காலை 9 மணி!
ஈ. சி. ஆரில் ஒதுக்குப்புறமாக ஒண்ணறை ஏக்கர் பரப்பளவில் அந்த பங்களாவின் . முன்புறம் இருந்த கார்டனில, ஆடி காரை ஒட்டி ஒய்யாரமாக அமர்ந்து படி பேப்பரை கையில் வைத்துக்கொண்டு யாரையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார் தணிகாசலம். அருகில் டேபிள் போடப்பட்டிருந்தது. அதன்மீது ஒரு செக் புத்தகமும்.
‘கேட்’ திறக்கும் சத்தம் கேட்டதும் திரும்பினார், அழுக்கு சட்டையுடன், ஒரு காலில் மடித்து விட்ட அழுக்கு பாண்டில் சைக்கிளில் வினோத்தை பார்த்ததும் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.
பவ்யமாய் அருகில் வந்த வினோத் “என்னை பார்க்கணும்னு சொன்னீங்களாம்?” என்றான்
“ஆமாம் சொன்னேன் இந்த சைக்கிள் என்ன வெல இருக்கும்?” என்றார்.
“தெரியல! எதுக்கு கேக்குறீங்க?” என்றான் புருவம் சுருக்கி
“சரி போகட்டும்! பின்னாடி இருக்கே கார், அதோட பேராவது தெரியுமா?” என்றவர் கோவம் தணியாமல் “ஆடி மாசம் தான் தெரியும், புரியல? உனக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையா, உனக்கு என் பொண்ணு கேக்குதா?. போகட்டும் உனக்கு ஒரு சான்ஸ் தரேன்!” என்று டேபிளில் இருந்த செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு, செக்கை அவன் அவன்மீது வீசி எறிந்தார். “அமெளண்ட் நீயே ஃபில் பணணிக்கோ! ஆனா இதுக்கப்புறம், உன்னை என் பொண்ணு கூட பார்க்கக்கூடாது! ஞாபகம் வச்சுக்க!” கர்ஜித்தார் தணிகாசலம்.
சற்று அதிர்ந்தது, கீழே இருந்த செக்கை எடுதது இரண்டாய், நாலாய், எட்டாய் கிழித்து அவர் முன்பு வீசியவன், “நீங்க இந்த நாளை ஞாபகம் வச்சிக்கங்க, இன்னும் ஒரே வருஷத்தில நானும் பணத்தில, அந்தஸ்தில உங்களை விட மேல வந்துட்டு பொண்ணு கேக்குறேன்” என்றான் வினோத்.
“ரோஷம் பொத்துக்குட்டு வருதோ? நீ வரலானனா நான் என பொண்ணுக்கு வேற இடத்தில மாப்பிள்ளை பாத்துருவேன்” என்றார் நக்கலாக
“அதையும் பாப்போம்” என்று வீராவேசமாக சொல்லிவிட்டு விடுவிடுவென சைக்கிளைத் தள்ளிக்கொண்டு சென்றான் வினோத். அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் தணிகாசலம்.
அன்று முதல் தினமும் வீடு வீடாகச் சென்று பால் பாக்கெட், பேப்பர், போட்டான், ஆட்டோவில் ஸ்கூல் பிள்ளைகளை கொண்டு விட்டான், ரோட்டோரமாக அயன் செய்தான், செங்கல் சுமந்தான், நடுவில் வெயில் அதிகமாக இருந்ததால் காக்கி சட்டையை கழட்டி பிழிந்து, பின் மாட்டிக்கொண்டான், இதையெல்லாம் பங்களாவில் இருந்து அவ்வப்போது தணிகாசலம் கவனித்துக்கொண்டிருந்தார்.
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் மிகவும் களைப்பாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். காலசக்கரமாக சைக்கிளின் பின் வீல் களோசப்பில் காட்டப்பட்டது.
மாலை 6 மணி.
வரும் வெள்ளிக்கிழமை பெண்ணின் நிச்சயதார்த்தத்திற்கு யாரிடம் உதவி கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டே சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றார் தணிகாசலம். கார் ஹாரன் சத்தத்தை கேட்டு திரும்பிப் பார்த்தவர், காரில் வினோதைப் பார்த்து , குடுதது வச்சவர், போன வாரம் பொண்ணு கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தினார் என்று பெருமூச்சு விட்டவர், பேசாமல் இவரையே உதவி கேட்கலாமா என்று ஒரு கணம் யோசித்து “ச்சை நல்லா இருக்காது”’ என்று முணுமுணுத்துக்கொண்டே, நாளைக்காவது பைக்கை கொண்டு வரணும், இந்த சைக்கிளை மிதிக்கவே முடியலை என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து நகர,
“தணிகாசலம் சார்” என்ற குரல் கேட்டு திரும்பினார்.
ஓடி வந்த ஒரு ‘உதவி,’ “சாங் இன்னைக்கு முடியும்னு எதிர்ப்பார்க்கவேயில்லை, எல்லாம் எங்க நல்ல நேரம், நாளைக்கும் உங்களுக்கு ஷூட்டிங் இருக்கு, மறக்காம வந்துருங்க, அப்புறம் சொல்ல மறந்துட்டேனே! சைக்கிளை கண்டிப்பா கொண்டு வாங்க, ஹீரோ பழசை மறக்காதவர்ன்றதுக்காக, மொத ஷாட் சைக்கிளை க்ளோசப்பில் காட்டணும், மறக்காதிங்க,” என்று அவர் விடையும் எதிர்பார்க்காமல் திரும்பிச் சென்றார்.
“தேங்க்ஸ்” என்று தலைவிதியை நொந்துகொண்டு பங்களாவிலிருந்து வெளியேறினார் தணிகாசலம்.