இடைக் காடர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 2,432 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழைய காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்தது. தமிழ்ப் புலவர்கள் பலர் சேர்ந்துகொண்டு, பழைய தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்து வந்தார்கள். புதிய நூல்களை இயற்றினார்கள். தமிழ் நாட்டில் யாரேனும் புலவர் ஒரு நூல் இயற்றினால் உடனே அதற்கு மதிப்பு வந்துவிடாது. மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குப் போய் அங்கே இருந்த புலவர்களிடம் அதை வாசித்துக் காட்டவேண்டும். புலவர் சபையில் முதல்முதலாக வாசித்துக் காட்டுவதை அரங்கேற்றல் என்பது வழக்கம். அரங்கு என்றால் சபை: சபையில் ஏற்றுதல் என்பது அதற்கு அர்த்தம். புலவர்களுடைய நூல்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப் பட்டால் தமிழ் காட்டினர் அவற்றைப் பாராட்டுவார்கள். தமிழ்ச் சங்கப் புலவர்களுக்கு அத்தனை மதிப்பு இருந்து வந்தது.

படித்த புலவர்களாக இருந்தாலும் சிலருக்கு நல்ல குணம் இருப்பதில்லை. இப்போதுகூட அப்படித்தானே? நன்றாகப் படித்திருப்பான்; பட்டம் பெற்றிருப்பான். ஆனால் கெட்ட குணம் உடையவனாக இருப்பான். இப்படிப்பட்ட மனிதர்கள் எப்போதும் இருப்பார்கள்.

ஒரு காலத்தில் அந்தத் தமிழ்ச் சங்கத்தில் பொருமை படைத்த புலவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களுக்குத் தாங்கள் எழுதுவதுதான் கவி, மற்றவர்கள் பாட்டெல்லாம் மட்டம் என்ற நினைப்பு. உலகம் அப்படிச் சொன்னால் நம்புமா? நல்ல பாட்டை நல்ல பாட்டென்று வெளியில் உள்ளவர்கள் சொல்வார்கள்; ஆனால் சங்கப் புலவர்கள் அது நன்றாக இல்லை என்று சொல்லியிருப்பார்கள். பாட்டைக் கேட்பவர்கள், “அட இந்த அழகான கவியையா அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள்?” என்று சொல்வார்கள். இதனால் சங்கப் புலவர்களிடம் இருந்த நம்பிக்கையும் மதிப்பும் குறைந்துவிடும் நிலை வந்துவிட்டது.

IdaiKadarசங்கப் புலவர்களுக்கும் இது தெரிந்தது. எப்படியாவது தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று எண்ணினார்கள். கெட்ட குணத்தைத் திருத்திக்கொண்டால் மதிப்பு உயரும். அப்படிச் செய்ய அவர்களுக்கு விருப்பம் இல்லை. அயல் புலவர்களே முன்னுக்கு வரவொட்டாமல் அழுத்தவேண்டும்; தங்கள் மதிப்பும் குறையக்கூடாது. இதற்கு என்ன வழி என்று யோசித்தார்கள். கடைசியில் ஒரு தந்திரம் செய்யத் தீர்மானித்தார்கள். அந்தக் காலத்தில் பனையோலையில்தான் எதையும் எழுதுவார்கள். எழுத்தாணியினல் ஏட்டில் வேகமாக எழுதி வந்தார்கள். நூல்களை எழுதி, அதற்காகக் கூலி வாங்கும் எழுத்தாளர்கள் இருந்தார்கள். மிகவும் கெட்டிக்காரர்களாகிய எழுத்தாளர்கள் சிலரைச் சங்கப் புலவர்கள் தேடிக் கண்டு பிடித்தார்கள். அவர்களுக்கு வேண்டிய கூலி கொடுப்பதாகச் சொன்னார்கள். அவர்களைக் கொண்டு, தங்கள் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா?

யாராவது புலவர் வந்து, தாம் இயற்றிய கவியைச் சங்கத்தில் சொல்வார்கள். அங்கே திரைக்கு அப்பால் எழுத்தாளர்கள் பழைய வெற்றேடும் எழுத்தாணியுமாக உட்கார்ந்திருப்பார்கள். புலவர் சொல்லச் சொல்ல அந்தக் கவிகளே எட்டில் உடனுக்குடன் எழுதிவிடுவார்கள். புலவர் எல்லாவற்றையும் பாடி முடித்தவுடன் சங்கப் புலவர் ஒருவர், “இந்தப் பாட்டுகள் முன்பே யாரோ பாடியவை அல்லவா?” என்று கேட்பார்.

“இல்லையே! நான் பாடியவையே” என்று வந்த புலவர் சொல்வார்.

“இல்லை, இல்லை. எங்கள் சங்கத்தில் இந்தப் புத்தகம் இருக்கிறதே!” என்று சங்கப் புலவர் கூறி, ஏட்டை எடுத்து வரும்படி சொல்வார். அப்போதுதான் எழுதி முடிந்திருந்த சுவடியை உள்ளே இருந்து எடுத்து வந்து காட்டுவார்கள். இதற்கென்றே, எழுதாத பழைய வெற்றேடுகளே வைத்திருக்தார்கள். புதிதாகக் கவிகளே எழுதியிருந்தாலும் பழைய சுவடியைப்போல இருக்கும். வந்த புலவர் அதைப் பார்த்துப் பிரமித்துவிடுவார். இது என்ன குட்டிச்சாத்தான் வேலையாக இருக்கிறதே! என்று எண்ணி ஒன்றும் சொல்ல முடியாமல் போய்விடுவார்.

இப்படி அடிக்கடி சங்கத்தில் நடந்து வந்தது. வெளியூரில் இருந்த புலவர்கள், இந்த நிகழ்ச்சியைக் கண்டு மிகவும் வருத்தம் அடைந்தார்கள். இந்த அக்கிரமத்தை எப்படி நிறுத்துவது என்று எண்ணி எண்ணிச் சோர்ந்து போனர்கள்.

அப்போது அவர்களுக்கு இடைக்காடர் என்ற புலவருடைய நினைவு வந்தது. அவர் கடவுளுடைய அருள் பெற்றவர். சிறந்த புலவர். மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அற்புதமான காரியங்களைச் செய்கிறவர். அவரை இடைக்காட்டுச் சித்தர் என்றுகூடச் சிலர் சொல்வதுண்டு.

இடைக்காடரிடம் புலவர்கள் போனார்கள். சங்கத்தில் நடைபெறும் அக்கிரமத்தை எடுத்துச் சொன்னார்கள். “எப்படி யாவது நீங்கள் இதை நிறுத்த வழி பண்ணவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள். இடைக்காடர் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார்.

ஒரு நாள் இடைக்காடர் மதுரைக்குப் போனார். தமிழ்ச் சங்கத்துக்குப் போய், தாம் ஒரு நூலே இயற்றியிருப்பதாகவும், அதை அரங்கேற்ற வந்திருப்பதாகவும் சொன்னார், அவர், இறைவன் அருள் பெற்றவர் என்பது புலவர்களுக்குத் தெரியும். ஆதலால் அவரைக் கண்டவுடனே அவர்களுக்கு மனசுக்குள் கொஞ்சம் நடுக்கம் எடுத்தது.

இடைக்காடர் பாட்டைச் சொல்ல ஆரம்பித்தார். வந்தவர்கள் பாடப்பாட யாரோ வேகமாக அதை எழுதிக்கொள்கிறார்கள் என்று இடைக்காடர் தெரிந்துகொண்டார். அவர்கள் எழுத முடியாதவகையில் பாட்டுப் பாடவேண்டும் என்பது அவர் எண்ணம். எவ்வளவு வேகமாகச் சொன்னலும் எழுதுகிறவர்கள் எழுதி விடக்கூடும். ஆகையால் வேகமாகச் சொல்வதில் பயன் இல்லே. எழுத முடியாத ஒலிகளைப் பாட்டில் இணைத்துப் பாடினல் அவர்களால் எழுத முடியாது என்று அவருக்குத் தோன்றியது.

அவர் பாட ஆரம்பித்தார். ஒரு காட்சியை வருணித்தார்.

ஆற்றங்கரையில் ஒரு மாமரம். அதன்மேல் காக்கை இருந்து கா, கா என்று கத்திக்கொண்டிருந்தது. அந்த மரத்தின் அடியில் ஒர் இடையன் கட்டுச் சோற்றை அவிழ்த்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். காக்கை கத்துவது அவனுக்குப் பொறுக்கவில்லை. அவன் கையில் கோல் இருந்தால் அதை வீசி எறிந்து காக்கையை ஒட்டியிருப்பான். கோல் இல்லை; ஆகவே வாயினால் ‘சு, சு’ என்று ஒட்டினன்.

இந்தக் காட்சியைப் பாட்டாகப் பாடினார் இடைக்காடர். காக்கை கத்துவதைப்போலவே கத்தினர். இடையன் ஒட்டுவதைப் போலவே ஓசை எழுப்பினர். அந்தச் சத்தங்களே அப்படியே எழுத முடியாது. பாட்டு வருமாறு:

ஆற்றங் கரையில் அருகிருக்கும் மாமரத்தில்
காக்கை இருந்து கஃகஃகெனக்-காக்கை தனை
எய்யக் கோல் இல்லாமல் இச்இச்இச் என்றானே
வையக்கோ னார்தம் மகன்.

இந்த ஒரு பாட்டோடு அவர் கிற்கவில்லை. இடையன் ஆட்டை ஒட்டுகிற சத்தம், தும்மும் சத்தம், ஆடு கத்துகிற சத்தம் இப்படியாக எழுத்தில் எழுத முடியாதபடி சில ஒலிகளையும் வைத்துக் கவிகளைச் சொன்னார்.

உள்ளே இருந்தவர்கள் ஒர் ஒலியைக் கேட்டு, எந்த எழுத்தால் அதைக் குறிக்கலாம் என்று யோசிப்பதற்குள் இடைக்காடர் பாட்டு முழுவதையும் பாடி முடித்து அடுத்த பாட்டைத் தொடங்கி விடுவார். பாட்டுக்குமேல் பாட்டாக வந்தது. ஒவ்வொரு பாட்டிலும் இந்த மாதிரி எழுத முடியாத ஓசைகள் வந்தன. உள்ளே இருந்தவர்கள் எழுத முடியாமல் திண்டாடினர்கள். இதுவரையில் இவ்வாறான சங்கடம் அவர்களுக்கு ஏற்படவே இல்லை. எழுத்தாளர்களுக்கு அப்போது கல்லறிவு உண்டாயிற்று. “இவ்வளவு காலமாக நாம் எவ்வளவோ உத்தமர்களுடைய மனம் புண்படும்படியாகச் செய்துவிட்டோம். இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது” என்று எண்ணினர்கள். அவர்கள் எழுத்தாணியும் கையுமாக வெளியே வந்தார்கள். அதை இடைக்காடர் முன் வைத்து வணங்கினார்கள். “இதுவரைக்கும் நாங்கள் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும்” என்று அழுதார்கள். புலவர்களும் வணங்கினர்கள். இடைக்காடர் அவர்களிடம் அன்பாகப் பேசி, “இனிமேல் உங்கள் பொறாமையையும் வஞ்சகச் செயலையும் விட்டொழியுங்கள்” என்று சொல்லிப் புறப்பட்டுச் சென்றார்.

அது முதல் கவிஞர்கள் தங்கள் நூல்களே நல்ல முறையில் தமிழில் அரங்கேற்றலானர்கள், இடைக்காடர் அப்போது பாடின நூல், எழுத்தாணியை எழுதவிடாமல் செய்துவிட்ட காரணத்தால் ‘ஊசி முறி’ என்ற பெயரைப் பெற்றது. ஊசி என்பது எழுத்தாணிக்கு ஒரு பேர். இடைக்காடரைப் புலவர்கள் யாவரும் பாராட்டினார்கள்.

– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *