சொர்க்கம் செல்ல வழி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 31,644 
 
 

நமது அன்றாட வாழ்வில் பல முரண்பாடான விஷயங்கள் நடப்பதை நாம் காண்கின்றோம். உதாரணத்திற்கு, தவறு செய்பவர் ஒருத்தராக இருக்கும் பொழுது, அதற்காக தண்டிக்கப்படுபவர் மற்றொருவராக இருப்பார். பசிப்பார் வேறு புசிப்பார் வேறு. பாராட்டப்படுபவர் சில சமயம் வெற்றி பெறாதவராக இருப்பார். ஒருத்தர் உழைப்பிற்கு வேண்டிய பலன் அவருக்கு கிடைக்காமல், அதை மற்றவர் தட்டிச்செல்வர், ஆக, பலவித விசித்திரமான அனுபவங்களை நாம் பெறுகிறோம். இவ்வரிசையில், ஐம்பதாண்டுகளுக்கு முன் நான் கேள்விப்பட்ட ஒரு விசித்திர வழக்கு என் ஞாபகத்திற்கு வருகிறது:

ஒரு கிராமத்தில் இரு நண்பர்கள் உயிருக்குயிராய் பழகி வந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்றனர். அனைத்து வேலைகளையும், அவர்கள் சேர்ந்தே செய்து வந்தனர். அந்த இருவரில் ஒருவர் பருமனாகவும், மற்றொருவர் சராசரி உடல் கட்டுடனும் இருந்தார். அவர்கள் வசித்து வந்த கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில், கிழக்கே மற்றொரு இராஜ்ஜியத்தின் எல்லை ஆரம்பித்தது. அங்கிருந்து இரண்டு நாள் பயணத்தில், அந்த இராஜ்ஜியத்தின் தலைநகரம் இருந்தது. அங்குள்ள மன்னர், மிகவும் விசித்திரமான குணம் கொண்டவர். “அந்தேர் நகரி, சௌபட்ராஜ்” (இருண்ட நகரின், சிதைந்த அரசாட்சி) என்பார்களே, அதுபோல் தான் அவருடைய நடவடிக்கைகள் இருந்தன. அவை மக்களை வெகுவாக பாதித்தாலும், சில சமயம், அவருடைய முட்டாள் தனமான முடிவுகளால் மக்கள் பலனடைந்து வந்தனர். பகைவர் இருந்ததுடன், அவருக்கு பாதுகாப்பும் பலமாக இருந்து வந்தது.

இரு நண்பர்களும், அந்த அண்டை நாட்டை சுற்றிப்பார்க்க ஆயத்தம் ஆயினர். தமது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து, பிரயாணத்திற்கு தேவைப்பட்ட பணம், பொருள், சவாரிக்கு குதிரைகள் முதலியவற்றை தேர்ந்தெடுத்துக்கொண்டனர். அவர்களிடம் வேகமாக ஓடக்கூடிய சிறந்த ஜாதி வெண்ணிற குதிரைகள் இருந்தன. ஒரு நல்ல நாள் பார்த்து உற்றார் உறவினரிடம் விடை பெற்று தன் வீட்டை விட்டு, நாட்டை விட்டு கிளம்பிவிட்டனர், அந்த அண்டை நாட்டை சுற்றிப்பார்க்க. பல காடுகள், ஆறுகள், மலைகள் கடந்து, வழி நெடுக கிடைத்த தூரத்து கிராமங்களில், சிறிது இளைப்பாறி, வழியை கேட்டறிந்து, தன் பயணத்தை தொடர்ந்தனர். கடைசியில் இராஜ்ஜியத்தின் தலைநகருக்குள் செல்ல நுழைவாசலை நெருங்கும் பொழுது, அவர்களை வரவேற்பது போல் ஒரு விசித்திரமான நிகழ்ச்சி காத்திருந்தது. இவர்கள் தலைநகரின் நுழை வாசலை நோக்கி தன் குதிரைகளை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்த போது, சற்று தூரத்தில் இருந்த ஒருவர் கையசைத்து இவர்களை அழைத்தார். இருவரும், தன் குதிரைகளின் வேகத்தை குறைத்தவுடன், அவர் குரல் கொடுத்து தன்னிடம் வரும்படி அழைத்தார். அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு கழுதை மரத்தில் கட்டப்பட்டு சோம்பலுடன் நின்றுகொண்டிருந்தது. குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த இருவரும் அவர் அருகில் சென்றனர். அவர் அமர்ந்தபடியே குதிரைகளை புகழ ஆரம்பித்தார். நண்பர்கள் இருவரையும் புகழ்ந்தார்:

“ஆஹா, எத்தனை அழகான வெண்ணிற குதிரைகள், என்ன அருமையான மக்கள்,” என புகழ்ந்தார்.

“மிகவும் உயர்ந்த குலத்தை சேர்ந்த குதிரைகள் போலும்!, இராஜ்ஜியத்திற்கு புதிதாக வருகை தருகிறீர்களோ?’ என கேட்டார்.

“ஆமாம் சகோதரரே, அப்பால் இருக்கும் இராஜ்ஜியத்தை சேர்ந்தவர் நாம், இங்கே சுற்றிப்பார்க்க வந்தோம்”, என்றனர்.

“அப்படியா, சரி, நீங்கள் இந்த கழுதையை எடுத்துக்கொண்டு எனக்கு அந்த குதிரையை கொடுத்துவிடுங்கள், நான் இங்கு வெகு நேரமாக அதற்காக காத்திருக்கிறேன். நான் உடனே போகவேண்டும்.” என்றார் அவர்.

நண்பர்கள் இருவரும் குழம்பினர். இது என்ன விசித்திரமான வேண்டுகோள்? தன் சோம்பேரிக்கழுதையை நம்மிடம் ஒப்படைத்துவிட்டு, நம்மிடம் இருக்கும் அழகான குதிரையை கேட்கின்றானே! அதிர்ச்சியடைந்த நண்பர்கள், சற்று சுதாரித்துக்கொண்டு, “நீங்கள் பைத்தியமா, என்ன? யாராவது குதிரையைக்கொடுத்து கழுதையை வாங்கிக்கொள்வானா, நீங்கள் என்ன முட்டாளா,” என இருவரும் தைரியத்துடன் கேட்டனர்.

“ஐயோ நான் பைத்தியமும் இல்லை, முட்டாளும் இல்லை, ஒரு வேளை நீங்கள் முட்டாளாக இருந்தீர்களானால், எனக்கு குதிரையை கொடுத்துவிடுவீர்கள் என கேட்டேன், பரவாயில்லை, நீங்கள், உஷாரானவர்தான். போய் வாரும்.” என கூறி விடையளித்து, தன் முகத்தை மறு பக்கம் திருப்பிக்கொண்டார்.

விசித்திர இராஜ்ஜியத்தின் சாயலை நுழை வாசலிலேயே கண்டுகொண்ட நண்பர்கள் இருவரும், தன் தலைகளை சொறிந்தபடி, முகங்களை சுளித்துக்கொண்டு நுழை வாசல் வழியாக இராஜ்ஜியத்தில் நுழைந்தனர். அங்கே அவர்களை வழி மறுத்த சுங்க அதிகாரிகளிடம், நுழைவுக்கட்டணத்தை செலுத்திவிட்டு, தலைநகருக்குள் சென்றனர். அங்கே அருகிலிருந்த சத்திரம் ஒன்றில் தன் பொருள்களை பாதுகாப்பாக வைத்து விட்டு நாள் முழுக்க பலவித கூத்து, கேளிக்கை விளையாட்டுகளை கண்டு களித்தனர். இரண்டு நாட்கள் இவ்வாறே பல அபூர்வமானவற்றை அனுபவித்துக்கொண்டிருக்கும் பொழுது, அன்று மாலை திடீர் என கடுமையான மழை பொழிந்தது. தமது குதிரைகளை வேகமாக ஓட்டி, இருவரும் தங்கியிருந்த சத்திரத்திற்கே வந்துவிட்டனர். அன்று பொழிந்த மழையில், சத்திரத்தின் அருகே ஒரு பழைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. அதனால், அந்த வீட்டுக்காரர் பலியானார்.

மறு நாள் மழை நின்ற பின், அவ்வீட்டிலிருந்த பெண்மணி ஒருவர், மன்னரிடம், தன் கணவரின் மரணத்திப்பற்றி முறையிட்டார்.

“மன்னா, நேற்று பொழிந்த விடா மழையில் என் வீட்டுச்சுவர் இடிந்து தூங்கிக்கொண்டிருந்த என் கணவர் மீது விழுந்து விட்டது. அவர் இறந்து விட்டார். அதனால் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

“ஓஹ், அப்படியா, கவலைப்படாதே பெண்ணே, இப்பொழுதே கவனிக்கின்றேன்.” என கூறி, “யாரங்கே, அந்த சுவற்றை எழுப்பியவனை உடனே இங்கே இழுத்து வாருங்கள், என சேவகர்களுக்கு கட்டளையிட்டார் மன்னர்.

சேவகர்களும் அப்பெண்ணிடம் மேஸ்திரியின் விலாசம் அறிந்து, அவரை உடனே மன்னர் முன் ஆஜர் படுத்தினர்.

“ஏய், நீ தானே, இடிந்து விழுந்த சுவற்றை எழுப்பியவன். அதனால் அந்த பெண்மணியின் கணவர் இறந்து விட்டார். அதற்கு நீ தான் பொறுப்பு, நீ என்ன சொல்லப்போகிறாய்?” என மன்னர் ஆதங்கத்தோடு உறுமினார். “இப்பெண்ணைக்கட்டிக்கொள், அல்லது சாகத்தயாராகிவிடு.” என கட்டளையிட்டார் மன்னர்.

“மாண்புமிகு மன்னா, அப்படியென்றால், ஒவ்வொறு மழையின் பிறகும் நான் ஒரு பெண்ணை கட்டிக்கொள்ளவேண்டியதிருக்கும். எனக்கு இருப்பதோ சின்ன வீடு, அத்தனை மனைவியர்க்கும் இடம் இல்லை. மன்னிக்க வேண்டு, சுவர் எழுப்பியது நான் தான். ஆனால், கலவையை நான் கலக்க வில்லை. அது சரியாக கலக்கப்படாமலிருந்திருக்கும், ஆகவே செங்கல்களுடன் பிடிப்பில்லாமல் சுவர் விழும் நிலக்கு ஆளானது.” என மேஸ்திரி தன் உயிரை பிடித்துக்கொண்டு கவலையுடன் முறையிட்டார்.

“அப்படியா செய்தி, வீரர்களே, கலவையை கொடுத்தவனை இழுத்து வாருங்கள்.” – இது மன்னரின் கட்டளை.

சுவர் எழுப்பிய மேஸ்திரியிடம் விசாரித்து, அஸிஸ்டேன்ட் மேஸ்திரியை இழுத்து வந்தனர் காவலர். அவரோ தான் சரியாகத்தான் கலந்ததாகவும், தண்ணீர் ஊற்றிய பெண் தான் அதிக அளவு தண்ணீர் கலந்திருக்கலாம் எனவும் கூறி, தப்பித்துக்கொண்டார். கட்டளையின் பேரில், தண்ணீர் ஊற்றிய பெண்ணை பிடித்து வந்தனர் காவலர்.

“மன்னா, நான் நீர் இறைத்த கிணற்றில், தண்ணீரே மிகவும் மெலிந்திருக்கிறது, அதற்கு பலமே இருந்திருக்காது, ஒல்லியான நான், அதிக அளவு தண்ணீரை எப்படி சுமந்து வந்திருக்க முடியும், ஆகவே, கிணற்றுக்கு சொந்தக்காரரே அதற்கு பொறுப்பு,” என்றாள் அந்தப்பெண்.

கிணற்றுக்கு சொந்தக்காரரை அழைத்து வந்து, அப்படி இப்படி என்று, கடைசியில், கிணற்றை தோண்டியதாக ஒரு ஒல்லியான ஆள் மாட்டிக்கொண்டார். மன்னருக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. நாள் முழுக்க குற்றவாளியை அடையாளங்கொள்ளவே கழிந்து விட்டதால், அன்றைய தீர்ப்புக்கு நேரமாகி விட்டது, பாவம் அந்த ஒல்லியான, மண் தோண்டும் வேலைக்காரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, மறு நாள் அவரை பொது இடத்தில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் குற்றம் சுமத்தப்பட்டவரின் மனைவிக்கு கோபம் வந்தது. அவள் இரவோடு இரவாக, தூக்கிலிட ஒரு ஸ்பெஷல் கயிற்றை உருவாக்கினாள். அது தூக்கிலிடும் கயிற்றைவிட சற்று பருமனாக இருந்தது. அதை அவள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கொடுத்து, உன் கணவனின் கொலைகாரனுக்கு இந்த கயிற்றில் தூக்கிலிடும் படி கேட்டுக்கொள் என வேண்டிக்கொண்டாள்.

மறு நாள், செய்தி அறிந்து ஊர் மக்கள் அனைவரும் பொதுத்திடலில் திரண்டனர். மண் தோண்டியும் தன் கை, கால்கள் கட்டப்பட்டு பலி பீடத்திற்கு இழுத்து வரப்பட்டான். கணவனை இழந்த பெண் அவள் வைத்திருந்த பருமனான புதுக்கயிற்றை கொடுத்து அதில் தூக்கிலிடும்படி வற்புறுத்தியதால், மன்னரும் ஒப்புக்கொண்டு, பழைய கயிற்றின் பக்கத்திலேயே புதிய கயிறும் கட்டி தொங்கவிடப்பட்டது. அனைவரின் ஆரவாரத்துடன் மண் தோண்டியின் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. அதன் முடிச்சு பிடரிப்பக்கம் இறுக்க முடியாமல் சேவகர்கள் திணறினர். நீண்ட நேரம் முயற்சித்தும் அந்த கயிறு மண் தோண்டியின் கழுத்துக்கு சரியாக பொருந்தவில்லை. காவலர்கள், கயிற்றுக்கு கழுத்து பொருந்தவில்லை என மன்னரிடம் முறையிட்டனர். மன்னர் ஆத்திரம் பொங்க, கயிற்றுக்குத்தக்க வேறு ஒருத்தனை பிடித்து வரும்படி கட்டளை பிறப்பித்தார். காவலர்களும் பருத்த கழுத்து கொண்டவனை மக்களிடையே தேட ஆரம்பித்து விட்டனர். அதனால் அமளி ஏற்பட்டு மக்கள் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தனர்.

அது வரை நடப்பதெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த இரு நண்பர்களும், நியாயம் வழங்கப்படும் ஞானத்தை அறிந்து வியந்துகொண்டிருந்தனர். மெதுவாக எழுந்து தன் தங்குமிடத்திற்கே செல்லும் பொழுது ஒரு காவலாளி இந்த நண்பர்களில் பருமனான நண்பனை கண்டுகொண்டான். “இதோ, பிடிபட்டான்” என கூறி, காவலர்கள் அவனை பிடித்து சென்று விட்டனர். தான் இந்த நாட்டை சேர்ந்தவனல்ல, அயல் நாட்டுக்காரன், சுற்றிப்பார்க்க வந்ததாக சொல்லியும் அவர்கள் மன்றாடுவதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. மற்ற நண்பனின் அழுகை, புலம்பல் எதுவும் எடுபடவில்லை. நேரம் கடந்து விட்டதால், மன்னர் மறு நாள் காலை அனைவரும் கூடியிருக்க, இந்த பருமனான அயல் நாட்டவனை தூக்கிலிடும்படி உத்தரவிட்டு தன் அரண்மனைக்கு சென்று விட்டார். மண் தோண்டியோ தப்பித்தோம் பிழைத்தோம் என தன் மனைவியுடன் இரவோடு இரவாக, நகரை விட்டே நடையை கட்டினான்.

மாட்டிக்கொண்ட பருமனான நண்பன் தனது தலை விதியை நினைத்து அழுது கொண்டிருந்தான். அவனுடைய நண்பனோ மன்னனின் முட்டாள்தன நடவடிக்கைகளால் வியந்து, தன் நண்பனை காக்க ஆழமாக சிந்திக்கலானான். தன் உயிருக்குயிரான தோழன் நாளை காலையில் தன் கண் முன்னேயே தூக்கிலிடப்படுவதை நினைத்து அவனால் சகிக்க இயலவில்ல. ஆனால், சொற்பமான பேச்சுகளால், மக்கள் பிழைத்துக்கொள்வதையும் யோசித்துப்பார்த்தான். ஒரு முடிவுக்கு வந்து, நண்பனுக்கு பதில், தன் உயிரை தியாகம் செய்ய தயாரானான்.

மீண்டும் மறு நாள் காலை, அதே பொதுத்திடலில் மக்கள் கூட்டம் அலை மோதியது. யாரோ பருமனான ஒரு அயல் நாட்டு பிரஜை தூக்கிலிடப்படுவதை காண மக்கள் வெகுவாக திரண்டிருந்தனர். மன்னரும் வந்தார், “உம்ம்ம்…. ஆகட்டும், இழுத்து வாருங்கள் அவனை…” காவலர் பருமனான நண்பனை இழுத்து வந்து அவன் கழுத்தில் கயிற்றை மாட்டும் பொழுது, அவனுடைய நண்பன் பலி பீடத்திற்கு விரைந்து வந்து கயிற்றை பிடுங்கி தன் கழுத்தில் மாட்டிக்கொள்ள முயற்சித்தான். பருமனான நண்பனோ, அதிர்ச்சியடைந்து, தனக்காக உயிர் தியாகம் செய்ய நண்பன் வந்திருப்பதை கண்டு, “இல்லை நண்பனே நான் தான் முதலில் சாவேன்”, என்றான். “இல்லை முதலில் நான்”, “நான் தான்”, “இல்லை நான் தான்” என இருவருக்கும் கை கலப்பு ஏற்பட்டது. மன்னர் உட்பட அனைவரும் அதிர்சியடைந்தனர். மரணத்திற்கு பயந்து ஓடும் இக்காலத்தில் இவன் தானே முன் வந்திருக்கிறானே, ஏதோ மர்மம் இருக்கிறது என மன்னர் யோசித்தார். இருவரையும் அழைத்து மன்னர் விவரத்தை விளக்குமாறு கேட்டார். நண்பர்கள் இருவரும் :

“மாண்புமிகு மன்னா, அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்று உங்களுக்கு தெரியும், என்றைக்காவது ஒரு நாள் சாகத்தான் வேண்டும். இன்று முழுப்பௌர்ணமி, யார் முதலில் இறக்கிறார்களோ அவர் மட்டும் தான் நேராக சொர்க்கம் செல்ல இயலும், இதை அறிந்த என் நண்பன், உடனே சொர்க்கம் செல்ல சாக துணிந்து விட்டான்”, என்றனர்.

“சொர்க்கமா…? அது என்ன, எங்கே இருக்கிறது?” என ஆர்வத்துடன் கேட்டார் மன்னர். இருவரும் சொர்கத்தைப்பற்றி நிறைய புகழ்ந்து பேச பேச, மன்னர் துள்ளி குதித்தார். “நயவஞ்சகனே, இத்தனை அருமையான இடம் உனக்கு கிடைக்கும் என மனக்கோட்டை கட்டாதே. அது என் இராஜ்ஜிய பரம்பரைக்குத்தான் சொந்தம்., முதலில் அந்த இடம் எனக்குத்தான் சொந்தம். ஆகவே நான் தான் அங்கே முதலில் காலடி வைக்க தகுதியானவன்”, என கூறி, கிடு கிடு என பலி பீடத்தில் ஏறினார் மன்னர். மந்திரிகளின் அறிவுறை, காவலரின் தடுப்பு எதையும் பொருட்படுத்தாமல், தானே தூக்குக்கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டார். கயிறும் மன்னர் கழுத்துக்கு கச்சிதமாக அமைந்தது. நேரம் தாழ்த்தாமல் உடனே தூக்கிலிடும் படி கட்டளையிட்டார். வேறு வழியின்றி மக்கள் அனைவரும் துதிப்பாட, மன்னர் தூக்கிலிடப்பட்டார்.

மன்னரின் மரணத்தால் நிம்மதியடைந்த மக்கள், இந்நிகழ்சிக்கு காரணமாயிருந்த இரு நண்பர்களையும் போற்றினர். இருவருக்கும் நாட்டையாளும் பொறுப்பையும் அளித்து மகிழ்ந்தனர்.

2 thoughts on “சொர்க்கம் செல்ல வழி

  1. அருமையான கதை….முடித்த விதம் மிகவும் சிறப்பு…கதாபாத்திரங்களை விளக்கிய விதமும் நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *