அந்தப் பெண் என்னைச் சைகை காட்டிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. என்னைத்தானா? நான் திரும்பி தோட்டத்தில் ஷாமியானாவுக்குக் கீழே பாலிவினைல் சேர்களில் தனித் தனிக் குழுக்களாய் அமர்ந்து அரட்டையடித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தேன். என்னைத் தாண்டி அவர்களில் யாரையாவதைத்தான் அவள் கூப்பிட்டாளா? அவள் சைகையை அவர்கள் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவள் என்னைத்தான் கூப்பிடுகிறாள் என்று தோன்றியது. நானும் ஒரு முறை அவளிடம் சைகையிலேயே என்னைத்தானா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டபின் அவளை நோக்கி நகர்ந்தேன்.
இத்தனை பேர் இருக்கிற, கல்யாணக் களைகட்டியிருக்கிற இந்த வீட்டில் எனக்கு இதற்குமுன் அறிமுகமாயிராத அந்தப் பெண் என்னை எதற்கோ கூப்பிடுகிறாள். நான் யோசனையோடு அவளை நெருங்கினேன். சுற்றிலும் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவே இருந்த அந்த வீட்டின் இடதுபுறத்தில் தோட்டத்துக்கு இறங்க இன்னொரு வாசல் இருந்தது. அந்த வாசல் படிக்கட்டில் அவள் நின்றிருந்தாள். என்னைப் பார்த்து முறுவலித்தாள். ஸ்நேகம் பூசின புன்னகை. வெகு சுமாரான ஒரு நூல் புடவையில் இருந்தாள். அவள் கையில் ஒரு பித்தளை சொம்பு இருந்தது. அவள் கைகள் ஈரமாயிருந்தன. ஏதோ வீட்டு வேலையாயிருந்தாள் போலும். ரொம்பத் திருத்தமாய் இருந்தாள்.
“நிங்ஙளுடே ச்சங்ஙாதி.. அவிடெ ஸர்திக்குந்நு..” என்று காம்பெளண்டு ஓரமாய் கை காண்பித்தாள். நான் கேரளாவின் ஒரு கிராமத்தில் வந்திறங்கியிருப்பதை மறுபடி ஒரு முறை அவள் பாஷை ஞாபகப்படுத்தினதுபோல் இருந்தது.
அவள் கை நீட்டின இடத்தில் ஒருவன் எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தான். உவ்வாக் என்று அவனிடமிருந்து சப்தம் வந்தது. அவன் மார்புவரை உயரமாயிருந்த காம்பெளண்ட்டைப் பிடித்தபடி அதற்கு அந்தப் பக்கமுள்ள காலி நிலத்தில் வாந்தியெடுத்துக்கொண்டிருந்தான். இந்த வீட்டைச் சுற்றி நாளைய கல்யாணத்தின் பொருட்டு கூடியிருக்கிற இத்தனை ஜனத்தில் யாரும் அவனைக் கவனிக்கவில்லை போல. இவள் கவனித்தது அவனுடைய அதிர்ஷ்டம்தான். அவனருகில் சென்றபோது அவன் வாந்தியால் போதம் கெட்ட அந்த நிலையிலும் அரவம் கேட்டுத் திரும்பி என்னைப் பார்த்து லேசாய்ச் சிரிக்க முற்பட்டான். அவனை எனக்கு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. பாலாவின் கல்யாணத்துக்காக என்னுடன் ட்ரெயினில் வந்த இருபத்தியெட்டு பேர்களில் அவனும் ஒருவன். அவனுடன் அவன் மனைவி மற்றும் பையனையும் பார்த்ததாக ஞாபகம்.
நான் அவனை நெருங்கி “என்ன பாஸ்… உடம்பு சரியில்லையா?” என்று கேட்கும்போதே மறுபடி ஒரு உவ்வாக். நான் அவன் தலையைப் பிடித்துக்கொண்டு பின் அவன் முதுகை லேசாய்த் தடவிக் கொடுத்தேன். முன்பொரு தடவை நான் எதனாலோ வாந்தியெடுத்தபோது என் நண்பனொருவன் எனக்கு இதே மாதிரி முதுகில் தடவிக்கொடுத்ததும், அது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தை அளித்ததும் நினைவுக்கு வந்தது. இவனுக்கும் அது மாதிரித்தான் இருந்திருக்கவேண்டும். அவன் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் தன் நெஞ்சில் கைவைத்திருந்தான். சாப்பிட்டது அத்தனையையும் பிரயத்தனப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட்டதில் அவன் கண்கள் சிகப்பாய் கலங்கியிருந்தன. உடல் பலவீனப்பட்டு கைகள் லேசாய் நடுங்கிக்கொண்டிருந்தன.
நான் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் இன்னும் கையில் சொம்புடன் நடையிலேயே நின்றிருந்தாள். வைத்தகண் எடுக்காமல் எங்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். நான் அவளிடம் ‘நீ சொன்னமாதிரி இவன் என் ச்சங்ஙாதியில்லை’ என்று சொல்ல விரும்பினேன். அது ஒன்றும் முக்கியமான விஷயமில்லை. நேற்று வேனில் வந்திறங்கிய கும்பலில் என்னுடன் அவனிருந்ததைப் பார்த்து இவன் என் நண்பன் என்று முடிவு பண்ணியிருப்பாள். இருக்கட்டும். இப்போது இந்த நிலையில் அவனுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் அவள் போகாமல் அங்கே நின்றுகொண்டிருக்கிறாள். எனக்கும் அவ்வாறான எண்ணமே இருந்ததால் மேற்கொண்டு யோசிக்காமல் காம்பெளண்டு ஓரமாய் அடுக்கப்பட்டிருந்த மீதமிருந்த பாலிவினைல் சேர்களில் ஒன்றை எடுத்துப் போட்டு ‘உட்காருங்க ப்ரதர்’ என்று அவனைச் சாய்த்து உட்கார வைத்தேன். அவன் ரொம்பத் தளர்ந்திருந்தான்.
“கட்டஞ்சாயா போட்டுத் தரட்டே. கொறச்சு பேதமாகும்.” தமிழ் பேசுகிற ஆட்கள் என்பதையுணர்ந்து தன் பாஷையை அவள் லேசாய் மாற்ற முற்பட்டது வித்தியாசமாயிருந்தது. பேச இயலாத ஒரு நிலையில் அவள் கேட்டதற்கு அவன் வெறுமனே தலையசைத்து வைத்தான். அவள் சொம்பை படியில் வைத்துவிட்டு புடவைத் தலைப்பால் கைகளைத் துடைத்தபடி உள்ளே விரைவதைப் பார்த்தேன்.
“நேத்து பார்ட்டில கொஞ்சம் ஓவராயிருச்சு! அதான்” என்றான் அவன் நான் கேட்காமலே! அவன் சொல்லாமலே எனக்கு அது புரிந்துதான் இருந்தது. நேற்று இரவு பார்ட்டியில் அவன் நிறையக் குடித்ததால் கீழே பாயில் தூங்கிக் கொண்டிருக்கிற நிலையிலேயே வாந்தி எடுத்ததும் பிறகு மாப்பிள்ளைப் பையன் பாலாவும், சந்தோஷ¤ம் சேர்ந்து அவனை நகர்த்திக் கிடத்திவிட்டு அவ்விடத்தை சுத்தம் செய்தார்கள் என்றும் இவன் அதற்காக தென்னந்தோப்புக்குள் பாலாவை தனியாய் கூட்டிக்கொண்டு போய் மன்னிப்புக் கேட்டான் என்றும் காலையில் கேள்விப்பட்டிருந்தேன். இரவு மயக்கம் இன்னும் தெளிந்தபாடில்லை போலும். இதோ கட்டஞ்சாயாவுக்குக்காக காத்துக் கிடக்கிறான். உள்ளே போய்விட்டிருந்தாலும் எனக்கு அந்தப் பெண் இன்னும் நிலைப்படியில் நின்றுகொண்டு என்னை சைகையால் அழைப்பதுபோல் பிரமை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணிடம் என்னவோ இழுக்கிற அம்சம் இருந்தது. ஒரு வேளை பொட்டு வைக்காத அவள் நெற்றியா அல்லது லேசான சோகம் விரவின கண்களா? என்னமோ ஒன்று. அவள் சாயாவுடன் வருகிறாளா என்று நான் கதவுக்குள் பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் சொன்னான்.
“இந்த விஷயத்தை என் ஒய்ஃப்கிட்ட சொல்ல வேணாம் பிரதர்.”
நான் திரும்பிச் சிரித்தேன். அவனிடம் பயப்படவேண்டாம் என்று சொன்னேன். அவன் மனைவிக்குப் பிடிக்காத விஷயத்தை அவன் செய்திருக்கிறான். அவள் இதைக் கேள்விப்பட நேர்ந்தால் கிடைக்கும் அர்ச்சனைக்கு அவன் பயப்படுகிறான். அவனுடனேயே எனக்கு அதிகமான பரிச்சயமில்லாத போது அவன் மனைவியிடம் நான் பேச நேரிடும் என்று எப்படி நினைத்தான் என்று தெரியவில்லை.
அவள் வாசற்படியில் மீண்டும் தென்பட்டாள். படிகள் தாண்டி முற்றம் வரை சாயா டம்ளருடன் நடந்து எங்களை அணுகினாள். இப்போது பரவாயில்லையா என்று விசாரித்தபடி சாயாவை நீட்டினாள். நான் அதை அவளிடமிருந்து வாங்கும்போது பட்ட விரல்களை அவள் இயல்பாக எடுத்துக்கொண்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. ஆனால் எனக்கு ஏன் இன்னும் குறுகுறுப்பாக இருக்கிறது? தன் வேலை முடிந்தது என்பது மாதிரியும், தன் எல்லைக் கோட்டை கொஞ்சம் தாண்டி வந்துவிட்ட மாதிரியும் அவள் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள். என்னைப் பார்த்து முன்பு மாதிரியே முறுவலித்தாள். நான் அந்தக் கணத்திலிருந்துதான் அவளைக் கவனிக்க ஆரம்பித்திருக்கவேண்டும். அல்லது அவளைக் கவனிக்க வேண்டும் என்கிற ஒரு சின்ன உந்துதல் அந்தக் கணத்திலிருந்துதான் என்னுள்ளிருந்து புறப்பட்டிருக்கவேண்டும். என்னவோ ஒரு எளிமையும், சாந்தமும் கலந்த கலவையாய் அவள் அப்படி நின்றுகொண்டிருந்தது என்னை லேசாய் ஈர்த்தது. நான் அவளை அத்தனை உற்றுப் பார்த்திருக்கக்கூடாதோ என்று பிறகுதான் தோன்றியது. அவள் சட்டென்று என் பார்வையைச் சுதாரித்துக்கொண்டு “கொறச்சு பணியுண்டு” என்று சரசரவென்று இரண்டு தாவலில் படிகளைக் கடந்து உள்மறைந்தாள்.
என்னிடமிருந்து வெளிப்பட்டு மறைந்துபோன பெருமூச்சின் நதிமூலம் எனக்குப் பிடிபடவில்லை. நான் மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தேன். பதிநான்கு மணிநேரப் பிரயாணம் செய்து இங்கே வந்ததே இந்தக் கட்டஞ்சாயாவைக் குடிக்கத்தான் என்கிற மாதிரி துளித்துளியாய் நிதானமாய் அவன் அதை உறிஞ்சிக் கொண்டிருந்தான். இப்போது அவன் உடல் படபடப்பும், முக வாட்டமும் கொஞ்சம் மறைந்து கொஞ்சம் தெம்பு பிறந்திருந்தது.
அவன் குடித்து முடித்துத் தந்த டம்ளரை நிலைப்படியில் அந்த சொம்புக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு கதவினுள் லேசாய் பார்வையைச் செலுத்தினேன். அந்தக் கதவை ஒட்டியிருந்தது சமையலறை என்று பிறகுதான் புரிந்தது. உள்ளே நாலைந்து பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் அவளைத் தேடுகிற அளவு அவகாசம் இருப்பதாய்த் தோன்றவில்லை. யாரேனும் கவனித்தால் அவன் அங்கே நின்றுகொண்டிருப்பதன் காரணம் பற்றி அநாவசியமாய் கேள்வி எழுப்பக்கூடும். நான் திரும்பி வந்தபோது அவன் எழுந்திருந்தான். ‘ரொம்ப நன்றி தலைவா!’ என்றான். நான் புன்னகைத்து அவன் தோளில் தட்டிக் கொடுத்தேன். என்னை மாதிரியே அவனும் வாசற்கதவைத் அடிக்கடி பார்க்கிறானோ என்று தோன்றியது. அவனைக் கூட்டிக் கோண்டு தோட்டத்தில் ஷாமியானாவுக்கு வந்தேன். அவன் மனைவி, பையனைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் அந்த வீட்டுக்குள் பெண்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் இருப்பதாகச் சொன்னான். முகூர்த்தத்துக்கு நேரமாகிவிட்டபடியால் அநேகமாக அவர்கள் உடைமாற்றி புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கலாம் என்றும் உபரியாய் தெரிவித்தான்.
இங்கிருந்து ஒரு கூட்டம் எட்டு மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்ஸில் கிளம்பி பெண் வீட்டிலேயே நடக்கவிருக்கும் கல்யாணத்துக்குப் போவதாக ஏற்பாடு. தோட்டத்திலேயே வரிசையாய் சேர் டேபிள் போட்டு வந்திருந்தவர்களுக்கு காலை டிபன் முடிந்துவிட்டது. நிறைய சந்தனப்பொட்டு யுவதிகளும், முண்டு உடுத்திய சேட்டன்மார்களும் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்த அந்த வீட்டுக்குள் பாலா எங்கேயிருக்கிறான் என்று தெரியவில்லை. நேற்று சாயங்காலம் முதற்கொண்டே அவன் ரொம்ப பிஸியாய்த்தான் இருந்தான். அவன் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளியிருந்த, காலியாயிருந்த அவன் மாமா வீட்டில்தான் மற்ற பேருடன் நான் தங்கியிருந்தேன். அங்கே பசங்களுக்கு 2T ஆயில் கேனில் கள்ளும், அப்புறம் மற்ற சரக்கு பாட்டில்களும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு “என்ஜாய்” என்று பாலா சொல்லிவிட்டு கிளம்பும்போதுதான் அவனை கடைசியாய் பார்த்தது.
பஸ் வந்துவிட்டதாகவும் புறப்பட்டுத் தயாராயிருப்பவர்கள் போய் ஏறிக்கொள்ளலாம் என்றும் ஒரு வெற்றிலை வாயர் அறிவித்துவிட்டுப் போனார். கிட்டத்தட்ட எல்லாருமே தயாராகத்தான் இருந்தார்கள் போல. பளபளவென்று குளித்து உடைமாற்றிக்கொண்டு என்னுடன் ரயிலில் வந்திருந்தவர்கள் எல்லோரும்கூட இவ்விடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். திடீரென்று பாலாகூட வீட்டுக்குள்ளிருந்து கல்யாணக்கோலத்தில் வெளிப்பட்டு அரசியல்வாதிபோல நண்பர்களுக்கு கையாட்டிவிட்டு அவனது சேச்சி குடும்பத்துடன் ரோஜாப்பூக்கள் ஒட்டியிருந்த ஒரு டாடா சுமோவுக்குள் ஏறிக்கொண்டான். நான் பஸ் எங்கே என்று விசாரித்தேன். ரோடு குறுகலாக இருப்பதால் ரொம்ப தூரத்துக்கு முன்னமே திருப்பி நிறுத்தப்பட்டிருப்பதாய் சொன்னார்கள். வீட்டிலிருந்து கிளம்பி ஒரு சின்ன ஊர்வலம் போல மெதுவாய் எல்லோரும் பஸ் இருக்கிற திசை பார்த்து நடக்க ஆரம்பித்தார்கள். எல்லோரையும் மிக அலங்காரமாய் சுறுசுறுப்பாய், புத்துணர்ச்சியுடன் ஒரு கல்யாண வீட்டில்தான் பார்க்க முடியும் என்று தோன்றியது. நடக்கிற பெண்கள் கூட்டத்துக்குள் நான் அவளைத் தேடினேன். எங்கேயும் தென்படவில்லை. அவள் இன்னும் கிளம்பவில்லையா?
பஸ்ஸை அடைந்தபோது ஏற்கெனவே ஒரு கூட்டம் இருக்கைகளை நிரப்பியிருந்தது. அதுதவிர இன்னும் இத்தனை பேர். கல்யாணம் நடக்கிற இடத்துக்கு இரண்டு மணி நேரம் நின்று கொண்டுதான் போகவேண்டும்போல. நான் அந்த மெயின் ரோட்டில் நின்றுகொண்டு பஸ் கிளம்பும்போது தொற்றிக்கொள்ளலாம் என்று காத்திருந்தேன். கிளம்ப இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகுமென்று யாரோ சொன்னார்கள். பின் இருக்கையில் அவன் சாய்ந்திருப்பதைப் பார்த்தேன். அவனெப்படியோ ஒரு இருக்கையைப் பிடித்துவிட்டான். பக்கத்தில் அவன் மனைவியும், அவன் பையனும். எனக்கு மறுபடி அவன் வாந்தியும், அந்த புறவாசற்கதவும், படிகளும் ஞாபகத்துக்கு வந்தன. அவளை மறுபடி பார்க்கவேண்டும் என்கிற ஆவல் திடீரென்று தோன்றியது.
நான் மெல்ல பாலாவின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கே யாரெல்லாம் இன்னும் கிளம்பாமல் இருப்பார்கள்? நடக்கும்போதே ஏதோ ஒரு விவகாரமான யோசனையில் வாட்சை கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். பாலாவின் வீட்டையடைந்தபோது அதிகம் அரவமில்லாமலிருந்தது. கிட்டத்தட்ட எல்லோரும் கிளம்பி விட்டார்கள் போல. தோட்டத்தில் ஷாமியானாவையும், டேபிள்களையும் பிரித்துக் கொண்டிருந்த ஒரு சில வேலையாட்களைத் தவிர வேறு யாரையும் காணோம். நான் எதற்கு இத்தனை தூரம் மெனக்கெட்டு வந்தேன் என்று எனக்கே புரியாமல் இருந்தது. கேட்டைத் தாண்டி பக்கவாட்டிலிருந்த வாசலை அடைந்தபோது அவள் படிகளில் ஓய்வாய் உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்து லேசாய் அவள் கண்களில் ஆச்சரியம் விரிந்து மெதுவாய் எழுந்தாள். நான் எதுவும் பேசத் துவங்கும் முன்பாக அவள் கேட்டாள். “இப்போ நல்லா இருக்காரா நிங்ஙளுடெ ச்சங்ஙாதி?”
அவன் என் ச்சங்ஙாதியில்லை என்று மீண்டும் அவளிடம் சொல்ல விரும்பினேன். பதிலாக ‘அவனுக்கு இப்போது ஒன்றும் பிரச்சனையில்லை’ என்றேன். கூடவே அவள் கல்யாணத்துக்குக் கிளம்பாமல் இப்படி நடையில் உட்கார்ந்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகத் தெரிவித்தேன். அவள் ஒரு மெல்லிய புன்முறுவலை உதடுகளில் படரவிட்டாள்.
“ஞான் அதிகம் இம்மாதிரி எடத்துக்கு போறதில்ல..” என்றாள். கொஞ்சம் இடைவெளிவிட்டுப் பின்னர் தயக்கத்துடன்.. “சொல்றதுக்கென்ன? பர்த்தாவு மரிச்சதினு சேஷம்தான்” என்று சேர்த்துக்கொண்டாள். அவள் மறைக்க விரும்பின வருத்தம் லேசாய் அவள் முகத்தில் கோடிட்டுக் காட்டிவிட்டது. எனக்கு ஏதேதோ உணர்ச்சிகளைப் பூசிக்கொண்டு ஒரு இனம்புரியாத அதிர்வொன்று மனதிற்குள் ஓடியது. ஓரிரு விநாடிகள் செய்வதறியாது நின்றிருந்தேன்.
“ஆனா என்டெ மோள் கல்யாணத்தினு போய்ட்டுண்டு..” என்றாள் முகம் மலர்ந்து. பின்னர் ஓரிரு விநாடிகள் அவள் மெளனமாய் எதையோ யோசித்துவிட்டு சட்டென்று “எந்தா நிங்ஙள் புறப்பட்டில்லே?!!” என்றாள்.
நான் யோசித்து “போகணும். என் வாட்சைக் காணோம். இங்க எங்காவது கழண்டு விழுந்ததான்னு பாக்க வந்தேன். நீங்க ஏதாவது பாத்தீங்களா?” என்றேன். எதற்காக என் வாயிலிருந்து பொய் இத்தனை சரளமாக வருகிறது? அவள் ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தது எனக்கு என்னவோ போல் இருந்தது. என் முகத்திலிருந்து ஏதாவது கள்ளத்தனத்தை கண்டுபிடித்துவிட்டாளா என்று லேசாய் சந்தேகம் எழுந்தது.
அவள் சட்டென்று அவளின் மூடிய வலது கை விரல்களை என் முன் நீட்டினாள்.
“‘இதுவா பாருங்க”
எனக்குள் ஒரு சின்ன திடுக்கிடல் நிகழ்ந்து குழப்பமாய் அவளை நோக்கிக் கைநீட்டினேன். என் நீட்டிய என் விரல்களின் மேலாக வைத்து அவள் விரல்களைப் பிரித்தாள். வெறும் விரல்கள். நான் ஏமாந்ததைப் பார்த்து வரிசைப் பற்கள் தெரிய ரொம்ப அழகாய்ச் சிரித்தாள்.
“இதுதான்” என்றேன் திடீரென்று.
நான் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டதை என் விரல்களுக்குள் இறுக்கமாக மூடிக்கொள்வதைப் பார்த்து அவள் சிரிப்பின் வீரியம் குறைந்து வேறு ஏதேதோ உணர்ச்சிகள் அவளது முகத்தை நிறைத்தன. இறுக்கின கையைப் பிரிக்காமல் அவளை நோக்கி ஒரு அர்த்தப் புன்னகை பூத்துவிட்டு மனசில்லாமல் வாசலை நோக்கி நடந்தேன். நான் மறையும்வரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் என்பது நான் திரும்பிப் பார்த்தபோதெல்லாம் தெரிந்தது.
கல்யாணம் முடிந்து அன்று மத்தியானமே ட்ரெயின் ஏறிவேண்டியிருந்தது. இங்கிருந்து சென்னைக்கு பதினாலு மணி நேரம் ஆகும். இப்போது என் எதிர்சீட்டிலேயே அவன் சிரித்தவாறு உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் முகம் இப்போது ரொம்பத் தெளிவாய் இருந்தது. பக்கத்தில் அவன் மனைவியும் பையனும். வெளியே கேரளத்தின் தென்னந்தோப்புகள் பின்னோக்கி விரைந்து கொண்டிருந்தன. அந்தப் பையன் என்னையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். என்னிடம் கேட்பதற்கு அவனுக்கு என்னவோ இருப்பதுபோலொரு பாவனை அந்தப் பையன் முகத்தில் தெரிந்தது.
“என்னடா கண்ணா?” என்றேன்.
அவன் இறுக்கமாய் மூடியிருந்த என் வலது கை விரல்களை உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டான்.
“கைல என்ன வெச்சிருக்கீங்க அங்கிள்?”
நான் சுதாரித்து சட்டென்று அவனிடம் விரல்களைப் பிரித்துக் காண்பித்து “ஒண்ணுமில்லடா..”என்றேன்.
– மார்ச் 23 2006