கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 6,492 
 
 

நாம் இருபது ஆண்டுகளாகப் போயிராத காலிமுகத்திடலைப் பார்த்ததும் இது நமது காலிமுகத்திடல்தானா அல்ல Costa Rica, Honduras, Bahamas இலுள்ள வேறொரு கடற்கரையாவென்று திகைத்தோம். வீதிக்கரையோரமாக சைக்கஸ் மற்றும் பாமே மரங்கள் நடப்பட்டுள்ளன, அங்குமிங்குமாக திசையெங்கும் நீரூற்றுக்கள். நியோன் விளக்குகள், அந்தமாதிரி அழகுபண்ணியிருக்கிறார்கள். ரம்மியமாக இருக்கிறது காலிமுகம். ஆனாலும் மனம் அதை எமக்குச்சொந்தமான இடமென எண்ணிப் பாத்தியதை கொள்ளுதில்லை.

இதே திடலில்தான் 1958 ஆம் ஆண்டு பழைய பாராளுமன்றக்கட்டிட முன்றலில் சமஷ்டி அரசுவேண்டிச் சத்தியாக்கிரகித்த எம் தலைவர்களை எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் அரசு காடையர்களை அனுப்பி அடித்தும், நிலத்தில்போட்டு மிதித்தும், கைகளை முறுக்கியும், காதுகளைக்கடித்தும் இம்சித்தது.

இரவு பத்துமணியாகியது. கடலிலிருந்து வீசியகாற்று அதன் குளிரையும் சுமந்திருந்தது. எவ்வளவுதான் குளிர்நாடுகளில் வாழ்ந்து பழகியிருந்தாலும் வெறும் டீ-ஷேர்ட்டுடன் சென்றிருந்த எமக்கு அந்தக்கடற்குளிரைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. “ சரி ஹொட்டலுக்குத் திரும்புவோம் ” என்றேன். ஆனந்ததீர்த்தன்தான் “ Galle Face Hotel ஹொட்டலில்போய் ஒரு பியர் அடித்துவிட்டுப்போவோம்,” என்றான்

‘ஒன்றுக்கு பத்தாகக் கறப்பார்களே’ என்ற எண்ணந்தான் முதலில் வந்து குதித்தாலும் சரி ஒருநாளைக்காவது ஒரு இளவரசனைப்போலப்போய் பியரைக் குடித்துத்தான் பார்ப்போமே இனி எப்பெப்ப அமையுதோ இல்லையோ………… என்கிற மறு சிந்தனை மேல்கிளம்ப அதை அடக்கிக்கொண்டுவிட்டேன்.

பந்தாவாக வாயிற்காப்போனின் மரியாதையை தலையசைத்து ஏற்றுக்கொண்டு ஹொட்டலின் உள்ளேபோய் முன்கூடத்தைக்கடந்து அதன் தொடர்ச்சியாக அமைந்திருந்த அருந்தகத்தின் சொகுசு இருக்கைகளில் அமர்ந்து Lion Larger Strong பியருக்கு ஆக்ஞை கொடுத்துவிட்டு அங்கே வருபவர்களையும், போகின்றவர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம். முன்கூடத்திலோ, அருந்தகத்திலோ அத்தனை கூட்டம் இருக்கவில்லை. மேற்குச்சுவரில் வெண்ணைக்கட்டி வர்ணத்திலான Mercedes Benz 500LK Grand Tourer விளக்குகள், சக்கரங்கள் முழுவதும் குறோம் மெழுகிய 1960 model எழிலான மகிழுந்தின் படத்தை அதன் அசலான பருமனுக்கே உருப்பெருக்கிப் பொருத்தியிருந்தார்கள். அப்படத்தோடு நாங்கள் அங்கார்ந்திருக்கையில்…………….

சிவப்பு போலோ ஷேர்ட்டும் ஜீன்ஸும் அணிந்து ஒரு இளைஞனின் உற்சாகத்தோடு மகிந்த ராஜபக்ஷ விடுவிடெனெ உள்ளே வந்தார். ஒன்பது வருஷங்கள் அலரிமாளிகையிலும், ஜனாதிபதிமாளிகையிலும் தொடர்ச்சியான வாசம் ஒரு மாற்றத்தை விரும்பியிருக்கவேண்டும்.

பாதுகாப்புக்காகக்கூட வந்திருந்தவர்கள் முகப்புக்கூடத்தைத் தாண்டி மேலே வரவில்லை. இரண்டு மூன்றுபேர் தூரநின்று அவரையே கவனிப்பதைப் போலிருந்தது. நேராக நாம் இருந்த சொகுஸு இருக்கைகளுக்கு எதிரிலே இருந்த சொகுஸு இருக்கைக்குவந்து பகுமானமாக அமர்ந்தார். சற்றே அதிர்ச்சியாக இருந்தாலும் மரியாதையின் நிமித்தம் எழுந்தோம். எங்களை அமரச்சொல்லிக் கையமர்த்தினார். நாங்கள் எழுந்து வேறு இடமாகப்போய்விடவேணுமா அங்கேயே அமர்ந்திருக்கலாமாவென்று குழப்பமாக இருந்தது. எம் இருப்பை யாரும் ஆட்சேபிக்கவில்லை, நாமும் மஹிந்த ராஜபக்ஷ எனும் குடிமகனுடன் சரியாசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருந்தோம்.

ஹொட்டலின் சிப்பந்திகள் எவரும் வந்து அவருக்கு என்ன தேவையென்று விசாரிக்கவில்லை, கூடவந்த அவரது அல்லக்கைகள் ஏற்பாடு செய்திருக்கவேண்டும். ஏகப்பட்ட பழவகைகளால் அலங்கரிக்கப்பட்ட கொக்டெயில் ஒன்றை ஒரு பரிசாரகன்கொண்டு வந்து பரிமாறினான். அவர் தனது கொக்டெயில் கிளாஸைக் கையிலெடுத்துக்கொண்டு எம்மை நோக்கிச் ‘சியேர்ஸ்’ என்றார். நாங்கள் எம் பியர்ஸ் கிளாஸைத்தூக்கி ‘சியர்ஸ்’ சொன்னோம். மஹிந்த தன் உறிஞ்சுகுழாயில் வாயைவைத்து இரண்டுதரம் உறிஞ்சிவிட்டு நட்புடன் எங்களைப் பார்த்து ‘நீங்கள்’ என்றார்.

“ நான் கலாதரன், ஒரு வழக்கறிஞன், ஒரு சொலிஸிட்டருக்கு உதவியாளராக இருக்கிறேன். ”

“ எங்கே………….”

“லண்டன்ல”

“ ம்ம்ம்ம்ம் இன்றெஸ்டிங்………….. சொலிஸிட்டர் வெள்ளையரா, நம்மவரா.”

“ நம்மவர்தான் மிஸ்டர். புளத்கம என்று……… ”

“ ம்ம்ம் ……இன்டறெஸ்டிங்”

“ நான் ஆனந்ததீர்த்தன் இப்போதுதான் தொழிலாரம்பித்திருக்கும் ஒரு கட்டிடக்கலைப் பொறியாளன், ” என்றான் நண்பன் கொஞ்சம் நெளிந்துகொண்டு.

“ என்ன விடுமுறையோ………… உங்களுக்கு ”

“ ஆமாம்……… நீண்டகாலத்தின்பின் நாடுதிரும்பியிருக்கிறோம் ஃபோர் எ றிலாக்ஷேசன் .”

“ சரி… சரி அனுபவியுங்கள். இங்கே நான் பண்ணியிருக்கும் மாற்றங்களை நீங்களாகவே உணர்வீர்கள்…… ” என்றுவிட்டு யாரையோ பார்த்து சுட்டுவிரலை மடிக்கவும் தேசிய உடை அணிந்த ஒருவன் அருகே வந்து பௌவியத்துடன் நிற்கவும் அவனிடம்

“ கடலை அல்லது முந்திரிப்பருப்பு கொண்டுவா” என்றார். அணுக்கத்தில் அவர் பட்டையாக தலைமயிருக்கும், மீசைக்கும் கருஞ்சாயம் அடித்திருப்பது தெரிந்தது. ஆள் பேசக்கூடிய ஒரு மனநிலையில் இருப்பதுபோல தெரியவும்

*

“ உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நாங்கள் உங்களிடம் சில விஷயங்கள்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமா ”

என்றேன் தயக்கத்துடன்.

“ தாராளமாக…….. வழமையான வழகொழா கேள்விகளாக இல்லாமல் ஏதாவது புதிதாக ஆக்கபூர்வமாகத் தோன்றினால் கேளுங்கள்………….. I Love meeting People and sharing with them.”

“ மிக்க நன்றி மிஸ்டர் பிறெஸிடென்ட்……….. நீங்கள் பல ஆலயங்களுக்கும்போய் சாமி தரிசனங்கள் செய்கிறீர்கள், தியானம் செய்கிறீர்கள், உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை, அல்லது பாவ-புண்ணியம் இதுகளிலெல்லாம் நிஜமாக நம்பிக்கை இருக்கிறதா.”

“ கடவுள் நம்பிக்கை இருக்கா என்கிற கேள்வியிலேயே கடவுள் இருக்கிறார் என்கிற தொனியிருக்குதல்லா கலாதரன். ”

“ ஆனால் கௌதமபுத்தர் கடவுளின் இருப்பை மறுத்தாரே. ”

“ அது அவருடைய நோக்கு, தத்துவம், அந்தப்பிரச்சனை என்னுடையதல்லவே.”

அதைவிட்டுவிட்டு “இம்முறையும் நீங்கள் அதிபராக வந்திருந்தால்
தமிழர்களுடைய பிரச்சனைகள் முழுவதும் தீர்த்திருக்கலாமென்று நம்புகிறீர்களா ” என்றேன்.

“ என்னையா தமிழர்களுக்கு பிரச்சனை……….. போர் முடிந்ததோட அவர்களுக்கிருந்த ஒரே பிரச்சனையும் தீர்ந்துபோயிற்று……….. பல உயிர்களைக்காவுகொடுத்து எல்லாவற்றையும் தீர்த்துவிட்டிருக்கிறோம்…….. இன்னும் தமிழர்கள் பிரச்சனை பிரச்சனை என்றுபேசிக்கொண்டிருப்பது பொய்யும் அபத்தமும் தம்பிகளா.”

“மன்னிக்கவேண்டும்……….மிஸ்டர் பிறெஸிடென்ட்…….. எங்களுக்கு இப்போது பிரச்சனைகள் எதுவும் இல்லையென்பதைத் தமிழர்கள் அல்லவா சொல்லவேண்டும் ”

“ இந்த மிஸ்டர். பிறெஸிடென்ட் என்பதை முதலில் நிறுத்துங்கள், நான் இப்போ பிறெஸிடென்ட் கிடையாது, நான் ஒரு இலங்கைப்பிரஜை. நீங்கள் என்னை மஹிந்தவென்றோ ராஜபக்ஷவென்றோ அழைக்கலாம்………… சொல்லுங்க தமிழர்களுக்கு இங்கே இப்போ என்ன பிரச்சனை இருக்கு………. சாப்பிட இல்லாம தவிக்கிறாங்களா, உணவுப்பண்டம், எரிபொருள் விநியோகம் இல்லாம இருக்காங்களா………. அவர்கள் பிள்ளைகளை புலிகள் வந்து அள்ளிக்கொண்டு போயிடறாங்களா………., போக்குவரத்து பஸ், ரயில் இல்லாம கஸ்டப்படுகிறங்களா வேலையில்லாததால, வருமானம் கிடையாமல் அவஸ்தைப்படுறாங்களா…….. ஒன்றைக்கவனிக்கவேணும், இலங்கை வளர்ந்துவரும் நாடு, அங்கங்க வேலையில்லாத்திண்டாட்டம், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அதைப்பெரிசுபடுத்தக்கூடாது, அதெல்லாம் நாளடைவில் சரிசெய்யப்பட்டுவிடும், சுபீட்ஷம் வந்திடும்………. அதுக்காகத்தானே இத்தனை காலமும் பாடுபட்டோம், எல்லாத்தையுந்தான் சேர்ந்து கவிழ்த்து மண்ணில போட்டாச்சே. ”

அவரது கண்கள் திடுப்பென ஈரமாகி மின்னின. மேலும் கொஞ்சம் கொக்டெயிலை உறிஞ்சினார். கொதிப்பு தணிந்து ஆசுவாசமாகட்டுமென்று காத்திருந்தோம்.

*

“அனைத்து உயிர்கள்மீதான அன்பைப்போதித்த, நிலையாமையை எடுத்துச்சொன்ன போதிசத்துவன்மேல இவ்வளவு புரிதலும், அபிமானமும் கொண்டவராக, எல்லா பௌத்தபீடாதிபதிகளையும் மதிப்பவராக இருக்கிறீங்க……… இப்போ உங்கள் புதல்வர்களில ஒருத்தர் வந்து “ தாத்தா எனக்குச்சேரவேண்டியதை சொத்தையெல்லாம் பிரித்துத்தந்திடுங்க நான் தனியாகப்போறேன்னு கேட்டால் அவனை அழைத்துப்பேசி, அவனுடைய பிரச்சனையை அறிந்து அவனைச் சமாதானப்படுத்துவீங்களா, இல்லை அவனை போட்டுத்தள்ளுவீங்களா……….” என்றான் ஆனந்ததீர்த்தன். (சிங்களத்தில் ‘தாத்தா’ என்றால் ‘அப்பா’)

“ தமிழர்கள் இலங்கைத்தீவின் ஆக்கிரமிப்பாளர்கள், காலத்தால் எங்களைவிட நிரம்பப் பின்னால வந்தவர்கள். சிங்களவர்கள்தான் பூர்வீகமா ஆதியிலிருந்து வாழ்ந்தவர்கள் இந்த மண்ணை ஆண்டவர்கள். ஆக்கிரமிப்பாளர்களை ஆண்டவர்கள் என்று சொல்லமுடியாது. எவர் செய்தாலும் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்புத்தான்.”

“ யாழ்ப்பாணத்தில் இத்தனை படையினர் நிலைகொண்டிருப்பது எதுக்காக”

“யாழ்ப்பாணத்திலுள்ள எமது படையினர்கள் எமது குழந்தைகள், எமது மண்ணில்தான் காலூன்றி நிற்கிறார்கள். ”

“அப்போ விடுதலைப்புலிகளை எமது குழந்தைகளென்று உங்களால் கருதமுடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். ” என்றான் ஆனந்ததீர்த்தன் பதிலுக்கு.

“ எமது முன்னோரைக்கொன்று ஆக்கிரமித்த, எமது பிள்ளைகளைக்கொன்ற ஒரு ஆக்கிரமிப்பாளர்களின் ஆக்கிரமிப்பாள வாரிசுகள்தான் இந்தப்புலிகள், கொலைகாரர்கள், பயங்கரவாதிகள் எப்படி எம் குழந்தையாவார்கள். ”

“ ஒரு கல்வியாளரான நீங்கள் ஒரு சிங்கத்துக்கும் குவேனி என்கிற பெண்ணுக்கும் ஒரு குழந்தை பிறந்தது, அதன் வாரிசுகள்தான் நீங்கள் என்று மஹாவம்சம்கூறும் சரித்திரத்தை நம்புவது பகுத்தறிவுக்கு முரணாக இல்லை.” என்றேன்.

“ அப்போ சிங்கள புத்தர்களையெல்லாம் முட்டாள்கள் என்கிறீர்களா, இல்லை எனக்குச் சரித்திரம் சொல்லித்தருகிறீர்களா ”

“ இல்லை…. சேர், உங்கள் நம்பிக்கை அறிவியலோடு இல்லை என்பதைத்தான் வியக்கிறோம்.”

அவர் கண்கள் மேலும் சிவக்கின்றன.

“ ஒருவேளை மஹாவம்சம் என்கிற வரலாற்றுப்பதிவுதான் எழுதப்படாதுபோனாலும் சிங்களவர்கள்தான் இந்த நாட்டின் ஆதிக்குடிகள். நாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பது கேள்வியல்ல. இந்தச்சிறிய மாணிக்கதீவில் வாழ்ந்துகொண்டிருந்தவர்களை பின்னர் வந்த ஆக்கிரமிப்பாளர்கள் பங்குபோட ஒருபோதும் சிங்களவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். புலிகளின் வீழ்ச்சிக்குப்பிறகு சேர்ந்துவாழ்வதுதான் இனிச்சாத்தியம் என்று இங்குள்ள தமிழர்கள் வந்துவிட்டார்கள், இப்போ உங்களை மாதிரி டயாஸ்போரா ஆட்கள்தான் கொஞ்சம் அங்கங்க நின்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள். அது நடவாத காரியம், பகல்கனவு என்று சீக்கிரம் மீதியுள்ளபேருக்கும் போய்ச்சொல்லிவையுங்க…….. போங்க ”

