ருத்ர தாண்டவம் – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,869 
 

கலவரம்…. பஸ்களை அடித்து நொறுக்கி தீயை வைத்து ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர் அந்த ஜாதி கட்சிக்காரர்கள். கலவரத்தைத் தூண்டி விட்டு விட்டு ஹாயாக ஓட்டல் ரூமில் ஸ்காட்ச்சை சுவைத்தபடி அமர்ந்திருந்தார் அந்த ஜாதிக் கட்சித் தலைவர் தண்டபாணி.

தன் அடிப்பொடியிடம் வினவினார் தண்டபாணி.

“இதுவரை எத்தனை பஸ்களை கொளுத்தியிருக்கிறார்களாம்?’

“தலைவரே, அறுபது கவர்ன்மென்ட் பஸ்களையும், நாற்பது தனியார் பஸ்களையும் கொளுத்தியிருக்கறாங்களாம்.’

“பத்தாது, ஐநூறு பஸ்களையாவது எரிக்கணும். அப்பத்தான் நம்ம எதிர்ப்பை காட்ட முடியும்!’ அவர் சொல்லி முடிக்கவும்
பரபரப்பாய் நுழைந்தான். அவரது இன்னொரு அடிப்பொடி, “ஐயா நாம் மோசம் போயிட்டோம்.’

“என்னடா? பதறாம சொல்லு’ வந்தவனை ஆசுவாசப் படுத்தினார் தண்டபாணி. அடிப்பொடி கூறினான்.

“ஐயா ஆர்.ஆர்.பி.ங்கிற பினாமி பேருல உங்களுக்கு இருபது பஸ் ஓடுதுல்ல?’

“ஆமா அதுக்கு என்னடா இப்ப?’

“கலவர நேரம் ஓட்ட வேண்டாம்னு பஸ்ஸை ஒரு காலி மைதானத்துல நிப்பாட்டி இருந்தோமுல்ல?’

“ஆமா அதுக்கு என்னவாச்சு?’

“அது யாருதுன்னு தெரியாம நம்ம கட்சிக்காரங்க சிலர் மொத்தமா இருபது பஸ்சையும் தீ வச்சு கொளுத்திட்டாங்க
தலைவரே!’ அடிப்பொடி கூறி முடிக்கவும் ஜாதித் தலைவர் தண்டபாணி மயங்கிச் சாய ஆரம்பித்தார்.

– வி. சகிதாமுருகன் (ஜூலை 2013 )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *