நம் தமிழகத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அவரின் வள்ளுவம் பற்றி பேசப்படாமல் இருக்க முடிவதில்லை. குறளை தலைகீழாக ஒப்புவித்தல் தொடங்கி, குறளில் ‘சொல் கண்டுபிடி’ வரை விதவிதமான போட்டிகளும் நடைபெறுகின்றன. குறள் நிஜமாக நம் வாழ்வில் பேசுமா?
வாசலில் யாரோ வருவது போல் தெரிய, “யாரது?” என்று கேட்டுக் கொண்டே வந்தேன். இந்த தெருவில் உள்ள ராமசாமி தான.
“ஐயா, என்னை தெரியுதுங்களா ?. நான் இப்போ இங்க ஸ்கூல்ல தமிழ் டீச்சரா சேர்ந்துருக்கேன். உங்ககிட்டே எதாவது பழைய தமிழ்ப் புத்தகம் இருந்தா, கொடுத்தா உதவியா இருக்கும்”. ராமசாமி ஒரு காலத்தில் என் மாணவன். மேலே போகும் முன் என்னைப்பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன். அந்த அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகி ஒய்வு பெற்றவன். அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவன். இன்னும் மேலே வேண்டாமே. கதைக்கு இது போதும்.
விரிவுரைகளுடன் கூடிய திருக்குறள் புத்தகம் ஒன்றை என் வாழ்த்துக்களுடன் அவனிடம் கொடுத்து விட்டு யோசனையுடன் என் சாய்வு நாற்காலிக்கு வந்தேன். மனைவியிடம் தெரிவித்தேன். அவளோ, ” அரசு வேலைக்கு என்று அவனவன் எவ்வளவு கஷ்டப்படறான். இவனுக்கு எப்படி கிடைச்சுருக்கும். நோண்டிப்பார்த்தா இதிலே கண்டிப்பா அரசியல் பின்புலம் இருக்கும். அவன் கட்டிய வேஷ்டி பார்த்திங்களா? கரை வேஷ்டி. எது ஆளும் கட்சியா இருக்கோ அந்த கரை தான் அதில் இருக்கும்” என்றாள்.
நானும் என் பங்குக்கு சொன்னேன்: ” எனக்குத் தெரிந்து ஏதாவது கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸ் மூலமா டிகிரி வாங்கியிருக்கக்கூடும். அவன் பத்தாவதில் கோட்டை. தமிழிலே “ழ ” கூட சரியாய் சொல்லத் தெரியாது. திருக்குறளை திருகுரல் என்று எழுதுவான். என்ன செய்வது, எல்லாம் கலி காலம்”.
அப்புறம் ஒரு வாரம் கழித்து மாலை நேரம் நான் செல்லும் பூங்கா வழியில் அவனை ஒரு டாஸ்மாக் கடையில் கூட்டத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கள்ளுக் குடித்து விட்டு “கள்ளுண்ணாமை” பற்றி நல்ல பாடம் சொல்லி தருவான் போலிருக்கே!.
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
(அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக; நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக! புலியூர்க் கேசிகன் – திருக்குறள் – புதிய உரை)
இன்னொரு முறை ஒரு கசாப்பு கடையில் பார்த்தேன். நல்ல கூட்டம். அது வார இறுதியும் இல்லை. எதுக்கு இவ்வளவு கூட்டம் என்று தோண்டியது. பக்கத்தில் உள்ள ஒரு ஆளை கேட்க அவன் சொன்னான்: ” நாளே காந்தி நாள். இறைச்சிக் கடை எல்லாம் குளோஸ் பண்ணுவாங்க. அதான் , இன்னிக்கே ஸ்டாக் வாங்கிறோம்.”. ராமசாமி “புலான்மறுத்தல்” பற்றி எப்படி பாடம் எடுப்பான் என்று எனக்கு ஒரு ஆச்சரியம். ஒரு நாளுக்கு மாமிசம் தியாகம் பண்ண முடியவில்லையா?”
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
(கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கைதொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும் – புலியூர்க் கேசிகன் – திருக்குறள் – புதிய உரை)
அப்புறம் ஒரு இரண்டு மாதமாக நான் ராமசாமியைப் பார்க்கவில்லை. என்னவாயிற்று ? ஒரு வேலை இந்த பெண்களுக்கு உள்ளூர் சேதி தெரிய வாய்ப்புண்டு என்று என் திருமதியிடம் விசாரித்தேன்.
அவள் சொன்னாள். ” உங்களுக்கு நியூஸே தெரியாதா?. அந்த ஆளுக்கு வேறு ஊர்லே இன்னொருத்தன் பொண்டான்டி மேல் தொடுப்பு உண்டு. அதனாலே வேலையை அங்கே மாத்திக்கிட்டப்பாலெ. வகுப்புக்கு குடிச்சிட்டு வர்றானாம். இவன் மேலே நெறய புகார் கூட வருதாம் .”
திருக்குறளின் ” பிறனில் விழையாமை” அதிகாரத்தைப் பற்றி இவன் எப்படிப் பாடம் எடுக்கப் போகிறான் என்று எனக்குள் வினா எழும்பியது.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
(பிறன் மனைவியை இச்சித்துப் பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறன் மட்டுமன்று; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்
– புலியூர்க் கேசிகன் – திருக்குறள் – புதிய உரை)
அந்த பள்ளியில் ஒரு குடியரசு தின விழாவில் என்னை விருந்தினராக பேச அழைக்க, நான் சென்றேன். விழா முடிந்து தலைமை ஆசிரியருடன் ராமசாமிப் பற்றி விசாரித்தேன். “ராமசாமியா! அவன் மேல் நெறைய புகார் வந்துருக்கு. வேற இடத்திலுருந்து அவன் மேல் ஆக்சன் எடுக்க வேணாம் என்று பிரஷர் வேற. நல்ல வேலையா, அவன் வேற ஸ்கூல் மாத்தி போயிட்டான். நமக்கு தலைவலி இல்ல.”.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. தோண்டினா, பெரிய பூதம் வரும் போலிருக்கே. பின்னர், பல நாட்களாக எனக்கு தூக்கம் போய்விட்டது. இந்த மாதிரி ஆட்களால் கல்விக்கே இழுக்கு அல்லவா? தாயே , சரஸ்வதி! உனக்கும் இது பொறுக்குமா? கல்வியின் மாண்பை நிலை நிறுத்த என்னால் எதாவது செய்ய முடியுமா?.
வருடங்கள் வேகமாக ஓட நான் ராமசாமியை முழுதும் மறந்து விட்டேன் என்றே சொல்லலாம், அந்த இனிய வசந்த நாள் வரும் வரை. அன்று என் மனைவி என்னிடம் வேகமாக வந்து ” என்னங்க, இந்த நியூஸ் பார்த்திங்களா?” என்று சொல்லிக்கொண்டே ஒரு நாளிதழில் வந்த செய்தி வாசிக்கவும் ஆரம்பித்தாள். “போலி சான்றிதழ் மூலம் 10 வருடம் மேலாக அரசு பணியில் இருந்த ஆசிரியர் டிஸ்மிஸ். ஓய்வு பெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் SSLC மற்றும் டிகிரி சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து பணியில் சேர்ந்த ராமசாமி ஏன்பவர் மேல் கல்வித்துறை தடாலடி நடவடிக்கை. பின்னணியில் உள்ள நபர்கள் பற்றி தீவிர புலன் விசாரணை”.
அவளுக்குத் தெரியாது இந்த ராமசாமியின் மேல் நடவடிக்கைக்கு நான் ஒரு காரணம் என்று. 5-6 வருடம் முன்பு, என் கல்வித் தோழன் ஒருவன் அந்த பள்ளிக்கு வருகை செய்யும் தகவல் ஒரு தினசரி மூலம் தெரிய வர, அவரை சந்தித்தேன். அவர் கல்வித்துறையில் பெரிய அதிகாரி. நேர்மையின் அடையாளம் என்று பெயர் எடுத்தவர். அவரிடம் இந்த ராமசாமியைப் பற்றி விசாரித்து ஏதாவது தகிடுதத்தம் தில்லுமுல்லு இருந்தால் பார்க்கவும் என்று குறிப்புணர்த்தினேன். மேல்மட்ட அழுத்தங்களை மீறி கடைசியில் இது முடிவுக்கு வந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
நிறைவாக சரஸ்வதி ஜெயித்து விட்டாள். வள்ளுவர் சொன்னது நிஜமாகிறது.
“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்”
(களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல், எல்லாம் வந்தது போல, விரைந்து ஒழிந்தும் போய்விடும் -புலியூர்க் கேசிகன் – திருக்குறள் – புதிய உரை)
– MyVikatan-ல் 8-மார்ச்-2023 அன்று வெளியானது.