“ தமிழர்கள் வரலாறுபற்றிய அநகாரிக தர்மபாலா, சந்திரிகா அம்மையாரின் கருத்தையே நீங்களும் பிரதிபலிக்கிறீர்கள், ஆனாலும் நிஜம் என்ற ஒன்றிருக்குமல்லா. ”

“ சரித்திரத்தைத் திரிச்சுத் தமிழர்களுக்குச்சொல்லி அவங்களை உசாரேற்றி நீங்களும் வேணுமென்றால் ஒரு தொகுதியிலநின்று எம்.பியாகலாம். நிஜத்தைவிடுத்து கனவு காணுறது சுகமாக இருந்தால் அதையே கண்டுகொண்டிருங்க. அதுக்குமேல இங்கே ஒன்றும் பிடுங்கமுடியாது”.

“ தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கையும் கிழக்கையுமே இணைக்கப்படாது என்பதில் குறியாக இருக்கிறீர்கள். நாம் விரும்புகிற ஒன்றை மறுக்கின்ற உங்களைத் தமிழர்கள் எப்படி ஆதரிப்பார்கள்……..”

“ விரும்பிற எல்லாமே கிடைச்சிடுமா……….. ஈழம் கூடத்தான் உங்கள் விருப்பம் கனவு…………சாத்தியமா……அது.” ‘ஈழம்’ என்கிற சொல்லை தொலைக்காட்சிகளில்போலவே வேண்டாவெறுப்பாகத்தான் உச்சரித்தார்.

“ தமிழர்கள் பாரம்பரிய வாழ்நிலங்களை இராணுவத்தேவையென்று பிடித்து ஆக்கிரமித்து வைத்திருக்கிறீர்களே அதை எப்படி நியாயப்படுத்துறீங்க…..” என்றான் ஆனந்ததீர்த்தன்.

“ முதல்ல ‘ஆக்கிரமிப்பு’ என்கிற விஷமத்தனமான வார்த்தையை நீங்கள் வாபஸ்பெறவேண்டும், நாடு பிளவுபடாமலிருக்க, பிளவுபடுத்தக்கூடிய பயங்கரவாத சக்திகள் மீண்டும் முளைத்துத் தலையெடுக்காதிருக்க 3 தசாப்தமாக எமது படையினர் அங்கே உயிரைக்கொடுத்து வேலைசெய்கிறார்கள், அவர்களுக்கு நாங்கள் எல்லோருமே நன்றியும் கடமையும் பட்டவர்கள். அவர்கள்வாழ அவர்களுக்கும் அங்கே இடம் வேண்டாமா, அதுக்கான ஒழுங்குதான் அது. ஏன் தமிழர்கள் கொழும்பில, நீர்கொழும்பில, தம்புள்ளயில, மாத்தறையில கண்டியில, காலியில வேலை பார்க்கலையா. சொகுசாக வாழலையா………”

“ அதுக்காக ஒரு மண்ணில் வாழ்ந்தவர்களை, விவசாயந்தவிர வேறு வாழ்வாதரங்கள் அற்றவர்களை விரட்டிவிடுவது ஜனநாயகமல்லவே “ இருகுரலில் சொன்னோம்.

“ அங்கிருந்தவங்களில பாதிப்பேர் வெளிநாடுகளில் குடியேறிச் சுகமாக வாழத்தொடங்கிவிட்டார்கள், ஒருநாள் யாழிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடித்தவர்களும் சோ கோல்ட் தமிழர்களே அப்போ எங்கே போனது உங்கள் ஜனநாயகம், நீங்கள் எங்கே போனீர்கள்.”

“ ஒரு தவற்றோடு இன்னொரு தவறைச் சமனப்படுத்துவது………” என்று இழுக்க என்னை மேலே சொல்லவிடாமல் கையமர்த்தினார்.

” நாங்கள் என்ன குறைவைத்தோம் உங்களுக்கு, ஐக்கிய இலங்கைக்குள் இணைந்துவரமுடியாமல் இருக்கும் உங்கள் மனத்தடைகள்தான் என்ன, சொல்லுங்கள் பார்க்கலாம்……. ”

எங்கே என்னவென்ன கொடுமைகளையெல்லாம் எங்களுக்குச் செய்தீர்கள், ஏன் பிரிந்துபோக முடிவெடுத்தோம் என்பவற்றைச்சொல்ல முதலே பேச்சை முறித்துவிடுவாரோவென்று பயந்துகொண்டிருக்கையில் அவராகவே சந்தர்ப்பத்தைத்தந்தார். வேகமாக

“ தமிழர்கள் மீது காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல்களை இனச்சூறையாடல்களை அப்போதைய அரசுகள் எதுவும் கட்டுப்படுத்தவோ, தமிழர்களைக் காபந்து பண்ணவோவில்லை, பின்னால அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கி ஆற்றுப்படுத்தவுமில்லை, ‘போரென்றால் போர், சமாதானமென்றால் சமாதானம்’ என்று தூபமிட்டார் ஒரு தலைவர். தமிழ்மாணவர்களின் வெட்டுப்புள்ளிகளை உயர்த்தி, தரப்படுத்தி எமது உயர்கல்வியை மறுத்தீர்கள் தனிநிலத்துக்காக ஒரு போராட்டம் வெடித்த பின்னாலும் சமாதானம், பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்துவிட்டு மொத்தத் தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையே தந்தீர்கள். போர்க்காலத்தில் வடகிழக்கைத்தவிர ஏனைய பிரதேசங்களில் எளிய குடிசார் தமிழர்களின் நடமாட்டங்களைக்கூட பொலிஸ்பதிவு, கைதுகள், பயங்கரவாதத்தடைச்சட்டம் என்று அடக்கி எம்மைத் துன்பப்படுத்தினீர்கள். தஞ்சமடைந்த போராளிகளும், சிறைப்பிடிக்கப்பட்ட சிவிலியன்களும் காணாமல்போயுள்ளனர். இவைகள் எல்லாமும் சேர்ந்துதான் ஒட்டுமொத்தத் தமிழர்களும் இனியும் பெரும்பான்மை இனத்துடன் சேர்ந்துவாழமுடியாது என்கிற முடிவை எடுக்க நேர்ந்தது..” என்றேன்.

“வெட்டுப்புள்ளி, தரப்படுத்தல் காலங்கள் போய்விட்டன, உயர்கல்வி வாய்ப்புக்களை இழந்தவர்கள் சிங்களவர்களுந்தான். ஒரு பக்கப்பார்வை தேவையில்லை. எனது அரசில் எல்லோருக்கும் சமவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. அதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள். தமிழர்களை இராணுவத்தில்கூடச் சேர்த்தோம். நாங்கள் ஏமாற்றினோம், துன்பப்படுத்தினோமென்கிறது அவ்வக்காலகட்டத்தைய ராஜதந்திர நடவடிக்கைதான், பெரிய வார்த்தைகள் அவை, நீங்கள் அதை என்னுடன் யோசித்துக் கதைக்கவேணும். என்னுடைய இடத்தில் வேறு யார்தான் இருந்தாலும் அதையேதான் செய்திருப்பார்கள். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நிஜமான சுதந்திரத்தை அனுபவிக்கிறீர்களா இல்லையா. புலிகள்தான் கடும்போக்காளர்களாகவும், பயங்கரவாதிகளாகவும், ஈழம் தவிர வேறெதுவும் வேண்டாமென்கிற மாதிரி சமாதானப்பேச்சுக்களின் நிகழ்ச்சி நிரலையே புரிந்துகொள்ளாமல், முட்டாள்தனமாக, நெகிழ்வுப்போக்கு இல்லாமல் விஷயங்களை இடைக்கால அரசு, மண்ணாங்கட்டியென்று எம்முடன் முந்தி முந்திப் பேசிப் பேச்சுவார்த்தை நிரலையே உடைத்தார்கள். ஜி.எல்.பீரிஸ் அந்த இடத்தில் சரியாகத்தான் செயற்பட்டார்.”

“இருதரப்பும் கொஞ்சம் கொஞ்சம் இறங்கிவந்து விட்டுக்கொடுத்திருக்கலாம் ” என்றேன்.

“ விட்டுக்கொடுப்பைப்பற்றி நீங்கள் புலிகளிடம் சொல்லியிருக்கவேண்டும், அவர்களின் கோரிக்கைகள் எல்லாமே சாத்தியங்களற்றவையாக அடிமுட்டாள்தனமாக இருந்தன, அதையே நீங்களும் பிரதிபலிக்கிறீர்கள், அனைத்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகத்துக்குமே எதிராகவும், கெடுதல் விளைவிக்கக்கூடிய சக்தியாக அவர்கள் மேலும் தொடராமலிருக்கவும் இந்த மாணிக்கதுவீபத்தைப் பாதுகாக்கவும் எமக்கு போரைத்தவிர வேறுவழிகள் இருக்கவில்லை. இந்தியா உட்பட சர்வதேசநாடுகளும் அதைத்தான் விரும்பின.”

“ உங்கள் ஆரம்பகாலச் செயற்பாடுகள் மனித உரிமைப்போராட்டங்களாக இருந்ததை அறிவோம், இறை அச்சம் உள்ளவர் நீங்கள். நடந்த போரின் அழிவுகள் சிதைவுகள் இப்போதாவது உங்களுக்கு கழிவிரக்கத்தை. பச்சாதாபத்தைத் தருகின்றனவா….. எத்தனை குழந்தைகள், அப்பாவி மக்கள் பெண்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டார்கள்……. அங்கவீனர்களாக்கப்பட்டார்கள்”

சற்று நேரம் மௌனமாக இருந்தார்.

“நான் ஒன்றும் அசோகச்சக்கரவர்த்தியல்ல, நான் வெறும் மஹிந்த ராஜபக்‌ஷ, ஒரு சாமானியன். போரைத்தவிர்ந்த வேறொரு மாற்று வழிகளையும் புலிகள் எங்களுக்குத் தரவில்லை, புரிந்துகொள்ளவேண்டும், போர் வேண்டாம் என்பதைத்தான் புலிகளுக்குத் திரும்பத்திரும்ப எல்லாவழிகளிலும் நாம் எடுத்துசொன்னோம், கேட்கமறுத்துவிட்டார்கள். இராணுவத்தினரும் தாய்மார்கள் சுமந்து பெற்ற குழந்தைகள்தான், அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கு, அவர்களை நீங்கள் மறந்துவிட்டுக் கதைக்கிறீர்கள், இத்தனை போர் தர்மம் பேசுகின்றீர்களே…… என்னுடைய அம்பாறை மாவட்டத்தில புஞ்சி-சிரியவில தூங்கிக்கொண்டிருந்த பெண்களைக் குழந்தைகளைக் புலிப்பயங்கரவாதிகள் குத்திக்கிழித்துப் போட்டதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகளால்தான் இப்படியானவற்றைச் செய்யமுடியும்.”

“ மெர்வின் சில்வா போன்ற வெளிப்படையாக ரௌடித்தனம் பண்ணக்கூடியவர்களை எல்லாம் கபினெட்டில் வைத்திருந்ததோடு, மதச்சகிப்பற்ற பொதுபலசேனாவைக் கட்டுப்படுத்தாமல் விட்டு மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தீர்கள். அவர்கள் அராஜகங்கள் பண்ணியபோது சம்பிரதாயமாகக்கூட அவர்களைக் கைதுசெய்யப் பயந்தீர்கள்.”

“ டக்ளஸாலும், கருணாவாலும், பிள்ளையானாலும் எங்களுக்கு ஆகவேண்டியது எதுவுமில்லை, இருந்தும் அவர்களையும் அரசில் வைத்திருந்து அவர்களுக்கு உயிர்ப்ப்பாதுகாப்பை வழங்கியதும் நாங்கள்தான். அது ஏன் உங்களுக்கு மனிதாபினமாகப்படவில்லை.”

“ எம்மீதான ஒடுக்குமுறைக்கும் பாகுபாடுகளுக்கும் எதிராகப் போராடப்புறப்பட்ட இளைஞர்கள்தான் போரில் அழிக்கப்பட்டார்கள்…….. அவர்களின் கல்லறைகளைக்கூடத் தகர்த்தெறிந்தீர்கள், உலகம் விடுதலை வேண்டியவர்களை, தியாகம் செய்தவர்களை போராளிகள் என்கிறது, நீங்கள் இன்னும் பயங்கரவாதிகள் என்கிறீர்கள். இப்பேரழிவுக்குப்பிறகும், தமிழர்களுக்கு ஏற்கக்கூடிய எந்தத்தீர்வையும் நீங்கள் வழங்க முன்வரவில்லையே………. குறைந்த பட்சம் பேராசிரியர் திஸ்ஸ விதரண தலமையிலமைத்த சர்வகட்சியினரின் சிபாரிசுகளையாவது அமுல்படுத்தியிருக்கலாம்.”

“ அதுக்கும் உங்கள் தேசியமுன்னணித் தமிழர்கள்தானே முட்டுக்கட்டையாக நின்றார்கள்…… பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர மறுத்துவிட்டார்களே……… வீம்புபிடிச்சவர்கள், எல்லாவற்றுக்கும் என்னையே குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தால் எப்படி”

“ உங்களுக்கு சர்வ அதிகாரமும் இருந்தது, நீங்கள் மனது வைத்திருந்தால் எல்லாப்பிரச்சனைகளையும் தீர்த்திருந்திருக்கலாம், பெரிதாக எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்க மாட்டாது, சரி, ஒரு இனக்குழுமத்துக்கு பிரிந்துபோகிற உரிமை இருக்கென்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா ” என்றான் ஆனந்ததீர்த்தன்.

“ஏற்றுக்கொள்கிறேன்………… ஒரு இனக்குழுமத்துக்கு அவர்களுக்கென்றொரு நிலப்பரப்பு இருந்தால் பிரிந்து போகலாம், ஐ.நா.மனித உரிமைவிதிகளும் அதைத்தான் சொல்கின்றன. ஆனால் பிரிந்துபோகிற அளவுக்கு இங்கே தமிழர்களுக்கோ சிங்களவர்களுக்கோ பிரச்சனைகள் எதுவும் இல்லை. தமிழர்களுக்கென்று தனியான நிலப்பரப்பு எதுவுங்கிடையாது, மீண்டும் சொல்கிறேன், நீங்கள் இன்னும் கனவுலகத்திலேயே சஞ்சரிக்கிறீர்கள்.”

மஹிந்த குரலை உயர்த்திச் சத்தமாகப் பேசத்தொடங்கவும் தூரத்தில் மஃப்டியில் நின்ற அவரது நாலைந்து அல்லக்கைகள் மேலும் அண்மித்து வந்து விறைப்பாக நின்றுகொண்டார்கள்.

ஆனந்ததீர்த்தன் பத்திரிகையாளர்கள் கொலைகள், போர்க்குற்றங்கள், சர்வதேச விசாரணைபற்றி ஏதும்தொட்டு அவரை மேலும் எரிச்சலூட்டிவிடுவானோவெனப் பயந்தேன்.

அப்போது அவரது அலைபேசி கிணுகிணுத்தது, ஜீன்ஸின் வலதுபக்கப் பையிலிருந்து அதை எடுத்து அதில்

“ நாம் நேரிலே பேசலாம் ஒன்றும் அவசரமில்லை ” என்றுவிட்டு அதை மீண்டும் உள்ளே வைத்துக்கொண்டு

“ சரி,வேறொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் போய்ஸ்” என்றுவிட்டு எழுந்துநின்றுகொண்டு

“ புதியதலைமுறையாவது நடைமுறையிலும், ஆரோக்கியமாகவும் சிந்தியுங்கப்பா. உங்கள் டயஸ்போறாத் தமிழர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் எல்லாச் சமூகத்துடனும் சேர்ந்து சமாதானமாக வாழ்வதைத்தவிர்த்து வேறு வழியில்லை என்பதை எடுத்துச்சொல்லுங்கள் ” என்றார்.

போகும்போது மஹிந்த எமக்குக் கைலாகுதரவில்லை. அவரை எரிச்சலூட்டிவிட்டோம் என்பது நிஜம். அவரது காலத்திலாயின் இத்தனைக்கும் கைதாகியிருப்போம்.

யாராவது எம்மைப் பின்தொடர்கிறார்களா என்று திரும்பித்திரும்பி பார்த்தபடியே சீருந்தொன்றிலேறி எமது ஹொட்டலுக்கு வந்து சேர்ந்தோம். படபடப்பு அடங்க நேரமாயிற்று. வேற்றுலகம் ஒன்றிலிருந்து இன்னொரு கிரகத்தில் தரையிறங்கி நிற்பதைப் போலிருந்தது.

*-* காலம் சஞ்சிகை வசந்தம் – கனடா *-*

22.01.2016 பெர்லின்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *