும் என்ற ஆசை தோன்றியது. ஆறாவது நாள் அரசகுமாரன் பரதேசி களோடு தானம் வாங்குகையில், அரிசியைப் போடும் போது அதனுடன் ஓர் ஓலைச் சுருளையும் போட்டாள் ராஜகுமாரி.

அசுவபதி தன் இருப்பிடத்திற்கு வந்து ஓலைக் சுருளைப் பிரித்துப் பார்த்தான். “விஜயதசமியன்று இரவு அரச ரும் மற்றவர்களும் அம்பு போடப் போய் விடுவார்கள். அந்தச் சமயத்தில் அந்தப்புரத்தின் பின் பக்கத் தில் வந்து காத்திருந்தால் நான் வருவேன். தாங்கள் உடனே என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்றிருந்தது. அவனுக்கு நிலை கொள்ளவில்லை. விஜயதசமி இன்னும் பல யுகங்களுக்குப் பின் வருவது போலத் தோன்றிற்று.

விஜயதசமி வந்தது. அசுவபதி தன் அசுவத்தோடு குறித்த இடத்தில் போய்க் காத்திருந்தான். ராஜகுமாரி வந்தாள். உடனே அவளையும் குதிரையின் மேல் ஏற்றிக் கொண்டு வேகமாகத் தன் தேசத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டான். இரவில் அருகிலே ஓர் ஊரில் தங்கி மறுநாள் துரக புரிக்குப் பிரயாணமானான். இரண்டு நாட்களில் ஊர் வந்து சேர்ந்தான்.

தன் குமாரன் ஓர் அழகிய ராஜகுமாரியுடன் வந்தி ருப்பது தெரிந்த துரங்கப்பிரியன், அப்பெண்ணின் வர லாற்றைத் தன் மைந்தனிடம் கேட்டான். அசுவபதி உண்மையைச் சொல்லவில்லை. சுயம்வரம் நடை பெற்ற தாகவும், அதில் அரசகுமாரி தன்னை வரித்ததாகவும், அங்கே இருந்தவர்களுக்குப் பொறாமை உண்டாகி யாவரும் தன்னை எதிர்த்ததாகவும், அவர்களை ஒருவாறு வென்று தன் காதலியைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டதாகவும் அவன் சொன்னான். அதற்குமேல் அரசன் கவலை கொள்ளவில்லை. ஒரு நல்ல நாளில் சிறப்பாகத் தன் மகனுக்கும் அவன் அழைத்து வந்த அரசகுமாரிக்கும் மணம் முடித்து வைத்தான்.

ஒரு நாள் அரசகுமாரி தன் நாயகனிடத்தில் தன் விருப்பம் ஒன்றை வெளியிட்டாள். “தாங்கள் தங்கள் அருமையான பஞ்ச கல்யாணிக் குதிரையின் மேல் வந்த போதுதான் முதல் முதலில் தங்கள் தரிசனம் கிடைத்தது. என் தாய் தந்தையர் அறியாமல் தங்களுடன் இங்கே வருவதற்கு அந்தக் குதிரைதான் உபகாரமாக இருந்தது. தங்களுக்குப் பின்னாலே தங்கள் இடுப்பைப் பற்றியபடியே உட்கார்ந்து கொண்டு அவ்வளவு தூரம் வந்தேனே; குதிரை வேகமாகப் போக போக நான் தங் களை இறுகப் பற்றிக் கொண்டேன். அப்போது எனக்கு எத்தனை ஆனந்தமாக இருந்தது தெரியுமா? மறுபடியும் அந்த மாதிரி தங்களுடன் பஞ்ச கல்யாணிக் குதிரையின் மேல் ஏறிக் கொண்டு போக வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது” என்றாள்.

“இதுதானா பெரிய காரியம்? தினந்தோறும் போய் வரலாமே!” என்று அசுவபதி சொன்னான்.

“இப்போதைக்கு ஒரு முறை போய் வருவோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று அவள் சொன்னாள்.

அவள் விருப்பப்படியே ஒருநாள் பிற்பகல் அவளைத் தன்னோடு குதிரையின் மேல் ஏற்றிக் கொண்டு புறப்பட் டான் அரசிளங்குமரன். “குதிரையின் முழு வேகத்தை யும் எனக்குக் காட்டவேண்டும்” என்றாள் அவன் காதலி அசுவபதி புன்னகை பூத்தபடியே, “நீ என்ன இருந்தா லும் பெண்; அதிக வேகமாகப் போனால் அஞ்சுவாய்” என்றான்.

“நானா ? உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் போது எனக்கு என்ன பயம்? உங்களையும் இழுத்துக் கொண்டு கீழே விழுந்து விடுவேன் என்று பயப்படுகிறீர்களோ?” என்று பரிகாசமாகக் கேட்டாள் அவள்.

“சரி, வேகமாக விடுகிறேன்” என்று குதிரையை முடுக் கினான். “இந்த வேகம் போதாது” என்றாள் அவள். பின்னும் வேகமாக ஓட்டினான். “சே! இவ்வளவுதானா வேகம்? இதற்கா நான் பயப்படப்போகிறேன்? உங்கள் குதிரை யின் வேகம் உங்களுக்கே தெரியாது போலிருக்கிறது!” என்று அரசகுமாரி சொன்னாள். தன் குதிரையைக் குறை கூறுவதை அவனால் பொறுக்க முடியவில்லை. வாரைச் சற்றுச் சுண்டி விட்டான். குதிரை காடும் மேடும் தலை தெறிக்க ஓடியது. “ஹும்! இன்னும் வேகம்” என்று ராட்சசியைப் போல அவள் கத்தினாள். அசுவபதி முடுக்க முடுக்க, “இன்னும் வேகம் ” என்று கூச்சலிட்டாள், ஆவேசம் வந்தவளைப்போல்.

அதுவரை போகாத வேகத்தில் குதிரை பறந்தது. அசுவபதி அதை விரட்டினான். எந்தப் பெண்ணும் அஞ்சும் நிலையில் அது பாய்ந்தது. ஆனால் அவள் அஞ்சவில்லை. பெண்ணா ? பேயா?… குதிரை இடையே ஒரு புதரைத் தாவியது. மேலே எழும்பத் தாவின தாவலில் அவள் தன் கைப்பிடிப்பை விட்டு விட்டாள். அப்படியே கீழே விழுந்து விட்டாள்; அடர்ந்த புல் தரையில் மல்லாக்க விழுந்து கிடந்தாள். அசுவபதி திடீரென்று குதிரையை நிறுத்தினான். அதற்குள் அது நெடுந்தூரம் போய் விட் டது. திருப்பிக் கொண்டு வந்தான். தன் மனைவி வீழ்ந் திருந்த இடத்துக்கு வந்து அவளைப் பார்த்தான். நெருங்கி அடர்ந்த புல் தரை ஆகையால் அவளுக்குக் காயம் ஒன் றும் இல்லை. ஆனால் அதிர்ச்சியால் மூர்ச்சை போட்டு விழுந் திருந்தாள். உடனே அருகில் இருந்த ஓடையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்தான்; தூக்கி மடியில் வைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்தினான். ‘என்ன பைத்தியக்காரத்தனம் செய்தேன்! இவள் சொன் னாள் என்பதற்காக அவ்வளவு வேகமாக விட்டிருக்கக் கூடாது’ என்று அவன் மனத்துக்குள் பதறினான். ‘எவ்வளவு அருமையாகக் கிடைத்த அழகி இவள்! இவள் பிழைப்பாளா?’ என்று ஏங்கினான்.

மெல்லிய தென்றல் வீசியது. அவள் மெல்லக் கண் விழித்தாள். தண்ணீரைக் கொடுத்தான். இரண்டு மிடறு குடித்து விட்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். சுற்று முற்றும் பார்த்தாள்.

“போதும் ஸ்வாமி, உம்முடைய குதிரைச் சவாரிகே உலை வைக்கப் பார்த்துவிட்டதே உங்கள் குதிரை!” என்று ஆயாசத்தோடு அவள் பேசினாள்.

“அது என்ன செய்யும்? நான்தானே ஓட்டினேன்? அப்படி ஓட்டுவதற்கும் நீதானே காரணம்?”

“வெகு நன்றாய் இருக்கிறது! கழுதை துள்ளுவதைப் போலத் துள்ளிக் குதித்தால், அதன் மேலே மனிதன் உட்கார முடியுமோ?” என்று மறுபடியும் அவள் குதிரை யைக் குறை கூறினாள்.

“சரி, நாம் இப்போது அரண்மனைக்குப் போகலாம்” என்று சொல்லி அசுவபதி அவளை அழைத்துக் கொண்டு அரண்மனை வந்து சேர்ந்தான்

இரண்டு நாட்கள் சென்றன. மூன்றாவது நாள் அசுவபதியிடம் அவன் மனைவி, ”இந்தக் குதிரை பெரிதா, நான் பெரிதா?” என்று கேட்டாள்.

“என்ன அசட்டுக் கேள்வி?” என்றான் ராஜ் குமாரன்.

“இப்போது அப்படித்தான் சொல்லுவீர்கள். குதிரை கீழே தள்ளிவிட்டதைப் பார்த்தும் உங்களுக்குப் புத்தி வரவில்லை. அது குழிபறித்தால்தான் நான் சொல்வது தெரியவரும்.”

“என்ன செய்யச் சொல்கிறாய்?”

“இதைத் தொலைத்துத் தலை முழுகச் சொல்கிறேன்.”

“இதை நான் விட்டு விடுவதென்பது முடியாத காரியம்” என்று துணிவாகப் பதில் சொன்னான் அசுவபதி.

“அப்படியானால் நான் ஒரு காரியம் சொல்கிறேன். அதை, இனிமேல் தனியே ஓட்டிக்கொண்டு போக வேண்டாம். தேரிலே கட்டி ஓட்டுங்கள். உங்களுக்கு அபாயம் ஏற்படாமல் இருக்கும்” என்றாள்.

இந்த வார்த்தை காதில் விழுந்ததோ இல்லையோ, ‘ஹா’ என்று தன்னை அறியாமலே கூவினான் அசுவபதி. அந்த அழகிய குதிரையைக் கொண்டு வந்து கொடுத்த குதிரைக்காரன் சொன்ன நிபந்தனை அவன் நினைவுக்கு வந்தது தான் காரணம்.

“தேரில் பூட்டுவதா!”

அவன் உள்ளம் மற்றொன்றையும் நினைத்துப்பார்த்தது. சிலநாட்களாகக் குதிரை உற்சாகமாக இல்லாதது நினைவுக்கு வந்தது. குதிரைக்காரன் சொன்னானே: ராஜகுலத்தில் உதிக்காத பெண்கள் ஏறக்கூடாது. ஏறினால் ஆபத்து என் றானே. இவள் ஒருகால் ராஜகுலத்தில் உதித்தவள் அல்லவோ? – அவன் யோசனை அதோடு தடைப்பட்டது.

“அந்தப் பாழுங் குதிரையின் காலிலே என் மாங் கல்ய பலம் இருக்கிறதென்று தெரிந்தால் நான் உங்களுடன் வந்திருக்க மாட்டேனே!” என்று அந்த ராட்சசி அழுதாள்; புலம்பினாள். கடைசியில் அவள் ஜாலம் வென் றது. “இனி அதன்மேல் ஏறிச் சவாரி செய்வதில்லை” என்று அந்தப் பெண் பேய்க்கு அவன் வாக்களித்தான்.

தன்னுடைய மகள் திடீரென்று காணாமல் போனதை அறிந்து கொண்ட அந்த நாட்டு அரசன் அவளைத் தேடு வதற்கு நாலு பக்கமும் ஆட்களை அனுப்பினான். நம்முடைய மானத்துக்கு ஹானி வருமே என்ற கவலையோடு அந்தப் புரத்துக்குச் சென்றான். அங்கே ராணி கவலையில்லாத முகத்தோடு இருந்தாள். அதைப் பார்த்து அரசன் வியப் புற்றான். “உன் மகள் காணாமற் போனதற்காக நீ கவலைப் படுவதாகத் தெரியவில்லையே!” என்று கேட்டான். “என் மகளா? ரகசியத்தைச் சொல்கிறேன். அவள் என் மகள் அல்ல. எனக்குப் பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து போய்விட்டது. மருத்துவம் செய்ய வந்தவள் வேறு குழந்தையை வைத்துவிட்டுச் சென்றாள். எப்படி யாவது ஒரு குழந்தையை வளர்க்க வேண்டுமென்ற ஆசை யால் நான் ஏற்றுக்கொண்டேன். குழந்தை நம்முடைய குலத்தில் பிறந்திருந்தால் ஒழுங்காக இருந்திருக்கும்” என்று அதிசயமான செய்தி ஒன்றை வெளியிட்டாள்.

அரசன் ஸ்தம்பித்துச் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு, “அவளுக்காக இல்லாவிட்டாலும் நம்முடைய கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது திருடனைக் கண்டு பிடிக்க வேண்டும். நம்முடைய நகரத் தில் நம் பாதுகாப்பில் உள்ள பொருளை வேறொருவன் கொண்டுபோக, நாம் பேசாமல் இருந்தோம் என்றால், உலகம் நம்மைப் பழிக்கும்” என்றான்.

சில மாதங்கள் தேடிய பிறகு தன் மகள் துரகபுரியில் இருப்பது தெரிந்தது. உடனே அதன்மேல் படை எடுக்க ஏற்பாடு செய்தான் அரசன், இதற்குள் துரகபுரி அரச னாகிய துரங்கப்பிரியன் காலமாகவே, அசுவபதியே அரச னானான். குதிரையின் மேல் தகாதவர்களை ஏற்றிய பாவமும் அதைத் தேரில் கட்டிய பாவமும் சேர்ந்து கொண்டு அவ னுக்குப் பல துன்பங்களை உண்டாக்கின. தன் தந்தையை இழந்து ராஜ்யபாரத்தைக் கைக்கொண்டவுடனே, அந்நிய நாட்டுப் படைகள் வந்து நகரத்தை முற்றுகையிட்டன.

போர் மூண்டது. அசுவபதியினால் பிற நாட்டுப் படைக்கு முன்னே நிற்க முடியவில்லை. கடைசியில் பகைவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுடைய தேரிலே கட்டித் தங்கள் நகரத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். தந்தையைக் கண்ட அரசகுமாரி ,”ஐயோ!” என்று அழுதாள். அரசன் சிறிதும் கருணை காட்டாமல் இரு வரையும் தனியே சிறையில் அடைத்தான். பிறகு தன் மனைவியிடம் ஆலோசித்து அசுவபதியைத் தன் சாரதியாக வைத்துக்கொண்டான். தான் வளர்த்த மகளுடன் அவன் வாழ்வதற்கு ஒரு சிறிய இடத்தையும் கொடுத்தான்.

பாவம்! பஞ்சகல்யாணிக் குதிரையின் மேல் உலகம் வியக்க ஏறிச்சென்ற அரசகுமாரன் இப்போது அதே குதிரையைத் தேரில் பூட்டி வேறோர் அரசனை வைத்து ஓட்ட வேண்டி நேர்ந்தது. அதன் தெய்விக சக்தியை உண ராமல் அதன் பாவத்தைக் கட்டிக்கொண்டான். மேலும் மேலும் கஷ்டத்துக்குள்ளான அசுவபதியும் அவனுடைய குதிரையும் சீக்கிரத்திலே பூலோக வாழ்வை நீத்தார்கள். என்ன வாழ்வு ! மறுபடியும் அந்த இரண்டு பேரும் பூமி யில் ஜனித்திருக்கிறார்கள். குதிரை சாரதியாகி விட்டது. சாந்தி வண்டிக் குதிரை ஆகிவிட்டான். பஞ்ச கல்யாணிக் குதிரையாக இருந்தது யார் தெரியுமா? நீதான். நான் தான் உன் பெருமையை அறியாமற் போன ராஜகுமாரன்.

‘படார்’ என்ற ஒலி காதில் விழவே, செல்லாண்டி விழித்துக்கொண்டான். யாரோ குறும்புக்காரப் பையன் அங்கே ஓர் ஒற்றை வெடியை வெடித்திருக்கிறான். அது வரையில் வண்டியில் உட்கார்ந்து லகானைப் பிடித்தபடியே தூங்கி வழிந்த செல்லாண்டிக்கு, தான் கண்டது சொப்பனம் என்று அப்போதுதான் தெரியவந்தது. நின்றபடியே தூங்கிய அந்த நோஞ்சல் குதிரையும் ஒரு கனைப்புக் கனைத்து உடம்பை உதறிக்கொண்டது.

– பவள மல்லிகை (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *