இந்த வீடு உண்மையில் செல்லடியில் உடையவில்லை.ஆனால்,யாழ்நகரில் ,புதிதாய்க் கட்டிய வீடொன்றில் செல் விழுந்ததில் முற்றாக உடைந்திருந்ததைப் போய்ப் பார்த்திருந்தேன்.அந்த நேரம் அங்கிருந்த குடும்பம் கடவுள் புண்ணியத்தில் அவர்கள் வெட்டியிருந்த பதுங்கு குழியில் இருந்ததால்…உயிர் தப்பி இருந்தார்கள்.. ,அந்த வீட்டை இந்த வீட்டுடன் இணைத்திருக்கிறேன்.
தமிழ்க்கிராமங்களில் பொதுவாக வாடகைவீடு பெறுவது சிரமான காரியம். அருமையாகப் படித்தவர்கள், கொழும்புக்கு வேலை கிடைத்துப் போற போது, சிலவேளை தம் குடும்பத்தையும் கூட்டிச் சென்றால், அவர்கள் இருந்த வீடு காலியாகும். நடுத்தர வருவாய்யைக் கொண்டவர்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள். பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த மத்திய அரசு, இன பேதத்தை பாராட்டுற போது எம்மவர்களிற்கு அங்கே பாதுகாப்பு இருக்கவில்லை. கலவரங்களில் ‘கரியான ..அனுபவங்கள் தானே தொடர்கதையாய் தொடர்கின்றன. தவிர, சொந்த வீடு ,நிலம் இல்லாதவர்கள் இங்கும் இருக்கவே செய்கிறார்கள். பலர், தங்கு வேலைக்குப் போய் வருவது போலவே கொழும்புக்கும் போய் வருகிறார்கள்.
சித்ரா ரீச்சர் வவுனியாவில் பத்து வருசமாக ஆசிரியையாய் குப்பை கொட்டி அலுத்து விட அவருக்கு ஒரு மாற்றம் தேவையாக இருந்தது. சொந்தப் பகுதியில் ஏதாவது கிராமத்து பள்ளிக்கூடத்திற்கு மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த கிராமத்திலே .. வேலை கிடைத்திருக்கிறது. நகரத்தில்,. வசிக்கிற பெரியண்ணை வீட்டிலிருந்தே போய் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு கிராமமே பரிச்சம் இல்லாதது. வீடு’ எல்லாம் பார்க்க அந்த இந்துக்கல்லூரியில் படிப்பிக்கிற ஆசிரியர்களையே… நாடினார்.
அவருடைய கடைசித் தம்பியிட வயதில் இருந்த ராஜன் வாத்தியாரிடம் “தம்பி, நீர் தான் வீடு எடுத்துத் தர வேண்டும்”என்று சிறிது உரிமையுடன் கேட்டார். ராஜன் ஒதுங்கிப் போற தன்மை உடையவர்.அவரிடம் யாரும் இப்படி கேட்டதில்லை.கண்ணுக்குத் தெரியாது கிடக்கிற வலையமைப்பு யாருக்குத் தான் தெரியும்? முன் பிறப்பில் அவருக்கு தாயாய் கூட இருந்திருக்கலாம்.அவருள் ஒரு மாற்றம் ஏற்பட்டது! சித்ரா ரீச்சர் ‘அக்கா’ போல தெரிந்தார். “பார்க்கிறேன்”என்று இழுத்து பதிலளித்தார். முதலில் அயலில் வீடு காலியாய் இருக்கிறதா?என விசாரித்துப் பார்த்தார்.ஏமாற்றம் தான் மிஞ்சியது.என்ன தான் முற்போக்காய் இருந்தாலும் கிராமம் சமூக வேலிகளுடைய பகுதி தானே! கண்டால் கதைப்பவர்கள், விரோதம் பாராட்டுறவரில்லை,ஆனால்,அன்னியர்கள் தானே ! . அவருடன் படித்தவர்கள், நண்பர்கள் மட்டுமே சாதியற்றுப் பழகிறவர்கள். , நண்பர்கள், திக்கு திக்காய்ப் போய் விட்டார்கள். அவருடன் கூடப் படித்த குகன்,சந்திரன்,விமலனிடம்…கேட்டார்.விசாரித்து விட்டுச் சொல்றதாகச் சொன்னார்கள். வகுப்பிற்கு வார மாணவர்களிடம் விசாரித்தார். வீடு கிடைக்கும் போல அவருக்குப் தெரியவில்லை.
சுந்தரத்தின் அம்மாவை பார்த்து விட்டு வருவோம்..என கடைசியில் தீர்மானித்தார். சுந்தரம் இப்ப கிராமத்தில் இல்லை.அவன் வெளிநாடு போய் கனகாலமாகி விட்டது.அவனுடைய தங்கச்சி ஆனந்தியும் கலியாணமாகி வெளிநாட்டில் செட்டிலாகி விட்டாள். சுந்தரத்தின் அப்பா போஸ்ட் மாஸ்ரர், படிக்கிற காலத்திலேயே தவறி விட்டவர்.அம்மா, பழைய காலத்தவர், அந்த பெரிய வளவை,வீட்டை..கிராமத்தை விட்டுப் போக விரும்பாதவர்..கிடைக்கிற விதவைச் சம்பளம் அவருக்கு போதும்,அங்கேயே இருந்து விட்டார்.
ஆண் தரப்பு தான் சாதி,சமயம்..எல்லாம் பாராட்டுகிறவர்கள். அரசியலில், கூட அயல்,அண்டை நாடுகளுடன் சண்டையிடுறவர்கள்! ஆனால், பெண்கள் அப்படி இல்லை..தாய்மார்க்கு, தம் பிள்ளைகளுடன் பிழங்கிறவர்கள் அவர்களுக்கும் பிள்ளைகள் தான்.அவர் அங்கே உள் வீட்டுப் பிள்ளை. சுந்தரத்தோட இப்பவும் அவருக்கு கடித வரத்து இருக்கிறது.அவருடைய பிள்ளைகளுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்தும்,பரிசும் வரும்.இவரும் அனுப்புறவர்.அவன் கிராமத்துக்கு வார போது இவரும் லீவு போட்டு விடுவார்.இரண்டு குடும்பத்தாரிற்கும் கொண்டாட்டம் தான்.”அம்மாவை போய் பார்த்துக்கிடா”என்று ….எழுதுவான்.இவருக்கும் அவனுடைய அம்மாவிடம் போய் கதைத்து விட்டு வந்தால்..மனசு லேசாய் இருக்கும்.
‘ஏன், ரீச்சர் இவரோடு இருக்கக் கூடாது?’அம்மாட தனிமையும் போகும், சந்தோசமாகவும் இருப்பாரே ! அவருடைய பிரச்சனை தீர்ந்து விட்டது. சைக்கிளை உற்சாகமாக உழக்கினார். செட்டிபுரத்திற்கு அவர் அன்னியரில்லையே!.வழியில் காண்கிறவர்கள் முறுவல் பூத்துக் கொண்டு சென்றார்கள்.
அவர் படலையைத் திறந்து மஞ்சள்,சிவப்பு செவ்வரத்தை,சிவப்பு எக்ஸ்சோரா..பூ மரங்கள் வைத்த பாதையில் சைக்கிளை உருட்டிக் கொண்டு சென்றார்.உள்ளுக்க கொஞ்சம் நீளமாக செல்கிற பாதை தான்.ஆனால் பூக்களைப் பார்த்துக் கொண்டு போறதில் கண்ணுக்கு ஒரு குளிர்ச்சியாய் இருப்பதால்,சைக்கிளில் ஏறிப் போறவரில்லை.முன்புறத்தில் அதிகமாக தென்னை மரங்களே இருந்தன.ஒரு விலாட்மாமரம்,சிறுவர்களாக ஏறி விளையாடிய கறிவேப்பிலை மரம். அவர் அங்கேயே விட வேற எங்கையும் கறிவேப்பிலையை ஒரு வளர்ந்த மரமாக காணவில்லை,முன்புறத்தில் கிணறு தோண்டியிருக்கிறார்கள்,நல்ல தண்ணீர் கிடைக்கேலை என்று மூடியிருக்கலாம். மூடிய கிடங்கு கிடக்கிறது.,பின் புறம் வீட்டுக்கிட்ட ஒன்றும் வேலியோரம் இன்னொன்றுமாக இரண்டு கிணறுகள் கிடக்கின்றன,. அப்பவும் அவர்களுக்கு அதிருஸ்டம் இல்லை.சிறிது பாசி மணத்துடனான தண்ணீ ர் தான் கிடைத்தது. அதில், தோய்க்க குளிக்க,சமைக்க பாத்திரம் கழுவவும், வேலியோரக் கிணறு சிறிது பரவாய்யில்லை. அ ந்த தண்ணீரை குடிக்கவும் பாவிக்கிறார்கள்,.
பின் பக்கம் ஒரே பனை மரங்கள், இடையில் பனம்பாத்தி ஒன்றை எப்பவும் காணலாம்.வேலியோரம் காய்த்துக் கொட்டுற புளியம்மரம் பேய் போல நிற்கிறது. வீட்டுக்கு அருகாமையில் காய்க்கிற பெரிய முருங்கை மரம் ஒடிந்து விழும் என்று சொல்லுறது எல்லாம் பொய், உறுதியுட ன் நிற்கிறது.
கிராமத்தில் முருங்கை இல்லாத வீடே இல்லை. கூட பிரச்சனையும் இருக்கிறது..மயிர்க் கொட்டிக் காலத்தில் அதில் கொத்து கொத்தாய் குடிகொண்டிருக்கிற மயிர்க் கொட்டிகள் கண்டறிமாட்டுக்கு நிலத்தில்,வீட்டுக்குள் எல்லாம் சுதந்திரமாக திரியும் ;ஊறும்.பந்தம் பிடித்து மயிர்க் கொட்டிக்களை கருக்க வேண்டும்.,முருங்கையிலிருந்து பிரயோசங்களைப் பெற வேண்டுமானால் கொலைகாரர்களாகவும் இருக்கத் தான் வேண்டும். அதன் இலையில் வறை,சொதி;காய்களில் கறியும் ,குழம்பும்..என நாவில் சுவை ஊற வைக்கிறவை. சோற்றுச் சாப்பாட்டுக்கு பொரிச்சுப் போட்டு வைக்கிற அந்த குழம்பொன்றே போதும்! பஞ்சகாலத்தில், மரவள்ளியோட இந்த முருங்கையே எல்லோருக்கும் பசியாற கை கொடுத்தது.ஒரு சீசனுக்கு மட்டும் தானே இந்த மயிர்க் கொட்டிகள் தொல்லை .சிங்களர், தமிழர்களை கொல்றது போல நாமும் கைவரிசையைக் காட்டி விட்டுப் போகிறோம்..எரிக்கிறவர் எல்லோருக்கும் ஒரு காலத்தில் மயிர்க் கொட்டியாக பிறக்கிற சாபம் கிடக்கிறது.
மாஸ்ரர் வீட்டு தண்ணிரோ..? ஒரேயடியாய்க் கையறுது .கீழே நில எண்ணெய் ஏதும் கிடக்கிறதோ … என்று அவர்க்கும் சந்தேகம் தான் .
அப்படிக் கயறுதுதே!
.வயற் புறமிருக்கிற நல்ல தண்ணீர் கிணற்றிலே அள்ளி குடிக்கப் பாவிக்கிறார்கள். பொதுவாக வளவில் வெள்ளையப்புவை, பொன்னரப்புவைக் காணலாம். சமையல் வேலையை பொன்னரப்புவின் மகள் தங்கச்சியம்மா செய்பவர். சின்ன வயசில் இளந்தாரியாய் பார்த்த அப்புமாரிற்கு இப்ப தலை மயிர் எல்லாம் நரைத்து விட்டன.நமக்கும் இப்படி ஒரு நிலை வரத்தானே போகிறது? தலையை சிலிப்பிக் கொண்டார்.தங்கச்சியம்மாவிற்கும் அவருக்கும் ஒரு வயசு இருக்கும்.ஒருவேளை, பின் வளவில் இருப்பார்கள்!
திறந்த பெரிய முன்விராந்தையில் சாய்வு நாற்காலியில் இருந்த அம்மா ”என்ன ராஜன் கொஞ்சநாளாய்க் காணவில்லை” என்று கனிவுடனும் முகமனுடனும் வரவேற்றார். வெளிய, வெந்நீரையும், மாத்திரையையும் கொண்டு வந்த தங்கச்சியம்மா அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள்.”இந்தாங்கம்மா” என்று கொடுத்தவர்… உள்ளே போய் இனி ‘டீ’யைப் போடுவார். விறாந்தையுடன் சேர்ந்த ஒபிஸ் ரூம்,அதோடு தொடர்பட்ட இன்னொரு பெரிய அறை.ஒபிஸ் ரூமையே அம்மா பாவிக்கிறார்.மற்றதில் சமையல் வேலைகள் நடக்கின்றன.இரவில் சிலவேளை, தங்கச்சியம்மா தங்குவார். இல்லாட்டி, தங்கச்சியம்மாட சீத்தா அல்லது குமுதா… என்ற இரு பெண்களில் ஒருத்தி வந்து தங்குவாள்.அம்மா படித்தவர்., அவர்கள் படிப்பில் சுட்டியாக இருக்கிறதுக்கு அம்மா தான் காரணம்.
அது ஓடும்,ஓலையும் வேய்ந்த கூரைகளைக் கொண்ட விசாலமான நாற்சார வீடு. நாற்சாரத்தில் குசினியையும்,ஸ்டோர் ரூமையும் கொண்ட பகுதியில் நிலமெல்லாம் சீமேந்து ,யன்னல் என கொண்டிருக்கையில் ஏன் கூரையை மட்டும் ஓலையில் வேய்ந்தார்கள்?அவர்க்கு புரியவில்லை! கிராமங்களில் பொதுவாக வீட்டை தனியாகவும்.குசினியை சிறிது தள்ளியும் அமைப்பது வழக்கம்.
இந்த.. செட்டி மக்கள் ,வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றவர்கள் .அரசர் காலத்திலேயே வங்கி முறையை நடைமுறையைக் கொண்டு வந்தவர்கள் என்கிறார்கள். இவர்கள் அரசனின் தனாதிகாரிகளாய் இருந்திருக்கலாம்.வட்டிக்குக்குக் கொடுத்தல்,கணக்கு வழக்குகளை சரிவர எழுதி வைத்தல்,சொந்தமாக கப்பல்களை வைத்திருந்து,(அதிலேறி பல நாடுகளிற்குச் சென்று) வர்த்தகம் புரிந்தவர்கள் .அரசர் கூட இவர்களிடம் சமயங்களில் கடனாகப் பெற்று… திருப்பிக் கொடுத்தல் என இருந்திருக்கிறது.
இவர்கள், வீட்டில் என்ன புரட்சி செய்தார்கள் என்றால், உள் வீட்டுத் தாழ்வாரத்தை கொஞ்சம் நீட்டி திறந்த விராந்தையை (குந்தை,)யும் அமைத்துக் கொண்டார்கள்.குசினியையும்,சாமான் அறையையும் வீட்டின் அகலத்திற்கு அமைத்து கட்டி,அதன் தாழ்வார விராந்தையும் நீட்டினார்கள். வடக்கு, தெற்காக இவை இருக்க,கிழக்கு,மேற்காக வெளியே கதவுடன் கூடிய சுவரில் சாய்வான கூரையில் திறந்த அல்லது அடைப்புடன் கூடிய விராந்தையையும் அமைத்து நாற்சாரமாக்கினர். நடுவிலே திறந்த சதுர முற்றம்.அதை, சிலர், சீமேந்து பூசிய தரையாகவும் அமைத்தார்கள்; வேறு சிலர், வெறும் மண் தரையாகவும் வைத்துக் கொண்டார்கள். வீட்டையும்,குசினியையும் பெரிய நாற்சார விராந்தையுடன் இணைத்து கட்டியது தான் இவர்களுடைய புத்திசாலித்தனம். அதிலேயே வீட்டுப் பெண்கள் அப்பளங்களை காய வைத்தார்கள்,வத்தல்கள் செய்தார்கள்,.மா,தூள் இடித்தல்,புளியம் பழம் உடைத்தல் போல …திண்ணையில் பல்வேறு வேலைகள் நடந்தன. அந்தப் பெண்கள் வயற்காணிகளிலும் சீலை தூக்கி கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலை செய்ய தயங்காதவர்கள்.
பெண்களுக்காக கட்டப்பட்ட அந்த நாற்சாரம் குழந்தைப் பிள்ளைகள் விளையாடுற இண்டோர் பிளைகிரவுண்ட்டாகவும் இருந்தது. தாய்யையும் பிள்ளையையும் பிரிக்க முடியாது.பெண்களுக்கும் வேலை வேண்டும்.வர்த்தக மூளை கட்டிடக் கலைஞனாகவும் இயங்கி இருக்கிறது. அந்த காலத்தில் பக்கத்து வடலி வளவெல்லாம் துப்பரவாக இருந்தது.இப்ப கவனிக்கப் படாதிருப்பதால்..அங்கே இருக்கிற சாரைகள் வெக்கைக் காலங்களில் இந்த ஓலைக்கூரையில் சரசரக்கிறதை கவனித்திருக்கிறார்.இரண்டு அப்புகளும் ஓரளவு கூட்டி துப்பரவாகத் தான் வைத்திருக்கிறார்கள்.ஆனால் ஓட்டுப் பக்கமிருக்கிற இரண்டு பெரிய அறைகள் பாவிக்கப்படாது சாமான்கள் போட்டபடியே இருக்கிறன.ஆட்கள் பிழங்கத் தொடங்கினால் பாம்புகள் வராது என வெள்ளையப்பு கூறுவார்.தவிர, “’சாரை’ ஆபத்தான பாம்பு இல்லையே” என்றும் சிரிப்பார்.
இவருக்கு என்னவோ பாம்பென்றால் பயம் தான்!
.தவிர, செட்டிப்புரத்திலேயே மின்சாரம் எடுக்கத் தவறின வீடு அவர்களுடையது தான். சுந்தரத்திர அப்பர் சாகிற போது பெரும்பாலான வீடுகளிற்கு மின்சாரம் இல்லை தான். பிறகே மற்றவர்கள் ஏற்படுத்திக் கொண்டவர்கள்.அம்மா தனிய பிள்ளைகளை வளர்த்தவர் என்பதால்…என்னவோ அவர் மினக்கிடவில்லை. மின்சாரம் இல்லாத வீடாக துருத்திக் கொண்டிருக்கிறது.
விசயத்தைச் சொன்னார்.
“அவர்களை இங்கே வரச் சொல்.வீட்டைப் பார்த்து பிடித்திருந்தால் தாராளமாக தங்கலாம்” என்றார்.
தங்கச்சியம்மா தந்த தேனீரையும் குடித்துக் கொண்டு ,சுந்தரம் எழுதிய புதினங்களையும் ,’என்ன பனி பெய்கிறது,சரியான குளிராய்க் கிடக்கிறதடா,அங்கத்தைய அருமை நல்லாய் தெரியுதடா,போன்ற சில்லறைச் செய்திகள் தான், அம்மா ஆவலுடன் கேட்பார்…’சொல்லி விட்டு விடை பெற்றார்.
அடுத்த நாள், “ ரீச்சர்,என்னோட நண்பன் சுந்தரத்தின் அம்மா தனியத் தான் இருக்கிறார்.அவரோட தங்க முடியுமா?” என்று கேட்டார்.
உள்ளுக்குள் முருகா ரீச்சர் சம்மதிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அம்மாவிற்கு ஒரு துணை வேண்டும் என்ற விருப்பமே அதிகமாக இருந்தது..தனிப்பட்ட முறையில் பயம் இருந்தாலும், கிராமத்தில் பாம்பு ஊர்வது ஒரு விசயமே இல்லை. அதைப் பற்றிச் சொல்லி பயமுறுத்த விரும்பவில்லை. மின்சாரம் இல்லை என்ற விபரத்தையும் சொன்னார். அவர் வீட்டுக்கு மின்சாரம் இருக்கிறது .ஆனால்,கிராமத்தில் பல வீடுகளிற்கு மின்சாரம் இல்லை தான். ரீச்சர், அதுவரையில் மின்சாரம் உள்ள வீட்டில் இருக்கவில்லை. அவருக்கு அது ஒரு விசயமாகப் படவில்லை. ராஜன் மாஸ்ரரிலே ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் விழுந்து விட்டிருந்தது. எனவே உடனே ஒப்புக் கொண்டு விட்டார். மாஸ்ரரும் நண்பனுக்கு நீண்ட ஒரு கடிதம் ஒன்றை எழுதி தபால் பெட்டியில் போட்டார். அவருக்கு ‘சீல்கை’ அடித்து பாட வேண்டும் போல இருந்தது.
சீல்கை அடித்தார்.
மனைவி,”என்ன குசியாய் இருக்கிறீர்கள்?”என்று கேட்டாள்.எதையோ சொல்லி சமாளித்தார்.
அம்மாவிற்கு சித்ராவின் கணவர் சுந்தரத்தைப் போல இருக்கிறான் என்று நல்லாய் பிடித்து விட்டது. சித்ராவுக்கும் அம்மாவை பிடித்து விட்டது. ரீச்சருக்கு சபேசன், ரகு என இரண்டு பெடியளும், கவிதா, ஓவியா, சங்கரி என மூன்று பெண்களும் என பெரிய குடும்பம். சபேசனும், கவிதாவும் அவருடைய அண்ணரோடு இருந்து நகரப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் அவர் படிப்பிக்கிற பள்ளிக்கூடத்திலே படிக்கிறவர்கள்.
இப்பவும் அப்புமாரும்,தங்கச்சியம்மாவும் வாரவர்கள் தான்.அம்மாவிற்கு உப்பில்லா சமையல் வேண்டியிருந்தது.சித்ரா ரீச்சர் சமைக்கிற போது இரண்டொரு கறிகளுக்கு உப்பு குறைவாய்ப் போட்டுச் சமைத்து அம்மாவிற்கு கொடுப்பார்.உப்புப் போட்டுச் சாப்பிட நாக்கு தவித்துக் கொண்டிருந்த அவருக்கு அது பெரும் ஆனந்தமாக இருந்தது.ஆனால், இப்ப தங்கச்சியம்மாவிற்கு ஆறுதல். இரவில் தங்க வேண்டியிருக்கவில்லை.ரீச்சரிற்கு மா இடிக்கிறது, மிளகாய் வறுத்து தூள் இடிக்கிறது முதலான வேலைகளும் இருந்தன.நகரத்து,கிராமத்து மக்களுக்கு வேலை வாய்ப்பின்மை தானே பெரிய பிரச்சனை. இவருக்கு கூடுதலாக வேலை வாய்ப்புகள் கிடைத்த போது சந்தோசமாக இருந்தார்.சிலவேளை மகளையும் உதவிக்கு கூட்டி வருவார். ரீச்சரும் அம்மாவைப் போன்று கருணையோடு நடந்து கொள்பவர் தான். ராஜன் மாஸ்ரருக்கும் ஒரு கவலை விட்டது.சொல்ல வேண்டி இருந்தால் ரீச்சரிடம் சொல்லி விடுவார்.அம்மாவிற்கு செய்தி கிடைத்து விடும் .அடிக்கடி வர வேண்டி இருக்கவில்லை.
கிராமத்தில் கோயில்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை.அயலில் இருந்த பிள்ளையார்க் கோவில்,மரத்தடியில் இருந்து சிறு கொட்டிலாக எழுந்து விட்ட வைரவர் கோவில்,வயல் வெளிகளில் திருவிழா நடக்கிற போது உயிர்ப் பெறுகிற பல சிறு கோவில்கள்,திருவிழா நடக்காது பாழடைந்து கிடக்கிற கோவில்கள்,அதற்கருகில் தூர்ந்தும் தூராதுமிருக்கிற சில குளங்கள்…எனக் கிடந்தன. ரகு கிராமத்துப் பெடியளுடன் திரிவான்.வயற் கேணிகளில் நீச்சல் அடிக்கவும் கற்றுக் கொண்டு விட்டான்.செட்டிப்புரத்தில் ரீச்சருக்கு சினேகிதிகள் ஏற்பட்டுப்.. போக, வர,அவரோட செல்கிற ஒவியாவிற்கும்,சங்கரிற்கும் கூட அங்கே சினேகிதிகள் ஏற்பட்டிருந்தார்கள். ரீச்சரும் அவர்களில் ஒரு குடும்பமாகி விட்டிருந்தார். ஆறு மாசங்கள் போய் விட்டிருந்தன.எல்லாமே பழகி போய்யிருந்தன.பாம்புகளும் வந்து பயமுறுத்தவில்லை
ரீச்சருக்கு விவசாயமும்,கோழி,ஆடு வளர்க்கிறதும் அவ்வளவாக சரி வருவதில்லை.இருந்தாலும் கோழி வளர்க்க முயல்கிறவர்.செட்டிப் பெடியள் கூடு அடைத்து கோழி வளர்ப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள்.சிலர் மிளகாய்த் தோட்டம் வைத்தும் சாதனை புரிந்தவர்கள்.பார்த்தன் ,ஒரு கோழியும் ,சேவலும் ரீச்சருக்கு வளர்க்கிறதுக்குக் கொடுத்து,எப்படி வளர்க்கிறது என்றும் சொல்லிக் கொடுத்தான். அந்தக் காலத்தில் வெக்கைக்காலத்தில் குளிர்மையை அனுபவிக்கிறதுக்காகத் தான் ஓலையால் வேய்ந்த கொட்டில்களையும் வளவில் வேறு அமைத்துக் கொள்வார்கள் போல இருக்கிறது.
ரீச்சர்,அந்த நாற்சாரத்தில் கோழி வளர்க்க தீர்மானித்தார். எட்டு,ஒன்பது முட்டைகளை வைத்து ‘அடை’ பொரிக்க வைத்தார்.முந்தி இருந்த இடத்தில் மரநாய்யும்,பருந்தும் தொல்லைகள் கொடுத்தன.இங்கே அந்த தொல்லைகள் இராது என அசட்டுத் தனமாக கற்பனை பண்ணிக் கொண்டார்.
அத்தனை முட்டைகளும் பொரித்து குஞ்சுகளாகின.ரீச்சருக்கு புளுகம் என்ற புளுகம்.கரம்பை திறந்து விட்டால் கலகலவென தாய்க் கோழியோடு மேச்சலுக்கு கிளம்பி விடும்.பின்னேரத்தில் வெள்ளையப்பு கூட கோழியையும் குஞ்சையும் நாற்சாரத்திற்குள் விட்டு விடுவார்.இருக்கிறவர்கள் பெரிய கரம்பையினுள் கோழியுடன் வைத்து மூடிவிடுவார்கள்.சேவல் கூரை மேலே ஏறி விடும்.குஞ்சுகள் மாம்பழம் போல கொழு கொழுவென வளர்ந்து வந்தன.ஒரு நாள் இரவில் கோழி கத்த,குஞ்சுகள் கீச்சிட ஒரே ஆரவாரமாக கிடந்தன.இவர்கள் விளக்கை தூண்டி விட்டு,நாற்சாரத்திற்கு டோர்ச் லைட்டை அடித்துப் பார்த்தால் ‘வளர்ந்த சாரை ஒன்று கொழுத்தக் குஞ்சொன்றை விழுங்கி விட்டு இரை மீட்க முடியாது,அசையாது முற்றத்தில் கிடந்தது’.சே! வளர்ந்தவைகளை கரம்பையிலே அடைத்திருக்கக் கூடாது.கோழியும் மிச்சக் குஞ்சுகளும் எப்படியோ கூரையிலே ஏறிக் கொண்டு விட்டன.
அம்மா “பிள்ளே நாற்சாரத்து கதைவை திறந்து விட்டு குந்தோரம் மண்ணெய்யை தெளித்து விட்டு போய் படுங்கள்.பாம்பு அப்படியே போய் விடும்”
என்றார்.அவர் சொன்ன மாதிரியே செய்தார்கள்.காலையிலே எழுந்து பார்த்த போது பாம்பைக் காணவில்லை ராஜன் மாஸ்ரரிடம் ரீச்சர் ‘பாம்பு வந்ததைக் கூறினார்.
”அப்படியா?”என அவர் ஆச்சிரியப்பட்டார்.முந்தி,சமையல் கூரையில் தான் பாம்பைக் கண்டதை சொல்லாமல் கவனமாகத் தவிர்த்தார்.
அடுத்த நாள் ரீச்சர் பார்த்தனை கூப்பிட்டு “கோழிகளையும் குஞ்சுகளையும் எடுத்து கொண்டு போ தம்பி.நீ பாதுகாப்பாய் வளர்ப்பாய்.நாங்கள் பாம்புக்குத் தான் கொடுப்போம். இங்கே, இதுகள் இருக்கிறதாலே தான் பாம்பும் உள்ளுக்க வருகிறது” என்றார். பார்த்தன் என்ன சொல்வான். எடுத்துக் கொண்டு போனான். அதுக்குப் பிறகு கொஞ்சகாலம் பாம்புகளைக் காணவில்லை.சிலவேளை வளவுக்குள்ளாய் ஊர்ந்து போகும். அவ்வளவு தான்.பக்கத்து வடலி வளவு அடைந்து இருட்டாய், தாறுமாறாய் எல்லாம் வளர்ந்திருந்தன. சொந்தக்காரன் கவனிக்கிறதையே விட்டு விட்டான் போல இருக்கிறது. சில பெடியள் அதனுள் முயல் வேட்டை என நாய்ககோடு திரிந்தார்கள்.பாம்புகளுக்கு அங்கே நல்ல உறைவிடம் இருக்கிற போது ஏன் இவர்களிடம் வரப் போகிறது?
இப்படி தான், ஒன்று நினைக்கிற போது மாறாக ஒன்று நடந்து விடுகிறது.
கடும் வெக்கை கொளுத்தி எரிந்தது.குளங்களில் சொட்டுத் தண்ணீர் இல்லை.வடபகுதிக்கு இது ஒன்றும் புதியதில்லையே!
வவுனியாவை விட இங்கேயும் மேம்பட்ட காலநிலை கிடையாது. கடற்கரை வீதியில் போற போது கடற்காற்று வீசி கொஞ்சம் வெக்கையைக் குறைக்கிறது.அவ்வளவு தான்.
வவுனியாவில் வேலை வாய்ப்புக்கள் இருக்கிறளவிற்குக் கூட இங்கே வேலை வாய்ப்புக்கள் கிடையாது.சுய வேலை வாய்ப்பைக் கட்டிக் கொண்டாலன்றி …மற்றவர் நிலை கேவலம் தான். கிராமசபை,நகரசபை,மாகாணசபை அரசாங்கம் அவற்றின் சுயநிர்ண (அவற்றிக்கிருக்கிற உரிமைகளுடன்)உரிமைகளுடன் இயங்கினாலேயே அதோடு கிடக்கிற தொடக்க வேலைவாய்ப்புக்கள் கிடக்கின்றன.அந்த வேலையை எடுக்கவே சிங்களவன் காலில் போய்.விழ வேண்டும் என்றிருக்கிற போது,அதில் இருப்பவன் எப்படி சரிவர கடமையைச் செய்வான். விருப்பத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் புதிய புதிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முயல்வான்? இந்த தலைவர்களைப் பார்த்து மக்கள் …சிரிக்கிறார்கள்.
வெக்கையை தாங்க முடியாத பாம்புகள் மறுபடியும் குசினிப் பக்க ஓலைக் கூரைக்கு வந்திருக்கின்றன.இரவு போல நாற்சார முற்றத்தில் இறங்கி. முற்றத்தில் கிடந்த வாளியை உருட்டி ஆரவாரமாக சத்தத்தை எழுப்பி , காதல் புரிய, இவர்களும் எழும்பி விளக்கை தூண்டி விட்டு,டோர்ச்லைட்டையும் அடித்துப் பார்த்து …உறைந்து போனார்கள்.
அதையே “பார்த்துக் கொண்டு நிற்காதீர்கள்.அதுகளிற்குப் பிடிக்காது.குந்துப் பக்கம் மண்ணெண்ணெய்யை தெளித்து விட்டு போய் படுங்கள்.காலையிலே எல்லாம் போய் விடும்”என்று அம்மா சாதாரணமாக சொல்லி விட்டுப் போய் விட்டார். இவர்களுக்கு பயம் தான். ரீச்சரின் மகன் ரகுக்கு ‘இது முந்தி வந்த பாம்பாகத் தான் இருக்க வேண்டும்’ என சந்தேகம்!
அப்படியே செய்தார்கள்.காலையிலே போய் விட்டன.சங்கரி பயத்துடன்”அம்மா இது தான் அதுகளிட மேடை போல!,அடிக்கடி வருகின்றதே. “என்றாள்.ஆனால், பிறகு பாம்புகள் உள்ளுக்க வரவே இல்லை.
பத்து வருசம் அங்கேயே அப்படியே இருந்தார்கள். பிள்ளைகள் வளர, சபேசன் வெளிநாடு போனான். ஓவியாவுக்கும்,சங்கரிக்கும் பல்கலைக்கழகதிற்குப் படிக்க கிடைக்க, ஆசிரியத் தொழிலில் ஒய்வுப் பெற்றிருந்த ரீச்சரும், நகரத்திற்கே வீடுடொன்றை வாடகைக்கு எடுத்து அம்மாவிடமும் பிரியாய் விடைப் பெற்றுப் போய் விட்டார்கள்.
இவர்கள் போன அடுத்த வருசமே சுந்தரத்திட அம்மாவும் தனது 85வது வயசிலே சாய்வு நாற்காலியிலேயே இருந்தபடி மோட்சம் போய் விட்டார். செத்த வீட்டுக்கு வந்த சுந்தரமும் ,ஆனந்தியும் ‘வீட்டை’ மாஸ்ரையே பார்க்கும்படி கையளித்து விட்டுச் சென்றார்கள். அப்புமாரின் பேரப் பிள்ளைகள், எல்லாரும் அவருடைய மாணவர்கள் தான் இப்ப அவருக்கு உதவிக்கு வருகிறார்கள். . பேரர்களில், வீரப்பனிடமே வீட்டின் முழுப் பொறுப்பில் விட்டு விட்டார். பிரயோசனங்களை அவர்களையே எடுக்கும்படி சொல்லி இருக்கிறார்.அவர்கள் அவருக்கும் பனங் கிழங்கு,தேங்காய்,மாம்பழம்,புளி..என மறக்காமல் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.
ராஜன் மாஸ்ரரும் ஒய்வு பெற்று விட்டார் தம் வயற்காணிப் பக்கம் போய் மினக்கெடுகிறார்.
.. இவர் சிலவேளை நகரத்திற்கு சென்று சித்ரா ரீச்சரையும் பார்த்து விட்டு வருவார்.
பாழாய்ப் போன “போர்”நகரம் கிராமம் எல்லாம் எட்டிப் பார்க்கும் அவர் நினைத்திருக்கவே இல்லை.இயல்பு வாழ்க்கை சடுதியாக மாறிப் போனது.போருக்கு மத்தியிலும் வாழ்க்கை ஓடத் தானே செய்யும். மேலேயும், கீழேயும் பார்த்து பார்த்து வயலுக்குச் சென்று பயந்து பயந்து கொஞ்சம் வேலை பார்த்தார். மேலே கிபிர் இறையிற சத்தம் கேட்டது. குலம் அவரை ” வெளியிலே நிற்காதீங்கோ வாங்கோ வாத்தியார்” என பாதுகாப்பான சீமேந்து தட்டுப் பக்கம் கூட்டிச் சென்று விட்டான். காதைப் பிளக்கிற மாதிரி பெரிய சத்தம் கேட்டு நிலமே அதிர்ந்தது. காது செவிடாய் போய் விட்டதோ? கிட்டடியாய் கிராமத்திலே தான் விழுந்திருக்க வேண்டும்.குலத்திட தம்பி விமல் சைக்கிளில் பறந்து வந்தான். சத்தம் கேட்கிறது.நல்ல காலம் காது பழுதாகவில்லை. மூச்சிறைக்க இறங்கினவன் “வாத்தியார் உங்க வீட்டிலே செல் விழுந்திருக்கிறது.வீடு தரை மட்டம்”என்றான். மாஸ்ரர் “ஐயோ பானு, பார்வதி” எனகுழறிக் கொண்டு தலையிலே கையை வைத்துக்கொண்டு நிலத்திலே இருந்து விட்டார். விமலுக்கு அப்ப தான் தன் தவறு புரிந்தது. “வாத்தியார் வாத்தியார் பானு அக்காவும்,அம்மாவும் நல்லாய் இருக்கினம்.அவயளுக்கு ஒன்றும் இல்லை,உங்கட செட்டிபுர வீடு தான் தரை மட்டம்” என்று திருத்தினான்.
“ஒரு நிமிசம் கொன்று விட்டாயே!உனக்கு கதைக்கப் பேசத் தெரியாது.மாஸ்ரருக்கு கார்ட்டடாக் வந்து விட்டதோ?தெரியவில்லை.மாஸ்ரர் பயப்பிடாதிங்கோ,மாஸ்ரர் பயப்பிடாதிங்கோ?”என்று அவரை குலம் பற்றி எழுப்பினான்.மாஸ்ரரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வீட்டைப் பார்க்க கிளம்பினார்கள். வீரப்பன் வளவிலே நின்றிருப்பானோ?அவனுக்கு என்னம் நடந்திருக்குமோ?என்ற கவலை வாத்தியாருக்கு வந்து விட்டது. நல்ல காலத்திற்கு வீட்டிலே ஒருத்தரும் இருக்கவில்லை.ஆனால் வீடு,நாற்சாரம்,குசினி எல்லாம் தரை மட்டம்.ஒரு குண்டின் சத்தம் தான் கேட்டது.அது எப்படி முழு வீட்டையும் உடைக்கும்?
அப்படியே தபால் கந்தோருக்குப் போய் சுந்தரத்திற்கு உடனடியாய் விபரத்தை போனில் சொன்னார்.சுந்தரமும் “டேய் இங்கத்தைய தொலைக்காட்சியிலே, இஸ்ரேல் பாலாஸ்தினத்தில் குண்டு போடுகிறது.பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டிடம் வெடித்துச் சிதறுது.ஈராக்கிலே அமெரிக்கா பின் பொயின்ற் தாக்குதல் செய்கிறது.அங்கேயும் வெடித்துச் சிதறதைப் பார்க்கிறேன். எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரியான குண்டைத் தான் போடுறார்கள் போல இருக்கிறது.இலங்கையிலே இனப்பிரச்சனை இருக்கிறது என்று தெரியும்.அங்கே ஏன் ஏன் இதைக் கொண்டு போய் கொடுத்தார்கள்?புரியவில்லையடா!”என்று அவன் சிந்தனையுடன் கதைக்கிறான்.
பெரிய வளவில் மத்தியில் இருந்த வீடு.மேலே பறந்த விமானத்தில் இருந்த சிங்களவர்க்கு கண்ணிலே குத்தி இருக்க வேண்டும். பின் பொயின்ற் தாக்குதல்.”போடு”என இஸ்ரேலிய விமானியுடம் கட்டளை இட்டிருப்பான்.அவன் பட்டனைத் தட்டி விடுகிறான்.அந்த வீட்டில் மனிசர் இருக்கிறாரா, அல்லது வேறு ஜீவராசிகள் இருக்கிறதா?என்ற கவலை எல்லாம் யாருக்கு இருக்கிறது? அவர்களுடைய புத்தர், எல்லாவற்றையும் “கொல்லு கொல்லு`என்று தான் சொல்கிறார் போல தெரிகிறது.