அரைகுறைக் கதைகள் – 2

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 19, 2023
பார்வையிட்டோர்: 3,084 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுயம்வரம் 

முதல் பாகம் 

சென்னபட்டணத்திலிருந்து டில்லிக்குப் போகும் ரெயில் வண்டியில் இன்று காலையில் ஒருவன் கிளம்பினால் நாளைக் காலையில் வர்தாவுக்குப் போய்ச் சேரலாம். அதன்மேல் நம்முடைய பிரயாணி, இப்பொழுது டில்லியில் அவசர காரியம் ஒன்றுமில்லை; இங்கே அருகில் உள்ள புண்ய க்ஷேத்திரங்களைத் தரிசித்துவிட்டு நாலு நாட்களுக் குப் பிறகு டில்லிக்குப் போனால் போதும்” என்று எண்ணுவானாகில், இப்படிச் செய்வதால் நல்ல பலன் அடைவான். வர்தாவில் வண்டி மாறி அங்கிருந்து பம்பாய்க்குப் போகும் வண்டியில் ஏறி, சுமார் 100 மைல் தூரம் மேற்கே சென்றால், ரெயில் பாதைக்குச் சுவல்ப தூரத்தில் ‘பூர்ணா’ என்கிற நதி கூடவே ஓடி வருவதைக் காணுவான். இந்திய பூமியில் இப்பெயருடன் மூன்று நதிகள் உண்டு. அவைகளில் இதுதான் பிரசித்தி பெற்றது. முன் காலத்தில் இதற்குப் பெயர் பயோஷ்ணி.

பஞ்சபாண்டவர்கள் வனவாச காலத்தில் இந்த நதிக்கரைக்கு வந்தார்கள். அப்பொழுது இந்நதியின் மாகாத்மியத்தையும் இது சம்பந்தமான ஓர் அருமையான கதையையும் அவர்களுக்கு லோமச ரிஷி, மகாபாரதத்தில் வன பர்வத்தில் 123-வது அத்தியாயத்தில் பின் வருமாறு கூறியிருக்கிறார்:-

இதன் கரையில் ச்யவனர் என்கிற ரிஷி வெகு காலம் கடுந்தபசு செய்துகொண்டிருந்தார். அவ ரைச் சுற்றிக் கரையான் மூடிவிட்டது. இரண்டு துவாரங்கள் மூலமாகக் கண்கள் மாத்திரம் காணப் பட்டன. ஒரு நாள், இந்நதியில் ஸ்நானம் செய்வ தற்காக, சர்யாதி என்கிற அரசன் தன்னுடைய பெண் ஸுகன்யாவை அழைத்துக்கொண்டு பரி வாரங்களுடன் இங்கே வந்து சேர்ந்தான். இடத்தில் நான் ஒரு வாக்கியத்தைச் சேர்க்க விரும்புகிறேன். லோமச ரிஷி ஸுகன்யாவின் பெயரை வெளியிடுவதற்கு முன்பே அவளுடைய புருவங்களின் அழகை வர்ணிக்கிறார்.) நதிக்கரை யில் உலாவிவந்த ஸுகன்யா, பட்டுப் போய்க். கறையான் பிடித்திருக்கும் மரத்தண்டு மாதிரித் தோன்றும் ச்யவனரைக் கண்டாள். “இதென்ன! இரண்டு துவாரங்கள் மூலமாக என்னவோ தெரி நீண்ட கிறதே!’ என்கிற ஆச்சரியத்துடன், ஒரு முள்ளை எடுத்து ச்யவனருடைய கண்களைக் குத்தினாள். உடனே அவருக்கு மகாகோபம் வந்து விட்டது. அதனுடைய பலனாகச் சர்யாதி ராஜா வின் பரிஜனங்கள் எல்லோருக்கும் ஓர் அபூர்வ உதர நோய் கண்டு வயிறு உப்பிவிட்டது.

அதன்மேல் அரசன் துக்கித்து, இச்சம்பவத்தின் காரணம் என்னவென்று ஒவ்வொருவரையும் விசாரித்து வருகையில், ஸுகன்யா தான் கண்டதைச் சொல்லி, பிரகாசமாய்த் தோன்றியது மின் மினிப் பூச்சியாக இருக்குமென்று தான் எண்ணி முள்ளினால் குத்தியதையும் வெளியிட்டாள்.

அரசன் உடனே ச்யவனரிடம் ஓடிவந்து, நடந் ததை ஒப்புக்கொண்டு, மன்னிப்பைக் கோரினான்.

அதற்கு ச்யவனர், “சரி, ஆனால் இந்தப் பெண் தன்னுடைய இறுமாப்பினால் அல்லவா இவ்விதம் எனக்குத் தீங்கு செய்தாள்? இவளையே நான் விவாகம் செய்துகொண்டு, அதன்பிறகே இவளை மன்னிப்பேன்” என்று சொன்னார்.

அரசன் அவ்விதமே சம்மதித்து, பெண்ணைத் தானம் செய்து கொடுத்துவிட்டு, முன்போல் தேக சௌக்கியத்தை அடைந்த தன்னுடைய பரிவாரங்களை அழைத்துக்கொண்டு அரண்மனை போய்ச் சேர்ந்தான்.

ஸுகன்யா தன் னுடைய புருஷனுடன் சந்தோஷமாய்க் காலம் கழித்து வந்தாள். ஒரு நாள் தேவலோகத்திலிருந்து இரண்டு அசுவினிதேவதைகளும் அந்த ஆச்ரமத்திற்கு வந்தார்கள். அவளுடைய ஒப்பற்ற லாவண்யத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவளுடைய சரித்திரத்தை அவளைக் கேட்டு அறிந்து கொண்டார்கள். பிறகு அவர்கள், “உனக்கு நிகராகத் தேவலோகத்தில்கூட எவரும் இல்லையே? நீ இந்தக் கிழக் கணவனுடன் இன்பமில்லாத வாழ்வைச் சகிப்பானேன்? அவனை விட்டு விட்டு எங்களில் ஒருவரைக் கணவனாக ஏற்றுக்கொள்” என்று சொன்னார்கள்.

அதற்கு அவள், “இவ்விதம் என்னைக் குறித்து எண்ணாதேயுங்கள். நான் என் பர்த்தாவிடத்தில் பாசம் கொண்டவள்” என்று மறுத்துவிட்டாள்.

ஆனால் அவர்கள் அதனுடன் விட்டுவிடவில்லை. “அப்படிச் சொல்லிவிடாதே. உன்னுடைய பர்த்தாவை அழகு சொரியும் வாலிபனாக நாங்கள் மாற்றி விடுகிறோம். அதன் பிறகு எங்கள் மூவருக்குள் யார் இஷ்டமோ அவரைக் கணவனாகக் கொள். இதற்குச் சம்மதமா என்று அவரைக் கேள்” என்றார்கள்.

இதை அவள் ச்யவனரிடம் தெரிவிக்கவே, அவர் அப்படியே ஆகட்டுமென்று சம்மதித்தார்.

அதன்மேல் அசுவினி தேவதைகள் அவரை முதலில் இந்த நதியில ஓர் இடத்தில் முழுகி ஸ்நானம் செய்யச் சொன்னார்கள். தாங்களும் கூடவே மூழ்கினார்கள். மூவரும் ஒரேமாதிரியான, கண்களைப் பறிக்கும் உருவத்துடன் வெளிக் கிளம்பினார்கள். அப்பொழுது ஸுகன்யா தன்னுடைய மனத்தையும் புத்தியையும் சரியாகச் செலுத்தி ச்யவனரையே பொறுக்கி எடுத்துவிட்டாள். அதுமுதல் அந்தத் தம்பதிகள் தேவர்களைப்போல் ஆனந்தமாய் ஜீவித்தார்கள். தமக்கு வாலிபத் தன்மையைச் சம்பாதிதுக் கொடுத்ததற்காக, ச்யவனர் அசுவினி தேவதைகளிடத்தில் நன்றி பாராட்டி, அவர்களை மதிப்புக் குறைவாய் எண்ணின தேவேந்திரனையும் அவர்களைக் கண்யம் செய்யும்படி பண்ணி வைத்தார்.

இவ்விதம் இருக்கிறது, மகாபாரதத்திலுள்ள விருத்தாந்தம். ஆனால் பயோஷ்ணி நதியில் அதன் பிறகு லக்ஷக்கணக்காய் ஜனங்கள் ஸ்நானம் செய்து வருகிறார்கள். ஒருவருக்காவது யௌவனம் திரும்பிக் கிடைத்ததாகப் பிரஸ்தாவமே இல்லை. பஞ்ச பாண்டவர்களுக்குக்கூட அந்தப் பலன் கிடைத்ததாகச் சொல்லப்படவில்லை. லோமசரும் தாம் அதை அடைந்ததாகச் சொல்லிக்கொள்ளவில்லை.

ஆயுர்வேதப் புஸ்தகங்களைப் பார்த்தாலோ, அவைகளில், தேவலோக வைத்தியர்களான அசு வினி தேவதைகள் ச்யவனருக்காக ச்யவன ப்ராசம் (ப்ராசம் என்றால் ஆகாரம்) என்கிற உணவு போன்ற ஒரு லேகியத்தைச் செய்து கொடுத்ததாகவும், அதனாலேதான் அவருக்கு யௌவனம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இங் நாட்களிலே சயவன ப்ராசம் என்கிற மருந்து இருமல் முதலிய வியாதிகளைச் சுவஸ்தம் செய்கிறதேயொழிய, வீசைக்கணக்காக அதைச் சாப்பிட்டி ருப்பவர்களுக்குக்கூட, ஆன வயசைக் குறைத்து விடுவதாகக் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை.

தவிர, பரோபகாரிகள் என்று பெயர்பெற்ற அசுவினி தேவதைகள், ஒரு ஸ்திரீயிடம் சென்று அவளுடைய கணவனைத் தள்ளிவிடும்படி அவ்விதம் பேரம் பேசுவது ஒத்து இருக்கிறதா? மேலும், கிழக் கணவனை நீக்கிவிட ஒரு ஸ்திரீயைச் சம்ம திக்கச் செய்வதற்கு, அவனை வாலிபனாக மாற்றித் தருவதா வழி?

ஸுகன்யாவின் விளையாட்டுப் புத்திதான் என்ன? விவாகம் ஆகக்கூடிய வயசு நிறைந்த ஒரு பெண்ணுக்கு, மின்மினிப் பூச்சியைக் கண்டால் உடனே முள்ளைத் தேடி அதைக் குத்தும்படி தோன்றுமா?

இம்மாதிரி சந்தேகங்கள் பல உண்டாகின்றன. ஆனால் புராணம் பொய்யாக இருக்காது. இதற் கெல்லாம் சரியான சமாதானம் இருக்கத்தான் இருக்கும். அது என்னவென்று ெ தரியாமல் நான் சங்கடப் பட்டுக்கொண்டு இருக்கையில், ஓஹையோ சர்வகலாசாலையின் ஸம்ஸ்க்ருத பண்டிதரான அலோயா. என்: பிம்பிள் என்கிற வித் வான் நம் நாட்டிலுள்ள புராதன ஏடுகளைத் தேடிக் கொண்டு சென்னபட்டணம் வந்திருப்பதாகக் கேள் விப்பட்டேன். இவர் ஆராய்ச்சியில் நிபுணர். யயாதி தேவயானி விஷயத்தில் இவர் தைரியமாய்ச் சிக்கறுத்ததை ஆராய்ச்சி உலகத்தார் எளிதில் மறக்க மாட்டார்கள். ஆகையால் எனக்கு இவ ருடன் பழக்கமில்லை யென்றாலும் அமெரிக்கன் சம்பிரதாயப்படி அவருக்கு டெலெபோன் செய் யத் துணிந்தேன். என்னுடைய சந்தேகங்களை விஸ்தரிக்க யத்தனித்தேன். அதற்குள் அவர், “ச்யவனருடைய விருத்தாந்தமா? அதன் உள் மர்மம் ஒரு நவீனத் துப்பறியும் கதையைக் காட் டிலும் ரஸமான து. அதற்கு ஸுகன்யாவின் பெயர்தான் திறவுகோல். அதை உபயோகித்து, “விசித்திர தீபிகா” வைப் படித்தால், எல்லாம் ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல் விளங்கும் ‘ என்று சொல்லி, டெலெபோனை மூடிவிட்டார்.

ஸுகன்யாவின் பெயர் எவ்விதம் ஒரு திறவு கோலாக உதவும்? ஸம்ஸ்கிருதத்தில் ஒவ்வொரு மெய்யெழுத்திற்கும் கடபயாதி சங்க்யை’ப் பிர காரம் ஒரு விலை உண்டு என்பது மாத்திரம் அறிவேன். அவ்விதம், ஸூ (7), க (1), ன் (0), யா (1), ஆக எல்லாம் கூட்டினால் 9; இதைப் பிடித்துக் கொண்டு ‘விசித்திர தீபிகா’ வின் ஒன்பதாவது அத்தியாயத்தில் தேடினேன். அதைத்தான் ஓர் எழுத்தும் விடாமல் மொழிபெயர்த்து இந்தக் கட்டுரையின் இரண்டாவது பாகமாக அடியில் எழுதியிருக்கிறேன்.

இரண்டாவது பாகம் 

விசித்திர தீபிகா

அத்தியாயம் 9 

அன்று கார்த்திகைப் பண்டிகை தினம். வஞ்சனையில்லாமல் பிரகாசிக்கும் பூர்ண சந்திரன் மனிதர்களுக்கு மன உல்லாசத்தைப் பொழிந்துகொண்டிருந்தான். ஆகாயம் மேகத்துண்டுகளை ஒன்று விடாமல் பெருக்கிப் போக்கடித்துவிட்டு நிர்மலமாய்க் காணப்பட்டது. அச்சமயம் கண்களைப் படைக்கப்பெற்றிருப்பதே ஓர் ஆனந்தமாக இருந்தது. அத்துடன் மிருதுவாக வீசும் மலய மாருதம் தேகத்தின்மேல் படவே, கிழவர்களுக்குக்கூட, நாடியின் வேகமும் தெம்பும் சுவல்பம் அதிகரித்துத் தாங்கள் முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்பாக விதியினிடமிருந்து கைக்கொண்ட வெற்றி களை ஞாபகப்படுத்திக்கொண்டு அவைகளை மறுபடியும் அநுபவிப்பதுபோல் அவர்கள் எண்ணும் தருணம். பந்தயக் குதிரைமாதிரி துள்ளும் நாடி படைத்த வாலிபர்களையோ, அவர்கள் அறியாத ஏதோ ஓர் உணர்ச்சி கிளம்பி, இன்னதுதான் செய்யவேண்டுமென்று தெரியாமலே எதையாவது செய்யும்படி ஒட்டிக்கொண்டிருந்தது.

இவ்வேளையில் சில யுவதிகளின் மத்தியில் அவர்களுடைய தலைவியாகக் காணப்படும் ஒரு பெண், “இந்தக் கட்டிடத்திற்குள் அடைபட்டிருப்பானேன்? நந்தவனத்திற்குப் போகலாம், வாருங்கள்” என்றாள்.

“இரவில் தோட்டத்திற்குப் போனால் மகாராஜா அவர்கள் ஒருகால்-” என்று ஒரு தோழி தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

“ஒன்றும் கோபித்துக்கொள்ளமாட்டார்” என்று ராஜகுமாரி வேகமாய் முடித்தாள். “பொழுதுதான் பட்டப்பகல் மாதிரி நிலாக் காய்கிறதே? அதுவுந்தவிர விசேஷ நாளாகிய கார்த் திகைத் தினத்தில் தாயில்லாப் பெண்ணை அப்பா ஒன்றும் கடிந்து பேச மாட்டார்” என்று சிரித்துக்கொண்டு தோழிகளைத் தோட்டத்தை நோக்கித் தள்ளிச் சென்றாள்.

அங்கே போய்ப் பல விதமாக விளையாடிக் களித்தார்கள். பூக்களைப் பறித்து ஒருவர் மேல் ஒருவர் விட்டெறிந்தார்கள். போட்டியில் ஓடித் தாவிக் குதித்தார்கள். கண் பொத்தி விளையாடினார்கள். ஒளிந்தவரைப் பிடித்தார்கள். இவ்விளையாட்டின் மத்தியில் ஒரு புதருக்குள்ளே ஒளியப் போன ஒரு சிறுமி ராஜகுமாரியிடம் ஓடிவந்து, “தேவி, அதோ அந்தப் புதருக்குள் ஒரு மிருகம் இருக்கிறது. கண் மாத்திரம் நிலா வெளிச்சத்தில் தெரிகிறது” என்று பதறிக்கொண்டு, இலைகளின் மத்தியில் தூரத்தில் இருந்தபடியே பளிச்சென்று காணப்படும் இரு கண்களைக் காண்பித்தாள்.

இதைக் கேட்டவுடன் மற்றத் தோழிகள் அரண்மனையை நோக்கி ஓடிப்போக யத்தனித்தார்கள். ஆனால் ராஜபுத்திரி, “ஓடாதேயுங்கள்! நாம் க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவர்கள்; இவ்விதம் பயப்படலாமா? வேண்டுமானால் எனக்குப் பின்னாலே நில்லுங்கள். அனசூயே, நீ மாத்திரம் போய் ஒருவருக்கும் தெரியாமல் அப்பாவினுடைய வில்லையும் அம்பறாத்தூணியையும் சீக்கிரம் கொண்டுவா. நான் அந்தக் கண்களை உற்று நோக்கிக்கொண்டே நிற்கிறேன் என்று தைரியமாய் ஆக்ஞாபித்தாள்.

பயமும் தைரியமும் ஒட்டுவாரொட்டி அல்லவா? தோழிகள் ஓடுவதை நிறுத்தித் துணிவைக் கைக் கொண்டோ அல்லது நடித்தோ, ராஜகுமாரிக்குப் பின் நின்றார்கள். வில்லும் அம்பும் கொண்டுவரப் பட்டன. ராஜபுத்திரி தன்னுடைய தகப்பனார் குறி பார்க்கும் விதத்தில் குறி வைத்து, சிரமத்துடன் அந்தப் பெரிய வில்லை வளைத்து ஓர் அம்பை எய்தாள். உடனே, “ஹா! அடிபட்டேன்” என்று ஒரு மனிதக்குரல் புதரினின்று கிளம்பியது. ஒருவர் கீழே விழுகிற சப்தமும் கேட்டது.

இதைக் கேட்ட அந்த யுவதிகள் அனைவரும் திடுக்கிட்டுச் சிறிது நேரம் மெய்கலங்கி நின்றார்கள். பிறகு ராஜபுத்திரி புதரை நோக்கி ஓட, மற்றவர்கள் பின் தொடர்ந்து ஓடினார்கள். அங்கே தரையில் சுருண்டு விழுந்து கிடக்கும் ஒரு வாலிபக் கட்டழகரைக் கண்டார்கள். அவருடைய நெற்றியின் மத் தியிலிருந்து ரத்தம் சொட்டுவதையும் அடிபட்ட இடம் வீங்கியிருப்பதையும் நிலவு வெளிச்சத்தில் காண முடிந்தது.

பச்சாத்தாபம் மேலிட்டு ராஜகுமாரி தரையில் உட்கார்ந்து, அவருடைய தலையைத் தன் மடியில் வைத்துக்கொண்டு, “ஐயோ! இவர் யாரோ! மன்மதன் மாதிரித் தோன்றுகிறாரே; இவரைக் கொன்றுவிட்டேனே” என்று புலம்பினாள். தோழி களை நோக்கி, “வில்லைக் கொண்டுவா என்று நான் ஆலோசிக்காமல் சொல்லிவிட்டாலும், நிற்பது மனிதனாய் இருக்கலாம் என்று உங்களுக்காவது தோன்றியிருக்கக் கூடாதா?” என்று பரிதபித்தாள். பல தெய்வங்களை வேண்டிக்கொண்டாள். வாலிபருடைய முகத்தைத் தன் இரு கரங்களாலும் அடிக்கடி தடவினாள். அவளுடைய பிரார்த்தனைகளின் பயனோ, புஷ்பம்போல் மிருதுவான அவ ளுடைய விரல்கள் மூலம் மூர்ச்சையாய்க் கிடப்ப வருக்குப் பாய்ந்த ஒரு சஞ்சீவி சக்தியோ, இரண்டு காரணங்களும் சேர்ந்த குணமோ, அவருடைய தேகத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி காணப்பட்டது. ஒரு பெருமூச்சு வந்தது. அவர் கண்களைத் திறந்தார்.

உடனே ராஜ கன்னிகை, “நான் உங்கள் மேல் அம்பைக் குறி வைக்கும் போதாவது நீங்கள் விலகியிருக்கக் கூடாதா?” என்று பரம அநுதாபத்துடன் கேட்டாள்.

“விலகிப் போகவா! உன்னை விட்டு விலகிப் போகவா? நல்ல வார்த்தை சொன்னாய்! நீ வில்லும் கையுமாய் நிற்கும் அழகைப் பார்த்துக் களிக்காமல் நான் பயந்து ஓடிப் போயிருந்தால், இவ்விதம் உன் மடியில் தலை வைத்துப் படுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்குமா?” என்று அவர் பதிலுக்குக் கேட்டார். அதோடு நிற்காமல் சயனித்தபடியே தம் கைகளால் அவளுடைய முகத்தைத் தம்மிடம் இழுத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவள் கோபிக்க எண்ணுவதற்குள் மறுபடியும் மூர்ச்சையாய்ப் போனார்.

சரியாக அம்பைத் தொடுத்திருந்தால் அவருடைய உயிரே போயிருக்கவேண்டிய நிலைமையில், ராஜபுத்திரியின் கை பலக் குறைவினாலும், அம்பு விடுவதில் பழக்கமில்லாததாலுந்தான் அவருடைய ஆயுசு அன்று தப்பியிருக்கவேண்டும். எப்படி இருந்தாலும் சரி, காயம் பெரியதோ சிறியதோ, ஒரு தரம் மூர்ச்சை தெளிந்து மறுபடியும் மூர்ச்சையை அடைவதன் இடையில், “ஐயோ! அப்பா!” என்று தவிப்பதற்குப் பதிலாக, சிருங்கார வார்த் தைகள் பேசக்கூடியவர் உலகத்தில் லக்ஷத்தில் ஒருவரே. வார்த்தையோடு நில்லாமல், வார்த்தைக்கு ஒரு ருஜு, ஒரு திருஷ்டாந்தம் அளிக்கும் தீரர் கோடியில் ஒருவரென்றே சொல்லலாம்.

இதற்கு முன்பு அங்கம் வங்கம் கலிங்கம் இத்தியாதி பல தேசங்களிலிருந்து அரசகுமாரர்கள் இவளைத் தேடிவந்தது உண்டு; இவளுடைய அன்பை நாடி வந்தது உண்டு. ஆனால் ஒருவராவது தம்முடைய உயிர் போனாலும் போகட்டும் என்று இவளுடைய அழகில் ஈடுபட்டு அம்புக்கு எதிரே நின்றதில்லை. ஒருவராவது இவ்வளவு அழகாயிருந்த தில்லை. இவ்விதம் பேசினதில்லை, நடித்ததில்லை. காரணங்களை விஸ்தரித்து மேலே மேலே அடுக்கு வானேன்? ஒவ்வொரு காதலும் அது அதற்கு முடி போட்ட விதத்தில்தானே பிறந்து நடைபெற வேண்டும்? ஜலத்தைச் சீக்கிரத்தில் கொண்டுவரச் சொல்லி அதைத் தெளித்து அவருக்கு மறுபடியும் பிரக்ஞை வரச் செய்வதற்குள் ராஜபுத்திரி அவ ரிடத்தில் உள்ளத்தைப் பறி கொடுத்தாள்.

பல உபசாரங்கள் செய்து, அம்பு பட்டதனால் அவருக்கு உண்டான அதிர்ச்சியை நீக்கினாள். அவள் மடியை விட்டுத் தலையை எடுக்காமலே அவர் உபசாரங்களைப் பெற்றுக்கொண்டார். தம் ஹிருத யத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பே அவளிடம் இழந்துவிட்டதாகவும், தினந்தோறும் சாயங்காலம் அந்தப் புதருக்குள்ளே நின்றுகொண்டு, அவள் தற்செயலாகத் தம்முடைய கண்ணில் தென்பட மாட்டாளா என்று தாம் காத்திருப்பது வழக்க மென்றும் பல பிரிய வார்த்தைகளுடன் கலந்து வெளியிட்டார்.

“உங்கள் மேல் நான் அம்பு எய்தேனே!” என்று அவள் பல தடவை நொந்துகொண்டாள்.

“அது சம்பந்தமாக எனக்கும் பெரிய குறை தான். இரண்டு மாதத்துக்கு முன்பே நீ இதைச் செய்திருந்தால், என்னுடைய பாக்கியம் அப் பொழுதே ஆரம்பித்திருக்குமே” என்று ஒரு தடவை பதில் சொன்னார். “மன்மதனுடைய பாணத்தைக் கவிகள் பாடுகிறார்களேயொழிய, ரதியின் அவதாரமாகிய நீ எய்கிற பாணத்தின் மகிமையை அந்த ஜடங்கள் அறிந்தார்களா?” என்று ஒரு தடவை மகிழ்ந்துகொண்டார்.

இன்னும் பற்பல பேச்சுக்களைப் பேசினார். அவருடைய காதலை நம்புவதற்கு ஆவல் கொண்டி ருக்கும் அவளுடைய ஹிருதயத்தில் நம்பிக்கையும் அன்பும் பெருகி ஓடின.

தோழிமார்கள் மரியாதையாகத் தூரத்தில் ஒதுங்கி நின்றுகொண் டிருந்தார்கள். சந்திரன் மாத்திரம் லௌகிக முறையைச் சட்டை செய்யாமல் ஆகாயத்தில் இருந்து இவர்களுடைய சல்லா பத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான். அவனை ஒரு தடவை அவள் நிமிர்ந்து பார்த்தபொழுது ஞாபகம் வந்து, “நீங்கள் சந்திர வம்சமா? சூர்ய வம்சமா? எந்தத் தேசத்து ராஜகுமாரர்?” என்று கேட்டாள்.

இதுவரையில் சந்தோஷ விமானத்தில் ஆகாய மார்க்கமாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தவருக்குத் தம்மைத் திடீரென்று கீழே பூமியில் தள்ளின மாதிரி இருந்தது. “ஐயோ! நான் ராஜகுமாரனல்ல; க்ஷத்திரியனே அல்ல. பிருகு வம்சத்தில் பிறந்த ஓர் ஏழைப்பிராமணன்” என்றார்.

“அதற்காக முகம் வாடுவானேன்?” என்றாள் அந்த உத்தமி; “நீங்கள் யாராயிருந்தாலும் எனக்கு நீங்கள் நீங்களே. ஆனால் ஓர் உபத்திரவம்: ஏழைக்கு என்னை விவாகம் செய்து கொடுக்க என் தகப்பனார் ஒரு நாளும் சம்மதிக்கப் போவதில்லை.”

தகப்பனாருடைய அசம்மதம் ‘ஓர் உபத்திரவம்’ என்று சொல்லி உதறிவிடும்படி அவ்வளவு சிறிய விஷயமாக அவருக்குத் தோன்றவில்லை. “அதற்கு என்ன செய்யலாம்?” என்று மிகுந்த கவலையுடன் கேட்டார்.

“ஏதாவது ஒரு வழி இருக்கும். நாளைக்குச் சாவ காசமாக அதைக் கண்டுபிடிக்கலாம். இன்றிரவு ஒரு கவலைக்கும் என் மனம் இனி இடங் கொடுக்கப் போவதில்லை” என்று அவள் புன்னகை செய்தாள்.

“அப்படியே ஆகட்டும். ஆனால் நாளைக்கு என்று சொல்லுவதை, இன்னும் கொஞ்சநாழிகை பேசிக் கொண்டிருந்தால், இன்றைக்கே என்று சொல்லி விடலாம். சந்திரன் எங்கே இருக்கிறான்,பார்.”

“அவன் இருக்கும் இடம் தப்பு. அவனுக்கு ரோஹிணியிடத்தில் பக்ஷபாதமாகையால் கிருத் திகையை விட்டுவிட்டு ரோஹிணியைச் சீக்கிரம் அடைவதற்காக வெகு வேகமாய் ஓடுகிறான். நாம் அவனைக் கவனிக்க வேண்டாம்” என்றாள்.

“வேண்டவே வேண்டாம். ஆனால் அவன் அதற்காக ஓடவில்லை. உன் முகத்தின் அழகைப் பார்த்துத் தான் தோல்வியடைந்ததற்காக வெட்கப்பட்டு ஓடுகிறான். தோற்றான் குள்ளி!”

ஒன்பதாம் அத்தியாயம் முற்றிற்று.

மூன்றாம் பாகம் 

மேலே எழுதியிருக்கும் ‘விசித்திர தீபிகா’வின் ஒன் பதாவது அத்தியாயத்தைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தேன். துப்புகளெல்லாம் அங்கே இருக்கின்றன என்று லேசான ஓர் எண்ணம் உண்டாயிற்றேயொழிய அவைகளைப் பகுத்தறிய முடியவில்லை. ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ என்று பண்டிதர் சொன்னாரே? ச்யவன ப்ராசத்தில் நெல்லிக்கனி ஒரு முக்கியமான சரக்கு அல்லவா? பண்டிதர் ஒரு சிலேடையை அவிழ்த்துவிடுவதற்கு இதுதான் தருணம், நான் தான் தகுந்த ஆள் என்று எண்ணினாரா? அல்லது உண்மையாகத்தான் பேசினாரா? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எவ்வளவு நாள்தான் இதற்காகக் கஷ்டப்படுவது என்று கடைசியில் எண்ணி, தைரியத்தைக் கையில் பிடித்துக்கொண்டு அவருக்கு மறுபடியும் டெலெபோன் செய்தேன்.

அச்சமயம் எங்களிடையில் நடந்த சம்பா ஷணையை ஓர் அக்ஷரம் பிசகாமல் இதனடியில் எழுதியிருக்கிறேன். அதற்கு என்னுடைய உரை தேவையில்லை. உத்தரவாதம் பயன்படாது. இவ்வி ஷயத்தில் நான் அவருடைய குமாஸ்தா மாதிரியே. அபிப்பிராயங்கள் யாவும் அவருடையன. பொறுப்பும் அவருடையது.

டெலெபோன் சம்பாஷணை:-

பண்டிதர் : பேசுகிறது ப்ரொபெஸ்ஸர் பிம்பிள். நீங்கள் யாரோ?

நான் : நான்தான் ‘கொனஷ்டை.’ உம், உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்; பத்துத் தினங்களுக்கு முன்பாக, ஸுகன்யா ச்யவனர் விஷயத்தில் உங்களைக் கொஞ்சம் தொந்தரவு செய்தேன்

பண்டிதர்: ஸுகன்யாவின் புருவத்தை லோமச ரிஷி வர்ணிப்பதைக் கவனித்தீர்களா? அம்மாதிரி, மன்மதனுடைய வில்லைப்போன்ற புருவமுள்ள ஸ்திரீகள் சிலரை அமெரிக்காவில் கண்டிருக்கிறேன். அடேயப்பா! என்ன புத்திசாலிகள்! என்ன மனோ தைரியம்! யுக்தியோ, புத்தியோ, எது அதிகமென்று சொல்லி முடியாது. உங்களுடைய நாட்டிலும் அதேமாதிரி தானே இருக்கும்?

நான்: அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் எனக்குச் சாதாரணப் புருவந்தான். யுக்தியும் புத்தியும் மிகக் குறைவு. ஆகையால் என்னுடைய சந்தே ங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை.

பண்டிதர்: இன்னும் தீரவில்லையா? நான் தான் உங்களை ‘விசித்திர தீபிகா’வைப் படிக்கச் சொன்னேனே? கிரந்தம் என்றால் அதுதான் கிரந்தம்! கவி என்றால் அவர்தாம் கவி! வரம் பெற்றவர்.

ஞானதிருஷ்டி என்பது அவர் ஒருவருக்குத்தான் பூர்ணமாய் உண்டு. சகலத்தையும் கண்டுபிடித்துச் சகலத்தையும் சிக்கறுத்து எழுதியிருக்கிறார். சரி யான அத்தியாயத்தைப் பார்த்தீர்கள் அல்லவா?

நான் : நீங்கள் தயவு புரிந்து அளித்த குறிப்பைப் பற்றிக்கொண்டு ஒன்பதாவது அத்தியாயத்தைப் படித்தேன்.

பண்டிதர்: ரொம்ப சரி.

நான்: ஆனால் அதில் ஒருவருடைய பெயரையும் வெளியிடாததனால், அதைப் படித்து லாபம் அடைய முடியவில்லை.

பண்டிதர்: அது அவருடைய வழக்கந்தானே! முதலில் தம் பெயரை வெளியிட்டிருக்கிறாரா? இல்லையே? அரசர்களுடைய கோபத்தையும் விரோதத்தையும் விலக்குவதற்காக அவர், ஒன்று,பெயர்களை மாற்றி எழுதுவார்; அல்லது முற்றும் விட்டுவிடுவார். அதெல்லாம் நாமே கண்டுபிடிக்க வேண்டும்.

நான்: ஆகையால் எனக்கு ஏற்கனவே உள்ள கஷ்டங்களோடு இது ஒன்று கூடச் சேர்ந்து கொள்ளுகிறது.

பண்டிதர்: இதில் கஷ்டம் வருவானேன்? ஆராய்ச்சி மார்க்கத்தில் உங்களுக்கு ஏன் அவ நம்பிக்கை? எப்பொழுது ஸுகன்யாவின் பெய ரைக் கொண்டு அந்த அத்தியாயத்தைக் குறிப்பிட முடிகிறதோ, அப்பொழுது அதில் காணப்படும் ராஜகுமாரத்தி ஸுகன்யாதான் என்பதில் என்ன சந்தேகம்?

நான்: ஓகோ! அப்படியானால் அவள் காதலிக் கும் பிராமண வாலிபர்?

பண்டிதர்: கேட்பானேன்? பிருகு வம்சத்தோன் என்று சொல்லிக்கொள்ளுகிறாரே? பாரதத்திலும் வம்சம் சொல்லப்படுகிறதே? அவர்தாம் ச்யவனர்.

நான் : ச்யவனரா? என்ன ஆச்சரியம்! அவர் பிற்பாடு ஒரு கிழட்டு ரிஷியாகப் போகிறவரையில் ஸுகன்யா எவ்விதம் இளம் கன்னியாகவே இருந்தாள்?

பண்டிதர்: ச்யவனர் கிழவரா? யார் சொன்னது? பாரதத்தில் எங்கேயாவது அவர் கிழவர் என்று சொல்லியிருக்கிறதா?

நான்: அவர் நீண்ட காலம் தபசு செய்ததாக லோமசர் சொல்லுகிறாரே?

பண்டிதர்: அந்த மட்டும் வாஸ்தவந்தான். நதிக் கரையில் உட்கார்ந்துகொண்டு, பசி தாகத்தை அடக்கி, உங்களைக் கறையான் மூடுகிறவரையில் தியானம் செய்து பாருங்கள் ! அப்பொழுது தெரிய வரும், ஒவ்வொரு நாளும் எவ்வளவு நீண்ட காலத் தைப் பிடிக்கிறது என்று.

நான் : (அவசரத்துடன்) நான் பரீக்ஷை செய்யப் போவதில்லை. நீங்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொள்ளுகிறேன். அப்படியானால் ச்யவனர் இவ்விதம் கஷ்டப்பட்டுத் தபசு செய்தார் என்று அமெரிக்கரான நீங்கள்கூட ஒப்புக்கொள்ளுகிறீர்களா?

பண்டிதர் : உண்மையை ஒப்புக்கொள்ளாமல் என்ன? செய்யத்தான் செய்தார். அதனால்தான் ஸுகன்யாவை அடைந்தார். ஆனால் அவள் நல்ல பெண்: விவேகி. ஏற்கனவே கறையான் சூழ்ந்திருக்கும் இடமாகப்பார்த்து, அங்கே அவரை உட் காரச்செய்துவிட்டு, அவரை அது மூடினவுடனே, ஏதோ சாக்கைச் சொல்லித் தகப்பனாரை நதிக்கரைக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள்.

நான்: அப்படியானால், அவள் தெரியாத்தனத்தால் அவருடைய கண்ணைக் குத்தவில்லை?

பண்டிதர்: அவளா குத்துவாள்? கறையான் புத்து ச்யவனரென்று அவளுக்குத்தான் தெரியுமே?

நான்: அப்படியானால் ச்யவனருக்கு மகா கோபத்தை உண்டாக்கியதாகச் சொன்னது? அவர் சபித்தது?

பண்டிதர்: புளுகு, வெறும் புளுகு. அமெரிக் காவில் இதையெல்லாம் வாழைப்பழ எண்ணெய் (Banana oil) என்று சொல்லுவோம். நல்ல காரியத்தைச் சாதிப்பதற்காக அவள் வடிக்கட்டின வாழைப்பழ எண்ணெய் தவிர வேறில்லை.

நான்: சர்யாதியின் பரிவார ஜனங்களுக்கு உதர வியாதி வந்ததே? சாபமில்லாமலா வந்தது?

பண்டிதர்: ஒரே சமயத்தில் ஒரே சமையலைச் சாப்பிடுகிற பல ஜனங்களுக்கு ஒரே வியாதி கிளம்பினால், சமையலறையில் அல்லவா காரணத்தைத் தேடவேண்டும்? உங்கள் நாட்டிலுள்ள இந்திர ஜாலப் புஸ்தகங்களில் ‘ஸித்த நாகார்ஜுன கக்ஷபுடம்’ என்கிற உட்பிரிவில் படித்துப் பார்த்தால், மேற்கண்ட வியாதியை உண்டாக்கவும் சுவஸ்தம் செய்யவும் உபயோகிக்கவேண்டிய மூலிகைகளின் பெயரை அறியலாம். தானும் தகப்பனாரும் முதலில் போஜனம் செய்தபிறகு ஆகாரத்தில் வேண் டிய மூலிகையைக் கலப்பது ஸுகன்யாவுக்கு வெகு கஷ்டமா?

நான்: அடேயப்பா! இந்த மகாமாயம் எல்லாம்-

பண்டிதர் : எல்லாம் ச்யவனரை மணப்பதற்குச் சர்யாதியைச் சம்மதிக்கச் செய்வதற்காகத்தான். ச்யவனர் தபசு செய்தவர், சபிக்கும் சக்தியுள்ளவர் என்று வெளியான பிறகு விவாகத்திற்கு ஏதாவது தடை இருக்குமோ?

நான்: இதற்காகக் கறையானும் துணையா?

பண்டிதர் : சந்தேகமென்ன? அவரை அது மூடியிராது போனால் அவர் பால்யம் என்பது வெளி யாய்விடும். அவரை அடையாளம் தெரிந்தவன் எவனாவது வந்து சேருவான். அந்த வயசுக்குள் ரிஷிபதவியை என்னமாய் அடைந்தார் என்று கேள்விகள் கிளம்பிவிடும்.

நான் : ஆகையால் அரசன் ஊருக்குத் திரும்பிப் போகும் வரையில்-

பண்டிதர்: அதுவரையில் கறையானே அங்கி. அதன் பிறகு பயோஷ்ணியில் ஸ்நானமும் தேக சுத்தமும். அதனால் கிழவர் யௌவனத்தை அடைந்துவிடவில்லை. பழைய குருடி கதவைத் திறடி என்கிற உங்கள் வசனப் பிரகாரம், பழைய வாலிபர்தாம் மறுபடியும் வாலிபராக விளங்கினார். ஆனால் தம்பதிகள் இதை எப்படி ஒப்புக்கொள்ளு கிறது? அதற்காகத்தான் அச்சமயம் வரையில் கிழவராக இருந்ததாகவும், அப்பொழுதுதான் ஸ்நானத்தினாலும் மருந்தினாலும் பால்ய மடைந்ததாகவும் கதைகளை அவள் கிளப்பிவிட்டாள்.

நான் : உங்களுடைய அ பிப்பிராயத்தில் அசுவினி தேவதைகள் அவரைப் பயோஷ்ணியில் ஸ்நானம் செய்யச் சொல்லவில்லை; அவருக்கு மருந்தும் கொடுக்கவில்லை?

பண்டிதர் : ச்யவனர் செய்த தபசின் கொடுமை யால் அவருக்கு இருமல் கண்டிருக்கலாம். அதற் காக அத்தேவதைகள் அம்மருந்தைச் செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் அவருடைய காலண் டையில் ஓடும் நதியில் ஸ்நானம் செய்துகொள்ளும் படி புத்திமதி அளிப்பதற்காகத் தேவலோகத்திலி ருந்து இருவர் வரவேண்டியதில்லையே! என்னுடைய அபிப்பிராயத்தில் அந்த ஸ்தலத்தின் மாகாத்மியம் எல்லாம் ஸுகன்யாவின் மனோரதம் அங்கு நிறை வேறியது என்பதைக்கொண்டுதான்.

நான் : இந்தப் பொய்க் கதைக்குத் தேவர்கள் இருவரும் என்னவாய் உடந்தையாயிருந்தார்கள்?

பண்டிதர்: அவர்கள் எவ்விதத்தில் உடந்தை? அவர்கள் வாயால் ஒரு கதையும் வந்ததாகச் சொல்லப்படவில்லையே? அவர்களையும் சேர்த்துப்- பிரஸ்தாவத்திலிருக்கும் ஒரு வதந்தியை அவர்கள் மறுக்காமல் சும்மா இருந்துவிட்டார்கள். அவ்வளவு தானே? அந்தக் கதையினால் யாருக்கு என்ன ‘தீங்கு விளையக்கூடும் ? அதை நம்பத் தயாராயிருப் பவர் மனத்தில் கற்பின் விசேஷத்தை ஸ்தாபிக்கத் தானே செய்யும்? தவிர, அவர்கள் ச்யவனருக்குச் சிநேகிதர்கள். மனிதர்களுக்கு உபகாரம் செய்வதிலேயே ஈடுபட்டவர்கள். ஸுகன்யா ஒரு தாயில்லாத பெண். தன் தகப்பனாருடைய பிடிவாதத்தை ஜயித்து, சுயமாய் வரித்த புருஷனை அவள் அடை வதில் அவர்கள் உதவி செய்வார்களா? அதைக் கெடுப்பார்களா? நீங்களே சொல்லுங்கள்.

நான் : அடேயப்பா! ஸுகன்யாவுக்குத்தான் என்ன பொல்லாத்தனம்!

பண்டிதர்: பொல்லாத்தனமா? அவளுடைய நடத்தை பொல்லாத்தனமாயிருந்தால், எல்லாம் அறிந்த சீதாபிராட்டியார் ராமாயணத்தில் அவளை அவ்வளவு ஸ்தோத்திரம் செய்வார்களா? அவளுக்கு என்ன சாமர்த்தியம், என்ன தைரியம், என்று சொல்லுங்கள். நானும் ஆமோதிப்பேன். நான் முன்பே சொன்னேனே, அம்மாதிரி புருவம் படைத்த ஸ்திரீகளைக் கண்டால்-

நான் : கண்டால் வெகு ஜாக்கிரதையாய் இருக்கப் போகிறேன். இதை மறக்க மாட்டேன்.

பண்டிதர்: அப்படிப் பார்த்தால், எல்லா ஸ்திரீ களிடத்திலுமே வெகு ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது. ஹா! ஹா!

நான்: உங்களுக்கு மிகவும் வந்தனம். என்னு டைய சந்தேகங்களைத் தீர்த்ததற்காகவும்- உம்- கடைசியில் கூறிய புத்திமதிக்காகவும்—

பண்டிதர்: ஹா! ஹா ! ஹா ! ஹா !

இத்துடன் டெலெபோன் சம்பாஷணை முடிவடைந்தது.

ப்ரொபெஸ்ஸர் பிம்பிளுடைய பாண்டித்தியத்தை அளவிட்டுச் சொல்ல நான் வல்லவனல்ல. ஆனால் இவ்விதம் புராணங்களைத் தலைகீழாகப் புரட்டிப் படிப்பவர், ஸ்திரீகளைக் குறித்து இவ்விதம் பேசுகிறவர், மகா அதிகப்பிரசங்கி என்பது ஸ்பஷ்டமாயிருக்கிறது. புராணங்களுக்கெல்லாம் ‘ரிபேர்’ செய்கிற ‘விசித்திர தீபிகா’க்காரர் மற்றொரு மகா அதிகப்பிரசங்கி என்பது நிச்சயம். ஒருகால், இந்தப் பண்டிதரே முன்னொரு ஜன்மத்தில் அந்தப் புஸ்தகத்தையும் எழுதினாரோ என்பது எனக்குப் பலத்த சந்தேகம். ஓர் உலகத்திற்கு இம்மாதிரி இரண்டு மனிதர்கள் வேண்டுமா?

– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *