ரோசியின் மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 2,280 
 
 

மூடிய அறையில் ரோஸி இயந்திரத்தனமாக புடவை, ஜாக்கெட்டுகளைக் களைய….

25 வயது இளைஞனான சேகர் கட்டிலில் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

திரும்பி நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம்.

“பேரு என்ன…?” கேட்டாள்.

சொன்னான்.

“புதுசா…?” அருகில் அமர்ந்தாள்.

சேகருக்கு உடல் குப்பென்று வியர்த்தது.

“பயமா….?” உரசினாள்.

அவ்வளவுதான் !

ஆள் மிரண்டு எழுந்தான். கை கால்கள் நடுங்கியது.

ஆளைப் பரிதாபமாகப் பார்த்த ரோஸி அவனின் நடுங்கும் கையை மெல்லப் பற்றினாள்.

வெடுக்கென்று உதறி கையை உதறிக்கொண்ட சேகர்…

“நா…நான் இதுக்கு வரலை….”சொன்னான்.

ரோஸி துணுக்குற்றாள். ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“பின்னே எதுக்கு வந்தீங்க..?” கேட்டாள்.

“உங்களால் ஒரு காரியம் ஆகணும்……”

“என்னாலேயா…??…”

“ஆமாம்…!”

“என்ன காரியம்..?”

“..ஒ…. ஒரு வேலை வேணும்….”

“வேலையா…? இங்கேயா… என்கிட்டேயா…? இடம் மாறி வந்துருக்கீங்க..”

“இல்லே. சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கேன். நீங்க நினைச்சா நடக்கும். உங்களால் முடியும் !”

‘இது என்ன புது கேசா இருக்கு. வேலை வேணும்ங்கிறான்.சரியான இடத்துக்கு வந்திருக்கேன் என்கிறான். என்னால ஆகும் என்கிறான் ! ‘ – குழம்பிப்போன ரோஸி….சேலை, ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு அவன் முன் முழு பெண்ணாக அமர்ந்தாள்.

“இப்போ சொல்லுங்க..? எதுக்கு வந்தீங்க…?” கறாராக கேட்டாள்.

இப்போது அவளை எந்தவித கூச்சமும் இல்லாமல் பார்த்த சேகர்.,..

“எனக்கு முன் இங்கே வந்து போனாரே…” இழுத்தான்.

“யாரு…?”

“தாமோதரன்..!”

“ஒ… அவரா…?”

“ஆமாம்..!”

“அடிக்கடி வருவாரா…?”

“வாரத்துக்கு ஒரு முறை வருவார். அவருக்கென்ன…”

“அவர் பொதுப்பணித்துறையில் பெரிய அதிகாரி !”

“அதுக்கென்ன…?”

“அந்தத் துறையில் வேலைக்கு விண்ணப்பிச்சிருக்கேன். இவர் மனசு வச்சா என்னை ஒரு ஆளாய் எடுக்கலாம்.”

“அப்படியா…??…”

“விண்ணப்பித்த மத்த எல்லாரும் பணம், மந்திரி சிபாரிசுன்னு அலையுறாங்க. எனக்கு அப்படி யாரும் தெரியாது, விலை கொடுத்து வாங்குற அளவுக்குப் பணமும் கிடையாது. ஏழை.!”

“அதனால இங்கே மோப்பம் பிடிச்சு வந்தீங்களாக்கும்.”

“அ… ஆமாம் !”

“நான் சொன்னா கேட்பாரா…?”

“நிச்சயம் கேட்பார். !”

“எந்த அடிப்படையில் சொல்றீங்க..?”

“அவருக்கு உங்க மேல அன்பிருக்கு…”

“என் மேலயா…?” சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறீங்க…?”

“சிரிக்காம.?!… அதெல்லாம் அஞ்சு நிமிச பாச நேசம். இங்கே இருக்கும்வரை பொய் முகம்.”

“இல்லே. உங்களைத் தேடி அடிக்கடி வர்றதுனால…. நீங்க சொன்னா கேட்பார்.”

‘உபசரிப்பு, ஒத்துழைப்பினால் ஒரு மனிதன் அடிக்கடி ஒரு பலான பெண்ணிடம் வருகிறானென்றால் அவள் சொல் பேச்சு கேட்பானென்று என்ன நிச்சயம்…? ‘

“பிளீஸ். யோசிக்காதீங்க. எனக்குத் தெரிஞ்ச வழி இது. முடியலைன்னா என் தலை விதி !” நொந்தான்.

‘ஏன் முயற்சி செய்து பார்த்தாலென்ன..?’ இவளுக்குள் பட்டது.

“சரி. நாளைக்கு வருவார். சொல்றேன் !” சொன்னாள்.

“நன்றி ரோஸி !”

வெளியேறினான்.

மறுநாள்.

எல்லாம் முடிந்து ஆசுவாசமாக ஆனபிறகு புடைவை திருத்தி தாமோதரன் அருகில் அமர்ந்தாள் ரோஸி.

அவர் பணத்தை எடுத்து நீட்ட…

“வேணாம்…” சொன்னாள்.

“ஏன்…??…”

“உங்களால ஒரு காரியம் ஆகனும்…”

“அதுக்கு இது சிபாரிசா….?”

“ஆமாம். !”

“என்ன..?”

“எனக்குத் தெரிஞ்ச நண்பர் ஒருவருக்கு வேலை வேணும். நாளைக்கு நடக்கப்போற நேர்முகத்தேர்வில் அவரைத் தேர்வு செய்யனும்.”

“சாரி!” சிரித்தார்.

“ஏன்…?”

“நீயெல்லாம் சிபாரிசு செய்து வேலை கொடுக்கும் அளவிற்கு நானோ அந்த வேலையோ அவ்வளவு மட்டம் கிடையாது!”

இந்த வார்த்தைகள் அனைத்தும் சவுக்கடிகள் பட்டது போல் சுரீரென்று தாக்க…. அவ்வளவுதான்.!!

“நாங்கன்னா… அவ்வளவு இளக்காரமா..? நாங்க சாக்கடைன்னாலும் சமுதாயத்துல ஒரு அங்கம். தொழிலையும் மனுசனையும் ஒன்னா பார்க்காதீங்க சார். தொழில் வேற. மனுசன் வேற. மனசு வேற. யாரும் யாருக்கும் சிபாரிசு செய்யக்கூடாது என்கிற நியதி எங்கேயும் இல்லே.

அந்த பையன் சேகர்….பாவம் ஏழை. பணம், காசு , பெரிய இடத்து சிபாரிசெல்லாம் இல்லாத அப்பாவி.. அவனுக்குத் தெரிந்த வழி…நான் பணம் சம்பாதிக்கும் எந்திரம், மனுசன் படுத்து எழுந்திரிக்கும் படுக்கையாய் நினைக்காமல் என்னையும் ஒரு மனுசியாய் நினைச்சி உதவி கேட்டான். நானும் அதைப் புரிஞ்சி உங்களை உங்களிடம் உதவி கேட்டேன். மனுசனை மனுசனாய் மதிக்கனும். ஏழைக்கு உதவுற மனசு எல்லார்கிட்டேயும் இருக்கனும். பதவி, பணம், பகட்டு மட்டுமே ஒருத்தரை மனுசனாக்கிடாது சார்.” நிறுத்தினாள்.

‘இவள் பாலானவள் என்று நினைத்தது எவ்வளவு மடத்தனம். எவ்வளவு புத்திசாலி. வார்த்தைகளில் தெளிவு. ஆணித்தரம்!’ நினைத்த தாமோதரன்…

“போதும் ரோசி. உன் மனுசத்தன்மையை நான் மதிக்கிறேன். நீ சிபாரிசு செய்யும் அந்த பையன் சேகரை நான் தேர்வு செய்யறேன்.” சொன்னார்.

ரோசி முகத்தில் பிரகாசம்.

“நன்றி சார் !” கைகூப்பினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *