கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,960 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடல் கொந்தளிப்பு இரண்டு நாட்களின் பின் அடங்கி இருந்தது. இந்தக் கடற் கொந்தளிப்பினால் தொழிலுக்குப் போகாத சூசைமுத்து, தனது கொட்டிலுக்கு வெளியில் வந்து வானத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு,வானம் சற்றுத் தெளிவாக இருந்ததால் சிறிது முகமலர்ச்சியோடு மீண்டும் கொட்டிலுக்குள் புகுந்தான்.

‘என்ன இண்டைக்குக் கடலை போகல்லையா…. சிலுவை ராசா அண்ணன். அவக போறாகளாமே….? சூசைமுத்துவின் மனைவி அந்தோனியம்மா கேட்டாள். அவளது மனத்திற்குள் இரண்டு நாளையக் கஸ்டம் ஊறிப் படர்ந்திருந்தது. கூலிக்கு மீன் பிடிக்கும் சூசைமுத்து இரண்டு நாட்களாகத் தொழிலுக்குப் போகாததால் வீட்டில் தனது ஒன்பது பிள்ளைகளோடு அனேக கஸ்டங்களை அந்தோனியம்மா சமாளிக்க வேண்டியிருந்தது.

வானத்தைப் பார்த்து நிலைமையைக் கவனித்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து சூசைமுத்து அந்தோனியம்மாவின் கேள்விக்குப் பதிலைச் சொல்லிக் கொண்டே அவன் கடலுக்குப் போக ஆயத்தமானான். தனது வலைகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு தன்னோடு சேர்ந்து வழக்கமாகத் தொழிலுக்கு வரும் சிலுவைராசா வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். குடும்பக் கஸ்டங்கள் அவனது மனதில் ஒவ்வொன்றாக விரிந்து கொண்டிருந்தன. இதற்கு ஒரு விடிவுகாலம் எப்பொழுது வருமென்ற கேள்விக்குறி மனத்தில் எழுந்து நீள, சிலுவைராசாவையும் கூட்டிக் கொண்டு தனது சம்மாட்டி சந்தியாகுவின் வள்ளத்தை எடுத்து, பாயை விரித்துக் கட்டி பாலை தீவுக் கடலை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். வள்ளம் அலைகளின் மீது தாவி மனவேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

2

முதல் நாள் சென்ற வள்ளங்கள் ஏற்கெனவே கரையை அடைந்து விட்டன. இவர்களுக்கெல்லாம் நன்றாக மீன் பட்டிருப்பதாக அந்தோனியம்மா கேள்விப் பட்டு மனதிற்குள் சந்தோசப் பட்டுக் கொண்டாள். சூசைமுத்துவுக்கும் மீன் நன்றாகப் பட்டிருக்கும் என்ற எண்ணம் தான் அவளுக்கு. இருந்தாலும் ‘மீன் பட்டுத்தான் என்ன…. அந்தச் சம்மாட்டி எங்களுக்கு அள்ளியா கொட்டப் போறாக’ என்ற எண்ணமும் அவளின் மனத்தில் எழுந்து அந்தச் சிறிய சந்தோசத்தையும் நிர்மூலமாக்கிச் சென்றது. மற்ற வள்ளங்கள் எல்லாம் கரையை அடைந்தும் சூசைமுத்துவின் வள்ளம் இன்னும் வராததால் அந்தோனியம்மாவுக்கு மனம் ஓடி இருண்டு கறுத்தது. மற்ற வள்ளங்களில் வந்த மீன்களெல்லாம் ஏற்கெனவே குருநகர் கடற்கரை ஓரத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்டன. சம்மாட்டி சந்தியாகுவும் வள்ளத்தைப் பார்த்துக் கொண்டு நெடு நேரமாகக் குருநகர் கடற்கரையில் காத்துக் கொண்டு நின்றார்.

அந்தோனியம்மாவால் வீட்டில் அமைதியாக இருக்க முடியவில்லை. தனது கைக் குழந்தையையும் இடுக்கிக் கொண்டு கடற்கரைக்கே வந்துவிட்டாள். அவளை அறியாமலே அவளின் வாய் ‘பிரியதத்த மந்திரம்’ சொல்லத் தொடங்கியது. அவளின் மனம் ‘அந்தோனியாரே அவகளுக்கு ஒண்டுமில்லாமல் இஞ்சாலை கொண்டு வந்து சேர்த்துவிடு’ என்று வேண்டிக் கொண்டது. அவள் பாலைதீவுக் கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள். தூரத்தில் ஏதோ ஒரு வள்ளம் வருவதை அந்தோனியம்மா உன்னிப்பாகக் கவனித்து விட்டு, அது சூசை முத்துவின் வள்ளம் தான் என்று கணிப்பெடுத்துக் கொண்டாள். வள்ளம் குருநகர்க் கடற் கரையை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது.

வள்ளம் வரச் சுணங்கியதால் மனம் குமைந்து கொண்டு நின்றார் சம்மாட்டி. அருகே இருந்த முத்தம்மாவும் இருதய நாயகி அக்காவும் ஏற்கெனவே வள்ளத்தில் வந்து மீன்களைச் சுளகில் போட்டுவிட்டு சுற்றி நின்ற வியாபாரிகளைப் பார்த்து-

‘ஏன் நிக்கிறீக கேளுங்கவன்?’ என்றார்கள். உடனே ஒரு வியாபாரி. ‘முப்பது ரூபா’ என்றான்.

‘என்ன இவ்வளவு பாரைக்குமா? ஏன் இருக்கிறா அப்ப தான் நல்லா விப்பாயாக்கும்….’ என்றாள் முத்தம்மா.

‘அப்பசரி, அம்பது ரூபா’ என்றான் வியாபாரி. உடனே முத்தம்மா-

‘ஆர் அறுபது ரூபாக்காரர்… அறுபது ரூபாக்காரர்….’ என்றாள். அப்பொழுது இன்னொரு வியாபாரி.

‘எழுபது’ என்றான்.

எனவே முத்தம்மா மீண்டும்

‘ஆர் எழுபது ரூபாக்காறர் எழுபது ரூபாக்காறர்…. என்று கூறி மற்றச் சம்மாட்டி மாருக்கு மீன்களை விற்றுக் கொடுத்ததைப் பார்த்தபொழுது சந்தியாகுச் சம்மாட்டிக்கு ஆத்திரம் வந்தது. ஆத்திரத்தால் அங்கும் இங்கும் வள்ளம் வரவேண்டிய திசையைப் பார்த்துக் கொண்டு நடந்து திரிந்தார். வள்ளம் கரையை அண்மித்துக் கொண்டு வந்தது. சந்தியாகுச் சம்மாட்டிக்கு இப்பொழுது தான் மனதில் சந்தோஷம் ஏற்பட்டது.’

சூசைமுத்து வள்ளத்தைத் திருப்பிக் கரையை நாடி வந்து கொண்டிருக்க, சிலுவைராசா பாயைக் கழற்றி வள்ளத்தை சூசைமுத்துவோடு சேர்ந்து தடியைத் தண்ணீரில் தாட்டு ஊன்றிக் கரையை நோக்கி வலித்தான். வள்ளம் கரைக்கு வந்து விட்டது.கரைக்கு வந்த வள்ளத்தை சம்மாட்டி ஒரு தடவை எட்டிப் பார்த்தார். வள்ளம் நிறைய பாரை மீனும் எறியாலுமாகவே இருந்தன. சம்மாட்டியின் மனம் செவ்வரத்தைப் பூவாக மலர்ந்தது.

‘என்ன சூசை பாரை நல்லாப் பட்டிருக்குப் போல?’

‘ஒமுங்க சம்மாட்டி, பாரை மட்டுமா எறியாலும் புழை இல்லாமல் பட்டிருக்கு..’ ‘செபத்தியன் சம்மாட்டிக்கும் பாரை நல்லாப் பட்டிருக்கெண்டு கால சொன்னாக….’ சந்தோசமிகுதியால் சொன்னார் சம்மாட்டி.

சூசைமுத்து வள்ளத்திலிருந்து மீன்களையெல்லாம் ஒன்றும் விடாது பொறுக்கி சம்மாட்டியிடம் கொடுத்தான். சம்மாட்டி சந்தியாகு வழக்கமாகக் கொடுக்கும் கூலியை சூசை முத்துவுக்கும் சிலுவை ராசாவுக்கும் கொடுத்தார். அதோடு வழக்கமாக அவர்களுக்குக் கறிக்குக் கொடுக்கும் இரண்டு மூன்று மீன்களையும் கொடுக்கத் தவறவில்லை.

சூசைமுத்து தனக்குக் கிடைத்த இரண்டு மூன்று மீன்களையும்

அந்தோனியம்மாவிடம் கொடுத்தான். கொடுத்துவிட்டுத் தான் வலையைத் தோளில் போட்டுக் கொண்டு முன்னே நடந்தான். அவனைத் தொடர்ந்து அந்தோனியம்மா பின்னுக்குச் சென்றாள்.

‘இண்டைக்குப் பாரை நல்லாப் பட்டிருக்கெண்ட உடன உங்கட சம்மாட்டியின்ர முகத்தைப் பார்த்தீகளா?’ அந்தோனியம்மா கேட்டாள்.

‘சம்மாட்டிக்கு என்ன, அவுக சந்தோசப் படுவாக தானே! நாம இருக்கிறமே வெயிலும் மழையும் குடிச்சு கடலுக்கையே கிடந்து இரத்தத்தைப் புளிஞ்சு உவகளுக்கு உழைச்சுக் குடுக்க’

‘இண்டைக்குப் பாரை நல்லாப் பட்டிருக்கெண்டு கூட ஒரு அஞ்சு பத்த ரூபாவைத் தந்தாங்களா உங்கடை சம்மாட்டி……’

‘நாங்களென்ன சம்மாட்டியின்ர புள்ளகுட்டிகளா…… அவகளுக்குக் கூலிக்கு மீன்புடிக்கிறவக தானே….. நீ நினைக்கிற மாதிரி அவக நல்லாத் தந்தாக…. அதுக்கும் சந்தியாகு சம்மாட்டியா……”

‘ஏன் உவ்வளவு இலாப மெடுக்கிறவக எங்களுக்கு ஒரு அஞ்சு பத்து றூபாவைத் தந்தாச் செத்தா போயிடுவாக…… நாமும் அவகளுக்காகக் கஷ்டப் படகிறவங்க தானே……?

‘அஞ்சு பத்து கூடவ…. ஓ…. அவுக தருவாக நீ வாங்கிடுவ… உதெல்லாம் என்னத்துக்கு எங்களுக்கெண்டு ஒரு வள்ளம் இருந்தாக் காணாதா? உவங்களையா நாம நம்பி இருக்க வேணும்’ என்று சொல்லி குடிசையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

3

சம்மாட்டிக்கு இரத்தத்தையும் சதையையும் பிழிந்து கொடுத்து அலுத்துப் போன சூசைமுத்துவின் மனதில் தான் ஒரு வள்ளம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் அனேக நாட்களாக முளைவிட்டிருந்தது. ஆனால், வள்ளம் வாங்கக் கூடிய பொருளாதார வசதி அவனிடமில்லை. வள்ளம் வாங்கக் கூடிய பணத்தைத் தன்னுடைய இனசனத்திடம் கடனாகக் கேட்கவும் அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. இறுதியாகத் தனக்குச் சொந்தமாகவுள்ள இரண்டு பரப்புக் காணியை ஈடுவைக்கலாமென்று தீர்மானித்தான்.

இந்த ஈட்டிற்காக அவன் பல்லுக் காட்டாத ஆட்களே குருநகரிலில்லை.

காணி பெறுமதியில்லையென்று எல்லோரும் கையை விரித்து விட்டார்க்ள.

கடைசியாக சூசைமுத்துவின் பழைய நண்பனான மாணிக்கத்திடம் தான், போய் அறுதியாகவாகுதல் காணியை ஈடுவைக்கலாமெனத் தீர்மானித்தான். இந்த யோசனையை அந்தோனியம்மாவுக்கும் சொன்னான். காணியை ‘அறுதி’ யாக ஈடுவைப்பது அந்தோனியம்மாவுக்கும் உள்ளூர விருப்பமில்லைத் தான். இருந்தாலும், சூசைமுத்துவின் கடும் உழைப்புத் திறமையையும் மன ஓர்மத்தையும் நினைத்துக் கொண்டு ‘அந்தோனியார் எங்களை கைவிடவா போறாரு’ என்ற எண்ணமும் சேர்ந்து மனத்தெம்பை அளிக்க அறுதியாகக் காணியை வைப்பதற்கும் சம்மதித்து விட்டாள்.

மாணிக்கம் பல கள்ளிறக்கும் தொழிலாளர்களைத் தனக்குக் கீழ் வைத்துக் கள் இறக்கி விற்றுத் தொழில் செய்யும் முதலாளி. மாணிக்கத்தின் கள்ளுக் கொட்டில் பல குருநகரிலும் இருக்கின்றன. மாணிக்கம், தானே தனிய கள்ளிறக்கி, கொட்டில் நடத்திய காலத்திலிருந்தே சூசைமுத்துவைத் தெரிந்தவன். சூசைமுத்துவின் கண்ணியத்தையும் சம்மட்டிக்கான கடும் உழைப்பையும் பற்றிப் பல கடற்றொழிலாளர் தனது கொட்டிலில் பேசுவதையெல்லாம் கேட்டிருக்கிறான். சூசை முத்துவிடம் அவனுக்கு நல்ல மதிப்பு இருந்தது. அதே போல மாணிக்கத்தின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் பற்றி சூசைமுத்துவின் காது கேட்கப் பலர் பேசியிருக்கின்றார்கள். இன்று மாணிக்கம் நான்கு பெரிய மனிதர்கள் மதிக்குமளவுக்குப் பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தான்.

இறுதியாக மாணிக்கத்திடம் தனது காணியை அறுதியாகவாகுதல் ஈடுவைத்து ஓரு மூவாயிரம் பெற்று வள்ளம் ஒன்றுவாங்கலாமெனத் தீர்மானித்துக் கொண்டான் சூசை முத்து.

மாணிக்கம் அப்பொழுது தான் கொட்டில் விசயங்களை முடித்துக் கொண்டு வந்து நரிக்குண்டடியில் உள்ள தனது வீட்டில் ஆறி இருந்தான். மாணிக்கத்தின் படலை திறந்து சத்தம் கேட்டது. முன் விறாந்தைக்குப் போட்டிருந்த தட்டியை நீக்கி மெதுவாக யார் வருவதென்று பார்த்தான். சூசைமுத்து மாணிக்கத்தின் வீட்டை நோக்கி நடந்து வந்தான்.

‘என்ன சூசையண்ணை இந்தப் பக்கம்?’

‘இல்லை மாணிக்கம் உன்னட்டைத் தான் ஒரு முக்கிய அலுவலாக வந்தனான்.’

‘ஏன் இந்த வெயிலுக்காலை வந்த நீங்கள். நிழல் தாண்டாப் பிறகு

வந்திருக்கலாமே. இஞ்சாலை வாருங்கோ… கதிரேலை இருங்கோ….. என்ன விசயமாய் வந்தனீங்கள்?’

‘நான் இப்ப பிள்ளை குட்டிக் காரனாய்ப் போனன். கூலிக்கு மீன் பிடிச்சு சம்மாட்டி மாருக்குக் குடுத்துக் குடும்பம் நடத்த ஏலாது. அதுதான் எனக்கு வள்ளமொண்டு வாங்க காணியை ஈடுவைக்க வேணும். அறுதியாக எண்டாலும் பறவாயில்லை. இந்த உதவியை நீ எனக்குக் கட்டாயம் செய்து தரவேணும்….’ ‘வள்ளம் வாங்க எவ்வளவு காசு வரும்’

‘அதுக்கு இப்ப கிட்டத் தட்ட மூவாயிரம் வேணும்…..’

‘எந்தக் காணியை ஈடுவைக்கப் போறீங்க’

‘எனக்கு எத்தினை காணி இருக்கு. குடி இருக்கிற ஒரு காணி தானே?’ ‘அதையும் அறுதியாக வைக்கவா…..? ‘

‘வேற என்ன மாணிக்கம் செய்ய, உந்தச் சம்மாட்டிமாருக்கு நாம ஏன் வீணாகமுறிஞ்சு கொடுக்க வேணும்?’

‘சரி சூசையண்ணை நீங்கள் இருக்கிற குடி நிலத்தை அறுதியாக வைக்க வேணாம், நீங்கள் என்னைத் தேடி வந்த படியால் நான் உங்களுக்குக் கட்டாயம் உதவி செய்ய வேணும். நான் கைமாத்தாக மூவாயிரம் தாறன். நீங்கள் வசதியான நேரம் தாருங்கோ…!’

‘அப்ப மாணிக்கம் வட்டி என்ன மாதிரி?’

‘எனக்கு வட்டியும் வேண்டாம், நீங்கள் வள்ளத்தை வாங்கித் தொழிலை விருத்தி பண்ணுங்க’.

சூசைமுத்துவுக்கு மனம் சந்தோசத்தால் பூரித்தது. தன்னுடைய சமூகத்து மக்கள், நினைத்தும் பார்க்க முடியாத உதவியை மாணிக்கம் தனக்குச் செய்ய முன்வந்ததை சூசைமுத்துவால் என்றுமே மறக்க முடியாததாக இருந்தது. அவனுக்கு மாணிக்கத்தின் காலில் விழுந்து கும்பிட வேணும் போல் இருந்தது.

மாணிக்கமும் சூசைமுத்துவும் இறுதியாக அயலில் சாராயம் விற்கும் செல்லத் தம்பி வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். மாணிக்கத்தின் கையில் மனைவி நாகம்மா சமைத்த ஆட்டிறைச்சிக் கறியின் பார்சல் இருந்தது.

4

சூசைமுத்து வள்ளம் வாங்கியது குருநகரில் காட்டுத் தீ போல் பரவியது. இது சம்மாட்டி சந்தியாவுக்குத் தெரியாமல் விட்டிடுமா என்ன? அன்று சந்தியாகுச் சம்மாட்டி இதைப் பற்றி சூசைமுத்துவிடம் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

சூசைமுத்து சம்மாட்டியின் வள்ளத்தில் தொழிலுக்குப் போய் விட்டு அப்பொழுது தான் வந்து கொண்டிருந்தான். சூசை முத்து வள்ளம் வாங்கியது சம்மாட்டிக்கு மனதிற்குள் ஆத்திரமாகவே இருந்தது. சூசை முத்துவைப் போல ஒரு திறமையான, தனக்கு இலாபம் காட்டக் கூடிய உண்மையான தொழிலாளியைத் தான் தேடிப் பிடிப்பது கஸ்டம் என்றதும், இவ்வளவு நாளும் தன்னிடம் கைநீட்டிக் கூலி வாங்கிய தொழிலாளி இனிமேல் தன்னைப் போல ஒரு சம்மாட்டியாக வந்தாலும் வரலாம் என்ற எண்ணமுமே மனதில் விளைந்த ஆத்திரத்திற்குக் காரணமாகும்.

சம்மாட்டிக்கு அன்றும் நல்ல மீன் பட்டிருந்தது. சிலுவைராசா அணியத்திலிருந்து தண்டை வலித்து வள்ளத்தைக் கரைக்குக் கொண்டு வந்தான். வள்ளம் நிறைய சீலாவும் கொடுவாவுமாக இருந்தன. சம்மாட்டி சந்தியாகு வள்ளத்தை எட்டிப் பார்த்து விட்டு-

‘சூசைமுத்து இன்னும் எத்தனை நாளைக்கு கூலிக்கு மீன் பிடிக்கப் போறாக…..?’

இந்தக் கேள்வியிலிருந்து தான் வள்ளம் வாங்கியதைப் பற்றி சம்மாட்டி அறிந்து கொண்டார் என்று சூசைமுத்து உணர்ந்து கொண்டான்.

‘ஏன் சம்மாட்டி அப்பிடிச் சொல்றீங்க……?’

‘ஏன் நீயும் ஒரு வள்ளம் வாங்கித்தானே இருக்கிற…….’

‘ஓழுங்க உங்களுக்குச் சொல்ல வேணுமெண்டு தான் இருந்தன்?’ ‘எப்ப தொடக்கம் அந்தப் புது வள்ளத்திலை தொழிலுக்குப் போகக் போறீங்க….’ ‘வாற ஞாயிற்றுக் கிழமை நல்ல நாளாம். நீங்கள் தான் நிண்டு எல்லாம் செய்ய வேணும். உங்க வீட்டுக்கு வாறத்துக்குத் தான் இருக்கிறன்…’

‘ஓ….. கட்டாயம். அந்த அந்தோனியார் எல்லாம் நல்லாத்தான் செய்வாரு.

ஒண்டுக்கும் பயப்படாத. நீ நல்லா இருக்கிறது தான் எனக்கு நல்ல விருப்பம். சுவாமிக்கு எல்லாம் சொன்னீங்களா வள்ளத்தை வந்து ஆசீர்வதிக்கச் சொல்லி’.

‘ஓ. அதெல்லாம் நாளைக்கு அந்தோனியம்மாவை விட்டுச் சொல்லுவமெண்டுதான் இருக்கிறன்’.

‘அப்ப சரி, ஞாயிற்றுக் கிழம மட்டும் என்ரைய வள்ளத்திலை தொழிலுக்குப் போறதுதானே..’

‘இதென்ன சம்மாட்டி…. இகி… கி…. வேற எங்க போறது’.

‘அப்ப சரி நான் வாறன்’ என்று சொல்லிவிட்டு சம்மாட்டி தனது வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். சூசை முத்துவும் தனது வலைகளைத் தோளில் போட்டுக் கொண்டு தனது குடிசையை நோக்கி நடந்தான்.

5

குருநகரில் சாதிக் குழப்பம் காரணமாக அங்கிருந்த தாழ்த்தப் பட்ட மக்கள் குடி எழும்பி வேறு வேறு இடங்களுக்குப் போயிருந்தனர். அந்த மக்கள் விட்டுவிட்டுச் சென்ற வீடுகளுக்குச் சில சமூக விரோதிகள் தீவைத்தார்கள். சில வீடுகளிலிருந்த சாமான்களைக் கூடத் தாங்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அயல் மக்களாக வாழ்ந்து வந்த இத் தாழ்த்தப் பட்ட மக்களையும் தங்களையும் பிரித்து பகைமையை வளர்த்து விட்ட சமூக விரோதிகளை சூசைமுத்து மனதில் தூஷித்திருக்கின்றான். தனது சமூகத்து மக்கள் செய்ய முன் வந்திருக்க முடியாத பெரிய உதவியைச் செய்த மாணிக்கத்தை அடிக்கடி நினைவு கூருவான்.

இந்தப் பரிதாபகரமான நிலைமைக்கு ஒரு தீர்வுகாணச் சூசைமுத்து தன்னாலியன்றதைச் செய்தான். தமது கட்டளைக் குருவானவரையும் பெரிய பெரிய சம்மாட்டி மார்களையும் சமாதான நீதவான்களையும் சந்தித்துக் கதைத்துமிருக்கிறான்.

இந்த நிலைமை தொடர்ந்தும் இருப்பதையிட்டு மிகவும் மனம் நொந்து இருந்தான்.

சூசைமுத்து அடுத்த ஞாயிற்றுக் கிழமை தனது வள்ளத்தை முதன் முதல் கடலில் இறக்குவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து வந்தான். ஏன், ஒரு ஆடு கூட அறுப்பதற்கு எண்ணியிருந்தான்.

கடற்கரைக்கு அண்மையில் கொண்டுவந்து விட்டிருந்த அவனது புது

வள்ளத்தைப் பார்த்த போது, மணக் கோலத்தில் கம்பீரமாக நிற்கும் ஓர் ஆண் மகனைப் பார்க்கும் தந்தையின் சந்தோசம் அவனுக்கு.

வள்ளத்தின் அழகை மேலும் கீழும் பக்கவாட்டிலும் குனிந்து பார்த்துப் பார்த்து மகிழ்வான். வள்ளத்திற்கு ‘அந்தோனியா’ என்ற பெயரும் சூட்டியிருந்தான். அடுத்த ஞாயிற்றுக் கிழமையை வெகு ஆவலோடு எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தான் சூசைமுத்து.

6

குருநகரில் இரவு எட்டு மணிக்குப் பின்னர் ஜன நடமாட்டத்தைப் பொலிசார் கட்டுப் படுத்தியிருந்தனர். எனவே பொழுது கருகும் வேளையில் சிலுவை ராசாவைத் தனது வீட்டிற்கு வரும்படி ஆள் அனுப்பியிருந்தார் சம்மாட்டி. சம்மாட்டி ஆள் அனுப்பியிருந்ததால் சிலுவைராசா ஏழு மணிபோல் சம்மாட்டி வீட்டிற்குப் போயிருந்தான்.

சம்மாட்டி ஒரு வெள்ளைப் போத்தல் சாராயத்தை உடைத்துச் சிலுவை ராசாவுக்கு முன்னால் வைத்துவிட்டு, தானும் அதில் சிறிதளவை வார்த்துக் குடித்தார். சிலுவைராசாவையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கச் சொன்னார்.

சிலுவைராசாவும் எடுத்துக் கொண்டிருந்தான். பீலிசுக்குள் இறைச்சிக் கறியைப் போட்டு சம்மாட்டியின் மனைவி காணிக்கையம்மா கொண்டு வந்து வைத்தாள். சம்மாட்டியும் சிலுவை ராசாவும் மாறிமாறிக் குடித்தார்கள். குடித்து ஓரளவுக்கு வந்ததும் சம்மாட்டி அங்கும் இங்குமாக பார்த்து விட்டு, சிலுவை ராசாவின் காதுக்குள் ஏதோ சொன்னார்.

‘என்ன சம்மாட்டி உங்கள வள்ளத்துக்குமா…?’ ஆச்சரியமாகக் கேட்டான் சிலுவைராசா.

‘உஸ்ஸ்…’ என்ற சொல்லி சிலுவைராசாவின் வாயைப் பொத்தி வெளியில் கூட்டிக் கொண்டு போனார் சம்மாட்டி.

7

குருநகர் சன நடமாட்டமின்றி வெறிச்சு இருண்டு கிடந்தது. சாமமானதால் சனங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தனர். திடீரென்று நாய்கள் அங்கும் இங்கும் ஓடி பேயைக் கண்டது போல் ஆவேசமாகக் குரைக்கத் தொடங்கின.

சிலுவை ராசா.

‘எளிய சாதியள் எங்கடை வள்ளத்துக்கு நெருப்பு வைச்சிட்டாங்கள் உவங்களை விட்டு வைக்கக் கூடாது’ என்று நெஞ்சு பதறக் கத்திக் கொண்டு சம்மாட்டி வீட்டுப் பக்கம் வேகமாக ஓடினான்.

இந்தச் சத்தத்தைக் கேட்டுக் குருநகர் மக்கள் அனைவருமே எழுந்து விட்டனர். எழுந்து ஓடிவந்து ளியும் வள்ளங்களுக்கு கடல் நீரை அள்ளி ஊற்றி நெருப்பை அணைக்க முயன்றனர்.

சூசைமுத்துவும் அப்பொழுது தான் எழுந்து தனது வள்ளத்தை நோக்கி ஆவேசமாக ஓடி வந்தான். ஓடி வந்தவன் தனது வள்ளம் நெருப்புப் பிடித்துச் சுவாலை விட்டெரிவதைக் கண்டு,

‘ஐயோ அந்தோனியாரே என்ர வள்ளத்துக்கு ஆரோ நெருப்பு வெச்சிட்டாங்க… ஓடியாருங்கோ…..’ என்று உரத்துக் கத்தினான். அவனைத் தொடர்ந்து அவன் மனைவி அந்தோனியம்மாவும் ஓடிவந்தாள். இதற்கிடையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணியை அள்ளி சூசை முத்துவின் வள்ளத்துக்கும் ஊற்றி நெருப்பை அணைத்தனர். வள்ளம் எரிந்து அலங் கோலமாக இருந்தது. அதைப் பார்த்த அந்தோனியம்மா துக்கம் தாங்க முடியாது ஓ… என்ற தலையில் கைவைத்துக் கதறி அழுதாள்.

சூசைமுத்து எரிந்து முடிந்த வள்ளத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு . நின்றான். அவனது விழிக் கோணங்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அருகில் அந்தோனியம்மா பேயறைந்தவள் போல் மரமாக நின்றாள்.

சம்மாட்டி சந்தியாகு பதட்டம் ஏதுமின்றி சூசைமுத்துவின் வள்ளத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.

வள்ளத்திற்கு நெருப்பு வைத்த ‘எளிய சாதிக் காரரை’ சிலுவைராசாவும் மற்றும் சில வாலிபர்களும் பயங்கர ஆயுதங்களோடு தேடிப் பல திக்குகளாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.

சூசைமுத்து இன்னமும் அழுது கொண்டே இருக்கிறான்.

அவனது வள்ளம் ‘அந்தோனியா’ இனிக் கடலில் இறங்காது.

– மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *