முத்துலட்சுமியின் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 8,780 
 

டொங்.. டொங் என பள்ளிக்கூட சாப்பாட்டு இடைவேளையின் மணியோசை காதில் விழ தன் குடிசையின் மூலையில் இருக்கும் அலுமினிய தட்டை தூக்கி கொண்டு ஓட்டமாய் ஓடினாள் முத்துலட்சுமி. அவளது கால்கள் சக்கராமாய் சுழன்றது அவ்வளவு வேகம், வயதுக்கு மீறிய வேகம், எல்லாமே பசி என்ற அரக்கன் படுத்தும் பாடு. வழியெங்கும் வெயில் நிறைந்திருந்தது, வீட்டில் காய்ச்சலோடு படுத்து கொண்டிருக்கும் தம்பியின் நினைவுகள் மனதில் எழுந்து வந்தது. முதல் ஆளாக ஓடி வந்து வரிசயில் நின்றாள்.

எங்கே தன்னை சரஸ்வதி டீச்சர் பார்த்துவிடுவார்களோ என பயந்து கொண்டே நின்றிருந்தாள், போன முறையே பள்ளிக்கு வராம சாப்பாட்டு டயத்துக்கு மட்டும் வந்து சாப்பாடு வாங்கிட்டு போற என சரஸ்வதி டீச்சர் திட்டின வார்த்தைகள் முத்துலட்சுமியின் மனதில் எழுந்து நின்றது

யே கருவாச்சி பள்ளி கூடத்துக்கு வராம ஏண்டி திங்க மட்டும் வர்ற, சொறி நாயே உனக்கெல்லாம் எதுக்கு படிப்பு மூதேவி என தனக்கு தெரிந்த வார்த்தை அம்புகள் எல்லாவற்றையும் அந்த பிஞ்சு உள்ளத்தில், பஞ்சு உள்ளத்தில், நஞ்சுகளாய் தொடுத்தால் சரஸ்வதி டீச்சர்.

சோறு ஆக்கி போடும் ராமி மட்டும் ஆமா நீங்க சொல்லித்தர லட்சனம்ந்தான் தெரியாதாக்கும், புள்ளைகளுக்கு சொல்லி கொடுக்குறதுக்கு கவர்மென்ட் காசு கொடுத்தா, கால் அமுக்கி விடவும், கடைக்கு போயிட்டு வரவும், தான் பெத்ததுகளுக்கு தாலாட்டு பாடவும் சொல்லி கொடுக்குற உங்களுக்கு.. பேச்ச பாரு,.. மொகரையை பாரு என தன் மனதிலேயே திட்டி கொண்டாள் ராமி.

ராமி நல்லவள் இரக்கமானவள். பணக்கார குழந்தைங்க எல்லாம் இங்கிலீசுல படிக்குதுக ஏழைங்கதான் இங்க வந்து படிக்கிறாக, அதுகளுக்கு சோறாக்கி போடுற பாக்கியம் குடுத்தது மனசு நெறஞ்சு இருக்கு சாமி என பள்ளி கூடத்துக்கு அருகில் இருக்கும் ஆலமர புள்ளையாரிடம் வேண்டி கொள்வாள் ராமி.

முத்துலட்சுமிக்கு இந்த ஆலமரம்தான் ஆத்மார்த்தமான நண்பன். மரத்தின் விழுதுகளில் தொங்கி ஆடுவாள். புள்ளையாரின் ஆணை தந்தத்தை பிடித்து இழுப்பாள். மைனாக்களோடு பேசுவாள்., அவள் செய்கைகளை பார்த்து சத்துணவு கூடத்தில் இருந்தே ரசித்து மகிழ்வாள் ராமி.

சோறாக்கி முடித்ததும் ராமி கொஞ்சம் சோறை எடுத்து ஓடு வேய்ந்த சத்துணவு கூடத்தின் மேல் தூக்கி போடுவதை தொடர்ந்து செய்து வந்தாள்.. பாவம் வாயில்லா ஜீவனுங்க சாப்டுட்டு போகட்டும் என்பாள். பின் இதுங்க கூட தன் இனத்தை எல்லாம் கூப்புட்டு பகுந்து திங்கிது.. ஆனா நம்ம மனுஷ ஜென்மங்க அப்படியா இருக்காங்க என அவளாகவே நொந்து கொள்வாள். அப்போது காக்கைகள் கா கா கா என கரைந்து கொண்டே கூட்டமாய் கூடி விடும். அவைகள் உண்ணும் அழகை பார்த்து மகிழ்வாள்.

இவ்வாறு செய்வது ராமிக்கு சந்தோசமாக இருந்தது. தன் கணவன் இறந்த நாளில் இருந்து இந்த சத்துணவு கூடம்தான் கதி என இருப்பவள். தனி கட்டை அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஆலமர புள்ளையாரும், இந்த குழந்தைகளும்தான்.

முத்துலட்சுமி பயந்து பயந்து வரிசையில் நின்றிருப்பதை பார்த்த ராமி என்ன கண்ணு தம்பி பய நல்லா இருக்கானா.. என்ன செய்யுறது ஒங்க ஆத்தாளும் நானும் ஒரு சோடிக.. சின்ன புள்ளைல ஒங்க ஆத்தா ஒன்னைய போலதாமா இருப்பா.. என தன் பாச வார்த்தைகளை மழையாய் கொட்டி தீர்த்தாள்.

தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்ற குறையை மனதிலேயே போட்டு புதைத்து விட்டு நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அடிக்கடி பூக்கடை புஸ்ப்பம் சொன்னதைதான் நினைத்து கொள்வாள் “யே ஒனக்கென்ன கவல அதேன் நம்ம மாரியாத்தா இத்தன புள்ளைங்களை பாத்துக்குற பாக்கியம் கொடுத்துருக்குள்ள சும்மா வேலைய பாரு” இந்த வார்த்தைகளை நினைத்து நினைத்து ஆறுதல் அடைந்து கொள்வாள்.

என்ன செய்வது ஏழைகளுக்கு நம்பிக்கையும், அனுசரணையான வார்த்தைகள் மட்டும்தான் துணையாய் எப்போதும் இருக்கிறது.

வா தாயி.. வா கண்ணு.. என முத்துலட்சுமியை அழைத்து அவள் கொண்டுவந்த நெளிந்த தட்டில் சோற்றை நிரப்பி கொடுத்தால் அன்று மதிய உணவில் முட்டை தந்ததால் மூன்று முட்டைகளை தட்டில் போட்டால்.

முட்டையை பார்த்த மாத்திரத்தில் “அய் இன்னைக்கு முட்ட கூடவா.. சூப்பர்..” என சந்தோசமாய் கூறிக்கொண்டே சோற்றை வாங்கினாள் முத்துலட்சுமி..

பின் ஆலமரத்தின் அருகில் சென்று நின்றாள் அப்போது தன் கூட படிக்கும் செவப்பி, கற்பகம், கனகா, கல்யாணி என அனைவரும் பள்ளியில் இருக்கும் வராண்டாவில் விளையாடி கொண்டிருந்தனர்.

அவர்கள் முத்துலட்சுமியை பார்த்ததும் “யே முத்து.. கொத்து.. ஹாய் ஹை.. புர் என சப்தங்களை தொடர்ந்து வெளிப்படுத்தியவாறு விளையாடி மகிழ்ந்தனர்.

அதை ஏக்கமாய் பார்த்து கொண்டு இருந்தாள் ஆல மரத்தை பற்றியவாறு.. பக்கத்தில் அமர்ந்திருக்கும் விநாயகரை பார்த்தாள்… விநாயகரின் தொந்தி வயிறை தொட்டு பார்த்து சிரித்தால்.. பின் தன் தம்பியின் ஞாபகம் வர ஒடினால் தன் குடிசையை நோக்கி..

நேற்று பெய்த மழையினால் குடிசை சேதாரமாகி இருந்தது.. அப்பா அம்மா என இருவரும் அடுத்தடுத்து செத்து போக முத்துலட்சுமியின் நிலை இவ்வாறு ஆகிவிட்டது. காய்ச்சல் வந்து படுத்திருக்கும் தன் தம்பி கணேசனை எழுப்பினால் டேய் படவா.. டேய் எந்திரிடா, என் கண்ணுள்ள என தன் தாய் பாசத்தை காட்டினால் முத்துலட்சுமி.

பின் பக்கத்துக்கு வீட்டு திண்ணையின் ஓரமாக இருக்கும் விளக்கமாரை எடுத்து தன் குடிசையை துப்பரவு செய்தால். அதற்குள் பக்கத்துக்கு வீட்டு அம்மா வந்து நாயி ஏண்டி கேக்காம வெளக்கமார எடுத்த மூதேவி என கூறியவாறே விளக்கமாற்றை பிடுங்கி சென்றாள்.

இவ்வாறு தினமும் நடப்பது வாடிக்கையாய் இருந்தது. தினமும் முத்துலட்சுமி பள்ளிக்கு செல்லாமல் சாப்பாடு மட்டும் வாங்கி தன் தம்பியின் வயிறையும், தன் வயிறையும் நிரப்பி கொண்டு இருந்தாள். காலங்கள் மாறி கொண்டே இருந்தது.. ஆனால் முத்துலட்சுமியின் வாழ்க்கை மட்டும் அப்படியே இருந்தது.

ஒருநாள் முத்துலட்சுமி சாப்பாடு வாங்க சென்றபோது ராமி அங்கே இல்லை அவருக்கு பதிலாய் செவப்பியின் அம்மா இருந்தாள் முத்துலட்சுமியை பார்த்ததும் பள்ளிகூடத்துக்கு வந்தாதான் சாப்பாடு, சாப்பாடெல்லாம் கெடைக்காது போமா அங்குட்டு என்றால்.. படிக்கிற புள்ளங்களுக்கே சாப்பாடு பத்த மாட்டேங்குது இதுல நீ வேற என கூறிக்கொண்டே முட்டைகளை மடியில் கட்டி கொண்டு சென்றாள்.

முத்துலட்சுமி என்ன செய்வதென்றே தெரியாமல் ராமியை பார்க்க அவள் குடிசைக்கு சென்றாள்..

வா தாயி – என் சாமி என்ன பாக்க வந்துருக்கு எப்படி தாயி இருக்க தம்பி நல்லா இருக்கானா என்ன தாயி ஒன்னும் பேசாம இருக்க என தன் பாசத்தை கொட்டி தீர்த்தாள். ராமி.. ஒடம்பு சரியா இல்ல அதனாலதான் செவப்பியோட அம்மாகாரிகிட்ட சொல்லி சாப்பாடு ஆக்க அனுப்பி இருந்தேன்.

என்ன தாயி தட்டுல ஒன்னும் காணோம் என்றால் ராமி. முத்துலட்சுமி பசி கொடுமை தாங்க முடியாமல் அழுதால். பின் நிலையை புரிந்துகொண்ட ராமி அடி தேவிடியா நாயி, பொசகெட்டவளே இன்னைக்கு ஒரு நா அனுபுச்சா என் புள்ளைக்கு சாப்பாடு போடலியா என கோபத்தோடு விளக்கமாற்றை எடுத்து கொண்டு செவப்பியின் வீட்டை நோக்கி சென்று சண்டை போட்டால், பின் வீடு வந்து கொஞ்சம் பழையதை எடுத்து முத்துலட்சுமியின் தட்டில் போட்டு அனுப்பி வைத்தாள். வாங்கி கொண்டு தம்பியின் பசியை போக்க ஓடோடி வந்தால் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்து தம்பிக்கு பழயதை கொடுத்தால், சி.. ச்சி.. எனக்கு வேணாம் போ.. நல்லாவே இல்ல.. வேணாம் போ என அடம் பிடித்தான்.. சாப்பிட மறுத்தான் டேய் ராசா இன்னைக்கு ஒரு நா சப்புடுப்பா நாளைக்கு அக்கா சுடு சோறு கொண்டுவாரேன் என தன் தம்பியை ஆறுதல் சொல்லி சாப்பிட வைத்தாள்.

சில மாதங்கள் சென்றது ராமிக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டே சென்றது. சில நாட்களில் ராமி இறந்து விட்டால். ஆனால் முத்துலட்சுமியின் பிஞ்சு உள்ளத்திற்கு அது விளங்கவில்லை. இப்போது உணவு ஆக்கி போடும் வேலையே செவப்பியின் அம்மாவிடமே வந்தது, ஏற்கனவே முன்பு நடந்த நிகழ்வின் எரிச்சலை மனதில் வைத்துகொண்டு முத்துலட்சுமி வரும்போதெல்லாம் திட்டி கொண்டே உணவு வழங்குவாள் செவப்பியின் அம்மா ”வாடி என் வாலு.. இப்ப நான் போடுறத தாண்டி நீ சாப்புடனும் நாயே” என இன்னும் கூச வைக்கும் வார்த்தைகளால் திட்டுவாள். அதன் அர்த்தம் புரியாமல், முத்துலட்சுமி வயிற்று பசியால் வாடி நிற்ப்பாள். தினமும் இதுதான் அங்கு நடக்கும் நாடகம். அன்பான அனுசரணையான வார்த்தைகள் இப்போது முத்துலட்சுமிக்கு கிடைக்கவில்லை. எங்கு போனாலும் ஏமாற்றமும் , ஏளனமும்தான் அவளுக்கு கிடைத்தது.

பட்டாம் பூச்சியை பிடிப்பதிலும், விளையாடி மகிழ்வதிலும் கழிய வேண்டிய முத்துலட்சுமியின் பால்ய காலம் ஒருவேளை உணவுக்காக ஓடி திறிவதிலேயே கழிந்து கொண்டிருந்தது. முன்பு போல் முத்துலட்சுமிக்கு சாப்பாடு கிடைபதில்லை ராமி இறந்தநாளில் இருந்தே முத்துலட்சுமியின் வாழ்க்கை சூன்யமானது.. அப்போது கிடைத்த உணவு இப்போது அவளுக்கு கிடைக்கவில்லை.

டொங் டொங் என்ற மணி சப்தம் கேட்டு முதன் முதலாய் ஓடி வரும் முத்துலட்சுமிக்கு கடைசியில்தான் உணவு வழங்குவாள் செவப்பியின் அம்மா. சில நேரம் ம்ம் ஆகி போச்சு நாளைக்கு வா என அனுப்பிவிடுவாள் ஆனால் அவளது மடி முழுவதும் நிறைந்திருக்கும்.

அரசமரம் தன் இலைகளை உதிர்த்து விட்டிருந்தது.. வெயில் அதிகமாய் கொளுத்தியது வழக்கம் போல் மணியோசை கேட்டுவிட்டு ஓடோடி வந்தால் முத்துலட்சுமி. எல்லா மாணவர்களும்.. யேய் யேய் சூப்பர் ரெண்டு மாசம் லீவு யேய்.. என அணைத்து குழந்தைகளும் சந்தோசத்தோடு துள்ளி மகிழ்ந்து கொண்டு சென்றனர்.

“வாடி வா இனி ரெண்டு மாசத்துக்கு எம் பொழப்பும் நாரி போச்சு.. உன் பொழப்புந்தான். இந்தா வாங்கிட்டு போ என” என்றைக்கும் இல்லாமல் அன்று தட்டு முழவதையும் உணவால் நிரப்பி விட்டால்.. முத்துலட்சுமி சந்தோசத்தோடு அவளை பார்த்தாள். ம்ம்ம் என்ன பாக்குற இன்னைல இருந்து லீவுன்றதால எந்த கழுதைகளும் சாப்புடல நீயாவது சாப்புட்டு தொழ என்றால் சிவப்பியின் அம்மா.

மறுநாள் பசி வயிற்றை கிள்ள வழக்கம் போல் தட்டை எடுத்துகொண்டு ஓடோடி வந்தாள் முத்துலட்சுமி ஆனால் அங்கே யாருமில்லை வெறிச்சோடி கிடந்தது காக்கைகள் மட்டும் உணவிற்காக கா கா என கரைந்து கொண்டிருந்தது.

முத்துலட்சுமியை பார்த்து விட்டு பள்ளியில் மணியடிக்கும் வயதானவர் அருகில் வந்து என்ன தாயி இப்ப வந்துருக்க பள்ளிகூடத்துக்கு லீவு பாப்பா.. ஜூன் ஒன்னாந்தேதிதான் பாப்பா பள்ளிக்கூடம் தெறக்கும் என நடுங்கும் குரலோடு சொல்லி சென்றார். முத்துலட்சுமி பசியை சுமந்து கொண்டு ஆலமரத்தை பற்றி கொண்டு நிசப்தம் நிறைந்த வெளியை, யாருமில்லாத சத்துணவு கூடத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

அன்றிலிருந்து முத்துலட்சுமியின் கேள்வி தினமும் இதுவாகத்தான் இருந்தது. அண்ணே ஜூன் ஒன்னாந்தேதி எப்ப வரும் என கேட்டு கொண்டே தன் நாட்களை நகர்த்தினாள்..

அவளது வலியை சத்துணவு கூடமும், ஆலமரமும், அதில் இருக்கும் பறவைகள் மட்டும்தான் உணர்ந்து கொண்டு இருந்தது..

– பயணம் இலக்கிய சிற்றிதழில் வெளிவந்த சிறுகதை (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *