கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 4,075 
 
 

வாசலில் மணி அடிப்பது கேட்டதும் தரையில் படுத்திருந்த முகுந்தன் சட்டென்று எழுந்து கொண்டான்.

கலைத்து. அவிழ்ந்திருந்த லுங்கியைச் சரி செய்து கொண்டான்.

வலது கை விரல்களால் தலைமுடியை வாரி விட்டுக் கொண்டான். கதவைத் திறந்தான் முருந்தன்.

எதிரே, வெளியே தாஸ் நின்று கொண்டிருந்தான் புன்முறுவலுடன்.

அவனுக்குப் பின்புறம் சற்று இடைவெளி விட்டு பக்கத்து வீட்டு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் புன்முறுவல் எதுவும் இல்லை.

“வா தாஸ்”

முகுந்தன் அழைத்தான் மெல்லிய குரலில்.

தாஸ் முகுந்தனைக் கடந்து உள்ளே சென்று பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

தனது வலது காலைத் தூக்கி இடது காலின் மீது போட்டுக் கொண்டான்.

“நீயும் உள்ளே வாயேன்!”

வாசலில் தயக்கத்துடன் நின்றிருந்த இளைஞனை முகுந்தன் கூப்பிட்டான்.

“தாங்க்ஸ்” இளைஞன் கூறிக் கொண்டே உள்ளே வந்து தாஸ் அருகில் இருந்த இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

“எப்படி இருக்கே தாஸ்?”

முகுந்தன் கேட்டான்.

“இருக்கேன் சார்…போராட்டம் தான்…நீங்க எப்படி இருக்கிங்க முகுந்தன் சார்?”

தாஸ் கனிவுடன் கேட்டான்.

“நல்ல வெயில்லே வந்திருக்கீங்க….தண்ணி வேணுமா?”

கேட்டுக் கொண்டே சமையல் அறைக்குள் போய் இரண்டு தம்ளர்களில் தண்ணீர் கொண்டு வந்து ஒன்றை தாஸிடம் நீட்டினான்.

தாஸ் அதை வாங்கி ஒரே மடக்கில் குடித்து விட்டு எதிரே டீயாய் மீது காலி தம்ளரை வைத்தான்.

“ஒனக்கு?”

கேட்டுக் கொண்டே பக்கத்து வீட்டு இளைஞனிடம் இன்னொரு தம்ளரை நீட்டினான் முகுந்தன்.

“நோ…தாங்க்ஸ்…எனக்கு தாகமா இல்லே. நான் உங்க பக்கத்து வீட்டுலேயிருந்து தானே இப்ப வரேன்…தாஸ் என்னோட நண்பன்…கோயமுத்தூர்லே நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ்லே படிச்சோம்…”

இளைஞன் நிறுத்தி நிதானமாக முகுந்தனின் முகத்தைப் பார்த்தவாறு கூறினான்.

“உங்களைப் பார்க்க…..உங்க அட்ரஸைத் தேடிக்கிட்டு முதல்லே என் வீட்டுக்கு வந்தான். ரொம்ப நாளுக்கப்புறம் நானும் இவனும் சந்திக்கிறோம்…நீங்க என் பக்கத்து வீட்டுக்காரானு இவன்கிட்டே சொன்னதும் இவனுக்கு ரொம்ப சந்தோஷமாயிடுத்து சார்!”

இளைஞன் முகுந்தனையும் தாஸையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் பேசினான்.

முகுந்தன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

தாஸுக்கும் ஒன்றைக் கொடுத்துப் பற்ற வைத்தான்.

தாஸ் அழுத்தமாக புகையை உள்ளே இழுத்து வெளியே விட்டான்.

“நான் இவரோட பக்கத்து வீட்டுக்காரங்கிறதுல ஒனக்கு அப்படியென்ன சந்தோஷம் தாஸ்?”

முகுந்தன் தாஸிடம் கேட்டான்.

“என்ன சார்…இருக்காதா பின்னே? வழக்கமா வம்பு பேசற மிடில் கிளாஸ் கும்பல்தான் நம்மைச் சுத்தி இருக்காங்க…இவனோட பக்கத்து வீட்டுக்காரரா நீங்க இருக்கீங்கன்னா எனக்குச் சந்தோஷமா இருக்காதா?”

தாஸ் மீண்டும் சிகரெட்டை அழுத்தமாக உறிஞ்சினான்.

“உன் பேர் என்ன?”

இளைஞனிடம் முகுந்தன் கேட்டான்.

“சுபாஷ்”

அவனின் பெயர் முகுந்தனுக்குப் பிடித்திருந்தது.

“நான் கிளம்பறேன்… நீங்க பேசுங்க”

சுபாஷ் எழுந்து கொண்டான்.

முகுந்தனுக்கு சுபாஷின் நாகரிகம் பிடித்திருந்தது.

“போறச்சே வீட்டுக்கு வந்துட்டுப் போடா தாஸ்…நான் வரேன் சார்!”

கூறிவிட்டு சுபாஷ் வெளியேறினான்.

சற்று நேரம் முகுந்தனும் தாஸும் தங்கள் சிகரெட்டைப் புகைத்த படி மௌனமாக இருந்தனர்.

“ஒன் முயற்சி எப்படி இருக்கு தாஸ்?”

முகுந்தன் கேட்டான். “ஒங்கள மாதிரி பெரிய அளவுல ஒண்ணும் செய்ய முடியலே சார். ரெண்டு மூணு துண்டுப் படங்கள் – அதான்…ஷார்ட் ஃபிலிம்ஸ் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்” தாஸ் கூறினான். “துண்டுப் படங்களை எடுத்து என்ன செய்யப் போறே தாஸ்?”

“இது நான் என் தோழர்களோட நடத்தற ஒரு இயக்கம். முதல்லே துண்டுப் படங்க எடுத்து ஊர் ஊரா, கிராமம் கிராமமா எடுத்துக்கிட்டுப் போய் இலவசமா ஜனங்களுக்குப் போட்டுக் காட்டி முதல்லே அவங்க மத்தியில ஒரு விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணலாங்கிறது என்னோட நோக்கம்!”

முகுந்தன் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

“ஜனங்களோட ரசனை இதனால மாறிடும்னு நீ நம்பறீயா?”

முகுந்தன் கேட்டான்.

“ஏன் கேக்கறீங்க முகுந்தன் சார்?”

“இல்லே…தினம் காலையிலிருந்து ராத்திரிவரை டி.வி.யில ஜனங்களோட ரசனையை மழுங்கடிக்கிற வேலை நடந்துக்கிட்டு இருக்கே…அதான் கேட்டேன்”

“நம்பிக்கை இன்னும் இருக்கு சார். ஆமாம். நீங்க ஏதாவது புதுசா…முயற்சி?”

தாஸ் தயக்கத்துடன் கேட்டான்.

“மூணு வருஷமாயிடுச்சு…மழைத்துளி படத்துக்கப்புறம் இன்னும் ஒண்ணும் சரியா அமையலே…அமையுங்கிற நம்பிக்கை அடியோட போய் இப்போ மனசுக்குள்ளே ஒருவித பயம் வந்துடுத்து தாஸ்!”

“பயமா? ஒங்களுக்கா சார்?”

தாஸ் சற்று படபடப்புடன் கேட் டான்.

“ஆமாம் தாஸ். வாழ்க்கை ரொம்பப் பிரச்சினையா ஆயிடுத்து… பொண்ணு வளர்ந்துக்கிட்டு வரா…பையன் பெரிய கிளாஸ் போக ஆரம்பிச்சுட்டான். பொண்டாட்டி சம்பளத்துல வாழ்க்கை நகர்ந்துக்கிட்டு இருக்கு… அவ சம்பளம் போற மாட்டேங்குது. மாசம் செலவுகள்ளே துண்டு விழுந்தா நான் அங்கே இங்கேன்னு அலைஞ்சு பொறட்டி சமாளிக்க வேண்டியிருக்கு. இது எத்தனை மாசத்துக்கு…இல்லே வருசத்துக்கு நடக்கும்னு நினைக்கறச்சே மனசுக்குள்ளே சதா ஒரு பயம்…போதாக் குறைக்கு அக்கம் பக்கத்துல இருக்கறவங்களோட பேச்சுக்கள் வேற!”

முகுந்தன் நீளமாகப் பேசினான். சிகரெட்டைப் புகைத்தான்.

தாஸ் சற்று நேரம் மௌமாக இருந்தான்.

“நம்மப் போல வித்தியாசமா இருக்கறவங்களுக்கு இது சகஜம் தானே சார்!”

“சகஜம்தான்…ஆனா….என் பொண்ணு கிட்டேயே ‘உங்கப்பா என்ன வீட்டுல தூங்கிட்டு இருக்காரா’ன்னு எதிர்வீட்டுக்காரன் கேக்கறச்ச அந்தச் சின்னப் பொண்ணு மனசுல என்னப் பத்தி என்ன அபிப்ராயம் உருவாகும்னு நினைச்சா ரொம்பக் கவலையா இருக்கு தாஸ். அதனால நான் இப்ப ஒரு முடிவுக்கு வந்துட்டேன் தாஸ்”

முகுந்தன் கூறிவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

“என்ன சார் முடிவு?” தாஸ் கேட்டான்.

“பேசாம ஏதாவது வேலைக்குப் போயிடலாங்கற முடிவுதான்!”

தாஸ் எதிரேயிருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.

“வேண்டாம் சார்.. நீங்களே இப்படி தளர்ந்து போய் வேலைக்குப் போயிட்டா…என்ன மாதிரி புது ஆட்களுக்கு யார் சார் ஊக்கம் தருவாங்க?…இந்தத் துறையிலே நீங்க தான் சார் எங்களுக்கு முன்னோடி”

தாஸ் கெஞ்சும் குரலில் பேசினான்.

“கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு…முன்னோடி…எவ்வளவு பெரிய வார்த்தை. ஆனா யதார்த்தமா பார்த்தா உங்களை மாதிரி இளைஞர்கள் எப்பவோ ஆறு மாசத்துக்கு ஒரு தரம்…இல்லே வருஷத்துக்கு ஒரு தரம் என்னை வந்து பார்த்துட்டு…’நீங்கதான் எனக்கு முன்னோடி’ன்னு சொல்றீங்க…ஆனா இங்கே தினம் தினம் என் வீட்டைச் சுத்தி இருக்கிறவங்க நான் வெறுமனே இருக்கறதைப் பத்தி பேசறதை என் பையன் மூலமாகவும் பொண்ணு மூலமாவும் கேக்கும் போது மனசு எவ்வளவு காயப்பட்டுப் போறது தெரியுமா தாஸ்? அதான் ஏதாவது வேலைக்குப் போயிடலாம்னு!”

தாஸ் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். அவன் என்னவோ யோசிக்கிறான் என்பதை முகுந்தன் புரிந்து கொண்டான்.

“என்ன தாஸ்…நான் சொன்னது?”

முருத்தன் அவன் மௌனத்தைக் கலைக்கக் கேட்டான்.

‘ஒங்க மனசு…ஒங்க வருத்தம் எனக்கு நல்லாவே புரியுது சார். ஆனாலும் நீங்க இப்படிச் சோர்ந்து போயிருக்கறதுதான் எனக்குப் புடிக்கலே….இப்ப என்ன இங்க அழைச்சுகிட்டு வந்து விட்டுட்டுப் போனானே…என் நண்பன்…உங்க பக்கத்து வீட்டுக்காரர் பிள்ளை…”

“ஆமாம்…சுபாஷ்”

“அவனை தினம் சாயங்காலம் ஒங்களோட கொஞ்ச தேரம் பேசச் சொல்லிட்டுப் போறேன்…அவன் சராசரிக்கும் மேல யோசிக்கிறவன். நல்ல விஷயங்களை ரசிக்கத் தெரிஞ்சவன். அவன் கூட நீங்க பேசிக்கிட்டிருந்தா இந்தச் சோர்வு உங்களை விட்டுப் போயிடும்…மறுபடியும் நீங்க புது முயற்சியில் ஈடுபட அவனோட நட்பு உங்களுக்கு உதவியா இருக்கும். வேலைக்கே போயிடலாம்னு தீர்மானம் பண்ணியிருக்கிற உங்க எண்ணத்தை அவன் பேச்சு அடியோட மாத்திடும் சார்!”

தாஸ் சற்று உற்சாகமாகக் கூறினான்.

“சுபாஷ் வயசுல என்னைவிடச் சின்னவன் தாஸ்!”

முகுந்தன் தயக்கத்துடன் கூறினான்.

“இருக்கட்டுமே சார்! அறிவுபூர்வமா பேசறதுக்கு வயசு ஒரு காரணமா சார்?.”

“அது இல்லே தாஸ்! என்னை விட வயசுல ரொம்பச் சின்னவனோட தினம் பழகிட்டுப் பேசிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்து அதையும் கிண்டலா பக்கத்து வீட்டுக்காரங்க பேசினா?”

“ஏன் சார் மத்தவங்களைப் பத்தி இவ்வளவு கவலைப்படறீங்க?”

தாஸ் தன் குரலைச் சற்று உயர்த்திக் கூறினான்.

“சரி, மத்தவங்க இருக்கட்டும்…என் வீட்டுலேயே!”

“நட்புக்கு வயசு ஒரு காரணமில்லேன்னு சொல்லுங்க சார்!”

முகுந்தன் லேசாகச் சிரித்தான்.

“சுபாஷ் என்ன செய்துக்கிட்டு இருக்கான் தாஸ்?”

“வேலை தேடற ஒரு பட்டதாரி இளைஞன்”.

“அப்புறம்?”

“கோயமுத்தூர்லே என்னோட காலேஜ்லே படிச்சான். அவன் பாஸ்…. தான் ஃபெயில். அவன் அப்பா இப்பத்தான் ரிடையர் ஆனார். ரொம்ப சமீபத்துலதான் உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்திருக்காங்க. அவன் கூடப் பொறந்த அக்கா திருச்சியில புருஷனோட இருக்காங்க. என் மேல அவங்க எல்லோருக்குமே பிரியம் உண்டு. காரணம், நான் கொஞ்சம் வித்தியாசமானவங்கறதனால. இனிமே, உங்களையும் என்னை மாதிரி நடத்துவாங்க”

“அப்புறம்?”

“மிடில் கிளாஸ்தான். ஆனாலும் எல்லாரையும் மதிக்கத் தெரிஞ்ச குடும்பம். சுபாஷ் குடும்பம்”

“அப்புறம்?”

“தம்மை மாதிரி ஏதாவது வித்தியாசமாப் பண்ணுறவங்களை ரொம்ப மரியாதையோட பார்க்கத் தெரிஞ்சவன் சுபாஷ்”

“சரி!”

***

சுபாஷ் முகுந்தனுக்குப் புது நண்பனாக ஆனான்.

தினம் மாலை ஐந்து மணிக்குச் சரியாக முகுந்தன் வீட்டுக்கு வந்து விடுவான் சுபாஷ்.

“முகுந்தன் சார்…வாக் போகலாமா?”

இருவரும் அருகே இருந்த பூங்காவிற்குள் போய் புல்தரையில் அமர்ந்து கொண்டனர்.

முகுந்தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

“ஒரு நாளைக்கு எவ்வளவு பிடிப்பீங்க முகுந்தன் சார்?”

“எட்டு சிகரெட். அதுக்கு மேல தாங்க முடியறதில்லே!”

முகுந்தன் கூறிவிட்டு சிகரெட் பாக்கெட்டை அவன் முன்னே நீட்டினான்.

“சார்..நான் ஒங்க முன்னாடி…சிகரெட்…”

வெகுவாகத் தயங்கினான் சுபாஷ்.

“பரவாயில்லே. பழக்கம் இருந்தா பிடியேன்…”

“அது இல்லே. நான் ஒங்களை விட வயசுல ரொம்பச் சின்னவன்…”

முகுந்தன் புன்னகைத்துக் கொண்டே சிரித்தான்.

“மரியாதை இந்த சிகரெட்டுலே இல்லே. மனசுல இருக்கணும்…இந்தா பிடி”

சுபாஷ் மிகுந்த தயக்கத்துடன் சிகரெட்டை எடுத்துக் கொண்டான், முகுந்தன் குச்சியை உரசி அவன் சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

“தாங்க்ஸ் சார்!”

“பரவாயில்லே!”

“ஏன் சார். மழைத்துளி படத்துக்கு அப்புறம் நீங்க ஏன் இன்னொண்ணு செய்யலே…அது ரொம்ப நல்ல படமாச்சே!”

ஆர்வத்துடன் கேட்டான் சுபாஷ்.

“நல்ல படம் எடுத்தேன் இல்லே…அதான் வாய்ப்பு வரலே…யாரும் தரலே!”

முகுந்தன் வாய் விட்டுச் சிரித்தான்.

“இவ்வளவு நல்ல படம் எடுத்த ஒங்களுக்கா மறுபடியும் யாரும் வாய்ப்புத் தரலே சார்?”

புரியாமல் கேட்டான் சுபாஷ்.

“நீ பாத்தியா அந்தப் படத்தை?”

“கோயம்புத்தூர்லே காஸட் வாங்கிப் பார்த்தேன் சார்!”

“அப்படியா…படம் என்ன சொல்றது?”

முகுந்தன். சுபாஷைக் கேட்க அவன் பதில் சொல்ல முடியாமல் சில வினாடிகள் வெறுமனே இருந்தான்.

“உலகில் நாம் காணும் சுகம் துக்கம் எல்லாமே நாம் பார்க்கும் விதத்தைப் பொறுத்துத்தான் அமைகிறது!”

சுபாஷ் முகுந்தனிடம் தனக்குப் புரிந்த விஷயத்தைச் சொன்னான்.

“பிரமாதம். நிறையப் பேருக்கு…ஏன் சில விமரிசகர்களுக்குக் கூட படத்தோட கரு என்ன சொல்றதுன்னு புரியலே!”

முகுந்தன் தன் எதிரே அடக்கமாக அமர்ந்திருக்கும் சுபாஷ் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்தான்.

“நான் சொன்னது படத்துல சூட்சமமா இருக்கு சார்!”

“வெரி குட்! ஒன்னோட சில மணி நேரங்கள் பேசிக்கிட்டு இருக்கும் போது எனக்குள்ளே மறுபடியும் புது உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்படறது சுபாஷ். நல்ல விஷயங்கள் ஒட்டு மொத்தமா எல்லோருக்குமே புரியாமப் போயிடறதில்லேங்கிற நிறைவு ஒன்னைப் பாக்கும் போது எனக்கு ஏற்படறது!”

முகுந்தன் உணர்ச்சி வயப்பட்டு பேசினான். கண்கள் ஈரத்தை வெளிப்படுத்தின. சுபாஷ் சற்று கலவரமடைத்து முகுந்தனைப் பார்த்தான்.

“ஏன் சார் இவ்வளவு எமோஷனலா இருக்கீங்க?”

“என் பொண்ணு பவானிக்கு இப்ப வயசு என்ன இருக்கும்னு நெனைக்கிறே?”

மேலும் சற்று உணர்ச்சி பொங்கக் கேட்டான் முகுந்தன்.

“சொல்லுங்க சார்!”

“பன்னிரண்டு வயசு. இந்த வயசுலதான் எல்லாத்தையும் புரிஞ்சுக்க ஆரம்பிக்கிறோம் நாம”

“ஆமாம் சார்!”

சுபாஷ் ஆமோதித்தான்.

“அந்தப் பன்னிரண்டு வயசுப் பொண்ணுகிட்டே எதிர் வீட்டு வெங்கட்ராமன்…”

வார்த்தைகளை முடிக்க முடியாமல் தொண்டைக் குழியில் இம்சை ஏற்பட்டது முகுந்தனுக்கு.

“எதிர்வீட்டு வெங்கட்ராமன் என்ன கேட்டான் சார்?”

பதட்டத்துடன் கேட்டான் சுபாஷ்.

“‘ஒங்க அப்பா என்ன வீட்டுக்குள்ளே தினம் தூங்கிக்கிட்டு இருக்காரா?’ ஒரு தரம் இல்லே சுபாஷ்…அவளைப் பாக்கறச்சேயெல்லாம் கேட்டிருக்கார்!”

முகுந்தன் புகையை இழுத்து நெஞ்சுக்குள் சில வினாடிகள் தக்க வைத்துக் கொண்டான்.

சுபாஷ் தன் எதிரே ஒரு படைப்பானி உணர்ச்சிபூர்வமாக இம்சைப் படுவதைப் பார்த்து மனசுக்குள் கலங்கினான்.

“ஸ்…. வீட்டுல அப்பா ஒரு நெகடிவ் ஃபோர்ஸ் அப்படீங்கற எண்ணம் குழந்தைகள் மனசுக்குள்ளே வரக் கூடாது…”

சுபாஷ் கூறினான்.

“பிள்ளைகளுக்கு அப்பா மேல மரியாதை இல்லாமப் போயிடும். இது ரொம்ப ஆபத்தானது. அதனாலதான். என் முயற்சிகளை நிறுத்திட்டு ஏதாவது மறுபடியும் ஒரு வேலைக்கே போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”

தீர்மானமாகக் கூறினான் முகுந்தன்.

“வேலைக்கா?…மறுபடியுமா?…நீங்களா சார்?”

ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டான் சுபாஷ்.

“ஆமாம். இப்படி நீ கேக்கற மாதிரிதான் அன்னிக்கு தாஸும் கேட்டான்.”

“நீங்க அவனுக்கு என்ன சொன்னீங்க சார்?”

“வேற வழியில்லே தாஸுன்னு சொன்னேன். உடனே அவன், ஒன்னோட தினம் நான் கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டிருந்தா என் மனசுக்குள்ளே புதுத் தெம்பும் வைராக்கியமும் வந்துடும்னு சொல்லிட்டுப் போறான்!”

முகுந்தன் சுபாஷின் முகத்தை உன்னிப்பாகக் கவனித்தான்.

“சுபாஷ்!”

“என்ன சார்?”

“நீ எந்த மாதிரி வேலைக்கெல்லாம் முயற்சி பண்றே இப்ப?”

“ரொம்பப் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் எனக்குக் கிடையாது சார். நான் ஒரு பி.எஸ்.சி. பட்டதாரி. எனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைச்சா நான் திருப்தி அடைஞ்சிடுவேன்”.

மறுபடியும் முகுந்தன் அவனின் முகத்தைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

“ஏன், அரசாங்க வேலை போதுங்கறே?”

முகுந்தன் தன் சிகரெட்டைத் தரையில் தேய்த்து அணைத்தான்.

“அரசாங்க வேலைதான் என்னிக்குமே பாதுகாப்பானது சார்!”

முகுந்தனைப் பார்த்து புன்முறுவல் செய்தான் சுபாஷ்.

முகுந்தன் மௌனமாக அவனைப் பார்த்தான்.

“ஆமாம் சார். மனுவனுக்கு இந்தப் பாதுகாப்பு உணர்ச்சி ரொம்ப அவசியமானது சார். அதுவுமில்லாம யாரும் அளவுக்கு அதிகமா கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது சார். கஷ்டமில்லாத வாழ்க்கை கிடையாதுதான். ஆனா கஷ்டமே வாழ்க்கையா மாறிடக் கூடாது சார்”

சுபாஷ் சிறிது நேரம் வெறுமனே இருந்தான். புகைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் முகுந்தனிடம் இன்னொரு சிகரெட் வேண்டும் என்று எப்படிக் கேட்பது என்ற தயக்கத்தினால் தன் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“அப்போ தல்ல விஷயங்களை யார் செய்யறது இங்கே?”

வேண்டுமென்றே கேட்டான் முகுந்தன்.

“தியாகத்துக்கும் ஒரு அளவு இல்லையா சார்? நம்மளையும் நம்ம கூட அண்டி இருக்கறவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டாவது நல்லது செய்தே ஆகணுமா சார்?”

“ஆனா தாஸுக்கு என்னோட இந்த முடிவு புடிக்கலியே சுபாஷ்!”

முருந்தன் கூறிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

“நீங்க வேலைக்குப் போயிடலாம்னு எடுத்திருக்கிற முடிவு தாஸுக்கு ஏன் பிடிக்கலையாம்?”

“நான் அவங்களுக்கெல்லாம் வழிகாட்டியாம். இல்லே…இல்லே…முன்னோடியாம்…நான் ஒதுங்கிப் போறதுலே அவனுக்கு உடன்பாடில்லையாம்?”

முகுந்தன் சிகரெட்டை சுவாரஸ்யமாகப் புகைப்பதாக சுபாஷ் நினைத்தான். தனக்கும் உடனே புகைக்க வேண்டும் என்று தோன்றியது.

“சார் நீங்க தப்பா நெனைச்சுக்க லேன்னா…”

“கேளு சுபாஷ்!”

“ஒரு சிகரெட் வேணும் சார்!”

“ஓ!…ஐம் சாரி சுபாஷ்!… இதுதான் என் எட்டாவது சிகரெட் இன்னி ரேஷன் இவ்வளவுதான்”

இருவரும் புல் தரையிலிருந்து எழுத்து கொண்டார்கள். பூங்காவை விட்டு வெளியேறி தெருவில் நடந்தார்கள்.

“சார் ஒரு நிமிஷம்!”

சுபாஷ் முகுந்தனிடம் கூறிவிட்டு எதிரே இருந்த பெட்டிக் கடைக்குப் போய் ஒரு பாக்கெட் சிகரெட்டை வாங்கி வந்து அவனிடம் நீட்டினான்.

“எதுக்கு இதெல்லாம் சுபாஷ்?”

மிகுந்த தயக்கத்துடன் முகுந்தனின் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி பேசினான் சுபாஷ்.

“சிகரெட் ஒங்களுக்குத்தான்….முகுந்தன் சார்..நீங்க வேலைக்குப் போயிடலாம்னு எடுத்திருக்கிற முடிவுதான் எனக்குப் புடிச்சிருக்கு. தாஸ் மாதிரியானவங்களுக்கு நீங்க என்னிக்குமே முன்னோடிதான். நீங்க போட்டிருக்கிற பாதையில அவங்க இனிமே நடக்கட்டுமே! ‘இங்கே நல்ல விஷயங்களை யார் செய்யற துங்கற ஒங்க கேள்விக்கு என்னோட பதில் இதுதான் சார்!’. வாங்க…லேட்டாறது…உங்க பொண்டாட்டியும், பிள்ளைகளும் ஒங்களுக்காகக் காத்துக்கிட்டு இருப்பாங்க…”

சுபாஷின் நடையில் சற்று வேகம் கூடியது.

‘நான் தாஸ் போன்றவர்களுக்கு ‘முன்னோடி’யா. இல்லை என் போன்றவர்களுக்கு சுபாஷ் போன்றவன் முன்னோடியா?’ என்று யோசித்தபடி நடத்தான் முகுந்தன்.

பக்கத்தில் வரும் சுபாஷைப் பார்த்தான்.

சுபாஷ் அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான்.

அந்தப் புன்முறுவலில் மிகுந்த நட்பு வெளிப்படுவதாக முகுந்தன் நினைத்துக் கொண்டான்.

– ஜனவரி 1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *