கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 6,737 
 
 

சுகாதாரப் பிரிவில், பூமிக்குள்ளே நூறடி ஆழத்தில் வேலை பார்த்தான் ருத்ரமூர்த்தி. பெருமை சேர்க்கவில்லை என்றாலும் முக்கியமான வேலை. கழிவு திரட்டும் வேலை. ‘ஆச்சு, இந்த ஒரு பீ மூட்டையைத் தூக்கி எறிஞ்சதும் இடம் சுத்தமாயிடும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, பயோடிக்ரெடபில் கழிவுத்தொட்டியை நிரப்பி, தானியங்கி ஹெர்மாசீலரைப் பொருத்தி, இறுக்கி மூடினான். கட்டுப்பாட்டுக் கருவியின் பச்சைநிறப் பித்தானை அழுத்தினான். தொட்டியின் அடிப்பகுதியில் சக்கரக்கால்கள் வெளிப்பட்டு இயங்க, நகர்ந்து மற்ற கழிவுத்தொட்டிகளுடன் சேர்ந்து கொண்டது. பச்சைநிறப் பித்தானை மறுபடி அழுத்தினான். எலக்ட்ரோஸ்டேடிக் பூட்டுகள், தொட்டிகளைப் பிணைத்தன. மூன்றாவது முறை பித்தானை அழுத்தினதும், கழிவுத்தொட்டிகள் நகரத் தொடங்கின. மெள்ள பூமிக்கடியில் சேரும் சுரங்கப்பாதையின் குறுகியப் பயண இடைவெளியில், கழிவெல்லாம் தீவிர இன்ப்ராரெட்-அல்ட்ராவைலட் ஒளிவீச்சில் தொட்டியோடு பஸ்பமாகி, வாயுவாகி விடும்.

ருத்ரமூர்த்திக்கு இதெல்லாம் புரியாது. புரியத் தேவையும் இல்லை. அவனைப் பொறுத்தவரை மூன்றாவது முறையாகப் பித்தானை அழுத்துவதோடு வேலை முடிந்தது. ஒரு வேளை கழிவுத்தொட்டிகள் நகரவில்லையென்றால், சிவப்புப் பித்தானை அழுத்த வேண்டும் என்கிற வரையில் அவனுக்கு அறிவு இருக்கிறது. அது போதும். அவ்வளவுதான் படிக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

பெட்டிகள் நகரத் தொடங்கியதும் கட்டுப்பாட்டுக் கருவியைச் சுவற்றில் பதித்து விட்டு, மேலே செல்வதற்கான வாகனத்துள் ஏறினான். கதவைப் பூட்டியதும் மூச்சுக்குழாயைக் கழற்றினான். வாகனத்தின் உள்ளறை, மூச்சுக் காற்றுக்குப் பதப்பட்டு இருந்தது. அணிந்திருந்த பாதுகாப்பு மேலணியைக் களைந்து ஓரமாக இருந்த வட்டப்பெட்டிக்குள் எறிந்ததும் எரிந்தது. மடித்து வைத்திருந்த சாதாரண உடையை எடுத்து அணிந்து கொண்ட நேரத்தில், பூமியின் நிலநிலைக்கு வந்து விட்டான். வெளிவந்து வீட்டிற்குச் செல்லும் இரெய்னில் ஏறினான்.

“என்னய்யா இது, இன்னொரு வண்டில வரக்கூடாதா? எங்களை மாதிரி மேட்டுக்குடி ஜனங்க மத்தியில நீ வரணுமா?” என்று அவசரமாக எழுந்து ஒதுங்கியவர் சொன்னதைப் பொருட்படுத்தாமல், தலைகுனிந்தபடி தனிமையான ஓரத்துக்குச் சென்று நின்றான். அருகில் இருந்த நீலப்பட்டியில், தன் விலாச அட்டையைப் பொருத்தி எடுத்தான். சாலைகளின் வாகன நெருக்கத்தை ஆராய்ந்து, இலவசப் பயணத்திற்கான உத்தேச நேரத்தை இரெய்ன் கணக்கிட்டுச் சொன்னது. ஆறு நிமிடங்களில் தன் வீட்டு வாசலில் நிற்கும் என்பது தெரிந்து, அது வரை கண் மூடினான்.

வீட்டில் மனைவி காத்துக் கொண்டிருந்தாள். “ஏன்னா, பீ மூட்டையை எல்லாம் பூமாதேவிக்கு அனுப்பிச்சுட்டேளா? ரொம்ப களைச்சுப் போய் வந்திருக்கேள், ஒரு வா கஞ்சி போட்டு எடுத்துண்டு வரேன்” என்றவள், திடீரென்று அழுதாள். அவள் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும், “ஏன் அழறே, என்ன ஆச்சு?” என்றான். கேள்வித் தொனியில் ஆதரவு இல்லை.

“ஒங்களுக்குத் தெரியாததா? இந்தப் பக்கத்தாத்துக்காரன் சள்ளை தாங்க முடியலை. கேப்பாரில்லை. என்னை ரொம்பக் கேவலமாப் பாக்கறான் சண்டாளன். நேக்கு நாக்கைப் பிடுங்கிண்டு பிராணனை விடலாமானு இருக்கு. ஏதாவது அவதாரம் எடுத்து இவனை சம்காரம் பண்ண வரக்கூடாதானு தெனம் வேண்டிக்கறேன்… கண்ணைத் தொறந்து பாக்க மாட்டேங்கறாரே பகவான்? அவனை நீங்க கொஞ்சம் தட்டிக் கேக்க மாட்டேளா?”

‘யாரை? பகவானையா, பக்கத்து வீட்டுக்காரனையா?’ என்று கேட்க நினைத்தான். பகவானைச் சட்டபூர்வமாக மறந்து எத்தனையோ நூற்றாண்டுகளாகிறது. பக்கத்து வீட்டுக்காரனோ படித்தவன், பலசாலி, சலுகையுள்ளவன், மேட்டுக்குடி. ஏதாவது கேட்டால் ஏளனம் செய்து முகத்தில் ஒரு குத்து விடுவான். பல்லைப் பிடித்துக் கொண்டு அவமானத்துடன் திரும்ப வேண்டும். கரிசனத்துடன், “சாமி கும்பிடறது சட்ட விரோதம்னு நோக்கு தெரியாதா? எங்கயாவது வம்புல மாட்டிக்கப் போறே..” என்றான் பொறுமையாக.

“எல்லாம் மனசுக்குள்ள தான்… அத விடுங்கோ.. கட்டேலபோறவன் இன்னிக்கு என்ன பண்ணினான் தெரியுமோ? என் கையை மறுபடியும் பிடிச்சு இழுத்தான். வாடி வாடினு எக்காளமா சிரிச்சான்” என்றாள். அவனுக்குப் பசித்தது. இவள் கஞ்சி எடுத்து வருவாளா, இல்லை புலம்பிக் கொண்டிருக்கப் போகிறாளா?

“நேக்குக் கோவம் வந்தாலும் ஒண்ணும் சொல்லலைனா. இந்த ஜாதில பொறந்தன்னிக்கே மானம் ரோஷம் எல்லாத்தையும் தர்ப்பணம் பண்ணியாச்சே? பொண்ணாப் பொறந்தா கேக்கணுமா? ஆனா வாக்கப்பட்டு கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும்னு பாத்தா, அதுகூட இல்லை.. நமக்கு ஒரு கொழந்தை இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?”

‘அப்புறம் படிக்க முடியாம வேற வேலை செய்ய முடியாம அந்தக் கொழந்தையும் நமக்குப் பொறந்த குத்தத்துக்காகப் பீ வாரணுமாக்கும்… நம்ப எனம் நம்மளோட ஒழியட்டும்னு தானே கொழந்தை வேண்டாம்னு முடிவு பண்ணினோம்?’ என்று கேட்க நினைத்தான். நிதானித்து, “என்ன பண்ணினான் சண்டாளன்?” என்று கேட்டான், கேட்டு வைத்தால் சீக்கிரம் பதில் சொல்லி, பசிக்கு ஏதாவது கொண்டு வருவாள் எனும் எதிர்பார்ப்புடன்.

“இன்னிக்கு என் பின்னாடியே ஆத்துக்குள்ள வந்துட்டான்.. ஒங்க பேரைச் சொல்லி, அவனை விட்டுட்டு வந்துடு. அவனால உனக்கு ஒரு சுகமும் இல்லை. என் சாமானைப் பாரு. அப்படியே இந்திரியமாக்கும்னு நெஜாரைக் கழட்டிட்டுச் சிரிக்கறான்னா. ரோஷமா ஒரு வார்த்தை கேக்கப்படாதா?” என்றாள். “..பின்னாடி இப்படி ரெண்டு கையாலயும் தொட்டுத் தடவி சிரிக்கறான்”. அவனருகே வந்து கலங்கினாள்.

ருத்ரமூர்த்திக்கு ரோஷம் வரவில்லை. கோபம் கூடவில்லை. ஆத்திரம் ஏறவில்லை. பக்கத்து வீட்டுக்காரன் தலைமுடியை ரத்தம் கசியக் கொத்தாகப் பிடித்திழுத்து, ‘என் மனைவி முன்பா நிஜாரை அவிழ்க்கிறாய், மானங்கெட்ட நாயே?’ என்று கொக்கரிக்கத் தோன்றவில்லை. தலையைக் கொய்து மனைவி காலில் எறிந்து மறு காரியம் பார்க்கத் தெரியவில்லை. ‘நாங்கள் எளியவர்கள். தயவு செய்து என் மனைவியிடம் தகாத முறையில் நடக்காதீர்கள் ஐயா’ என்று காலில் விழுந்து கெஞ்சவும் தோன்றவில்லை. ‘போறதுடி கண்ணம்மா, எல்லாம் பிராரப்தம்’ என்று மனைவியை அணைத்து ஆதரவாகப் பேசக் கூடத் தோன்றவில்லை. மௌனமாக நின்றான்.

“இதுக்கு பதிலா நேக்கு ரெண்டு அரளி அரைச்சுக் குடுத்துடுங்கோ. நெதம் இவன் அராஜகம் தாங்கலை. நாளைக்கு என்னைப் பலாத்காரமா எடுத்துக்கப் போறதா சத்யம் பண்ணிட்டுப் போயிருக்கான். ஏதாவது பண்ணுங்கோ”

அமைதியாக இருந்தான்.

“பேரு மட்டும் நன்னா வச்சுண்டிருக்கேள்” என்று தோளை முகவாயில் கேலியாக இடித்துக் கொண்டாள். “நாளைக்கு ஏதாவது நடந்துடுத்துன்னா நா உயிரோட இருக்க மாட்டேன்”. அழுதாள்.

“நாளைக்கு ஒண்ணும் நடக்காது, கவலைப்படாதே” என்றான்.

“எப்படிச் சொல்றேள்?”

“இன்னிக்கே லோகம் அழியப் போறது”

“ஆமா, தெனம் இதையே சொல்றேள்..” என்றவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள். உலகம் அழிய வேண்டும் என்று கணவன் நினைப்பதே தனக்கு ஆதரவு தருவதற்காகத்தான் என்று புரிந்திருந்தும் வருத்தப்பட்டாள். “சரி, சரி, சீக்கிரம் ஆத்துல குளிச்சுட்டு சாப்பிட வாங்கோ. லோகம் அழியறப்போ அழியட்டும். கரிநாக்கா சொல்லிண்டிருக்காதீங்கோ… என்னதான் நாகரீகம் வளந்தாலும் ஜனங்களுக்கு அறிவு வளரலையே… முப்பாட்டனாருக்கு மூணு கோடி பித்ருன்னாலும் நம்மள போட்டு வதக்கிண்டிருக்கு லோகம்.. நீங்களும் நானும் என்ன பண்ண முடியும்? பசியா இருப்பேள், நான் புலம்பிண்டிருக்கேன்.. போய்க் குளிச்சுட்டு வாங்கோ”.

வீட்டின் நடுவறைக்கு வந்து, தரைவிசையைக் காலால் அழுத்தினான். எட்டடி நீளம் ஆறடி அகலத்துக்குத் தரை விலகித் தொட்டி போல் தெரிந்த பள்ளத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் பொதுமக்களுக்காக அரசாங்கச் செலவில் விடப்பட்ட ஆற்றுநீர் நிறையத் தொடங்கியது. நீர் நிரம்பி செயற்கை அலைகள் இதமாகப் பாய, அவன் உடை களைந்து நீரில் இறங்கினான். நீரில் அளையத் தொடங்கியதும் மனம் எல்லாவற்றையும் மறந்தது. வெளியில் ஆரவாரம் கேட்பது போலிருந்தது. மனைவி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். பொருட்படுத்தாமல், தண்ணீரில் மூழ்கிக் குளித்தான். இந்தப் பிறவியில் இந்த நிமிடத்தின் இந்தக் குளியல் தான் நிச்சய வரம் என்ற எண்ணத்தில் குளித்தான். வழக்கம் போல் மனமும் அளைந்தது. சமுதாயத்தின் கீழ்த்தட்டு வர்க்கத்தில் பிறந்துவிட்டால் சுயமரியாதையிலிருந்து தன்மானம் வரைத் துறக்கவேண்டிய நிலையை நினைத்தான். வேத காலத்திலிருந்து அவன் மூதாதையர்கள் சமுதாயத்தின் உச்சத்தட்டில் இருந்தவர்கள் எனும் பழம்பெருமை நினைவுக்கு வர…

…நினைவுகளை ஒதுக்கிக் குளித்தான். இந்த வர்க்கத்தில் பிறந்து விட்டோமே என்ற விபத்தின் வலியில் குளித்தான். அழகான மனைவியைப் பாதுகாக்க முடியவில்லையே என்ற கையாலாகாத்தன வேகத்தில் குளித்தான். சந்ததி வளராமல் செய்துவிட்டோம் என்ற சோணங்கித் தியாக வெற்றியில் குளித்தான். வெளியே ஆரவாரம் அதிகமாகக் கேட்டது. மனைவி குரலின் அதிர்ச்சி உரைத்தது. ஒரு வேளை பக்கத்து வீட்டுக்காரன் ஏதாவது அக்கிரமம் செய்கிறானா?

‘நான் கையலாகாதவன். என்னிடம் வீரத்தையோ விவேகத்தையோ எதிர்பார்க்காதீர்கள். நான் பாமரன். எனக்கு புரட்சி தெரியாது. உலகம் அழியும் போது எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்து விடும். இப்போதைக்கு என் உடல் சுத்தமாகட்டும். வேதம் சொல்லித் தீ வளர்த்த பரம்பரையில் வந்தவன், இப்போது பேதம் பாராமல் பீ துடைக்கிறேன். ஆத்திரமும் வெறியும் சேராமல் என் மனம் சுத்தமாகட்டும், என்னை விடுங்கள்’ என்று ஆழமாக மூழ்கினான். தினமும் தரையைத் தொட்டதும், பத்மாசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்வான். அன்றைக்கும் மூழ்கித் தரையைத் தொட விரைந்தான். ‘இதென்ன, இன்றைக்கு மட்டும் இத்தனை ஆழமாகப் போய்க்கொண்டே இருக்கிறதே?’ என்று வியந்தான். தரையைத் தேடி நீந்தினான்.

வெளியே சூரியன் வெடித்துச் சிதறியது ருத்ரமூர்த்திக்குத் தெரியாது.

– 2010/08/20

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *