கிழக்கில் திணிந்திருந்த இருள் விரிந்து ஐதாகி மெல்ல அசைந்தசைந்து மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டுகொண்டிருந்தது மகாதத்தம். வேளை ஆகிறதென எண்ணிக்கொண்டது.
இரவு முழுதும் அதனால் உறங்க முடியவில்லை. சிறிதுநேரம் படுத்திருந்தது. சிறிதுநேரம் கண்களை மூடி தூக்கம் கொள்ளப் பார்த்தது. முடியாது…முடியாதென எண்ணிக்கொண்டுபோல் தலையை ஆட்டியவாறு மறுபடி எழுந்து நின்றுகொண்டது. தன்னை உறுதிப்படுத்த, தெளிவுபடுத்த நீண்டநேரம் தேவைப்படுமென நினைத்துப்போல் மீதி இரவு நெடுக நின்றுகொண்டே இருந்தது.
எவ்வளவு யோசித்தும் அதனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எவ்வாறு தன் அரசன் உறுகுணை அரசனுடனான ஒரு நேர்நேர் யுத்தத்திற்குச் சம்மதித்தான் என்ற வினா நெடுநேரத்தின் பின்னரும் ஒரு புதிராகவே அதனுள் இருந்துகொண்டிருந்தது.
முதல்நாள் மதியத்துக்குள்ளேயே அனுராதபுரக் கோட்டையினை முற்றுகையிட்டிருக்கும் அரசனிடமிருந்து வெண்கொடியேந்திய தூதொன்று வந்த சேதி அதன் காதில் விழுந்துவிட்டது. கடந்த பல மாதங்களின் நிகழ்வுகளில் ஒரு தோல்வியும் அழிவும் தமிழர் அரசைநோக்கி முன்னேறியவண்ணமிருந்த சூழ்நிலை, ஒரு பிரதான சம்பவத்தின் ஏது குறுக்கீடுமின்றி மாறிப்போகப் போகிறதாவென தன் பாகர்கள்போலவே மகாதத்தமும் எண்ணி உவகைகொண்டது.
அந்த உவகை நியாயமானது. ‘பவுத்தத்தின் உன்னதத்திற்கான போர்’ என்ற சுலோகத்தோடு பவுத்த துறவிகளும், பரிவாரங்களும், பகடையாய் போர்க் களத்தில் உருட்டிவிடத் தயாராய்த் தாயாரும் உடன்வர பெரும்படையொன்றைத் திரட்டிக்கொண்டு தென்திசையிலிருந்து சிங்கள அரசன் படையெடுத்துவரும் செய்தி அறியவந்தது ஆண்டொன்றுக்கு முன்னராகக்கூட இருக்கலாம்.
அரசன் சிரித்திருப்பானா? மகாதத்தம் அது காணவில்லை. ஆனால் காவலரும், பாகரும் நகுதல் செய்ததை அது கண்டது. அதுவுமே ஒருமுறை தன் பெருமேனி உதறி மகிழ்வு காட்டிக்கொண்டது. அந்தளவுக்கு அவனது படைவலி பெரிது. அரண் வலி பெரிது. அவனது படைத் தளபதிகளின் வீரமும் தீரமும் நாற்றிசையும் அளாவி நின்றிருப்பவை.
படையெடுப்பு தொடங்கிய அடுத்த கணத்திலிருந்தே ஒவ்வோர் அங்குல படை நகர்வும், ஒவ்வொரு சிறுசிறு சம்பவமும்கூட அரண்மனைச் சுற்றாடலின் காற்றுவெளியிலேறி அலைந்துகொண்டிருந்தது. மகாதத்தமும் எல்லாவற்றையும் கிரகித்துக்கொண்டிருந்தது.
மகியங்கனை வீழ்ந்தது என்ற தமிழருடைய முதல் தோல்வியின் செய்தி வந்தவேளை ஓர் அதிகாலையாகவிருந்தது. யாரும் பெரிதாகப் பாதிப்படைந்ததாக மகாதத்தம் அறியவில்லை. அம்பதீர்த்தத்தில் இருக்கிறது எதிரிகளுக்குச் சமாதியென்ற பேச்சுக்களைக் கேட்டு அதுவும் தன்னைத் தேற்றிக்கொண்டது.
அம்பதீர்த்தத்தின் படைத் தளபதி தித்தம்பன் அனுராதபுரம் வந்திருக்கிறான். படை வீடுகள், குதிரை லாயங்கள், யானைக் கொட்டடிகளென்று பார்வையிட்டு வந்த அவனை, அரச கவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த பட்டத்து யானையான மகாதத்தமும் நேரில் கண்டிருந்தது. கறுத்துத் திரண்டுருண்டிருந்த தித்தம்பனின் நெடுமேனியில் அந்தக் கிறுங்காக் கண்கள் அதனால் மறக்கப்பட முடியாதவை. ஆனால் அம்பதீர்த்த போர்முனையில் விகாரமாதேவியே பகடையாய் உருட்டப்பட்டபோது தித்தம்பன் வீழ்ந்தான். வீழ்ந்த செய்தியில் அரண்மனை அதிர்ந்து அடங்கியது. அம்பதீர்த்தத்தின் பின் சர்ப்பக்கோட்டை, கச்சதீர்த்தம், நந்திக்கிராமமென ஒவ்வொரு அரணாகச் சரிந்தது. விஜிதபுரம் கடந்து வந்த எதிரிப்படையால் அனுராதபுரமும் முற்றுகைக்காளானது.
யாரும் பெரிதாக அரண்டதாய்த் தெரியவில்லை. அந்தளவுக்கு அனுராதபுரக் கோட்டை வலியது. அரண்கள் திட்ப நுட்பமானவை. அதன் உணவு நீர் ஆதாரங்கள் சுரபியாய்ச் சுரக்க வல்லவை.
இந்த நிலையிலேதான் எதிர்த்தரப்பிலிருந்து தூது வந்திருந்தது. ஒரு உடன்பாட்டுக்கு வர அவர்கள் எண்ணிவிட்டனரா?
பிற்பகலில் அதற்கு விடை கிடைத்தது. மறுநாள் அரசன் கைமுனுவை நேர்நேர்ப் போரில் சந்திக்கிறான்.
மகாதத்தம் திகைத்துப்போனது.
கைமுனு இளைஞன். தன்னரசனோ எழுபது அகவை கடந்தவன். அவனது புருவங்கள் இறங்கி கண்களை மறைக்கத் தொடங்கியிருந்தன. கொட்டடி வருகிற வேளைகளில் கூர்ந்து கூர்ந்து பார்த்தே தன்னுடன் உரையாடியதை அது கவனித்திருந்தது.
அரண்மனையில் தன்போல் யாரும் திகைப்புக் கொண்டதாகத் தெரியாதிருக்கவே மகாதத்தம் தன்னையும் தேற்றிக்கொள்ள முயன்றது. தம்மரசனின் யுத்த அனுபவத்துக்கும் திறமைக்கும் இளைமையின் வலிமை முன்னிற்க முடியாததென அவர்கள் நினைத்திருந்ததை அதுவும் நம்பப் பார்த்தது.
அதனால் இயலவில்லை.
ஒரு நேர்நேர் யுத்தத்தில் அவர்கள் ஒரு வலிதையே அறிந்தவர்களாய் இருந்தார்கள். அந்த யுத்தத்தில் சம்பந்தப்படும் மிருகத்தின் வலிது அதேயளவான முக்கியமானதென்பதை மகாதத்தம் அறியும். குதிரை மேலான போரெனில் குதிரையும், யானையேறிய போரெனின் யானையும் மறுவலிதுகள். அவையும் யுத்தம் செய்தேயாகவேண்டும். ஆனால் அரண்மனைக் காவலரும் ஏவலரும் பாகரும் தம்மரசனின் யுத்த அனுபவத்திலும் திறமையிலும்மட்டும் நம்பிக்கைகொண்டு திருப்திப்பட்டோராயிருந்தனர்.
‘நாளைக்கு உனக்குக் கொண்டாட்டம்தான்’ என படுக்கப்போகும்போது தலைமைப் பாகன் மானன் வந்து சொல்லிப் போனான். ‘நன்றாகத் தூங்கு. விடிவிடியென வருவேன், உன்னை அலங்காரம் பண்ண’.
‘அட பாவி மனிதா, நானென்ன வீதிவலத்துக்கா போகவிருக்கிறேன்?’ மகாதத்தம் எண்ணிக்கொண்டது.
தன்னரசன்போலவே அதுவும்தான் அனுபவம் மிகக்கொண்டது. வலிமை மிகவுடையது. ஆண்டுகள் பலவானதில் வயது கண்டிருந்ததே தவிர முதுமை காணாதது. இருபதின் வீறு அதனில் அப்போதும்தான் குறையாதிருந்தது. கந்துலா எவ்வளவு இளைமையானாலும் அதனால் வெற்றிகொண்டுவிட முடியும்.
மகாதத்தம் கால் முடக்கிக் குந்திப் படுத்தது.
சிறிதுநேரத்தில் அதன் மனச்செவி கிழியுமாப்போன்ற பிளிறல். கந்துலாவினதா?
கந்துலா தனக்கென ஒரு தனித்துவமான பிளிறல் தொனி கொண்டதென அது ஏற்கனவே அறிந்திருந்தது. அது ஒரு ஆக்ரோஷத்தின் தொனி. அடங்காச் சினத்தின் வெளிப்பாடு. கந்துலா ஒரு அடங்காச் சினமும், ஆக்ரோஷமும் கொண்டிருந்த மிருகம்தான். அவை அதன் பிறப்பின் நாற்பதாம் நாளிலிருந்து உருவானவை. தாய் வெறுப்பு என்ற புள்ளியிலிருந்து தொடங்கியவை. பின்னர் சகலவுமான தன்னின வெறுப்பென்று அவை ஆகின. இன்று சகல மிருகமுமென்று ஆகியிருக்கிறது. அதன் ஆக்ரோஷத்தில் எத்தனையோ மிருகங்கள் தந்தத்தால் கிழிப்புண்டு குடல் சரிந்து மாண்டிருக்கின்றன. எத்தனையோ யானைகள் அதன் மோதுகையில் நெற்றி நொறுங்கிச் செத்திருக்கின்றன.
கந்துலாவின் கதை புதுமையானது.
அடர் வனத்திடை மிகுவலி படைத்த ஒரு முதிர்பெண் யானைக்குப் பிறந்ததாம் அந்தக் குட்டி. பிறந்த அந்தக் குட்டியோடு தென்திசை வந்த அந்த வன கஜம், குட்டியை உறுகுணை அரசின் எல்லைக் கிராமத்தினருகே விட்டுவிட்டு திரும்பி வனமோடிவிடுகிறது. திகைத்துப்போகிறது அந்தத் தவ்வல் யானை. இடம் வலம் தெரியாதது மட்டுமில்லை, பசியாறவும் வழி தெரியாது தாய் யானையைத் தேடி அலைகிறது. பசியும் களைப்பும் மேலிட்டுக் கிடந்த அந்த யானையைக் கண்டு இரக்கம் மேவி தந்தையோடு புறநகர் உலா சென்ற அந்நாட்டு இளவரசன்தான் அரண்மனை எடுத்துச் சென்று கந்துலா என பவுத்தம் புகழும் கௌதமரின் குதிரையினது பெயர் சூட்டி வளர்த்தெடுத்தான்.
இளவரசனாயிருந்தபோது கொண்டிருந்த தன் பிரியத்தை தந்தையின் மரணத்தின் பின் அரசனாகும் இளவரசன்மீது கந்துலா எப்போதும் பெருக்கியே வந்துள்ளது. அதன் அடையாளங்கள் ஒவ்வொரு யுத்தத்திலும் வெளிப்பட்டே இருக்கின்றன. உறுகுணை அரசனின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் அதன் பங்கு இருக்கிறதென பலரும்தான் பேசிக்கொண்டனர்.
மகாதத்தம் எல்லாம் அறிந்திருந்தது.
கந்துலாவின் வலிமையை எதிர்கொள்வது மகாதத்தத்துக்கு கடினதாய் இல்லாமலிருக்கும்தான். ஆனால் அதன் ஆக்ரோஷத்தை எதிர்கொள்வதே அதன் தயக்கத்தின், ஓரளவு அச்சத்தினதும், காரணமாகும்.
அதனது மரண அச்சமில்லை, தோல்வியினது. தோல்வியினதும் தன் பீடு பெருமைகளது இழப்பு என்பதால் இல்லை. தன் அரசனது வெற்றியின் இடையூறாக ஆகிவிடுமோ என்பதாலான அக்கறையினால்தான்.
அது தன் தந்தங்கள் காரணமாகப் பெற்ற பெயர்தான் மகாதத்தம். அதன் தந்தங்கள் வலியவை. இலங்கையின் எப்பகுதி வனமும் அதன் தந்த நீளங்களின் அளவுபோல் வேறு யானையில் காண்டிருக்கவே முடியாது. அவை வலிதிலும் அமிருத்தியமானவை. பாறைகளைப் பிளக்க வல்லவை. அவற்றின் மோதுகையில் மலைகளே நொறுங்கிப் போயிருக்கின்றன. அவை ஒளி பொருந்தியவைகூட. இருட்டிலும் அதன் இருப்பை அவை காட்டிநிற்கிற அழகை அதன் அரசன் எவ்வாறெல்லாம் மெச்சியிருக்கிறான். அதற்கு வலிமைபற்றிய அச்சம் எழ காரணமேயில்லை. ஆனால் ஆக்ரோஷம்…
எழுந்து நின்று விடியலைக் கண்டுகொண்டிருந்த அக்கணத்திலும் ஓர் குளிர் தன் பாதங்களினூடாக உள்நுழைந்து செல்வதை உணர்ந்தது மகாதத்தம்.
அது செய்ய ஏதுமில்லை. எல்லாம் முடிவுசெய்யப்பட்டாகிவிட்டன. இனி யுத்தத்தை எதிர்கொள்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.
இருளாக அசைந்த உருவங்கள் வெளிச்சம்பட எதிரில் பாகர்களாகி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. பின்னால் தலைமைப் பாகன் வந்துகொண்டிருந்தான். கையில் உலோக முகபடாம், தோலுடை, அம்பாரிகள் தாங்கி வேலைக்காரர்கள்.
மகாதத்தத்துக்கு அவை அணிவிக்கப்பட்டானது. பல்வேறு தருணங்களில் அது அவ்வாறு அணி செய்யப்பட்டதுண்டு. ஜொலிப்பு மிக்க ஆபரணங்களன்றி, அதுபோல் வல் உலோகங்கள் வன்தோலுடைகள் கொண்டு அணி செய்யப்பட்ட காலங்களிலும் அது உவகையன்றி வேறொன்றை அறிந்ததில்லை. ஆனால் அன்றைக்கு அது உவகையா என்று அதனாலேயே தீர்மானிக்க முடியாதிருந்தது.
நெடுநாள் பூட்டிக்கிடந்த நெடுங்கதவம் திறக்க துண்ணென்று நிலமதிர வந்த மகாதத்தம், கோட்டையின் முன்னே தறித்தும் பிடுங்கியுமாய் மரங்கள் இற்றுக் கிடந்த வெளியில் நிலைநின்றது.
கோட்டையின் மேலும், கொத்தளங்களிலும், அரண்மனையிலும், அதன் உப்பரிகைகளிலும் நிறைந்திருந்த போர் வீரர், காவலர், ஏவலாளர் கூட்டம் பேரொலி எடுத்தது. கோட்டையின் முன் அணி வகுத்து ஆயுதம் பூணாதிருந்த ஒரு மறவர் கூட்டம் கரவொலி எழுப்பியது.
மகாதத்தம் முன்னே பார்த்தது.
அதன் பார்வையில் பட்டது முதலில் கந்துலாதான். பக்கத்தே நீள்வரிசையில் எதிரிப் போர்வீரர்கள். அவர்களும் வித்தை பார்க்க வந்தவர்கள்போல்தான் ஆயுதமற்றவர்களாய். இடையிடையே சில துவராடைகள். பின்னால் தொலை தூரத்தில் பாசறைகள் தெரிந்தன. விகாரமாதேவி அந்தப் பாசறைகளுள் ஏதாவதொன்றில் இருக்கக்கூடுமோ? இல்லாவிடின் அங்கேதான் எங்காவது ஓரிடத்தில் தன் தனயனின் யுத்தம் காண கிட்டிவந்து நின்றுகொண்டிருக்கலாமோ?
ஆரவாரம், சத்தம் எல்லாம் அடங்கிக்கிடக்கின்றனவே எதிர்த் தரப்பில். ஏன்? தம் இளைய அரசன் பொருதப்போவது ஒரு முதியவனானாலும் அனுபவமும், போரியல் நன்கு தெரிந்தவனுமான ஒரு எதிரியுடன் என்ற எண்ணத்தால் அசைவு மறந்து நின்றுகொண்டிருக்கின்றனரோ?
மறுபடி கந்துலாமீது கவனம் திரும்புகிறது மகாதத்தத்துக்கு. ஏன் அதன் பார்வையில் அத்தனை கனதி? எதற்காக அந்த விறைப்பு, உஷார்நிலை? எந்தக் கணமுமே பாய அது குறிபார்த்து நிற்கிறதா? அதன் கீழ்ப்புறமாய்க் கிளம்பும் புழுதி அதன் காலுதைப்பின் விளைவோ?
மகாதத்தத்தின் பார்வை கந்துலாவின்மேல் ஏறுகிறது. கந்துலாவின் உருவத்துக்குச் மிகச் சின்னதாய்த் தோன்றும் ஒரு உருவம் அதன் அம்பாரியில் இருக்கிறது. இதுதான் அந்த எதிரி அரசனா? பொருத்தமற்ற சூழ்நிலையெனினும் அதற்கு அப்போது நகைக்க வந்தது. ஆனாலும் மாறாக ஒரு வெறுப்பை அது சுரக்கப்பண்ணிக்கொண்டது. அவன் தன் அரசனது படையில் பெரும்பகுதியைக் கொன்று, அதன் சிற்றரசுகளின் செல்வங்களையெல்லாம் அம்பாரிகளில் ஏற்றி தன் அரசனைக் கைப்பற்ற, முடிந்தால் கொல்ல, கங்கணத்தோடு வந்திருப்பவன். அனுராதபுரத்தை உறுகுணை அரசோடு ஒன்றாக்கி பெரும் பவுத்த தேசம் காண நினைத்திருப்பவன். சின்ன வயதிலிருந்தே தமிழர்மீதான வெறுப்பை வளரவைத்துக்கொண்டிருப்பவன்.
மகாதத்தம் உஷாரானது.
ஒரு களத்தில் அதற்கான அறம் எதிரியை வெல்வது. அங்கே அது செய்யவேண்டியது கந்துலாவை அழிப்பது. அதன் அழிவிலேயே தன் அரசனின் எதிரியினது அழிவுமென்பதால் அதை நிர்தாட்சண்யமற்றும், யுக்தியாகவும் நிறைவேற்றி முடிக்கவே வேண்டும்.
அதன் மேனியில் வலிதான நிச்சயங்களின் பின்னரும் நிறைந்திருந்த தளர்வு அகன்றது. அது மெல்ல மேலும் சில அடிகளைப் பெயர்த்து முன்வைத்தது.
கந்துலாவின் கண்களை அதனால் இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. அதன் கண்கள் கனலேறிக் கிடக்கின்றன. கருகருவெனக் கறுத்த அதன் மேனிக்கு கண்களின் சிவப்பு துல்லியமாகத் தெரிகிறது.
மகாதத்தம் திடப்பட்டுக்கொண்டது.
கந்துலா யுத்தத்தில் அச் சினம் காரணமாகவே தவறிழைத்தல் தவற முடியாதபடி நிகழும்.
யுத்தம் தொடங்கியது.
முதலில் பாய்ந்து வந்தது கந்துலாதான். அதன் சற்றே விரிந்த தந்தங்களை நிமிர்த்தி, எதிரானையின் கழுத்து மய்யத்தில் அல்லது அதன் வயிற்றில் அவற்றின் எதன் முனையையாவது இறக்கிவிடும் மூர்க்கமிருந்ததை மகாதத்தம் நொடிப் பொழுதில் கண்டுகொண்டது. மேலேயிருக்கும் தத்தம் அரசர்கள் தமது ஆயுதங்களைக்கொண்டு பொருதிக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுப்பதற்கான பொருதல் முறையாக அது இல்லையென்பதை மகாதத்தத்தின் நீடிய போர் அனுபவம் உரைத்துவிட்டது. கந்துலா தன்னுடன் ஒரு நேர்நேர் யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அதை அது எதிர்கொண்டாகவேண்டும். தன்னின் தோல்வி தன் தலைவனின் தோல்வியாகக்கூடிய பெரும் சாத்தியப்பாடானது ஒரு யுத்த பூமி.
கந்துலாவின் முதல் பாய்வினை, அதை எதிர்கொள்ளப் போவதுபோல் நேரெதிர் சென்று, லாவகத்தில் ஒரு ஓரமாய்ச் சரிந்து திரும்ப, கணார்…கணார் என்ற ஒலிகள் மேலே கிளருகின்றன.
அதன் சுருண்ட துதிக்கையின் வலுவில் காதுரசுப்பட்ட கந்துலா பெரும் பிளிறலெடுத்தபடி மறுபடி தாக்கத் திரும்புகிறது. அது தன் யுத்தத்துக்கான வாகான நிலைகளை வகுப்பதை மகாதத்தம் ஏற்கனவே உணர்ந்ததுதான். அம்மாதிரி யுத்தம் அரசர்களின் மோதல்களுக்கான அனுசரணை நிலைகளை அளிப்பதில்லை என்பதை அது அறியும். வேகமாக பக்கப்பாட்டில் முன்னேறிய மகாதத்தம் கந்துலாவை அப்படியே பக்கமாய்த் தள்ளி வீழ்த்த முனைந்தது. மகாதத்தத்தின் வலிமைக்கு எவ்வளவு மூர்க்த்தோடிருந்தும் கந்துலா எதிர்நிற்க முடியாது சறுக்கிச் சென்றுகொண்டிருந்தது. கடுநிலத்தின் புழுதி மேலே கிளர்ந்தது. கந்துலா நேரெதிர் வர எடுத்த முனைப்புக்களையெல்லாம் சமயோசிதமாய்த் திரும்பித் திரும்பி தவிர்த்துக்கொண்டிருந்தது மகாதத்தம்.
உலோகங்களின் மோதுகை மேலே மும்முரமாக எழுந்துகொண்டிருந்தது.
ஒருபொழுதில் ஒரு கணார் என்ற பேரோசை மேலேயெழ ஆ…வென்ற ஒலியெழுந்தது எதிரிப்படைகளின் பக்கத்திலிருந்து. திரும்ப கணார் ஒலி. எதிரி அரசன் தலைதப்பிக்கொண்டான் என எண்ணிக்கொண்டு தனது அரசன் யுத்தம் செய்வதற்கான நிலையினைத் தொடர்ந்து தக்கவைக்க முயற்சித்துக்கொண்டிருந்தது மகாதத்தம்.
எப்படியோ அந்த வலிய தள்ளுகைக்குத் தப்பி விலகிவிடுகிறது கந்துலா. இப்போது அதன் ஆக்ரோஷமும் சினமும் எல்லை கடந்திருந்தன. மறுபடி அது பாய்ந்து வந்தபோது, எதிரி ஆனையின் நெற்றியைப் பாளமாய்ப் பிளந்துவிடும் வெறி அதன் கண்ணில் அப்பிக்கிடந்தது.
யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
‘ஆ..!’, ‘அய்யோ…!’ என்ற பலவாறான அவல ஒலிகள் இரு தரப்புப் படையினரிடமிருந்தும்தான் கிளர்ந்துகொண்டிருந்தன. ஆனாலும் யுத்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தனது நாட்டுப் போர்வீரர் நம்பிக்கையோடு முகம் மலர்ந்திருப்பதை மெல்லிய ஒரு பொறிபோல் பட்ட காட்சியில் கண்டுகொண்டது மகாதத்தம். அது இன்னும் வலிமையும் வேகமும் பெற்றது.
எதிரிப்படை வாய் பிளந்து ஆ…வென ஒலியெழுப்பும்படி மறுபடி ஒரு டாண் மேலே எழுந்தது. மகாதத்தம் திடுமென தன் நெற்றியைக் குனிந்தபடி சென்று படாரென கந்துலாவை மோதியது. மீண்டும் எதிரிப்படையினரின் ‘ஆ..!’. அப்போது மேலேயிருந்து நழுவி விழுந்தது ஒரு கேடயம்.
மகாதத்தத்துக்கு அது யாருடையதென்று பார்க்க ஆவல். முனைந்து பார்த்தது. ஆனால் கந்துலா விடுவதாயில்லை. தந்தங்களாலும், நெற்றியாலும் மோதிக்கொண்டேயிருந்தது. அப்போது மகாதத்தம் கண்டது கந்துலாவின் வலது தந்தம் பொருந்திய முகத்தில் மெல்லிதாக இரத்தம் கசிந்துகொண்டிருப்பதை.
நான்கு கால்களுக்குமிடையே இடறுப்பட்டுக்கொண்டிருந்த கேடயத்தையும் அதனால் பார்க்க முடிந்தது. அது எதிரிப்படை அரசனின் கேடயம்தான்.
‘எனது அரசன் வென்றுவிடுவான்’ என மனத்துள் கூவியபடி வேகம்பெற்றது மகாதத்தம். கந்துலா மெல்லமெல்ல தளர்வதையும் அது உணர்ந்தது.
ஒருபோது கந்துலாவை முட்டிமோதிவிட்டு மறுதாக்குதலுக்காக திரும்பும்வேளையில் கூட்டத்தில் ஒரு அரச மங்கையைக் கண்டது அது. சோழ, பாண்டிய, சேரர் என்று தனிப்பட அடையாளப்படுத்தப்பட முடியாத அயல்நாட்டுப் படைவீரர் முன்னால் நின்றுகொண்டிருந்தாள். அவளது முகம் உணர்வுகள் செத்துக்கிடந்தது. இளமையாய்;த்தான் இருந்தாள். அழகாகவும் இருந்தாள். ‘எதிரி அரசனோடு உடன்வந்த அவனது தாயாராக இருப்பாளோ? இவர்களின் உணர்வுப்பாடுகள் எமது ஜயத்தின் கூறுகளல்லவா? நாம் ஜெயிக்கிறோம்.’ மகாதத்தம் எண்ணியது. அது எழுச்சிகொண்டது. கந்துலா களைத்துப்போன இந்தத் தருணம்தானே இறுதி மோதுகைக்கு ஏற்றது?
அந்த நினைப்பில் தான் இன்னும் கொஞ்சம் வலிமையின் அடைவும், இன்னும் சில விரற்கடைகளின் உயர்வும் கொண்டதுபோல் உணர்ந்தது.
அப்போது விகாரமாதேவியின் பின்னாலிருந்து உயர்ந்த ஒரு கையின் விசித்திர அசைவை அது கண்டது. மறுகணம் காதாவடியில் எரி நுழைந்ததுபோல் தெரிந்தது.
மகாதத்தம் தன் தாக்குதலுக்குத் தயாரானது. விசித்திரமாய் கால்கள் நான்கும் தளர்ந்தன. தலை இலேசாவதுபோல, காட்சிகள் மங்கலாவது போல ஒரு கிறக்கம். காதாவோரத்திலிருந்து எதுவோ வழிகிறதா?
முடியவில்லை. கால்கள் நடுங்கின. மகாதத்தம் தன் முன் கால்களைக் குத்திட்டது. பின்னர் பின்னங்கால்களையும்.
எய்வின் வலிதோடு காதாவோரம் நுழைந்தது என்ன? அவ்வெய்தலின் வினைப்பாடா அது சிறிதுநேரத்துக்கு முன் கண்ட அவ்விசித்திரக் கையசைவு?
மேலே எதையும் யோசிக்க முடியாதபடி உயிரின் கசிவு அதற்கு காதோரத் துளைவழி மெல்ல நிகழ்ந்துகொண்டிருந்தது.
அப்போது எதுவோ முதுகில் விழுந்து சறுக்கியபடி வந்து நிலத்தில் தொப்பென எழுப்பிய சத்தம் இறுதியாகக் கேட்டது.
– கூர் 2011 ‘எங்கும் ஒலிக்கிறது காற்று’ இதழில் பிரசுரமானது