அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குத் துவாரகா சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது.
கதையை ஆரம்பித்த தேவகி, சற்று நிறுத்திவிட்டு குரொப் பண்ணிவைத்திருந்த ஸ்கிரீன்ஷொட்டை மீண்டும் எடுத்துப்பார்த்தாள். சுதர்சன் இராஜேஸ்வரன். முதல் கொமெண்ட். அவள் ஸ்டேடஸ் போட்டு இரண்டே நிமிடங்களில் போட்டிருக்கிறான். எல்லாமே ஜனவரி எட்டிலிருந்தே ஆரம்பித்தது. இரட்டை முகமூடி. ஹிப்போகிரிட். இதை வெளிப்படையாக எழுதுவதால் அவளுக்கு என்ன அவமானம்? எதுவுமே இல்லை. அவள் என்ன தவறு செய்தாள்? என்ன மண்ணுக்காக அவள் துவாரகா என்ற பெயரில் எழுதவேண்டும் புனைவு என்று சொல்லிப் பிணைந்துகொண்டிருக்கவேண்டும்?
ஒரு முடிவெடுத்தவளாய் குரொப் பண்ணிய படத்தை வேர்ட் டொக்கியுமெண்டில் பேஸ்ட் பண்ணிவிட்டுத் தேவகி மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.
ஜனவரி எட்டு, 2015 இலிருந்துதான் இந்தக்கதை ஆரம்பித்தது.
அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டுக்குத் தேவகி சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது. வீட்டினுள் லைட் எதுவும் எரியவில்லை. கேற்றடியில் நின்று இவள் கூப்பிட்டதும் பெண்ணுடைய தாய் மாத்திரமே வெளியே வந்தார். வந்த விசயத்தைச் சொன்னதும் தயங்கியபடியே உள்ளே அனுமதித்தார். கொஞ்சநேரத்துக்கு இருவரும் எதுவுமே பேசவில்லை.
இவள் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தாள்.
“மகள் இப்ப எப்பிடி இருக்கிறா? அவவோட ஒருக்காக் கதைக்கலாமா?”
“அவள் இப்ப ஆரோடையும் கதைக்கிற நிலமையில இல்லை”
வெடுக்கென்று பதில் வந்தது. மீண்டும் அமைதியானார்கள். தாயார் லேஞ்சியால் மூக்கை அடிக்கடிச் சீறிக்கொண்டிருந்தார். அன்று முழுவதும் தாயும் மகளும் அரற்றிக்கொண்டிருந்திருப்பார்கள். வாக்குவாதப்பட்டிருப்பார்கள். ஆளுக்காள் குறை கூறியிருப்பார்கள். அத்தனையும் தீர்ந்துபோனபின்னர் இருவருமே தனித்தனியேயிருந்து அழுதிருப்பார்கள். தேவகிக்கு ஓரளவுக்குப் புரிந்ததுதான்.
“அதில்லையம்மா … சின்னப்பிள்ளை. உடம்புல, மனசளவில எந்தப்பாதிப்பும் வராமப் பாக்கவேணும். முதலில் அது முக்கியம். நீங்கள் என்னை நம்பலாம். இதுக்காகத்தான் …”
“ஒண்டும் வேண்டாம் பிள்ளை. பெத்த எனக்குத்தெரியாதா? அவளுக்கு என்ன வைத்தியம் தேவை எண்டு நான் பாத்துக்கொள்ளுறன். பிரச்சனையைப் பெரிசாக்காமா இப்பிடியே விட்டிடும்.”
இதேதான். திரும்பத்திரும்ப இதுதான் நடக்கிறது. ஒவ்வொரு பிரச்சனையின்போதும் இதே கோடுதான் கீறப்படுகிறது. தேவகிக்குத் தன்மீதே கழிவிரக்கம் எட்டிப்பார்த்தது. இதனை எப்படிக்கையாள்வது? பேச்சை மாற்றினாள்.
“உங்களுக்கும் அவனை முந்தியே தெரியுமா? பழக்கமா?”
அவர் கொட்ட ஆரம்பித்தார்.
“எனக்கெங்க பிள்ள தெரியும்? இவள் படிக்கப்போறாள் எண்டல்லோ நம்பியிருந்தனான். சாமியறைக்கூரை ஒழுகுது, திருத்தோணும் எண்டு வச்சிருந்த காசை நாசமறுந்த இந்த ஹாண்ட்போனுக்குக் குடுத்ததுதான் பிழையாப் போட்டுது. படிக்கிறன் எண்டு போயிட்டு அவனோட படம் எல்லாம் போய்ப்பார்த்த கதையை இப்பத்தான் சொல்லுறாள். சனியன் பிடிச்சவள்”
என்ன நடந்திருக்கும் என்பதை உய்த்தறிவது தேவகிக்கு அவ்வளவு கடினமாகவிருக்கவில்லை. கடந்த இரண்டுமாதங்களில் மாத்திரம் இது ஏழாவது சம்பவம். பாடசாலை மாணவியர் மீதான துஷ்பிரயோகம். பணம் பொருட்களால் ஆசை காட்டி, போதைமருந்தைக் கலந்துகொடுத்து, அவமானப்படுத்துவேன் என்று மிரட்டி, அதிகாரத்தைக்காட்டி, சமயங்களில் அவர்களுக்குக் கிடைக்காத அன்பினைக் கொடுக்கிறேன் என்று நடித்து என ஆயிரத்தெட்டு வழிகள் இருக்கின்றன. குறுந்தகவல், தொலைபேசி அழைப்பு, சந்தித்துப்பேசுதல், தனிமை கிடைத்தால் சின்னச் சின்ன சில்மிஷங்கள் என்று ஆரம்பித்து பின்னர் தெளிவாகத் திட்டமிட்டு உடலுறவுவரைக்கும் இட்டுச்செல்வது. எல்லாமே முடிந்தபின்னர் வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டுவது. தொன்றுதொட்டு புத்தகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் செவி வழியாகவும் வாசித்தும் பார்த்தும் கேட்டும் அறிந்த விடயங்கள்தான். ஆனாலும் நின்றபாடில்லை. இப்போதெல்லாம் எங்கெங்கோ இடம்பெற்ற நம்பமுடியாத செய்திகள் நம் வீட்டினுள்ளேயே உருவாக ஆரம்பித்துவிட்டன. நாமறிந்த, நம்மோடு வாழுகின்ற மனிதர்களுக்கே இடம்பெறத்தொடங்கிவிட்டன. இந்த ‘நாமாக’ எந்தக்காலத்திலும் யாரோ சில மனிதர்கள் இருந்து வருந்தியிருப்பார்களே என்ற யதார்த்தமும் தேவகிக்கு உறுத்தியது.
“அம்மா, இதில உங்கட மகளைக் குற்றம் சொல்லாதீங்கள். போன் வச்சிருக்கிறதும் சிநேகிதம் வச்சிருக்கிறதும் அவவின்ர உரிமை. இதில ஆம்பிள்ளை என்ன, பொம்பிள்ளை என்ன. சில நாய்கள் செய்யிற வேலைக்காக எங்கட பிள்ளைய வீட்டுக்குள்ள முடக்கிறதே? பொம்பிள்ளைப்பிள்ளைகள் எண்டா ஈஸியா நாக்கு வழிக்கலாம் என்று நினைக்கிறினம் சிலபேர்.”
அந்தம்மா குலுங்கி அழ ஆரம்பித்தார்.
“பாவம் சின்னப்பிள்ளை, மாட்டன் மாட்டன் எண்டுதான் சொல்லியிருக்கிறாள். அவன் விடேல்ல. பயந்துபோயிட்டாள். விசயம் தெரியாத படிக்கிற பிள்ளையை மயக்கி … அறுவான்”
நிச்சமான பாலியல் வல்லுறவு இது. அதுவும் பாடசாலை மாணவிமீது. ஆனால் வெளியே எதுவுமே தெரியப்போவதில்லை. எவருமே கரிசனை எடுக்கப்போவதில்லை. வல்லுறவு செய்து வெட்டிக்கொன்று புதைத்தால்தான் இவர்களுக்குச் செய்தி. ஆர்ப்பாட்டம் செய்வதற்குத் தகுதியான சம்பவம். இல்லாவிட்டால் சட்டம் பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிடுவார்கள். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களோ சமூகத்துக்கு அஞ்சி கடவுள் பார்த்துக்கொள்வார் என்று ஒதுங்கிவிடுவார்கள்.
“அம்மா. இதை இப்பிடியே விடப்போறதில்லை. விடவும்கூடாது. முதலில் மகளுக்கு என்ன தேவையோ அதச்செய்வம். கவுன்சிலிங், உடல் பரிசோதனை என்று எல்லாமே …”
“ஒண்டுமே வேண்டாம். எண்ட பிள்ள உயிரோட இருக்கிறதே பெரியவிஷயம். அவள் ரெண்டுநாளில தெளிஞ்சிடுவாள். அம்மாளுக்கு நேர்த்தி வச்சிருக்கிறன். நீங்கள் தயவுசெஞ்சு உள்ளதையும் போட்டுடைக்காமல் நடையைக் கட்டுங்கள். வெளிய தெரிஞ்சா நாங்கள் தலையெடுக்கமுடியாது”
“இல்லை… அவனை இப்பிடியே விட்டிட்டா நாளைக்கு இன்னும் நாலு பிள்ளைகளை அந்த நாய் …”
தேவகி சொல்லவும் அவர் அழுதுகொண்டே புலம்பினார்.
“விளங்குது பிள்ளை. ஆனா எங்களிட்ட சத்தி இல்ல. எங்கட குடும்பத்துக்கு இந்தப் போராட்டம் எல்லாம் சரிவராது. ஆம்பிளை இல்லாத வீடு. விஷயம் வெளியில தெரிஞ்சா இருக்கிற புடவைக்கடை வேலையும் போயிடும். பிள்ளைக்கு பள்ளிக்கூடத்தில சேர்ட்டிபிகட் குடுத்திடுவினம். அவளிண்ட படிப்பை நம்பித்தான் நான் இருக்கிறன். இந்த வருஷம் அவள் சோதினை எடுக்கோணும். எல்லாமே சீரழிஞ்சுபோயிடும். அவன் எல்லாத்தையும் தெரிஞ்சுதான் சேட்டை விட்டிருக்கிறான். நாங்கள் பிரச்சனையைப் பெரிசாக்கி பொலிசுக்குப்போய் நாளைக்கு நடுராத்திரியில வந்து அவங்கள் கல்லெறிஞ்சால் ஆரு கேக்கிறது? அயலட்டம் எல்லாம் வீட்டுக்கையே அண்டாது. பெடியள் எல்லாம் அவளை ஒருமாதிரிப் பார்ப்பாங்கள். பிள்ளைண்ட வாழ்க்கையே சீரழிஞ்சிடும். இருக்கிற பிரச்சனை போதும். அவள் விசர்த்தனமா உமக்கு அறிவிச்சிட்டாள். விளக்கம் இல்லாத பெட்டை. நீங்கள் போயிடுங்கோ. இஞ்ச ஒண்டுமே நடக்கேல்ல. தயவு செஞ்சு போயிடுங்கோ.”
எதுவும் பேசத்தோன்றாமல் தேவகி முற்றத்தைத் திரும்பிப்பார்த்தாள். வீதியால் வாகனங்களும் மோட்டார்சைக்கிள்களும் வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. ஒரு நோஞ்சான் நாய் ஒன்று கேற்றடியில் இவள் வந்திருக்கின்ற சிலமனே இல்லாமல் முற்றத்தில் தூங்கிக்கொண்டிருந்தது. கோழிக்கூடு சாத்திக்கிடந்ததால் அருகிலிருந்த நெல்லி மரக்கிளைகளில் கோழிகள் குறண்டிக்கொண்டு அடிக்கடி செட்டைகளை உதறியபடி உட்கார்ந்திருந்தன. உலகம் எந்தப் பிரக்ஞையுமின்றி தன்பாட்டில் நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அசட்டையீனம்மீது தேவகிக்குக் கோபம் கோபமாக வந்தது. வீதியால் செல்கின்ற ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து, உனக்கென்ன அப்படி அவசரம்? இங்கே இந்த வீட்டிலே ஒரு தாயும் மகளும் அழுதுகொண்டிருக்கிறார்கள். ஒரு பாடசாலை மாணவியை ஒருவன் கொடுமைப்படுத்தியிருக்கிறான், நீ அப்படி எங்கே அவசரமாக ஓடுகிறாய்? என்று கேட்கவேண்டும்போல இருந்தது.
அந்தம்மா தலையைக்குனிந்தவாறே அவ்வப்போது மூக்கைச்சீறிக்கொண்டும் தனக்குள் என்னவோ புறுபுறுத்துக்கொண்டும் இருந்தார். மொத்தவீட்டையும் இருள் நிரவியிருந்தது.. தேவகி எழுந்துசென்று லைட்டைப்போட்டாள். வருடக்கணக்கில் பூச்சுக்காணாத வீடு. சுவரில் எப்போதோ இறந்த அந்தத்தாயாரின் கணவர் படம். அதில் முந்தைய தினம் வைக்கப்பட்டிருந்த செவ்வரத்தம்பூ வாடிக்கிடந்தது. வீட்டின் தரை குண்டுங்குழியுமாக பொழிந்துகிடந்தது. ஒரு லேடீஸ் சைக்கிள் காற்றுப்போய் நின்றது. காய்ந்து உதிரும் நிலையில் வாசலில் மாவிலைத்தோரணம். தேதி கிழிக்கப்படாத மெய்கண்டான் கலண்டர். வரவேற்பறை மேசை முழுதும் நிரம்பியிருந்த கொப்பி புத்தகங்கள். மிக எளிமையான, ஏழ்மைக்கும் மத்தியதரத்துக்குமிடையில் அல்லாடும், படிப்பே வாழ்வு என்று எண்ணுகின்ற சராசரி ஒற்றைத்தாய்க் குடும்பம். அன்றாடச் சீவியம் அந்தம்மா புடவைக்கடையில் செய்கின்ற ரிசீட்போடும் வேலையிலேயே ஓடுகின்றது. இவர்களுக்கு இப்படியான அதிர்வுகளை எதிர்கொள்ளும் சக்தி இல்லை. அயலட்டமும் அவ்வளவு நன்றாயில்லை. பக்கத்துவீட்டுக்காரி அரை மணித்தியாலமாக மாமரத்தடியில் நசுக்கிடாமல் நிற்பதை தேவகி கவனித்தேயிருந்தாள். எதிர்த்தவீட்டில் ஏதோ ஒரு மெசின் சத்தம். எதுவுமே சரியில்லை. பிள்ளையின் பெயரை நாறடித்துவிடுவார்கள். விஷயம் வெளியில் வந்தால் சுற்றுவட்டாரம், சில்லறைக்கடைகள், சலூன், பேஸ்புக், நியூயப்னா என்று ஆளாளுக்கு உண்டு இல்லை ஆக்கிவிடுவார்கள். போராடுகிறோம் என்று அவளின் பெயரையும் படத்தையும் போட்டு சாகடிப்பார்கள். பொறுமையாக இருப்பதே உசிதம். இப்போதைக்கு எதுவுமே செய்யமுடியாது. பிள்ளையைச் சந்திப்பதற்கும் தாயார் அனுமதிக்கப்போவதில்லை. ஒரு கிழமை, பத்து நாள்களில் மீண்டும் வந்துபார்க்கவேண்டும். தேவகி பெருமூச்சுடன் எழுந்தாள்.
“சரியம்மா … பிள்ளையை முதலில் நம்பிக்கையான டொக்டரிட்ட கொண்டுபோய்க்காட்டுங்கோ. எனக்குத்தெரிஞ்ச டொக்டர் ஒராள் இருக்கிறா. பிரச்சனையில்லாதவ. இது எண்ட நம்பர். எதுவும் தேவை எண்டால் கோல் பண்ணுங்கோ, எதுக்கும் பயப்படாதீங்கோ. பயப்படவேண்டியது நீங்கள் இல்லை. பிழை விட்டது உங்கட மகள் இல்லை. அதை ஒருக்காலும் மறந்திடாதீங்கோ. நடந்ததை விட, இப்பிடி நடந்துட்டுதே என்ற உணர்ச்சிதான் பிள்ளையை உருக்குலைக்கும். குத்திக்காட்டாதீங்கோ. தனிய விடவேண்டாம்… நான் பிள்ளையோட ரெண்டு நிமிஷம், ரெண்டே நிமிஷம் நேர்ல கதைச்சால் …”
“போயிட்டுவாங்கோ தங்கச்சி … நாங்கள் பாத்துக்கொள்ளுறம்”
தேவகிக்கு இயலாமையின் வெம்மை முகத்தில் அடித்தது. ஒரு சிறுபெண்ணுக்கும் தாய்க்கும் அவள் உதவி தேவையாயிருக்கிறது. கொடுக்கமுடியவில்லை. அவளுடைய தாயே அதைத்தடுக்கிறாள். முன்னே நீளுகின்ற தூரம் மிரட்டியது. பயணம் செய்யச்செய்ய மேலும் மேலும் தூரம் நீண்டுகொண்டே சென்றது. ஒவ்வொருத்தராகப் பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கையில் முன்னே சிறு அடி எடுத்து வைக்கவே மூச்சிறைத்தது. எப்படிச் சென்றடையப்போகிறோம்?
தேவகி வேறு எதையுமே பேசத்தோணாமல் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். நேரே வீட்டுக்குப்போக மனமில்லாமல் வழியிலிருந்த தேத்தண்ணிக்கடையில் ஸ்கூட்டியை நிறுத்தினாள்.
“தம்பி சீனி இல்லாமல் ஒரு டீ போடும். வடை இப்ப பொரிச்சது இருக்கா?”
ஹெல்மட்டை மேசையில் வைத்துவிட்டு கடைக்காரத்தம்பி கொண்டுவந்த வடையைக்கடித்தபடியே போனை எடுத்துச் செக் பண்ணினாள். மாலையில் போட்டிருந்த ஸ்டேடசுக்கு லைக்குகள் குவிந்திருந்தன. ஷிட். ஆளாளுக்குக் கோபப்பட்டும் தேவகியின் துணிச்சலைப் பாராட்டியும் நியாயம் வேண்டியும் கொமெண்டுகள் போட்டிருந்தார்கள். ஷிட். டைம்லைன் முழுதும் அன்றைய தேர்தல் செய்தியாகவேயிருந்தது. கொடுங்கோல் ஆட்சி ஒழிகிறது என்றார்கள். ஷிட். இனியும் மக்களை ஏமாற்றமுடியாது என்றார்கள். ஷிட். ஆளாளுக்கு அரசியல் ஆய்வாளர்களாக மாறியிருந்தார்கள். ஷிட். மாற்றம் என்றார்கள். மென்வலு மூலம் சாதிப்போம் என்றார்கள். சிலர் மீம்ஸ் போட்டிருந்தார்கள். சிலர் இலக்கியம் பேசினார்கள். புதிதாய்த் திருமணமான தம்பதி ஒன்று இறுக்கமாக அணைத்தபடி செல்பி எடுத்துப்போட்டிருந்தது. தேவகி ஒவ்வொன்றுக்கும் ஒரு ஷிட் சொன்னாள். இருபது புதிய பேஸ்புக் மெசேஜுகள் வந்திருந்தன. மேய்ந்தாள். அநேகமானவை வழமையான “ஹாய்”, “ஆர் யூ புறம் இடைக்காடு?”, “எந்த ஸ்கூல்?” ரகமாகவே இருந்தன. ஓரிரு அநாமதேய எக்கவுண்டுகள் ஆணுறுப்பு, போர்ன் படங்களை அனுப்பியிருந்தன. தேவகி எவரையுமே புளக் செய்வதில்லை. மாதாமாதம் முழு லிஸ்டையும் எடுத்து சைபர் கிரைம் டிவிஷனுக்கு அனுப்பிவிடுவாள். படம் அனுப்புபவர்கள் கொஞ்சப்பேர். அனுப்பாமல் மனதுக்குள்ளேயே நினைத்துக்கொள்பவர்கள் பலர். ஒன்று பாலியல் வல்லுறவு என்றால் மற்றையது சுயமைதுனம். வெறுப்பாகவிருந்தது. கருங்கற்சுவர்களை தலையால் முட்டி மோதிக்கொண்டேயிருப்பதில் வலி கொல்லுகிறது. எல்லாமே போலித்தனமாகத் தெரிந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ஆறுதல்சொல்லக்கூட இங்கே முடியவில்லை. தன் அறைக்கு வெளியே கூட அவளால் வரமுடியவில்லை. வன்முறையைச் செய்தவனோ எந்தக் குற்றவுணர்ச்சியுமில்லாமல் எங்கேயாவது குடித்துக்கொண்டிருக்கலாம். பிறகெதற்கு இத்தனை அலைச்சலும் போராட்டமும்?
தேவகி விட்டேத்தியாகத் தொடர்ந்து தேநீரை அருந்திக்கொண்டு மெசெஜுகளைத் தட்டிக்கொண்டுபோகையில்தான் சுதர்சனுடைய மெசேஜ் கண்ணில் மாட்டியது. சுதர்சன் சமீபத்திய முகநூல் அறிமுகம். தினமும் காலை தேவகியினுடைய பழைய படங்களையும் போஸ்ட்டுகளையும் லைக் பண்ணுவதைக் கடந்த இரண்டு வாரங்களாகச் செய்துகொண்டிருப்பவன். கூடிய சீக்கிரமே அவனிடமிருந்து ஒரு மெசேஜ் வரப்போவது தெரிந்ததுதான். வந்துவிட்டது. திறந்தாள்.
“What happened? Is she safe? We should get to the bottom of it. Let me know if you need any help. I am there.”
ஒரு ஹாய் இல்லை. அறிமுகம் இல்லை. அவன் நேரடியாகவே பேசுபொருளுக்குள் விரைந்தது கவர்ந்தது. அவனுடைய தேவை தேவகியோடு பேசுவதில்லை, அந்தப்பெண்ணின் நிலையை அறிந்துகொள்வதே என்று தோன்றியது. தேவகிக்கும் யாரோடாவது பேசினால் மனம் நிம்மதிப்படும்போல இருந்தது. சற்று யோசித்துவிட்டுப் பின்னர் ரிப்ளை பண்ணினாள்.
“She is, but this is going nowhere. Her family is concerned about the privacy. Donno wt 2 do.”
உடனடியாகவே ரிப்ளை வந்தது.
“Understandable. Let’s not disclose the victims’ details. But will crack down the culprits”
“How?”
“Do you have the girl’s mobile? I work at a telecom company. I can get the call history. Will track it down”
தேவகி நிமிர்ந்து உட்கார்ந்தாள். உடனடியாகச் சுதர்சனைப்பற்றித் தேடினாள். அவன் வேலை செய்யும் இடத்தை லிங்க்டின் இணையத்தளம் உறுதிப்படுத்தியது. கூடவே இரண்டுபேர் அவனை இம்மை மறுமை இல்லாமல் பாராட்டி ரெக்கமண்ட் பண்ணியிருந்தார்கள். பேஸ்புக்கில் இருநூறு மியூச்சுவல் பிரண்ட்ஸ் இருந்தார்கள். படத்தில் சாந்தமானவனாகத் தெரிந்தான். இவனை நம்பலாமென்று தோன்றியது. அந்தப்பிள்ளை கடந்த இருவாரங்களில் யார் யாருடன் பேசினாள் என்பதை அறிந்துவிட்டால் அந்த நாய் யாரென்று கண்டுபிடித்துவிடலாம். இது சாத்தியப்படும்போலத் தெரிந்தது. பொலிசுக்குப்போகவேண்டாம். குடும்பத்திடமிருந்து கொம்பிளைன் வேண்டுமென்பார்கள். ஆள் யாரெண்டு முதலில் கண்டுபிடிக்கலாம். பின்னர் வேண்டுமானால் ஒஐசியிடம் இரகசியமாகபேசிக் கவனிக்கச்சொல்லலாம். தனியே இரவில் செல்லும்போது இரண்டு தட்டு தட்டச்சொல்லலாம். சட்டமெல்லாம் இந்த நாய்களுக்குச் சரிப்பட்டுவராது. தேவகி தாமதிக்காமல் சுதர்சனுக்கு மெசேஜ் பண்ணினாள்.
“Are you sure? Can we really do this?
சட் பண்ணினார்கள். போகும்வழியில் போன் வைப்ரேட் பண்ண சம்பியன் வீதியில் பைக்கை நிறுத்திவிட்டு தேவகி மெசேஜ் செக் பண்ணினாள். புதிதாக ஒரு உற்சாகம் அவளைத் தொற்றிக்கொண்டது. அன்று முழுதும் சட் பண்ணிக்கொண்டேயிருந்தார்கள். சுதர்சன் வழியவில்லை. தவறாக எதுவுமே பேசவில்லை. பேசியது எல்லாமே பாதிக்கப்பட்ட பெண்ணைப்பற்றித்தான். என்ன செய்யலாம்? என்ன செய்யமுடியாது? எதுவெதுவெல்லாம் பாலியல் வல்லுறவுக்குள் அடங்கும்? குட் டச், பாட் டச். எல்லாமே. சுதர்சனுக்குத் தெரிந்திருந்தது. லிங்க் லிங்காக அனுப்பினான். தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் பக்குவமும் அவனுக்கு இருந்தது. அடுத்தநாளே தொலைபேசியில் பேசிவிட்டார்கள். மூன்றாம் நாள் மாலை சுதர்சன் கோல் ஹிஸ்டரியோடு வீட்டுக்கே வந்துவிட்டான்.
எல்லாமாக நாற்பது பக்கங்கள். ஒரே நம்பர். பேசு பேசென்று பாதிக்கப்பட்ட பெண்ணோடு அவளை ஏமாற்றியவன் பேசியிருக்கிறான்.
“யாரெண்டு செக் பண்ணினீங்களா?”
“ம்.. கொஞ்சம் பெரிய இடம். பெயர் குருபரன். பேமஸ் டியூஷன் மாஸ்டர்.”
“எக்கனமிக்ஸ் வாத்தியா. நினைச்சன். அவனைப்பற்றி முதலே அரசல் புரசலாகக் கதை அடிபட்டது. படிப்பிக்கேக்க கன்னத்தில தட்டுறவன் என்று கொம்பளைன் வந்திருந்தது…அப்பவே நறுக்கியிருக்கோணும் நாயை.”
“ஒரே மாதத்தில் மொத்தமாக ஆயிரத்து எழுநூற்றுச்சொச்ச நிமிஷம் கதைச்சிருக்கிறினம். கொழும்புக்கு டிக்கட்கூட வாங்கியிருக்கிறான். அந்த நாட்களில் அந்தப்பிள்ளை பள்ளிக்கூடம் போகேல்லை எண்டதையும் கொன்பேர்ம் பண்ணியாயிற்று.”
“ஒரு படிப்பிக்கிற வாத்தி. கலியாணம் கட்டி இரண்டு பிள்ளையள் வேற இருக்கு. எவ்வளவு தைரியம் இருந்தால் இந்தவேலை பார்ப்பான். தெரு நாய்”
“இதை இப்படியே விடக்கூடாது தேவகி. இவனைமாதிரி ஆக்கள் தொடர்ந்து அபியூஸ் பண்ணுவினம். ஓஐஸிக்கு இன்போர்ம் பண்ணுவமா?”
தேவகி யோசித்தாள்.
“அந்தப்பிள்ளைக்கு பதினெட்டு வயசாயிட்டுது என்று நினைக்கிறன். மேஜர். அவளுடைய விருப்பப்படியே நடந்தது எண்டு இவன் சொல்லுவான். தாய்க்காரி அவள் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தவள் என்றுதான் சொன்னவா. ஆனாலும் அந்தப்பிள்ளை ஏதாவது ஆதாரம் காட்டவேண்டியிருக்கும்… காயம், இரத்தப்போக்கு … இது கொஞ்சம் சிக்கலான…”
“என்ன சொல்லுறீங்கள்? இது ரேப் பை டிசெப்ஷன். படிக்கிற பிள்ளையை ஏமாற்றி ஆசை வார்த்தை காட்டிச்செய்யுறது வேற என்னவாம்? அந்தப்பிள்ளை இதை சந்தோசமாகத்தான் செய்திருக்குமெண்டால் எதுக்காக இண்டைக்கு வீட்டுக்குள்ள அழுதுகொண்டு அடைபட்டுக்கிடக்கோணும்? ஏன் உங்களுக்குத் தகவல் அனுப்போணும்? ஒண்டு தெரியுமா? ஆணோ பெண்ணோ கடைசிச் செக்கனில கூட வேண்டாம் என்று மறுத்து அதுக்குப்பிறகு வற்புறுத்தப்பட்டாற்கூட அது ரேப்தான்.”
தேவகி சுதர்சனை ஆச்சரியமாகப்பார்த்தாள். இவனுக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறதா?
“இன்னுமொன்று தேவகி. பதினெட்டு வயது மேஜர் என்று சட்டம் சொல்லுது. ஆனால் எங்கட சொசைட்டில எத்தினைபேருக்கு பதினெட்டு வயதிலேயே செக்ஸ் பற்றிய அறிவு கிடைக்குது? அவன் முதன்முதலில் தவறாக இந்தப்பிள்ளையோடு நடந்தபோது இதுக்கு அப்படி என்ன விளங்கியிருக்கும்? என்னைப்பொறுத்தவரையில் பாடசாலை மாணவி என்றாலே அவள் மைனர்தான். இன்னுஞ்சொல்லப்போனா எங்கட சமூகத்தைப்பொறுத்தவரையில் இருபத்தைஞ்சு வயசுவரைக்கும்கூட பலரை மைனராகவே கருதோணும்.”
சுதர்சன் சொல்லச் சொல்ல சோர்ந்திருந்த தேவகிக்கு இப்போது நம்பிக்கை பிறந்தது. அடுத்தநாளே ஓஐஸியிடம் போனார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டவர் பாதிக்கப்பட்ட மாணவிக்குப் பதினெட்டு வயது நிரம்பியிருந்ததால் அந்தப்பெண்ணே முறைப்பாடு கொடுக்கவேண்டும் என்றார். ஆதாரம் இல்லாமல் கைவைப்பது கடினம் என்றார். சுதர்சன் தேவகிக்குச் சொன்ன சமூகவிளக்கங்களையே மீண்டும் சொல்ல அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “விட்டாக் கலியாணம் கட்டும்வரைக்கும் மைனர்தான் எண்டுவீங்களே” என்று அவர் நக்கலாகச்சொல்லவும் இருவரும் வாக்குவாதப்பட்டார்கள். பெண்களை அவமானப்படுத்திய ஒஐஸியையும் கோர்ட்டுக்கு இழுக்கப்போவதாக சுதர்சன் சவால் விட்டான். அவர் சிங்களவர் என்பதால்தான் இப்படிப்பேசுகிறார் என்றான். அவனை வெளியே இழுத்துக் கொண்டு வருவதற்குள் தேவகிக்குச் சீவன் போய்விட்டது.
“அந்தாள் நல்ல மனுஷன். ஏன் அவரோடை போய்ச் சண்டை பிடிக்கிறீங்கள்?”
“இவனா. பச்சைக்கள்ளன். குருபரனிட்ட காசுவாங்கிட்டுக் கதைக்கிறான். பொம்பிளைப்பொறுக்கி.”
தேவகிக்குச் சுதர்சனைப்பார்க்க கொஞ்சம் சிரிப்பும் வந்தது. வீட்டுக்கு அழைத்துவந்து அம்மா கையால் ஒரு பிளேன்ரீ ஊற்றிக்கொடுத்து, பத்து நிமிடம் ஆறியபின்னரேயே சுதர்சனின் கோபம் தணிந்தது.
“உங்களுக்கு இவ்வளவு கோபம் வரத்தேவையில்லை. அவர் சொல்லுறதிலையும் ஞாயம் இருக்கு. எந்த அடிப்படையிலே குருபரனை அவர் சந்தேகப்படுறது? நீங்கள் கோல் ஹிஸ்டரியை எடுத்ததே சட்டவிரோதம். விஷயம் வெளியில தெரிஞ்சா உங்கட வேலையும் போயிடும். எண்ட வேலையும் போயிடும்.”
“என்னால இத இப்படியே விட முடியேல்ல தேவகி… அவனை”
தேவகி அருகேபோய் அவன் தலையை மெலிதாய்க் குட்டினாள்.
“டேக் இட் ஈஸி சுதர்சன்”
அன்றைக்கு இருளும்வரைக்கும் பேசிக்கொண்டிருந்தார்கள். தேவகியின் தாய் அடிக்கடி உள்ளிருந்து குரல் கொடுத்துக்கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் ஹோலுக்குள் வந்து டிவியில் சீரியல் போட்டுவிட்டு அங்கேயே உட்கார்ந்து தேங்காய் துருவ ஆரம்பித்தார். அதற்கப்புறம்தான் சுதர்சன் மெதுவாகக் கிளம்பினான். அன்றிரவும் அதன்பின்னரும் இருவரும் மெசேஜிக்கொண்டேயிருந்தார்கள். நடக்கையில், கக்கூசில், நுளம்பு அடிக்கையில், சாப்பிடுகையில் என்று எப்போதுமே இடக்கை மெசஞ்சரிலேயே இருந்தது. இரவு இரண்டுமணிக்கு ஏதாவது நோட்டிபிகேஷன் வந்து மொபைல் வெளிச்சம் மின்னினால் தேவகி எழுந்து செக் பண்ணினாள். காலையில் ஏழு மணிக்கே சுதர்சன் கோல் பண்ணினான்.
“பேப்பர் பார் தேவகி, ஏழாம் பக்கத்தில, கீழ.”
வலம்புரியில் “பொருளியல் ஆசிரியர் குருபரன் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டார்” என்றிருந்தது. அவளோடு மெசேஜ் பண்ணிக்கொண்டிருக்கும்போதே சுதர்சன் ஆள்வைத்து வேலையைக் காட்டிவிட்டான். பத்திரிகைக்கும் செய்தி போயிருக்கிறது. அந்தப்பிள்ளை இன்றைக்குப் பேப்பர் வாசிக்கலாம். இல்லாவிட்டால் தானே பின்னேரம்போல கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வரவேண்டும். தவறு என்று தெரிந்தாலும் தேவகிக்கு உள்ளூற மகிழ்ச்சியாகவே இருந்தது. சிரிப்பும் வந்தது. உடனேயே மேசெஜினாள்.
“Is he ok?”
“He is not, but the school girls will be ok now on ;)”
கண்ணடித்து ஸ்மைலி வந்தது. பேசினார்கள். சந்தித்தார்கள். அடுத்தநாளும் தொடர்ந்தது. அதற்கடுத்தநாளும் தொடர்ந்தது. அவள் எங்கு சென்றாலும் சுதர்சனும் கூடவே சென்றான். காலையில் என்ன உடை அணியலாம் என்று போனில் போட்டோ எடுத்து அவனுக்கு அனுப்பிக் கேட்டாள். இரவு எங்கே என்ன சாப்பிடலாம் என்று மதியமே டிஸ்கஸ் பண்ணினார்கள். அவள் வீட்டில் இல்லாதநேரம் பார்த்து அவன் ‘அன்ரி’யிடம் டீ குடிக்கப்போனான். அவள் வேலை முடிந்து வீடு திரும்பி இரண்டாம் நிமிடம் அவனுடைய மோட்டார் சைக்கிள் சத்தம் வாசலில் கேட்கும். சரியாக ஐந்து வாரம் கழித்து சுதர்சன் ரியோவில் வைத்து “நாங்கள் இருவரும் காதலிக்கிறம் எண்டு நினைக்கிறன்” என்று தேவகியைப்பார்த்துச் சொன்னபோது “ஓ அப்பிடியா? வலம்புரியில் எத்தினையாம் பக்கம்?” என்று இவள் சிரித்தாள்.
ஒருமுறை தேவகி கொழும்புக்கு வேலை நிமித்தம் புறப்படுகையில் சுதர்சனும் லீவுபோட்டுவிட்டுக் கூடவே வந்தான். நிறையப்பேசினார்கள். இளையராஜா, ஜெயகாந்தன், மைத்திரி, மாற்றம், சுமந்திரன், தேசியம், அபிவிருத்தி என்று கதைகள் எங்கெல்லாமோ நீண்டன. ரயில் பளை தாண்டியபின் சுதர்சனின் கை தேவகியின்மேல் அடிக்கடி தவறுதலாக அங்கிங்கே பட்டுச் சொறி சொல்லிக்கொண்டிருந்தது. மாங்குளத்தில் சொறி மறந்துபோய், வவுனியாவில் முதன்முதலாக முத்தம் கொடுக்கப்பட்டு, குருநாகல் தாண்டும்போது கை மார்பை எட்டி, கொழும்பில், திரும்பி வருகையில் என்று சில்மிஷங்கள் தொடர்ந்து, சரியாக மூன்று மாதம் இருபது நாள்கள் கழித்து நீர்கொழும்பில் ஒரு விடுதியொன்றில் இரவுச்சாப்பாடு, ஓரிரு கவிதைகள், ஒரு கோப்பி முடிந்தபின்னர் முகம்முழுதும் முத்தங்கள் பரிமாறி, நாடி, கழுத்து என்று இறங்கி சுதர்சனின் கை மார்பை அழுத்தியபோது தேவகிக்கு உள்ளூற எங்கேயோ உறுத்தியது. “நோ சுதர்சன்” என்றாள். அவன் வற்புறுத்தினான். தேவகி அவனை ஒதுக்கிவிட்டுத் தாயோடு போன் பேசினாள். பின்னர் சற்றுநேரம் பேசாமல் இருந்தவர்கள் மீண்டும் ஆரம்பித்தார்கள். ஆளாளுக்கு உறுதிமொழிகளை கொடுத்தும் பெற்றும் கொண்டார்கள். இம்முறை சுதர்சன் நிதானமாகவே தேவகியைக் கையாண்டான். முகத்திலேயே முழுதாக ஒரு மணிநேரம் செலவிட்டார்கள். அதன்பின்னர் கை நீண்டதையும் கால் நீண்டதையும் உணரும் நிலையில் தேவகி இருக்கவில்லை. ஒருகட்டத்தில் மிக இயல்பாக சுதர்சன் சட்டைப்பையிலிருந்த ஆணுறையைக் கண இடைவெளியில் எடுத்து அணிந்தபொழுதில் தேவகியோ வேறு உலகத்தில் இருந்தாள்.
காலையில் தேவகிக்கு விழிப்பு வந்தபோது மதியம் ஒரு மணி ஆகியிருந்தது. உடல் அடித்துப்போட்டதுபோல வலித்தது. எல்லாவற்றையும் யோசிக்க அவளுக்குக் குழப்பம் எகிறிவிட்டது. முந்தைய இரவு சந்தோசங்கள் எதுவுமே ரசிக்கவில்லை. தொடுகை, முத்தம் என எதுவுமே கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. தலை பயங்கரமாக இடித்தது. சுதர்சன் வெகு இயல்பாக வெறும் துவாயை இடுப்பில் சுற்றியபடி போனில் எதனையோ துலாவிக்கொண்டிருந்தான். தேவகி எதுவுமே பேசவில்லை. அவன் தேநீர் தருவித்தான். அன்றைக்கும் நீர்கொழும்பிலேயே நின்று அடுத்தநாள் ஆறுதலாகப் போகலாம் என்று அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவசரமாகக் குளித்து, உடைமாற்றி அடுத்த பஸ்ஸிலேயே யாழ்ப்பாணம் திரும்பிவிட்டாள். சுதர்சனை வேறு பஸ்ஸில் வரும்படி சொல்லிவிட்டாள். பஸ் பயணம் முழுதும் தலை பயங்கரமாக இடித்துக்கொண்டேயிருந்தது. காதிலே ஹெட்போன் செருகிப் பாட்டுக்கேட்டாள். லயிக்கவேயில்லை. மாறி மாறி ஈபுக்குகளைப் புரட்டுவதும் குளோஸ் பண்ணுவதுமாக இருந்தாள். கண் மூடினால் முந்தையநாள் சம்பவங்களே தொந்தரவு பண்ணின. எதுவுமே ரசிக்கவில்லை. இல்லை என்று மறுத்தும் சுதர்சன் எப்படியோ காரியத்தைச் சாதித்துவிட்டான். ஆணுறையை இதற்கென்றே தயாராக வைத்திருந்திருக்கிறான். ஷிட். எதுவுமே இயல்பாக எதார்த்தமாக இடம்பெறவில்லை. ஷிட். ஷிட். நன்றாகத்திட்டமிட்டே காரியத்தைச் சாதித்திருக்கிறான். சர்வ நிச்சயமாக ஏமாந்திருக்கிறோம். கை படுவதிலிருந்து முத்தம் கொடுத்ததிலிருந்து எல்லாவற்றிலும் ஏமாந்திருக்கிறோம். பொதுவெளியில்கூட அநாகரிகமாக நடந்திருக்கிறோம். எல்லாமே. ஷிட், ஷிட், ஷிட். எப்படி ஏமாந்துவிட்டோம். புல் ஷிட்.
யாழ்ப்பாணம் திரும்பியதும் சுதர்சன் எதுவுமே இடம்பெறாதமாதிரி கோல் பண்ணிப்பேசினான். ஆனாலும் குரலில், ஈர்ப்பில் எங்கோ ஏதோ ஒரு இடைவெளி விழுந்திருந்தது. முதன்முதலாக மெலிதான அதிகாரத்தொனியும் அலட்சியமும் எட்டிப்பார்த்தது. நீர்கொழும்பைப்பற்றி இருவருமே வாய் திறக்கவில்லை.
முதன்முதலாக யார் இந்த சுதர்சன்? என்ற கேள்வி தேவகிக்கு எழுந்தது. அவனை முற்றாக அறிய முற்பட்டோமா? அவன் வீடு எது, அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி தம்பி என்று யாருடனேனும் தொடர்புகொள்ள முயன்றோமா? சுதர்சன் திடீரென்று முழுக்க முழுக்க ஒரு போலியான அந்நிய மனிதனாட்டம் அவளுக்குத்தேரிந்தான். அவன் தன்னுடைய ஒவ்வொரு நகர்வுகளையும் தேவகிக்குப்பிடிக்கும்படியே நிகழ்த்தியிருக்கிறான். நிஜ சுதர்சனை எங்கேயோ புதைத்துவைத்துவிட்டு தேவகிக்குப்பிடிக்கக்கூடிய முகமூடியை அணிந்துகொண்டு பழகியிருக்கிறான். தேவகிக்கு எல்லாமே வெளிக்க ஆரம்பித்தது. சட் ஹிஸ்டரியை மீண்டும் மீண்டும் நோட்டம் விட்டாள். சுதர்சனுடைய ஒவ்வொரு ஹாய்யிலும், ஒவ்வொரு ஸ்மைலியிலும் அவனுடைய நரித்தனம் அவளுக்குத் தெரிந்தது. ஒவ்வொருமுறையும் அவனுடைய நோட்டிபிகேஷன் வரும்போதும் அவன் அவசர அவசரமாக ஆணுறை அணிந்ததே ஞாபகம் வந்தது. மூன்று நான்கு மாதங்களாக நெருக்கமாகப் பழகியவனை எப்படி எடை போடாமல் தவறவிட்டோம்? எப்படி ஒரே நாளில் அவனைப்பற்றிய எதிர்மறையான சிந்தனைகள் எல்லாமே பட ஆரம்பிக்கின்றன? தேவகிக்கு அவனை நினைத்தாலே வெறுப்பு மேலிட ஆரம்பித்தது. சுதர்சனின் முகம் ஒரு வெறிபிடித்த நாயைப்போல, நாக்கு சற்றே வெளித்தள்ளியபடி அப்போது அசைந்துக்கொண்டிருந்தது. குருபரன்கூட அப்படித்தான் அந்தப்பிள்ளைக்குத் தோன்றியிருக்கலாம். எல்லாம் முடிந்து புரண்டு படுக்கும் அக்கணத்தில் ஆண்கள் எல்லோருமே இப்படித்தான் அந்நியமாவார்களோ? நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்? தேவகி தன்னையே நொந்துகொண்டாள். அவனோடு இஷ்டப்பட்டுத்தானே சுற்றினோம். இஷ்டப்பட்டுத்தானே முத்தம் கொடுத்தோம். அவனோடு கழித்த கணங்கள் எல்லாமே இனிமையாகத்தானே கழிந்தன. எப்போது அவன் அந்நியமானான்? எப்போது ஆழ்மனதுக்கு இது ஆகாதது என்று தெரியவருகிறது? ஏன் இத்தனைகாலமும் அந்த எண்ணம் வெளியே எட்டிப்பார்க்கவில்லை? இருபத்தாறு வயதில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கக்கூட எனக்குப்பக்குவம் இல்லை என்றால் என்ன மனுஷி நான்? நான் எப்படி ஊருக்குப்புத்தி சொல்லுவது? எப்படி ஏமாந்தாள்? ஊர் முழுதும் அட்வைஸ் பண்ணுபவள். ஏமாற்றுப்பேர்வழிகளை இனம் காட்டுபவள். என்ன தைரியம் இருந்தால் அவள்மீதே கை வைத்திருப்பான்? எந்த நினைப்பில் முதல்முறை மறுத்தவள் இரண்டாம்முறை எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை? தேவகிக்கு ச்சிக் என்றிருந்தது. கணநேரச் சலனம். டெஸ்ட்டோஸ்தரனோ, ஈஸ்ட்ரோஜனோ ஏதோ ஒன்றுக்கு எப்படி அடிமையானோம்? அவனை முழுதாக அறியாமலேயே கை தொட விட்டதிலிருந்து உடலுறவுவரைக்கும் அனுமதித்ததை அவளாலேயே நம்ப முடியவில்லை. புல்ஷிட். புல்ஷிட். புல்ஷிட். எனக்கு இனி என்ன தகுதி இருக்கிறது? குட் டச் பாட் டச் பற்றி நான் இனி எப்படி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது. புல்ஷிட். புல்ஷிட். புல்ஷிட். புல்ஷிட். புல்ஷிட். புல்ஷிட். புல்ஷிட். புல்ஷிட். புல்ஷிட்.
நினைத்ததுபோலவே மூன்றாம் நாளே சுதர்சனுடைய நடவடிக்கைகளிலும் தேவகி வித்தியாசத்தை உணர ஆரம்பித்தாள். நாளுக்கு மூன்று என வரும் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிட்டிருந்தன. நான்காம் நாள் வெறுமனே இரண்டு மூன்று மேசெஜுகளே வந்திருந்தன. ஐந்தாம் நாள் திடீரென்று அலுவலகத்தில் புரடக்சன் பிரச்சனை என்று சுதர்சன் பிஸியானான். ஆறாம் நாள் தேவகியே எடுத்துப்பேசும்போது பிடிகொடுக்காமல் சடைந்தான். இது எங்கே போகிறது என்று விளங்கிவிட்டது. ஏதோ எண்ணத்தில் அவசர அவசரமாக அவள் அவர்களுடைய சட் ஹிஸ்டரி, பேஸ்புக்கில் பரஸ்பரம் லைக் கொமெண்ட் பண்ணியது என எல்லாவற்றையும் ஸ்கிரீன்ஷொட் எடுத்துச் சேமித்துவைத்தாள்.
ஏழாம் நாள், இரண்டு வாரம், ஒரு மாதம், வழமையான ஏமாற்றுக்காதல்கதைகள்போல சுதர்சன் வலுவான காரணங்கள் ஏதுமில்லாமல் தேவகியோடான தொடர்பாடலைத் துண்டித்துவிட்டான். போன் நம்பர் வேலை செய்யவில்லை. பேஸ்புக் புளக் செய்யப்பட்டிருந்தது. சுதர்சன் தங்கியிருந்த ரூமுக்கு விசாரித்துச்சென்றால் அவன் கொழும்பு சென்றுவிட்டான் என்றார்கள். அவன் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று அடுத்தடுத்து விசாரிக்கவேண்டியதில்லை. எல்லாமே வழமையானவைதான். தமக்குத்தேரியாது என்று கைவிரிப்பார்கள். தயங்கித் தயங்கி அவள் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னாள். அம்மா துள்ளவில்லை. கொதிக்கவில்லை. கோபம்கூடப்படவில்லை. ஒரேயொரு கேள்வியே கேட்டார்.
“கவனமா இருந்தீங்களா?”
தேவகி தலையாட்டினாள். அம்மா சுடச்சுட ஒரு பிளேன்ரீ ஊற்றிக்கொண்டு வந்தார்.
“அவன்ட பார்வை அப்பவே சரியில்லை. சனியன் துலையட்டும். விட்டுத்தள்ளு. ஊருலகத்தில நடக்காததா? இப்பவாவது அவனைப்பற்றி உனக்கு விளங்கினது சந்தோசம். யோச்சுப்பார் பிள்ள. கலியாணம் கட்டிட்டுப் பிறகு இப்படி ஒரு நிலைமை வந்திருந்தா எவ்வளவு கஷ்டம்? என்னைக்கேட்டா இது நல்லதுக்குத்தான். உடலுறவுக்குப்பிறகான ஆம்பிளைக்கும் பொம்பிளைக்குமான உணர்வுதான் நிச்சயமானது. இச்சைகளுக்கு இடங்கொடுக்காத நிரந்தரமான ஈர்ப்பு அது. அது கிடைக்காட்டி விட்டிடோணும். அவன் கள்ளன் எண்டு தெரிஞ்சிட்டல்லோ, மறந்துடு. வெள்ளைக்காரன் இந்த விசயத்தில தெளிவா இருப்பான். எங்கடை ஆக்களுக்கு இன்னுங்கொஞ்சம் காலம் எடுக்கும். இனியாவது கவனமாக இரு.”
தேவகி தாயை வியப்புடன் பார்த்தாள். கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. உங்களுக்கு இது அதிர்ச்சியாகவே இல்லையா அம்மா? தேவகியால் அப்படி இலகுவாக விட்டுவிடமுடியவில்லை. உடலுறவுகூடப் பிரச்சனை இல்லை. மலம் கழிப்பதுபோல. வெறும் இச்சைதான். நாய்ப்பீயை மிதித்தால் கால் கழுவிவிட்டுப்போவதுபோல அந்த நாளினைக் கழுவித்துடைப்பது பெரிய விசயமே இல்லை. ஆனால் ஏமாறியதைத்தான் தாங்கமுடியவில்லை. ஒரே எண்ணங்கள், சிந்தனைகள், காதலுணர்ச்சி, இவனோடு எஞ்சிய வாழ்வை திருப்தியாகக் கழிக்கலாம் என்று சில மாதங்கள் எண்ணிக்கொண்டிருந்த அந்த அவமானத்தைத்தான் தாங்கமுடியவில்லை. சுதர்சன் எப்படி மெதொடிக்கலாக அவளை ஏமாற்றியிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண்ணுக்காகக் குரல்கொடுக்கிறேன் என்று சொல்லி, அதையே சாட்டாகவைத்து முன்னேறி, கொஞ்சம் கொஞ்சமாக ஈர்ப்பை ஏற்படுத்தி இறுதியில் ஒரே அறையில் அவள் தடுக்கவும் எப்படியோ தகிடுத்தனம் செய்து அவளைச் சம்மதிக்க வைத்து என்று எல்லா நிலைகளிலும் தேவகி அவனிடம் தோற்றுக்கொண்டேயிருந்திருக்கிறாள். அவள் யார் யாருக்காகப் பாடுபட்டாளோ, யாருக்காகக் குரல் கொடுத்தாளோ அவர்கள் எல்லோரையும் கூடச்சேர்த்துத் தோற்கடித்துவிட்டாள். மூன்று மாதங்களுக்கு முன்னம்கூட சுதர்சன் சுதர்சன் என்று வியாபித்திருந்தவன். இப்போது யாரோ ஆகிவிட்டான். அவளை ஒரு கேவலம் ஒரு யாரோ ஒருத்தன் போகிறபோக்கிலே ஏமாற்றிவிட்டுப் புளக் பண்ணிவிட்டிருக்கிறான். அந்தப் பள்ளிச்சிறுமி இவள் வீட்டுக்கு வந்து “அக்கா கவலைப்படாதீங்கோ” என்று சொல்கிற நிலைமைக்கு தேவகி ஆளாகிவிட்டாள். தேவகிக்கு விசர் பிடித்தது.
சுதர்சனை என்ன செய்யலாம்?
பொலிசிடம் போகமுடியாது. இருபத்தாறு வயதில் ஒரு ஆணிடம் ஏமாறியதைச் சொன்னால் வேலைக்காகாது. அதுவும் சுதர்சனின் பெயரைச் சொன்னால் ஓஐஸி வாய் கிழியச்சிரிப்பார். சட்டரீதியாக எந்தத் தவறையும் சுதர்சன் விடவில்லை. இவள் வேண்டாமென்றபோதுகூட அவன் வற்புறுத்தவில்லை. வேறுவிதமாக நிலைமையைக் கையாண்டு அவளைச் சம்மதிக்கவைத்தான். அந்தக்கணத்தில் அவளும் மனம் ஒத்துப்போய்த்தான் அதற்கு இணங்கினாள். சரி, ஒரு கெட்ட அனுபவம் என்று அம்மா சொன்னதுபோல வெறுமனே விட்டுவிட்டுப்போக முடியவில்லை. ஒருவன் அங்குலம் அங்குலமாக ஒருத்தியை ஏமாற்றிவிட்டு நிம்மதியாகவிருக்கிறான். அவளோ திருடு கொடுத்தவள்போல அரற்றிக்கொண்டிருக்கிறாள். இதை எப்படி சும்மா விடுவது? இது திருட்டு இல்லையா? திருட்டின் நியதிகள் என்பது தொட்டு உணரக்கூடிய பொருட்களுக்கு மட்டும்தான் செல்லுபடியாகுமா? தேவகிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. இன்னொரு பெண்ணுக்கு அந்த சுதர்சன் என்கின்ற நாய் இப்போது ஹாய் அனுப்பிக்கொண்டிருப்பான் என்ற சிந்தனை வந்தது. எதையாவது சொல்லி ஏமாற்றுவான். அவள் பாடகியாய் இருந்தால் இவன் பாட்டைப்பற்றிக் கதைப்பான். எழுத்தாளராய் இருந்தால் இலக்கியம் கதைப்பான். சமையல் பிடிக்குமென்றால் பாஸ்டா எப்படிச் செய்வது என்பான். அவள் காதல்தோல்வியில் இருந்தால் இவன் “நானும்தான் ஏமாறிவிட்டேன்” என்று தேவகியின் கதையையே மாற்றிச் சொல்லுவான். புல் ஷிட். பாலியல் வல்லுறவு கடினவலு என்றால் புத்திசாலித்தனமாக ஏமாற்றுவது என்பாத்து மென்வலு. இரண்டுமே ஏமாற்றுத்தான். இரண்டாவது இன்னமும் ஆபத்தானது. ஏமாறுகிறோம் என்பதுகூட இங்கே ஏமாளிக்குத் தெரிவதேயில்லை. சுதர்சனை விடப்போவதில்லை. எழுதும்போது தேவகிக்குக் கோபத்தில் கைகள் படபடத்தன. என்ன ஆனாலும் பரவாயில்லை. உன்னைச் சந்தி சிரிக்க வைக்காவிட்டால் என் பெயர் தேவகி தேவராஜ் கிடையாது நாயே.
தேவகி சிறுகதையை நிறுத்திவிட்டு முகநூலைத் திறந்து பதிவு ஒன்றை எழுத ஆரம்பித்தாள்.
தேவகி எழுதிய முகநூல் பதிவின் இணைப்பு.
– AUG 24, 2016 (நன்றி: புதிய சொல்)