வீராப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2023
பார்வையிட்டோர்: 751 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூடுபனி நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. 

கோழித் தூக்கத்திலிருக்கின்ற நகரம் விடிவை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது. 

பனிக்காற்று இறுக்கமாக இருக்கின்றது. 

மூச்சு விடுவதற்கு கஷ்டம். 

மங்கலாகத் தெரிகின்றன மாடிக்கட்டிடங்கள், அவை நகரத்தின் நாற்புறமும் மௌனத் தியானத்தில் நிற்கின்றன. ஒளியற்றிருக்கின்ற அந்தக் கட்டிடங்கள் பென்னம் பெரிய கரும் பூதங்கள் போலிருக்கின்றன. 

தார்மீக அரசின் சின்னங்களான உல்லாசப் பயண ஹோட்டல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கின்றன. நாம் வானளாவ உயர்ந்தோங்கி நிற்கின்றோம் என்ற நினைப்பில் அகம்பாவமும் கர்வமும் கொண்டுவிட்டவை போலக் காட்சியளிக்கின்றன அந்த ஹோட்டல்கள். 

நகரத்திற்குள் பிரவேசிக்கும் பொழுது பென்னம் பெரிய முடா வயிற்றுக்குள் நுழைவது மாதிரி இருக்கின்றது. அந்த வயிறு பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் ஜீவ சக்தியை காலாதிகாலமாக உறிஞ்சி ஏப்பமிட்டுக் கொண்டிருக்கின்றது. 

நகரத்தின் வடகோடியில் துறைமுகம். துறைமுகத்தை அண்டினாற் போல புகையிரத நிலையம். அது மரணச் சடங்கு முடிந்தபின் வெறிச்சோடிக் கிடக்கும் இழவு வீட்டைப்போல் மயான அமைதியுடனிருக்கின்றது. 

புகையிரத நிலைய அதிகாரி தூங்கி விழுந்து கொண்டிருக்கின்றார். 

ரோந்து சுற்றிக் கொண்டிருக்கின்ற பொலீஸ்காரனின் பூட்ஸ் ஒலி அமைதி நிலவுகின்ற பின்னிரவில் அச்சமூட்டுவதாக இருக்கின்றது. 

“இந்தக் கடுங்குளிர் இரவிலை நல்லாய் குடிச்சுப்போட்டு வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, குசாலாய் தூங்கிக் கொண்டிருப்பான் எங்கட மேலதிகாரி. எங்களைப் போலை சாதாரண பொலீஸ்காரர்தான் அரைகுறை வயித்தோடை நித்திரையுமில்லாமல் இரவிரவாய் நாய் மாதிரி ரோந்து சுத்தித் திரியிறம். அப்படியிருந்தும், எந்த நேரமும் எரிஞ்சு விழுந்து, எங்களைத் திட்டித் துலையிறான். லீவு கேட்டாலும் தாறா னில்லை. என்ன கடைகெட்ட நாய்ச் சீவியம்.’ 

வேதனையுடன் தன்னுள் தானே மறுகிக் கொள்கின்றான் அந்தப் பொலிஸ்காரன். 

தனது மன உளைச்சலையும் விரக்தியையும் அடி, உதைகள் கொடுத்து வெளிப்படுத்துவதற்கு ஒரு மனிதன் தானும் அகப்படவில்லையே என்ற எரிச்சலில் தூங்கிக் கொண்டிருக்கின்ற தெருநாய் ஒன்றை தனது பூட்ஸ் காலால் ஓங்கி உதைக்கின்றான் பொலிஸ்காரன். 

மரண ஓலம் எழுப்பிக் கொண்டு ஓடுகின்றது தெரு நாய்.

புகையிரத அதிகாரி திடுக்குற்று விழிக்கின்றார். அவரது முகத்தில் பீதி. இதைக்கண்ட பொலீஸ்காரனுக்கு ஒருவித திருப்தி. அவன் தனக்குள் சிரிக்கின்றான். 

பொலிஸ்காரனுடைய பூட்ஸ் ஒலி அழிந்து செல்கின்றது.

புகையிரத நிலையத்திலிருந்து கல்லெறி தூரத்தில் பஸ் நிலையம். 

ஜன சமுத்திரம் அலைமோதிக் கொண்டிருக்கின்ற பஸ் நிலையம். இப்பொழுது ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி மரண நிழல் படர்ந்திருப்பது போலத் தோன்றுகிறது. 

பஸ் நிலையத்தின் மேற்குப் புறத்தில் நாற்சந்தி, சந்தியின் வடமேற்கு மூலையில் சடை விரித்து நிற்கின்றது ஒரு பிரமாண்டமான அரசமரம். 

மின்னொளியில் அரச இலைகள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன. 

அரச மரத்தின் கீழ் ஒரு புத்தர் சிலை. 

சாந்தமே உருவான புத்தர் பெருமான் கண்மூடி மௌனத் தியானத்திலிருக்கின்றார். 

கையில் கொக்கோக்கோலாப் போத்தல் ஒன்றைப் பிடித்துக் கொண்டு அரை நிர்வாண கோலத்தில் நிற்கின்றாள் ஒரு இள மங்கை. 

தெரு ஓரமாக நாட்டப்பட்டிருக்கின்ற பிரமாண்டமான கொக்கோக்கோலா விளம்பரப்பலகையிலுள்ள அந்த சிக்காக்கோ பாணி மங்கை பஸ் நிலையத்திற்கு வந்து போகின்ற மனிதர்களை கவரக்கூடிய வகையில் வர்ணக் கலவைகளில் தீட்டப்பட்டிருக்கின்றாள். 

இப்போ இங்கு கொக்கோக்கோலா யுகம்தானே?

நேரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

விடிவெள்ளி பூக்கின்றது. 

வானத்தின் அடிவயிறு குங்குமமாகின்றது. 

புதுயுக மலர்ச்சியின் சின்னமா அந்த இரத்தச் சிவப்பு?

நிலம் வெளிறிக் கொண்டிருக்கின்றது. 

மின்னொளி மங்கிக் களையிழக்கின்றது. உல்லாசப் பயண ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு மனித மிருகம் ஒன்றிற்கு தனது உடலை விற்று விட்டு சோர்ந்து போய் வெளியே வருகின்றாள் ஒரு பெண். 

ஹோட்டல் வாசலில் நிற்கின்ற ‘டாக்ஸி’ ஒன்று அவளைச் சுமந்து கொண்டு பஸ்நிலையத்திற்கு வருகின்றது. 

‘டாக்ஸி’க்காரனுக்குக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டு தனது வீட்டிற்குச் செல்வதற்கு பஸ்ஸிற்கு வந்து நிற்கின்றாள் அந்தப் பெண். 

செயற்கை அழகு அரைகுறையாகக் கலைந்து, கடந்த ஐந்தாண்டு காலத்துக்கிடையில் அவளது இளமையில் ஏற்பட்ட முதுமை வெளியே எட்டிப் பார்க்கின்றது. 

இயற்கை அன்னை சிரிக்கின்றாள். 

நகரம் விழிக்கின்றது. மக்கள் அலை பெருக்கெடுக் கின்றது. மனிதனின் மகோன்னதத் தன்மை பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கின்றது. 

செத்துக் கிடந்த நகரத்தில் மீண்டும் உயிர்த் துடிப்பு.

நகரத்தின் நாலா புறங்களிலுமிருந்து வருகின்ற தெருக் களில் மக்கள் ஜீவநதிகளாய்ப் பெருகி வந்து கொண்டிருக் கின்றார்கள். 

மக்கள் மத்தியில் ஒருவித வேகம். அவசரம். அவர்கள் முகங்களில் எதுவித சலனமும் தென்படவில்லை. ஏகபோக முதலாளித்துவ சுரண்டல் பெருச்சாளிகளின் பேராசை வெறிக்கு, தாங்கள் தீனியாகின்றோம் என்ற பிரக்ஞை இல்லை அந்த உழைக்கும் மக்களுக்கு. அவர்களுடைய முகங்களில் ஒருவித ஏக்கம். 

கண்ணுக்குப் புலப்படாத, புரிந்து கொள்ள முடியாத ஒரு தீய சக்தி அந்த உழைப்பாளி மக்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஊட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகின்றது. 

புகையிரதங்கள், பஸ்கள், மோட்டார்கள் எல்லாம் இரைந்து கொண்டு போவதும் வருவதுமாயிருக்கின்றன. அவற்றில் ஒருவித வேகம். இழந்து விட்ட ஏதோ ஒன்றைப் பிடிப்பதற்குத் துடிப்பது போன்ற அவசரம். 

பஸ்ஸில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கின்றனர். 

நீண்ட தூர பிரயாணத்திற்கான பஸ்கள் நிரையிட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவைகளில் பிரயாணத்திற்கான முஸ்தீப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

கதிர்காமத்திற்குப் புறப்படுவதற்கு தயார் நிலையில் நிற்கின்றது ஒரு பஸ். 

பிரயாணிகள் வரிசைக்கிரமமாக நின்று பஸ் கொண்டக் டரிடமிருந்து தமக்குரிய பயணச் சீட்டுக்களைப் பெற்ற பின் அந்த பஸ்ஸில் ஏறி அமர்கின்றனர். இருந்துவிட்ட ஒவ்வொரு வருக்கும் இருப்பதற்கு ஆசனம் கிடைத்து விட்டதில் நிம்மதி. ஒரு வித திருப்தி. 

பிந்தி வந்தவர்கள் அதிருப்தியுடன் நின்று கொண்டிருக்கின்றார்கள். 

பஸ் சாரதி அமைதியாக அமர்ந்து கொண்டு நடப்ப வற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருக்கின்றான். 

அவனுக்கு வாட்டசாட்டமான உடற்கட்டு, அனுபவ முத்திரை அவனது முகத்தில் தென்படுகின்றது. 

பஸ் சாரதியின் ஆசனத்திற்குப் பின்னால் பிரயாணி களுக்கான மூன்று ஆசனங்கள் வெறுமையாக இருக்கின்றன. அவை ஏற்கனவே யாருக்காகவோ ‘புக்’ பண்ணப்பட்டிருக்க வேண்டும். அந்தக் காலி ஆசனங்களைப் பார்க்கின்ற பொழுது நின்று கொண்டிருப்பவர்களது மனங்களில் புழுக்கம்.

பஸ் முட்டி வழிகின்றது. 

மூன்று ஆசனங்களும் வெறுமையாகத்தான் இருக்கின்றன. 

பஸ் எப்போ புறப்படப் போகின்றது’ என்ற தவிப்புடன் பிரயாணிகள் காத்திருக்கின்றார்கள். 

மூவர் வந்து பஸ்ஸில் ஏறுகின்றார்கள். அவர்களுடைய பார்வையில் ஒருவித மிடுக்கு. தோற்றத்தில் அவர்களிடையே சற்று மாறுபாடு காணப்படுகின்றது. 

தலைக்கு மேல் தனக்கு முன்புறமாக உள்ள கண்ணாடி யில் அவர்களைப் பார்க்கின்றான் சாரதி. 

‘ஓஹோ! அவர்களா இவர்கள்? 

இம்மூவரைப் பற்றியும் ஏற்கனவே தனது அலுவலகத் திலிருந்து அறிந்திருக்கின்றான் வீரக்கொடி. 

கண்ணாடிக்குள் அவர்களையே பார்த்துக்கொண்டிருக்கின்றான். 

அந்த மும்மூர்த்திகள் பிரயாணிகளை அலட்சியமாக நோட்டம் விட்டுவிட்டு தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்ற ஆசனங்களில் அனாயசமாக அமர்கின்றனர். அவர்களுடைய முகங்களில் கர்வம், அதிகாரத் திமிர். 

இதை அவதானித்த வீரக்கொடியின் மனதில் ஒருவித வெறுப்பு. 

பஸ்ஸில் ஏறிய மூன்று பிரமுகர்களதும் பிரயாணப் பைகளை இருகைகளையும் அடக்கொடுக்கத்துடன் நீட்டி ஒவ்வொன்றாக வாங்கி சாரதியின் ஆசனத்திற்கு இடப்பக்கமாக உள்ள பெரிய பெட்டியின் மேல் வைக்கின்றான் கொண்டக்டர். 

இதைக் கண்ணுற்ற வீரக்கொடியின் உள்ளத்தில் குமுறல். 

பஸ் பிரயாணிகளுக்கு ஆச்சரியம். 

யார் இவர்கள்? இவர்களுக்கு ஏன் இந்த ராஜோபசாரம்?

பஸ் பிரயாணிகளது உள்ளங்களில் கேள்விக்குறி?

“ஸ்டீபன்! பற்றிப் பெட்டிக்கு மேலை சாமான்கள் வைக்கக் கூடாதென்று உனக்குத் தெரியாதோ? இதுகளை எடுத்து அந்த மூலையில் போடு”. 

கடுகடுப்புடன் கூறுகின்றான் வீரக்கொடி. 

கொண்டக்டர் அசடுவழிய செய்வதறியாது திகைத்து நிற்கின்றான். 

மும்மூர்த்திகள் இந்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு திகைப்பு, எரிச்சல். 

“உங்களுக்கு இன்னும் அடிமைப்புத்தி விட்டுப் போகே ல்லை. உங்களைப் போன்ற பச்சோந்தியாலைதான் எங்கட மானம் போகுது. இந்தப் பைகளை மேல போடன். ஏன் நட்ட கட்டை மாதிரி நிற்கிறாய்?” 

அதட்டுகின்றான் வீரக்கொடி. 

மும்மூர்த்திகளுக்கு அவமானம். கோபத்தில் வீரக் கொடியை எரித்து விடுவது போல பார்க்கின்றனர். 

“ஸ்டீபன்,ஏன் மரக்கட்டை போலை நிற்கிறாய்? நான் சொன்னது விளங்கேல்லியோ?” 

மனம் பேதலித்த ஸ்டீபன் அந்த பிரயாணப் பைகளை எடுத்து ஒரு மூலையில் வைக்கின்றான். 

“இப்பிடிச் சேவகஞ் செய்யாதையுங்கோ எண்டு நாங்கள் உங்களுக்கு எத்தனையோ தரம் சொன்னம். நீங்கள் திருந் தேல்லை. உங்களை இனி வேறை வழியிலைதான் திருத்த வேணும்.” 

கூறிவிட்டு வீரக்கொடி பிரயாணிகள் பக்கம் திரும்புகின்றான். 

பிரயாணிகளின் முகங்களில் திருப்தி தென்படுகின்றது. தங்களுக்கும் சேர்த்துத்தான் இந்த ‘மங்களப்பாட்டு’ நடக்கிறது என்று மும்மூர்த்திகளுக்கு தெரிகின்றது. ஆனால் இந்த விடயத்தில் அவர்களால் எப்படித் தலையிட முடியும்? “இந்தத் திமிர் பிடித்தவனுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேணும்”. 

மும்மூர்த்திகளின் தலைவன் தனக்குள் தனக்குள் கறுவிக் கொள்கின்றான். 

“இப்ப எங்கடை கையிலை ஆயுதமில்லை. ஆயுதமிருந் திருந்தால் இந்தப் பிச்சைக்காரப் பயலுகளை இதிலை த்தாணும் பே தோப்புக்கரணம் போட வைச்சிருப்பம். என்ன செய்யிறது இப்பிடியாப் போச்சே.” 

இயலாத் தன்மையை எண்ணி அவன் மனம் குமை கின்றான். 

தனது மனத்திலுள்ள புழுக்கத்தைத் தணிப்பதற்காக சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து புகையை நன்றாக உள்ளிழுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றான் அவன். 

‘புகை பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று அவனது தலைக்கு மேல் பஸ்ஸின் உட்புறப் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கின்றது. 

சிகரெட் பிடிப்பவன் அதைப் பொருட்படுத்தாமல் புகை பிடித்துக் கொண்டிருக்கின்றான். 

வீரக்கொடி அவனை முறைத்துப் பார்க்கின்றான். 

அவன் சாரதியின் முறைப்பைப் பார்த்தும் பாராதவனாகப் பாவனை செய்து கொண்டு வேறு திசையை பார்த்துக் கொண்டிருக்கின்றான். 

தன்னுணர்வை இழக்கின்றான் சாரதி. அவனது உள்ளத் தில் கோபத் தீ பொங்கிச் சீறுகின்றது. 

சிகரெட் பிடிப்பவனுடைய மூஞ்சியில் ஓங்கிக் குத்த வேண்டும் போலிருக்கின்றது அவனுக்கு. 

கணப்பொழுதில் அவனுக்கு சுய உணர்வு வருகின்றது. பெரும் பிரயத்தனப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்துகின்றான் வீரக்கொடி. 

அவனது உள்ளத்தில் பொங்கியெழுந்த கோபத்தீ அவனுக்குள்ளேயே செத்து மடிகின்றது. 

“இப்படிப்பட்ட அதிகாரத் திமிர்பிடித்தவர்களுக்கு கூடிய கெதியிலை பாடம் படிப்பிக்கத்தானே போறம்.” 

தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொள்கின்றான். சிகரெட் புகைப்பவனின் செயலைப் பார்த்த பிரயாணி களில் சிலர் முகங்களைச் சுழிக்கின்றனர். 

புகை பிடிப்பவன் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரத்தில் அவன் புகையை நன்றாக உறிஞ்சி உள்ளிழுத்து விட்டு சிகரெட் கட்டையை வெளியே வீசி எறிகின்றான். அவன் ஆபாசப் படங்கள் நிறைந்த அமெரிக்கன் “பிளே போய்” சஞ்சிகை ஒன்றை எடுத்து பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கின்றான். 

“அசிங்கம் பிடித்த நாய்கள்” 

கூறிக்கொண்டு வெளியே காறித்துப்புகின்றான் வீரக்கொடி. சஞ்சிகையின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கின்றவன் மாறசிங்ஹா, அவன் கொழும்பிலுள்ள ஒரு பெரும்புள்ளியின் ஏகபுத்திரன். அவன் பிரபல்யமான ஒரு பெரும் கல்லூரியில் படித்தவன். தினமும் அவன் கல்லூரிக்கு மோட்டார் வாகனத்தில் தான் போய் வருவான். அக்கல்லூரியின் கிரிக்கட் குழுவின் தலைவனாக இருந்தவன். 

மாரசிங்ஹா பிஞ்சிலே பழுத்தவன். அவனை மாறயா (இயமன்) என்றுதான் கல்லூரி மாணவர்கள் அழைப்பார்கள். அ ஆரம்பத்தில் அவன் இதை விரும்பவில்லை. காலப்போக்கில் அவனை மாறயா’ என்று அழைக்கும் பொழுது அவன் பெருமிதம் கொள்வான். 

மாறசிங்ஹாவும் அவனது சகாக்களும் செய்யும் அட்ட காசங்களுக்கு குறைவேயில்லை. அவர்களைத் தட்டிக் கேட்க யாருமே துணியமாட்டார்கள். நாட்டின் சட்டங்களைக்கூட அவர்கள் துச்சமாக மதித்தனர். 

ஒரு தடவை தனக்கு எதிராக காதலில் போட்டியாக இருந்த சக மாணவனை மோட்டார் வாகனத்தினால் மோதிக் கொலை செய்திருக்கின்றான். இக்கொலை மர்மமான முறையில் மூடி மறைக்கப்பட்டுவிட்டது. அவனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முற்படும் பொலிஸ் அதிகாரிகள் கூட உடனடியாகத் தூர இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்கள். அவ்வளவு செல்வாக்கு அவன் தந்தைக்கு. 

படிப்பை அரைகுறையில் நிறுத்திவிட்டு தனது சகாக் களுடன் கட்டாக்காலியாகத் திரிந்தான் அவன். அவனுக்குப் போதிய பணமிருக்கின்றது. மோட்டார் வாகனமிருக்கின்றது. நிறைய சகாக்கள் இருக்கின்றார்கள். கேளிக்கைகளுக்கு இரவு ‘கிளப்கள்’ இருக்கின்றன. 

குடி, சூதாட்டம், ஆட்கடத்தலுக்கு நேரகாலமில்லை. கொலை அவர்களுக்குக் கைவந்த கலை. மோட்டார் வாகனங்களை மாற்றுவது மாதிரி வேண்டிய நேரத்தில் தனது காதலிகளையும் மாற்றிக் கொள்வான். 

மாறசிங்ஹாவின் தந்தை பிரபல்யமான கொந்தராத்துக் காரர். புதுப் பணக்காரர். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குள் மிதந்தவர் அவர். 

தன் மகன் போற போக்கிலேயே விடவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. தொழில் பார்க்க வேண்டிய அவசியம் மாறசிங்ஹாவிற்கு இல்லை. 

அமெரிக்கன். ‘கௌபோய்’ சண்டைப் படங்களில் வருகின்ற கதாநாயகர்களைப் போல தானும் வீரசாகசங்கள் புரிய வேண்டுமென்ற ஆசையினால்தான் அவன் ராணுவத்தில் சேர்ந்தான். சிறிது காலசேவையின் பின் ராணுவ பயிற்சி பெறுவதற்கு தான் அமெரிக்காவிற்குச் செல்ல முடியும் என்ற உறுதியான நம்பிக்கை அவனுக்குண்டு. 

மாறசிங்ஹாவுடன் பிரயாணம் செய்ய வந்திருக்கின்ற அவனது இந்த இரண்டு சகாக்களும் அந்தஸ்திலும் உணர் விலும் அவனைப் போன்றவர்களே. 

பஸ் புறப்படுவதற்கு முன் கொண்டக்டர் தனக்குப் பணிக்கப்பட்டுள்ள முக்கிய கடமையைச் செய்ய ஆரம்பிக்கின்றான். 

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பஸ்ஸிலுள்ள பிரயாணிகளின் மூட்டை முடிச்சுக்கள் அனைத்தையும் செக் பண்ண ஆரம்பிக்கின்றான் கொண்டக்டர். 

மும்மூர்த்திகளது பிரயாணப் பைகள் ‘செக்’ பண்ணப் படவில்லை. 

ஏன்? 

என்ன அவர்கள் சாமானியமானவர்களா? 

வேட்டைக்குப் போகு முன்னர் சிலர் தெய்வ வழிபாடு செய்வது வழக்கம். 

மாறசிங்ஹாவும் அவனது சகாக்களும் வட பகுதிக்கு ராணுவ கடமையாற்று செல்லவிருக்கின்றார்கள். 

வடபகுதிக்கு சேவையாற்ற செல்கின்ற ராணுவத்தினரில் பலர் தாங்கள் உயிருடன் தங்கள் வீடு திரும்புவதற்கு அனுக்கிரகம் புரிய வேண்டும் என்று கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்தி வைத்து வழிபாடு செய்து செல்வது வழக்கம். 

மாறசிங்ஹாவும் சகாக்களும் நேர்த்தி வைக்கத்தான் செல்கின்றார்கள். 

பஸ் கொண்டக்டர் ஒவ்வொரு பிரயாணியினதும் மூட்டை முடிச்சுக்களை மிக அவதானமாக ஆறுதலாக ‘செக்’ பண்ணிக் கொண்டிருக்கின்றான். 

பஸ் எப்போ புறப்படும் என்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்ற பிராயாணிகளுக்கு கொண்டக்டரின் இச்செயல் எரிச்சலையூட்டுகின்றது. சில பிரயாணிகள் தங்களு க்குள் முணு முணுத்துக் கொள்கின்றனர். 

“இது யாருடையது?- 

பஸ் சாரதியின் பின்னால் கிடக்கின்ற ஒரு சிறிய காட்போட் பெட்டியைச் சுட்டிக் காட்டிக் கேட்கின்றான் கொண்டக்டர். 

பதிலில்லை. 

“யாருடையது இந்தப் பெட்டி? 

மீண்டும் கத்துகின்றான். 

அதற்கும் பதிலில்லை. 

“இந்தக் காட்போட் பெட்டி யாருடையது? 

உரக்கக் கத்துகின்றான். 

ஒரு பதிலுமில்லை. 

“ஏன் பேசாமலிருக்கிறியள்? ஆருடையதப்பா இந்தப் பெட்டி?” 

பதிலேயில்லை. 

கொண்டக்டருடைய முகத்தில் மாற்றம். 

திரும்பமும் உரத்துக் கத்துகின்றான். 

அவனது குரலில் பதட்டம். 

ஒரே மெளனம் பிராயாணிகளிடையே 

“வெடிகுண்டு!” 

அலறியபடியே பஸ்ஸிலிருந்து வெளியே வேகமாய்ப் பாய்கின்றான் கொண்டக்டர். 

அவனது அவலக் குரலைக் கேட்ட பிரயாணிகள் பதை பதைத்து முண்டியடித்துக்கொண்டு வெளியே வருவதற்கு முட்டி மோதிப் போராடிக் கொண்டிருக்கின்றனர். 

தங்களது மூட்டை முடிச்சுக்களை எடுத்துக்கொண்டு வெளியேடுறுவதற்கு சிலர் முயல்கின்றனர். 

ஒன்றுமே வேண்டாம் உயிர் தப்பினால் போதும் என்று வெறுங்கையுடன் அவசர அவசரமாக வெளியே வருகின்றனர் சிலர். 

சிலர் பஸ்ஸின் யன்னலூடாக வெளியே பாய்கின்றனர்.

“ஏன் இடிபடுகிறியள் ? ஒவ்வொருதராய் இறங்குங்கோவன்”. 

சாரதி வீரக்கொடி பிராயாணிகளை அமைதிப்படுத்த முயல்கின்றான். 

அவனுடைய முயற்சியில் பயனில்லை. ஒரே அமர்க்களம் கூக்குரல்கள். 

“பஸ்ஸிலை வெடிகுண்டு!” 

உரக்கக் கத்திக்கொண்டே மக்கள் எல்லாத் திசை களிலும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். 

பெரும் பிரயத்தனத்துடன் பிராயாணிகள் பஸ்ஸிலிருந்து இறங்கிவிட்டனர். 

பிரயாணிகள் அனைவரும் இறங்கிய பின் பஸ் சாரதி வீரக்கொடி எதுவித பதட்டமுமின்றி அமைதியாக வெளியே வருகின்றான். 

பஸ் நிலையத்தில் பதட்டம், பெரும் பீதி. 

“வெடிகுண்டு!” 

மக்கள் அலறியடித்துக் கொண்டு பலதிக்குகளிலும் வேகமாக ஓடிக்கொண்டிடுருக்கின்றனர். 

மரணதேவதை அவர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் செல்வது போலிருக்கின்றது. 

“வெடிகுண்டு! வெடிகுண்டு!”‘ 

நகரத்தின் ஆத்மா மரண ஓலம் எழுப்பிக் கொண்டிருக்கின்றது. 

அபாய ஒலி எழுப்பிக் கொண்டு தீயணைக்கும். படையினரின் வாகனங்கள் உறுமிக் கொண்டு அசுரவேகத்தில் வந்து கொண்டிருக்கின்றன. 

ராணுவ வாகனங்கள் உறுமியபடியே வருகின்றன. 

வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்களுடன் பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரைந்து வருகின்றனர். 

மரணாவஸ்தையில் நகரம் திணறிக் கொண்டிருக்க, மக்கள் வெள்ளம் அச்சத்தில் நகரத்தை விட்டு வெளியேறிப் பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கிறது. 

பஸ்நிலையத்திலுள்ள பஸ்கள் எல்லாம் அப்புறப் படுத்தப்பட்டுவிட்டன. 

வேடிக்கை பார்ப்பதற்கும் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போவதற்குமாக வரும் கும்பலை பொலிஸார் விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். 

வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் பஸ்வண்டி, நிலை யத்தில் முற்றும் துறந்த முனிவனைப் போல தன்னந்தனியனாய் நிற்கின்றது. 

வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் இருவர் மெது மெதுவாய் மிக அவதானமாக பஸ்ஸை நெருங்குகின்றனர். 

பஸ்ஸின் பின்புற ஆசனத்தின் இடது புற மூலையில் ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருக்கிறான். 

வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்பவரில் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பவனைக் கண்டுவிட்டார். 

அவருக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. அந்த மனிதன் தன்னை மறந்து குறட்டை ஒலி எழுப்பியபடியே தூங்கிக் கொண்டிருக்கின்றான். 

சிறிது நேரத் தயக்கத்தின் பின் அந்த வெடிகுண்டு நிபுணர் தூங்கிக் கொண்டிருக்கின்ற அந்த மனிதனைப் பஸ் யன்னலூடாக ஜாக்கிரதையாக எழுப்புகின்றார். 

அவன் அசையவில்லை. 

இரவு அருந்திய மது வெறியின் மூடாப்பில் அவன் தூங்கிக் கொண்டிருக்கின்றான். 

நிபுணர் அவனை உசுப்பி எழுப்புகின்றார். 

அவன் தனக்குள் ஏதோ முணு முணுத்துக் கொண்டு கண்களைகளைத் திறக்க முயல்கின்றான். 

அவனுடைய கண்கள் எரிகின்றன. திறக்க முடியவில்லை. அவன் மீண்டும் தூங்குகின்றான். 

நிபுணர் அவனை மீண்டும் தட்டி எழுப்புகின்றார்.

“ஆரடா பண்டிப் பயலே”? உனக்கு என்ன வேணுமடா?”

அவன் அதட்டியபடியே கண்களைத் திறக்க முயல்கின்றான். 

அவனுடைய வாய் கசக்கின்றது. 

காறித் துப்பி விட்டு மீண்டும் தூங்க முயல்கின்றான்.

“பஸ்சுக்கை வெடிகுண்டு! கெதியாய் வெளியாலை வா”.

நிபுணர் உரத்துக் கத்துகின்றார். 

அவன் அசையவில்லை. 

“பஸ்சுக்கை வெடிகுண்டடா! முட்டாளே! கெதியாய் இறங்கடா!” 

நிபுணர் அதட்டியபடியே அவனுடைய தோளைப் பிடித்து உசுப்புகின்றார். 

மது மயக்கத்தில் இருந்த அவன் திடுக்குற்று எழுகின்றான். 

சுற்றும் முற்றும் பார்க்கின்றான். 

“பஸ்ஸில் வெடிகுண்டு கெதியாய் இறங்கு!” நிபுணர் கத்துகின்றார். ” பஸ் காலியாக இருக்கின்றது. 

அவனுக்குத் திகைப்பு. 

அவன் துள்ளிக்குதித்து எழுகின்றான். பதறியபடியே வெளியே ஓடுகின்றான். 

ஏதோ ஞாபகம் வந்தவனாக திடீரென திரும்பி ஓடிவந்து மீண்டும் பஸ்ஸில் ஏறுகின்றான். 

வெளியே நிற்கின்றவர்களுக்குத் திகைப்பு. பஸ்ஸில் இருந்த அந்த ‘ஹாட்போட் ‘பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே பாய்கின்றான் அவன். 

“அந்தப் பெட்டிக்குள்ளே வெடிகுண்டு”

அங்கு நின்றவர்கள் கத்துகின்றார்கள்.

“பெட்டிக்கை வெடிகுண்டு! அதை நிலத்திலை வை.”

பல திக்குகளிலுமிருந்தவர்கள் பதறிக் கொண்டு கத்து கின்றார்கள். 

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

பெட்டியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றான் அவன். 

அவன் ஓடுகின்ற திசையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் அலறிப்புடைந்துக் கொண்டு சிதறி ஓடுகின்றனர். 

அவன் ஓடிக் கொண்டேயிருக்கின்றான். மதுபோதையிலிருக்கின்ற அவனுடைய காலகள தள்ளாடித் தடுமாறுகின்றன. 

“பெட்டியை மெதுவாய் நிலத்தில் வை! மெதுவாய்”.

அங்கு நிற்கின்றவர்கள் கூக்குரலிடுகின்றனர்.

அவன் கிலி கொண்டு வேகமாய் ஓட முயல்கின்றான்.

பெட்டியைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிற தும்புக்கயிறு அறுகின்றது. 

பெட்டி நிலத்தில் விழாமலிருக்க அதை எக்கிப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றான். 

உடுத்திருந்த சாரம் அவிழ்ந்து அவனுடைய இடுப்பி லிருந்து நழுவுகிறது. 

ஒரு கையால் அவிழ்ந்து விழும் சாரத்தைப் பிடிக்க முனைகின்றான். 

மறுகையிலிருந்த பெட்டி நிலத்தில் விழுகின்றது. அலாக்காக அவனும் விழுகின்றான். 

கூடி நின்றவர்கள் பயங்கரமாகக் கூக்குரலிட்டுக் கொண்டு தலைதெறிக்கச் சிதறி ஓடுகின்றனர். 

அந்தப் பெட்டிக்குள்ளிருந்து தோடம்பழங்கள் சிதறி நாற்புறமும் உருண்டோடுகின்றன. 

அங்கு நின்றவர்களுக்கு வியப்பு! 

வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்களும் ராணுவ பொலிஸ் அதிகாரிகளும் அசடு வழிய நிற்கின்றனர். பதட்டம் தணிகின்றது. சிறிது நேரத்தில் அமைதி. மக்கள் மீண்டும் கூடுகின்றனர். 

மக்கள் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு. 

பஸ்நிலையத்தில் கிண்டல்கள், கேலிகள். நகரத்தில் ஜீவத்துடிப்பு. 

மக்கள் பிரவாகப் பெருக்கெடுப்பு. 

கதிர்காமத்திற்கு பஸ் புறப்படுகின்றது. 

பஸ் சாரதியின் பின்னாலுள்ள மூன்று ஆசனங்களும் காலியாக இருக்கின்றன. 

பிரயாணப் பைகள் மூன்று மூலையில் தேடுவாரற்று அனாதரவாகக் கிடக்கின்றன. 

வீரக்கொடி வேகமாக ஆனால் நிதானத்துடன் பஸ்ஸை ஒட்டிக்கொண்டிருக்கின்றான். 

பனிமூட்டம் அகன்று விட்டது. 

இளஞ்சூரியனின் நீண்ட தளிர் விரல்கள் பூமித்தாயின் நெஞ்சில் வண்ணக்கோலமிட்டுக் கொண்டிருக்கின்றன.

– 1995, வேட்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *