ரயில்பயணத்தில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 10,677 
 
 

பேண்ட்ரி காரில் வைக்கப்பட்டிருந்த மைதாமாவு மூடையை சுற்றி சிறு பூச்சிகள் சுற்றிக் கொண்டிருந்தன. அச்சிறுபூச்சிகள் பார்ப்பதற்குக் கரப்பான் பூச்சி போன்று இருக்கும். ஆனால் அளவில் சிறியது மேலும் கரப்பான் பூச்சி போல் மீசை இருக்காது. கடிக்காது. உடலின் மீது ஊர்ந்து சென்ற பின் ஊரல் எடுக்காது. ஆனாலும் அதன் உடல் தோற்றம் அருவருப்பாக இருக்கும். இப்பூச்சிகள் ரயில் கக்கூஸ்களிலும், பேண்டிரிகளிலும் அதிகமாக இருக்கும். ஹைய்தராபாத்தில் இப்பூச்சிகள் இல்லாத வீட்டை பார்ப்பது மிகவும் கடினம்.

கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் திருப்பதிக்கும் அடைலாபாத்துக்கும் இடையே இயங்குகிறது. திருப்பதியிலிருந்து காலை 5 மணிக்கு கிளம்பும் வண்டி நெல்லூர், விஜயவாடா, வாராங்கல் வழியே பயணித்து செகந்திராபாத் வரும் போது இரவு 10 மணி ஆகிவிடும். செகந்திராபாத்திலிருந்து கிளம்பும் வண்டி அடைலாபாத் சென்றடையும் போது மறுநாள் அதிகாலை 3 மணி ஆகிவிடும். வண்டி விஜயவாடா ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. பேண்ட்ரி மாஸ்டர் ஈவினிங் ஸ்நேக்ஸ் தயார் செய்து கொண்டிருந்தார். மைதாமாவு, நீளநீளமாக சீவிய வெங்காயம், பச்சை மிளகாய், சிவப்புநிற பவுடர் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி பிசைந்தார். பிசைந்த உருண்டையை சூடான எண்ணைய் சட்டியில் போட்டார். வெங்காயவடை ரெடியானது. மைதாமாவு மூடையிலிருந்து ஹைய்தராபாத் பூச்சி ஒன்று தலையை வெளியே எட்டிப்பார்த்தது.

நரேஷ், அவன் மனைவி சிரிஷா, அவர்கள் குழந்தை ஆர்யா மற்றும் நரேஷின் அம்மா லட்சுமி நால்வரும் கிருஷ்ணா எக்ஸ்பிரஸ்ஸில் C1 செகண்ட் கிளாஸ் சிட்டிங் கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். லட்சுமிக்கு பதினெட்டு வயது இருக்கும் போது நரேஷ் பிறந்தான். அவன் பிறந்த இரண்டு வருடம் கழித்து அவன் அப்பா காசநோயால் இறந்து போனார். பார்ப்பதற்கு லட்சுமி பாட்டி மாதிரியே தெரியமாட்டாள் இன்னும் அவள் இளமையுடனே இருக்கிறாள். ஆர்யாவிற்கு நான்கு வயது பூர்த்தியாகிவிட்டதால் அவனை பாசராவில் இருக்கும் சரஸ்வதி கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு ஆர்யாவிற்கு சரஸ்வதியின் முன்பு பூஜை நடத்தப்படும் .பூஜை முடிந்தபின் அரிசியில் தெலுங்கின் முதல் எழுத்தை எழுத கற்றுத்தருவார்கள். அதன்பிறகு ஆர்யா பள்ளிக்கு அனுப்பப்படுவான்.

வெங்காயவடையின் வாசம் C1 கோச்சில் வடைவிற்பவன் நுழையும் முன்பே கோச் முழுவதும் வடையின் வாசனை பரவியது. C1 கோச்சின் வாசலில் நின்று கொண்டிருந்த டி.டி.ஆர் வடைவிற்பவனின் தட்டிலிருந்து இரண்டு வடையை எடுத்து பேப்பரில் சுற்றி கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

“செக்கிங் முடிஞ்சதா சார்”

“இந்த கூட்டத்துக்குள்ள போயிட்டு எப்படி வெளியே வர. நீ போய் உன் வியாபாரத்தை பார். நான் ஏ.சி கம்பார்ட்மெண்ட் போறேன்”

வடைவிற்பவன் ஒரு நிமிடம் அந்த இடத்தில் நின்று இந்த கூட்டத்தினுள் உள்ளே சென்று எப்படி வெளியே வர என்று யோசித்தான்.

C1 கோச். மூன்றுபேர் அமரும் இருக்கைகள் சுமார் முப்பது இருக்கைகள் கொண்டது. மூன்றுபேர் அமரும் இருக்கையில் நான்கு பேர் அமர்ந்திருந்தனர். வடது இடது இருக்கையின் மத்தியில் இருந்த நடைபாதையில் நடப்பதற்கு கூட இடமில்லாமல் ஜனங்கள் நின்று கொண்டிருந்தனர். சிரிஷா, லட்சுமி அமர்ந்திருந்தனர். நரேஷ் நின்று கொண்டிருந்தான். அழுது கொண்டிருந்த ஆர்யாவை சமாதானப்படுத்த வடை ஒன்றை வாங்கி கொடுத்தாள் சிரிஷா.

“நாலு வடையா வாங்கு சிரிஷா. நாமளும் சாப்பிடலாம்” என்றாள் லட்சுமி

சிரிஷா அருகில் அமர்ந்திருந்த ஆண் அவர்கள் வாங்கிய வடையை பார்த்துக் கொண்டிருந்தான். ஆர்யா அழுது கொண்டே வடையை சாப்பிட்டான்.

போனில் பேசிக் கொண்டிருந்த நரேஷ் “ஏன் இன்னும் அழுகிறான்”

“இவ்வளவு புழுங்கினா சின்ன பையன் என்ன செய்வான். நம்மளுக்கே மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. நீ சாப்பிடுறா செல்லம்.” என்றாள் லட்சுமி.

“அம்மாகிட்ட வர்றியா நல்லா காற்று வருது. வர்றியா?” என்று அழைத்ததும் ஆர்யா லட்சுமியிடமிருந்து சிரிஷாவின் மடியில் சென்று அமரிந்து கொண்டான்.

“அம்மா தண்ணீர்” என்றான் ஆர்யா.

வடைக்காரன் C1 கோச்சினை கடக்கும் போது தட்டிலிருந்த வடைகள் காலியாகி இருந்தது.

மாலை 4:10க்கு நூத்தங்கலுக்கு வரவேண்டிய வண்டி 6 மணிக்கு வந்தது.

“திஸ் சன்டே ஜ ம் கோய்ங் டு யூ.எஸ். ஜ ல் கால் யூ ஒன்ஸ் ரீச் செகந்திராபாத்” வழியனுப்ப வந்த பெண்ணை கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு C1 கோச்சில் ஏறினான் பாலாஜி.

வண்டி கிளம்பியது.

கோச்சின் வாசலில் நின்றிருந்தவர்கள் “சிகப்பு கலர் லக்கேஜ் உள்ளே போ”

லக்கேஜ் பேக் பெரிதாக இருந்ததால் கூட்டத்தின் நடுவே நகரக்கூட முடியவில்லை. பேக்கிலிருந்த கொக்கி நின்று கொண்டிருந்த பெண்ணின் டீ-சர்ட்டில் மாட்டிக் கொண்டது. பாலாஜி முன்னே நகர்ந்த போது அப்பெண்ணின் டீ-சர்ட்டும் கூடவே வந்தது.

அந்த பெண் “ஏய்” என்று கத்தினாள்.

பாலாஜி “சாரி. ஜ கேவ் டூ கோ சீட் நம்பர் 55”

“என் டீ-சர்ட் உன் பேக்ல மாட்டி இருக்கு. அதை எடுத்துவிடு”

“ஓ.கே”

டீ-சர்ட்டினை லக்கேஜ் பேக்கிலிருந்து எடுத்துவிட்டதும் பாலாஜி அந்தப்பெண்ணை பார்த்து சிரித்தான். கொக்கியில் மாட்டியிருந்த டீ-சர்ட்டின் பகுதியில் பெரிய ஓட்டை விழுந்திருந்தது. அந்தப்பெண் பாலாஜியை முறைத்துப் பார்த்தாள்.

பாலாஜி “ஜம் ரியலி சாரி”

சீட் நம்பர் 55ல் லட்சுமி அமர்ந்திருந்தாள்.

பாலாஜி லட்சுமியிடம் “வாட் இஸ் யுவர் சீர் நம்பர்?”

சிரிஷாவின் அருகில் அமர்ந்திருந்த ஆண் “நீங்க உட்காருங்க சார். இதுகெல்லாம் அன்-ரிசர்வ்டு”

“ஏய் ஒழுங்கா பேசு. இல்ல வாய் எகிறிடும்” நரேஷ்.

“இந்த கோச்சில இருக்கிற கூட்டத்தை பாருங்க. ஆட்டுக்கூட்டம் மாதிரி. ஒரு ஆள் நகர முடியுதா? எவ்வளவு நெரிச்சல் பாருங்க. எல்லாம் அன்-ரிசர்வ்டு டிக்கெட். இதுல எத்தனை பேர் டிக்கெட் இல்லாம இருக்கானுங்களோ?”

அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் அந்த ஆணை எந்தவொரு முக பாவனையுமின்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாலாஜி சீட் நம்பர் 55ல் அமர்ந்து கொண்டான். லட்சுமி பாலாஜியின் அருகில் நின்று கொண்டிருந்தாள். ஆர்யா லட்சுமியிடம் போக வேண்டுமென்று அடம் பிடித்தான்.

“வேண்டாம் ஆர்யா. பாட்டிக்கு முதுகு வலிக்கும்” என்றாள் சிரிஷா.

ஆர்யா தொடர்ந்து அடம்பிடித்தான். லட்சுமியை அமர சொல்லிவிட்டு சிரிஷா எழுந்து நின்று கொண்டாள்.

டீ-விற்பவனின் சப்தம் கேட்டது. டீ-கேனை தலைக்கு மேலே தூக்கிக் பிடித்துக் கொண்டு கூட்டத்தின் ஊடே நடந்து வந்தான். டீ-விற்பவனின் சட்டை வேர்வையில் ஊறி ஈரமாக இருந்தது. எத்தனை பேரின் காலை மிதித்திருப்பான் என்று தெரியவில்லை அவன் கடந்து சென்ற பின் ஒவ்வொருவரும் டீ-விற்வனை முறைத்துப் பார்த்தனர்.

“பார்த்துப்போப்பா. ஆளுங்க நிக்கிறது தெரியல”

“பார்த்து போகிற மாதிரி இங்க எங்கே இடம் இருக்கு. எல்லோரும் மக்காச்சோளத்தில ஒட்டி வச்ச மாதிரி நின்னா எப்படி போறது”

“தம்பி இங்க ஒரு டீ” பாட்டி ஒன்று டீ வாங்கி குடித்தது.

“அத்தை டீ சாப்பிடுறீங்களா?”

“வாங்கும்மா”

“அம்மா எனக்கும்” என்றான் ஆர்யா.

இரண்டு கால்களின் இடுக்கில் டீ-கேனை வைத்துக் கொண்டு கேனிலிருந்து வடியும் டீயை பிடித்தான் டீ-விற்பவன். லட்சுமி இடது கையில் ஆரியாவின் டீ-கப்பை வைத்துக் கொண்டு வலது கையில் வைத்திருக்கும் டீயை உறிஞ்சிக் குடித்தாள். ஆர்யா லட்சுமியின் மடியில் அமர்ந்திருந்தான்.

நரேஷ் போனில் பேசிக்கொண்டிருந்தான். விஜயவாடாவில் இருக்கும் பீ.பி.ஓ கம்பெனியில் பணிபுரிகிறான். ஓர்க் ப்ரெம் கோம் என்ற பிரிவின் கீழ் இப்போது இரயில் பயணம் செய்து கொண்டே வேலை செய்து கொண்டிருக்கிறான்.

ஆர்யா லட்சுமியின் மடியிலிருந்து கீழே இறங்கும் போது லட்சுமியின் இடது கையிலிருந்த டீ-கப் கவிழ்ந்து டீ அருகிலிருந்த ஆணின் பேண்டில் கொட்டியது.

அந்த ஆண் கோபமாக “கொஞ்சமாவது அறிவிருக்கா?”

லட்சுமி “தவறுதலா நடந்திடுச்சி, மன்னிச்சிடுங்க”

“இப்ப இதை எப்படி துடைக்கிறது தண்ணீலதான் கழுவணும். இந்த கூட்டத்தில எப்படி போயிட்டு வர்றது”

சிரிஷா ஆர்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

“ஏண்டா ஒரு இடத்தில உட்காரமாட்டியா?”

ஆர்யாவின் அழுகைக்குரல் “ஓ” வென்று ஒலித்தது.

பேண்டை தண்ணீரில் துடைத்துவிட்டு வந்த ஆண் “அம்மா நீங்க அந்தப்பக்கம் உட்காருங்க. ஸார் நீங்க நடுவுல உட்காருங்க”

லட்சுமி-பாலாஜி-ஆண் என்ற வரிசையில் மாற்றி அமர்ந்து கொண்டனர். ஆர்யா சிரிஷாவின் கால்களை பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான்.நரேஷ் போனில் சப்தமாக யாரையோ திட்டிக் கொண்டிருந்தான். வண்டி வாராங்கல், காசிப்பேட் தாண்டி சென்று கொண்டிருந்தது. வெகுநேரம் கால்களை மடக்கி வைத்திருந்தவர்கள் காலை முன்னே நீட்ட முயற்சி செய்து கொண்டும், சிறு அசைவு கூட இல்லாமல் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து நின்று கொண்டும் இருந்தனர்.

“இந்த ஜனங்க இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படியே இருக்கப் போறாங்கன்னு தெரியலை. பயணம் பற்றிய ஒரு அடிப்படை அறிவே இல்லாம இருக்காங்க. இங்க பாருங்க சரியா மூச்சி கூட விட முடியாம போயிட்டு இருக்கோம். இதுல எவனுக்காவது இப்ப ஹார்ட்-அட்டாக் வந்துச்சினா என்ன செய்வாங்க?”

“ஜனங்க பற்றி இவ்வளவு ஆதங்கமா பேசுறீங்களே. நீங்க என்ன வேலை செய்றீங்க?”

“தினப்பத்திரிக்கை ரிப்போட்டர்”

லசி விற்பவனிடம் லசி வாங்கி லட்சுமி, சிரிஷா, ஆர்யா குடித்தனர். நரேஷ் போனில் பேசும் மும்மரத்தில் லசியை வாங்கி லக்கேஜ் பேக்கில் வைத்துக் கொண்டான்.

“எல்லோரும் கணக்கு போட்டு செயல் படுறாங்க. இதோ இந்த லசி விற்பவனுக்கு இதுக்கு முன்னாடி வந்த டீ-காரனுக்கு அதுக்கு முன்னாடி வந்த வடைகாரனுக்கு இன்னைக்கு நல்ல வியாபாரம். ஆனால் கொஞ்சம் உடல் அலுப்பு. ஒரு குவாட்டர் சாப்பிட்டா அந்த உடல் அலுப்பும் காணாமல் போயிடும். நம்ம பக்கத்தில உட்காந்திருக்கிர பேம்லில மூன்று பேரும் அன்-ரிசர்வ்டுல டிராவல் செய்றாங்க. விஜயவாடாலிருந்து பாசரா பத்து மணி நேரம் பயணம். ஒரு நிமிசம் கூட எப்படி அன்-ரிசர்வ்டுல பத்து மணி நேரம் பயணம் செய்யப் போறோமுன்னு யோசிக்காம. அந்த ஆள் ஓர்க் ப்ரைம் கோம் போட்டு ஊரை சுத்திக்கிட்டு இருக்காரு. ஒருநாள் சம்பளத்தை விட்டுக் கொடுக்க அவருக்கு மனசில்லை. இந்த கோச்சில இருக்கிற அன்-ரிசர்வ்டு டிக்கெட் எல்லாம் இவரைப் போலத்தான் இருப்பாங்களோ? நீங்க என்ன செய்றீங்க?”

“ஹைய்தராபாத்தில சாப்ட்வேர் இன்ஜினேயரா வேலை செய்றேன்”

“அலைச்சல் இல்லாத நிம்மதியான வேலை”

“ஆனா மூளைக்கு அதிகமா வேலை கொடுக்கிறோம்’

சிரிஷாவிடம் ஆர்யா வயிறு வலிக்கிறது என்றான். சிரிஷா ஆர்யாவை கக்கூஸிற்கு அழைத்துச் சென்றாள். கக்கூஸினுள் மூன்று பேர் மூக்கை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். அவர்களை வெளியே வரச் சொல்லிவிட்டு ஆர்யாவை கக்கூஸினுள் போகச் சொன்னாள் சிரிஷா.

ஆர்யா “தண்ணீர் வர மாட்டேங்குது”

பாலாஜி “ஹைய்தராபாத் போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”

பாலாஜி அருகிலிருந்த ஆண் “இரண்டு மணி நேரம்”

சிரிஷாவும், ஆர்யாவும் திரும்பி வந்து லட்சுமியின் அருகில் நின்று கொண்டனர்.

லட்சுமி “வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. டாய்லெட் போயிட்டு வந்திடுறேன்”

“அத்தை டாய்லெட் எதுலயும் தண்ணீர் வர மாட்டேங்குது”

“இப்ப இவன் போயிட்டு வந்தானே?”

சிரிஷா தெலுங்கு தினசரி பேப்பரை எடுத்துக்காட்டினாள்.

வடை தின்ற அனைவருக்கும் வயிற்றில் வலி எடுக்க தொடங்கியது.

ஆசிரியர் குறிப்பு: இச்சிறுகதையை நான் நேரில் சென்று வந்த அனுபவத்தில் எழுதுகிறேன். எல்லோரும் ஏதோ ஒரு கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த கணக்கில் அவர்கள் எப்போதும் லாபக்கணக்கை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். ஒரு பயணம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி சிந்திக்காமல் பயணம் செய்கின்றனர். பயணத்தில் கிடைக்கும் ஆனந்தத்தைப் பற்றி நினைக்காமல் இலக்கை சென்றடைய வேண்டும் என்பதே மூளையின் முதலாம் கணக்காக உள்ளது. இக்கதை அன்-ரிசர்வ் டிக்கெட் எடுத்துக் கொண்டு ரிசர்வ் கோச்சில் பயணம் செய்யும் அன்பர்களுக்கு சமர்ப்பணம்.

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *