விசுவாசம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 1,426 
 
 

தற்போதெல்லாம் மனம் போன போக்கில் வாழ்கின்றனர். படிக்காத அல்லது அளவாக படித்தவர்களை விட மிக அதிகம் படித்தவர்கள் தவறுகளை, பின் விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் செய்கின்றனர். பணத்துக்காக நம்பிக்கை துரோகமும் செய்கின்றனர்.

கரணுக்கு தன்னுடன் பணியாற்றும் கிரணை, அவனது போக்கை சுத்தமாகப்பிடிக்கவில்லை. முதலாளிக்கு தேவையில்லாமல் நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வான். ‘ஏன்?எதற்கு?’ என்று கேட்பவர்களை முதலாளியுடன் நம்பகமாக பேசி வேலையை விட்டே தூக்கி விடுவான்.

முதலாளி வெளி நாடு சென்ற சமயம் ஒரு நாள் காலையிலேயே போதையில் வந்தவன், தானே முதலாளி போல் நடந்து கொண்டதும், பெண் ஊழியர்களின் அருகில் அமர்ந்து கொண்டு அவர்களுக்கு பிடிக்காதது போல் நடந்து கொண்டதும், அலுவலகத்தினரின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதிக்க வைத்தது.

கரணிடம் வந்த கிரண் “உன்னை மாதிரி யோக்யனா இருந்தா வாழ்க்கைல ஒன்னுமே செய்ய முடியாது. தொழில்ல பல கோடி சம்பாதிச்சாலும் முதலாளிகள் தான் ஆடம்பரமா கார்ல போவாங்க. ஆடம்பர பங்களாவுல வாழ்வாங்க. நானும், நீயும் ஆயுசுக்கும் பைக்ல பரதேசி மாதிரி தான் போகனம். வாடகை வீடே கதின்னு கிடக்கனம். ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள் ‘னு சொல்வாங்க. பக்கத்து கம்பெனி முதலாளி சிங்காரம் மாசம் ஐம்பதாயிரம் எனக்கு தர்றாரு. உனக்கு பத்து தர்றேன். கஷ்டமர் போன் நெம்பரை அவருக்கு கொடுத்து இங்க வர்ற பாதி ஆர்டரை அவரு கம்பெனிக்கு மாத்திடனம். இங்கேயும் பாதிக்காது, அவருக்கும் வருமானம். நமக்கும் வெகுமானம்” என்றான் சகுனியைப்போல் கண் சிமிட்டியவாறு கிரண்.

“இத பாரு, சம்பளம் போதலேன்னா நான் வேற கம்பெனிக்கு போயிடுவேன். உன்னைப்போல நம்பிக்கைத்துரோகம் செய்ய என்னால முடியாது” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கூறி விட்டான் கரண்.

அடுத்த நாள் வெளி நாட்டிலிருந்து வந்த முதலாளி தருண், தன் இருக்கையில் கரணை அமர்த்தி “இன்று முதல் நீங்க சம்பளம் வாங்கிற வேலைக்காரர் இல்லை. என்னுடைய பங்குதாரர். அதாவது முதலாளி. இதுவரைக்கும் உங்களுடைய சிறப்பான ஆலோசனைய நான் கேட்டதால பத்து லட்சத்துல ஆரம்பிச்ச என்னோட பிசினஸ் இன்னைக்கு பதினைந்து நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணற அளவுக்கு பல கோடி மதிப்புக்கு உயர்ந்திருக்கு. ஒரு முதலாளிக்கு விபரமானவங்களை விட விசுவாசமானவங்கதான் முக்கியம். நீங்க விபரத்தோட விசுவாசமாகவும் இருக்கறீங்க. அதான் பங்குதாரரா நியமிச்சிட்டேன். வருகிற லாபத்துல பத்து சதவீதம் உங்களுக்கு கிடைக்கும். வேலைக்கு ஆள் எடுப்பது, நீக்குவது உங்க பொறுப்பு ” என்று முடித்த போது முதலாளி தருண் கரணின் கண்களுக்கு தெய்வமாகத்தெரிந்தார்.

‘முதல் வேலையாக தன்னை வேலையை விட்டு தூக்கி விடுவான் கரண்’ என எண்ணிய கிரணுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. ஆம். ‘ஐம்பதாயிரம் கூடுதலாக சம்பளம் அடுத்த மாதம் முதல் தனக்கு வழங்கப்படும்’ என்ற செய்திதான் ஆச்சர்யத்துக்கு காரணம்.

“கிரண் விபரமானவன், ஆனா விசுவாசமானவன் இல்லை. அவனுக்கு தேவை பணம். அதுக்காகத்தான் விசுவாசத்தை மறந்து இது வரை செயல் பட்டான். அவனை வேலையை விட்டுத்தூக்கினால் வெளியில் இருந்து நமக்கு இடையூறு பண்ணத்தான் போகிறான். அடுத்த கம்பெனிக்காரர் சிங்காரம் அவனுக்கு கொடுக்கிற ஐம்பதாயிரம் பணத்தை நாமே அவனுக்கு சம்பள உயர்வுன்னு சொல்லி கொடுத்து விட்டால் விபரம் பிளஸ் விசுவாசம் நமக்கு கிடைச்சிடும். அதான் அவனை வேலையை விட்டுத்தூக்காம சம்பளத்தை உயர்த்தினேன்” என்று தன் முதலாளி தருணிடம் கரண் பேசியதை ஒட்டுக்கேட்ட கிரண், இதுவரை வேலை பார்க்கும் கம்பெனிக்கு எதிராக தான் செய்த தவறை எண்ணி வருந்தியதோடு, ‘இனி மேல் வாழ்நாளில் இது போன்ற செயலை மனதிலும் எண்ணிடக்கூடாது’ என்று தனக்குத்தானே உறுதி மொழி எடுத்துக்கொண்டான்.

கம்பெனியின் தலைமைப்பொறுப்பேற்ற கரணின் நல்ல சாணக்யமான செயலால் மனம் மாறிய கிரண் தன் கம்பெனிக்காக விபரமாகவும், விசுவாசமாகவும் உழைக்கத்தொடங்கினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *