முன்னேற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 14,984 
 
 

அது ஒரு அரசு பள்ளி. மாணவர்களின் படிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

அந்த பகுதியை சுற்றியுள்ள பல ஊர் மாணவர்களுக்கு அது தான் ஒரே பள்ளி.

பெருமாளும், முருகனும் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர் . அவர்களுக்கு அன்று அது கடைசி வகுப்பு. விளையாட்டு வகுப்பு.

இருவர் மட்டும் தனியாக விளையாடி கொண்டிருந்தனர். மற்ற மாணவர்கள் அனைவரும் கை பந்து விளையாடி கொண்டிருந்தனர்.

முருகன் சற்று உயரம் குறைவு. பெருமாள் நல்ல உயரம். கைபந்து விளையாட இரு அணியாக பிரித்தபோது பெருமாளை மட்டும் சேர்த்தனர். உயரம் குறைவு என்பதால் முருகனை சேர்க்கவில்லை. ஆனால் பெருமாள், முருகனை சேர்க்காததால் தானும் விளையாடவில்லை. அதனால் இருவரும் தனியாக விளையாடினர். என்ன விளையாட்டு என்று தெரியவில்லை. ஆனால் மிகமிக மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களின் மகிழ்ச்சி அந்த பள்ளிகூடத்தையே நிறைத்தது.

மணியடித்தது. கடைசி மணியானதால் நீண்ட நேரம் அடித்தார்கள்.

மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு போகும் உற்சாகத்துடன் புத்தக பையை தூக்கிக்கொண்டு பள்ளியை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

பெருமாள், முருகன் இருவரும் வீட்டுக்கு கிளம்பினர். அப்போதும் அவர்கள் ஆட்டம் குறையவில்லை.

ஏதேதோ விளையாடியபடியே சென்றனர்.

இப்போது இவர்கள் ஊர் தென்பட்டது.

ஊரே அங்கு கூடியிருந்தது. மண்ணாங்கட்டியின் குடும்பம் கைகட்டி நின்றிருந்தது. மக்கள் இரு பிரிவாக தங்களுக்குள் பேசியபடியே நின்றிருந்தனர்.

ஊர் பெரிசுகள் அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த நீண்ட மர இருக்கையில் அமர்ந்திருந்தனர்

அவர்களில் ஒருவர் பேசினார். அவருக்கு நடுத்தர வயது. ஆனால் அவர் பேச ஆரம்பித்தவுடன் அனைவரும் அமைதி ஆகிவிட்டனர்.

இந்த ஊர்ல இது மாதிரி ஒன்னு நடந்தது இல்ல. தாயும் புள்ளையும் ஒன்னுனாலும் வாயும், வயிறும் வேறனு சொல்வாங்க. இந்த ஊர்ல எல்லா சாதிக்காரங்களும் ஒண்ணா சண்டையில்லாம இதுநாள் வரைக்கும் வாழ்ந்துட்டு வறோம். எப்படி? அவங்கவங்க பழக்க வழக்கம் அவங்கவகளுக்கு. ஒருத்தர் மத்தவங்களோட வழக்கத்துல தலையிடக்கூடாது, அப்படிங்கற ஊர்க்கட்டுபாட்டுக்கு அடங்கி நடந்ததாலதான்.

மண்ணாங்கட்டி அத மீறிட்டான். இந்த ஊர்ல அவங்களுக்குன்னு இருக்குற காலனிகாரங்களோட கிணத்துல தண்ணீ எடுக்காம, ஊர்காரங்களோட கிணத்துல தண்ணீ எடுத்திருக்கான். கேட்டா காலனி கிணத்துல தண்ணீ இல்லன்னு சொல்றான். அதை எப்படி ஏத்துக்க முடியும்?. இப்படியே ஒவ்வோர் கட்டுப்பாடா மீறிட்டே இருந்தா, சாதி சண்டையால ஊரே நாசமா போக வேண்டியது தான். அதனால

மண்ணாங்கட்டி குடும்பத்த இந்த ஊற விட்டே ஒதுக்கி வெக்கிறேன்.

முருகனின் அப்பா மண்ணாங்கட்டி எவ்வளவோ மன்றாடியும், ஊர் பெரியவரான பெருமாளின் தந்தை. தன் தீர்ப்பை மாற்றவில்லை.

கலைந்து சென்ற ஊர் மக்களில் சிலர் இப்படியே ஒவ்வொருத்தரா தள்ளி வெச்சா ஊர்ல எவனுமே மிஞ்ச மாட்டான், என்று முணுமுணுத்தனர்.

சிவந்திருந்த வானம் இப்போது நீல வானமாக மாறியது.

நிறுத்துங்க. என்றவுடன் கார் நின்றது. கீழே இறங்கிய முருகனுக்கு இது தானா அந்த இடம் என்று சந்தேகமாக இருந்தது. வண்டியோட்டியிடம் விசாரிக்க சொன்னான். இல்லை சொன்னார். ஆம் இப்போது முருகன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்தாலே பெரிய படிப்பு படித்தவன், நல்ல வேளையில் இருப்பவன் போல் தெரிந்தது.

வண்டியோட்டி விசாரித்தபோது “ஊர அழிச்சி உல்லாசபுரி கட்றாங்களே அத்தானே, கொஞ்சதூரம் முன்னால போனா எடது பக்கம் ஒரு புது ரோடு போட்டிருக்கும். அதுல போனா வந்துரும். என்றார் டீக்கடையில் நின்ற ஒருவர்.

அவர்கள் சொன்ன பாதையில் போனபோது சற்று நேரத்தில் பெரிய கட்டிடங்களுடன் அந்த இடம் தெரிந்தது. முருகனுக்கு நடக்க வேண்டும் போல் இருந்தது. வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி கொண்டு காரை முன்னால் போக சொல்லிவிட்டு நடந்தான்.

நாம்ம ஊரா இப்படி மாறிவிட்டது. ஊர்காரர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தான். யாருமில்லை. எப்படி இருப்பார்கள்? special economic zone -என்று அந்த பகுதியின் பத்து ஊர்களுக்கு மேல் சேர்த்து மாற்றிவிட்டனர். முருகனின் ஊரில் தான் நுழைவாயில் அமைத்திருந்தது.

நில்லுங்க. என்று ஒரு குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்த முருகன் நின்றான்.

ஒரு பெரியவர் காவலாளி உடையில் நின்றிருந்தார். இதுக்கப்புறம் நீங்க போக முடியாது. இது தனியார் எடம், என்றார்.

அவரை சற்று நேரம் பார்த்துவிட்டு,

அந்த இடத்துக்கு தான் நானும் போகணும். எனக்கும் அங்க ஒரு பிசினஸ் ஆபீஸ் இருக்கு. என்றான் முருகன்.

இதை கேட்ட அந்த பெரியவர், நான் உங்கள பாத்தப்போவே நெனச்சேன். மன்னிச்சிகோங்க சார். இந்த எடத்துக்கு வர்ற யாரும் நடந்து வர மாட்டாங்க. அதனால தான் நிறுத்தினேன். சற்று துரத்தில் தெரிந்த நுழைவு வாயிலை காட்டி, அங்க போனீங்கன்னா செக்யூரிட்டி ஆபிஸ்ல உங்க அடையாள அட்டை கேப்பாங்க, காட்டிட்டு நீங்க போலாம். என்று பவ்யமாக கூறினார்.

முருகன் நன்றி கூறிவிட்டு, வாயிலை நோக்கி நடந்தான். அவனுக்கு அந்த பெரியவரை எங்கோ பார்த்த ஞாபகம். ஒருமுறை திரும்பி அவரை மிண்டும் பார்த்தான். அவரும் இவனை எதோ சிந்தனையுடன் பார்த்துகொண்டிருந்தார்.

முருகனுக்கு ஞாபகம் வந்தது. அவர் பெருமாளின் தந்தை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *