வான் சிறப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 2,884 
 
 

திருக்குறள் கதைகள்

மழையின் சிறப்பைக் கூறுதல்

சோழநாட்டில் வாழ்ந்த சிலம்பி என்ற பெண், ”கம்பர் வாயால் புகழப்படவேண்டும்” என்று கம்ப ருக்கு 500 பொன் அளித்து, “தன்னை வாழ்த்தும் படியான ஓர் பாடல் பாடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள். பொன்னைப்பெற்ற கம்பர்,

“தண்ணீரும் காவிரியே, தார்வேந்தனும் சோழனே –
மண்ணாவதும் சோழ மண்டலமே”

என்று வாழ்த்தினார். இவ்வாழ்த்தைக் கேட்ட அவள், “என்னை வாழ்த்தும்படியாகத் தங்களை வேண்டிக்கொண்டதற்குத் தாங்கள் தண்ணீரை வாழ்த்துகிறீர்களே” என்றாள். அப்போது கம்பர், “தண்ணீரைமட்டும் வாழ்த்தவில்லை. தண்ணீரைத் தரும் மேகத்தையும் உட்பொருளாக வாழ்த்தினேன். மேகம் மழைபெய்யாவிட்டால் தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாவிட்டால் விளைபொருள் இல்லை. இவைகள் இல்லாவிட்டால் உலகில் எந்த உயிரும் பிழைத்திருக்க முடியாது. நீ உயிருடன் பிழைத்திருப்பதற்குக் காரணம் உணவல்லவா? அவ்வுணவு தண்ணீர் இல்லாவிட்டால் எவ்விதம் உண்டாகும்? மேலும், உனக்குப் பசியை நீக்கும் விளைபொருள்களை உண்டாக்கித் தருவதோடு தாகம் எடுக்கும்போது அந்நீரே உணவாகக் குடித்துக் களைப்பு நீங்குவதற்கும் பயன்படுகிறதல்லவா? ஆகையால் தண்ணீரைத் தரும் மேகத்தை உட்பொருளாக அமைத்து நீரை வாழ்த்தினேன்” என்றார். இதைக் கேட்ட அவள், “என் பசியை நீக்கும் விளைபொருள் களை உண்டாக்கி உதவுவதோடு தானும் உணவாகத் தாகத்தை நீக்கி உதவி செய்யும் தண்ணீரை வாழ்த்தியதைக் குறை கூறினோமோ?” என்று வருந்தி, “தாங்கள் இவ்விதம் காக்கும் மேகம் தரும் தண்ணீரை வாழ்த்தியதை அறியாமல் குறையாகச் சொல்லிவிட்டேன்” என்று புலவரிடம் மன்னிப்பு வேண்டினாள். இதையே, வள்ளுவரும் நல்ல உணவுப்பொருளை உண்டாக்குவதோடு தானும் உணவாக உண்ண உதவுவது மழைநீரே ஆகும் என்று நீரின் உதவியைச் சிறப்பித்துள்ளார்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

துப்பார்க்கு = உண்பவர்க்கு
துப்பு ஆய = நன்மை ஆகிய
துப்பு = உணவுகளை
ஆக்கி = உண்டாக்கி
துப்பார்க்கு = உண்பவர்க்கு
துப்பு ஆயதும் = தானும் உணவாய் இருப்பதும்
மழை = மழை நீரே ஆகும்.

கருத்து: மழை மக்கள் உண்ண உணவைத் தருவ தோடு தானும் உணவாக உண்ண உதவுகிறது.

கேள்வி: மழை மக்களுக்குச் செய்யும் நன்மைகள் எவை?

விளக்கம்: துப்பு’ என்ற சொல் பலதரம் வந்தது சொற்பின் வருநிலை அணி. உயர்திணையில் கூறி இருப்பினும் அஃறிணைக்கும் இது பொருந்தும்.

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *