வளைகள் எலிகளுக்கானவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 28, 2024
பார்வையிட்டோர்: 605 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தியக் குடியரசில் இன்று இருபத்தெட்டு மாநிலங்கள். மேற் கொண்டு தேசிய தலைநகர் பிரதேசம் ஒன்றும் யூனியன் பிரதேசங்கள் ஆறும். ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவைத் தனியாகவும் மகா ராஷ்ட்ரத்தை விதர்பா, கொங்கன், மராத்வாடா என்று மூன்றாகவும் உடைத்தெடுக்க வேண்டும் எனும் கோரிக்கைள் இன்றும் தீவிரமாக இருக்கின்றன. தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்தால் நல்லது என்று சில ஆண்டுகள் முன்பு சின்னச் சலசலப்பு ஏற்பட்டது. கோவணத்தில் தீப்பிடித்தவர் போலக் குதித்தவர் அநேகம்.

இருபது ஆண்டுகள் முன்பு எம்.பி. யாக இருந்த சுப்ரமண்யம் சுவாமி கடல் தாண்டிய சுதந்திரத் தீவு ஒன்றையும் நமது மாநிலமாகச் சேர்த்துக்கொள்ளப் பரிந்துரை சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்காது. ஆனால் மனோரமா ஆச்சி நடித்த தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள சினிமாக்கள் எத்தனை, அதில் கருப்பு – வெள் ளைப் படங்கள் எத்தனை, வண்ணப் படங்கள் எத்தனை, வெளி வராமல் நின்று போனவை எத்தனை போன்ற என்சைக்ளோபிடியா அன்டார்டிகா தகவல்கள் துல்லியமாகத் தெரியும்.

உ.பி.யை இரண்டாகப் பகுத்து உத்ராஞ்சல், பீகாரைப் பகுத்து ஜார்கன்ட் செய்தது போல் மத்யப் பிரதேசத்தைப் பகுத்து சட்டிஸ்கர் செய்தார்கள். ராய்ப்பூர் தலைநகராயிற்று. தற்போது ஆந்திர பிரதேசத் துக்கும் ஒரிசாவுக்கும் மத்யப் பிரதேசத்தோடு எல்லை கிடையாது. மக்கள் குடியரசில் எல்லைகள் இருந்தால் தொல்லைகள் அதிகம்.

சட்டீஸ்கர் மாநிலத்தின் எல்லையோரம் மராத்திய மாநிலத்துக்கு கற்சிரோலி என்றொரு மாவட்டம் உண்டு. நாக்பூர், சந்த்ரப்பூர் போல கற்சிரோலி வெயிலும் குளிரும் கூடிய வறண்ட பூமி. அங்குள்ள சின்னஞ்சிறு கிராமங்களிலிருந்து ஐந்நூறு பேர் புறப்பட்டார்கள், தென்னாடு நோக்கி. படையெடுத்து அல்ல. கண்ணகிக்குச் சிலை யெடுக்க கல் சுமந்த கனகவிசயரின் அவமானம் துடைக்க அல்ல. கன்னியாகுமரியில் இருந்து மணல் எடுத்து சேர சோழ பாண்டியர் தலையில் ஏற்றி சந்த் துக்காராமுக்கு கோயில் கட்டவும் அல்ல.

அவ்வாறே ஆயினும் இன்றைய நவ சேர சோழ பாண்டியர்கள் என யாரை அடையாளம் காண்பார்கள்?

திருப்பதியில் பாலாஜியையும் கன்னியாகுமாரியில் நித்ய கன்யா பகவதியையும் மதுரையில் மீனாக்ஷியையும் ராமேஸ்வரத்தில் ராம லிங்கத்தையும் தொழுது புண்ணிய தீர்த்தங்கள் ஆடி… கிராமத்துக்கு ஐந்து பேர், பத்துப் பேர், பதினைந்து பேர் எனச் சேர்ந்தார்கள். எல்லாம் அறுபதும் எழுபதும் தாண்டிய சாச்சா சாச்சி, காக்கா காக்கி, மாமா- மௌஸி, வடீல்-ஆயி…

இரயில் கட்டணத்துக்கு மட்டும் தலைக்கு ஐந்நூறு ரூபாய். சாப்பாடு அவரவர் பாடு. தங்கல், ரயில் நிலைய ஆளற்ற பிளாட் பாரங்களில். தண்ணீர் இருந்தால் குளிப்பு, துவைப்பு. சன்டாஸ் போவது நீண்டதூரம் தண்டவாளங்களில் நடந்து. ஒருபக்கம் ஆண்கள் போனால் மறுபக்கம் பெண்கள் போவார்கள். வயோதிகம் என்ப தாலும் பெரும்பாலும் உபவாச நாட்கள் என்பதாலும் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் சன்டாஸ் வருவதில்லை. பிரயாணங்களின் போது ரயில் பெட்டிகளில் தண்ணீர் வசதி இருந்தால் மலஜலம் கழிக்கலாம். பெரும்பாலும் பாசஞ்சர் பயணிகளை ரயில்வே நிர்வாகம் மனிதர் களாகக் கருதுவதில்லை. குளிர்பதன ரயில் பெட்டி என்றால் கக்கூஸில் கூட மின் விசிறி இருக்கும். ஆனால் பாசஞ்சர் பயணிகள் லொத்தி, விட்டை, புழுக்கை, எச்சம் போடும் ஊர்வன, நடப்பன,பறப்பன பிரிவினர். அவர்களுக்கு எதற்குத் தண்ணீர் என்பது கருதுகோள்.

தலைக்கு ஐந்நூறு ரூபாய் என்பது பாசஞ்சர் வண்டிகளில் மாத் திரம் பயணம் செய்வதற்கான வட்டச் சுற்று சலுகைக் கட்டணம். பகலானாலும் இரவானாலும் இருக்கை வசதி மட்டுமே. படுக்கை வசதியோ முன்பதிவோ கிடையாது. காசிநாத் மானே லீடர். அவனை நேதா என்றும் சொன்னார்கள். நேதா என்றாலும் தலைவன் என்றுதான் பொருள். அவன் கீழ் ஏழெட்டுப் பேர் உதவி நேதாக்கள். எல்லோர் கையிலும் போலீஸ் விசில் போல ஒன்றிருந்தது. செம்மறி ஆடுகளுக் கும் தாராக் கோழிகளுக்கும் உள்ள கோல் மாதிரி அது. அந்த ஒழுங்கு பாலிக்கப்பட்டது. பக்கத்தில் இருக்கும் பெரிய ரயில் நிலையம் ராய்ப்பூர். அங்கிருந்து நாக்பூருக்குப் போகும் பாசஞ்சர் கற்சி ரோலியை ஊடுருவிப் போகும். அவரவர் காவ் பக்கத்தில் இருக்கும் ஸ்டேஷனில் ஏறிக்கொள்ளலாம். ஏறும் வண்டியும் நாளும் முன் தீர்மானிக்கப்பட்டவை. திரும்பிவர இருபதுக்கு மேல் முப்பதுக்குள் நாட்கள் ஆகும். எந்த வண்டிகள் என்பதும் நிச்சயமில்லை.

எல்லோர் கையிலும் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்ட ஏர்-பேக். அடையாளம் தெரிந்து கொள்ள ஒரு பக்கம் திரிசூலமும் மறு பக்கம் சிவலிங்கமும் அச்சடிக்கப்பட்ட பச்சை நிறத் துணிப்பை. ஒரு சதுர அடி அளவில் தோளில் தொங்கத் தோதாக. உள் பாக்கெட்டும் வெளிப்பாக்கெட்டும் வைத்துத் தைக்கப்பட்டதாக. வெற்றிலை, பாக்கு, தம்பாக்கூ, சுருட்டு, போர்வை, தண்ணீர் பாட்டில், தம்ளர், சில் லறைக் காசுகளும் அழுக்கு நோட்டுகளும் சுருட்டித் திணிக்கப்பட்ட பிஸ்வி, அலுமினியத் தட்டு. ஏர்- பேக்கில் மாற்றுடை ஒன்று, விரிக்க வும் போர்த்தவுமான கம்பளி, ஒரு மாதம் வரை கெட்டுப் போகாத தின்பண்டங்கள்- அவல் சிவ்டா, ராகி லட்டு, கொப்பரைத்தேங்காய், பூண்டு, வரமிளகாய், காயம், சீரகம், உப்புப்பரல் சேர்த்து மர உரலில் இடித்த லஸுன் சட்னி. பயணத்துக்கு அத்தியாவசியத் தேவைகளான செல்ஃபோன், கிரடிட் கார்டு, டிஜிடல் காமிரா, பைனாகுலர், வாக்மேன், மருந்து மாத்திரைகள், பாடி லோஷன், ஷேவிங் கிரீம், ஷேவ் லோஷன், வாசனை சோப்பு, தைலங்கள் கிரீம்கள் எதுவுமே கிடையாது

பயணிகளின் சுற்றுப் பயண சலுகை ரயில் கட்டணச் சீட்டு மொத்தமாக ஒன்று நேதா கையில் பத்திரமாக லேங்காவின் உள் பாக் கட்டில் இருந்தது. சாப்பாடு, சிற்றுண்டி, தேநீர், கோயில் கட்டணங் கள், தட்சணைகள், பிரசாதம், உண்டியல் காசு, தட்டில் போடுவது, தர்மம் போடுவது, சில்லறைப் போருட்கள் வாங்குவது எல்லாம் அவரவர் சுமைதலை.

அகலமும் நீளமும் கொண்ட, சிமன்ட்தளமிட்ட, மணல் பாவிய, வரிக்கற்கள் பாவிய, கூரையுள்ள, கூரை இல்லாத ரயில் நிலைய நடைமேடைகள் நாட்டில் நிறைய இருந்தன. தண்ணீர் குழாய்கள் இருந்தன. பத்து ரூபாய் கொடுத்தால் தண்ணீர் திறந்தும் விட்டார்கள்.

மழை பெய்து, சோயா, அவரை, துவரை,மணிலா,வெங்காயம், சோளம் பயிர் செய்து அறுவடையும் ஆன விச்ராந்தியில் கிடந்தன சின்னச் சின்ன விவசாயக் கிராமங்கள். சரியான மின்சார வசதியற்ற, சாலைகள் இல்லாத, மாடுகளும் மனிதர்களும் பாடுபட்ட குக்கிராமங் கள். சின்னச் சின்ன குழுக்களாக இருந்தனர். ஒரு குழுவின் பொது உபயோகத்துக்கு அலுமினியப் பானை தண்ணீர் பிடிக்க, குளிக்க, வெந்நீர் வைக்க. அகன்ற அலுமினியத் தாம்பாளம் ரொட்டிக்கு மாவு பிசைய, பாக்ரி மாவு பிசைய. கொஞ்சமாய் அரிசி போட்டுப் பொங்க ஒரு பாத்திரம்.உல் அல்லது பருப்பு அல்லது பாஜி வைக்க மற்று மோர் சிறிய பாத்திரம், இரும்புத் தவா…

சிறு உருண்டை மாவு எடுத்து கையால் ரொட்டி தட்டிக் கொள் வார்கள். அடுப்பு என்பது மூன்று செங்கல் துண்டுகள் அல்லது கருங்கல் துண்டுகள். அவசரக்காரர்கள் முதலிலும் ஆசுவாசம் கொண்டவர்கள் பின்னரும் அடுப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். அரைத்தல், இடித்தல், சலித்தல், பொடித்தல் கிடையாது. எல்லாம் முன்கூறாய் புறப்படுமுன் டப்பிகளில் அடைத்தவை. நக்கலாய் காட்டி மசாலா என்பார்கள் கனவான்கள். காட் எனில் பீடபூமி என்பதும் காட்டி என்பது பீடபூமியைச் சார்ந்தவர் என்பதும் இங்கு விளக்கம். வாங்கக் கிடைக்குமானால் வாங்குவதும் அல்லது சேகரித்துக் கொள்வதும்தான் விறகு. இற்றுக் கிடக்கும் ரயில் தாங்கு கட்டைகளின் கீறிப்பிளந்த துண்டுகள் மதமத என்று எரியும்.

ரயிலில் மண்ணெண்ணெய் கொண்டு செல்லக்கூடாது என்பது சட்டம் எனினும் சிலர் மறைவாக பம்ப் ஸ்டவ்வும் இரண்டு லிட்டர் கேனும் வைத்திருந்தனர். குழுவுக்குப் பொதுவான கோணியில் எல்லாம் முடிந்து கிடந்தன.

ராய்ப்பூரில் இருந்து கன்னியாகுமரி கணக்காக 2008 கிலோ மீட்டர். ராய்ப்பூருக்கும் நாக்பூருக்கும் இடையில் இருந்த பல ரயில் நிலையங்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக அவர்கள் ஏறினார்கள். வழியிலேயே இறந்து போகும் வயது. தப்பிப் போகும் அபாயமும் உண்டு. எனவே ஆளேறும் ரயில் நிலையங்களில் எல்லாம் வழியனுப்ப பெருங்கூட்டம். மஞ்சள் ஜிலேபி, பச்சை வாழைப்பழம், பஜ்ஜியா, வீட்டில் வறுத்த மக்காச் சோளமணிகள், மணிலாக் கொட்டை போன்ற தின்பண்டங்களுடன். என்றாலும் ஒரு பிளாட்பாரம் டிக்கட் கூட விற்பனையாகவில்லை. நாக்பூர் ரயில் நிலையத்தில் தலை எண்ணிக் கணக்கெடுப்பு, பச்சைப் பை, அடையாள அட்டை விநியோகம். நேதாவின் சிறியதோர் பிரசங்கம், பித்தளை ஜால்ரா, டோல்கி, மத்தளத்துடன் பஜனை… ஜெய்ராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்…

நாக்பூரில் இருந்து சந்த்ரப்பூர் வழியாக வாரங்கல். வாரங்கலில் இருந்து கம்மம் வழியாக பெஜவாடா. பெஜவாடாவில் இருந்து தெனாலி, ஓங்கோல், நெல்லூர், கூடுர் வழியாக ரேணிகுண்டா. அங்கு இறங்கி திருப்பதி பாலாஜி மந்திர்… கோவிந்தா கோவிந்தா…

நான்கு நாட்களுக்குப் பிறகு திருமலையில் நன்றாகத் துவைத்துக் குளித்தனர். தர்மசாலாவில் நல்ல ஜெவுண். இவ்வளவு சோறு ஒருச்சேர மதராஸிலோக் எப்படித் தின்கிறார்கள் என்பதில் அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம். அவர்களது சீலம் நாலைந்து முரட்டுச் சோள ரொட்டிகள், உசல் அல்லது லஸுன் சட்னி அல்லது காரமுள்ள பெரிய வெங்காயம். கடைசியில் சின்ன இட்லி அளவு சோற்றின் மீது உசல் அல்லது டால் ஊற்றிப் பிசைந்த சோறு, காது அடைக்காமல் இருக்க. வாழைக்காயில் எப்படி பாஜி செய்கிறார்கள் என்பது மற்றுமோர் ஆச்சரியம். இத்தனை கூட்டமாக வாழைத் தோட்டங்களையும் தென்னந் தோப்புக்களையும் அவர்கள் இதற்குமுன் கண்டதே இல்லை. மாடுகளை எங்கும் காணக்கிடைக்கவில்லை. மாடுகள் இன்றி இவர்கள் எப்படி விவசாயம் செய்கிறார்கள் என்று யோசித்தவாறு வந்தார் மகாதேவ் தெல்கே.

மறுபடியும் ரேணிகுண்டாவில் இருந்து பயணிகள் வண்டி பிடித்து காட்பாடி வழியாக ஜோலார்பேட்டை. அங்கிருந்து போகும் பாசஞ்சரை ஈரோட்டில் காலையில் பிடித்தார்கள்.

இறங்கும் நிலையம் வந்தால் மூட்டை முடிச்சுகளுடன் இறங்கிய தும் கிடைத்த இடத்தில் சமுக்காளம் விரித்து நடைமேடையில் இடம் பிடித்தனர். பிறகு தண்ணீர் தேடிப் போதல், விறகு சேகரித்தல், அடுப்புக் கூட்டி ரொட்டி சுடுதல்.இரவில் சுட்ட ரொட்டியை மீத்து காலைக்கும் ஆகும். காலையில் சுட்ட ரொட்டியை மீத்தது இரவுக்கும் ஆகும். காலையில் சுடுவதா இரவில் சுடுவதா என்பது குழுக்களின் வசதி, ரயில் புறப்படும் நேரங்களின் வசதி. அடுப்புக் கூட்டும், ரொட்டி சுடும் தோது வாய்க்காவிட்டால் போஹா சிவ்டா, லட்டு, வயிறு நிறையத் தண்ணீர், தம்பாக்கு அல்லது சுருட்டு. போர்த்துக் கொண்டு படுத்தால் காவலுக்கு உண்டு மகாதேவ் அல்லது பாண்டுரங்க்.

பயண நாட்களில் மச்சி, மாம்சம் பழக்கம் இல்லை. பெரும் பாலோர்க்கும் வாரத்தில் மங்கல்வார், குருவார், சனிவார் உபவாசம். இரவு ஒரு பொழுது உணவு. மறு பொழுதுகளில் வாழைப்பழம், சாபுதானா அல்லது போஹா. கிச்சடி செய்யத் தோது கிடையாது. பாலும் வாய்ப்பதில்லை.

மறுநாள் காலையில் கன்னியாகுமரிக்கு பாசஞ்சர். அதுவும் அகல ஸ்டேஷன். சங்கிலித் துறையில் நீராடல், குமரி பகவதி தர்ஷன், காந்தி மண்டபம், விவேகாநந்தர் பாறை, சூரிய அஸ்தமனம், சங்குகள், சோவிகள்…

மறுபடியும் நாகர்கோயிலில் இருந்து மதுரைக்கு கோவை பாசஞ்சர். நாகர்கோயில் கோயம்புத்தூர் பயணிகள் வண்டியில் எப்போதும் கூட்டம் இருக்கும். சனி, ஞாயிறு எனில் ஒரு பங்கு அதிகம். ஒன்பது மணி நேரத்தில் இரவில் புறப்பட்டு காலையில் கொண்டு சேர்க்கும் சொகுசுப் பேருந்துகளை விட பதின்மூன்று மணி நேரத்தில் ஐந்நூறு கிலோமீட்டர் போகும் இந்த ரயிலை மக்கள் விரும்பக் காரணங்கள் உண்டு. சொகுசுக்கு கட்டணம் இருநூற்று எண்பது வெண்காசுகள். ரயிலுக்கு வெறும் அறுபத்தைந்து ரூபாய். மேலும் பேருந்து புஷ்பேக் ஆனாலும் ஏர்-பஸ் ஆனாலும் வோல்வோ ஆனாலும் வழியில் மூத்திரம் பெய்ய நீதம் கிடையாது. முதியோர், நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், நீரிழிவுக்காரர், ப்ரோஸ்டேட் காரர் பாடு பெரும்பாடு. வழியில் பேருந்தை நிறுத்த திருப்பாச்சேத்தி அரிவாள் அல்லது ராம்பூரி சூரி வேண்டும். ரயிலானால் அந்தச் சல்லியம் இல்லை. கால் நீட்டி, மடக்கி, சம்மணம் போட்டு உட்காரலாம், சாயலாம், கதவோரம் நிற்கலாம், நடக்கலாம். இடமிருந்தால் படுக்கலாம், ஆற அமர இட்லி மிளகாய்ப் பொடி, புளித்தண்ணிச் சோறு தின்னலாம். திருநெல்வேலி, மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் வரை அருமையான ஆமவடை சுடச்சுடக் கிடைக்கும். ஆமவடை என்றால் பருப்பு வடை ; பட்டணத்து மசால்வடை அல்ல. ஆறிப்போனால் பட்டணத்து மசால்வடை எலி தின்னத்தான் லாயக்கு. இன்னும் ஆமவடை சுட்டு விற்று குடும்பங்கள் நடக்கின்றன, குமருகள் கரையேறுகின்றன. காலாணிப் புற்றோ, வாதக் காலோ, வயோதிகமோ, வறுமையோ மனிதனைத் தோற்கடித்து விடுவதில்லை.

பிளாட்பாரத்தில் வண்டி பிடிக்கப்பட்டதும் ஐந்நூறு பேரும்- அதுவரை யாரும் வழி தப்பவும் நோய்ப்படவும் மரணமுறவும் நேர வில்லை என்பதால் – எண்ணம் குறையாமல் பாய்ந்து வண்டியினுள் ஏறி இடம் பிடித்து உட்கார்ந்தனர். மத்யப் பிரதேச ரயில் நிலையம் ஒன்றில் நிற்பதான மயக்கம் தரும் விதத்தில் – தெலி,தெல்கே, ஷிண்டே, பால்கர், போர்லேகர், காம்ளி, காம்ளே, ஆம்பேகர், கார்பாரே, நட்கர்னி, குல்கர்னி, ஷிவ்தார்கர், மோரெ, போக்ளே, பாண்டேகர், பண்டார்கர், ராணே, ஆப்தே, மானே, அம்ராபூர்கர், பாலேகர், பாட்டில், பட்டேகர், பாட்கர் மற்றும் அவர்தம் பெண்டிர்…

சாவசகாசமாக, புறப்படும் ஸ்டேஷன்தானே எனும் அலட்சியத் துடன் ரயில் பிடிக்கவந்த கோட்டாறு, பஞ்சலிங்கபுரம், வாரியூர், ராஜாவூர், ராஜாக்கமங்கலம், பறக்கை, சுசீந்திரம்,நல்லூர், தேரூர், கருங்கல், இரணியல், தக்கலை, அம்மாண்டிவிளை, பொழிக்கரை, பொட்டல், ஈத்தாமொழி, வெள்ளமடம், புத்தேரி, திட்டுவிளை, தாழக் குடி, போத்தியூர், கடுக்கரை, பெருவிளை, ஈசன் தங்கு, பார்வதிபுரத்து நாடாக்கமார், பிள்ளைமார், சாம்பவர் இன்ன பிற வகுப்பினருக்கு ஈரற் குலையில் இடிவிழுந்ததைப் போல் பெரிய அதிர்ச்சி. குடும்பத்துடன் சேர்ந்து உட்கார இடமில்லை. கால் நீட்டத் தோதில்லை. சம்பா அரிசிச் சாக்கு, சக்கைப் பழம், கருப்பட்டிச் சிப்பம், தேங்காய் மூடை வைக்க இடமில்லை. எல்லாப் பெட்டிகளும் அடைசல்களாக இருந்தன.

முனகல்கள் மெல்லப் பல்கிப் பெருகி, சிறு துளிப் பெரு வெள்ள மாய், மராத்தி தெரியாத தமிழனுக்கும் தமிழ் தெரியாத மராட்டி யனுக்கும் சச்சரவுகள் ஆரம்பித்தன.

“சவம் காட்டுமிராண்டிக் கூட்டம் எங்கேருந்து தான் வாறானுவளோ?”

“போன வருசம் இதே போல மருத போற வண்டியிலே பத்து அஞ்ஞூறுவேரு…”

“குளிக்கவும் மாட்டான், குண்டியும் களுவ மாட்டான்.”

“டிரஸ்ஸுக்கு பஸ்காரத்தைப் பாத்தியா? தார்ப்பாய்ச்சிக் கெட்டும், தொப்பியும், சட்டையும்…”

“மிராட்டியப் பயக்கோண்ணு சொல்லுகது சும்மயில்லே….”

“என்னத்தை அந்து விழுகுண்ணு இப்பிடிக் கெளம்பி வாறானுவோ?”

“அண்ணாச்சி தூரமா பொறப்பட்டியோ?”

“மூத்தவளை வள்ளியூரிலே கெட்டிக் குடுத்திருக்கம்லா சித்திரைப்படி அவுலும் தேங்காயும் கருப்பட்டியும் கொண்டுக்கிட்டுப் போறம் பாத்துக்கோ…”

”நீரு தூரமா?”

“பணகுடியிலே ஒரு சடங்கு உண்டும். போகாண்டாம்ணு தான் பாத்தேன்…பின்னே பெறப்பிட்டாச்சு…”

அருமைநல்லூரில் இருந்து சமீபத்தில் கல்யாணமாகி, மறுவீடு, விருந்துகள், இறைச்சிக்கறி, எண்ணெய் தேய்த்துக்குளி எல்லாம் முடிந்து பொண்ணு மாப்பிள்ளையைத் திருப்பூரில் குடியிருத்த புறப் பட்ட கூட்டம் ஒன்று பிளாட்பாரத்துக்கு வந்தபோது எந்தப் பெட்டி யிலும் சிலாவத்தாக இடமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காலி இருக்கைகள் கிடந்தன. மணமக்களின் பெற்றோர் நான்கு பேர், சித்தப்பா சித்திகள், அத்தை தாய்மாமன்கள் எட்டுப் பேர், பெண்ணின் அண்ணன் – மனைவி, பையனின் உடப்பிறந்தாள் – அத்தான் என குழந்தைகள் அடக்கம் இருபத்து மூன்று பேர். திருப்பூரில் கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்திருப்பார்களோ என்னவோ? மற்றும் கல்யாண மெத்தை தலையணை, குடம், செம்புப்பானை, அண்டா, குத்துவிளக்கு, சில்லறைப் பாத்திரங்கள் கொண்ட மூடை, அட்டைப் பெட்டிகள், அரிசி, பருப்பு, தேங்காய், போன அன்று பாயசம் வைக்க கோட்டயம் சர்க்கரை, குக்கர், மிக்ஸி, அரிவாள்மணை, திருவலைக் குத்தி, சோத்துக் கற்றாழைச் செடி, தென்னை ஈர்க்கு வாருகோல் எங்கே கொண்டுபோய் அடுக்குவார்கள்? பெரிய தூக்குப் போணிகளில் கொண்டுவந்த கட்டுச்சோற்றை ஆற அமர எப்படிச் சாப்பிடுவார்கள்?

மாப்பிள்ளையின் தகப்பனார் மாலையப்பன் கலைக்டர் ஆபீசில் நெடுநாட்களாக பியூனாக இருப்பவர். கலைக்டர் வீட்டுக்கு என்று சொல்லி இலவசமாக வடசேரிச் சந்தையில் காய்கறி வாங்கி சஸ்பென்ட் ஆனதைத் தவிர வேறு நாணயக் குறைவுகள் கொண்ட வரல்ல. அதிகாரம் என்பது என்னவென்றும் அவருக்குத் தெரியும்.

தோன்றிய பெட்டியினுள் ஏறி, சாமான்களை அடுக்க முடியாமல், சாவகாசமாக உட்காரவும் முடியாமல், பெரிய வெப்ராளத்தில் இருந்தார்.

மாப்பிள்ளையின் தகப்பனார் மாலையப்பன் கலைக்டர் ஆபீசில் நெடுநாட்களாக பியூனாக இருப்பவர். கலைக்டர் வீட்டுக்கு என்று சொல்லி இலவசமாக வடசேரிச் சந்தையில் காய்கறி வாங்கி சஸ்பென்ட் ஆனதைத் தவிர வேறு நாணயக் குறைவுகள் கொண்ட வரல்ல. அதிகாரம் என்பது என்னவென்றும் அவருக்குத் தெரியும்.

தோன்றிய பெட்டியினுள் ஏறி, சாமான்களை அடுக்க முடியாமல், சாவகாசமாக உட்காரவும் முடியாமல், பெரிய வெப்ராளத்தில் இருந்தார்.

எழுபது வயதான மகாதேவ் தெல்கே, காலையில் குளித்து நெற்றியில் பாண்டுரங்கனின் செங்காவியும் கருஞ்சாந்தும் கோவி வரைந்து, கையில் இருந்த ‘தியானேஷ்வரி’ வாசிப்பதில் இருந்தார். தில் என்றால் எள். எள் ஆட்டி எண்ணெய் எடுப்பவர் தெலி அல்லது தெல்கே. நம்மூர் எண்ணெய் வாணியன் போல. செக்கு இல்லாதவனும் செட்டி, கலப்பை இல்லாதவனும் வெள்ளாளன் என்பது இன்று நமது ஆசாரம். மகாதேவ் தெல்கே செக்கும் வைத்திருந்தார். விவசாயமும் இருந்தது.

“எப்பிடி சம்மணம் போட்டு உக்காந்திருக்கான் பாரு, கெழட்டுக் கூதிமவன். அவுனுக்கு அப்பன் வீட்டு வண்டிமாரி!”

“டிக்கட்டு கூட வாங்க மாட்டானுவோ!”

மாலையப்பன், மகாதேவ் தெல்கேயையும் அவரது கிராமத்துக் கிழவன் கிழவிகளையும் பார்த்து இரைந்தார்.

“வேற ஏதாம் பெட்டியிலே மாறி இரியும் வே…”

தெல்கேக்கு ஏதோ சொல்கிறார் என்று மட்டும் புரிந்தது.

தியானேஷ்வரியை மூடி வைத்துவிட்டுப் பரக்கப் பரக்கப் பார்த்தார்.

”சொல்லுகம்லா வே… அடுத்த பெட்டிக்குப் போங்கோ…”

“காய்? காய் சாங்கித்லா துமி?”

”பக்கத்துப் பெட்டிக்குப் போறதுக்கு…”

“மதுரா… ராமேஷ்வர் ஜாணார் அமிலோக்…”

மாலையப்பனுக்கு கோபம் பொங்கி வந்தது. மேலும் அவர் பணிபுரிவது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பியூனாக அல்லவா?

“எந்திரியும் வேய் மொதல்லே! எந்திரிச்சு அடுத்த பெட்டிக்குப் போவும்… எல்லா கெழட்டு வாணாலையும் கூட்டிக்கிட்டுப் போவும்…”

“காய் போல்த்தூஸ் துமி… அமாலா காய் மைத்தி நை..”

மாலையப்பன் கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தபோது, அவரது மற்ற குடும்ப உறுப்பினரும் ஆளுக்கொரு கையைப் பற்றி இழுக்க முற்பட்ட போது, தேவாசுரப் போரின் கிளைப் போரொன்று துவங்கியது.

சத்தம், இரைச்சல், அழுகை, ஆதாளி மற்ற பெட்டிகளுக்கும் தீப்போல் பரவியது. மூட்டைமுடிச்சுகள் தள்ளல், மோதல், ரத்தக் கோறை… நேதாக்களின் பீய்ங், பீய்ங் விசில் சத்தம் மாறி மாறிக் கேட்டன.

அலுவலில் இருந்த இரண்டு ரெயில்வே போலீஸ், ஒரு டிக்கட் பரிசோதகர், உதவி ஸ்டேஷன் மாஸ்டர், புக்கிங் ஆபீஸ் சிப்பந்திகளில் சிலரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. சின்னக் கலவரம் ஒன்று சீறிப்புறப்பட்டது – ‘மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமாப் போலே.

யாரோ கைப்பேசியில் அவசரப் போலீசுக்கு ஃபோன் செய்தனர். சற்று நேரத்தில் காக்கிப் பட்டாளம் வந்தது. எஸ்.பி. வந்தார். ஊது குழல் சத்தங்கள் கேட்டன. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வந்தார். அவர் பர்பனி மாவட்டத்து மராத்திக்காரர். போலீஸ் ஒலிபெருக்கியை வாங்கி மராத்தியிலும் தமிழிலும் மாறிமாறி வேண்டுகோள் விடுத்தார்.

நேதாக்கள் அவர் முன் வந்து நின்றனர். கண்ணீரைத் துடைத்து மூக்கைச் சிந்தி நின்றனர் கிழவரும் கிழவியரும்.

”காய் சாப்… அமி லோக் பிக்காரி ஹை கா? அம்சக்டே டிக்கிட் நை கா? அமிலோக் கூஸ் காத்தூஸ்கா?”

திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தனர் – நாங்கள் பிச்சைக் காரர்களா? நாங்கள் டிக்கட் வாங்கவில்லையா? நாங்கள் மலம் தின்கிறோமா?

”ஏ காய் சாப்? காய் கலத்தி கேலா அமி? துமி சாங்கானா…”

நேதா கையில் மொத்தப் பயணிகளுக்குமான வட்டச் சுற்றுச் சலுகை பயணச் சீட்டு இருந்தது.

“நாங்க ஏழைங்க சாப்… கற்சிரோசி விவசாயிங்க… வித்தவுட் பிச்சைக்காரங்க இல்லே… போன வருசம் காசி போனோம்… அதுக்கு முந்தி காளிகட் போனோம்… கன்யாகுமரி வந்து நாங்க ரத்தக் கோறையோட போறோம்… ஏ பராபர் ஹை கா? துமி சாங்கா!”

அவன் மராத்தியில் பேசினாலும் அவன் குரலில் இருந்த கெரவல் மாவட்ட ஆட்சியரைச் சுற்றி நின்ற தமிழ் பேசும் அதிகாரிகளைக் கலக்குவதாக இருந்தது. நியாயம் கேட்க கையில் சிலம்பு வேண்டும் என்றில்லை. மதுரையை எரிக்கும் வெஞ்சினமும் வேண்டியதில்லை.

இரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாகக் கிளம்ப யத்தனித்தது. கிடைத்த இருக்கைகளில் நெருக்கியடித்துக்கொண்டு அமரத் தலைப் பட்டனர். இரைச்சல் குறைந்து, முனகலாகி, அதுவும் அமர்ந்து, சின்ன உரையாடல்கள் துவங்கின.

பழைய வேட்டியை வைத்து மூடிப் பொதிந்து வைக்கப் பட்டிருந்த பெரிய செம்புப் பானையை நகர்த்தி, உடையாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முறுக்கை எடுத்து மாலையப்பன் முதலில் மகா தேவ் தெல்கேயிடம் நீட்டினார்.

ரயில் நகர்ந்த பின் வழியனுப்ப வந்த இருவர் பேசிக்கொண்டு போனார்கள்.

“காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊருலே கெடக்காம, பொறப்பிட்டு வந்திருக்கானுகோ… ஊரை நாற அடிக்கதுக்கு…”

அவர்கள் மேற்கில் மேலாங்கோடும் கிழக்கில் முப்பந்தலும் தாண்டியதில்லை. தெற்கே கன்னியாகுமரிக் கடலையும் வடக்கே காளிகேசம் மலைகளையும் அவர்களால் தாண்டவும் முடியாது.

மராத்திச் சொற்களுக்கு தமிழ்ப்பொருள்:

சாச்சா – சாச்சி = பெரியப்பா – பெரியம்மை

காக்கா – காக்கி = தாத்தா ஆத்தா

மாமா – மௌஸி = மாமா அத்தை

வடீல்ஆயி அப்பா-அம்மா

சன்டாஸ் = கக்கூஸ்

நேதா = தலைவன்

காவ்=கிராமம்

தம்பாக்கூ = புகையிலை

பிஸ்வி = சுருக்குப்பை

சிவ்டா = மிக்சர்

லஸுன் = பூண்டு

பாக்ரி = சோளரொட்டி

பாஜி = காய்கறிக் கூட்டு

தவா = ரொட்டி சுடும் கல்.

காட்டி மசாலா = தயார் கறி மசாலா

பஜ்ஜியா = பஜ்ஜி

டோல்கி = தோல் வாத்தியம்

ஜெவுண் = சாப்பாடு

உசல் = பல்வகைப் பயிறு கூட்டு

டால் = பருப்பு

போஹா = அவல் மச்சி = மீன்

மாம்சம் = மாமிசம்

சாபுதானா = ஜவ்வரிசி

லேங்கா=ஆண்களின் உள்ளாடை

தர்ஷன் = தரிசனம்

மங்கல்வார் = செவ்வாய்

குருவார் = வியாழன்

சனிவார் = சனி

தியானேஷ்வரி = நமது தேவாரம் போன்றது.

தில் = எள்

கிச்சடி = உப்புமா

காய் = என்ன

சாங்கித்லா = சொன்னாய், சொன்னீர்கள்

துமி = நீங்கள்

ஜாணார் = போகிறோம்

அமி லோக், அமி = நாங்கள்

போல்த்தூஸ் = பேசுகிறாய், பேசுகிறீர்கள்

அமாலா = எனக்கு, எமக்கு

மைத்தி = புரிதல், தெரிதல்

சாப் = ஐயா

பிக்காரி = பிச்சைக்காரன்

அம்சக்டே = எங்களிடம்

கல்த்தி = தவறு, குற்றம், பிழை

கேலா = செய்தோம்

சாங்கானா, சாங்கா = சொல்லுங்கள்

பராபர் = சரி

நை = இல்லை

கூஸ்= மலம்

குறிப்பு :- தமிழ்ச் சொற்களுக்கும் தமிழ்ப் பொருள் எழுத ஆசை தான். நேரமும் இடமும் இல்லை.

– ரசனை – ஜூன் 2006

நன்றி: https://nanjilnadan.com/2010/12/09/வளைகள்எலிகளுக்கானவை-1/

Print Friendly, PDF & Email
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன் எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை பிறந்த நாள் : 31 டிசம்பர் 1947 பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம் தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம், கன்னியாகுமரி மாவட்டம். தமிழ் நாடு – 629 901. முகவரி : G. Subramaniyam (NanjilNadan) Plot No 26, First Street, VOC Nager,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *