கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2023
பார்வையிட்டோர்: 2,022 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதன் முதலிலே அந்தப் பஸ்தரிப்பிடத்திற்கு ரகுதான் வந்தான். அவனுக்கு அந்தப் பாதையிலே வருகின்ற எல்லா பஸ்களையும், அதன் இலக்கம் – நேரங்களையும் நன்றாகவே தெரியும். சரியாக பன்னிரெண்டு பத்திற்கு அவன் அங்கே வந்தான். பஸ், வழமையாகவே அந்த இடத்திற்கு பன்னிரெண்டு இருபதுக்கு வந்துவிடுவது வழக்கம். எப்படியிருந்தாலும் பத்து நிமிடங்கள் முன்ன தாக வருவதை அவன் எப்போதுமே வழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றான்.

ஊமை வெய்யில், வயிற்றைக் குமட்டவைக்கிற அழுக்கெல்லாம் ஒன்றாய்க் கலந்த கூவம், நாற்றத்தை மெல்ல வீசிய காற்றினிலே சேர்த்துக் கொண்டிருந்தது. இவன், கூவம் பக்கமாக திரும்பிப் பார்க்க மனமின்றி எதிரே உயர்ந்து தெரிகின்ற கட்டிடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஐந்து நிமிஷத்திற்கு மேலே கட்டிடங் களையும், எதிரே சுவரில் ஒட்டப்பட்டிருந்த சினிமாப் போஸ்டர்களையும் பார்க்க இயலவில்லை. எரிச்சலாய் வந்தது அவனுக்கு. காலில் வேறு ஏதோ கடிப்பது போலிருந்தது. ஆத்திரத்தோடு உதறினான். பின்னர் கணுக்காலடியிலே இலேசாகச் சுரண்டினான்,

எதிரே பஸ் ஒன்று வருவது தெரிந்தது. ஆனால் ஜன நெரிசல் காணப்படவில்லை . நேரம் பிந்தி வருகிறதோ இல்லையோ எந்த நேரத்திலும் ’27-ஈ’ பிதுங்கிக் கொண்டுதான் வருவது வழக்கம். சந்தேகத் தோடு அந்த பஸ்ஸையே பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று பேர்தான் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தார்கள். 4வது இலக்க பஸ். மூலைப்பக்கமாக உட்கார்ந்திருந்த சடைத் தலையன் ரகுவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த போது அவனுக்கு மிகுந்த எரிச்சல் உண்டாயிற்று. காலடியில் கிடக்கிற கல்லை எடுத்து சரியாக அவனது நெற்றியில் அடிக்க வேண்டும் போலத் தோன்றியது. அவனை அடிப்பதற்குப் பதிலாக கல்லை காலினால் எற்றி விட்டான்.

“ஸார் 27-ஈ’….” என்று இளைஞனொருவன் கேட்கத் தொடங்கியதுமே இவன் உடனேயே அவனைத் தொடர விடாமல் பதிலினைக் கூறினான். “இல்லை … இன்னும் வரவேயில்லை…”

“மணி என்ன ஆச்சு ஸார்…?”

சொன்னான்.

“பன்னிரெண்டு இருபத்தொன்றா? ஐயையோ பன்னிரெண்டரைக்கெல்லாம் ‘இன்டர்வியூ’ ஸார்….”

இளைஞனின் குரலிலே பதட்டம். ஃபைலை கைமாற்றியவாறு வீதியைப் பார்த்தான். அவசரமென்றால் ஆட்டோரிஷாவில் போவது தானே என்று அவனுக்குச் சொல்லத் தோன்றிற்று, பிறகு அவனது தோற்றத்தைப் பார்த்ததும் அப்படிக் கூறுவதற்கு மனம் வரவில்லை.

“மணி என்ன ஆச்சு ஸார்…?”

லேசான வெறுப்போடு அவனைப் பார்த்தான் ரகு. “

பன்னிரெண்டு இருபத்தேழு…”

சொல்லி முடித்த போது, புன்னகை குலுங்கிட ஸல்வார் கமிஸ் அணிந்த பெண்ணொருத்தியும், மழுமழுப் பான முகத்தோடான இளைஞனும் அவ்விடத்திற்கு வந்தனர்.

ஆங்கிலத்திலேயே 27-ஈ’ யைப் பற்றி ரகுவிடம் அந்த இளைஞன் கேட்டான். ரகு பதில் சொன்னதும் அந்தப் பெண், மெதுவான குரலிலே, ஆங்கிலத்திலேயே, “பஸ் வருகிற நேரம் வரட்டும். வா…அந்த ஓரமாகப் போய் பேசிக் கொண்டு நிற்கலாம்….பஸ் வராவிட்டால் கூட நல்லதுதான்” என்றாள். பிறகு அவனுக்கு அணைத்தாற் போல ஓரமாகப் போனாள்.

இளைஞன் ரகுவைப் பார்த்தான்.

“மணி பன்னிரெண்டரை ஆச்சா ஸார்…”

“பன்னிரெண்டு முப்பத்தைந்து” என்று கூறியவாறு அந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளிப்போய் நின்றான் ரகு. “சும்மா அறுத்துக் கொண்டே நிற்கிறான். பாழாய்ப் போன பஸ் வந்த பாடாயில்லை….”

களுக்கென்று அந்தப் பெண் சிரித்தாள். ஜலதரங்கம் போல தொடர்ந்த சிரிப்பு. ரகு அவர் களைப் பார்த்தான். நந்தவனமொன்றிலே ஏகாந்தமாய் நிற்கிற உணர்விலே அவர்கள். அதே சூழலுக்கான சிரிப்பு, பார்வை. நளினங்கள்.

இளைஞன் மெதுவாக ரவிக்கு அருகே வந்தான். அவன் வாயைத் திறக்க முன், ரவியே கூறினான்.

“பன்னிரெண்டு முப்பத்தேழு….. அதோ ஓர் ஆட்டோ … இதிலே போனாலும் ‘இன்டர்வியூ’வுக்குப் போய் விடலாம்…”

இளைஞன் நெற்றி வியர்வையை உள்ளங் கையினால் அழுத்தித் தேய்த்தவாறே வாடிய சிரிப்பொன்றினை உதிர்த்தினான்.

“என்ன தமாஸ் பண்ணுறீங்களா ஸார்?….”

ரகுவுக்கு அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தினை புரிந்து கொள்ள முடியவில்லை. புரியவும் முயலவில்லை அவன்.

தடித்த பெண்ணொருத்தி உஸ் உஸ்ஸென்று ஊதிய வாறே பஸ்தரிப்பு நிழற்குடைக்குள் ஒதுங்கினாள். பின்னர் மாராப்பை உதறி கழுத்துப் பக்கம் அழுத்தித் துடைத்தவாறே ரகுவின் பக்கமாய் திரும்பினாள்.

அவள் வாயைத் திறக்க முன் இளைஞன் முந்திக் கொண்டான்: “27-ஈ’ யா? இன்னும் வரவில்லை…”

அவன் சொன்னதையே கவனியாதவன் போல ரகுவைப் பார்த்து, ‘என்ன டைம் ஸார்?” என்று கேட்டாள் அந்தத் தடிச்சி.

“பன்னிரெண்டு நாற்பது…”

“இப்போது இன்டர்வியூ’ தொடங்கியிருக்கும். இரண்டாவது ஆள் உள்ளே போயிருப்பான்…”

ரகு மீண்டும் விலகிப்போனான். காலில் சுள்ளென ஏதோ கடிக்கவே எரிச்சலோடு உதறினான்.

தடித்த பெண் வெற்றிலையை எடுத்து வாய்க்குள் அதக்கிக் கொண்டாள். அவளுடைய பெண்ணைப் பிரசவத்திற்காக மருத்துவமனையில் கொண்டு போய் விட்டிருந்தாள். தலைப்பிரசவம். பெண், பயந்து எந்நேரமும் யாராவது பக்கத்திலிருக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். மாறி மாறி தடிச்சியும், அவளது தங்கச்சியும் மருத்துவமனையில் அவளுக்குப் பக்கத்திலிருந்தார்கள். இவள் போய் தங்கச்சியை வீட்டிற்கு சாப்பிடப் போவதற்கு அனுப்ப வேண்டும். எரிச்சலோடு வெற்றிலையை ‘புளீச்’ சென்று துப்பினாள் அந்தத் தடித்த பெண்.

கைத்தாங்கலாக இளவயதுப் பெண் ஒருத்தியோடு அந்த நிழற்குடைக்குள் வந்த இன்னொரு பெண், இருப்பதற்காக அவளை நிழற்குடை ஓரத்திற்குக் கூட்டிப் போனாள். கைத்தாங்கலாக வந்தவளிடம் மற்ற பெண் கருணையான குரலிலே கேட்டாள்:

“ராணி வலிக்குதா அம்மா ?…”

முனகலோடு ராணி சொன்னாள்: ”தாங்கவே முடியவில்லை அக்கா…ஊஊ…”

ராணியின் காலில் பலத்த வெட்டுக்காயம். ஏற் கனவே மருந்து கட்டியது. ஆனாலும் ரணம் மாறவே யில்லை. சீழ்பிடித்திருக்க வேண்டும். வலியினால் துடித்துக் கொண்டிருந்தாள்.

ரகுவுக்கு வயிற்றுள் நோவாயிருந்தது. காலையிலே வெறும் காப்பி மட்டுமே குடித்துவிட்டுத்தான் புறப் பட்டான். அலையோ அலையென்று ஒரே அலைச்சல். அறைக்குப் போய் குளித்துவிட்டுச் சாப்பிடலாம் என்று நினைத்துத்தான் பஸ் தரிப்புக்கு வந்தான். இரண்டு மணிக்கு மணிவாசகரிடம் கடனைத் திருப்பி வாங்க வேறு போக வேண்டும். மணியைப் பார்த்தான். ஒன்று. சரியாக ஒன்று.

“ஒரு மணி ஆகியிருக்குமா ஸார்..?”

அந்த இளைஞன் சோர்வான குரலிலே ரகுவைப் பார்த்துக் கேட்டான். பின்னர், “என் பெயர் மதுசூதனன். எம். ஏ. இகனாமிக்ஸ்” என்றான். ரகுவின் முகத்தைப் பார்த்த மதுசூதனனுக்கு தொடர்ந்து பேச அச்சமாயிருந்தது. திரும்பி ஓரமாகப் பார்த்தான். சல்வார் கமிஸ், மழுமழுப்பான முகமுடைய இளைஞ னுடன் ஆங்கிலத்தில் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டொரு கணங்களில் அழுதே விடுவாள் போலத் தோன்றியது.

“முதல் பேப்பர் இரண்டரை மணிக்குத்தானே ஆரம்பமாகும் என்று நீ சொன்னாய்… அதுவரைக்கும் இங்கே நின்று பேசலாம் என்றுதானே சொன்னாய்… இப்போதென்ன…. ஒன்றரைமணிதான். இன்னும் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போகலாம்…”

அவள் சிணுங்குவதை நிறுத்தினாள். “நிச்சயமாக பஸ் வருமா?…”

“வரும்…”

“அப்படியானால் சரி. இதைச் சாப்பிடு. எனது கோபத்தை மறந்து விடு….” அவள் கைப்பையைத் திறந்து ‘பபிள்கம் மை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டு தனக்கு அருகாக வந்த இரண்டு பெண்களைப் பார்த்தாள். அழகான, நீண்ட கூந்தலையுடைய சிவப்பான மெலிந்த பெண், சல்வார் கமிஸிடம் உடனேயே கேட்டாள்.

“இப்பத்தேழு ஈ நம்பரின பஸ்சு எல்டு ஹொத்திகே வருத்ததே…?”

சல்வார் கமிஸ் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த் தாள். அவனுக்கு புன்னகை அரும்பிற்று. அந்தப் பெண் இப்போது அவனை நோக்கினாள்.

“ஸார் கண்டே எஸ்டாயித்து?….”

“இதென்னடா கஷ்டம்… என்ன பாஷையில் எதை இவர்கள் கேட்கிறார்கள்…? கொஞ்ச நேரம் பேசலாம் என்றால் இவர்கள் விடவே மாட்டார்கள் போல இருக் கிறது… வா அந்தப் பக்கம் போகலாம்…..” என்றவாறு சல்வார் கமிஸ் அவனைப் பார்த்தாள்.

மற்றப் பெண் சிரித்தாள். அதே சிரிப்போடேயே ஆங்கிலத்திலே கேட்டாள்:

“ஸார் ’27-ஈ’ பஸ் இந்த இடத்திற்கு எத்தனை மணிக்கு வரும்….?”

சொன்னான். பின்னர் சல்வார் கமிஸின் பின்னே தொடர்ந்து போய் ஓரமாக நின்று பேசத் தொடங்கினான்.

தடிப்பான பெண் தாறுமாறாக யாரையோ ஏசிக் கொண்டிருந்தாள். கெட்டவார்த்தைகளில் ஆக்ரோஷ மாகத் திட்டியவளின் ரௌத்ரம் எல்லோரையுமே திடுக் கிட வைத்தது. அவளின் பால் கவனம் செலுத்தினார் கள். அவளை நேருக்கு நேராகப் பார்க்கவே பயமா யிருந்தது. பேசிய வார்த்தைகளில் கெட்ட வார்த்தை களை நீக்கி விட்டு நல்ல வார்த்தைகளை எண்ணினால் ஐந்து சொற்கள் தேறும். பஸ்சை நேரத்துக்கு விடத் தவறிய அரசைத்தான் திட்டிக் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் சுவாரஸ்யம் விட்டுப் போயிற்று. மீண்டும் தங்களின் யோசனையினுள் மூழ்கிப் போயினர்.

“நான் ஒரு மடையன்… வேகமாக நடந்து போயிருந்தாலும் இன்டர்வியூவுக்குப் போய்ச் சேர்ந்திருக்கலாம்….இந்த ஏழாவது ‘இன்டர்வியூ’வை அநியாயமாகத் தவற விட்டு விட்டேன்….”

மதுசூதனன் சொன்னதைக் கேளாதவன் போல ரகு வீதியையே பார்த்துக் கொண்டு நின்றான். பஸ்தான் வரவில்லை. ஓர் ஆட்டோ கூட இந்தப் பக்கம் வராதது அவனுக்கு அளவற்ற எரிச்சலை மூட்டியிருந்தது. எவ்வளவு அலுவல்கள் வீணாகிப் போய் விட்டன. 12.20க்கு வர வேண்டிய பஸ்தான் பிரேக்டவுன் என்று வைத்துக் கொண்டாலும் 1 மணி, 1.30 வரவேண்டிய பஸ்களுக்கு என்ன நடந்தது? அதை விட 4-சி, 23… இன்னும் மூன்று பஸ்கள். ஒன்றுகூட ஒருமணி நேரமாக இந்தப் பக்கமே வரவில்லை. ரகு நேரத்தைப் பார்த்தான். ஒன்று முப்பத்தியெட்டு. ரகு இப்படி ஒரு நாளுமே பஸ்ஸிற் காகக் காத்திருந்ததில்லை. சுற்று முற்றும் பார்த்தான். எதிரே தெரிகின்ற வீதி, சுற்றுப்புறமெல்லாம் நடமாட்டம் குறைந்திருந்தது. இவனுக்கு எல்லையில்லாத ஆச்சரியம். ஆட்டோ ரிக்ஷா, கார், சைக்கிள் எதுவுமே இல்லாமல் இதென்ன இப்படியொரு போக்குவரத்துத் தடங்கல். அதுவும் இந்தப் பரபரப்பான நேரத்திலே. அல்லா விடில் வழியில் ஏதாவது பெரிய விபத்து நேர்ந்திருக்குமோ?

பஸ் வரும் திசைக்கு எதிரிலிருந்து இப்போது ஒரு பஸ் டிரைவர், இன்னொருவருடன் சைக்கிளில் வந்து இறங்கினார். தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்த வாறு மனதிற்குள் முணுமுணுத்தார். “இரண்டு மணிக்குத் தானே ’27-ஈ’ வரவேணும். நல்ல காலம் 1.58 க்கு வந்து விட்டேன்…”

திடீரென்று குரலொன்று வீரிட்டது.

காயத்தோடு, இன்னொரு பெண்ணின் துணையோடு அங்கே வந்த பெண்-புண்ணின் நோவு தாங்காது வீரிட்டு அழத் தொடங்கினாள். துடிதுடித்து அழுது கொண்டிருந்தாள். தடித்த பெண் அவளுக்கு அருகாகப் போய் பரிவோடு அவளது கையைத் தொட்டு,

“அழாதே… பாழாய்ப் போன பஸ் வந்து விடும் அழாதே…” என்று தேற்றினாள். பின்னர் அவளிடம், பகளைப்பாயிருக்கும்…. கொஞ்சம் காப்பி சாப்பிடு ” என்றவாறு கையிலிருந்த பைக்குள்ளிருந்து பிளாஸ்கை எடுத்து டம்ளருள் காப்பியை ஊற்றினாள்.

“என்ன நீ? நான் எப்படி பரீட்சை எழுதப் போவது?… நீதானே இரண்டு மணி வரை இங்கிருந்து போகலாம் என்றாய்… இப்போது நேரமென்ன பார்….. இரண்டு ஐந்து…” அவள் தாறுமாறாக ஆங்கிலத்திலே அவனைத் திட்டத் தொடங்கினாள். சல்வாரால் கண்ணீரைத் துடைத்தவாறே விம்மத் தொடங்கினாள். இவன் மெதுவாக அவளிற்கு அருகாக ஏதோ சொல்லப் போனான். அவள் சல்வாரை உதறிக் கொண்டே உரத்த குரலிலே, “எனக்குக் கிட்ட வராதே போ ..” என்று சத்தம் போட்டாள்.

தடியூன்றிக் கொண்டு, அப்போது தான் பஸ்தரிப் பிற்கு வந்த கிழவர் ஒருவர், இருமியவாறே பஸ்டிரைவரை கண்களைக் கூசிக் கொண்டே பார்த்தார். இமைக்கு மேலே, விரல்களைக் குடையாக்கிப் பார்த்தபடியே, “யார் இது, நம்ம வெங்கடேசனா?” என்று கேட்டு அடுத்த கணமே இருமத் தொடங்கினார்.

பஸ் டிரைவர், தான் வெங்கடேசன் இல்லை என்று சொன்னபோதும் கிழவர் விடவில்லை. பஸ் டிரைவரின் கையை தனது நடுங்குகிற ஒற்றைக் கையால் பற்றிய படியே, “ஐயா…. 27-ஈ பஸ்ஸில் என்னைக் கொஞ்சம் ஏற்றிவிடு. கை காலெல்லாம் வலிக்குது” என்று கெஞ்சிய குரலில் கேட்டார். பஸ் டிரைவரும் “சரி” என்றார்.

தடித்த பெண் ஏதோ யோசித்து தீர்மானத்திற்கு வந்தவள் போல பஸ் டிரைவருக்கு அருகே வந்தாள். பஸ் எப்போது வருமென்று கேட்டாள். பஸ் டிரைவர் மிகுந்த சலிப்போடு, “எனக்குத் தெரியாதம்மா…” என்றார். உடனே அவளுக்கு ஆத்திரம் வந்து விட்டது. காறித்துப்பிவிட்டு பஸ் டிரைவர்கள் எல்லோரையும் திட்டத் தொடங்கி விட்டாள்.

மதுசூதனன் தனது வயிறு நோவதனை உணர்ந்து கொண்டான். காலையில் அவன் பட்டினி. நேற்று இரவு அரை வயிறு. தலை சுற்றுவதாகத் தோன்றிற்று. ஓரடி எடுத்து நடப்பதே சிரமமாகத் தெரிந்தது. பரிதாபமாக ரகுவைப்பார்த்தான். ரகுவுக்கு அவன் மேல் இரக்கம் தோன்றிற்று. கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே, “இரண்டரை ஆகிவிட்டது” என்றான்.

பஸ் டிரைவரின் முகத்திலே எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்தவனைக் கண்டதும் சந்தோஷம் மலர்ந்தது.

வந்தவர் சைக்கிளை நிறுத்தினார்.

“என்ன அண்ணே நிக்கிறீங்க…”

பஸ் டிரைவர் புன்னகை செய்தார்.

“27-ஈ’க்கு. நல்லா கேட்டாய், பஸ் ஸ்டாப்பிலை எதுக்கு நிற்பார்கள். நல்ல தமாஸ் கேள்வி…..”

சைக்கிள் காரர்,பஸ்டிரைவரை ஏளனமாகப்பார்த்தார்.

“அண்ணே … இந்தப் பக்கம் பஸ்ஸே வரா தண்ணே…”

“என்ன?” பஸ் டிரைவர் அதிர்ந்தார். “நான் டியூட்டிக்குப் போகணுமே…”

“நீங்க போக முடியாதண்ணே “

“ஏன்…?”

“அதுதான் அண்ணே … நம்ம மினிஸ்டருக்கு பெரிய வரவேற்பு ஒன்று நாளைக்கு இருக்குதண்ணே… மினிஸ்டர் ஃபாரின் போய் வெற்றியோடை திரும்பி வாரதாலை-இந்த ரோடு முனையிலை பெரிய வளைவு வைச்சு மக்களெல்லாம் வரவேற்கிறாங்க… வளைவைப் பார்த்தா…. அடேயப்பா ரோடுமுனை முழுதிலும் என்ன ஜோடனை அண்ணே ….. தேவலோகம் மாதிரி… நம்ம மினிஸ்டருக்குத்தான் என்ன செல்வாக்கு…. அட அட…”

சைக்கிள் காரர் சந்தோஷத்தில் மிதந்தார். மதுசூதனன் ஆத்திரத்தோடு சைக்கிள்காரனைப் பார்த்தான்.

“பஸ் அப்போ வராதா?”

“இதென்ன ஸார் இது?” சைக்கிள் காரன் ஏளனமாக மதுசூதனனைப் பார்த்தான்: “நம்ம மினிஸ்டர் ஃபாரினெல்லாம் போய் வெற்றியோடு வந்திருக்கிறார்… இது போல வளைவு யாருக்குமே வைத்ததில்லை என்ற மாதிரி நாங்க வளைவு வைக்கிறம். எவ்வளவு செலவு தெரியுமா…? எட்டு ரூபாவுக்கு மேலே… அந்த வளைவு போடத் தொடங்கினோமா-உடனே, பதினொன்றரை மணிக்கே இந்த ரோடை மூடி விட்டோம் தெரியுமா….. இனி, நாளைக்கு மத்தியானந்தான் இந்த ‘ரூட்டு’க்குப் பஸ் வரும்…”

பஸ் டிரைவர் தன்னையறியாமலே தடித்த பெண்ணைப் பார்த்து விட்டு, “சரி நானும் உன்னோடேயே வாரேன்…புறப்படு….” என்றவாறே-புறப்பட்ட சைக்கிள்காரரைப் பின்தொடர்ந்து அவசரமாய் செல்லத் தொடங்கினார்.

பஸ்தரிப்பில் நின்ற எல்லோரும் திகைத்துப் போய் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கும் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றனர்.

– 1985 – அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், முதற் பதிப்பு: டிசம்பர் 1985, தமிழோசைப் பதிப்பகம், சென்னை.

ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *