சேதுபதியின் மோதிரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 3,845 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கையை அசைத்துத் தொட்டில. ஆட்டிக் கொண்டே நாவையும் அசைத்துப் பாடிக் கொண்டிருந்தாள், அந்தப் பெண்மணி. முகத்திலே பொலிவின்றி, உடம்பிலே உரமின்றி, கழுத்திலே மங்கலமின்றி நின்றிருந்த அந்த மடந்தைக்கு நாவிலே மாத்திரம் இனிமையும் வன்மையும் இருந்தன. தொட்டிலிலே கிடந்த சின்னஞ் சிறு குழந்தையை ஆர்வம் பொங்கப் பார்த்தபடியே அவள் தாலாட்டிக் கொண்டிருந்தாள்.

அவள் உள்ளத்தில் என்ன என்ன நினைவுகள் ஒடினவோ, யார் கண்டார்கள்? இடையிடையே ஒரு பெருமூச்சு, சிறிது நேரம் மெளனம், சிறிது முகத்திலே புன்சிரிப்பு, பிறகு சோகரேகை, அப்பால் இரு கண்ணிர்த் துளிகள். இப்படியாக அவள் உள்ளக் கற்பனைக்குப் புறத்தே சின்னங்கள் தோன்றின. அவற்றைக் கொண்டு அந்தக் கற்பனையை உருவாக்கினால் கவலையும் சோகமும் இனிமையும் கலந்த கதை ஆகலாம்.

இப்போது அவள் கணவனை இழந்த மங்கை; தன் வாழ்வுக்குத் தனிப் பற்றுக்கோடாக இதோ தொட்டிலில் கிடத்தியிருக்கிறாளே, இந்தக் குழந்தையைத்தான் நம்பியிருக்கிறாள். பழங்காலக் கதையிலே உள்ளம் ஊடுருவிச் செல்லும்போது அவள் தன்னை மறக்கிறாள். இப்போது நிற்கும் நிலை நினைவுக்கு வருகையில் அவள் சோகந் தேங்கும் கண், நீர்த்துளிகளைத் துளிக்கின்றது. அந்தச் சின்னஞ் சிறு குழந்தையின் இளங்கையிலே சிக்குண்ட எதிர்காலத்தை நினைக்கையில் ஒன்றும் தெரியாமல் பெருமூச் செறிகிறாள்.

சேதுபதி மன்னருடைய ஆதரவு அவளுக்கு எப்போதும் போல இருக்கிறது. ஆனாலும் அந்த ஆதரவு இரக்கத்தின் விளைவாக எழுந்ததுதானே? அவளுடைய கணவர் அமிர்த கவிராயர் வாழ்ந்த காலத்தில் அவள் பெற்ற இன்ப வாழ்வு என்ன! இப்போது அவள் நிர்க்கதியாக நிற்கவில்லையே தவிர, நாள்தோறும் அமிர்த கவிராயருடைய அமுதக் கவியிலே உள்ளம் பறிகொடுத்த உற்சாகத்தில் சேதுபதி தந்த சம்மானங்களைப் பெற்று வாழ்ந்த வாழ்வு ஆகுமா?.

அந்தக் காலம் இனிமேல் வருமா? ஒரு துறைக் கோவையென்று புலவர் உலகத்தில் பேச்சு வந்தால் அது ரகுநாத சேதுபதியின் ஒரு துறைக்கோவையைத் தானே இன்றும் குறிக்கிறது? புலவர் ஆளுக்கோர் ஒரு துறைக்கோவை பாடினாலும் இதற்குச் சமானம் ஆகுமா?.

அவள் நினைத்துப் பார்க்கிறாள். நானூறு பாட்டுக்கும், சேதுபதி மன்னர் நானூறு பொன் தேங்காயை உருட்டி விட்டாரே! இதைக் கதையிலே கூடக் கேட்டதில்லையே! இடையே ஒரு பாட்டைச் சொல்லும் போது, “இதை நன்றாக உடைத்துப் பார்த்து ரசிக்க வேண்டும்; மற்றப் பாட்டுக்களைப் போல எண்ணக்கூடாது” என்று கவிராயர் சொன்னர். சுவையறியும் செம்மலாகிய அரசர் சொன்னதுதான் மிக மிக ஆச்சரியம். “தெரியும்; நமக்கு இதன் அருமை தெரியும் என்பதையும், இந்தப் பாட்டை உடைத்துப் பார்த்து இது மாணிக்கம் போன்ற பொருளை உடையதென்று உணர்ந்ததையும் இப்போது உருட்டிய தேங்காய் சொல்லும்; அதை உடைத்துப் பார்த்தால் தெரியும்” என்று மன்னர் சொன்னார். தேங்காயை உடனே உடைத்துப் பார்த்தால், உள்ளெல்லாம் மாணிக்கக் கற்கள்! அந்த மாதிரி நிகழ்ச்சி உலகத்திலே சில காலங்களில்தான் நிகழக்கூடும்.

அந்தக் கவிராயரைப் பிரிந்து அவள் வாழ்வது கிடக்கட்டும்; “பாட்டுக் கிசைந்த ரகுநாத சேதுபதி” எப்படி வாழ்கிறார்? சேது சம்ஸ்தானத்தில் கவிராயர் பலர் உண்டு; வெளியூரிலிருந்தும் வருவார்கள். ஆனால் அமிர்த கவியின் அமுதகவி இருந்தால்தான் அரசருக்கு இன்பம் நிறைவடையும்.

இந்தப் பழங்கதையையெல்லாம் அவள் நினைத்துப் பார்த்தாள். அந்த நினைவுலகத்திலிருந்து உண்மை உலகத்துக்கு இறங்கி வருகையில் நிலை குலைந்து பெருமூச்சு விடுகிறாள். வேறு என்ன செய்வாள், பாவம்!

கவிராயர் மனைவியை ரகுநாத சேதுபதி அருமையாகப் பாதுகாத்து வந்தார். கவிராயர் இல்லாத குறையைத் தவிர அந்தப் பெண்மணிக்கு வேறு ஒன்றாலும் குறை வைக்கவில்லை. அந்த அம்மைக்குத் தன் குழந்தையிடம் இருந்த அன்பு பெரிதுதான்; ஆனலும் அமிர்த கவிராயர் கான்முளை வருங்காலத்தில் அவர் பெயரைக் காப்பாற்றுவான், சம்ஸ்தானத்துக்குப் புகழ் உண்டாக்குவான் என்ற ஆர்வத்தோடு சேதுபதி அந்தக் குழந்தையைப் பாதுகாக்கவேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தாரே; அது மாத்திரம் சாமானியமான அன்பா?

அரண்மனைக்கு அருகில் அந்த வீடு இருந்தது. கவிராயருடைய மனைவி ஒரு கிழவியோடு வாழ்ந்து வந்தாள். கூடத்திலே தொட்டிலேக் கட்டி அதிலே குழந்தையை விட்டுத் தாலாட்டிக் கொண்டிருந்தாள். கூடத்துச் சுவரின் சாளரத்து வழியே பார்த்தால் அரண்மனையின் மேற்பகுதி தெரியும்.

பழைய ஞாபகத்திலே தோய்ந்தெழுந்த உள்ளத்தில் உற்சாகம் பிறக்கும்; உடனே தன்னையும் அறியாமல் உச்சஸ்தாயியிலே அவள் தாலாட்டைப் பாடுவாள்.

அப்போது அவள் கண்ணில் திடீரென்று ஒரு மருட்சி தோன்றியது. தொட்டிலின்மேல் அவள் கண் ஒடியது; அப்பால் சுவரிலே பாய்ந்தது; சாளரத்திலே சென்றது; அதனூடே கூர்ந்து கவனித்தது. சாளரத்தின் வழியே வந்த ஒரு பிரகாசந்தான் அவளை அப்படிப் பார்க்கச் செய்தது. ஒளிக்கதிர் தொட்டிலின் மேலே விழுந்ததை அவள் கண்டாள். சாளரத்தின் வழியே அந்தக் கதிர் வந்தது. எங்கிருந்து வந்ததென்று ஆராய்ந்தாள்.

அரண்மனையின் மேல்மாடியிலே ரகுநாத சேதுபதி கைபிடிச் சுவரின் மேலே சாய்ந்துகொண்டு தாலாட்டுப் பாட்டைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தார். கைபிடியின்மேல் வைத்த கையில் மிக உயர்ந்த கற்கட்டு மோதிரம் அணிந்திருந்தார். எதிரே வீசிய சூரியனது கதிர் அதிலே பட்டுப் பளபளத்தது. அதிலிருந்து கிளம்பிய கதிர் அவர் உள்ளத்தைப் போலச் சாளரத்தின் வழியே புகுந்து தொட்டிலிலே, படர்ந்தது.

கவிராயர் மனைவி உண்மையை உணர்ந்தாள். ஆனாலும் அதைத் தெரிந்துகொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. பழைய ஞாபகங்களைச் சற்று மறந்து பாட்டிலே நிலைகொண்டாள். பழைய பாட்டோடு புதிய பாட்டையும் இணைத்துப் பாடினாள். கவிராய்ர் மனைவி அல்லவா?

அதுவரையில் தம்மை மறந்து கவனித்துக்கொண்டிருந்ந மன்னர் திடீரென்று உடம்பு குலுங்க நிமிர்ந்து நின்றார். பாட்டின் ஒரு கண்ணி அவரை அப்படிச் செய்துவிட்டது. ஆம். அந்தப் பெண்மணி, இதோ மூன்றாம் முறையாகப் பாடுகிறாள்:

“திக்கெட்டும் போற்றிசெய்யும்
சேதுபதி ராசேந்த்ரன்
கற்கட்டு மோதிரத்தைக்
கண்டாசைப் பட்டாயோ”

என்ற கண்ணி இப்போது தெளிவாக அவர் காதில் விழுந்தது. ஒவ்வொரு சொல்லும் மணி மணியாக அந்தப் பெண்ணின் வாயிலிருந்து உதிர்ந்தது; அப்போது அரசருடைய கண்ணிலிருந்து இரண்டு துளி நீர் உதிர்ந்தது.

“கம்பன் வீட்டுக் கட்டுத் திறியும் கவி பாடும்” என்ற பழமொழி அவர் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். விறுவிறென்று இறங்கினர். கீழே போய் ஓர் அழகிய தட்டில் பணமும் ஆடையும் வைத்தார், தம் கையிலே இருந்த மோதிரத்தைக் கழற்றி அவற்றின் நடுவிலே வைத்தார். தக்க மனிதர் ஒருவரை அழைத்து, “இந்தாரும். கவிராயர் மனைவியாரிடம் கொண்டு போய்க் கொடும். கற்கட்டு மோதிரத்தை கண்டு ஆசைப்பட்ட குழந்தைக்கு மகாராஜா சம்மானம் செய்திருக்கிறார் என்று சொல்லும்” எள்று தழுதழுத்த குரலிலே கூறி அனுப்பினார்.

“மகாராஜா உங்கள் குழந்தைக்குச் சம்மானம் இது என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்” என்ற வார்த்தைகளோடு அந்த முதியவர் கவிராயர் மனைவியின் முன்னே நின்றார். அவள் இதை எதிர்பார்த்தவள் அல்லவே! மகாராஜா இருப்பதைத் தெரிந்து கொண்ட குறிப்பையல்லவா அவள் வெளியிட்டாள்? ‘ஆனால், மகாராஜா, தமிழருமை தெரிந்த சேதுபதி, இப்படியல்லவா செய்துவிட்டார்!’

அவளுக்கு நன்றியுரை கூற வாய் எழும்பவில்லை. தட்டோடு வாங்கிக் கண்ணில் ஒத்திக்கொண்டாள். அந்தக் கற்கட்டு மோதிரத்தைத் தனியே எடுத்து ஒத்திக்கொண்டாள். அது அவள் கண்ணிரினால் நனைந்து போயிற்று.

எதிரே நின்ற கிழவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

(இந்தக் கதையை எனக்குச் சொன்னவர் கோம்பை ஸ்ரீ க.சண்முகசுந்தரம் அவர்கள்)

– எல்லாம் தமிழ், எட்டாம் பதிப்பு: ஜூன் 1959, அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *