அவருக்கு எல்லாம் தெரியும் என்றார்கள்.
ஆனால் தெரிந்த மாதிரி காண்பித்துக் கொள்ள மாட்டாராம். அவரைப் பார்க்க யார் போனாலும் அவர்களை மரியாதையுடன் நடத்துவாராம்.
தன் வீட்டில் ஊஞ்சலில் அமர்ந்தபடி அதை அடிக்கடி வலது காலால் உந்தி உந்தி ஆட்டி விட்டுக் கொள்வாராம். எப்போதும் அவர் முகத்தில் ஒரு அழகான புன்னகை தவழ்ந்து கொண்டிருக்குமாம்.
அவரை சந்தித்துவிட்டு வந்த பலர் அவரை ஒரு அறிவுஜீவி என்றும், சிலர் மெளன குரு என்றும் அவரை அழைத்தார்கள்.
அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு அன்று அவரைப் பார்க்க நானும் போயிருந்தேன்.
அவருக்கு வயது 65 இருக்கலாம். தும்பைப் பூ வேட்டி சட்டையில் ஊஞ்சலில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். சிவந்த நிறம், தீர்க்கமான கண்கள், எடுப்பான நாசி, ஷேவ் செய்யப்பட்ட முகம், அளவாக வெட்டப்பட்ட மீசை என அந்த வயதிலும் கம்பீரமாகக் காணப்பட்டார்.
என்னைப் பார்த்ததும் பேப்பரை ஊஞ்சலின் மேல் மடித்து வைத்துவிட்டு முகத்தில் புன்னகை தவழ “வாருங்கள்” என்றார்.
விஸ்தாரமான அந்த ஹாலில் ஊஞ்சலுக்கு எதிரே போடப்பட்டிருந்த நாற்காலியில் நான் அமர்ந்துகொண்டேன்.
“உங்களின் குரு யார்?”
“என்னைச்சுற்றி இருக்கும் உயிரினங்கள் அனைத்துமே என்னுடைய குருக்கள்தான். ஆயிரக் கணக்கில் எனக்கு குருமார்கள் உண்டு. அவர்களின் பெயரைச் சொல்லவே பல காலமாகும். இருந்தாலும் நீங்கள் மிக ஆர்வத்துடன் கேட்பதால் குறிப்பிட்ட சிலரை மட்டும் சொல்கிறேன்.”
“…………………………………”
“முதலில் சொல்லப் போவது ஒரு திருடரைப் பற்றி. நான் வட இந்தியாவில் தனியாக ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது
பாலைவனம் ஒன்றில் வழி தெரியாமல் தத்தளித்தேன். ஒரு கிராமத்துக்கான வழியைக் கண்டறிந்து அந்த ஊரை அடைந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. கடைகள், வீடுகள் அனைத்தும் சாத்தியிருந்தன. தெருக்களில் நடமாட்டமே இல்லை. யாரிடம் உதவி கேட்பது என்று விழித்தேன்.
அப்போது ஒரு வீட்டில் நுழைவதற்கு முயன்ற திருடனைப் பார்த்தேன். அவனிடம் இந்த ஊரில் தங்குவதற்கு ஏதேனும் இடம் கிடைக்குமா? என்று கேட்டேன்.
இந்த நள்ளிரவில் தங்க இடம் கிடைப்பது மிகவம் கடினம். நீங்கள் ஒரு ஞானி போல் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், என் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்றான்.
எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. அடுத்த வினாடியே எனக்குள் சுதாரித்துக்கொண்டு, அந்தத் திருடனே என்னைப் பார்த்து பயப்படவில்லை… நான் ஏன் அவனைப் பார்த்து பயப்பட வேண்டும்? என்று நினைத்து, உன் வீட்டில் தங்குவதற்கு எனக்கு சம்மதம் என்றேன்.
அவன் சற்றும் தயங்காது என்னை அழைத்துச்சென்று அவன் வீட்டில் தங்க வைத்தான். அந்தத் திருடனை அவன், இவன் என்று மரியாதைக் குறைவாக சொல்ல எனக்கு மனம் வரவில்லை.
அவர் மிகுந்த அன்பு கொண்டவர், பொறுமையானவர். அந்த ஊரில் அவருடனே சில நாட்கள் தங்க முடிவு செய்தேன்.
அவருடன் தங்கிய அந்த முப்பது நாட்களில், ஒவ்வொரு நாள் இரவிலும் “உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். தியானம் செய்யுங்கள், நன்றாக ஓய்வெடுங்கள் நான் என் வேலையைப் பார்க்க கிளம்புகிறேன்” என்பார்.
ஒவ்வொரு நாளும் அவர் விடிகாலையில் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா? என்று கேட்பேன். அவர், ஒன்றும் கிடைக்கவில்லை… நாளை எப்படியும் கிடைக்கும் பாருங்கள் என்பார் உறுதியுடன்!
நம்பிக்கை இழந்து நான் அவரை ஒருநாளும் பார்த்ததில்லை. நான் அவருடன் தங்கியிருந்த அந்த முப்பது நாட்களும் அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால் அவரின் மகிழ்ச்சி சற்றும் குறையவேயில்லை.
கடவுள் விரும்பினால் ஏதேனும் இன்று இரவே எனக்கு கிடைக்கும். இந்த ஏழைக்கு உதவும்படி உங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்… என்பார்.
திருடருடன் தங்கியதுபோல், இன்னொரு சமயம் ஒரு விலை மாதுவின் வீட்டில் சில நாட்கள் நான் தங்க நேரிட்டது.
அவள் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பாள். சிகப்பான கோதுமை மேனியில், வட இந்திய ஜொலிப்பில் எப்போதும் சிரித்த முகத்துடன் மென்மையாகப் பேசுவாள். அவள் அழகாக இருந்தாலும் வயது நாற்பத்தைந்து ஆகிவிட்டதால், அவளுக்கு கஸ்டமர்கள் குறைந்து விட்டார்கள்.
கஸ்டமர்கள் வெகுவாகக் குறைந்துவிட்ட ஒரு விலை மாதாக இருந்தாலும் அவள் ஒருநாளும் உற்சாகம் குன்றி ஏமாற்றத்துடன் காணப்பட்டதேயில்லை.
அவளுடைய பெரிய வீட்டில் நான் தரைத் தளத்திலும், அவள் மாடியிலும் தங்கியிருந்தோம். அவளைப் பார்க்க எவராவது வந்தாலும் அவர்கள் பக்கவாட்டில் அமைந்துள்ள மாடிப் படிகளின் வழியே ஏறிச் சென்றுவிடுவார்கள்.
ஒருமுறை ஒரு வயதான தனவந்தர் அவளைப் பார்க்க காரில் வந்து இறங்கினார். வீட்டில் அப்போது நான் இருந்தபடியால் நான்தான் போய்க் கதவைத் திறந்தேன். அவர் உடனே அவளைப் பார்க்க மாடிக்குச் சென்றுவிட்டார்.
சற்று நேரம் கழித்து மாடியிலிருந்து கீழே இறங்கிவந்த அந்த விலை மாது என்னிடம் பணிவாக, ஜி…தாங்கள் தற்போது எங்கேனும் வெளியே செல்லுகிறீர்களா? என்று கேட்டாள்.
ஆமாம்…. இப்போது ஒரு சத்ஸங்கத்திற்கு செல்கிறேன்… எதற்காக கேட்குறீர்கள்? என்றேன்.
சற்றுத் தயங்கியபடி, இல்ல… இப்ப வந்திருக்கிறாரே அவருக்கு சத்தமாகத்தான் ம்யூசிக் கேட்கப் பிடிக்கும்… இன்னும் இரண்டு மணிநேரங்கள் என்னுடன் தங்கி இருப்பார். தாங்கள் அமைதியை விரும்புபவர்…அதனால்தான்…”
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
அவளோ வீட்டின் சொந்தக்காரி…நானோ வாடகை தரக்கூட வக்கில்லாத ஒண்ட வந்த ஒரு வழிப்போக்கன். இருப்பினும் அவளுக்குள் என்ன ஒரு நாகரீகம்… என்ன ஒரு பண்பாடு இருந்தால் என்னிடம் அப்படிச் சொல்லியிருப்பாள்? என்னைப்பற்றி அவள் ஏன் கவலைப்பட வேண்டும்?
அன்று ஒரு விலை மாதுவிடம் அடுத்தவர்களை மதிக்கும் சிறந்த பண்புகளைக் கற்றுக்கொண்டேன்.
நான் பல வருடங்களாகத் தியானம் செய்தேன். நல்லது எதுவும் எனக்கு நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் மனம் உடைந்தேன். நம்பிக்கையையும் இழந்தேன். சகலத்தையும் நிறுத்தி விடலாமா என்றுகூட யோசித்தேன்.
அப்போதெல்லாம் அந்தத் திருடரையும், விலை மாதுவையும்தான் உடனே நினைத்துக் கொள்வேன். அவரின் நம்பிக்கை, பிறரை மதிக்கும் அவளின் பண்பு என்னையும் தொற்றிக்கொண்டது.
எனக்குள் நம்பிக்கையையும், எது நடப்பினும் பண்பாடுடன் இருக்கவும் உதவிய அவர்கள் இருவரும் என் குருதான்.”
“…………………………………….”
“அடுத்தது ஒரு நாயைப் பற்றி சொல்கிறேன்…. நடை பயணத்தின்போது ஒருமுறை எனக்கு கடும் தாகம். நா வறண்டு ஆற்றை நோக்கி நடந்தேன். அதன் கரையை அடைந்தபோது ஒருநாய் என்னைப் பின்தொடர்ந்து வந்தது.
அதற்கும் தாகம் போல. தண்ணீர் குடிக்க குனிந்தது. தண்ணீரில் அந்த நாயின் பிம்பம் தெரிந்தது. ஆனால் வேறொரு நாய் நிற்பதாக நினைத்துப் பயந்தது. அதன் பிம்பத்தைப் பார்த்துக் குரைத்தது. பிம்பமும் குரைத்தது. இன்னும் பயந்துபோய் தயங்கி சற்று தூரம் திரும்பிப் போய் நின்றது. ஆனால் ஏராளமான தாகம் போலும். நிரம்பித் தளும்பிய ஆற்றை திரும்பி வந்து கரையில் நின்றபடி ஏக்கமாகப் பார்த்தது.
மீண்டும் குனிந்து தண்ணீர் குடிக்க முனைந்தது. அந்த பிம்ப நாய் இன்னமும் நிற்பதாக நினைத்தது. இம்முறை ஆவேசமாகத் தண்ணீருக்குள் பாயந்தது. அந்தப் பிம்பம் கலைந்து காணாமல் போனது.
நாய் போதும் போதும் என்கிற அளவுக்கு தண்ணீரைக் குடித்தது. நீந்தி விளையாடியது. அதுவரை பயந்து கொண்டிருந்த நாயா இப்படித் துள்ளி விளையாடுகிறது என்று எனக்கு ஒரே ஆச்சரியம்.
அப்போதுதான் நான் உணர்ந்தேன்.
எவ்வளவு பயம் இருந்தாலும் துணிவுடன் செயலில் இறங்கினால், பயம் காணாமல் போய்விடும் என்பதை. அதை நாய் சொன்ன பாடமாக, ஒரு வேதமாக உணர்ந்தேன்.
தயக்கத்தாலும், குழப்பத்தாலும் பின்வாங்க நினைக்கும் போதெல்லாம் அந்த நாய்தான் என் நினைவுக்கு வரும். எனவே அந்த நாயும் என் குருதான்.
Learning is a continuous process in our life. எல்லாம் தெரிந்தவர் என்று இவ்வுலகில் யாரும் கிடையாது. இறக்கும்வரை அடுத்தவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அதற்காக நாம் எப்போதும் நம் மனதை திறந்து வைத்திருக்க வேண்டும். சக மனிதர்களை மதித்து நடந்துகொள்ள வேண்டும்…அது திருடராக இருந்தாலும், விலை மாதுவாக இருந்தாலும் சரி.
இம்மாதிரி நான் ஒவ்வொரு குருவிடமும் கற்றுக்கொண்டதை சொல்ல ஆரம்பித்தால் அதற்கு உங்களுக்கு நேரம் கிடையாது” என்று சொல்லிச் சிரித்தார்.
நானும் அவரிடமிருந்து எதையோ கற்றுக்கொண்ட திருப்தியில் அங்கிருந்து கிளம்பினேன்.