யமனை வென்றவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 4,124 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இளவரசி சாவித்திரி அவளுடைய தந்தை முன் நின்று கொண்டிருந்தாள். மெல்லிய கொடி போல அவள் அழகாக இருந்தாலும், அவளது மனம் உறுதியாக இருந்தது. முகத் தில் பிடிவாதம் தெரிந்தது. இந்த மாதிரி சமயங்களில் அவ ளது தந்தை வளைந்து கொடுத்துவிடுவார்.

“தந்தையே, நினைவிருக்கிறதா? என் கணவரை நானே தேர்ந்தெடுக்கலாம் என்று நீங்கள் சொன்னதுண்டா இல் லையா? இப்போது உங்கள் வார்த்தையை நீங்களே மீறலாமா?”

ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தார் மன்னர். அதற்குள் நல்ல வேளையாக நாரத முனிவர் குறுக்கிட்டுச் சூடான விவா தம் நேராமல் தடுத்தார். “குழந்தாய் சாவித்திரி, உன் தந்தை சொன்ன வார்த்தையை மீறவில்லை. நீ மணக்க விரும்பும் சத்தியவானைப் பற்றித்தான் அவர் என்னிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் விவரம் கூறிக்கொண்டிருக்கும் போது, ‘சாவித்திரியையும் இங்கே வரச் சொல்கிறேன். தாங்கள் சொல்வதை அவளும் கேட்கட்டும் என்று சொன்னார்.”

“அப்படித் தாங்கள் என்னதான் சொல்லிக்கொண்டிருந் தீர்கள்?” என்று விசாரித்தாள் சாவித்திரி.

இந்த நாரதர் விஷயத்தில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பது சாவித்திரிக்குத் தெரியும். கெட்டிக்காரி தான். ஆனால், நாரதர் அவளை விடக் கெட்டிக்காரரல்லவா? அவர் தேவர்களுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி , நண்பராக வும் ஆலோசகராகவும் தூதராகவும் விளங்குகிறவர். நாரதர் செய்கை எப்போதும் நன்மையில் தான் முடியும். இறுதியில் நல்லபடியாக முடிந்தாலும், அவர் தலையிட்டவுடனே ஏற்படு வது தகராறுதான்! ஏனென்றால் தந்திரசாலியான நாரதர் மிகுந்த அறிவாளிகளைக் கூட அலைக்கழித்து விடுவார். இப்படிப் பட்ட நாரதருக்கு எப்படித் தகுந்த மரியாதை செலுத்த வேண்டும் என்பதைச் சாவித்திரி அறிந்துவைத்திருந்தாள்.

நாரதர் சொல்லலானார்: “நீ விரும்புகிறாயே சத்தியவான், அவன் நல்ல ராஜ வம்சத்தில் பிறந்தவன். சிறந்த இளைஞன். சத்தியவான்’ என்பது அவனுக்குப் பொருத்தமான பெயர். சத்தியத்தைத் தவிர அவன் வேறு எதையுமே பேசமாட்டான். அவன் புத்திசாலி. தைரியசாலி. பார்வை தெரியாத வயோ திகத் தந்தையிடம் அவனுக்கு எத்தகைய பக்தி ! பாவம், அரசராக இருந்த அவனுடைய தந்தையை ஓர் உறவினன் நம்பிக்கைத் துரோகம் செய்து, காட்டுக்குத் துரத்திவிட்டான். பட்டத்துக்கு உரிமை யிருந்தும், சத்தியவான் அது பற்றிக் கவலைப்படவில்லை. காட்டிலே விறகு வெட்டி, தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறான்.” ‘இதெல்லாம் எனக்குத் தெரியுமே!” என்றாள் சாவித்திரி.

அப்படியா? உனக்கு இதுவும் தெரியும். மேலும் தெரி யும் போலிருக்கிறதே!” என்று தூண்டிவிட்டார் நாரதர்.

“முதலில் தங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதைப் பார்ப்போம்” என்றாள் சாவித்திரி.

நாரதர் புன்னகையுடன், இந்தச் சின்னக் குட்டி என்னை மடக்கப் பார்க்கிறாளா?’ என்று நினைத்துக்கொண்டார். பிறகு சொன்னார்: “உனக்குத் தெரியாத ஒன்று எனக்குத் தெரியும். அதைத்தான் உன் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந் தேன்’ என்றார்.

“அவருக்கு ஒரு கண்டம் இருக்கிறது; இன்றிலிருந்து சரி வாக ஓராண்டு காலத்தில் இறந்துவிடுவார் என்பதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?” என்று அமைதியாகக் கேட்டாள் சாவித்திரி.

இதைக் கூறும்போது அவளுக்கு இருந்த துணிச்சலைக் கண்டு பெரியவர் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

“ஏனம்மா , இது தெரிந்துமா நீ அவனை மணக்க விரும்பு கிறாய்?” என்று நடுங்கும் குரலில் தந்தை கேட்டார்.

“அது சரி. உனக்கு இது எப்படித் தெரிந்தது? நீ அவன் பெற்றோரைச் சந்தித்திருக்கிறாயா?” என்று கேட்டார் நாரத் முனிவர்.

“ஆமாம். பக்திமிகுந்த அவருடைய அன்னைதான் எனக்கு இதைச் சொன்னாள். அவர் பிறந்ததும் அவருடைய ஜாதகத் தைக் குறித்த சோதிடர்கள் இது பற்றி எச்சரித்தார்களாம். ஆனால் அவருக்கு இதுவரை இது தெரியவே தெரியாதாம். அவரது பெற்றோர்கள் இவ்வளவு காலமாக இதை இரகசிய மாகவே வைத்திருக்கிறார்கள். இதுவே அவர்களுக்குப் பெரும் கவலையாக இருக்கிறது.”

இதைக் கேட்ட நாரதருக்கு அவரை அறியாமலே சாவித் திரியிடம் ஒரு மதிப்பு ஏற்பட்டது. “ஏனம்மா , சத்தியவானைக் கலியாணம் செய்து கொண்டால் உன் கதி என்ன ஆகும் என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார். “தெரியுமே.. என்று தயங்காமல் சொன்னாள் சாவித்திரி. “உனக்குப் பயமாயில்லையா?”

“பயமா? இல்லவே இல்லை. ஆனால் வருத்தமாக இருக் கிறது. வாழ்வும் சாவும் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை மட்டுமே வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகின்றனவா? ஒருவர் வாழ்வினால் மற்றவர் வாழ்வில் மாற்றம் ஏற்படலாம் அல்லவா? நான் அவரை மணந்தால் ஒருவேளை என் விதி – அவரைக் காப்பாற்றலாம். என்ன நடக்கும் என்பதோ, அல்லது எதை நடக்காமல் தடுக்கலாம் என்பதோ யாருக்குத் தெரியும்?”

“அசுவபதி அரசே! இந்தத் திருமணத்திற்கு இனி எவ்விதத் தடையும் கூடாது. உடனே இவள் திருமணத்தை நிச்சயித்துவிடுங்கள்” என்று நாரதர் கூறி எழுந்தார். சாவித்திரி அவரிடம் விடைபெற வந்து வணங்கியபோது, “இளவரசியே, நானோ ஒரு பிரம்மசாரி. ஆனாலும் என் ஆசி எப்போதும் உனக்கு உண்டு. உன் தைரியம் உன்னையும் சத்தியவானையும் காப்பாற்றுவதாக!” என்று புன்சிரிப்புடன் வாழ்த்துக் கூறினார்.

அந்த அழகிய அரசகுமாரி அவ்விடம் விட்டு அகன்றதும் அசுவபதி பெருமூச்செறிந்தார். “இவள் ஓர் ஆணாகப் பிறக் காமல் போய்விட்டாள். ஓர் ஆணுக்கு வேண்டிய புத்திசாலித் தனமும் சாதுரியமும் இவளிடம் நிறைய இருக்கின்றன. ஆனாலும் இப்போது இவளது துருதுருப்பே இவளுக்கு ஒரு தடையாக இருக்கப்போகிறது” என்றார் .

அசுவபதி, இந்த விஷயங்களில், நாம் பழங்காலத்து மனிதரைப் போல் இருக்கக்கூடாது. ஆண்களைப் போலவே பெண்களும் சொந்தமாகச் சிந்தித்து முடிவு எடுப்பது அவசியம். பெண்கள் என்றால் மட்டமா என்ன?’ என்று நாரதர் கடிந்து கொண்டார். ”எது எப்படியானாலும் சாவித்திரி காட்டிலே நல்லபடியாக வாழுவாள். விறகுவெட்டியான கணவனுக்கும் பார்வை தெரியாத மாமனாருக்கும் பக்திமிகுந்த மாமியாருக்கும் பணிவிடை செய்து மகிழுவாள்” என்றார்.

சாவித்திரி சத்தியவானை மணந்து மகிழ்ச்சியாகவே இருந் தாள். அரண்மனையைக் காட்டிலும் அந்தக் காட்டு வாழ்க்கை அவள் மனத்துக்கு இன்பமளித்தது. சுதந்திரமாக அவள் இருந்தாள். காலையில் கீச்சு கீச்சு என்று பறவைகள் கத்தும்; பசுக்கள் ‘மா, மா’ என்று கத்திக் கன்றுகளை அழைக்கும். அப்போதே அவள் எழுந்துவிடுவாள். மாமியாரும் மாமனாரும் அவள் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்கள். அதனால் தாய் தந்தையர் இல்லாத குறை அவளுக்குத் தெரியவில்லை. அந்தப் பெரியவர்களிடமிருந்து தியானம், நோன்பு முதலியவற்றின் மகிமையை அவள் தெரிந்துகொண்டாள். அறியாப் பெண்ணாக இருந்த அவள், அறிவும் ஆனந்தமும் சுதந்திரமும் கலந்த சூழ்நிலையில் அடக்கமான ஒரு பெண்மணியாக வளர்ந்தாள்.

சத்தியவானுக்கு ஒரு மரண கண்டம் இருக்கிறது என்ப தைச் சாவித்திரியும் அவளது மாமியார் மாமனாரும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும், அவர்களது உள்ளத்தை அது வாட்டிக் கொண்டே இருந்தது.

அந்தக் கொடிய நாளும் வந்தது. பொழுது விடிந்தது. எல்லா நாட்களையும் போலவே அன்றும் பறவைகள் கத்தின. தாய்ப் பசுக்கள் தங்களது கன்றுகளைக் கூவி அழைத்தான். சத்தியவானின் தாயும் தந்தையும் கவலை தோய்ந்த முகத் துடன் வழக்கம்போல தங்களது அலுவல்களில் ஈடுபட்டிருந் தனர். அடிக்கடி தங்களின் ஒரே மகனை ஏக்கத்தோடு பார்த்தனர். இதைக் காணக் காண சாவித்திரிக்குத் துக்கம் பொங்கியது. முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஏதோ ஒரு பிரமையுடன் தன் வேலையில் ஈடுபட்டிருந்தாள்.

சத்தியவான் விறகு வெட்டக் காட்டுக்குப் புறப்பட்டதும், சாவித்திரியும் அவனுடன் செல்ல எழுந்தாள்.

“ஏன் சாவித்திரி? இது கடுமையான வெயில் காலம். காட்டிலே நீ எங்காவது தனியாகச் சென்று வழி தவறி விடுவாய்.”

“இன்று நான் ஒரே இடத்தில் உட்கார்ந்து உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். சரிதானே?” என்றாள் சாவித்திரி, ஒரு புன்னகையுடன்.

“உன்னுடன் அவளும் வரட்டுமே” என்று சத்தியவானின் தாயாரும் திடீரென்று சொன்னாள்.

“ஓகோ. இன்று காலை மருமகளின் தொல்லை யில்லாமல் இங்கு இருக்கலாம் என்று பார்க்கிறீர்கள். அப்படித் தானே அம்மா?” என்று கண் சிமிட்டிக் கேட்டான் சத்தியவான்.

இல்லை. நீ உன் பெண்டாட்டியை மகிழ்விப்பதற்காகத் தான் உன்னுடன் அனுப்புகிறேன். பாவம், அவளுக்கு இங்கே மகிழ்ச்சியூட்டுவதாக என்ன இருக்கிறது?” என்று பதில் சொன்னாள் மாமியார்.

“மகிழ்ச்சியா , அதுவும் காட்டிலா? இவளுக்கு நான் வைர முத்து மாலை வாங்கி ஒருநாள் போடப்போகிறேன். அப் போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் காட்டுக்கு ஒரு நடை போய் வருவது அவ்வளவு மகிழ்ச்சியாக இராதே.”

“என்ன, வைரமுத்துமாலையா!” என்று சாவித்திரி கேட்டு விட்டுக் கலகலவென்று சிரித்தாள். ஆனால், அவள் உள்ளத் திலே துக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. “இன்று காட்டிற்கு அழைத்துப் போங்கள், போதும். ஆனால் நினைவிருக்கட்டும். வைரமுத்துமாலை வாங்கித் தருவதாக இப்போது வாக்களித்து விட்டீர்கள். ஒரு நால் கேட்டு வாங்கிக் கொள்வேன்.”

சத்தியவானும் சாவித்திரியும் சிறு குழந்தைகளைப் போலச் சிரித்துக்கொண்டும் இதைத் தருவேன் அதைத் தருவேன் என்று ஒருவருக்கொருவர் வாக்களித்துக்கொண்டும் காட்டுக் குப் புறப்பட்டனர். “போய் வருகிறேன்” என்று சத்திய வான் சொல்லிக்கொண்டதும். அவன் தந்தையும் தாயும் வழக்கத்துக்கு மீறி நெடுநேரம் அவனையே பார்த்தனர். இதைக் கவனித்த சாவித்திரி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் கண்களில் ததும்பிக் கொண்டிருந்த கண்ணீரை மற்றவர்கள் பார்த்துவிடாமல் மறைத்துக்கொண் டாள். “கடவுளே, இன்று எனக்கு எதையும் தாங்கும் இத யம் தருவாய் நல்லவர்கள், பெரியோர்கள், நாரதமுனிவர் ஆகியோரின் பிரார்த்தனையும் நல்வாழ்த்தும் துணை நிற்க வேண்டும் என மனத்திற்குள் வேண்டிக்கொண்டாள்.

நடுக்காட்டிற்குள் சென்றனர். சத்தியவான் கவனமாகப் பார்த்து நல்லதொரு மரத்தைத் தேர்ந்தெடுத்தான். அதன் அடிப் பாகத்தைக் கோடரியால் பிளக்கத் தொடங்கினான். சாவித்திரி அருகிலே இருந்தாள். சத்தியவானுக்கு இன்று மரணம் பாம்பால் நேருமோ, காட்டு விலங்குகளால் நேருமோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அப்படி எதுவும் நேர வில்லை. புதரிலிருந்து புலி பாய்ந்து வரவும் இல்லை, புல் வெளியிலிருந்து பாம்பு சீறி வர வும் இல்லை. ஆனாலும் சத்திய வான் மரத்தில் ஒரு வெட்டு வெட்டியதும், திடீரென்று தன் தலையைப் பிடித்துக்கொண் டான். “சாவித்திரி! எனக்குத் தலைவலி’ என்று முணுமுணுத் தபடி மயங்கி விழுந்தான்.

சாவித்திரி அவன் தலையை எடுத்துத் தன் மடி மீது வைத்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த் தாள். நடுக்காட்டில் உதவிக்கு யார் இருப்பார்கள்? இப்படி திடீ ரென்று கணவர் விழுந்து விட் டாரே என்ற அதிர்ச்சியில் சாவித் திரி கல்லாகச் சமைந்துவிட்டாள்.

அப்போது திடீரென்று வானத் துச் சூரியனை மறைத்தபடி ஏதோ நிழல் அவளது முகத்திலே விழுந் தது. ஒரு பெரிய கரிய உருவம் நிழல் போன்று அவள் எதிரே நின்றது. அந்த உருவம் கீழே குனிந்தது. கருமையான அதன் நீண்ட கரம் சத்தியவானின் குரல் வளையைப் பிடித்து ஒரு கணம் அழுத்தியது. சாவித்திரி நிமிர்ந்து பார்த்தாள். அதற்குள் அந்த நிழலுருவம் நகரத் தொடங்கி விட்டது.

“தயவு செய்து நில். நான் உன்னுடன் பேச விரும்பு கிறேன்” என்று கதறிக்கொண்டே சாவித்திரி தொடர்ந்து ஓடினாள்.

நிழல் உருவம் நின்றது. சாவித்திரி அருகிலே சென்று உற்றுப் பார்த்தாள். அந்த உருவத்தின் முகத்தில் தெளிவும் கண்ணியமும் தெரிந்தன. உடனே அவளுடைய பயம் எங்கோ ஓடி மறைந்து விட்டது. மன அமைதியுடனும் தைரியத்துடனும் பேசினாள். ‘மன்னிக்க வேண்டும், தாங்கள் தான் யமதர்மராஜனா?”

“ஆமாம்.”

“தங்களைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக் கிறேன். இருந்தாலும், நான் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இப்படித்தான் ஒவ்வொருவர் உயிரையும் எடுக்கத் தாங்களே நேரில் வருவீர்களா?”

“இல்லை. முக்கியமானவர்களுக்கு மட்டும் தான் வருவேன்” என்று கூறிக்கொண்டே யமன் நடந்தான்.

“என் கணவர் முக்கியமானவர் என்றால் இவ்வளவு இள மையில் அவர் உயிரைப் பறிப்பானேன்? அவர் ஒரு தவறும் செய்யவில்லையே ”

“சாவு என்பது தண்டனை அல்ல.

யமனைத் தொடர்ந்து சாவித்திரியும் விரைந்து நடந்தாள். ‘தண்டனையில்லையா? சரி, அப்படியானால், யார் எப்போது இறக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார்? பிறந்த வுடனேயே இறப்பதைப்பற்றி முடிவு எடுப்பது நியாயமாகுமா? அறிவுக்குப் பொருத்தமாகவும் அது இல்லையே என்றாள்.

“இதையெல்லாம் புரிந்து கொள்வது சிரமம். நீ ஏன் என்னைத் தொடர்கிறாய்? திரும்பிப் போ” என்றான் யமன்.

“நான் உங்களையா தொடர்கிறேன்? என் கணவரை யல்லவா தொடர்ந்து வருகிறேன்” என்றாள் சாவித்திரி. ‘இவன் இனிமேல் உன் கணவன் இல்லை

சாவித்திரி சாந்தமாகக் கூறினாள். “அப்படியல்ல. அன்பு என்பது வாழ்க்கை முடிந்த பின்னும் கூட நீடிக்கும் என்று நான் நம்புகிறேன். நான் முதன் முதல் சத்தியவானைப் பார்த்த போதே அவர் மீது அன்பு கொண்டேன். முன்னரே தெரிந்தவர்களைப் பார்ப்பது போல நாங்கள் பார்த்துக்கொண் டோம். இந்தப் பிறவியில் நாங்கள் முன்னர் சந்தித்தது இல்லை. ஆகவே எங்களுடைய முற்பிறவியிலே நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்திருக்கவேண்டும். இப்படிப் பிறவி பிறவியாகத் தொடர்புகொண்டவரை இப்போது நான் விட்டுச் செல்வதா? மாட்டேன். அவரை அழைத்துச் செல்வதானால், என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”

மரணதேவதையான யமன் சிரித்தான். “மிகவும் பிடி வாதக்காரியாக இருக்கிறாயே ! உன் பேச்சு எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு ஏதாவது வேண்டுமா , கேள். தருகிறேன். சத்தியவான் உயிரை மட்டும் கேட்டுவிடாதே ! ஆமாம்.” சாவித்திரி சற்று யோசித்தாள். “ஐயா, எனது மாமனார் அநியாயமாய் அரச பதவியை இழந்திருக்கிறார். அவருக்கு மீண்டும் அரச பதவி கிடைக்க வேண்டாமா? நீங்களே சொல்லுங்கள் .

அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு யமன் மிடுக்கு டன் நடந்தான். சிறிது நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி அவன் பின்னாலேயே வந்துகொண்டிருந்தாள். கல்லிலும் முள்ளிலும் நடந்ததால் அவள் காலில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்த யமனிடம்,

“மிகவும் வேகமாக நடக்கிறீர்களே!” என்றாள் அவள்.

“உனக்கு என்ன வேண்டும் சாவித்திரி?” என்றான் யமன் அவளை உற்றுப் பார்த்தபடி.

“சத்தியவானின் உயிர் தான் வேண்டுமென்றால் , மறந்துவிடு. அதுமட்டும் முடியவே முடியாது. யமன் சொன்ன சொல்லை மீறுவதும் இல்லை. எடுத்த உயிரைத் திரும்பக் கொடுப்பதும் இல்லை.”

“ஓ, அப்படியா?” என்று கேட்டுக்கொண்டே சாவித்திரி சிந்தனையுடன் தலை அசைத்தாள்.

“ஆகா . அவ்வளவு நிச்சய மானால், தாங்கள் செய்வதெல்லாம் நூற்றுக்கு நூறு சரியாகத் தான் இருக்கும். அப்படித்தானே?”

“சரியோ, தப்போ , அது எனக்கு முக்கியமல்ல.”

“அப்படியா ! அடடே! எனக்கு எல்லாம் அதிசயமாக இருக்கிறது. சிறு வயதிலிருந்தே ‘இது நல்லது , இதைச் செய்; அது கெட்டது, அதைச் செய்யாதே’ என்று பெரியவர்கள் சொல்லிச் சொல்லி என் மண்டையில் ஏற்றி விட்டார்கள். ஆனால், இந்த உபதேசமெல்லாம் மனிதர்களுக்கு மட்டும் தான், தேவர்களுக்குத் தேவையில்லை போலிருக்கிறது.

“மரண விஷயம் என்பதே தனி.” “அது எப்படி? வாழ்வுக்குப் பொருந்துவது சாவுக்கும் பொருந்தும் அல்லவா?”

“நீ என்ன பொல்லாத பெண்ணாக இருக்கிறாயே. எதைச் சொன்னாலும் அதைத் திரித்துக் கூறி, அறிவுக்குப் பொருத்த மானது போலச் செய்து விடுகிறாயே.”

“மன்னிக்கவேண்டும். அதையே வேறு விதமாக விண்ணப் பிக்கிறேன். வாழ்வு முழுவதும் எது சரி என்பதைத் தெரிந்து கவனமாக நடந்தால், நியாயமாக ……………..”

“நிறுத்து!” என்றான் யமன். “நீ என்னைத் தொடர்ந்து வராதிருந்தால், உனக்கு நான் இன்னொரு வரம் தருவேன்.”

“ஆகா! இன்னொரு வரமா? எவ்வளவு அன்பு. என்ன தாராளம் என்று சாவித்திரி களிப்புடன் கூறினாள்.

“ஆனால் நினைவிருக்கட்டும். சத்தியவான் உயிரை மட்டும் நீ கேட்கக்கூடாது.”

“சரி. ஆனால் இப்போது என்ன கேட்பது? ஓ! முதல் வரத் துடனேயே சேர்த்துக் கேட்டிருக்க வேண்டும். மறந்து விட்டேன்.” என்று சொல்லிச் சிறிது நிறுத்தினாள். பிறகு, ”சரி. இப்போது கேட்கிறேன். என் மாமனாருக்கு மறுபடி அரச பதவியை மீட்டுத் தந்தீர்களே, அவரோ பார்வை இழந்தவர். பார்வை தெரியாதவருக்கு ராஜ்யம் கிடைத்து என்ன பயன்? அல்லது பார்வை தெரியாதவரால் ராஜ்யத்துக்கு என்ன பயன்?” என்று கேட்டாள்.

“உன் மாமனாருக்கு மீண்டும் நன்றாகக் கண் தெரியும் என்றான் யமன் ஒரு சிரிப்புடன்.

இப்படிச் சொல்லிவிட்டு யமன் மேலே நடப்பதற்கு முன் சாவித்திரி மறுபடி பேசினாள். “நல்லவேளை, சரியான சமயத் தில் எனக்கு என் மாமனாரின் நினைவு வந்ததே!” என்று பதிலுக்குச் சிரித்தாள், காரியமே கண்ணான சாவித்திரி. ”இது மட்டும் நினைவு வரவில்லையென்றால் நான் என்ன கேட்டிருப்பேன் , தெரியுமா?” என்றாள். “என்ன கேட்டிருப்பாய்?”

என் தந்தையாரின் ராஜ்யமும் என் மாமனாரின் ராஜ்ய மும் செழித்து ஓங்கவேண்டும் என்று வரம் கேட்டிருப்பேன். இரண்டு ராஜ்யங்களுக்கும் நான் ஒருத்திதான் வாரிசு. நல்ல வேளை , நான் இந்த வரத்தைத் தங்களிடம் கேட்கவில்லை. எதற்காகக் கேட்கவேண்டும் இந்த ராஜ்யங்களுக்கு செழிப் பும் மகிழ்ச்சியும் ஏன் அளிக்கப்பட வேண்டும்? மக்கள் மகிழ்ச்சியோடும் வளத்தோடும் வாழும்படி பார்த்துக்கொள் வது அந்தந்த நாட்டு அரசனின் கடமை, இல்லையா?”

“ஆமாம்.”

“அரசபதவி என்பது சாதாரணமா? மிக மிகப் பொறுப் பானது” என்று பயபக்தியுடன் தலையை ஆட்டியபடி கூறி னாள் சாவித்திரி. “அரண்மனையில் சுகமாக வாழ்வதும், தர் பார் நடத்துவதும், கவிஞர் கலைஞர்களை ஆதரிப்பதும், வரி வசூல் செய்வதும் மட்டுமா அரசனின் கடமை? சட்டம் ஒழுங் காகச் செயல்படுகிறதா , அதிகாரிகள் குடிமக்களைத் துன்புறுத் தாமல் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அண்டை ராஜ்யங்களுடன் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக வாழவும், குடிமக்கள் எல்லாருக்கும் போதிய உணவும் உடையும் உறைவிடமும் இருக்கும்படி பார்த்து கொள்ளவும் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, தனது மக்களுக்குப் பேச்சு உரிமையும், குற்றம் குறைகளை எடுத்துச் சொல்ல உரிமையும் இருக்கும்படி அரசன் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி இருப்பவன் தான் கொடுங்கோலனாகாமல் தப்புவான்” என்று சொல்லிக்கொண்டே போனாள் சாவித்திரி.

அவள் வார்த்தையைக் கேட்ட யமன் என்ன உயர்ந்த கருத்துக்கள்!’ என்று வியந்து மகிழ்ந்தான். “நீ சொல்வது சர். நியாய வழியிலும் சுதந்திரப் பாதையிலும் நிலைத்த மரபு களே சட்டத்தைவிட உயர்ந்தவை,” என்றான்.

இப்படி இருப்பதற்கு, அரசவம்சம் வழிவழியாக , இடை வெளியில்லாமல் இருக்க வேண்டும் இல்லையா?” என்று கேட் டாள் சாவித்திரி.

“ஆமாம். ஆமாம். தொடர்ச்சி விட்டுப்போனால், குழப் பம், தடுமாற்றம் பதவிக்காகச் சண்டை எல்லாம் வந்து விடுமே” என்றான் யமன். சாவித்திரி திடீரென்று மௌன மானாள். அவள் முகத்தில் சோகம் படர்ந்தது. சோர்வடைந் தாள். அவளது அழகிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“என்ன, என்ன!” என்றான் யமன் வியப்புடன். ‘தாங்கள் அறியாததா? தங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. நான் என்ன நினைக்கிறேன் என்பதைத் தாங்கள் நிச்சயம் ஊகித்திருப்பீர்கள்?” என்றாள் சாவித்திரி ஒரு பெரு மூச்சுடன்.

யமன் யோசித்தான். அவள் மனத்தில் என்ன நினைத்திருக் கிறாள்? இதை ஊகிப்பதா? புயலடிக்கும் காலத்தில் காற்று எந்தத் திசையில் வீசும் என்பதை ஊகிப்பது இதைவிட எளிது.

“நான் என்ன நினைத்தேன் என்றால்…..” என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். ‘இதோ இரண்டு ராஜ்யங்கள். இரண் டுக்கும் என்னைத் தவிர வாரிசு கிடையாது. எனக்குப் பிறகு என் தந்தையின் ராஜ்யமும் என் மாமனாரின் ராஜ்யம் என்ன ஆகுமோ? தாங்கள் சொன்னபடி , தடுமாற்றம், குழப்பம், பதவிக்காகச் சண்டை , என்று எல்லாம் வந்துவிடுமே. இல்லையா? வீதிகளில் இரத்த ஆறு ஓடும். நகரங்கள் பாழ டையும். அறுவடையை அறுக்க ஆள் இருக்காது. வீடு தோறும் பெண்களும் குழந்தைகளும் ஓலமிடுவார்கள் …”

“நிறுத்து!” என்று கத்தினான் யமன். யமன் சொல் கிறேன். அப்படியெல்லாம் நடக்காது. நடக்கவிடமாட்டேன். உன் வம்சத் தொடர்ச்சி அறுந்துவிடாமல் இருக்க உனக்கு நூறு குழந்தைகளை வரமாக அளிக்கிறேன் , ” என்றான்.

யமன் இப்படிச் சொன்னானோ இல்லையோ , சாவித்திரியிடம் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. அவள் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. அவளது தொய்ந்த தோள்கள் நிமிர்ந்தன. பெரு மூச்சும் கண்ணீ ரும் மாயமாய் மறைந்தன . யமன் எதிரே ஓர் அற்புத அரசகுமரியாய், கம்பீரமாய் நின்றாள் அவள்.

“த்சொ. த்சொ! உங்கள் மரபு ஒன்றைத் தகர்க்க நானே காரணமாக இருக்கிறேனே ,” என்றாள், ராஜகம்பீரத்துடன். ”எந்த மரபை?” என் விழிப்போடு கேட்டான் யமதர்மன். “அதுதான் , யமன் எடுத்த உயிரைத் திரும்பக் கொடுப்ப தில்லை என்னும் மரபை. நீங்கள் இப்போது எனக்கு நூறு பிள்ளைகளை வரமாகக் கொடுத்துவிட்டீர்கள். என் கணவர் உயிரை எடுத்துச் சென்றுவிட்டால் எனக்கு ஏது குழந்தை?”

யமன் தன் தோல்வியை கௌரவத்துடன் ஒப்புக்கொண் டான். இருவரும் மறுபடி காட்டை நோக்கி நடந்தார்கள். “அட்டா , இப்போதுதான் தெரிகிறது. இதில் நாரதரின் விஷமம் ஏதோ இருக்கிறது. சத்தியவான் உயிரை எடுக்க நானேதான் வரவேண்டும் என்று அவர்தான் தூண்டினார் என்றான் யமன்.

அப்புறம் சொல்லவேண்டுமா? யமதர்மராஜன் சாவித்திரிக் குக் கொடுத்த எல்லா வரங்களும் நிறைவேறின. சத்தியவான் தூக்கம் நீங்கி எழுவதுபோல் புத்துணர்ச்சியுடன் எழுந்தான். கரிய உருவம் கொண்ட ஒரு விசித்திர மனிதனுடன் நெடுந் தூரம் போவது போல அவன் கனவு கண்டிருந்தான். அதை சாவித்திரியிடம் சொல்லத் துடித்தான் அவன்.

சத்தியவான் தந்தை இழந்த பார்வையையும் ராஜ்யத் தையும் மீண்டும் பெற்றார். சாவித்திரிக்கும் வைரமுத்துமாலை கிடைத்தது. ஆனால், அது யமன் வரம் இல்லாமலே கிடைத்தது!

இந்த மாறுதல்களெல்லாம் நிகழ்ந்து, குதூகலமான அமளி யெல்லாம் அடங்கியபின் ஒரு நாள் சாவித்திரியின் தந்தை யான அரசர் அசுவபதி, மகளைத் தம் அருகிலே அழைத்து, “எல்லாம் சரி. யமனை எதிர்த்து வாதாட உனக்கு எப்படி யம்மா தைரியம் வந்தது?” என்று விசாரித்தார்.

சாவித்திரி மெல்லச் சிரித்தாள். எனது மாமியாரை நான் முதலில் சந்தித்தபோது, பல சோதிடர்கள் சேர்ந்து என் கணவரின் ஜாதகத்தைத் தயாரித்தது பற்றிக் கூறினார்கள். அவர்களிலே ஒருவர் பிறரைவிட அறிவாளியாம். அவர் பலன் சொல்லும்போது, ‘சத்தியவானுக்கு மரண அபாயம் உண்டு. இருந்தாலும் மரணத்தைவிட வலிமை வாய்ந்த ஒரு சக்தியைக் கொண்டு அதைத் தடுக்க முடியும்’ என்று சொல்லி யிருந்தாராம். அந்தச் செய்தியே எனக்கு நம்பிக்கை அளித்தது . தைரியமூட்டியது. மரணத்தைவிட வலிமை யான சக்தி என்னிடம் இருந்ததே – அதுதான் என் கணவ ரிடம் நான் கொண்ட அன்பு என்றாள்.

– எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள், முதற் பதிப்பு 1977, சாந்தா ரங்காச்சாரி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *