கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 6,388 
 
 

அவனது தெருவுக்கு நடுவில் இருந்தது அரண்மனை போன்ற அந்தப் பெரிய வீடு. மூன்று நான்கு வீடுகளின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட ஒற்றை வீடாக அது இருந்தது. முன்புறத்தில் அழகான தோட்டம் இருந்தது. அழகிய முகப்புடன் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த வீடு. அந்த வீட்டைக் கட்டியவர் ஒரு கலா ரசிகராகத்தான் இருக்க வேண்டும். அவரின் மறைவுக்குப் பிறகு அவரின் வாரிசுகளுக்கு ஏனோ அந்த வீட்டில் வாழப் பிடிக்கவில்லை. நல்ல விலைக்கு தற்போதைய உரிமையாளரிடம் அவர்கள் விற்று விட்டிருந்தனர்.

அந்த வீட்டைக் கடந்து போகும் போதெல்லாம் அவன் ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறான். இப்படிப்பட்ட வீடு தனக்கு சொந்தமாய் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையே மனதில் மிகுந்த ஆனந்தத்தைத் தரும். ஆனால் மறு நிமிடமே வாடகை வீட்டில் குடியிருக்கும் தனக்கு அப்படிப்பட்ட வீடு கிடைத்து அதில் வாழமுடியும் என்பதெல்லாம் சாத்தியமில்லை என்கிற எண்ணம் ஏக்கப் பெருமூச்சாய் வெளிப்படும்.

“இவ்ளோ பெரிய வீட்டை எப்படிப் பராமரிப்பாங்க . முழு வீட்டையும் கூட்டி பெருக்கவே மணிக்கணக்கில் நேரம் ஆகும் போலிருக்கு…” என்று தன் அம்மாவிடம் கேட்டிருக்கிறான். அந்த நாட்களில் ‘வாக்கும் கிளினர்கள்’ எல்லாம் கிடையாது. அந்த அரண்மனை வீட்டுக்குள் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளும் தொலைபேசியும் இருந்தன. செல்போன்கள் கண்டுபிடிக்கப்படாத அந்த நாட்களில் இவைகளே மிகவும் அரிதான விஷயங்கள் தான்.

அவன் வீட்டிலோ ஒரு வானொலிப் பெட்டி மட்டுமே இருந்தது. தொலைக்காட்சி, தொலைபேசி போன்றவை வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டுமே இருக்கும். ஆனாலும் அந்த அரண்மனை வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகளை யாரும் பார்க்கிறார்களா என்று அவனுக்குத் தெரியவில்லை.

‘யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ரகசியமாக அந்த வீட்டில் மூடிக்கிடக்கும் ஏதாவது ஒரு அறையில் அந்நியர் எவராவது தங்கிச் சென்றாலும் கூட யாருக்கும் தெரிய வருமா…’ என்று தன் நண்பர்களுடன் விவாதித்திருக்கிறான்.

அந்த வீட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதும் யாருக்கும் சரியாக தெரியாது. ஒரு கணவனும் மனைவியும் அவர்களது மகனுமாக மூன்று பேர் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறான். மற்றவர்களெல்லாம் பணியாட்கள் தான்.

அந்த வீட்டுப் பையன் கூட எங்கோ வெளிமாநிலத்தில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படிப்பதாகவும் விடுமுறை நாட்களில் மட்டுமே அங்கு வந்து செல்வதாகவும் கேள்விப் பட்டிருக்கிறான்.அவனை ஓரிரு முறை மட்டுமே இவனும் பார்த்திருக்கிறான்
அந்தப் பையனின் உடைகளும் காலணிகளும் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். அந்த அம்மையாரோ தன் மகனை தெருவிலுள்ள பிற சக வயது பையன்கள் எவருடனும் பேசக் கூட அனுமதிப்பதில்லை.

அந்த வீட்டின் “சீமாட்டி”, ஆம் அந்த அம்மையாரின் பெயர் தெரியாததால் அவரை அப்படித்தான் குறிப்பிடுவார்கள், அந்தத் தெருவில் உள்ளவர்கள். எப்போதாவது அந்தச் சீமாட்டி வெளியில் செல்லும்போது அவன் பார்த்திருக்கிறான். பளிச்சென்று பளபளப்பான உடையில் வாசனைத் திரவியம் பத்தடி தூரத்திற்கு மூக்கைத் துளைக்க கம்பீரமாக ஒருவித செருக்குடன் நடந்து செல்வார்.

அந்த அம்மையாருக்கு மூன்றாவது வீட்டில் இருக்கும் தங்களை எல்லாம் தெரியுமா என்பது சந்தேகமே. அவர் தங்களை எல்லாம் எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று அவனுக்குத் தோன்றும். வாசலில் நிற்கும் விலை உயர்ந்த காரை நோக்கி நேராகப் பார்த்தபடி நடப்பார். அக்கம்பக்கம் திரும்பி யாரையும் அவர் பார்த்ததில்லை. தெருவில் தங்களைப் போன்ற சில ஜீவராசிகள் இருப்பதை அறியாத அந்த அம்மையாரை அந்தத் தெருவிலிருந்தவர்கள் ஆச்சரியமாகத்தான் பார்ப்பார்கள்.

அந்த அரண்மனை வீட்டில் வேலை பார்க்கும் ஒரு சிறுமி வந்து அந்தச் சீமாட்டிக்காக கார் கதவைத் திறந்து விடுவாள். அதற்குப் பிறகு அந்தச் சிறுமி உள்ளே சென்று விடுவாள். அந்தச் சிறுமி மிகவும் எளிய உடையில் ஒடிசலான தேகத்துடன் இருப்பாள். கண்கள் பெரிதாக கன்னங்கள் ஒடுங்கியும் இருக்கும். அந்தச் சிறுமியை அவர்கள் தங்கள் மாநிலத்தில் இருந்து அழைத்து வந்திருந்தார்கள். ஒருவேளை அவள் அனாதையாகக் கூட இருக்கலாம் அல்லது அவளது பெற்றோர்கள் அவளை வளர்க்க முடியாமல் பெரும் தொகை ஏதும் பெற்றுக் கொண்டு அந்தச் சிறுமியை வேலைக்காக இவர்களிடம் ஒப்படைத்திருக்கலாம்.

அந்தச் சிறுமியிடம் நாள் முழுக்க வேலை வாங்கிக் கொள்ளும் அந்த அம்மையார் அவளுக்கு நேரத்திற்கு உணவு கொடுப்பதில்லை என்றும் அப்படியே கொடுத்தாலும் அரைவயிறு மட்டுமே நிரம்பும் அளவு மீதமாய் போகிற சில உணவுகளை மட்டுமே தருவதாகும் எதிர்வீட்டுப் பாட்டி ஒருமுறை சொன்னாள். நாள் முழுக்க வாசலிலேயே அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் கிழவிக்கு தெரியாத ரகசியம் என்று எதுவும் இல்லை. அதனால்தான் அவர் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.

அந்த வீட்டிற்கும் எப்போதாவது மிகவும் விலை உயர்ந்த வாகனத்தில் யாரோ சில முக்கியஸ்தர்கள் வந்து செல்வார்கள். அந்த அம்மையாருக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இருப்பதாலும், ‘நமக்கேன் பெரிய இடத்துப் பொல்லாப்பு…’ என்று அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் யாரும் அந்த வீட்டில் நடப்பதைப் பற்றி கண்டுகொள்வதில்லை.

மிக அரிதாகத்தான் அந்த வீட்டில் இருக்கும் சிறுமி வெளியே வருவாள். எப்போதாவது அந்தச் சிறுமியிடம் பேச வேண்டும் என்று அவன் முயற்சித்து இருக்கிறான். ஆனால் அவளோ சில நிமிடங்களுக்குள் உள்ளே சென்று விடுவாள். மற்ற பணியாட்களும் அப்படித்தான். ஒருவேளை அவர்களுக்கு அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம்.

அந்தச் சிறுமியிடம் பேச நினைத்த அவனுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பும் ஒரு நாள் வாய்த்தது. அந்த வருடத்துக் கோடை மிகக் கடுமையாக இருந்தது. அவனது பள்ளியில் கோடை விடுமுறை துவங்கி யிருந்து.

அன்று அமாவாசை. மத்தியான நேரத்தில் ஜனநடமாட்டமே இல்லாமல் அந்தத் தெரு வெறிச்சோடி கிடந்தது. வழக்கமாக எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கும் பாட்டி கூட அப்போது அங்கு இல்லை.
துளி காற்றும் இல்லாமல் இலைகளின் மெல்லிய அசைவுகள் கூட இல்லாமலும் உலகமே உஷ்ணத்தில் உறைந்துவிட்ட மாதிரி இருந்து.

அமாவாசை என்பதால் காக்காய்க்குச் சோறு வைப்பதற்காகச் சிறிய வாழை இலையில் கொஞ்சம் சோறும் அதில் கொஞ்சம் சாம்பார், ரசம், தயிர், கூட்டு, பொரியல் என அனைத்தும் கலந்த கலவையாகப் படையல் உணவை எடுத்துக் கொண்டு வாசலில் வந்து நின்றார் அவனது தந்தை. வடை ஒன்றும் அதில் வைக்கப்பட்டிருந்தது.

காகங்களை அழைக்குமாறு அவனிடம் கூறினார். அவனும் தனக்குத் தெரிந்த வகையில் காகத்தின் குரலை ‘மிமிக்கிரி’ செய்து கத்திப் பார்த்தான். அந்த வெயிலில் ஒரு பறவை கூட அவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை.
பிறகு அவனது தந்தை காம்பவுண்ட் சுவரின் மீது வட்டிலிருந்த கொஞ்சம் நீரைத் தெளித்து அந்த இலையை அங்கே வைத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

அவனுக்கோ தனது மூதாதையர்கள் யாருக்கும் உணவு அளிக்க முடியாதது மனக்குறையாகப் பட்டது . வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தவன் அந்த அரண்மனை வீட்டையும் ஒரு முறை பார்த்தான்.

அந்த மதிய வேலையில் அந்தச் சிறுமி எதற்காகவோ வெளியில் வந்திருந்தாள். கண்களில் லேசான பயமும் ஏக்கமும் இருந்தது. எங்கே அவள் பயத்தில் உள்ளே சென்று விடுவாளோ என்கிற நினைப்பில் அவளை நோக்கி எதுவும் பேசாமல் கைகளால் மட்டும் சைகை செய்து அவளை நிற்கச் சொன்னான். அவள் ஒரு வித பயத்துடன் தயக்கத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவன் பக்கம் திரும்பினாள். என்ன என்று கேட்பது போல் புருவம் மட்டும் லேசாக உயர்ந்தது. அவன் அவளைப் பார்த்து சினேகமாகப் புன்னகை செய்தான். அவள் முகத்தில் லேசான ஆச்சரியம் படர்ந்தது.

“அருகில் வா…” என்று மீண்டும் ஒருமுறை அவன் சைகை செய்ய அவள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அருகில் வந்தாள். அவனது வீட்டு வாசலில் இருந்த மிகப் பெரிய மரத்தில் பின்புறமாக மறைவில் நின்று கொண்டு அவளுடன் பேச முயற்சி செய்தான். “உன் பெயர் என்ன…?” என்று கேட்டான். அவள் தன் தாய்மொழியில் எதையோ பேசினாள். அப்போதுதான் அவளுக்குத் தமிழ் தெரியாது என்று அறிந்து கொண்டான். அவனுக்கோ தமிழைத் தவிர வேறு மொழி எதுவும் தெரியாது. இனி அவளிடம் சைகை மொழி மட்டுமே எடுபடும் என்பதாலும் பேச அதிக கால அவகாசம் இல்லை என்பதாலும்
அவளைப் பார்த்து ‘சாப்பிட்டாயா’ என்று சைகையால் கேட்டான். ஏதோ பதில் பேச வாயெடுத்தவள் திடீரென்று மயங்கி தரையில் அமர்ந்து விட்டாள் .

அவள் மிகவும் பலவீனமாகவும் பசி மயக்கத்தில் இருப்பதாக அவன் மனதுக்குப் பட்டது அப்போதுதான் அவனுக்குள் அந்த எண்ணம் உதித்தது. உடனே காம்பவுண்ட் சுவர் மீது இலையோடு வைக்கப்பட்டிருந்த படையல் உணவையும் அருகிலிருந்த வட்டிலையும் எடுத்து வந்தான். அதிலிருந்த தண்ணீரை அவளுக்குப் பருகக் கொடுத்தான். ஒரு மிடறு தண்ணீர் தொண்டைக்குள் இறங்கியதும் மயக்கத்தில் இருந்து விடுபட்டாள் அவள். அவளிடம் அந்த உணவையும் வடையைக் கொடுத்து உண்ணச் சொன்னான்.

முதலில் சற்றுத் தயங்கியவள் பின் பசி தாங்க முடியாமல் அக்கம் பார்த்து விட்டு அந்த உணவை உண்ணத் தொடங்கினாள். அவசர அவசரமாக உணவை வாயில் திணித்துக் கொள்ள அவளுக்கு புரையேறிக் கொண்டது. அவன் முதுகில் தட்டிக் கொடுத்து வட்டிலில் மீதமிருந்த நீரையும் பருக கொடுத்தான். அந்த உணவு முழுவதையும் அவசர அவசரமாக விழுங்கியவள் கண்களின் ஓரம் நீர் வழியே அவனை நன்றியோடு பார்த்தாள். பின் தன் வாயையும் கைகளையும் பாவாடையில் நன்கு துடைத்துக் கொண்டாள்.

“உனக்கு உதவி ஏதும் தேவையென்றாள் என்னிடம் கேள்” என்று அவளிடம் சொன்னான். “என்ன…?” என்பது போல அவள் அவனை ஒரு முறை பார்த்தாள். அதை எப்படி சைகை மொழியில் அவளுக்கு உணர்த்துவதென்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவள் எதையோ புரிந்து கொண்ட மாதிரி அவனைப் பார்த்தாள். அடுத்த சில வினாடிகளில் அவள் அந்த அரண்மனை வீட்டுக்குள் ஓடி மறைந்தாள்.

வாசலிலேயே கொஞ்சநேரம் நின்று கொண்டிருந்தவன் உள்ளேயிருந்து அழைப்பு வர தன் வீட்டுக்குள் சென்றான். அந்த அமாவாசை நாளில் அவன் மனம் நிறைந்திருந்தது.

Print Friendly, PDF & Email

0 thoughts on “வீடு

  1. நல்லா இருந்தது, இருப்பினும் வேறு ஏதோ குறைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *