கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 1,437 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூன்று மணியளவில் தொடங்கலாமென்று சொன்னார்கள். ‘இண்டைக்கு ரீச்சருடைய லன்ஞ். இரண்டரைக்கு முடிஞ்சிடும்; மூண்டு மணியளவில் அவையள் வந்திடுவினம்; சேர் போகாதையுங்கோ நில்லுங்கோ’. நிருபன்தான் சொன்னான். 

அரை மனத்துடன் தலையசைத்தார். ஐந்தாறு வருடங்களின் பின்பு மீண்டும் கிரிக்கட் விளையாடும் சந்தர்ப்பம். ஐம்பது வயதாகியும் மனத்திலிருந்து ஆர்வம் குறையவில்லை. சபலம் நீங்கவில்லை. நினைக்கும் போதெல்லாம் கைகளில் சுழலும் பந்து; மெதுவாக ஓடி கையை உயர்த்தி வீசுகையில் நிலத்தில் பட்டு சற்றே வலது பக்கம் திரும்பி மட்டை பிடிப்பவரைத் திகைக்க வைக்கும் பந்து, ஏமாற்றும் பந்து; சட்டென்று சுதாகரித்து மட்டையைக் கொடுக்கையில், மட்டையில் பட்டெழுந்து ‘கச்’ சாகப் பரிணமிக்கும் பந்து; என்னை அடி என்னை அடி என்று ஆசை காட்டி எல்லைக் கோட்டருகே பிடியாகிப் போகும் பந்து; எதிர்பாராது விக்கட் சரிய, நம்பமுடியாது திரும்பிப் பார்த்துப் பார்த்துப் போக வைக்கும் பந்து. 

ஐந்தாறு வருடங்களுக்கு முன்னான போர்க்காலச் சூழலில் வீட்டைவிட்டுப் புலம்பெயர்ந்து வேறோரு நகரத்தில் தங்கியிருந்த காலத்திலேயே, ஒரு பிரகாசமான மாலையில் கடைசியாகக் கிரிக்கட் விளையாடினார். தங்கியிருந்த வீட்டின் அயலிலிருந்த சிறிய பூங்காவில், மாலை நேரத்தில் விளையாடும் விடலைகள், ‘அங்கிள் அங்கிள்’ என்று கூப்பிட்டு அவரையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள். அவர் தங்கியிருந்த வீட்டின் புதல்வனும் ஒருவனானபடியால், அவனது தொல்லை தாங்காது அவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். 

அவரைப் போல வேறும் ஒரு வயதானவர். இரண்டு கன்னையாய்ப் பிரிந்து விளையாடியதில் மற்ற வயதானவர் மட்டை பிடிக்கும் பக்கமும், இவர் பந்து தடுக்கும் பக்கமுமாய்; எல்லைக் கோட்டினருகே பந்து தடுப்பதில், பீறிட்டுக் கிளம்பி வந்த பந்து இவரையும் மீறி எல்லைக்கோட்டைக் கடந்து நான்கு ஓட்டங்களில் முடிந்தது. ஒரு வித ஆற்றாமையுடன் இவர் நிமிர, வாகாய்ப் பறந்து வந்த அடுத்த பந்து இவர் கைகளில் பிடியாகிப் போனது. ஆரவாரமும் பாராட்டும் கை தட்டலும் கை குலுக்கலுமாய்.. என்றாலும் மற்றவர்களை ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. நாலாபுறமும் பந்தை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். ஓட்டங்கள் பெருகிக் கொண்டிருந்தன. 

‘அங்கிள் நீங்கள் வோல் பண்ணுவியளே’ அவநம்பிக்கை யுடன் தான் ஒருவன் கேட்டான். போட்டுப்பார்ப்போம் என்றார் இவர். 

மிதமான வேகத்துடன் வீசிய பந்து, வாகாக மட்டையில் பட்டு நிலத்தில் படாமல் எல்லைக் கோட்டைக் கடந்து ஆறு ஓட்டங்கள்; எதிர்ப்பக்கத்தினர் குதூகலித்தார்கள். இவர் பக்கத்தினர் ஏளனத்துடனும் அவநம்பிக்கையுடனும் ஒருவரையொருவர் பார்த்தார்கள். 

அடுத்த பந்து நிலத்தில் பட்டு சற்றே வலது பக்கம் திரும்பி எகிறி சற்றும் எதிர்பாராது, விக்கெற்றின் வலது பக்க ஸ்டம்பைத் தட்டிச் செல்ல, மட்டை பிடிப்பவன் நம்பமுடியாமல் திரும்பிப் பார்த்து மைதானத்தை விட்டுச் செல்ல.. ஒரே ஆரவாரம். 

அடுத்த பந்து எதுவுமே நடக்கவில்லை. 

அடுத்த பந்து மட்டையில் பட்டு மெல்ல உயர்ந்து பந்தை வீசியவரின் கைகளில் அடைக்கலம் புக ஆரவாரமும் பாராட்டுக்களும் கட்டிப் பிடிப்புகளும் கை உயர்த்தல்களுமாய். 

அடுத்து எங்கள் பக்கம் மட்டை பிடிக்க வேண்டும். அதற்கான ஆயத்தங்கள் நடக்கையில் எங்கள் வீட்டின் புதல்வன் சொன்னான், ‘விக்கெற்றுகள் கிடைத்தது தானெண்டாலும் நீங்கள் கொஞ்சம் பாஸ்ராய் வோல் பண்ண வேணும் அங்கிள்’. 

‘பாஸ்ற் எண்டது அவையவையின்ரை சக்தியைப் பொறுத்தது. வோல் பண்ணேக்கை துல்லியமும் நிதானமும் தான் முக்கியம்’ 

வீட்டின் புதல்வன் உட்பட எல்லா இளசுகளும் அவர் கருத்தை அசட்டை செய்வதாய், அலட்சியமாகவே பார்த்தார்கள். 

‘வேகம் வேகம். எங்கும் எதிலும் எப்போதும் வேகம் வேகம். எங்கை எதிலை போய் முடியப்போகிறதோ.’ 

ரீச்சரின் லன்ஞ் முடிந்து, சம்பிரதாய உரைகளும் முடிந்து மரியாதையான விடைபெறல்களும் முடிந்து, நேரமும் மூன்றைத் தாண்டிவிட்டது. அவர்கள் இன்னும் வரவில்லை. 

சர்வதேச ஆசிரியர் தினத்தை ஒட்டி இரண்டு கல்லூரி ஆசிரியர் குழுக்களுக்கிடையேயான கிரிக்கட் போட்டி மூன்றரை மணியளவில், அவர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். எல்லோரும் இளைஞர்கள். இருபதிற்கும் முப்பதிற்கும் இடைப்பட்டவர்கள். பந்து விளையாடிப் பயிற்றப்பட்டவர்கள் போல் மைதானத்தில் ஓடியாடிப் பயிற்சி செய்தார்கள். 

எங்கள் அணியில் அரைக்கிழங்களே அநேகர். இரண்டு, மூன்று இளைஞர்களைத் தவிர மற்றவர்கள் இரண்டு, மூன்று நாட்களே பந்தைத் தொட்டுப் பயிற்சி செய்தவர்கள். 

ஒரு வழியாக நான்கு மணியளவில் ஆட்டம் தொடங்கிற்று. இருபது ஓவர்கள் மட்டப்படுத்தப்பட்ட போட்டி. எங்கள் அணியினரே முதலில் மட்டை பிடித்தார்கள். 

அவர் மனது சஞ்சலப்பட்டது. அவர் ஒருவரே ஐம்பது வயதினர். வெறும் பார்வையாளனாக இருந்து நழுவி விடலாமோ என்று எண்ணினார். அவரையும் சேர்த்தால்தான் எங்கள் அணியில் பதினொருபேர் தேறுவார்கள். பாடசாலை வளாகத்தில் பிரதான மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் எங்கள் ஆசிரியர்கள் வந்தால் அவர் நழுவலாம்தான். 

நழுவலாமா? மனதில் மீண்டுமொரு முறை பந்து வீசிப் பார்க்கலாம் என்ற ஆசை. 

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் அவர் இங்கு இடமாற்றலாகி வந்த புதிதில், இதே மைதானத்தில் நிகழ்ந்த ஒரு சினேகபூர்வமான ஆட்டத்தில் அவர் பந்து வீசிப் பெற்ற நான்கு விக்கற்றுகள்; மூன்று ஓவர்கள் பந்துவீசி பன்னிரண்டு ஓட்டங்களைக் கொடுத்துக் கைப்பற்றிய நான்கு விக்கற்றுகள். வெற்றிப் பெருமிதம்; பின்னர் நடந்த தேநீர் விருந்தும் பூரிப்பும். 

இப்போது பழைய நண்பர்கள் எவரும் இங்கில்லை. அவரவரும் இளைப்பாறியும், இடமாற்றம் பெற்றும் சென்று விட்டார்கள். இருக்கும் இரண்டொருவரும் எதிலுமே ஈடுபாடு இல்லாதவர்கள். இவர் மட்டும் தனித்துப் போய் விட்டார். இவரும் இன்னும் நான்கைந்து வருடங்களில் இளைப்பாற வேண்டியவர்தானே! 

அது பற்றியும் அவர் காது படவும், படாமலும் கதைத்தார்கள். இந்த வயதில் இவருக்கென்ன விளையாட்டு. அதற்கும் நிருபன்தான் பதில் சொன்னான். விளையாட்டுக்கு வயதில்லை மனதில் ஆர்வமும் உற்சாகமும் தான் முக்கியம். அவரை விளையாட வேண்டுமென்று உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தான். 

மைதானத்தில் பெரிய ஆரவாரம். எங்கள் அணியில் நான்கு விக்கற்றுகள் வீழ்ந்திருந்தன. இளைஞர்களான நிருபனும் – ரமேசும் ஆடிக் கொண்டிருந்தார்கள். பந்து நாலாபுறமும் பறந்து கொண்டிருந்தது. ஆறு,நான்கு, இரண்டென ஓட்டங்கள் மளமளவென்று குவிந்து கொண்டிருந்தன. பெரிய இரசிகர் கூட்டம் ஆரவாரத்துடன் இரசித்துக் கொண்டிருந்தது. 

முன்னைய போட்டிக்கு இரண்டு மூன்று வருடங்கள் பின்னர் நடந்த இன்னோர் போட்டி. எதிரணியினர் மட்டை பிடித்து ஆடுகின்றனர். ஆட்டம் முடியும் நிலையை நெருங்கிய போதிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை அவுட்டாக்க முடியவில்லை. நிதானமாக நேர்த்தியாக ஓட்டங்களைக் குவிக்கும் அவர்கள். அவரும் தனது மூன்றாவது ஓவரை வீசிக்கொண்டிருக்கிறார். கடைசிப் பந்திற்கு முதல் பந்து இடது பக்க ஸ்டம்ப் பறக்க.. முதலாவது விக்கெட் சரிகின்றது. அவரது பாடசாலை மாணவர்களால் நிரம்பியிருந்த பார்வையாளர் இடத்திலிருந்து பெரிய ஆரவாரம்… அந்த ஓவரின் கடைசிப்பந்து அடுத்த விக்கெட்டின் வலப்பக்க ஸ்டம்ப் பறக்க, எல்லைக் கோட்டினருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அவர் நண்பர் ஓடி வந்து அவரைக் கட்டித் தழுவ, மற்றவர்கள் ஓடி வந்து கை கொடுத்துப் பாராட்ட.. அவரது மாணவர்கள் அவருக்கு கையாட்டி மகிழ்ச்சி தெரிவிக்க.. 

மகிழ்ச்சி, புளகாங்கிதம், பூரிப்பு.. நானூறு ஐநூறு பேருக்கு மத்தியில் ஒரு ஹீரோவாகத் தலை நிமிர்ந்து.. 

மைதானத்தில் மீண்டும் பெரிய ஆரவாரம். எங்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கை நூறைத்தாண்டி நிருபனின் ஓட்ட எண்ணிக்கை அறுபதையும் தாண்டிவிட்டிருந்தது. 

எங்கள் அணியின் ஒன்பதாவது விக்கற் சரிய பத்தாவது ஆளாக அவர் நிருபனுடன் சோடி சேர்ந்தார். 

ஆடி இரண்டு ஓட்டங்களைப் பெற்றிருந்தார். நிருபன் பந்தை எதிர்கொள்ளச் சந்தர்ப்பம் அளிப்பதற்காக, அடுத்த முறை பந்தைத் தட்டிவிட்டு ஓடுகையில், துரதிஷ்டவசமாக ‘ரன்அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார். 

ஒருவர் பின் ஒருவராக மைதானத்தை விட்டு நடக்கையில் நிருபனே ஹீரோவாக… பார்வையாளர்களின் கைதட்டல். 

அவனது தனிப்பட்ட ஓட்ட எண்ணிக்கை எழுபத்திரண்டு அணியின் ஓட்ட எண்ணிக்கை நூற்றிருபது. 

‘எங்களுக்கே வெற்றி. எதிரணியினர் நூறு ஓட்டங்களைத் தாண்ட முடியாது’. நிருபன் சொன்னான். 

எதிரணியினர் மட்டை பிடித்து ஆடத் தொடங்கினர். நிருபனும் ரமேசும் ஒருவர் மாறி ஒருவராகப் பந்து வீசினர். மூன்றாவது ஆளாக தான் அழைக்கப்படலாமென அவர் எதிர்பார்த்தார். அவர் அழைக்கப்படாது, இந்தப் போட்டிக்கெனவே இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே பந்து வீசிப் பயிற்சி பெற்ற நண்பர் அழைக்கப்பட, அவர் தனக்குள் நொறுங்கிப் போனார். 

என்றாலும் ஒரு நப்பாசை. அடுத்த பந்து வீச்சாளராகத் தான் அழைக்கப்படலாம். அவரே ஓரளவாவது அனுபவப்பட்ட பந்து வீச்சாளர். பதினைந்தாவது வயதில் ஒரு பிரபல்யமான கல்லூரியில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே வீட்டில் போராடிப் போராடி, கிராமத்தில் தன்னை ஒத்தவர்களுடன் விளையாடி விளையாடி வளர்த்த நிறைவேறாத இளமைக் கனவு.. 

நான்காவது ஐந்தாவது பந்து வீச்சாளராகவும் அவர் அழைக்கபடவேயில்லை. 

இன்னும் ஒரு ஓவர் பந்து வீச்சுக்கள் எஞ்சியிருக்கையில் எதிரணி மூன்று விக்கற்றுகளினால் வெற்றி பெற்றது. 

‘நான் ஏன் அழைக்கப்படவில்லை! நுட்பங்கள் தெரிந்த, இங்கிதமான, உத்வேகம் நிறைந்த கப்டன் நிருபன் ஏன் என்னை அழைக்கவில்லை?’ 

திடீரென அவருக்கு ஏதோ ஞாபகம் வந்தது போல இருந்தது. இந்தப் போட்டிக்காக எங்கள் அணி ஆசிரியர்கள் பயிற்சி செய்த இடத்திற்கு தற்செயலாக இவர் சென்றபோது, நிருபன் சொன்னான். 

‘சேர் நீங்களும் ஒருக்கா வோல் பண்ணிப் பாருங்கோவன்’ நீண்ட நெடுங்காலத்தின் பின் பந்து வீசிப் பார்த்தார். கச்சிதமாக அளவாக விழுந்து எகிறும் பந்து; நான்கு முறை மட்டுமே வீசினார். 

‘எங்களுக்கே வெற்றி’ தன்னை மறந்த நிலையில் சொன்னார். 

மைதானத்தில் பலத்த ஆரவாரம். திரும்பிப் பார்த்தபோது எதிரணியில் கூடிய ஓட்டங்கள் எடுத்து அவர்களது வெற்றிக்குக் காரணமான ஆசிரியரை, அக்கல்லூரியைச் சார்ந்தவர்கள் தூக்கித் தோளில் சுமந்தனர்; வெற்றிக் கோசம் எழுப்பினர். “இன்று அவர் தான் ஹீரோ”

– ஆகவே, செப்ரெம்பர் 2005

– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *