ஸோபிதாவுக்கு பெர்லின் காட்டுதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2019
பார்வையிட்டோர்: 8,015 
 
 

ஜெகன் ஆகப்பட்ட இந்த இளைஞனுடைய இயற்கையை நெருங்கிப் பார்த்தால் ஒரு சமகாலச் சராசரி இளைஞனின்றும் வேறுபட்ட ஒரு ஆதர்ஸன், இலட்சியன் என்ற வகைக்குள் வரமாட்டான். புதுசுகளில் ஆர்வம், வர்ணங்களால் ஈர்க்கப்படுதல், சினிமாமேல் விமர்சனங்களற்ற கவர்ச்சி, நடிகைகள் ஆராதனை, அவர்களின் அணுக்கத்தில் ஆனந்தபரவசமடைதல், கொஞ்சம்போல ரஞ்சக, காதற்கவிதைகளில் நாட்டம் என இருப்பான். மற்றும்படி ஆடம்பரமாக உடுத்தவோ வாசனாதிகள் விசிறவோ, புகைவிடவோ மாட்டான். அடுக்ககத்தின் மின்னுயர்த்தி எப்போதாவது இயங்காதுபோனால் எந்த மாமிகேட்டாலும் அவர்கள் வண்டியிலிருக்கும் 100 லிட்டர் தண்ணீரையும் நாலாம் மாடிவரை படிகளில் சுமந்துவந்து குசினிக்குள்ளேயே கொடுப்பான்.

தானுண்டு தன் சோலியுண்டென்று வாழும் ஜெகனுக்கும் ஏனைய தமிழ் இளைஞர்களைப்போலவே தங்கையின் திருமணத்துக்காகவும் உழைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றன. நித்திரை விழித்து மிகைநேரப்பணிகள் செய்து, சிக்கனமாக வாழ்ந்து சீட்டுக்கட்டி ஏழாயிரத்துச்சொச்ச இயூரோக்கள் சேமித்து வீட்டுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்தான்.

ஜெகனுடன்கூட வதியும் அவர்களது அடுக்ககப் பங்காளரும், இவனைவிட 12 அகவைகள் மூத்த பிரமச்சாரியுமான மாதேஷ் அங்கிள்தான் இணையத்தில் இயூரோவின் நிகர்த்தவிலை இலங்கைரூபாவில் இறங்குமுகமாக இருப்பதைக் கண்டு அவனை “ஊருக்குப் பணம் அனுப்பிறதுக்கு அவசரப்படாதை ஜெகன், றேட்டுகள் வேகமாய் இறங்கிக்கொண்டிருக்கு” என்று வெள்ளந்தியாகச் சொல்லித் தடுத்து வைத்திருந்தார். இந்த மாதேஷ் அங்கிளின் வாழ்விலும் ஒரு தவிர்க்கமுடியாத முன்னிகழ்வு உண்டு அதையும் செப்பிவிட்டாலே நாம் மேலே வேகம் நகரலாம்.

மாதேஷ் 90களில் இளைஞனாக அச்சுவேலியின் தனியார் கல்வித்தலங்களை வலம்வந்துகொண்டிருந்தபோது அவருக்கும் ‘டியூட்டரிகால-ஷகி’ ஒருத்தி இருந்தாள். நாலு நோட்டுப்புத்தகங்களின் பாரத்துக்கே ஒடிந்து வளைந்து துவண்டுகொண்டு தோப்பிலிருந்து வந்து அவர்கூடப் படித்த மின்னற்கொடியள் அருந்ததிமேல் மனதைப்பறிகொடுத்தார். அருந்ததி குடும்பத்தினர் மாதேஷின் சாதியப்படிநிலைப் பேதங்களைக்கண்டு அவர்களது ஒழுங்கைக்குள்ளேயே அவரை நுழையவிடாது கம்பைச்சுழற்றினர். அருந்ததியின் கண்ணழகால் பலகாறும் கொத்துண்ட ரணங்களோடும் அவளை இழந்துவிட விரும்பாது அவளின் வீட்டருகே செழித்து வளர்ந்திருந்த மரவள்ளிக்கூடலுக்குள் சந்தித்து அவளிடம் “நட்டாங்கண்டலில எங்கமாமாவுக்கு கன்னிக்காடு ஒன்று இருக்கு……… வாரும் நாம் ஓடிப்போய் அதுக்கை ஒரு வருஷம் ஒளிச்சிருந்திட்டு வருவம்” என்றபோதும் கேட்டுக்கொண்டிருந்தவள், அவர் வேறுபக்கம் பார்த்துக்கொண்டு “ஒரு குழந்தையோடு திரும்பிவந்தமென்றால் எல்லாற்றை கோபமும் பிறகு தணிஞ்சிடும்” என்றபோது பெம்மானின் நடுமண்டை போருறமாதிரி ஓங்கி ஒரு ‘கொட்டு’ வைத்தாள். அவருக்கு மண்டைக்குள் மின்மினிகள் தட்டாமாலையாடிப் பறக்கவும் “ முழு லூஸன்மாதிரிக் கதைக்கிறீர் ஐ ஸே ………….எட்டாவது படிக்கையில புத்தகக்கட்டை புல்லுக்கார சீதேவியின்ர கடகத்துக்க போட்டிட்டு இயக்கத்துக்கு ஓடிப்போன என்ர சித்தப்பன்தான் அங்கே இப்ப மேற்கு வன்னிப்பிரதேசம் முழுவதுக்கும் உளவுபடைத்தலையாளி, அவங்களுக்கு இனம் சனமென்ற ‘பிலாதி’யெல்லாம் கிடையாது, அவன் தான்பேரெடுக்க தன்ரை அணிப்பெடியளை வைச்சே எம்மைப் போட்டுத்தள்ளிவிட்டுக் கண்டதார், கேட்டதாரென்று காட்டுக்கோழி வாட்டித் தின்றுகொண்டிருப்பான்” என்று ஒரேயடியாய் மறுக்கவும் மனதொடிந்துபோய் ஜெர்மனிக்கு விமானம் ஏறியவர்தான். ஜெர்மன் அரசும் மாதேஷுக்கு ஒருத்தியை அழைத்துத் தன்னுடன் வைத்து வாழும் வலுவுள்ள வதிவிட அனுமதியை வழங்காமல் இழுத்தடித்தமையானது அவ்விணையின் வாழ்க்கைப்பாதையையே மாற்றிப்போட்டு விட்டிருந்தது.

அருந்ததியும் காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து தவித்துக்கொண்டிருந்த அவத்தையில்த்தான், அவுஸ்திரேலியாவிலிருந்து மாதவன் எனும் ஒரு பொறியாளன் இணைதேடி யாழ்ப்பாணம் வந்தடைந்தான். ஊரிலுள்ள அனைவரினதும் சாதகப்பிரதிகளையும் கணினியில் சேகரித்துவைத்திருந்த பொருத்துனர் ஒருவரின் பார்வையில் இவர்கள் குறிப்புகளின் சாதி, கோத்திரம் ராசி, ரச்சு, நக்ஷதிரம், கணம், வசியப்பொருத்தங்கள் ஒத்துப்போவது வெளித்துவிட, தகவல் அருந்ததியின் பெற்றோரைத் தாமதமின்றிப் போயடைந்தது.

அவர்கள் இராப்பகலாய் அருந்ததியின் கன்னத்தை ஆட்டுக்குட்டியைப்போல அணைத்துவைத்துத்தடவி “ பார்த்தியோ கடவுள் உனக்கு மாதேஷுக்குப்பதிலாய் ஒரு மாதவனை அனுப்பியிருக்கிறார். இரண்டும் ஒரு தெய்வந்தான்……. இதிலயிருந்து இதுதான் அவர் உனக்கு அனுப்புயிருக்கிற கடைசிபஸ் என்கிற சூசகசெய்தியைப் புரிந்துகொள் மகள்” என்று பெற்றோரின் தர்க்கத்தையும் கடமையையும் வற்புறுத்தி உருகவும், யதார்த்தத்தை யோசித்த அருந்ததி மாதேஷின் மீதான காதல் முழுவதையும் ஒரு நனோ-கிராம் குறையாமல் அப்படியே மாதவன்மேல் சுமத்திக்கொண்டு – எத்திக்கும், எல்லாமும் அரனே- என்று மெல்போர்ண் நோக்கிச் சிறகுகளை விரித்தாள். இப்போ மாதவனுடனான தம்பத்தியத்தில் 3 குழந்தைகள் பெற்றுக்கொண்டபிறகு மெல்போர்ண் பல்கலையில் –மானுஷக் காதல்களும் அநுபோக வாழ்க்கையும்- எனும் தலைப்பில் முனைவர்.அருந்ததி ஆவதற்கான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்.

மாதேஷ் அங்கிளுக்கு ஆகும் அகவைகள் நாற்பத்திமூன்று, வந்தகாலத்திலிருந்தே வீடுகளுக்கு தினசரிப்பத்திரிகை விநியோகித்தல் பணியையே விரும்பி இரண்டு ‘டூர்கள்’ செய்கிறார். யாழ்ப்பாணத்தில் சிகரெட்டுக்கள், தேயிலையும், சிங்களப்பகுதிகளில் பாணும் விநியோகிக்கப் பயன்பட்ட முன்னே சிவப்புநிறத்தில் 1.5mx1mx1m பெட்டி பொருத்திய முச்சக்கர மிதியுந்துகள் மத்திய வயதினருக்கு ஞாபகமிருக்கலாம். அப்படியொரு மிதியுந்துள் பத்திரிகைகளை அடுக்கிவைத்து எடுத்துப்போய் அதிகாலை இரண்டு மணியிலிருந்து ஆறுமணிக்கிடையில் 300 பிரதிகள் விநியோகிக்க வேண்டியது அவரது சுதந்திரமான ஒரு பணி. வின்டரில் பனிவீழ்ச்சி அதிகமிருந்தால் அதைமிதிப்பதுதான் சற்றுச்சிரமம், தள்ளிக்கொண்டும் போகவேண்டியுமிருக்கும். ‘சரி எந்தப்பணியில்தான் வியாகூலமில்லை’ என்றுவிட்டு அதையே தொடர்ந்து இயற்றிக்கொண்டிருக்கிறார்.

அது மூன்றாவது சமாதான காலம். தென்னிந்திய சினிமா இசைக்கலைஞர்கள் கொஞ்சப்பேர் படவாய்ப்புக்கள் ஓய்ந்திருந்த நடிகநடிகையர்களைச் சாய்த்துக்கொண்டு 15 பேர்கொண்ட குழுவாக லண்டனுக்கு வந்து அங்குள்ள உள்ளூர் வாத்தியக் கலைஞர்களுடனும் பாடகர்களுடனும் இணைந்துகொண்டு ‘இசைமாருதம்’ என்றொரு இசைவிருந்து நிகழ்ச்சியை விம்பிள்டன் அரங்கில் நடத்தினர்.

நிகழ்ச்சியின் விளம்பரங்களையும் ஆடம்பரத்தையும் பார்த்த டோட்முண்ட் ஜவுளி+மளிகைவியாபாரியும் பிரசித்த சீட்டுப்பிடிகாரனுமான நாகஞானத்துக்கு இசைமாருதத்தை இங்கேயும் வீசவிட்டால் கொஞ்சம் காசுபார்க்கலாமென்று நடுமண்டையில் குறுகுறுக்கவும் அவன் லண்டன் நிகழ்ச்சிமுகவர்களுடன் கலந்து வியாபாரம்பேசி அக்கலைஞர்களை டோட்முண்டுக்கும் இறக்குமதிசெய்து அங்கேயுமொரு கலைநிகழ்ச்சியை அரங்கேற்றினான்.

கலைஞர்களின் சம்பளங்கள், விமானப்பயணச்செலவுகள், அரங்கவாடகை, விளம்பரங்கள், ஹொட்டல்ரசீதுகள், சாப்பாட்டுச்செலவினங்கள் அனைத்தையும் கணக்குப்பார்க்கையில் நாகஞானம் தன் கணிப்புகள் கொஞ்சம் பிசகிவிட்டதை உணர்ந்தவுடன் அவ்விழப்பை ஈடுசெய்ய அவன் பெர்லின் குணத்தின் கால்களைப் பற்றியிழுத்தான். இயல்பிலேயே விலாசத்தை விரும்புபவனும், அதுக்காக யோசிக்காமல் செலவழிக்கக்கூடியவனும், ஏவலில் எழும்பிநின்றாடக் கூடியவனுமான குணம் வாகாக நாகஞானத்திடம் அகப்படவும் ஆளை ஓரங்கட்டி அவன்காதில் “காசென்ன மச்சான் காசு……… கணக்கென்று பார்த்தால் கொஞ்சம் முன்னபின்னயானாலும் டிவி, பேப்பரென்று திக்கெல்லாம் உன்னுடையபெயர் அதிர்ந்து கலக்கும் என்ன……….” என்று போட்டான்.

அப்படியொரு இசைமாருதத்தை பெர்லினில் நடத்திமுடிப்பதால் கிடைக்கவிருக்கும் வெளிச்சமும் விலாசமும் குணத்தின் மனதின் பெருந்திரையில் பலவர்ண ஜாலங்களோடும் ஜொலித்து மின்னிச்சிமிட்டவும் அவனது மண்டைக்குள்ளும் குறுகுறுப்பும் மென்னதிர்வுகளும் ஆரம்பிக்க ‘காசென்ன காசு ……….ஓராய்ச்சல் ஆடித்தான் பார்க்கிறது’ என்று வெளிக்கிட்டான்.

சித்திரைமாதம். வசந்தத்தில் ஈஸ்டர் வர ஜெகனுக்கு அடுத்து நாலுநாட்கள் விடுமுறை வந்தது. அதைத்தெரிந்து வைத்திருந்த குணத்தான் விஷயத்தைப் போனில் கேட்டால் முகத்தைப்பாரமலே மடுத்துவிடுவான் என்பதால் இவனுடைய அடுக்ககத்துக்கே வந்து லண்டனுக்கு வருகைதந்து இப்போது டோட்முண்டில் நிலைகொண்டிருக்கும் இசைமாருதத்தைப்பற்றி விதந்தோதி ஜெகன் போன்றவர்கள் தனக்குக் கொஞ்சம் ‘சப்போர்ட்’ பண்ணினால் மட்டும் தானும் அதை பெர்லினுக்கு நகர்த்திவந்து இங்கேயும் அதைப் பிரவகித்தோடச் செய்யலாம் என்று ஆசைகாட்டித் தனக்கு உதவுமாறும் விநயமாக விண்ணப்பித்தான். ‘திரைக்கலைஞர்களுடனான நாட்கள் பைம்பலாகத்தான் இருக்கப்போகிறது’ என்று உள்ளூர விரும்பினாலும், குணத்தானுக்குத் தான் சீட்டுக்கட்டிக் காசுவைத்திருக்கும் விடயம் எங்கே கசிந்துவிட்டதோவென்று உசாரான ஜெகன் “ குணம் அண்ணை ஏதும் ஃபினான்ஸியல் சப்போர்ட்டென்றால் என்னால ஏலாது…….. அந்த நிலைமையிலும் நானில்லை, தங்கச்சியின் கல்யாணத்துக்காக இருந்த காசெல்லாம் போனகிழமைதான் ஊருக்கு அனுப்பிப்போட்டு இருக்கிறன்……. வேறேதும் விதத்திலான சப்போர்ட்டென்றால் சொல்லுங்கோ……….என் சக்திக்குட்பட்டதென்றால் செய்வன்.” பிடிகொடுக்காமல் பதிலிறுத்தான்.

“ சாய்ச்சாய்…. நான் ஃபினான்ஸியலாய் எதுவும் கேட்கேல்ல……. கொஞ்சம் சரீர உதவியைத்தான் எதிர்பார்க்கிறன்.”

“ என்ன அல்ப்ஸை கிழக்கே நகர்த்தி வைக்கிறதா இல்லை………….., றைனை மறிச்சு பெர்லினுக்குத் திருப்புகிறதா சொல்லுங்கோ?”

“ எப்பவும் பகிடிதான் உமக்கு”

“ சரி, சொல்லுங்கோ………. அண்ணை, எப்பிடி என்ன உதவியாகவேணும்.”

“ஈஸ்டர் நேரமிப்போ… உமக்கும் லீவுதானே………. டோட்முண்டுக்குப்போய் அந்த ஆர்டிஸ்ட்களைக் கூட்டிவாறதுக்குக் கொஞ்சம் உதவிசெய்தால்ச்சரி.”

“ மொத்தம் 15 ஆர்டிஸ்ட்டுகள் என்றியள்….. குறைஞ்சது நாலைஞ்சு காருகளாவது வேணும்……. அதோட என்ர கறள்கட்டின கோல்ஃபில சினிமா ஆர்டிஸ்ட்டுகள் ‘ஏற்பு’ ஆக்கிப்போடுமென்று ஏறவும் மாட்டாங்கள்…….. யாரும் நல்ல லுக்ஷரியான காருகள் வைச்சிருக்கிற காயளைப் பார்த்துப்பிடியுங்கோ…………..பிளீஸ்.”

“மியூசிக் – இன்ஸ்ருமென்டுகளைக் கொண்டுவாறதுக்கு ராஜனுடைய பிக்-அப்பை அரேஞ்ஜ் பண்ணியிருக்கு……… நான் உமக்கு Inter Rent இல சூப்பர் Audi Avant அல்லது Quattro எடுத்துத்தாறன் ஓகேயா…..”

“மெய்யாய்த்தானோ……………?”

குணத்தான் மாறிமாறிச்சூடிய வெல்வெட் குல்லாக்களில் ஜெகன் வசைந்துவிட….

குணத்தின் Merceds, அவன் வாடகைக்கு எடுத்துக்கொடுத்த Audi Avant, வேறும் இரண்டு குத்தியன்களின் 2 மகிழுந்துகளுடன் மொத்தமாக 4 மகிழுந்துகள் டோட்முண்ட் நோக்கிச்சீறின. அங்கத்தைய நிகழ்வுகள் முடிவடையவும் நாகஞானம் கலைஞர்களுக்குக் கொடுத்த விருந்தை நிறைத்துக்கொண்டு லேசான உலாஞ்சலுடன் அவர்களை பெர்லினுக்கு அழைத்துவந்தார்கள். திரையில் அண்ணார்ந்து பார்த்தவர்களை அருகில் வைத்துப்பார்ப்பதுவும் அழைத்துக்கொண்டு திரிவதுவுமென்றால் சும்மாவா…….. கலைஞர்கள் பெர்லின் வந்தடைந்ததும், அவர்களை ஹொட்டலில் தங்கவைப்பது, உணவகங்களுக்கு அழைத்துச்செல்வதென்று ஒத்தாசைகள்பண்ண அங்கே உதிரியாக இருந்த பெடியங்களும் தன்னார்வத்தில் முன்வந்தார்கள். வந்திருந்த நடிகைகளுள் அஜந்திகாவும், செவ்வந்தியுந்தான் அப்போதும் சிலபடங்களில் நடனங்களிலும், சிறிய சிறிய வேடங்களிலும் தலைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர், குணசித்திர நடிகையான காவியாவை அந்நேரத்தில் படங்களில் அதிகம் காணவில்லை, ஆனால்தான் இப்போது தெலுங்கில் ‘படுபிஸி’ என்றார். திரும்பி வந்து இப்போது பல தமிழ்ப்படங்களில் அம்மா வேடங்களில் கலக்குகிறார். பாடகர்களில் ஒருவரே பெண், இப்பாடகி ஒருகாலத்தில் இளையராஜாவின் இசையில் தெய்வீகராகங்கள் இசைத்தவர். மீதி ஆண்கள் அனைவரும் நடிகர்களும் பாடகர்களுமாவர்,

ஈஸ்டர் ஞாயிறு இரவு இசைமாருதத்தில் செவ்வீதமும் கேட்டுக்கேட்டுக்காதுகள் புளிப்பேறிய சினிமாப்பாடல்கள்தான் எழுந்து வீசின. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த மணிக்குரல் அறிவிப்பாளர் ஆரம்பத்தில் ஒலிவாங்கியைப் பிடித்த நேரத்திலிருந்து ‘இன்று நடிகை ஸோபிதாவைப்பற்றிய ஒரு இரகசியத்தை’த் தான் நிகழ்வின் மறுபாதியில் அவிழ்த்துவிடப்போவதாகப் பீடிகைகள் போட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து வீசிய இசைமாருதத்தின் நடுவில் றோல்ஸ், பற்றீஸ், கட்லெட், வடை , கோப்பி, கோலா, ஃபன்ரா, ஒறேஞ், அப்பிள்ஜூஸ்கள், பியர் விற்பதற்காக ஒரு இடைவேளை விட்டார்கள். மீண்டும் நிகழ்ச்சி ஆரம்பிக்கையில் நிகழ்ச்சிநிரலில் இல்லாத ஒரு புதுநிகழ்ச்சியை அக் கலைஞர்கள் புகுத்தினார்கள்.

வந்திருந்த நடிகருள்ளும் இரண்டுபேர் நகைச்சுவை நடிகர்கள், ஒருவர் மிமிக்கிரிக்காரர், இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ‘திடீர்நாடகம்’ போட்டனர். மிமிக்கிரிக்காரர் மேடையில் தோன்றுவதற்காக ஜெகனின் புதிய ஜம்பரையும் ஜாக்கெட்டையும் கேட்டார், பிறகு திருப்பிக் கொடுக்கவேயில்லை. நாடகமும் மொக்கையிலும் மொக்கை. அவர்களின் ஜோக்குகள் எதுவும் இங்கே எடுபடவே இல்லை, கலைக்குழுவினருடன் பின்னர் தனியாகப்பேசியபோது ‘வெளிநாட்டு நிகழ்ச்சிக்குப் போகும்போதாவது தரமான நகைச்சுவையைத் தயார்பண்ணிக்கொண்டு வந்திருக்கலாமே’ என்றதுக்கு ‘இல்லீங்க…………. எல்லாமே சரியாத்தான் இருந்திச்சு…… ஹிஹிஹி………… சிலோன்காரங்களுக்குத்தான் ரசனை கம்மி’ என்றனர். ‘திண்டுக்கல் லியோனியும் இப்படி ஒருமுறை சொல்லியிருக்கிறார். சினிமாக்களில் இடம்பெற்ற அறுதப்பழச்சான ஜோக்குகளை மீண்டும் மேடையில் அவிழ்த்துவிட்டால் எவன் சிரிப்பான்’ என்று திருப்பிக்கடித்துத் திருப்திப்பட்டோம். இனிமேல் கலைஞர்கள் தரமான பிரதிகளுடன்தான் வெளிநாட்டுகளுக்குப் புறப்படுகிறார்களா என்பதைக் குறைந்தபட்சம் தமிழ் படிக்கத்தெரிந்த சுங்கத்தினராவது கண்காணித்தாலே தமிழ்நாடகக்கலை வளம் பெறும் காண்.

ஆளாகி ஆண்டுகளாகி நெகுநெகுவென்று மதர்த்து வளர்ந்திருக்கும் மடந்தையரை அப்போதுதான் சமைஞ்சதாகச் சொல்லிச் சினிமாவில் பூப்புனித நீராட்டுவிக்கும் சினிமாக்கலைஞர்களின் மொக்கை நாடகம் முடியவும், மணிக்குரல் அறிவிப்பாளர் நடிகை ஸோபிதாவைப்பற்றிய அந்த இரகசியத்தைக் கட்டவிழ்க்கப்போவதான கட்டியத்தை மீண்டும் அறிவித்தார். மகாஜனத்தின் தவிப்பும் பரபரப்பும் குருதியழுத்தமும் எகிறலாயிற்று. இறுதியாக மணிக்குரலோன் பலத்த கரகோஷத்தினிடையே ‘இன்று நீளநயனசுந்தரி, கொடியிடைநாயகி ஸோபிதாவின் 23வது பிறந்தநாள்’ என்றும், அவர் கடல்கள் பல கடந்துவந்து இத்தனை இரசிககர்களோடு விமரிசையாக அதைக்கொண்டாட வேண்டுமென்பது பெர்லின் மயூரபதி முருகனின் திருவுளமேயன்றி வேறல்லவன்றும் உடல் விதிர்க்கையில், ஸோபிதா மேடைக்கு வந்தார். கலாரசிக வெள்ளத்தின் ஆரவாரமும் விசில்களும் அரங்கமே அதிர்ந்தது. ‘இன்றைய உங்களின் சங்கீதம் வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்’ என அவருக்கான வாழ்த்தை முதலில் அருளிய மணிக்குரலோன் அவரிடமும் ஒரு ஒலிவாங்கியைத்தந்து அவரை ஒரு குறுஞ்செவ்வி காணலானார்.

“நீங்கள் ஒருவேளை சினியுலகத்துக்கு வந்திருக்காவிட்டால் என்னதான் செய்திருப்பீர்கள்?”

“ டாக்டர் ஆகவேண்டும் என்பதுதான் என்னதும், என் குடும்பத்தினரதும் விருப்பம், கனவு எல்லாம்……… அத்திசையில் பாச்சுலர் இன் பயோ சைன்ஸை நான் படிச்சுக்கொண்டிருந்தப்போதான் டைரக்டர் பாஸில் அவர்கள் எங்க வீடுதேடிவந்து எனனைத்தன் சினிமாவில் நடிக்கும்படி வற்புறுத்திக்கேட்டாங்க, பெரியதொரு டைரக்டரே ரொம்பக் கேட்டதால என்னால மறுக்கமுடியலை…………….”

“ இயக்குனர் பாஸிலுக்கு உங்களை எப்படித்தெரிய வந்தது மாடம்?”

“ எங்க கல்லூரி ஆண்டுவிழாவுக்கு வந்திருந்த டைரக்டர் நான் ஆடிய ஒரு டான்ஸை அங்கே பார்த்திட்டுத் தன் அடுத்த படத்தில என்னையே போடத் தீர்மனிச்சிருக்காரு.”

இந்தவகையிலான தன் செவ்வியை முடித்து இரசிகர்களை அறிவூட்டிய பின்னால் “ செல்வி ஸோபிதாவை வாழ்த்த விரும்புபவர்கள் முண்டியடிக்காமல் ஒவ்வொருவராக மேடைக்குவந்து வாழ்த்தலாம்” என்று மணிக்குரலோன் அறிவித்தார்.

URANIA எனப்படும் அந்த அரங்கத்தின் மேடைக்கு இரண்டுபக்கங்களிலிருந்தும் ஏறிச்செல்வதற்கான படிக்கட்டுகள் இருக்கின்றன. அன்று ஸோபிதாவுக்குப் பிறந்தநாளென அறிவித்தானதும் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச்சொல்ல இளைஞர்களும் இளைஞிகளும் மேடையின் வலது – இடது பக்கங்களில் இரண்டு வரிசைகளில் முண்டியடிக்கத் தொடங்கினர். இந்த ஏற்பாடுகளையெல்லாம் முதலிலே தெரிந்துவைத்திருந்த குணம் மூன்று பெரிய கூடைகளில் றோஸாப்பூக்களும், மலர்க்கொத்துகளும் தயாராகக் கொண்டுவந்து ஸோபிதாவை வாழ்த்தப் போனவர்கள் மேடைக்கேறும்போதே அவற்றை வாங்கிச்செல்ல வசதியாக படிகளின் அருகாக வைத்து விற்பனைசெய்யவும் சில அணங்குகளையும் தயார் நிலையில் வைத்திருந்தான்.

இளசுகள் செண்டுகளைக்கொடுத்துச் ஸோபிதாவை வாழ்த்திக் கையை, கன்னத்தைத் தொட்டுப்பார்த்துச் சேர்ந்து படம்பிடித்து மேடையைவிட்டு மனமிலாது இறங்கவும், இப்போது வயதுவித்தியாசமின்றிப் பெரிசுகளும் வரிசையில் ஏதோ திருமணவீடுகளில் ‘மொய்’ எழுத நின்றகோலத்தில் அணிதிரண்டனர்.

ஜெர்மனியின் வேறொரு நகரத்திலிருந்து வந்திருந்த, பெர்லினில் முன்னேபின்னே யாரும் ஒருபோதும் கண்டிராத ஒரு அகலமான ஆன்டி, தொலைக்காட்சித் தொடர்நாடகங்களில் விளம்பரங்களில் வரும் அணங்குகளைப்போன்று பெரியகொண்டையும் நிறைய நகைகளும் ஒப்பனைகளோடும், கையிலொரு பூச்செண்டுடன் அந்தமேடையில் மிகவும் உரிமையுள்ளவர் போன்றதொரு தோரணையுடன் மேடைக்கு ஏறினார். அம்மணியை யாரென்று அறியாததால் முண்டியடித்த இரண்டு வரிசையினரும் பின்வாங்கி அவரைவழிவிட, நேராகச் சென்று ஸோபிதாவிடம் பூச்செண்டை வழங்கிவிட்டு, தலையைத்திருப்பி அரங்கத்தினரை பெருமிதமாகப் பார்த்தபடி தன்விரலிலிருந்த மோதிரம் ஒன்றை உருவி அவரின் விரலில் மாட்டவும் ஸோபிதா அவரைக்கட்டி அணைத்து முத்தமிட்டார். பின் ஏதோ பள்ளித்தோழிகளைப்போல பரஸ்பரம் குசலம் விசாரித்தபடி இருவரும் தோள்களில் கைகளைப் போட்டுக்கொண்டு படங்களும் எடுத்துக்கொண்டனர்.

குணத்துக்கு நெருக்கமாகவும் ஒத்தாசையாகவும் இயங்கிக்கொண்டிருந்த ஜெகனுக்கும் இப்போதொரு ‘திடுப்’ குறுகுறுப்புண்டானது……….. அவனையும் மற்றவர்களைப்போல் வரிசையில் எவர் நிற்கச் சொல்லப்போகிறார்கள், அகலமான ஆன்டி பரந்த சிரிப்புடன் மேடையால் இறங்கவும், ஜெகன் அடுத்ததாக மேடைக்கு ஏறிப்போய் தன் கழுத்திலிருந்த சங்கிலியை ‘விசுக்’கெனக் கழற்றிச் ஸோபிதாவின் கழுத்திற்போட்டு அவளின் புறங்கையில் முத்தமிடவும் அரங்கிலிருந்து பரவலாக விசில்கள் கிளம்பின. சனம் ஆரவாரித்து ஓயவும் அவன் உள்ளூரப்பெருமை தாங்காமல் தவித்தான்.

பெர்லின் பிள்ளையார் பால்குடித்த விந்தைக்கு அடுத்தபடியாக……………. ஒரு 500 இயூரோ கைமாத்துக்கேட்டாலே ஏதோ கிட்னியைக் கேட்டமாதிரித் திகைச்சு மூஞ்சூறுமாதிரி மாமாங்கம் யோசிக்கிறபயல் ஐந்து சவரன் தங்கச்சங்கிலியைத் தூக்கிக் கடாசின அற்புதத்தைப் பெர்லினில் பறையாத வாய்களே இல்லை. அவனது நல்ல நண்பர்களும் ஆற்றாமையில் தமக்குள் ‘ஒருநாளைக்கு இளித்துவிட்டுப் போகிறவளுக்குத் தங்கச் சங்கிலியைக் கழற்றிக்கொடுத்தானே லூஸுப்பன்னாடை……’ என்று புறுபுறுத்தனரே தவிர, ‘தற்கால இளைஞர்களுக்கு அறிவுரைகள் பிடிக்காது’ என்பதால் ஜெகனிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லத்தயங்கினர்.

சதா கதையும் கலகலப்புமாய் மென்னகை பரவிய முகத்தோடு Audi Quattro மகிழுந்தில் தங்களை ஏற்றிவலம் வந்துகொண்டிருக்கும் நவயுவனும், தனக்குத் தங்கச்சங்கிலியே பரிசளித்தவனுமாகிய ஜெகன் பெர்லினின் இளம்புரவலர்களில் ஒருவனாக ஸோபிதாவுக்குக் காட்சியளித்தான்.
மீண்டும் சினிமாப்பாடல்கள் மேடையில் தொடங்கியபோது ஒப்பனை அறைக்குள் கலைஞர்களுக்கு பியர், கோலா, அப்பிள், ஒறேஞ் ஜூஸ்கள் பரிமாற உள்ளேபோன ஜெகனைப்பார்த்து மலர்ந்து வசீகரமாகப் புன்னகைத்து கண்களால் அழைத்த ஸோபிதா அவனை நெருங்கிவந்து கேட்டாள்:

“ சார்……… உங்க Audi Qattro ரொம்ப அழகா அம்சமாயிருக்கு…………. கேக்கறேன்னு கோச்சுக்கப்படாது…….. அது சாரது சொந்த வண்டிங்களா…….. ”

இதுவரை ஜெகனின் 90 கிலோ ஸ்தூலத்துள்ளே மறைவாகத் தூங்கியிருந்த சைத்தான் மெல்லெழுந்து நுனிநாக்குக்கு நகர்ந்து அவனுக்கு லேசானதொரு பொய்க்கோபத்தை வருவிக்க நடிகையின் முன்னாலேயே நடித்தான்.

“ ஆமாமா………. என்ன நெனைச்சுக்கிட்டீங்க……. சார் ஜெர்மனிக்கு வந்து பன்னிரண்டு வருஷமாச்சுதாம்………. எல்லாம் என் சொந்த வண்டிதான்,…….. How comes such an awkward doubt Mam? ”

“ Mam எல்லாம் வேண்டியதில்லைங்க……….. நீங்க என்னை ஸோபிதான்னோ ஜஸ்ட் சோபின்னே கூப்பிடெல்லாம்.”

“ ஓகே…….. ஓகே …………ஸோபிதா ”

“இல்லைச்சும்ம்ம்மாத்தான்……. கேட்டேன், First time பெர்லினுக்கு வந்தேனா…. எனக்கு இங்கே கொஞ்சம் சுற்றிப்பார்க்கவேணும்போல ஆசையாக இருக்கு……..What a beautiful City Ja”

என்றுவிட்டு விழிகளை தலைமன்னார்க்கடலில் பிடிக்கப்படும் சேர்ச்லைட்களைப்போல அரைவட்டமாகச் சுழற்றினாள்.

“ It’s a simple matter ma…….. உங்களுக்கு பெர்லின்ல என்ன ஆகணுமோ அதையெல்லாம் எங்கிட்டத் தயக்கமில்லாமல் சொல்லுங்க ஸோபிதா….. இதைக்கூடச் செய்யலைன்னா அப்புறம் நாம இங்கே தமிழர்களென்று இருந்தென்ன பிரயோசனம்……”

“ I love your kindness…….. and deeply appreciate it Sir. ”

“ நீங்ககூட ஜெகன்னே என்னைக் கூப்பிடலாம்……. ‘சார்’ ரொம்பக் கூச்சப்படுத்திறதோட அந்நியமாயுமிருக்கு.”

நிகழ்ச்சிகள் முடிந்து ஹொட்டலுக்குத் திரும்பும்போது வண்டியின் முன் இருக்கையில் ஜெகனுக்குப் பக்கத்தில்போய் அமர்ந்துகொண்டாள் ஸோபிதா. அவளது வாசமும் நெருக்கத்தின் அதிர்வலைகளும் ஜெகனுள்ளும் மெல்லப் பரிவலைகளைக் கிளர்த்தின. வண்டி சென்றுகொண்டிருக்கும்போது பின்னுக்கு உரையாடல் போய்விடாதபடியான ஒரு பாவனையுடன் அவன் பக்கம் மிகையாகச் சாய்ந்து தோள்கள் உரச அவன் காதுகளில்
“அப்புறம்……….. உங்களுக்குச் சிரமம் கொடுக்கலைன்னா நான் நாளைக்கு இங்கே கொஞ்சம் ஷொப்பிங்கும் பண்ணவேண்டியிருக்கு ஜெகன்……… உங்களுக்கு டைம் இருந்திச்சின்னா……….என்னைக் கொஞ்சம் கூட்டிட்டுப்போவீங்களா…………” என்றாள்.

‘அவனை உரிமையுடன் ஜெகன் என்றதன் சமிக்ஞையும், அவளாகவே வந்து என்னைத்தள்ளிட்டுப்போ’ என்பதான திடும் இணக்கமும் ஜெகனுக்குள் ‘லாகிரி’ ஏற்றவும் தான் ஆசீர்வதிப்பட்டதாக உணர்ந்தான்.

“ Do’nt worry Shobitha……… I’m here to fulfill all your desires……… right. “ என்றான். அம்மகிழுந்தில் கூடவந்த வேறும் இருவரை அவர்களுக்கான ஹொட்டலில் இறக்கிவிட்டு அன்று இரவு முழுவதும் ஸோபிதாவுக்கு பெர்லினைச் சுற்றிக்காண்பித்தான். பாதிவட்டத்திலேயே அவளுக்குக் கட்டிடங்களைப் பார்ப்பதில் அத்தனை இஷ்டமில்லை என்பது ஜெகனுக்குப் புரிந்துபோனது. இடையில் குணத்துக்குப் போன்செய்து ‘அண்ணை………. நாங்கள் கொஞ்சம் பெர்லினைச் சுற்றிப்பார்க்கப்போறம் எங்களைத் தேடவேண்டாம் சரியா’ என்று ஜெர்மனில் பகரவும்,

“ ஏதோ…….நடக்கட்டும் நடக்கட்டும் காட்டுறியோ……..இல்லைப்பார்க்கிறியோ அதெல்லாம் உன்னுடைய வல்லபம் கண்ணா……. கையோட உன்னைக் கட்டுறியோவென்றும் மெல்ல நூலைவிட்டுப்பார் ” என்றான் ‘புத்தெழுச்சி’யில் நின்ற குணம்.

இரவின் கேளிக்கை உலகங்களுக்குள் புகுந்தார்கள். பெர்னில் புகழ்வாய்ந்த கிளப்புகள் சிலவற்றை எட்டிப்பார்த்தார்கள், Eastside Gallery பகுதியிலுள்ள Berghain நைட்கிளப்பின் ‘செட் அப்’தான் ஸோபிதாவுக்கு பார்த்தவற்றுள் அதிகம் பிடித்துப்போக அதுக்குள் நுழைந்தார்கள். அங்கே Sex on the beach Cocktail குடித்து நடனமும் ஆடினார்கள். ஸோபிதாவுக்கு அன்று சிறப்பாகச் செய்யப்பட்டிருந்த சிகையலங்காரத்தில் அலைகள் புரளும் அவளின் கீரிக்கேசம் ஆட்டத்துக்கு துள்ளிக்குதித்து. அவன்மேலும் அவள் சாய்ந்தபோதெல்லாம் இவனுடலும் கிளர்ந்து ரோமாஞ்சனம் செய்தது. ஆட்டம் போதுமென்றானபோது இரவு குணம் ஏற்பாடு செய்திருந்ததைவிடுத்து அதைவிடச் சௌகரியங்களும் ஆடம்பரமுமான ESTREL ஹொட்டலுக்கு அவளை அழைத்துப்போனான்.

ஹொட்டலின் 15 வது தளத்திலிருந்த இவர்களின் அறையின் நிலாமாடத்திலிருந்து வெளியே பார்க்க நகரத்தின் விளக்குகளும் அதன் கட்டிடக்கலையழகும் உல்லாசப்படகுகள் ஊரும் Neukölln கால்வாயும் ரம்மியமாக இருக்கவே, சற்று நேரம் இருவரும் வெளியே வேடிக்கை பார்த்தனர், அதேதளத்தில் பிறிதொரு அறையிலிருந்து நிலாமாடத்துக்கு வந்த இளைய ஜெர்மன் இணையொன்று இவர்களை நல்ல வசதியான இந்தியஇணை ஒன்று தேன்நிலவுக்கு வந்திருப்பதாக நினைத்திருக்கலாம் இவர்களுக்கு ‘மாலை வணக்கம்’ தெரிவித்தனர். பின் தாமாகவே தாங்கள் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வரவிருப்பதாகவும் சொன்னார்கள். கன்னியை அருகில் வைத்துக் கண்டறியாதன காணத்தவிக்கும் தருணத்தில் ஜெர்மன் இணையுடன் உரையாடலை வளர்ப்பதில் அவனுக்கு எப்படி ஆர்வம் வரும்?

கால்வாயோடு குலவிவந்து நிலாமாடத்தில் முகங்களை வருடிய சீதளக்காற்றினாலும், ஸோபிதாவின் உரசல்கள், தழுவல்கள், உடல்மொழிகளாலும் கனன்றுபோயிருந்த ஜெகனால் மேலுந்தாங்க முடியவில்லை. ஸோபிதாவின் கேசத்துக்குள் விரல்களைப்புகுத்தி நிலவுமாடத்தின் அரைச்சுவரோடு பின்பக்கமாகச் சாய்த்து உதடுகளில் அழுந்த முத்தமிட்டான். நீடித்த முத்தத்தால் ஹோர்மோன்கள் குதித்தோடி விசைக்கத்தொடங்கவும் உள்ளூர மேலும் அதிர்ந்தான், அவனது சொக்கிப்போன கண்களில் தெறித்த தாபத்தையும் தவிப்பையும் புரிந்துகொண்டு தொடர்ந்த அவன் சாங்கியங்களுக்கு எல்லாம் ஸோபிதா இசைந்துழைத்தாள்.

அவனது புஜத்தில் புடைத்துத் திரண்டிருந்த தசைகளை பத்துவிரல்களையும் சேர்த்து அமுக்கிப்பார்த்துவிட்டு “ சார்…….. ஜிம்மிலேதான் வாழ்வீங்கபோலிருக்கு………..” என்றாள் கிண்டலாக. ‘இல்லீங்க…….. அதெல்லாம் பத்துவருஷமாய் பிட்ஷாவுக்கு மாப்பிசைந்ததால் விளைந்தவை’ என்பதைச் சொல்லிவிடுவானா அவன்? ஸோபிதாவின் சரியான சேர்ந்திசைவில் பால்வழிக்கு மேலும் சில உச்சங்களுக்குச் சென்றுமீள்கையில் அவனது வேகத்தையும் கனத்தையும் கட்டுடலையும் மெச்சியவள் அவன் காதுகளில் கிசுகிசுப்பாக “ You are rich…. my Sex master” என்றாள்.

தேன்நிலவுகழித்து காலையில் எழுந்து குளித்து உணவை முடித்தானதும் ஷொப்பிங் புறப்பட்டார்கள். ஸோபிதா அவன் கைகளைப்பிடித்து “ Please take me to the Best shopping Centre in the City ” என்றாள் உரிமையுடன்.

‘என்ன மிஞ்சிப்போனால் 2 ஜீன்ஸும், 4 டீ- ஷேர்ட்டும் எடுத்தாளில்லை’ என்று நினைத்தவன், கொஞ்சம் விலாசமாயிருக்கட்டுமென்று அவளை KaDeWe எனும் ஆடம்பர அங்காடிக்கு அழைத்துப்போனான்.

பிளாட்டினத்தில் நடுவில் நீலப்புஷ்பராகமும், சுற்றிவர முத்துக்களும், சிவப்பு ரூபிகளும், பதித்த ஒரு சிறிய நெக்லெஸைக் கழுத்தில் வைத்துப்பல கோணங்களில் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே “இதொண்ணும் ஞங்களுடெ நாட்டில கிட்டத்தில்ல” என்று பறையவும் அது ‘பாக்’ செய்யப்பட்டது. மேலும் Rich-master ரிடமிருந்து முனகலோ, செருமலோ வாராதிருக்கவும், அவளது கொள்வனவு நிரலின் நெகிழ்திறம் மெல்ல அதிகரித்தது. அவனை இலத்திரனியல் தளத்துக்கு அழைத்துப்போய் அங்கே மடிக்கணினி, ஐ-பாட், ஸ்மார்ட்போன்கள் கொள்ளப்பட்டன, உடுப்புகளின் தளத்தில் Zara வார்த்தகக்குறியுள்ள நவீனபாணியிலான விலையுயர்ந்த கவுண்கள், பாவாடைகள் & ஜம்பர்கள், அவள் அக்கா அண்ணா பிள்ளைகளுக்கு ஜீன்ஸ்கள், டீ-ஷேர்ட்டுக்கள், உள்ளாடைகள், லோங்டொப்ஸ், லெக்கின்ஸ், ஜம்ப்சூட், வண்சீ, வாசனாதிகளாக நீட்சிகண்டது. ஸோபிதாவை ‘எனக்கெனப் பிறந்தவ……….. ஜெட்டேறி வந்தவ இவதான்’ என்று பாடாதகுறையாக அணைத்துக்கொண்டு சுதியுடன் மிதந்து திரிகையில் பெர்லின் அவனுக்கு வேறொரு புதிய இந்திரன் நகரம்போலவும் வித்தியாசமாகவும் காட்சியளித்தது. புதியவகைச் ‘சங்கீதங்கள் அவனுக்குக் கேட்கத் தொடங்கின. விமானத்தில் கொண்டுபோய் Disneyland இல் இறக்கிவிடப்பட்ட ஒரு சிறுவனைப்போல் உள்ளூரக் குதூகலித்தான்,

ஏற்கெனவே அவளில் காலிய Naomi campbell cat deluxe perfume சுகந்தத்தில் சித்தம் கிறங்கிக்கொண்டிருந்த ஜெகனுக்கு ஏதோ தானே பெர்லினின் ‘பில் கேட்’ ஆகவும், காலங்காலமாக ஸோபிதாவுடனே இங்கே ராஜபோகமாக வாழ்வதைப்போலவும் அவளும் பிரிந்துவிட்டால் தான் சூனியமாகிவிடுவேன் போலுமிருந்தது. இப்படி ‘ஒரு அழகியுடன் தான் திரிவதை வேறும் நாலு பேர் கண்டால் பெர்லினில் இனித்தனக்குக் கொஞ்சம் சங்கையாக’ இருக்கும் என்றும் ஒரு கணம் நினைத்தான். ஒருவாறு கச்சடங்கள் (நுகர்வு) முடிவுக்குவரவும், ஸோபிதாவின் வலதுகை ஜெகனைப் பிரிந்துவிடாமல் அவனது தோள்களை வளைத்திருக்க பொதியுருளியை அவனே பணம் செலுத்தும் மாடத்தை நோக்கித்தள்ளிக் கொண்டுவந்தான். மாடத்தை அவர்கள் நெருங்கநெருங்க ஸோபிதாவின் அந்நியோன்யமும் குலாவலும் நெருக்கமும் பாசமும் எகிறிக்கொண்டிருந்தன. ஜெகனது காமத்தின் மீதியைச் சோரவிடாமல் நிறுத்திவைத்திருக்கும் சாகஸம் தெரிந்திருந்த ஸோபிதா அவனைப் பின்னாலிருந்து சீரான ஆவர்த்தனங்களில் மொத்தி மொத்திச்சூடாக்கினாள். ஜெகனுக்குள் இம் மெத்தல்கள் மெல்லமெல்ல ஹீலியத்தைச் செலுத்தவும் மேன்மேலும் உயரங்களில் மிதக்கலானான். முதுகில் சேர்ந்த மெத்தங்களின் லாகிரியில் பணத்தைச் செலுத்தப் பர்ஸிலிருந்து அவன் கடனட்டையை உருவியபோது ஸோபிதா ஒப்பாசாரத்துக்குக்கூட மறுக்கவில்லை…… ஒரு பறவையின் லாவகத்துடன் மறுபுறம் திரும்பிக்கொண்டு வேறுபொருட்களைத் தீவிரமாக ஆராய்ந்துகொண்டிருந்தாள்.

லேசான மாறுகண்ணும், கோணல் வாயுமுடைய சின்னநகைச்சுவை நடிகர் மட்டும் “நானொரு சாமானியன்ப்பா, எனக்கு ஸ்டார் ஹொட்டல் எதுவும் வேணாம்பா……. உங்க வீட்டுக்கட்டில் ஒன்றைக்காட்டிவிட்டாலே போதும்பா…. எம்பாட்டுக்குப் படுத்துப்பேம்பா…..” என்று சோஷலிசம் பேசிவிட்டுப் பதிலாக ’ஒருநாளும் பார்த்தில்லை……. எனக்கு ஒரு ‘வெள்ளைக்குட்டி’ மட்டும் பிடிச்சுத்தந்திடுங்க……….ஹிஹிஹி” என்றார்.

“இங்கத்தைய அரம்பையளுக்கு அச்சம் மடம் நாணம் ஒரு பருப்பும் கிடையாது ஜி” என்றதுக்கு “ அத்தெல்லாம் நான் கெடைக்கிற எடத்தில பார்த்துப்பேன்….லா” என்றுவிட்டு சினிமாவில் பண்ணுவதைப்போலவே கண்களைச் சுழற்றிமேலே சொருகியயபடி, மோவாயின் கீழாக எங்கேயோ இருந்த கெளுத்திமீன்வாயை ஒரு பக்கமாய் திறந்து மூடினார். தம்புரானின் அலுப்பும் அரிபட்டியுந் தாங்கமுடியாமல் பிறகு யாரோ Annebelle என்றொரு பாலியல்கூடத்துக்கு (Sex Bar) கூட்டிப்போய்த் தாகம் தணிவித்தனர்.

இதுக்குள்ள அழகன் என்றொரு அல்லக்கை, எவரிடமாவது ஒரு 100 இயூரோ கைமாற்று வாங்கினாற்கூடத் திருப்பிக்கொடுத்தறியாதவன், (ஆளை அறிய இச்சிறுகுறிப்பேபோதும்) ‘ஜெகன் ஸோபிதாவைத் தள்ளிக்கொண்டு கிளம்பிவிட்டான்’ என்பதை அறிந்து வெம்பி அவனுக்கு ஒட்டான இன்னும் இரண்டு அல்லக்கைகளைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் எங்கெல்லாம் திரிகிறார்கள் என்பதை வேவுபார்க்க Sherlock Holmes பாணியில் கையில் துப்பாக்கிகளுக்குப் பதிலாக பியர்புட்டிகளுடன் ஒருபகலும் இரவும் முழுவதும் பெர்லினின் பேருந்துகள், சுரங்கத்தொடரிகள், வேகத்தொடரிகள் அனைத்திலும் ஒன்றுமாறியொன்றாக ஏறியிறங்கி அலுத்து ஓய்ந்தனர்.

இரண்டுநாட்கள் தொடர்ந்த தேனிலவும் உல்லாசங்களும் முடிவுக்குவரவும் அடுத்தநாள் அதிகாலை கலைக்குழுவினரோடு ஸோபிதாவையும் அவள் வாங்கிச்சேர்த்தவற்றை இரண்டு பாரிய கனதியான பயணப்பொதிகளுள் அடைத்துப் பட்டிகளால் வரிந்துகட்டி விமானம் ஏற்றிவிட்டுவந்து உடல் ஓய்ச்சல் தீரக் குளித்துக் கையையும் காலையும் எறிந்து ஜெகன் படுத்திருந்தான்.

அருகிலிருந்த அடுத்த கட்டிலில் போடத்தொடங்கிவிட்ட தன் இளந்தொப்பையைத் தடவியபடி மாதேஷ் படுத்திருக்கிறார். அவரது வாழ்க்கையும் நோக்கம் எதுவுமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது. என்ன அருந்ததியைக் கட்டியிருந்தாராயின் அவள் பெற்றிருக்கக்கூடிய நாலும் நாலுதிசையில் பிடித்து இழுத்துக்கொண்டிருக்க ஒரு தினப்படி அஜெந்தாவுடன் ஓடிக்கொண்டிருந்திருப்பார். மாதேஷ் சுல்தானின் அந்தப்புரத்தில் ஸ்திரீவாசமென்பது அறவே கிடையாது, அவரும் ஷகி அருந்ததியை என்றாவது ஈரப்படுத்தியதோ, அவளின் ஒரு வாய்முத்தத்தையோ சுகித்ததில்லை, பிரானுக்குக் அவளிடம் கிடைத்ததெல்லாம் இன்றைக்கும் வலிக்கும் அந்தக் ‘கொட்டு’த்தான், நித்திரைவராமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தவருக்கு இசைமாருதத்தோட ஜெகனின் போக்குகள், உழட்டல்கள், ஊடாட்டங்கள் கொஞ்சம் விசித்திரமாக இருப்பது உறுத்தவும் கேட்டார்:

“உள்ளதைச்சொல்றா………, ஜெகன் நடிகைகளில்ல அப்பிடி என்னடா விஷேசம், இரண்டுநாளாய் ஆளையே காணேல்ல………. எங்கே எங்கே எல்லாம் சுத்தின்னீங்கள்………….”

“ பெரிசாய் அப்படியெல்லாம் சுத்தேல்ல அங்கிள், ஸோபிதா பெர்லின் நைட்லைஃபைக் கொஞ்சம் பார்க்க ஆசைப்பட்டா…… அதுதான் Berghain க்குப்போனம், அவவும் நல்ல டான்ஸர்தானே………. சில ஸ்டெப்புகள் காட்டித்தந்தா……… சேர்ந்து கொஞ்சம் ஆடின்னாங்கள்.”

“Berghainல ஆட்டங்கள் முடிய………….. அப்பக்கூத்தெங்கே ESTREL ஹொட்டல்லயோ…….? ”

ஒரு கணம் உள்ளூரத்திடுக்கிட்டான் ஜெகன். ‘ESTREL’ ஹொட்டல்லயோ’ என்று சுட்டிப்பாய் கேட்குது கிழவன், கதை எப்பிடியோ கசிஞ்சிட்டுதுபோல. புரண்டு ஓரவாக்கில் படுத்துக்கொண்டு வழியத்தொடங்கினான்.

“சும்மா போங்கோ அங்கிள்…….. அப்பிடி ஒன்டுமில்லை, அதொரு தங்கமான பெடிச்சி, நடிக்க வந்தாப்போல எல்லாரும் மிச்சம் வசதியாய்த்தான் இருப்பினம் என்றில்லைத்தானே……….. ஏற்றங்கள் இறக்கங்களும் இருக்குந்தானே…… ஏதோ என்னாலியன்ற சகாயத்தைப் பண்ணின்னன்…… அவ்ளோதான்.”

“ உண்டு…. உண்டு…. உண்டு…….. தங்கமாய் வாங்கின பெடிச்சி தங்கமாய்த்தான் இருப்பா………………. உன்னைச் சென்னைக்கும் வரச்சொல்லிக் கேட்டிருப்பாவே…………. விசிட்டிங்கார்ட்டெல்லாம் தந்தவவோ. ”

திடுப்பென அவனுக்குள் ஒரு ‘ஜோதிப்பிரகாசம்’ தோன்றி விஸ்வரூபமானது. ஸோபிதா அவனைச் சென்னைக்கு வரச்சொல்லிமாத்திரமல்ல……….…….. அவனைப்பற்றியோ, அவன் குடும்பத்தைப்பற்றியோ இருந்தவரை ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. வார்த்த பாலைக் குடித்துவிட்டுத் திரும்பியேபாராது இருளுள் கலந்துவிடும் ஒரு பூனையைப்போல் மறைந்தும் விட்டாள்.

இப்போதெல்லாம் கடுப்பும் , ஆற்றாமையும் சேர ஜெகன் ஒருவகைத் தத்தளிப்பில் தவிக்கிறான். வழக்கத்தைவிடவும் கூடுதலாகக் கீறுகிறான், சோஷலிசம், அல்றூயிஸம், ரேஷனலிசம், ஃபெமினிஷம் என்றெல்லாம் பல புதிய விஷயங்கள்பற்றிக் கதைக்கிறான். இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் சீதனம் கோரும் தமிழ்ப்பூஷுவாக்களின் அடாவடிப்புத்தியைத் தூஷிக்கிறான்.

அவனாகத் தன் திட்டத்தைமாற்றி ஒரு மகிழுந்தையோ, வீட்டுத்தளபாடங்களையோ வாங்கியிருந்தாலாவது பரவாயில்லை…………. தங்கையின் சீதனத்துக்காக சேர்த்துவைத்திருந்ததில் 5,000 இயூரோவையும் ஒரு நங்கைவந்து ஒருநாளில் ‘பூரண-காலி’பண்ணியதை நினைத்துப்பார்க்க ஜெகனுக்கு நிகழ்ந்தேறியவை ஒரு கொடுங்கனவைப்போல வலிக்கின்றன. அன்றுமாலை லேசான கீறலின் சுதியோடு இருந்து யோசித்ததில் ‘குணம் அண்ணையிட்டைக் கொஞ்சம் காசு புரட்டித்தரச்சொல்லிக்’ கேட்டுப்பார்த்தால் என்னவென்று தோன்றியது. போன கிழமைதான் அவருக்கே ‘அண்ணை ஏதும் ஃபினான்ஸியல் சப்போர்ட்டென்றால் என்னால ஏலாது…….. என்று வாய்கூசாமல் சொன்னவன், என்றாலும் தங்கையை நினைத்து அதைத்துடைச்சுப்போட்டுப் போன்பண்ணிக்கேட்டான். “ ஐயோடா அப்பா…….. இசைமாருதத்தோட இரண்டு பாங்கிலும் எடுக்கக்கூடிய மாக்ஸிமம் கடனை எடுத்துப்போட்டிருக்கிறன்…….. வேணுமெண்டால் உனக்காக ஒருக்கா நாகஞானத்திட்டைத் தட்டிப்பார்க்கிறன்” என்றுவிட்டுத் துண்டித்தவன் மறுநாள் இரவு மறக்காமல் திருப்பிப் போன் பண்ணினான்.

“நாகஞானம் இப்போ இரண்டு வட்டிக்கு அதுவும் பவுணுக்குத்தானாம் கொடுக்கிறது, பவுணுக்கும் 200 இயூரோவுக்கு மேல இல்லையாம்” என்றான்.

‘ஐயாயிரம் இயூரோவுக்கும் அப்ப இருபத்தைந்து பவுணை வை’ என்கிறான். இருபத்தைந்து பவுணென்றால் அவனே ஒரு கல்யாணம் கட்டினால்த்தான் உண்டு. அதெல்லாம் ஒரு சோஷலிசவாதி / அல்றூயிஸ்ட் பண்ணக்கூடிய காரியங்களா……………தூ…!

இப்போ மாதேஷ் அங்கிளைத்தான் ஜெகன் தனக்கும் ஒரு ‘பேப்பர்-டூர்’ எடுத்துத் தரச்சொல்லிக் கேட்கிறான். என்ன ஐயாயிரமோ பத்தாயிரமோ எப்படியும் இன்னும் இரண்டுமூன்று ஆண்டுகள் சென்றாவது பொறுப்பாய் உழைத்துக் கொடுத்துத் தங்கையைக் கரைசேர்த்துவிட மாட்டானா மறவன்.

– காலம் இதழ்-51. கனடா. ஜனவரி 2018.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *